கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.
என்னை பொறுத்தவரையில் மண்டேலா என்ற பெயர் இருபத்தேழு வருடங்கள் சிறையில் வசித்த தனிமனிதனுக்கு சொந்தமானதில்லை. அது அந்த காலத்தில் உலகம் முழுதும் அவரை முதன்மை படுத்தி போராடியவர்கள் அனைவருக்கும் சொந்தமானது. "Free Mandela!" உலகத்தின் தலையாய வாசகம் ஆனது. இவரை கைதுசெய்திருக்காவிட்டால் கறுப்பின விடுதலை பற்றிய எழுச்சி இவ்வளவு வீரியமாக இடம்பெற்று இருக்குமோ? ஆய்வுக்குரியது. ஆனால் அவரின் தளராத மனவுறுதி கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆட்சிக்கு முன்னரான மண்டேலா என்பவர் ஒரு போராட்ட அடையாளம். கறுப்பின விடுதலைக்கால போராட கிடைத்த சின்னம். அந்த பிடிமானத்தை வைத்து உலகம் முழுதும் நல்லவர்களால் அந்த போராட்டம் நடந்தது. மண்டேலாவை மையப்படுத்தி எப்படி ஒரு இனவிடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.
மண்டேலா என்ற தனிமனிதனின் ஆளுமை ஆட்சி மாற்றத்தின் போது வெளிப்பட்டது. அதிலிருந்து தான் அவர் எம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். மன்னிப்பும் நட்பும் வெட்டிப்பேச்சாக அன்றி நிஜமாகவே வெளிப்பட்டது. "வெள்ளையனே வெளியேறு" என்று உணர்வுகளை தூண்டாமல் அவர்களும் இந்நாட்டு மக்களே என்றார். உடல்களும் உயிர்களும் காயப்படாமல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த அதிசயத்தை மண்டேலாவும் கிளார்க்கும் நிகழ்த்தி காட்டினார்கள். இந்த இடத்தில் கிளார்க்குக்கு ஒரு சல்யூட். சிறுபான்மை மீது காழ்புணர்ச்சியும் எகத்தாளமும் இருக்கின்ற ஒரு உலகத்தில் எந்த சிறுபான்மை தம்மை அடக்கி ஆண்டதோ அந்த சிறுபான்மையோடு நட்புபாராட்டி மன்னித்து அவர்களையும் உள்வாங்கி ஆட்சி செய்த மண்டேலா வணக்கத்துக்குரியவர். இதை எப்போதுமே நூறுவீதம் செய்யமுடியாது. ஏமாற்றங்கள் மனத்தாங்கல்கள் எப்போதுமே இருக்கும். கறுப்பு இனத்துக்கும் வெள்ளை இனத்துக்கும் இந்த வலி இன்றைக்கும் இருக்கிறது. ஹோர்த்சே எழுதிய "Disgrace" என்ற நோபல் பரிசு நாவலில் அருமையாக விளங்கப்பட்டிருக்கும். இன்றைய தென் ஆபிரிக்க சமூகத்தில் வெள்ளையினர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளை நினைவுகூருவோம்.
மண்டேலா அந்த வேறுபாடுகள் வெறுப்பாக மாறாத அளவுக்கு ஓரளவுக்கு வேறுபாடுகளை அங்கீகரித்து ஆட்சிசெய்தார். "நடந்ததை மறப்போம், வாங்க பழகலாம்" என்று போலிப்பெச்சு இல்லாமல் நடந்த அநியாயங்களை ஆராய Truth and Reconciliation Commission கொணர்ந்தார். அதை செயற்படுத்தி உண்மைகளை ஆவணப்படுத்தினார். அதன் பின்னர் அதை மன்னித்து முன்னேறினார். ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் தன் மதம், தன் மொழியை முன்னிலைப்படுத்தாமல், தானும் தன் குழந்தைகளுமே ஆட்சியில் இருக்கவேண்டும் என்று நினைக்காமல் ஆபிரிக்காவில் ஜனநாயகம் தளைத்தோங்க அடி கோலினார். தென் ஆபிரிக்கா இன்றைக்கும் பல்லின நாடாக இருக்க அவர் முக்கிய காரணம்.
மண்டேலா காந்தி அல்ல. மண்டேலா செகுவாரோ அல்ல. மண்டேலா லீகுவான்யூவும் அல்ல. மண்டேலா மண்டேலா தான். அவர் போராட்டத்தை, அவர் வாழ்க்கையை அவர் சந்தித்த சூழ்நிலைகளோடு பொருத்திப்பார்த்து எமக்கு தேவையானவற்றை கொண்டாடவேண்டும். சிறைவாழ்க்கையின் போதான அவரின் மன உறுதியும், ஆட்சிமாற்றத்துக்கு பின்னரான அவருடைய தூரநோக்கான பரந்த மனப்பான்மையும் மனிதம் உள்ளவரை மறக்ககூடாத விஷயங்கள்.
இந்த மனிதனை இந்த நாளில் நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்.
*********
தொடர்புபட்ட பதிவுகள்
http://www.padalay.com/2012/02/disgrace.html
http://www.padalay.com/2012/03/29-03-2012.html
http://www.padalay.com/2013/03/21-03-2013.html
http://www.padalay.com/2012/03/15-03-2012.html
Thnaks for the valuable information.
ReplyDeleteSiva