Skip to main content

மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!

 

ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. கேட்டு/வாசித்து விட்டு சொல்லுங்கள்!

யார் அந்த கோகிலவாணி என்று யோசிப்பவர்கள், உங்கள் கண்ணாடியில் போய் கேட்டுக்கொள்ளுங்கள்!

 


தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி!
கூழுக்குள் நீந்தியது காணும்!
கரையேருங்கள்!
Picture 004எனக்கு புரையேறுகிறது!
கவிதைக்கு அவ்வப்போது
கரவோசையும் வேணும்!.
அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன்
வணக்கம்.
பரணிகள் பலவும் முழங்கிய தேசம்.
அதை பரணிலே போட்டுவிட்டு
படகேறியவர் நாம்.
நாம் தமிழர்!

பனி விழும் தேசத்தில்,
பட்டதெல்லாம் மறந்துவிட்டு
படகுக்காரும், பத்தினியும்
பளிங்கினால் ஒரு மாளிகையும்
கட்டியவனுக்கு
பட்டென்று சுட்டது எதுவோ?
அதுவே சுயத்தை என்றான் ஒருவன்.
சுரத்தை வந்த நேரம் சுற்றம் எல்லாம் சுடுகாட்டில்
பரத்தை அழகின்
செழிப்பில் விழைந்து
மறத்தை இழந்து
மர மிசை ஏகிய
பழிப்பு வந்திடுமோ?
இனத்தின் கோபம் எம்மை
துரத்தி வந்திடுமோ?
பயத்தில் தூக்கம் தொலைந்து போயிடுமோ?
தாயன்ன தமிழாம் அது விலத்தி சென்றிடுமோ?
படுத்தியதில்,
பாடாய் மனம்
படுத்தியதில்
சுருட்டியதை எடுத்துக்கொண்டு
பேசாமல்
வீட்ட போய் செட்டில் ஆவோமோ?
திடீரென்று உதித்த ஞானம்
சில்லாலையில் சென்டர்லிங்க்
இல்லையென்றதும்
ஸ்லிப்பாகி விட்டது!
இருந்தாலும்
வெளிப்பாக உணர்வை காட்டி
விறைப்பாக வீரம் பேசும் எண்ணத்தில்
துரைக்கு தொலைபேசி போட்டேன்
ஆடிக்கு கூழ் ஊற்றுகிறோம்
பாடிவிட்டு போவதற்கு
மேடை போட்டு அரங்கு அமைக்கிறோம்
கவிதை எழுதுவாயா தம்பி? என்றார்
கிலோ எவ்வளவு அண்ணே? என்றேன்.
கஷ்டப்பட்டு கட்டிய மன்று இது!
பார்த்து பத்திரம்.
கட்டிய வேட்டி பத்திரம்.
பாடும் மீன் ஓடினாலும்
உறு மீனாம் எங்கள் மணி அண்ணே!
அவரும் பாடுவார்!
பாட்டும் பத்திரம்!
பயம் பிடித்துவிட்டது!
வேட்டு நிச்சயம் என்றாலும் – ஒரு
காட்டு காட்டவேணும் எண்டு
கடங்கார ஆசை மோதி முட்டி விட்டது!
கடவுளின் மேல் பாரத்தை போடலாம் என்றால்
அவனே ஒரு கடங்காரன், அவன் பாட்டு தனிப்பாட்டு!
அது கிடக்கட்டும்
கவிக்கு வருகிறேன்!

மறந்துபோகுமோ?
மறதி
தமிழில் எனக்கு
மிகவும் பிடித்த வார்த்தை!
மறந்ததால் தான் மூன்று வேளையும் எனக்கு வயிறு செரிக்கிறது!
மற்றவன் மீட்டுத்தருவான் என்று மண்ணை மறந்து இருப்பவன்!
மனிதரை பக்கத்தில் இருந்தும் மதிக்காமல் தனித்து கிடப்பவன்!
தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்தவரை
அரை வினாடி மௌன அஞ்சலிகளில் அடக்கியவன்!!
மறதி கொண்டதால் எமக்கு மறத்தமிழன் என்றும் ஒரு பெயர்!

மறந்து போகுமோ?
நனவிடை தோய்தல் என்பது வெறுமையில் காணும் ஒரு இனிமை
கனிந்து உலர்ந்தபின் பூவின் வாசம் தேடும் பேதமை!
காய்ந்து உதிர்ந்த பின் வசந்தங்களை மீட்கும் சருகுகளின் ஏழமை!
மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை
பழையன மீட்டல் பழுது என்றான்
புதுவையை புனைபெயரில் கொண்டவன்!
நினைக்கவேண்டாம் நெஞ்சம் கனக்கும் என்றான்.
ஆனாலும் சுவைக்காக இருக்கிறது ஒன்று!
மறந்தாலும் நினைக்க மறக்காத – உயர
பறந்தாலும் மறந்து போகாத
இரந்தாலும் இனியும் திரும்பிக்கிடைக்காத
ஒரு பருவம்!
உருவம் மாற்றிய பருவம்
செருப்பை கூட நல்லெண்ணெயில்
துடைத்து போட்டு,
செருக்காய் திரிந்த விதிர்த்த பருவம்
குனித்த பூவுக்கும் கொவ்வைச்செவ்வாய்க்கும்
பருக்கள் தோன்றிய வயதில்
தெருக்கள் முழுதும்
மேக கருக்கலாய் திரிந்த
பொறுக்கி பருவம்!
சுள்ளென்று கொள்ளிக்கட்டை சுடும்நாளில்
கணம் நினைத்தால்
சில்லென்று குளிர் வந்து தணிக்கும்
சிலிர்த்த பருவம்!
எங்களின் பத்தாண்டு பள்ளிப்பருவம்!

Picture 006விடிய வெள்ளன
தட்டி எழுப்பி
கொப்பி புத்தகம்
எடுத்து படி
செல்ல குஞ்சல்லோ
என்று
அதிகாலையில்
அம்மா தருவாள்!
அது கோப்பி!
அண்ணா கோப்பி!
குடிச்சதும் பல் துலக்க
பயன்படும் அண்ணா பற்பொடி!
கரண்டு கம்பத்தில் பிடுங்கின பீங்கான் கப்பி
மருண்ட ராணுவம் விட்டுச்சென்ற ஓட்டை வாளி
தேடா வளையத்தில் கட்டி இறக்கினால்
தின்னவேலி கிணற்றில் தண்ணி இறைப்பதற்குள்
திண்டதெல்லாம் செமிச்சுப்போயிடும்!
அவசரமாய் அக்காவுக்கு தெரியாமல் அவள்
அழிரப்பர் திருடி,
அட்டவணை பார்த்து
அத்தனை கொப்பிகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு
லுமாலா சைக்கிளை எடுக்கும் போது
அப்பன் கொஞ்சம் நில்லு! - என்று
அம்மா, சங்கிலி பணிசோடு
படலைக்கு ஓடிவரும்!
போறவனை புறத்தால கூப்பிடாத என்ற
அப்பா குரல் அம்மாவை வையும்!

சைக்கிள் சவாரி நல்லூரை எட்டுகிறது!
கிழக்கு வாசலில் தோழியர் சூழ
கோகிலவாணி!
என் முதற்காதல்!
நித்தமும் பாடங்களை படித்த ஞானிக்கு
பதின்மங்களை உணரவைத்த
ரஞ்சிதா!
கல் நெஞ்சுக்காரி,
கிஞ்சித்தும் ஒரு சிரிப்பு தானும்? ம்ஹூம்!.
வஞ்சிக்கு எழுதிய கடிதங்கள்
என் பெஞ்சுக்குள் கிடந்தது கண்டு
பஞ்சர் வாத்தியிடம்!
நான் வாங்கியது!
ஆறு கால பூசை!
பத்னஞ்சு வருடம் கழிந்து நேற்று
குஞ்சியழகின் குடும்ப படத்தை முகநூலில் கண்டேன்.
சற்று பருத்திருந்தாள்!
பக்கத்தில் விறைத்த மண்டையன் ஒருத்தன்!
கக்கத்துக்கு இரண்டாய் நான்கு குழந்தைகள்
வெறுத்துப்போய் பெயர் கேட்டேன்.
நாலாவதுக்கு கூட என் பெயர் இல்லை!
நாய்க்குட்டி பெயரை கேட்டால்!
அது கூட அதோ நாதாறி பெயர் தான்!
நான் பாவம்!
ஆண் பாவம்!

எங்கள் ஊரில் இரண்டு கொட்டில்கள்!
கள்ளுக்கு ஒன்று
கல்விக்கு ஒன்று
சில வாத்திமார்
கள்ளுக்கு சைன் வைத்துவிட்டே
கற்பிக்க வருவினம்.
கரும்பலகை அறியாது
வெறும் பலகையில் எழுதுவினம்.
வாயில் சொல்லுக்கும் பஞ்சமிராது!
பனை சிலாகையில் செய்த வாங்கின்
சிராய் தேய்த்து பாண்டு எல்லாம் பீத்தலாகும்!
குடை வெட்டுப்பாவடைகள் காற்றில் பறந்து
வேறு எதை எதையோ கந்தலாக்கும்!
வாத்தி வேறு
வரிசைமாற்றம் சேர்மானம்
வரையறுக்க சொல்லி
வீட்டில் மனிசி அறுத்ததை
நமக்கு வந்து அறுக்கும்!
நம்ம பெடியளும் சளைத்தவர் இல்லை.
படிப்பில் பக்திமான்கள்.
நவீன எறிபத்த நாயன்மார்கள்
வில்லுக்கு விஜயன்
விட்டு எறிந்த ரொக்கட்
முன்னுக்கு வாங்கில் இருக்கும்
சிவானியின் சிலுப்பி
முடி மீது குத்தி நிற்கும்.
கொல்லென்று கூட்டம் கை கொட்டி சிரிக்கும்.
புல்லுருவி புண்ணியவான்
ஒருவன் போட்டு கொடுக்க இருப்பான்.
விஜயனுக்கு வந்தது வில்லங்கம்!
வில்வ காம்பால் வாங்கும் அடியில்
பிரேமாதாசா தந்த
சீருடை படங்கு
புழுதி பறக்க
படக்கு படக்கு என்று
சத்தம் போடும்!

நான் வயதுக்கு வந்த பருவம்!
குண்டுகள் சத்தத்தில் அவசர அவசரமாக
வெடித்த பருத்தி செடி!
அந்தரங்கங்களை அங்கீகரிக்கும் அறிவை ஊட்டாத நம் கலாச்சாரம்!
ஒன்றுமே புரியாது!
மின்சாரம் இல்லாமல்
ஒளிரும் டியூப்லைட்!
அகதியாக் காய்ந்துகிடந்தவனுக்கு
அட்டைப்பக்கத்து விகடனின் குஷ்பு படம் தான்
காமசூத்திரம் ஆனது!
அதில் கூட முகம் தவிர எல்லாமே
கறுப்பு மையாலே மறைந்திருக்கும்
படத்தை சுரண்டி சுரண்டி
கைகள் தமக்கு தாமே கரியை பூசும்!
அறியாமலேயே இருபதுகளுக்குள் நுழைந்த
அதிசய இளைஞன் நான்!

நான்
பாடசாலையில் ஒதுங்கியத்தை விட
பங்கருக்குள் பதுங்கிய நாட்களே அதிகம்!
வெடிப்புகள் காணாத வீடுகளே இல்லை!
அரிக்கன் லாம்பு சிமினி கூட
தன் பங்குக்கு லேசாய் வெடித்து கிடக்கும்!
தண்ணிக்கு மேலே எண்ணை நிற்கும் விஞ்ஞானம்
தமிழன் படிப்புக்கு விளக்கெரிக்க பயன்பட்டது!
இடரிலும் தளரிலும்
இடுக்கண்கள் தொடரினும்
இடைவிடாது இடம் பெயரினும்
பாடபுத்தகத்தை முதலில்
மூட்டை கட்டும் பரம்பரை அது.

பள்ளி விட்டு வீடு
வரும் வழியில் அண்ணை மார்!
அவசரமா மறிப்பினம்!
மற்றவன் மரிப்பில்
மனிசனுக்கு ஏன் படிப்பு
போதாது ஆள் என்று
போருக்கு அழைப்பினம்.
பாம்புகள் சூழ்ந்து படமெடுத்து ஆடுது
கட்டுப்பாட்டை மீறி
பட்டங்கள் எல்லாம் மேற்படிப்புக்கு பறந்துபோட்டுது
மற்றவன் எல்லாம் படகேறிவிட்டான்.
மிச்சம் நீயும் நானும் தான் என்பார்!
சொல்ல சொல்ல யோசித்தேன்!
நான் ஒரு பயந்தாங்கொள்ளி.
என் நீளக் காற்சட்டையில்
ஈரம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
படிச்சு நானும் வெளிய போய்
பாங்காய் உழைச்சு ஊருக்கு அனுப்பவா? என்று
பம்மாத்தாய் ரெண்டு வார்த்தை உளற
செவிட்ட பொத்தி ஒரு அறை!
கிண் என்று வலித்தது.
இன்று
நிமிர்ந்து பார்க்கிறேன்!
அட!
சாம்பல் பூசணிக்காய் சாயம்
உங்கள் கன்னங்களிலும் ஒட்டிக்கிடக்குது
அடி பலமோ?


பள்ளிப்பருவம்
மறந்துபோகுமோ?
மறந்து தான் போகலாமோ?
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும்
கண்ணாடியில் கூட பிறர் முகம் தேடும்
தன் குளியலறை நிர்வாணத்தை தானே எதிர்கொள்ள அஞ்சும்
குழப்பங்களின் நாயகன் நம் தமிழன்.
காதற்ற ஊசியை தேடி கடைத்தெருவுக்கு
வந்தவன்
வந்த இடத்தை சொந்தமாக்கினான்.
சொந்த இடத்தை இப்போது சென்ற இடம் ஆக்குகிறான்!
ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ளுகிறேன்.
மறந்துபோகுமோ
மறப்பது நன்றன்று.
மன்னிக்க முடியாத குற்றமும் கூட!
நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது.
மறதிக்கு மருந்து மாஸ்டரின்ட பிரம்பு! ...............
நன்றி வணக்கம்!

 

படங்கள் : கேதா

Comments

  1. sako!

    valiyum...

    anupavamum...
    sonnathu!

    arumai!

    ReplyDelete
  2. மேகலாவின் பள்ளிப்பருவ கதை கேட்க வந்த எனக்கு முழு ஏமாற்றம் என்ன செய்ய இராவணா???????????????????
    கோகிலவாணீ !!!!!!!!!!!! இன்னும் எத்தனையோ??? நல்லூர் முருகா............................................................
    இவர் கண்ணாடியில் இராமர்???????????????????????????

    ReplyDelete
  3. சாம்பல் பூசணிக்காய் உவமானம் சூப்பர் JK
    நீங்கள் கோப்பி குடிச்சிட்டா பல்லு விளக்கிறனீங்கள் ? அச்சச்சோ

    ReplyDelete
  4. "மறந்து போகுமோ?
    நனவிடை தோய்தல் என்பது வெறுமையில் காணும் ஒரு இனிமை
    கனிந்து உலர்ந்தபின் பூவின் வாசம் தேடும் பேதமை!
    காய்ந்து உதிர்ந்த பின் வசந்தங்களை மீட்கும் சருகுகளின் ஏழமை!
    மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை
    பழையன மீட்டல் பழுது என்றான்
    புதுவையை புனைபெயரில் கொண்டவன்!
    நினைக்கவேண்டாம் நெஞ்சம் கனக்கும் என்றான்.
    ஆனாலும் சுவைக்காக இருக்கிறது ஒன்று!
    மறந்தாலும் நினைக்க மறக்காத – உயர
    பறந்தாலும் மறந்து போகாத
    இரந்தாலும் இனியும் திரும்பிக்கிடைக்காத
    ஒரு பருவம்!
    உருவம் மாற்றிய பருவம்
    செருப்பை கூட நல்லெண்ணெயில்
    துடைத்து போட்டு,
    செருக்காய் திரிந்த விதிர்த்த பருவம்
    குனித்த பூவுக்கும் கொவ்வைச்செவ்வாய்க்கும்
    பருக்கள் தோன்றிய வயதில்
    தெருக்கள் முழுதும்
    மேக கருக்கலாய் திரிந்த
    பொறுக்கி பருவம்!
    சுள்ளென்று கொள்ளிக்கட்டை சுடும்நாளில்
    கணம் நினைத்தால்
    சில்லென்று குளிர் வந்து தணிக்கும்
    சிலிர்த்த பருவம்!
    எங்களின் பத்தாண்டு பள்ளிப்பருவம்! "

    இந்த இடத்தில் கவிதை ஒரு நதிபோல ஓடுகிறது. கவிதையை விமர்சிப்பவர்கள் தேர்ந்த கவிஞர்களாக இருப்பது அரிது, நீங்கள் அரிய கவிஞன். வார்த்தைகளுக்குள் வாழ்க்கையை அடக்கி விடும் வித்தை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உணர்சிகளை தள்ளிவிட்டு நினைவுகளை மீட்டுப்பார்க்கும் பக்குவம் இருக்கிறது. காயங்களையும், ஏமாற்றங்களையும் கண்ணீரோடு சொல்லும் கவிக்கூட்டத்தின் மத்தியில் நீங்கள் காணமல் போன புன்னகையை தேடி எடுத்து காட்சிப்படுத்துகிறீர்கள். அரங்கத்தில் கரவோசைகளுக்குள்ளும், கடைசி வரிசை வரை நிறைத்த சிரிப்போசையோடும் கவனிக்கப்படாமல் போயிருக்கக்கூடிய இந்த வரிகளை, மூன்று முறை மீண்டும் மீண்டும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  5. அருமை கவிதை

    "மறந்து போவதால் மறத்தமிழன் என்று பெயர் ........

    வலிக்க செய்யும் வரிகள் .........

    நீங்கள் இலங்கை மண்ணின் மைந்தன் என்பது வார்த்தைகளில் தெரிகிறது

    ReplyDelete
  6. JK, எனக்கு உங்கட எழுத்தில மிகவும் பிடிச்ச அம்சம் " கோத்து விடுகிறது". எப்பவோ அஞ்சு வயசில கேட்டு மறந்து போன சாம்பல் பூசணிக்காய் கதயை இந்த கவிதயிலை கொண்டு வந்து 'அட' போட வைக்கிற மாதிரி நிறைய.

    ReplyDelete
  7. "--- போய் ----- வந்தாள் டும் டும் டும் ."

    -- சின்ன வயதில் கேட்ட எதோ ஒரு குழந்தைப் பாட்டு ஞாபகம் வருது.

    ReplyDelete
  8. >மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை
    நாங்க ரொம்ப அட்வான்ஸ், காதலியின் கண்களில் மனைவியைத் தேடுவோமாக்கும்.

    (பெயர் போடா நான் என்னே முட்டாளா????)

    ReplyDelete
  9. அண்ணா கவிதை சூப்பர்...
    மறக்க முடியாத பருவம் தான்...
    சின்ன சின்னதாய் பல சுவாரசியங்கள்...

    "இடரிலும் தளரிலும்
    இடுக்கண்கள் தொடரினும்
    இடைவிடாது இடம் பெயரினும்
    பாடபுத்தகத்தை முதலில்
    மூட்டை கட்டும் பரம்பரை அது"

    அனுபவ வரிகள்!

    ReplyDelete
  10. நன்றி திண்டுகள் தனபாலன்.

    ReplyDelete
  11. நன்றி சீனி!

    ReplyDelete
  12. பெயரில்லா நண்பர்!

    உங்கள் பெயரையே போடும் நிலை இல்லாதது தான் கடைசி பந்தியில் நான் எழுதியிருக்கும் விஷயம்.

    என் கண்ணாடியில் இராமன்? :) .. என் கண்ணாடியில் சாட்சாத் நானே! என் துவாய் என் கையில் :)

    ReplyDelete
  13. நன்றி தன்யா ..

    நாங்க எப்போதுமே குடிச்சிட்டு தான் விளக்குவோம்!

    ReplyDelete
  14. கேதா, உன்னுடைய பாராட்டை சிறிது கூச்சத்துடன் பணிந்து ஏற்றுக்கொள்கிறேன் ... உன்னோடு ஒரே மேடையில் கவியரங்கு ஏறவேண்டும் என்ற ஆசையில் தான் இம்முறை கவியரங்கு செய்தேன் .... எப்போதாவது கேதா மேடையிலும் நான் இருந்தேன் என்று ஒரு பதிவு போடலாம் இல்லையா ..

    நன்றி! அந்த வரிகள் ரசித்து எழுதியது ... நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் "பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே" என்ற வைரமுத்து கவிதையை ஞாபகப்படுத்திக்கொண்டு எழுதியது.

    ReplyDelete
  15. நன்றி கோவை மு சரளா ..நன்றி உங்கள் ஆதரவுக்கு!

    ReplyDelete
  16. சக்திவேல் அண்ணே .. பார்த்து பத்திரம் .. கட்டிய வேட்டி பத்திரம்!

    ReplyDelete
  17. பெயரில்லா நண்பரே ... உங்க பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!

    ReplyDelete
  18. நன்றி காயத்திரி!

    ReplyDelete
  19. கொன்னுட்டீங்க தல... இந்த வரிகள ஏன் வாசிக்கல...

    //நனவிடை தோய்தல் என்பது வெறுமையில் காணும் ஒரு இனிமை
    கனிந்து உலர்ந்தபின் பூவின் வாசம் தேடும் பேதமை!
    காய்ந்து உதிர்ந்த பின் வசந்தங்களை மீட்கும் சருகுகளின் ஏழமை!
    மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை //

    ReplyDelete
  20. நன்றி தல .. எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் ஐந்து நிமிடம் தான் .. அதால பல வரிகளை மேடையில் வாசிக்கவில்லை .. இந்த வரிகள், மேடையில் சொல்லும்போது கிரகிப்பது கடினம் என்பதால் ஸ்கிப் பண்ணிவிட்டேன் ..

    ReplyDelete
  21. "இடுக்கண்கள் தொடரினும்
    இடைவிடாது இடம் பெயரினும்
    பாடபுத்தகத்தை முதலில்
    மூட்டை கட்டும் பரம்பரை அது" ஒவ்வொரு மாணவனினதும் வரலாறு அது.. மனதில் திரை விரித்து " டைம் மிசினில்" பின்நோக்கி கை பிடித்து நமது கல்லூரி நாட்களின் நமது பயணத்தை படம் பிடித்து காதை திருகியிருக்கிறாய்.. மனசு குடைகிறது.. மீளவும் கிடைக்கு அந்த பஞ்சாமிர்த வாழ்வு..

    ReplyDelete
  22. உங்களுக்கு கவிதை வருகிறது, தாராளமாய் நம்பலாம், தொடர்ந்து எழுதுங்கள், சந்தம் கூட இன்னமும் நெருங்கி சொந்தம் கொண்டாடும்.
    //மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை// இது நனவிடைத் தோய்தல் பற்றிய நல்ல தொரு விமர்சனம்.
    //மின்சாரம் இல்லாமல்
    ஒளிரும் டியூப்லைட்!// கவிதைக்கே ஆன உவமை.

    //வந்த இடத்தை சொந்தமாக்கினான்.
    சொந்த இடத்தை இப்போது சென்ற இடம் ஆக்குகிறான்! // - இந்த இடத்தில் எனக்கு தெரிந்த ஜெகேயின் தார்பரியங்களோடு ஜெகேயே முரண்படுகிறார் ? இது நீண்ட விவாதத்தை உண்டுபண்ண வல்ல சர்ச்சை - கவிதையின் சுகத்தைக் கெடுக்க விருப்பமில்லை ஆதலால் OFFLINE இல் கதைப்போம்.

    கவியரங்க கவிதை ஆதலால் சலனப் படத்தில் அரங்கத் தலைமை உங்களை அழைத்தது மற்றும் முடிவின்பின் சொன்னது போன்றவை உள்ளடக்கி இருந்தால் நல்லம்.

    ReplyDelete
  23. தல, அருமையான கவிதை படைப்பு. ஒவ்வொரு வரியும் ரசித்து ரசித்து வாசித்தேன். நனவிடை தோய்தல் பற்றிய தங்களது உவமையில் கவித்துவம் மிளிர்கிறது .

    என்னை மிகவும் கவர்ந்த இடம் நீங்கள் வயதுக்கு வந்த தருணம்.
    //நான் வயதுக்கு வந்த பருவம்!
    குண்டுகள் சத்தத்தில் அவசர அவசரமாக
    வெடித்த பருத்தி செடி! //

    ReplyDelete
  24. Brilliant! This is quality stuff like your nostalgic short stories. Especially these lines pierced my heart...because that is what I am doing...
    வந்த இடத்தை சொந்தமாக்கினான்.
    சொந்த இடத்தை இப்போது சென்ற இடம் ஆக்குகிறான்!

    What is that சாம்பல் பூசணிக்காய் story?

    ReplyDelete
  25. இதில நான் எதை எதை தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுவது சகலதுமே சூப்பர்...எனினும் எனக்கு மிக மிக பிடித்தவரிகள்...
    மறந்துபோகுமோ?
    மறதி
    தமிழில் எனக்கு
    மிகவும் பிடித்த வார்த்தை!
    மறந்ததால் தான் மூன்று வேளையும் எனக்கு வயிறு செரிக்கிறது!
    மற்றவன் மீட்டுத்தருவான் என்று மண்ணை மறந்து இருப்பவன்!
    மனிதரை பக்கத்தில் இருந்தும் மதிக்காமல் தனித்து கிடப்பவன்!
    தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்தவரை
    அரை வினாடி மௌன அஞ்சலிகளில் அடக்கியவன்!!
    மறதி கொண்டதால் எமக்கு மறத்தமிழன் என்றும் ஒரு பெயர்!

    தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்தவரை
    அரை வினாடி மௌன அஞ்சலிகளில் அடக்கியவன்!!
    மறதி கொண்டதால் எமக்கு மறத்தமிழன் என்றும் ஒரு பெயர்!


    வஞ்சிக்கு எழுதிய கடிதங்கள்
    என் பெஞ்சுக்குள் கிடந்தது கண்டு
    பஞ்சர் வாத்தியிடம்!
    நான் வாங்கியது!
    ஆறு கால பூசை! இதுக்கு கெக்கே என்னு சிரிச்சுட்டன்

    இடரிலும் தளரிலும்
    இடுக்கண்கள் தொடரினும்
    இடைவிடாது இடம் பெயரினும்
    பாடபுத்தகத்தை முதலில்
    மூட்டை கட்டும் பரம்பரை அது. சூப்பர்

    ReplyDelete
  26. நன்றி மன்மதகுஞ்சு ...

    ReplyDelete
  27. நன்றி வாலிபன்

    "மின்சாரம் இல்லாமல் ஒளிரும் டியூப்லைட்" வகை கவி வரிகளுக்கு உங்கள் அண்ணா தான் 90களில் எங்களுக்கு முன்னோடி .. சந்தங்கள் முழங்கும் அரங்குகளில் சாதாரணமாய் நறுக் கவிதைகளை சொல்லி அட போல வைத்த கவிஞன் ... அவர் எல்லாம் ஒரு வலைப்பதிவு அமைத்து தன் பழைய கவிதைகளை வெளியிட்டாலேயே ஆயுசுக்கும் தாங்கும்.

    //வந்த இடத்தை சொந்தமாக்கினான்.
    சொந்த இடத்தை இப்போது சென்ற இடம் ஆக்குகிறான்! //
    இதை எழுதும்போது ஒரு குழப்பம் இருந்தது உண்மை தான். கவிதையில் எந்த இடத்தில் வீராவேசமோ சுயபச்சாதாபமோ இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தே எழுதினேன். ஆனால் எம்மில் இருக்கும் ஒரு கோபம், identity crisis கவிதையில் வெளிப்படும். வந்த இடத்தை சொந்த இடம் ஆக்குவதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளாமல் செய்வதை தான் அந்த ஐந்து வரிகளில் காட்டியிருப்பேன் ...

    //கவியரங்க கவிதை ஆதலால் சலனப் படத்தில் அரங்கத் தலைமை உங்களை அழைத்தது மற்றும் முடிவின்பின் சொன்னது போன்றவை உள்ளடக்கி இருந்தால் நல்லம்.//
    வீடியோ இல்ல பாஸ் .. நம்ம அபிமானி, என்னுடையதும் கேதாவோடதும் மட்டுமே ரேகொர்ட் பண்ணினார் ... மெமரி காட் கானாதாம்!

    ReplyDelete
  28. நன்றி முருகேசன்!

    ReplyDelete
  29. நன்றி மோகன் ...

    ஒரு குடியானவன்(அம்புலிமாமா வார்த்தை!) வீட்டில் சாம்பல் பூசணிக்காய் திருடு போய்விட, அவன் பண்ணையாரிடம் முறையிட்டானாம். உடனே பண்ணையார் ஊரை கூட்டி, இங்கிருப்பவர்களில் ஒருவர் தான் அதை திருடியிருக்கிறீர்கள். எனக்கு அவர் யார் என்று தெரியும். அவன் தோளில் திருடும்போது ஒட்டிய சாம்பல் இன்னமும் இருக்கிறது என்றாராம். உடனே நிஜமான திருடன் பதட்டத்துடன் தன் தோளை தட்டிவிட, பிடிபட்டானாம்!!

    அதான் கதை!
    சாம்பல் பூசணிக்காய்

    ReplyDelete
  30. நன்றி கிருத்திகன்!

    ReplyDelete
  31. மெய்ஞானம் பரவுகின்ற மேன்மை கந்தனையும்
    விஞ்ஞான கதைகள் சொன்ன வித்தகன் சுஜாதாவையும்
    கம்பவாரிதியையும் கற்றறிந்த மனிதரையும்
    வம்பான அரசியலில் வாரிகுவித்தோரையும்
    கொல்லைப்புற காதலிகளாக எல்லையிலே உலவவிட்ட
    எழுத்தாளக் கவிஜன் இவன் தமிழை எடுத்தாளப் பிறந்த மகன்
    கருத்தாழக் கவிதைகளில் கற்பனைக்கு குறை வைத்து
    நடப்பு நிகழ்வுகளை நகைச்சுவையாய் சொல்லிடுவான்
    அடுத்த நிகழ்விற்காக ஆவலுடன் காத்திருக்கும்
    - மணிவண்ணன்

    ReplyDelete
  32. Love it JK.
    Vani

    ReplyDelete
  33. JK, Thanks for the story.
    PS: Instead of பண்ணையார், the word நாட்டாமை will sound good in this story, just a thought.

    ReplyDelete
  34. Yes Mohan .. நாட்டாமை அதிகமாக பொருந்தும் .. அம்புலிமாமா ஞாபகத்தில் பண்ணையார் என்று அடிச்சு விட்டாச்சு!

    ReplyDelete
  35. நன்றி மணி அண்ணே .. நீங்கள் கொடுத்த அறிமுகம் கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் ... இப்படியெல்லாம் ஒரு காலத்தில் வரவேணும் எண்டு வாழ்த்தியதாகவே எடுத்துக்கொண்டேன் .. கொள்கிறேன் ..

    அடுத்த அரங்கில் சந்திப்போம்....

    ReplyDelete
  36. Very Nice Poem. You are Srilankan Vairamuttu.

    siva59s@yahoo.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...