ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான்.
“ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரும் பலி. இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளும் பெருந்தொகையான ஈட்டிகளும் ..….”
அவசர அவசரமாக ஏஎம்முக்கு மாற்றினான்.
“இது பாண்டவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் செய்திகள். வாசிப்பவர் விதூரன். பதின்மூன்றாம் நாள் போரிலே ஆயிரக்கணக்கான கௌரவ அரக்கர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். யுத்த விதிகளுக்கு மாறாக, கௌரவர் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு மீது அம்புதொடுத்து படுகொலை செய்துள்ளனர். அவரோடு ஏழு படைவீரர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளானார்கள். அஸ்தினாபுரத்து மக்களை கௌரவரிடம் இருந்து காக்கும் தர்மத்தின் போரில் …”
நாள் முழுக்க எப்எம்முக்கும் ஏஎம்முக்கும் மாத்தி மாத்தி திருகியதில் பட்டறி கொஞ்சம் இறங்கிவிட்டது போல இருந்தது. சத்தம் மொனோ ரேடியோவில் சன்னமாகவே கேட்டது. நிஷாத இராச்சியத்தின் மன்னன், இப்படி இடம்பெயர்ந்து பெயர் நுழையாத தெரியாத ஊரிலே, அக்கம்பக்கத்தார் தரும் உதவியில் வாழ்வதை நினைக்க மாவீரனான ஏகலைவனுக்கு அவமானமாய் இருந்தது. ச்சே குருநாதர் துரொணரும் சாவெய்திவிட்டார். நானோ போருக்கு போகாமல் திண்ணையிலேயே உட்கார்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணி அவன் மனம் வெதும்பினான். பீஷ்மரை கூட சிகண்டிக்கு பின்னால் இருந்து அம்பெய்து கொன்றிருக்கிறார்கள். “அர்ஜூனன் ஒரு பொட்டை பயல்” என்று கொச்சைத்தமிழில் வரலாற்று கதை என்பதையும் மறந்து கொஞ்சம் சத்தமாகவே திட்டினான் ஏகலைவன்.
“நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள், அவர்கள் தான் உங்களை போரிடமுடியாதவாறு நாட்டை விட்டே துரத்திவிட்டார்களே. பற்றாக்குறைக்கு பெருவிரலை கூட கொய்து … எல்லோரும் வீரர்கள் தானே! ஒற்றுமையாய் இருந்திருந்தால் இன்றைக்கு பாண்டவர் இவ்வளவு ஆட்டம் போடுவார்களா? போயும் போயும் குரு சாம்ராஜ்யத்தையே எதிர்த்து போரிடும் துரோகி அர்ஜூனனுக்காக உங்களை வாளாவிருக்கவிட்டார்களே .. இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்”
குணாட்டி ஒவ்வொருநாளும் கணவனின் வலக்கையை பார்த்து புலம்பாத நாள் இல்லை. தன்னை துரத்திவந்த கொடிய நாயின் குறுக்கே பாய்ந்து, அதன் வாய் மீது அம்புகள் ஆயிரம் விட்டு அடிபட்டு ஓடவைத்து, யாரவன் என்னை காப்பாற்றியது என்று அவள் திரும்பிப்பார்ப்பதற்குள் அது நடந்தேவிட்டது. துரோணர் கேட்கமுதலேயே அவன் விரலை வெட்டிக்கொடுத்ததை தன் கண்முன்னாலேயே பார்த்த அவள் துடித்துப்போய்விட்டாள். கோபமும், பாசமும், காதலும் ஒரு சேர, அவனை ஓடிவந்து கைபிடித்து சேலையை கிழித்து கை முடிந்து.."
அப்படி சொல்லாதே குணாட்டி… நாயை கொன்றது என் தவறு, உண்மையான சத்திரியன் தன் அம்பை பலமுள்ள எதிரிமீதே தொடுப்பான். குரைக்கும் நாய் மீது தொடுத்தது தவறல்லவா? குருவை வையாதே, தவிரவும் தவறு விடாத மனிதர் தான் ஏது? .. ஒரு நேரிய லட்சியத்துக்கு போரிடும் போது சில தவறுகள் ஆங்காங்கே நடக்கலாம் தானே, பெரிது பண்ணாதே. நல்லதை பார்க்கமாட்டாயா? தேரோட்டி மகன் கர்ணனை அவர்கள் கொண்டாடவில்லையா? தளபதி ஆக்கவில்லையா? அவர்கள் இன்றைக்கு எம்மோடு இல்லாமல் இருந்தால் எம்மினத்தின் நிலையை கொஞ்சம் எண்ணிப்பார்.
ஏகலைவன் எந்த நிலையிலும் துரோணரையோ, கௌரவரையோ விட்டுக்கொடுக்கமாட்டான். பெருவிரல் போனாலும் நான்கு விரல்களைக்கொண்டு இன்றைக்கும் நாணேற்றி அம்பு தொடுத்தானானால் சாட்சாத் இராமபிரான் வந்தால் கூட அவனோடு நேருக்கு நேர் போருதமுடியாது. ஆனாலும் குரு சொல்லிவிட்டாரே என்ற வைராக்கியத்தில் அந்த சம்பவத்துக்கு பிறகு வில்லை தூக்கினானில்லை. வெறும் குறுநில மன்னனாக பீஷ்மகன் மகள் ருக்குமணிக்கு கல்யாண தரகு வேலை பார்த்துவந்தான். அந்த வேலைக்கு கூட கிருஷ்ணன் உலை வைத்துவிட்டான். திருமணம் பேசியிருந்தசமயம் பார்த்து ருக்குமணி தேவியை கடத்திக்கொண்டு போய் பெண்டாண்டு விட்டான். கிருஷ்ணனை நினைக்க நினைக்க ஏகலைவனுக்கு கோபம் தலைக்கேறியது.
“இவன் கிருஷ்ணா ஒரு திருட்டு நாதாரி, திட்டமிட்டு ஒவ்வொரு காயாய் நகர்த்தி, கௌரவர் பலத்தை குறைத்திருக்கிறான். கர்ணனின் கவச குண்டலங்களை பறித்து, குந்தியை காட்டி அவனிடம் நாகாசுரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது ஏவ மாட்டேன் என்று வாக்கு வாங்கி, சண்டை தொடங்கும் நாளில் திருகுதாளம் செய்து, துரோணரை ஏமாற்றி கொன்று … விதூரரை போரிடவிடாமல் செய்து .. பாவம் அவர் நியூஸ் வாசிக்கிறார்!”
குணாட்டி தயங்கி தயங்கி கேட்டாள்.
“கிருஷ்ணா தான் கடவுள் என்கிறார்களே எல்லோரும், அவரிடம் தானே போய் கையேந்துகிறார்கள்?”
ஏகலைவன் பெரிதாக சத்தம் போட்டு சிரிக்கத்தொடங்கினான்.
“அப்படித்தான் சொல்வார்கள். இனிமேல் கதை இன்னமும் தலைகீழாகும். நீயும் இருக்கமாட்டாய். நானும் இருக்கமாட்டேன். அடுத்த சந்ததிக்கு கதையை மாற்றிவிடுவார்கள். ஏதோ கௌரவர் தான் நாட்டை பிடித்து வைத்திருந்ததாகவும், பாண்டவர் சேனை நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டதாகவும் வரலாற்றை மாற்றிவிடுவார்கள். அத்தனை அதிரதரும், கிருஷ்ணாவும் பாண்டவருடன் சேர்ந்து செய்த அநியாயத்தை சொல்ல யார் இருக்கப்போகிறார்கள்?”
குணாட்டியால் இதை நம்பமுடியவில்லை. அப்படியே வரலாற்றை மாற்றமுடியுமா என்ன? ஐந்து சகோதர்கள் சேர்ந்து செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமா? அபலைப்பெண் திரவுபதியை துரத்திக்கொண்டு அரசவை மட்டும் வந்துவிட்டார்களே கிராதகர்கள். இதெல்லாவற்றையும் வரலாறு மன்னிக்குமா? கண் தெரியாத திருதராஷ்டிரனை தோளில் தூக்கி கொண்டாடிவிட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் ஏறி மிதித்தார்களே.. அதைத்தானும் மறைக்கமுடியுமா? நாடு தருகிறோம், பாதி தருகிறோம், சமவுரிமை தருகிறோம் என்று ஆசை காட்டி தலைவர்கள் எல்லோரையும் மோசம் செய்தார்களே .. அதையும் தான் மறுக்கமுடியுமா? பாண்டவர் கௌரவருக்கும் அத்தினாபுரத்துக்கும் செய்த அநீதி கொஞ்ச நஞ்சமா? மறக்குமா? ம்ஹூம் .. சந்தர்ப்பமேயில்லை. அநீதி ஒருபோதும் தோற்பதில்லை. குணாட்டிக்கு நம்பிக்கை பிறந்தது.
“தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்”
அடி பேதைப்பெண்ணே உனக்கு என்ன சொல்லி புரியவைப்பேன்? தர்மம் அதர்மம் எதுவாகினும் அது வெற்றிபெற்றவனால் எழுதப்படுவது தானே. வென்றவர் பக்கம் தான் தர்மம் என்று காலம் காலமாய் வரலாறு எழுதப்பட்டிருப்பதை நீ அறிவாயா? இங்கே பலசாலி வாக்கு தான் பலநாள் நிலைக்கும். தர்மம் அதர்மம் எல்லாம் வெறும் போலி வார்த்தைகள் தான். மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு ஏளனச்சிரிப்பொன்றை உதிர்த்தான் ஏகலைவன்.
“ஏன் சிரிக்கிறீர்கள் நாதா? நான் சொல்வது உங்களுக்கு பகடியாக இருக்கிறதா?”
“நீயே இருந்து பார்க்கத்தான் போகிறாய், ஒருவேளை இந்த போரில் எங்கள் பக்கம் தோற்று அழியும் நிலை வந்தால், அந்த அழிவுக்கு பின் சில காளான்கள் முளைக்கும். தாமே எம்மை மீட்க வந்த தலைவர்கள் என்று சொல்லும். அதர்மம் வழியே நடந்த போர் என்பதால் தான் தோற்றோம் என்று பாண்டவர் துதி பாடும்! நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது”
பேசிக்கொண்டே ஏகலைவன் ரேடியோவின் பட்டறியை கழட்டி, வாயால் கடித்து நசுக்கிவிட்டு மீண்டும் போட்டு ஒன் பண்ணினான். குரு எப்.எம் இரைச்சலாய் கேட்டது.
“சற்று முன் நடந்த கொடூர சண்டையில் தளபதி கர்ணனின் பன்னிரெண்டு வயது மகன் வீரஷசேனா கொடூரமான முறையில் போர்க்களத்தில் அர்ஜுனனால் படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிபாதக செயலை ..…”
காலையிலேயே இருள் கவ்வியிருந்தது. ரேடியோவை நிறுத்திவிட்டு ஏகலைவன் செய்வதறியாது கூரையை அண்ணாந்து வெறித்துப்பார்க்க தொடங்கினான். கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பித்திருந்தது. இதுவரை அணைந்திருந்த மின்குமிழ் திடீரென்று மின்ன தொடங்கியது. ஐந்து வினாடிகள் கூட ஆகியிராது. விட்டில் பூச்சிகள் மேக இருட்டில் கூட டக் என்று வந்து மின்குமிழில் ஒட்டிக்கொண்டன.
“அம்மா பல்ப் எரியுது ….கரண்ட் வந்திட்டு … டீவிய போடட்டா? மகாபாரதம் தொடங்கியிருக்கும்”
“பொறு தம்பி, முதல்ல மோட்டர போடு .. தண்ணி டாங் நிரம்பட்டும். லோட் காணாட்டி எல்லா லைட்டையும் ஒருக்கா நிப்பாட்டு”
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாண டவுனுக்குள் நுழைந்து ஆறுமாதங்களாகியிருந்தது. பத்து தொடக்கம் பதினொரு மணிவரைக்கும் மின்சாரம் கிடைக்கும். மகாபாரதம் டெலிசீரியலும் அதே நேரம் தான். முன் வீட்டில் பாட்டு ஆரம்பித்துவிட்டது. குமரனின் மனதில் எழுத்தோட்டம் ஆரம்பித்துவிட்டிருந்தது. இரண்டு படைகளும் மோதும்போது “மகாபாரத்” என்று ஹிந்தியில் விழும். அப்புறம் ஆங்கிலத்தில். “அக்ரஸ்ரீ மகாபாரத கதா! மகா பாரத்து கதா! கதாகே புருஷாத்துகி”, எழுத்தோட்டம் முடியப்போகிறது. “அஞ்சு நிமிஷத்துக்க தண்ணி டாங் நிரம்பிடோனும். சங்கூதப்போகிறார்கள்”
அம்மா தொடங்கப்போகுது .. நானே வேணுமெண்டா அன்ரி வீட்ட போய் பார்க்கட்டா?
கை கால் முறி வாங்கப்போறியா? இரு .. நிரம்பட்டும்
குமரனுக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. போன வாரம் தான் கெட்டவன் துச்சாதனன் பாஞ்சாலியை துகிலுரிய ஆரம்பித்திருந்தான். கிருஷ்ணர் வந்து காப்பாற்றவேண்டும். வரமுதல் தொடரும் போட்டுவிட்டான் படுபாவி. பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம். பாஞ்சாலி காப்பற்றப்படவேண்டுமே, கிருஷ்ணன் சரியான தருணத்தில் வந்துவிடுவானா என்ற கலக்கம்.தண்ணி டாங் நிரம்பி வழியும் சிலமனை காணும்.. பாஞ்சாலிக்கு என்ன ஆகியிருக்கும் .. கிருஷ்ணா ..
ஐய நின்பத மலரே-சரண் … ஹரி,ஹரி,ஹரி
கொன்னுட்டீங்க பாஸ்! சான்சே இல்ல! செம்ம! :-)
ReplyDeleteநியாயமே வெல்லும் என நம்பப்படுவதால் வென்றவர்கள் நியாயவாதிகளாகவும் , தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நம்பப் படுகிறார்கள். பலமுறை நிஜத்தில் உணரமுடிகிறது!
வரலாறுகள் என்றும் வெற்றி பெற்றவர்கள் பார்வையிலேயே வெற்றி பெற்றவர்கள் சார்பாகவே எழுதப்படுகின்றன!
//“History is always written by the winners.//
ReplyDeleteதெளிவா சொல்லிட்டாங்க இல்ல! :-) முதல் கமெண்டுக்குப் பிறகுதான் இதை வாசித்தேன்!
நன்றி ஜீ...
ReplyDeleteநடக்கும் சம்பவங்களையும் .. நம் கண் முன்னாலேயே வரலாறு திரிக்கப்படுவதையும் பார்க்க பார்க்க வரும் கோபமும் ஆற்றாமையும் ... ஏதோ எண்ணத்தில் எழுத ஆரம்பித்த கதையிது ... போகிற போக்கில போகட்டும் எண்டு எழுதினது ...
நியாயம் வெல்லும் என்று யாராவது இப்போதெல்லாம் சொன்னா செவிட்ட பொத்தி அறையவேண்டும் போலவும் இருக்கும் ... என்ன செய்ய .. எழுதத்தான் என் போன்ற ஆட்களால முடியும் :(
செம்மையான பகிர்வுங்க..அருமை..நன்றி.
ReplyDeleteசூப்பரா எழுதியிருக்கிறீங்கள். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteநிஜத்தை எழுதியிருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்.
(எந்த சார்பிலுமிருந்து படிக்கவில்லை :)
சத்தியாமா ஒன்னுமே புரியல நீங்க என்ன தான் சொல்ல வாரீங்க பாஸ் ?
ReplyDeleteஇந்த பதிவிற்கு எப்படி கருத்துரை இடுவது என்று தெரியவில்லை... எப்படி இந்த சிந்தனையை conceive செய்தீர்கள் என்று யோசிப்பதே மலைக்க வைக்கிறது... நகையுணர்வு குறையாமல் சொல்ல நினைப்பதை தெளிவாய் பொளேரென சொல்வதும் ஓர் கலை.. வாய்க்க பெற்றிருக்கிறீர்கள்... நீண்ட பதிவு போல தோன்றினாலும் இந்த கதைக்கு இதை விட கம்மியாக வார்த்தை பிரயோகம் செய்ய முடியாது...வாழ்த்துக்கள் ஜேகே..
ReplyDeleteஇது கொஞ்சம் சிக்கலான கதை. ஆறுதலாகப் பேந்து வாசிச்சுப் பின்னூட்டமிடுகிறன்.
ReplyDeleteஇந்த பதிவு எப்படி ஜேகே பிடிக்காமல் போகும், "அட்டகாசம்"
ReplyDelete"அடுத்த சந்ததிக்கு கதையை மாற்றிவிடுவார்கள். இனிமேல் கதை இன்னமும் தலைகீழாகும். நீயும் இருக்கமாட்டாய். நானும் இருக்கமாட்டேன். தர்மம் அதர்மம் எதுவாகினும் அது வெற்றிபெற்றவனால் எழுதப்படுவது தானே. வென்றவர் பக்கம் தான் தர்மம் என்று காலம் காலமாய் வரலாறு.....
ReplyDeleteஅப்படியே வரலாற்றை மாற்றமுடியுமா என்ன? ஐந்து சகோதர்கள் சேர்ந்து செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமா?
நாடு தருகிறோம், பாதி தருகிறோம், சமவுரிமை தருகிறோம் என்று ஆசை காட்டி தலைவர்கள் எல்லோரையும் மோசம் செய்தார்களே.. அதை மறைக்கமுடியுமா?
இவன் கிருஷ்ணா ஒரு திருட்டு நாதாரி, சண்டை தொடங்கும் நாளில் திருகுதாளம் செய்து, அத்தனை அதிரதரும், கிருஷ்ணாவும் பாண்டவருடன் சேர்ந்து செய்த அநியாயத்தை சொல்ல யார் இருக்கப்போகிறார்கள்?. ஏதோ கௌரவர் தான் நாட்டை பிடித்து வைத்திருந்ததாகவும், பாண்டவர் சேனை நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டதாகவும் வரலாற்றை மாற்றிவிடுவார்கள்."
நன்றி @குமரன் வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteநன்றி அருள்நேசன் .. அப்படியெல்லாம் யோசித்து எழுதவில்லை .. எழுதின ஓட்டத்துக்கே விட்டுவிட்டேன் ..
ReplyDeleteபெயரில்லா நண்பரே .. புரியாத கதை எழுதும் அளவுக்கு நான் வளரந்துவிட்டேனா என்ன?
ReplyDelete@மயிலன் .. நன்றி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு .. திடீரென்று ஒரு யோசனையில் எழுதியது தான் ... சில கோளாறுகள் இருக்கின்றன .. அப்படியே விட்டும் விட்டேன்.
ReplyDelete@சக்திவேல் அண்ணே ... ஒரு உணர்வுல எழுதினது தான் .. வாசிச்சிட்டு சொல்லுங்க .
ReplyDeleteநன்றி பாலா!
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.
ReplyDeletehttp://www.googlesri.com/
மே மாதம் இப்படி ஒரு பதிவை எதிர்ப்பார்த்தது தான் .இதை தான் வரலாற்று கதை என்பதா???
ReplyDeleteபல கதாப்பாத்திரங்களின் பெயர்கள் தெரியாததால் (ஒப்பிட்டு பார்த்து )விளங்கிகொள்ள கஷ்டமாக இருக்கிறது .அதனால் விலாவாரியாக விபரிக்க முடியவில்லை .மற்றபடி உங்களுடைய எழுத்து நடை .இரண்டையும் இணைத்த விதம் அற்புதம் .சில மாற்றங்கள் செய்திருப்பதாக அறிந்தேன் .நன்றாக வந்திருக்கிறது .வாசகர்களுக்காக எழுதாமல் வாசகர்களை உங்கள் திசையில் திருப்புவது தானே உங்கள் திறமை .
இதைப்பற்றி ஒரு காட்டமான விமர்சனம் தயாராக உள்ளது; அதை வெளியிட முன் மெருகேற்றிக் கொண்டுள்ளேன்.
ReplyDeleteகொப்பிரயிற்ஸ், கிளண்டத சிங்கமும் சுண்டெலியும், பின் நவீனத்துவத்தில் முன் நவீனத்துவ ஆக்சிச பாதிப்புகள் எண்டு பல இருக்கு.
மீண்டும் மீண்டும் வாசித்த போதும் பாத்திரப்படைப்புகள் குழப்பம் தருவதாக அமைகிறது ஒரு வேளை எனது புரிதலின் குறைபாடகவும் இருக்கலாம் அவ்வாறு இன்றில் நீங்கள் கூற வந்தது சரியான கருத்து பிழையான உதாரணம் மூலம் காட்டப்பட்டுள்ளது . உங்களுடைய முன்னைய ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது நிச்சயமாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை
ReplyDeleteஜேகே உங்களுடன் போட்டி போட முடியாது . ஒரு சரிதிரக் கதை நிகழ் காலத்துடன் சேர்த்து எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன் . நீங்கள் முந்தி விட்டீர்கள் . பெருவிரல் போன வெக்கிராணத்தில் ஏகைலைவன் கௌரவசேனைக்கு சார்பாக எண்ணுவது சிறிது நெருடலாக இருந்தாலும், அதை நான் குவாட் பண்ணிய இடத்தில் நிரவி இருக்கின்றீர்கள். புதிய பாண்டவர்கள் முனைப்போடு இருந்தால் பறிபோன இராச்சியங்கள் கிடைச்சிருக்கும் என்று எடுக்கலமா ??? ஆனால் படை நடத்த புதிய கிருஷ்ணர் இல்லையே ?? உங்களிடமிருந்து இதே போன்று புதிய உத்திகளுடன் கூடிய கதைகளை எதிர்பார்க்கின்றேன் .
ReplyDeleteஜேகே, இந்தக்கதையை முதல் பந்திக்கு பிறகு template ஐ ஊகிக்க முடிந்தது, அனா கிளைமக்ஸ் பின் நவீனத்துவமா ? (எனக்கு இந்த சிக்கல்கள் என்டைக்கும் புரிந்ததில்லை - புரிய முயலவுமில்லை) கதை புரிந்தது ஒன்றுக்கு ஒன்று உவமானம் தேடுவது முட்டாள் தனம் என்று நினைக்குறேன், ஒட்டுமொத்தமா இது எதோ சொல்லியதாக எனக்குப் பட்டது.
ReplyDeleteஎனக்கு சட்டென்று "அரக்கர் என்பதால் அமுதத்தை இழந்தமா இல்லை அமுதத்தை இழந்ததால் அரக்கரா" வரிகள் நினைவு வந்தது. என் ஒரு போராளியின் கதையின் அடுத்த பாகத்தை இங்கே கதைப் படுத்தி விட்டீர்கள். பழிக்கு பழி ? (கேதா சொன்ன முடிச்சு)
கதைக்குள் உபகதை டிவி பார்க்க ஏங்கும் சிறுவன் - கொஞ்சம் கவிதையாய் உணர்ச்சி.
கீதா
ReplyDelete//பல கதாப்பாத்திரங்களின் பெயர்கள் தெரியாததால் (ஒப்பிட்டு பார்த்து )விளங்கிகொள்ள கஷ்டமாக இருக்கிறது//
அப்படி குறிப்பிட்ட பாத்திரங்களை தொடர்புபடுத்தவில்லை (கிருஷ்ணாவை தவிர) .. இதை கதையாக வாசித்து, மெசேஜ் எடுத்து பின்னர் அதை நமக்கு நடந்தவுடன் ஒப்பிடுமாறு எழுதிய கதை ... தொடர்புபடுத்த வெளிக்கிட்டால் நீங்கள் சொன்னது போலவே நிறைய குழப்பம் ததான் மிஞ்சும்.
//வாசகர்களுக்காக எழுதாமல் வாசகர்களை உங்கள் திசையில் திருப்புவது தானே உங்கள் திறமை//
மெல்பேர்னில் குளிர்காளம் தொடங்கீற்று ... ஜாக்கட் ஒண்டு வாங்கோணும் போல!
@சுகுமாரன்
ReplyDelete//அவ்வாறு இன்றில் நீங்கள் கூற வந்தது சரியான கருத்து பிழையான உதாரணம் மூலம் காட்டப்பட்டுள்ளது//
இது .. இது தான் கதை! .. நீங்கள் பிழையான உதாரணம் என்று நினைப்பது தான் வரலாற்றை எழுதினவனின் வெற்றி ... அதை தான் கதையும் சொல்லவிழைகிறது ...
// உங்களுடைய முன்னைய ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது நிச்சயமாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை//
மீண்டும் வாசித்துவிட்டு சொல்லுங்கள் ... எனக்கு இன்னமுமே சிக்கல் இருப்பதாய் தெரியவில்லை ... கலந்துரையாடலாம்!
வாங்க கோமகன்!
ReplyDelete//பெருவிரல் போன வெக்கிராணத்தில் ஏகைலைவன் கௌரவசேனைக்கு சார்பாக எண்ணுவது சிறிது நெருடலாக இருந்தாலும்//
ஏகலைவனின் பண்பு அதுதான் என்று நினைக்கிறேன் .. துரோணர் கேட்டார் என்பதற்காக மனமுவந்து விரலை கொடுத்தவன் ... அவனுக்கு விரல் போனதால் போரில் பங்கேற்க முடியவில்லையே என்ற சுயபச்சாதாபமே ஒழிய வெக்கிராணத்தில் இருந்திருப்பான் என்று தோன்றவில்லை .. அப்படி நினைத்தால் அவன் குருதட்சணை மனமுவந்து கொடுத்தது என்பது முரண்பட்டுவிடும் இல்லையா?
யாழ் களத்தில், இலக்கிய விவாதம் ஆரம்பிக்கும் என்று யோசித்தேன் .. நடக்கவில்லை!
வாலிபன் ..
ReplyDelete//ஜேகே, இந்தக்கதையை முதல் பந்திக்கு பிறகு template ஐ ஊகிக்க முடிந்த//
கதை செட்டப்பில் புதுமை இல்லை தான் .. களம் மட்டுமே புதுசு.
//அனா கிளைமக்ஸ் பின் நவீனத்துவமா ? //
நான் நினைக்கவில்லை .. சாதாரண flow தானே ... ஏகலைவன் என்ன நினைக்கிறானோ அதுவே யுகங்கள் தாண்டி நடக்கிறதே .. கௌரவரை கொடியவராக எண்ணுகிறோம் இல்லையா ..
//ஒன்றுக்கு ஒன்று உவமானம் தேடுவது முட்டாள் தனம் என்று நினைக்குறேன், ஒட்டுமொத்தமா இது எதோ சொல்லியதாக எனக்குப் பட்டது//
அது தான் தலைவரே! .. லைன் டு லைன் ஒப்பீடு இல்லை .. ஏன் .. ஏகலைவன் கூட இல்லை!
//எனக்கு சட்டென்று "அரக்கர் என்பதால் அமுதத்தை இழந்தமா இல்லை அமுதத்தை இழந்ததால் அரக்கரா" வரிகள் நினைவு வந்தது//
கதை அமுதத்தை இழந்ததால் அரக்கர் ஆகி, அப்புறம் அது அரக்கர் என்பதால் தான் அமுதம் இழந்தனர் என்று மாற்றுவதாக தானே முடிகிறது ... முடியல! சுத்தம்!!
//கதைக்குள் உபகதை டிவி பார்க்க ஏங்கும் சிறுவன் - கொஞ்சம் கவிதையாய் உணர்ச்சி.//
நன்றி தல .. ஆனா இந்த பாணியை மாற்றவேண்டும் என்று பட்சி சொல்லுகிறது!!
வணக்கம் ஜேகே உங்கள சிறுகதை இன்று வாசித்தேன் மிகவும் நன்றாக இருந்தது எமது போராட்டத்தை நீங்கள் மகாபரதத்துடன் கலந்து எழுதியது மிகவும் நன்று மணிரத்தினம் ராவணன் எடுத்து ராமாயணத்தை கொலை செய்ததை விட வேறு எதுவும் செய்யவில்லை பொன்னியின்செல்வன் எடுக்க கூடாது என்று வேண்டிகொண்டிருகிறேன் காரணம் கல்கியின் ஜீவ துடிப்புள்ள சரித்திர நாவல் படம் என்னும் பெயரில் தரம் குறைக்கபட்டுவிடும். உங்கள் வித்தியாசமான கோணதிட்க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநட்ட்புடன்
குகன்
நன்றி குகன்!
ReplyDelete//கதை செட்டப்பில் புதுமை இல்லை தான் .. களம் மட்டுமே புதுசு.// பட் உங்கட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஏகலைவனை ரேடியோ கேட்க்க வைச்சது கொஞ்சம் புதுசு - மொத்தமா பழசா இல்லாமா (பெரும்பான்மை கவியரங்கப் பாணி) இது நல்லா இருந்தது. வரலாறு பற்றி ஒருமுறை குருபரனோடு சேர்ந்து கொழும்பு பெரும்பான்மை பேராசிரியர் ஒருவருடன் கலந்துரையாடியது நினைவுக்கு வருகிறது.
ReplyDelete//நன்றி தல .. ஆனா இந்த பாணியை மாற்றவேண்டும் என்று பட்சி சொல்லுகிறது!!// அது ஒரு மாதிரி ஜேகே பாணி என்று ஆகிவிட்டதோ ? :)
ஒரு புதுவித நடை. எனக்கு விமர்சிக்கும் அளவு தகுதி இல்லை (இன்னும் இதுமாதிரி நிறைய வாசிக்கவேண்டும்). ஆனால் கீழேயுள்ளதை எழுதாமல் விட்டிருக்கலாம். அதை வாசகன் புரிந்து கொள்வான் அல்லவா?
ReplyDelete---------------
“History is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes the history books-books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, 'What is history, but a fable agreed upon?”
― Dan Brown, The Da Vinci Code
@வாலிபன்
ReplyDelete//(பெரும்பான்மை கவியரங்கப் பாணி) //
அரசியலுக்கு வரமாட்டேன் வரமாட்டேன் என்று கூவினாலும் விடுறாங்களா பாரு.
//அது ஒரு மாதிரி ஜேகே பாணி என்று ஆகிவிட்டதோ ? :)//
ஒரு மண்ணும் கிடையாது!! வரவும் விடமாட்டோம்ல!!
சக்திவேல் அண்ணே
ReplyDeleteஅந்த ஆங்கில வசனங்கள் தேவையில்லாதது தான் ... ஒரு டச்சுக்கு ஆர்வக்கோளாறில் கொடுத்துவிட்டேன் ...
இந்த கதை கருவை மகாபாரதத்தைவிட ராமாயணத்தை வைத்து சொன்னால் இன்னும் நல்லா இருக்கும் என்பது எனது எண்ணம். ஏகலைவனின் விரல் வெட்டப்பட்டது அவன் சாதியின் நிமித்தம் செய்யப்பட்ட ஒன்று, தவிர ஏகலைவன் கௌரவர் பக்கம் சார்ந்திருந்தான் என்பதற்கு பாரதக்கதையில் வலுவான ஆதாரமொன்றும் இல்லை. பாண்டவரும் கௌரவரும் வேறுபட்ட இனத்தவருமில்லை. ஒரு குடும்ப சண்டைக்காக ஒரு தேசம் பலிகொடுக்கப்பட்ட வரலாறுதான் பாரதக்கதை. அது ஆரியரின் உள்வீட்டு சண்டை. தம்பிமாரை நம்பி சண்டைக்கு இறங்கிய தருமனும், தான் என்ற மமதையில் தொலைந்துபோன துரியோதானும், தர்மம் என்று தான் நினைத்ததை நிலைநாட்ட சகல திருகுதாளங்களையும் செய்த கிருஷ்ணாவும் பொருந்திபோகிறார்கள். வரலாறு வெற்றிபெற்றவர்களின் சார்பாகவே எழுதப்படுகிறது, தோற்றுப்போய்விட்டதால் எல்லோரும் உத்தமர்கள் என்றுமில்லை.
ReplyDeleteநன்றி கேதா .. இதன் விளக்கத்தை நேரில் சொல்லிவிட்டேன் .. தவிரவும் வியாழமாற்றத்திலும் எழுதியாச்சுது .. நன்றி தல
ReplyDeleteகலக்குறீங்க போங்க!!! எழுத்தாளனுக்குரிய ஒளிவட்டம் தெரியுது தல .
ReplyDeletethis is different
ReplyDeleteநன்றி முருகேசன் .. ஒளிவட்டத்துக்கு காரணம் தலையில் மொட்டை :)
ReplyDeleteநன்றி அருள்!
ReplyDeleteமிக நன்றாக இருக்கிறது.. அத்துடன் இது ஒரு கதை உண்மைகளை உறைக்க வைக்கும் ஒரு கலைப் படைப்பு...
ReplyDeleteவாசகர்களின் கேள்விகளை படித்தேன். உங்கள் பதில்களையும் படித்தேன்.
என்னை பொறுத்தவரை ஒரு கலைஞன் தன் கலைக்கு விளக்கம் சொல்வது அவ்வளவு நல்லாய் இல்லை. எவர் எவருக்கு எப்படி விளங்குதோ அப்படியே விட்டிடணும்.
ஒரு படைப்பாளி ஒரு மையகருத்தை வைத்து கலையை படைக்கும் போது அவனையும் அறியாமல் பல கருத்துக்கள் அதனுள் பொதிந்திருக்கும் அதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தால்.. "இவ்வளவுதானா.. நான் என்னென்னமோ யோசித்தேன்" என்று வாசகனை சலிப்படைய வைக்கலாம்.
கம்பனோ... வள்ளுவனோ... விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தால் இவ்வளவுக்கு மக்களால் விரும்பப் பட்டிருக்குமா என்பது ஐயமே... விளக்கத்தை வேறொருவர் கூறலாம்.. படைத்தவன் கூறுவது சரியில்லை என்கிறேன்.
நன்றி. உங்கள் கருத்து உண்மையானது. இது படலை ஆரம்பித்த காலத்தில் எழுதியது. ஆர்வக்கோளாறு என்று கொள்ளலாம். சமீபகாலங்களில் இவ்வகை விளக்கம் கொடுத்தலை தவிர்க்கவே முயல்கிறேன்.
ReplyDelete