Skip to main content

விஸ்வரூபம்!

 

viswaroopam-movie-photos-1382“அண்ணே இண்டைக்கு நிச்சயமா ஓடுது, டிக்கட் புக் பண்ணீட்டேன்” என்று கேதா மதியமே சொன்னபோது நம்பமுடியவில்லை. இறுதிநேரத்தில் ஏதாவது முன்னேற்ற குழுவோ, முக்கா குழுவோ தடையுத்தரவு வாங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பெடரர் முரே செமி பைனல் வேறு. பெடரரா கமலா என்று ஒரு கணம் குழப்பம். “உன்னை பாராமலே.. நான்” என்று சங்கர் மகாதேவனின் ஆலாப் மனதுக்குள் இழுக்க, கமல் என்று முடிவுசெய்தாயிற்று. மாலை ஆறுமணி ஷோ. ஆஸியில் முதல் ஷோ!

படத்தின் கதை? பூஜா மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி(Nuclear Oncologist?) துறையில் பிஎச்டி செய்து அது சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்பவள். அங்கே அவளின் மேலதிகாரியுடன் காதல். கள்ளக்காதல். பூஜா ஏற்கனவே திருமணமானவள். கணவன் கதக் நடன கலைஞன். அன்ரியா தவிர இன்னும் நாலு சப்பை பிகருகளுக்கு நடனம் சொல்லிகொடுப்பவன். கொஞ்சம் ஒன்பது ரூபாய் நோட்டு. அவனுக்கும் ஏதாவது தகாத உறவு, அது சாத்தியமில்லை என்றால் ஏதாவது ஒரு கறுத்த பக்கம் இருந்தால் தன்னுடைய கள்ளத்துக்கு குற்ற உணர்ச்சி இருக்காதே என்று நினைத்து கணவனின் குறைபிடிக்க ஒரு டிடெக்டிவ்வை ஏற்பாடு செய்கிறாள். அதிலிருந்து தான் கதையின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது. அல்லது ஆரம்பிக்கிறது.

big_Kamal_is_an_Universal_Hero__Pooja_Kumar_-81c7f7d25c06d53bf2c33aaa66dd7be0கமல் வெறும் கதக் டான்சர் கிடையாது, ஒரு ஆர்மி ஏஜென்ட், ஒரு இடத்தில் ஏதோ நியூகிளியர் ரிசெர்ச் அனலிஸ்ட் என்று கூட சொல்வதாக ஞாபகம். அதுவும் அல்கைடா தீவிரவாதிகளை ட்ராக் பண்ணும் ஏஜென்ட். அவரோடு நாலைந்து கூட்டாளிகள். அல்ஹைடா தீவிரவாதிகள் சீஸியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி லோக்கலிலேயே தயாரித்த ஒரு விதமான டவுன் க்ரேடட் நியூகிளியர் குண்டால் நியூயோர்க்கை வெடிக்க வைக்கப்போகிறார்கள். அதை எப்படி கமலும், அவர் குழுவும் நியூயோர்க் போலீஸும் விறுவிறுப்பில்லாமல் முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை!

பிளாஷ்பக்கில்  கமல் ஒரு அண்டர் கவராக ஏஜண்டாக ஆப்கான் தீவிரவாதிகளுக்குள் நுழைகிறார். அங்கே தீவிரவாதிகளுக்கு (அவர்கள் அல்கைடாவா? தலிபானா? முஜாஹிதீன்களா? என்ற குழப்பம் இருந்தது) பயிற்றுவிக்கிறார். ஒரு காட்சியில் ஒசாமாவை கூட தூரத்தில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமைகிறது. ஆப்கானில் நடக்கின்ற மரணதண்டனைகள், கசையடி, சிறுவர் போராளிகள், பெண்கள் ஒடுக்குமுறை, நேட்டோ குண்டுத்தாக்குதல்கள் என்று அவசர அவசரமாக எல்லாமே ஒரு அரை மணிநேரம் படத்தில் வருகிறது. இந்த காட்சிகளை மூலக்கதைக்கு நடு நடுவே காட்சியை பிஃரீஸ் பண்ணிவிட்டு சொல்லுகிறார்கள்.

ஆ அப்புறம்? .. படம் முடிஞ்சுது பாஸ். இவ்வளவு தான் கதை. ஆப்கானிலும் நியூயோர்க்கிலும் நடைபெறும் கதைகள் மாறிமாறி வந்து, கடைசியில் விஸ்வரூபம்2 வருகிறது என்று மெசேஜை போட்டுவிட்டு படத்தை முடிக்கிறார்கள்.

viswaroopam-movie-latest-stills-8ஆரம்ப காட்சிகளில் கதக் கலைஞராக நடை உடை பாவனைகளில் நளினம் காட்டுகிறார். அதை தவிர்த்து மிகுதி இடங்களில் கமல் வெகு இயல்பாக நடித்திருக்கும் படம். தேவையே இல்லாமல் எல்லா வேடங்களிலும் தானே வர முயலாமல், ஒரு அக்ஷன் திரில்லருக்கு எது வேண்டுமோ அது, அந்த டைமிங், “அவருடைய நடிப்பு பெரிதாக ஒன்றுமில்லை” என்று படம் முடிந்து போகும்போது எவனோ ஒருவன் சொல்லிக்கொண்டு போனான். கமல் நடித்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை. Mr and Mrs Iyer இல் நடித்த ராகுல் போஸ் தான் பிரதான் வில்லன். ஒக்கே. நாசர் கூட ரொக்கட் லோஞ்சரை ஏதோ ஒரு காட்சியில் தூக்குகிறார். டெல்லிகணேஷ் மிஸ்ஸிங்! பூஜாகுமாருக்கு கொஞ்சம் நெகடிவ், infidelity  செய்யும் ரோல் ரோல். ஆனால் நைட்டியில் வரும்போது வில்லியாக இருந்தாலும் ஹூ கேர்ஸ்? கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளில் காட்டக்கூடிய அளவுக்கு மக்ஸிமம் காட்டுகிறார். “விழுந்து விழுந்து” பர்போர்மன்ஸ். நடிப்பு கூட நன்றாகவே வருகிறது. நம்ம ஆன்ரியா “பின்னிருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றிவிட்டு” என்னும்போது சடக்கென்று கமலை கட்டியணைக்கிறார். “உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்" வரிகள் வரும்போது முத்தமிடுவார் என்று சீட்டு நுனிக்கு போனேன். மைக்ரோவேவ் விசில் அடித்துவிட்டது. அடச்சிக்.

படத்தில் வசனங்கள் கமல் ரகம். “கடவுள் தான் எங்கள காப்பத்தனும்”, “எந்த கடவுள சொல்லுற?”, “சரி விடு மீண்டும் ஆரம்பிக்கவேணாம்” எல்லாம் கிளாசிக். முதலில் “ரசியா, முஜாஹுதீன், அமேரிக்கா, தலிபான் … குரங்குகள் .. நீங்கள் எல்லாம் முன்னுக்கு வால் இருக்கும் குரங்குகள்”  என்று ஒரு கிழவி திட்டும்போது கூட்டம் சிரித்தது. ஆப்கானின் வரலாறை படித்திருந்தால் சிரிக்கமாட்டீர்கள். ஏனென்றே புரியாமல் எங்கேயோ எப்போதோ ஒரு சண்டை நடந்துகொண்டிருக்கும் தேசம் அது.  பனிப்போரின் போதே இது ஆரம்பித்துவிட்டால், போர், ஆயுதம், ஏகே47 தவிர வேறொன்றையும் அறியாத ஒரு தலைமுறை அங்கே உருவாகிவிட்டது. படித்த, படிக்க முயல்பவர்களையும் போட்டுவிடுவார்கள். Radical thinking உள்ள ஒரு சிலரும் காபுல் அல்லது ஏனைய தேசங்களுக்கு ஓடிவிட்டார்கள். யாதை Kite Runner இல் அழுத்தமாக காட்டுவார்கள். விஸ்வரூபம் அரசியல் படமல்ல. அக்ஷன் படங்களில் இதை காட்டவும்முடியாது. ஆனால் கமல் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முயல்கிறார். அரை அவியல் தான்.

Viswaroopam-Movie-Preview-300x168

சில முஸ்லிம் உணர்வாளர்கள் ஏன் தடையுத்தரவு வாங்கினார்கள்? என்ன தான் முஸ்லிம்களுக்கெதிராக படத்தில் வருகிறது? அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. போதாததுக்கு கமல் கூட படத்தில் முஸ்லிமாக தான் வருகிறார். படத்தில் ஆப்கான் தீவிரவாதம் வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் வருகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் அநியாயங்கள் வருகிறது. அதை பார்க்கும்போது யாருக்காவது உணர்வு பாதிக்கப்பட்டால் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நித்தியானந்தா இந்துத்துவத்தின் பேரால் செய்யும் அநியாயங்களை பத்திரிகைகள் எழுதும்போதோ, சிவசேனா கொடுமைகளை புத்தகத்தில் படித்தபோதோ எனக்கு அந்தந்த நபர்கள் மீது கோபம் வந்ததே ஒழிய அதை புட்டுவைத்த பத்திரிகைகள் மீது கோபம் வரவில்லை. நீ எப்படி சொல்லலாம் என்று ஊடகங்கள் மீது தடையுத்தரவு வாங்க தோன்றவில்லை!

kamal-hasan-sekhar-kapoor-viswaroopam-gallery35

தலிபான் அல்கைடா வருகின்ற ஒரு அக்ஷன் திரில்லர் படத்திரைக்கதையில், “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று எல்லா பாத்திரங்களும் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. “கொடுக்கிறேன் என்று நினைப்பவனே, கொடுப்பதற்கு நீ யார்” என்று கவிதை எழுதமுடியாது. “கனவு காணுங்கள், திருக்குறள் படியுங்கள், முன்னேறலாம் சிறுவர்களே!” என்று அறிவுரை செய்யமுடியாது.  படத்தில் ஆப்கானில் கசையால் அடிக்கிறார்கள். பெண்களை கொடுமைப்படுத்துகிறார்கள். சிறுவர்களை வெளியுலகமே தெரியாமல் ஜிகாதிகளாக வளர்க்கிறார்கள். அமெரிக்கர்கள் குண்டு போட்டு தன் பங்குக்கு மக்களை கொல்லுகிறார்கள். எடுத்த கதைக்கு கமல் இதை காட்டியே ஆகவேண்டும். கதைக்கு தான் காட்சிகள். நீ ஏன் அந்த கதையை தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டு நாங்கள் ஒரு கலைஞனின் உரிமையை நெரித்து கொல்லமுடியாது. அது தீவிரவாதம். “Davincy code”, “Angels and Demons”, “வேதம் புதிது”, “இரத்தக்கண்ணீர்”, “பம்பாய்”, “ஹேராம்” போன்ற படங்கள் போல தான் இதுவும்.  சொல்லும் கருத்தை கிரகித்தால் இந்த குழப்பம் வர சான்ஸ் இல்லை. அப்படியே குழப்பம் வந்தாலும் கூட, ஒரு நாகரிக சமுதாயத்தில் இயல்பாக விமர்சிக்கவேண்டுமே ஒழிய கமல் போன்ற கலைஞனை முடக்கக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு அரங்குகளை கூட அந்த முன்னேற்ற கழகங்கள் செய்யலாம். செய்யமாட்டார்கள். அவர்கள் நோக்கம் விழிப்புணர்வு அல்ல. விழிமூடி  குருடராய் இருப்பதே. நல்ல வருவீங்கடா.

ஒகே, பாக்டு விஸ்வரூபம். ஹேராம் படத்தில் அம்ஜத்தோடு சாகீத் பேசுகின்ற ஒரு காட்சி. இந்து முஸ்லிம் தீவிரவாதிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கும் சமயம். “ஹைபர் கணவாயால் வந்த சுதேசி தானே நீ” என்று சாகீத் சொல்ல “ராமன் மட்டும் யாரு” என்பான் அம்ஜத். சர்க்கென்று குத்தும். என்னளவில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் ஹேராம். விருமாண்டியில் அந்த சிறைச்சாலை கலவரம். point of view காட்சிகள் மூலம் மரணதண்டனை பற்றிய அழுத்தமான விமர்சனத்தை வைத்த முத்திரை. மாதவன் அழும்போது “ஏகாதசம் பூர்ண சநாதனம் துவாதசம் பரிபூர்ண சநாதனம்”, “நீ தாண்டா கடவுள் “என்று கமல் சொல்லும் அன்பேசிவம். கேயாஸ் தியரியை அசாத்திய விறுவிறுப்புடன் சொன்ன தசாவதாரம். நகைச்சுவை படத்தில் கூட "the matrimony was bad but the alimony was good” போன்ற வசனங்களை புகுத்தும் இலாவகம். தேவர்மகன், மகாநதி என்றில்லை பஞ்சதந்திரம் காதலா காதலா போன்ற படங்கள் கூட கமல் என்ற கலைஞனால் மாத்திரமே முடியக்கூடிய விஷயங்கள். கமலை எங்கள் சொத்தாக நினைப்பதற்கான காரணங்கள்.

viswaroopam_movie_stills_n_wallpapers_3012120930_020

விஸ்வரூபத்தில் இது எல்லாமே இல்லை என்று இல்லை. ஆனால் இது எல்லாவற்றையும் இணைக்கும் திரைக்கதை அவ்வளவு அழுத்தமோ வேகமோ இல்லாமல் போய்விட்டது. அழுத்தமில்லாத ஆப்கான் காட்சிகள். ஏன், என்ன சொல்லவருகிறார் என்பதை அவ்வளவாக பூரணபடுத்தவில்லை. இரண்டரை மணிநேர திரைப்படம் கிளைமாக்ஸை நோக்கி செல்லும் பாதை, எல்லா இடமும் தறிகெட்டு பயணிக்கிறது. கூடவே எங்களால் விறுவிறுப்புடன் பயணிக்கமுடியவில்லை. கிளைமேக்ஸ் காட்சி கூட, சீட்டு நுனி ரகம் இல்லை. மிக சாதாரணமான காட்சிகள். இனி தான் மெயின் சீன் இருக்கு என்று ரிலாக்ஸா இருக்கும்போதே படம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு காட்சிகளின் தரமும் ஹோலிவுட் ரகம் தான். ஆனால் ஸ்க்ரீன்ப்ளே கடுகதியில் இருந்தால் தான் எந்த வுட்டையும் பார்க்கமுடியும். இந்த படமும் களமும் கமல் ஹோலிவுட்டுக்கு தன்னைப்பற்றி அனுப்பிய Resume. இஸ்லாமிய தீவிரவாதம், நியூயோர்க்கில் வெடிக்கப்போகும் குண்டு, அக்க்ஷன் திரில்லர் எல்லாமே அமெரிக்கர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தது ஒகே. ஆனால் அமெரிக்கர்களுக்கு இதை எல்லாவற்றையும் விட ஒரு அக்ஷன் படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மிகவும் பிடிக்கும். Speed இல் ஒரு சின்ன பஸ்ஸை வைத்து அதகளம் பண்ணிய இன்டஸ்ட்ரி அது. கமல் அந்த திரைக்கதையை மிஸ் பண்ணிவிட்டார்! ம்ம்ம். இட்ஸ் ஒகே. அடுத்த படத்தில பார்த்துக்கலாம் தல.

 

&&&&&&&&&&&

பின்குறிப்பு

“கொடுக்கிறேன் என்று நினைப்பவனே, கொடுப்பதற்கு நீ யார்” என்ற கவிதை எழுதியது கவிக்கோ அப்துல் ரகுமான்.

ரோஜா
மணிரத்னம்
Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!
மணிரத்னம் எழுதிய கவிதை!

Comments

  1. அட்டகாசமான விமர்சனம் சார். நான் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள். படம் பார்த்த பின்னர் எனக்கு கமலின் மீது தான் அதிக கோபம் வந்தது. அருமையான களம் கிடைத்தும் திரைக்கதையில் இப்படி சொதப்பி விட்டாரே என்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி SathyaPriyan, திரைக்கதை தொய்வு ஒரு பெரிய letdown தான் .. அடுத்த படத்தில் தல will be back with a bang என்று நம்புவோம்.

      Delete
  2. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படத்தோட பிளஸ் மற்றும் மைனஸ் எல்லாத்தையும் கவர் பண்ணி இருக்கீங்க, அந்த Transformation பைட் பத்தி சொல்லவே இல்லையே பாஸ்.
    வழக்கமான பெரிய கிளைமாக்ஸ் பைட் எதிர்பார்தவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கும். ஆப்கன் காட்சிகள் பாமரனுக்கு புரிவது கஷ்டம் தான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ் .. பாமரனுக்கு புரியவேண்டும் என்று படம் எடுத்தால் 12B போன்ற அருமையான படங்கள் தமிழுக்கு வந்தே இருக்காது. எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கவேண்டும் புரியவேண்டும் என்பது இல்லை தானே. மிகவும் நன்றி.

      Delete
  3. முக்கா குழுவோ??????? any indirect meaning ?????
    //சில முஸ்லிம் உணர்வாளர்கள் ஏன் தடையுத்தரவு வாங்கினார்கள்? என்ன தான் முஸ்லிம்களுக்கெதிராக படத்தில் வருகிறது? அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. போதாததுக்கு கமல் கூட படத்தில் முஸ்லிமாக தான் வருகிறார். படத்தில் ஆப்கான் தீவிரவாதம் வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் வருகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் அநியாயங்கள் வருகிறது. அதை பார்க்கும்போது யாருக்காவது உணர்வு பாதிக்கப்பட்டால் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நித்தியானந்தா இந்துத்துவத்தின் பேரால் செய்யும் அநியாயங்களை பத்திரிகைகள் எழுதும்போதோ, சிவசேனா கொடுமைகளை புத்தகத்தில் படித்தபோதோ எனக்கு அந்தந்த நபர்கள் மீது கோபம் வந்ததே ஒழிய அதை புட்டுவைத்த பத்திரிகைகள் மீது கோபம் வரவில்லை. நீ எப்படி சொல்லலாம் என்று ஊடகங்கள் மீது தடையுத்தரவு வாங்க தோன்றவில்லை!// உண்மை

    ReplyDelete
    Replies
    1. //முக்கா குழுவோ// அது ஒரு flow வில எழுதினது .. indirect meaning ஒன்றும் இல்லை பாஸ்.

      மிகவும் நன்றி வந்ததுக்கும் கருத்து தெரிவித்தமைக்கும்.

      Delete
  4. கண்டிப்பாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், படத்தை பார்த்தப்பிறகு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளைப் நினைத்து பார்க்கும் போது, இவர்கள் ஆப்கன் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில், ஆப்கன் தீவிரவாதிகளைப் பற்றியது தானே?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மை தான் .. ஒரு சின்ன கேள்வியும் இதில் எழுகிறது. தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை அதிமுக கொடியுடன் சிலர் வந்து தாக்குவதாக படம் எடுத்திருந்தால் .. அதை அதிமுக தொண்டர்கள் உண்மையே என்றாலும் தான்கியிருப்பார்களா? ஒரு சின்ன doubt .. சில முஸ்லிம்கள் என்றில்லை பொதுவாகவே எங்கள் எல்லோருக்குமே சகிப்புத்தன்மை என்பது குறைவு தான்.

      Delete
  5. //சில முஸ்லிம் உணர்வாளர்கள் ஏன் தடையுத்தரவு வாங்கினார்கள்?//It is really a cocern...I understand their (so called Islamists) feelings but this is not the right way to react. In addition, as you mentioned there is nothing wrong in the movie. It is a usual commercial Tamil movie. I guess that's what Kamal intended also. //கூடவே எங்களால் விறுவிறுப்புடன் பயணிக்கமுடியவில்லை.// எங்களால்? you mean என்னால்...because I did not feel that way.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mohan. Its a full and full commercial entertainer as you said.

      //எங்களால் /
      yeah that's a generalization. Sorry. We three guys went to watch together. All felt same. So I used the word we, which I shouldn't have used.

      Delete
  6. இலங்கையில் தடை செய்யப்பட்டு விட்டது. எப்போது பார்ப்பதோ? இலங்கை எப்போதுமே நல்ல விடயங்களைத் தடை செய்துவிடும்,,, அது சரி.... இனவாதத்தை எந்த வகையிலும் தூண்டுவதாக இப்படம் அமைந்துள்ளதா அண்ணா??

    ReplyDelete
    Replies
    1. //இனவாதத்தை எந்த வகையிலும் தூண்டுவதாக இப்படம் அமைந்துள்ளதா அண்ணா??//
      அப்பிடி ஒரு மண்ணும் இல்லை .. இது தாங்கள் பேமஸ் ஆகிறத்துக்கு லெட்டர் பாட் கழகங்கள் கமலுக்கு செய்த அநியாயம் தான்.

      Delete
    2. அடப்பாவிங்களா ....

      Delete
  7. In my view, first half was epic. Second half was a bit slow compared to English movies but a good attempt for a tamil movie.

    தடை எல்லாம் நிறயவே over எண்டாலும், படத்தில் வாற முஸ்லிம் எல்லாரையுமே (hero தவிர்த்து) தீவிரவாதிகளாய் காட்டி இருப்பது ஒரு சின்ன நெருடல். (அதுதான் உண்மையாகவே இருந்தாலும் கூட)

    ReplyDelete
    Replies
    1. எடுத்த கதைக்கு அப்படித்தானே மச்சி எடுக்கமுடியும் ... சில விஷயங்கள் குத்தியிருக்கும் தான் .. இல்லை எண்டு சொல்ல இல்ல .. ஆனா யோசிச்சு பார்த்தா கமல் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தை தான் சொல்ல வருகிறார் என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்களின் எண்ணம் வேறாக இருக்கலாம்.

      Delete
    2. I agree. But say ஈழ தமிழரை பற்றி ஒரு படமெடுக்கினம். அதில வாற ஈழ தமிழர் எல்லாரும், தலைவரோட படத்த கும்புட்டுட்டு போய் குண்டு வைச்சு சனத்த கொல்லினம் . அந்த படத்த வன்னியில Release பண்ணினம். என்னதான் நாகரீகமா ஏற்று கொண்டாலும். உள்ள வலிக்கும் தானே.
      I don't give a shit to these politicians. But I am thinking how a common muslim in kovai can take this.

      Delete
    3. Makes sense machchi .. I kind of felt the same. But then realized when I read Cage or Still Counting Dead, I didn't get angry against those journalists for writing the atrocities done by LTTE and not just GOSL's. It hurts. Definitely it does. But that's the bitter truth and we need to accept and confess it. But I agree with your point that not everybody could feel the same especially when so much of emotional bonding out there. Yet the treatment to Kamal is so outrageous and politically motivated as things getting revealed.

      Delete
    4. கமல் நடிக்காம, மிர்ச்சி சிவா நடிச்சிரிந்தா ஒரு நாயும் மோந்து கூடி பார்த்திருக்காது. just cheap publicity

      Delete
  8. விழிமூடி குருடராய் இருப்பதே. நல்ல வருவீங்கடா.

    This is the cause for our problem.Tough.

    Siva59s@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. True Siva .. its pathetic the way things happening ...

      Delete
  9. The movie only shows the good side of Americans and viceversa. If he could have cleverly pinpointed the grass-root of the problem then Muslims may be happy even-though way of fighting is wrong. Probably he might think that it is quit obvious. :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for making the comment.

      I wonder .. There is a scene where the antagonist says Americans never attack general public, but the very second moment, a village with full of people bombarded by American forces. These are the witty scenes of an ace director and not many would identify the sarcasm behind these scenes. The old lady too was telling about insurgencies from various foreign forces time to time in Afghanistan. I think Kamal did proper justice to the plot. We need to remember its not a political film but an action thriller. So it doesn't necessarily cover the politics of whole.

      Delete
    2. Well you are correct If you do not dig the scene bit further. For instance, A village is bombarded as us army suspect that they hold us prisoners. Unfortunately whole village is destroyed. This shows America's blind attack on civilians but the scene follows with death of a white doctor she had a gun shot in her head. I feel he tries to balance eventhough the scene supposed to show USA bad side. If you watch every single scene there is always a justification behind what USA does but not a single scene for ? I don't blame Kamal as he will not get any benefit from this except as you said he try to attract hollywood

      Delete
  10. நல்லதொரு பகிர்வு .. இதற்கு ஏன் இஸ்லாமியத் தமிழர்கள் சிலர் பொங்கினார்கள் எனத் தெரியவில்லை. தீவிரவாதத்தைக் காட்டுவதை எதிர்ப்பவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்பது எனத் தெரியவில்லை. என்னவோ ! கமலை வைத்து காமடி கீமடி பண்ணினார்களோ என்ற ஐயமும் எழுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இக்பால் .. உண்மை தான். பிரபலங்களை சீண்டுவது பொழுது போக்காகிவிட்டது.

      Delete
  11. Title card காட்டப்படும் message முஸ்லிம் மக்கள் அமைதிப் புறாக்களாக வாழ்ந்து வருகிறாரகள் அப்போது ஒருவன் ஜிகாதி விதையை துவி சிலரை கெடுப்பதாகவும். அப்படி சிலரை (புறாக்களை) அமேரிக்கா அனுப்பிவைபபதாகவும் உள்ளதாக அதை கமல் சிமபாலிக்காகக் காட்டுதாகவும சொல்லப்படுகறது....(அவர் பாலச்சந்தர் மாண்வர் ஆதலால் அப்படி).....உண்மையில் முசுலிகளை அவர் வாழ்க்கையின் மேல் பரிதாபம்தான் கொண்டு எடுதிருக்கிறார் அதற்கு பாராட்ததான் வேண்டும்
    R Chandrasekaran

    ReplyDelete
    Replies
    1. :) நன்றி சந்திரசேகரன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...