Skip to main content

ஏ ஆர் ரகுமான் - பாகம் 1

 

SINGER-460

இடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் தம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ. காட்சியின் ஆரம்பத்தில் காதல் ரோஜாவின் பாடலில் இன்டர்லூட் ஹம்ம்மிங், “லலலலலல லல லா லல லாலாலா” டியூன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியமொன்றில் போகும்.

அவன் அவள் உடைக்குள்ளே பனிக்கட்டிகளை வெடுக்கென்று கொட்டிவிடுவான். அலறியடித்தபடியே அவள் தான் கட்டியிருந்த புடவையை விட்டெறிந்தபடி ஓடுவாள். ஓடி அடுத்த அறைக்குள் ஒளிந்து கொள்வாள். கூடவே பியானோவும் போய் ஒளிந்துவிடும். இப்போது வெளியே வரவேண்டும். ஆனால் உடுத்துவதற்கு அவளிடம் ஒன்றுமே இல்லை. இவன் தன்னுடைய ஸ்வெட்டரை கழட்டி அவளிடம் எட்டிக் கொடுக்க, அதை மட்டுமே அணிந்துகொண்டு அவள் மெல்ல கதவை திறந்துகொண்டு வெளிவருவாள். பின்னாலே பியானோ ஸ்ட்ரிங் இசையும் பதுங்கி பதுங்கி வரும். இப்போது என்னடாவென்றால் அவன் அந்த ஸ்வெட்டரையும் தந்துவிடு என்று அவளை துரத்த ஆரம்பிப்பான். மீண்டும் ஓட்டம். என்ன இது டோம் அண்ட் ஜெரி விளையாட்டு? என்று நாம் யோசிக்கும் கணத்தில் … அட டோம் அண்ட் ஜெரி இசையே பின்னணியில் கேட்கும்.  அவன் அவளை துரத்தும் போது அவர்களோடு சேர்ந்து பியானோ கட்டைகளும் அறை முழுதும் சுற்றித்திரியும். ஒருகட்டத்தில் களைத்துப் போய் இருவருமே கட்டிலில் விழுவார்கள். அவர்களோடு சேர்ந்து பியானோவும் அருகிலேயே களைத்து விழும். மௌனம். அவர்கள் இருவரின் பெருமூச்சு ஓசை. அவன் மூச்சிரைக்க பேச ஆரம்பிக்கிறான். மெதுவாக.

“அருமை பட்டிக்காடே … உனக்கு இங்கிலீஷ்ல ஒண்ணு சொன்னா புரியுமா?”

பியானோவிடமிருந்து ஒரு மூச்சுமில்லை. அவள் தான் பேசுகிறாள்.

”கொஞ்சம் கொஞ்சம் .. என்னன்னு சொல்லுங்க”

அவன் சடக்கென்று சொல்வான்.

”ஐ லவ் யூ”

அந்தக்கணம் இருக்கிறதே. அனிச்சை. அவளும் பியானோவும் ஏக நேரத்தில் துளிர்ப்பார்கள். அவள் கண்களைப் போலவே பியானோவும் மெல்ல விரியும். மிக மெல்லிதாக. உங்கள் அன்புக்குரியவளின் முதல் ஸ்பரிசம் போல, பட்டும் படாமலும் வருடுகின்ற இசை. கேட்கும்போது எங்கள் வாய் மட்டுமன்றி கண், காது, முகத்து தசைகள் எல்லாமே சிரிக்கும். அந்த நிமிடமே உங்கள் துணையின் அருகாமையை மனம் ஏங்கும். இல்லாதவர்கள் அப்பருக்கு கோல் பண்ணி ஏசுவீர்கள். அப்படி ஒரு உணர்வை தூண்டும் இசை அது.

அதே பியானோ தான். அவள் அவனை நினைத்து ஏங்கும்போது அழுது தொலைக்கும். ஒரே மெட்டு. எப்படி இரண்டு உணர்வுகளை கொடுக்கிறது? கடத்தப்பட்ட கணவனை கடைசியில் அவள் ஒரு பாலத்தடியில் ஏராளமான போராட்டங்களுக்கு பிறகு சந்திக்கிறாள். சந்திக்கும் போது அவளுக்கு எதுவுமே பேச தோணவில்லை. என்னத்த பேசுறது? இசை பேச ஆரம்பிக்கும். ஒரு ஹம்மிங்.  வெறும் ஆலாப்பு. தலையை மிருதுவாக கோதிவிடும் ஆலாப்பு. அந்த மெட்டுக்கு வரிகளை நம் மனது தானாகவே எடுத்துக் கொடுக்கும்.

“உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி”.

இடம் இராமநாதபுரம்.  தாசில்தார் வீட்டுக்கு இவன் போகிறான். தாசில்தார் வரவேற்கிறார். பின்னாலே அவர் மகள் கொஞ்சம் தயக்கத்துடன் எட்டிப்பார்க்கிறாள். எதுக்கு இவன் வந்திருக்கிறான்? என்ன ஆகப்போகுதோ?

“வாங்க இஞ்சினியர் .. என்ன வாசப்படியிலயே நின்னிட்டீங்க .. உள்ள வாங்க .. காப்பி கொண்டாம்மா”

இவன் நேரே விஷயத்துக்கு வருகிறான்.

“கணேசன்..”
”ஆ”
”நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ண ஆசைப்படுறன்”

இப்படி தீடீரென்று கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்? அவனோ அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறான். அவளுக்கு இதில் சம்மதமா? முன்னமேயே அவளுக்கு அவனை பிடிக்குமா? எதுவுமே யாருக்குமே தெரியாது. அவளுக்கு குழப்பம். உள்ளூர சந்தோசம். ஒருவித மெல்லிய சலனத்தோடு அவள் தகப்பனை பார்க்க, தகப்பன் அவளிடம் திரும்ப, இசை செய்தி கொண்டு வருகிறது.

“எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன் – அது
வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்”

இப்போது கொஞ்சம் வேற லெவலுக்கு போவோம்.

அந்த இளைஞன் துறுதுறுப்பானவன். சுதந்திரமானவன். எதற்கும் கலங்கமாட்டான். மலை ஏறுவது என்றால் அவனுக்கு இஷ்டம். அதுவும் தனியே தான் செல்வான். அப்படி ஒருநாள் போகையில் ஒரு மலைப்பொந்துக்குள் வழுக்கி விழுந்துவிட்டான். விழுந்தபோது அவனோடு சேர்ந்துவிழுந்த ஒரு பாறாங்கல்லுக்கும் பொந்துக்குமிடையில், அவன் கை சிக்கிவிட்டது. அவ்வளவு தான். சிக்கிவிட்டது. எடுக்க முடியவில்லை. கத்திப்பார்த்தால் அது யாருமே இல்லாத வெறும் மலைப்பிரதேசம். அவனாக அந்த இடத்தைவிட்டு நீங்கினால் தான் உண்டு. கூட இருந்த குடிநீர் முடிகிறது. பசிக்கிறது. ஒரு கட்டத்தில் சிறுநீரை குடிக்கும் நிலைமை. இரவு பகல் இரவு பகல் என்று ஐந்து நாட்கள். அவன் உணர்வு எப்படி இருந்திருக்கும்? ஆங்கிலத்தில் சரயலிசம் என்பார்கள். அது விசித்திரமான உணர்வு. புரியவைப்பது கடினம்.

உதாரணத்துக்கு ஒருநாள் நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். கொடுஞ்சிறையான நாலாம்மாடியில் இரவை கழிக்கவேண்டி வருகிறது. அந்த இரவோ மிரட்டுகிறது. விடிந்தால் விசாரணை தொடங்கும். நரகவேதனை. பகலுக்கு இரவு பரவாயில்லை என்று தோணும். அது நீளட்டும் என்று நினைப்பீர்கள். எனினும் தூங்கமுடியுமா? இல்லை. இரவு முழுதும் அரற்றிக்கொண்டு இருப்பீர்கள். யார் யாரெல்லாமோ நினைவுக்கு வருவார்கள். மனைவி வருவாள். அம்மா அப்பா பக்கத்து வீட்டுக்காரர், நண்பன், கடைக்காரன் கூட வருவான். தப்பிப்பிழைத்தால் வெளியே வந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும், செய்யாமல் விட்ட பலவிஷயங்களை செய்யவேண்டும். இந்த இன்னலில் இருந்து மீண்டுவரவேண்டும் என்று மனம் பல சங்கல்பங்கள் பூணும். கண் எரியும். புரண்டு புரண்டு படுப்பீர்கள். நுளம்பு வேறு. அது ஒரு நீண்ட நெடிய கொடிய இரவாக உங்களுக்கு இருக்கும். இந்த மனநிலையில் என்ன எண்ணங்கள் உங்களுக்கு தோன்றும்?

இந்த குழப்பமான கையாலாகாத ஒருவித எண்ண ஓட்டத்தை எல்லாம் இசையில் கொண்டுவர முடியுமா? முடியும். அவர் கொண்டுவந்தார். 127 Hours திரைப்படத்து பின்னணி இசை அத்தகையதே. இரண்டு குரல்கள். ஹர்பஜ்ஜி இசைக்கருவி. கேட்கும்போது அந்த நீண்ட நெடிய இரவின் கொடூரம் விளங்கும். கண்கள் சொருகும். ஆனால் தூங்க முடியாது.


 


1992ம் ஆண்டு. யசோ அக்கா, கம்பஸில் படிக்கையிலே முன்வீட்டில் தான் வாடகைக்கு இருந்தவர். எங்கள் வீட்டுக்கு சாப்பிட வருபவர். ஒருநாள் வரும்போது கையோடு அவருடைய வோக்மன்னையும் கொண்டுவந்தார். அக்கா அதை இலேசில் எவருக்கும் தரமாட்டார். காரணம் பென்டோச் பட்டறியின் தட்டுப்பாடு தான். பென்டோச் பட்டறி ஓமந்தைக்கு இங்காலப்பக்கம் கொண்டு வருவதற்கு அப்போது அரசாங்கம் தடை விதித்திருந்தது. யாராவது லொரிக்காரன் டயருக்குள் ஒளிச்சுவைத்து கொண்டுவந்தால் தான் உண்டு. அன்றைக்கு அக்காவை புதினமாகவே பார்த்தோம். அவர் கொஞ்சம் பெருமித சிரிப்பு சிரித்தபடியே “இந்த பாட்டை கேளுடா” என்று என் இரண்டு காதுக்குள்ளும் இயர்போனை செருகினார்.

“டின்டின்டின்டிட….” என்று பேஸ் கிட்டாரும் மேல்ஸ்தாயி பியானோவும் இரண்டு காதுகளுக்குள்ளும் பனிக்கட்டிகளாய் உருண்டு ஓடி, ஓடி உருண்டு … டிஷ் என்று வெடித்துச்சிதற “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று முன்னர் எப்போதுமே கேட்காத பெண்குரல். தொடர்ந்து ஒரு ஆண்குரல்.  அடுத்தபாட்டு காதல் ரோஜாவே. அதே பேஸ்கிட்டார் இப்போது அடி வயிற்றை டிர்ர் டிர்ர் எங்கிறது. “ருக்குமணி ருக்குமணி” பாட்டை அக்கா போர்வேர்ட் பண்ணுகிறார். அடுத்தபாட்டு கீச்சிடும் வயலினுடன் ஆரம்பிக்கும் துள்ளல் மொழி. சின்னச் சின்ன ஆசை. கடைசிப் பல்லவியில் “சின்ன சின்ன ஆசை” “டிங் டிங் டிங்” “சிறகடிக்க ஆசை” “டிங் டிங் டிங்”.

“யாரக்கா இது மியூசிக்? .. வெள்ளைக்காரனா?”

ஒருநாள் சிவன் ஸ்டோர்ஸ் கடைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் ஒரு வீடியோக்கடை இருக்கிறது. அதில் வழமையாக “ஒரு மந்தாரப்பூ”, “நிலாக்காயும் நேரம்” டைப் பாடல்கள் தான் ஒலிக்கும். அன்றைக்கு கடையை தாண்டும்போது “ம் ..ம்…” என்று ஒரு பெண் ஹம்மிங். தொடர்ந்து மிருதங்கம் தடங்தக்ததாங் என்று ஆரம்பிக்க ஒருவித கந்தசஷ்டி கவச டியூனில் காதல் பாட்டு. “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்”. சைக்கிளை அப்படியே மதிலோடு சாய்த்துக்கொண்டு கேட்க ஆரம்பிக்கிறேன். முதல் இன்டர்லூர் வீணை. இரண்டாவது இன்டர்லூட் ஜலதரங்கம். கூடவே மிருதங்கம், புல்லாங்குழல், இத்யாதி இத்யாதி. இது எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும் பாட்டின் ஆதார ஜீவன். அந்த மெட்டு. பேய் பிடித்தவன் போல வீட்டுக்கு வந்தேன். அன்றைக்கு பிடித்த பைத்தியம். இன்றைக்கு இருபது வருடங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் “என் பேர் சொல்லுமே” என்று சுஜாதா பாடும்போதும் என் முகம் தன்னையறியாமல் தனை சாய்த்து சிரிக்கும்.

அந்தப்பாட்டிலே ஒரு இரகசிய விஷயம் இருக்கிறது. ஐபோடில் இந்த பாட்டு இருந்தால் உச்ச ஒலியில் வைத்து கேளுங்கள். இரண்டாவது சரணம்.

“எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது”

என்று சுஜாதா பாடுவாள். எஸ்பிபி அதற்கு

“எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது”

என்பார். அதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு இருக்கும். என்னடா இவன் இப்படி சொல்லிவிட்டானே என்று பெண்ணுக்கு ஊடல்.

“ம் ம் ம் அனுபவமோ”

என்பார் சுஜாதா. குரலில் ஒரு நக்கல் இருக்கும்.

அவள் இப்படிச்சொன்னால் அதற்கு ஆண் அசடு வழியவேண்டும். ஆனால் சரணம் முடிந்து மிருதங்கம் பல்லவிக்கு பாதை போடுகிறது. இதில் வரிகளுக்கு இடமேயில்லை. ஆனால் பாடும் நிலா சும்மா ஆளா? அந்த மிருதங்கத்துக்கு மத்தியிலும் ஒரு காதல் சிரிப்பு ஒன்றை வாய்க்குள் சிரிப்பாரே. ஷப்பா. சிரிப்பின் மூச்சு வெளிவரும் இடத்தில் பல்லவி தொடங்க … டிவைன்.

ஒருமுறை ஒரே ஆனந்தவிகடன் இதழில் மூன்று திரை விமர்சனங்கள். “புதியமுகம்“, “கிழக்குச்சீமையிலே”, “திருடா திருடா”. மூன்று படங்களின் அத்தனை பாடல்களுமோ முத்துக்கள். விகடன் விமர்சனக் குழு திக்கு முக்காடிவிட்டது. கடைசியில் “திருடா திருடா” விமர்சனத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“எப்படி இந்த மனிதருக்கு மட்டும் புதுசு புதுசாக இசை வருகிறது?”

படம் ரான்ஜானா. சென்ற வருடம் வெளியானது. அதில் ஒரு பாடல் “துமு தக்”. இந்த பாட்டிலே இருக்கிற சந்தோசம், காதல், கொண்டாட்டம் இதெல்லாத்தையும் தாண்டி “இவள் தானா என்னவள்? எனக்கு கிடைப்பாளா? கைச்சேருவாளா” என்கின்ற ஏக்கம் ஒன்று தொக்கி நிற்கும். கேட்டுக் கொண்டிருங்கள். ஒரு இடம். ஹோலிப்பண்டிகை அன்று எல்லோரும் மாறி மாறி வண்ணங்களை தெளித்து விளையாடுவார்கள். எல்லோருமே சிவப்பில்.  இசை தாளம் போட்டுக்கொண்டு இருக்கும். இவன் ஆடிக்கொண்டு இருக்கிறான். அப்போது இவன் காதலி என்ட்ரி. ஸ்லோ மோஷனில் மஞ்சள் உடையில் அவள் நடந்து வரும் அழகை பார்த்து அவன் சொக்கித்துப்போய் நிற்பான். “ நேனோ கி டாக் லே ஜா, நேனோ கி நையா, பாத்வார் து ஹாய் மேரி, து கேவைய்யா” என்று ஜாவித் அலி குரல் ஒலிக்கும். சீவன் போகும். அர்த்தம் யாருக்கு வேண்டும்? அவன் அவளைப்பார்த்து சொக்கி நிற்க, நாமோ அந்த இசையில் சொக்கிப்போய் நிற்போம்.

ஆனந்தவிகடன் ஆச்சரியப்பட்டு சரியாக இருபத்தொரு வருடங்களுக்கு பிறகு இந்தப்பாடல் வெளியாகியிருந்தது. இத்தனை வருடங்களில் அந்த கேள்வி இம்மி கூட மாறவில்லை.

“எப்படி இந்த மனிதருக்கு மட்டும் இப்படி புதுசு புதுசாக இசை வருகிறது?”

இப்போதெல்லாம் பூமிக்கு இறை தூதர்கள் வருவதில்லை என்கிறார்கள். கலிகாலமாம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. யார் இறைவன்? எதுக்கு இறைவன்? என்று இரண்டு கேள்விகளை கேட்டுப்பாருங்கள். உங்கள் பதில்களின் பண்புகள் அத்தனையும் ஒரு நல்ல இசையில் இருக்கும். “சச்சிதானந்த பிரம்மம்” என்று இந்துமதம் கூறும் விஷயம். இறைவன் அநாதியானவன். சந்தோஷங்களால் நிரம்பப்பெற்றவன். அதை மற்றவர்களுக்கும் அருள் பாலிப்பவன். இவ்வளவு தானே. இது நல்ல இசையிடம் தாராளமாகவே இருக்கிறது. அதனாலேயே இறைவன் இசைவடிவானவன் என்கிறோம். அவனின் தூதர்கள் இன்றைக்கும் புவியில் அவதரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பாஷ், பீத்தோவன், மைக்கல் ஜாக்சன், எம்எஸ்வி, இளையாராஜா என்று இந்த யுகத்திலேயே ஏராளம் இறைதூதர்கள். அந்த வரிசையில் அவதரித்த இளைய தூதன் தான் சாட்சாத்,

“அல்லா ராக்கா ரகுமான்”

அடுத்த பாகத்தில் முடிவுறும்


அடுத்த பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக.

தொடர்புடைய பதிவுகள்.

The sprit of music – A R Rahman
ஏகன் அனேகன்.
என் பதின்மத்து இளையராஜா

Comments

  1. 1992 I also thought the song is by a Westen Guy.
    1993 We were in the High Way in Germany with Thiruda Thiruda song.

    Yes, He is God sent

    ReplyDelete
  2. நண்பரே,

    நல்ல அலசல். நயமான எழுத்து. வாழ்த்துக்கள்.

    ரஹ்மான் 92க்கு முன்பே வந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.சில கோட்டைகள் அப்போதே தகர்ந்திருக்கும். நம் தமிழிசையில் நல்ல காற்று வீசியிருக்கும். ரஹ்மான் ஒரு புத்துயிர்ப்பு.

    ReplyDelete
  3. இன்றும் ரோஜா படத்தை மறக்க முடியாமல் இருக்க காரணம்..... அன்று ஜெனரேட்டரில் விடிய விடிய பார்த்ததாலோ தெரியவில்லை. மணிரத்னம் , மதுபாலா ,அரவிந்தசாமி எல்லாரையும் தூக்கி ஒரு பக்கம் வைத்து விட்டு என்னை கேள் என்று அடித்த புயல்இன்றும் தாக்கம் குறையாமல் சுழட்டி அடிக்கிறது.
    நிறைய நீங்களே அலசிவிடீர்கள் என்பதால் எதை எழுதுவது என்று தெரியவில்லை . ரசனை என்பது ரத்தத்தில் ஊறியது என்பதை விட இப்படியும் ரசிக்கலாம் என்று தீப்பொறியை பற்ற வைப்பதும் ஒரு கலையே .

    SPB யின் சிரிப்புக்கு சொத்தையே எழுதி கொடுக்கலாம் . பட்டு கன்னம் தொட்டு கொள்ள , சிறிய பறவை சிறகை விரித்து , வாசலிலே பூசணிப்பூ ,பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ , சொல்லி கொண்டு போகலாம் .சில பாடல்கள் ஒரு மோஹன புன்னகையில் பாடுவதை போல் எம்மை உணர வைக்கும் ।இது ரஹ்மானின் பதிவா இல்லை SPB யின் பதிவா என்று எழுதிய பின் தான் யோசித்தேன் ।

    சரி இப்ப ஏன் ஒருவரும் கமெண்ட்ஸ் பக்கம் வருவதில்லை ? ஒரு லைக் பட்டனை தட்டிடலாம் என்பதாலோ ?
    இப்படி எல்லாம் எழுத்துவதட்கு எதாவது ஒரு பட்டன் இல்லையா ?

    ReplyDelete
  4. நன்றி கீதா. நானே மூலத்தையும் எழுதி பின்னர் கொமெண்டும் போட்டுக்கொண்டிருந்தால் அழகிராது என்றுதான் கொமெண்ட் பண்ணுவதில்லை. மற்றும்படி உங்கள் கருத்துகளை ஆவலுடன் வாசிப்பதில் எப்போதுமே உற்சாகம்தான். மிக்க நன்றியும் அன்பும்.

    ReplyDelete
  5. நான் உங்களை சொல்லவில்லை . வாசித்துவிட்டு ஒரு லைக் பட்டன் மட்டும் தட்டிவிட்டு போகும் ஆட்களை எதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டேன் இது எழுத்துலகத்திற்கு ஒரு முன்னேற்றமா என்று தெரியவில்லை .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .