Skip to main content

வீராவின் விதி

 

prof

“The present determines the past”
-- Veera’s Theorem

இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது.

யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி.

“நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்”

வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன் பேராசிரியராகக்கூட நியமிக்கப்படுவேன். ஆளாளுக்கு விருது வழங்கி கையில் வேல் தந்து கௌரவிப்பார்கள். எலிசபெத் மகாராணி சொக்ஸ் போடாமல் கை தருவார். பேஸ்புக்கில் தமிழனை தலை நிமிரச்செய்தவன் என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான ஷெயார்கள் கிடைக்கும்.  பத்திரிகை, டிவியில் என் பேட்டி வரும். அடுத்த வருடமே நோபல் பரிசு எந்த அரசியல் பண்ணாமலேயே கிடைக்கும். அக்ஸப்டன்ஸ் ஸ்பீச் தயார் பண்ண வேண்டும். திருக்குறள் ஒன்றோடு முடிக்கவேண்டும். வேண்டாம். வீராஸ் தியரத்தையே சொல்லலாம்.

“வினை அறுப்பவன் வினை விதைப்பான்”

நினைக்கவே புல்லில்லை, புல்வெளியே அரிக்கிறது. ஒரே நாளில் உச்சம் தொட்டுவிடுவேன். அறுந்த “நந்தி” மட்டும் குறுக்கே வராவிட்டால்.

யார் இந்த நந்தி?

பொடிப்பயல். வகுப்பிலே பின்வாங்கிலே இருந்து, பிரசெண்டேஷன் செய்யும்போது கால் நடுங்கி, குட் மோர்னிங் என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகளைக்கூட கோர்வையாய் தடுமாறாமல் சொல்லத்தெரியாத ஒரு ... ம..(மட்டிறுக்கப்பட்ட கெட்டவார்த்தை)ஆண்டி. வெயிட் எ மினிட். நான் ஐந்தாவது பந்தியிலேயே உணர்ச்சிவசப்படுகிறேன் என்று நினைக்கிறேன். டென்ஷன். உயிர்போகும் டென்ஷன். வெளியே இன்னமும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தெளிவாகச் சொல்ல முயல்கிறேன்.

என் பெயர் தம்பையாப்பிள்ளை வீரசிங்கம். தெரிந்திருக்கும். பேராசிரியர் வீரசிங்கம். தெரிந்திருக்கும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் விரிவுரையாளர். ஒப்கோர்ஸ் தெரிந்திருக்கும். அதற்குமேல் பத்திரிகைச்செய்தியை ஸ்கிப் பண்ணிவிட்டு சினிமா பக்கத்துக்குத்தாவும் சமூகம் நம்மளது. நான் எந்தத்துறையில் ஸ்பெஷல் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் மனைவிக்கே அது தெரியாது. நாகமுத்துவை ஐயோ கேட்கவே வேண்டாம். 'ஓ யு ஸோ போரிங் வீரா' என்பாள். அந்த போரிங்கை உங்களுக்கு இங்கே சொல்லி அறுக்கப்போவதில்லை. ஆனால் என் ஆராய்ச்சி பற்றி ஒரு சின்ன கோடியாவது காட்டவேண்டும். கதைக்குத்தேவை. இந்த அவசரத்திலும் தேவை.

விஞ்ஞான உலகில் இன்னமுமே தீர்க்கப்படாமல் குத்தி முறியப்படும் ஒரு ஆய்வு எது என்றால் அது இந்த “TOE” என்று சொல்லப்படும் “தியரி ஓப் எவ்ரிதிங்”; பிரபஞ்சத்தின் அத்தனை இயக்கம் மற்றும் பொருட்களுக்கான காரணங்களை கண்டறியும் விதி. பொது மற்றும் குவாண்டம் தத்துவங்களை ஒன்றிணைக்கும் ஆராய்ச்சி. ஐன்ஸ்டீன், ஹோக்கிங் என்று ஆனானப்பட்ட ஜாம்பவாங்கள் முயன்றும் தீர்க்கமுடியாத சிக்கல். இன்றைய தேதியில் மூவாயிரத்துக்குமதிகமான பௌதீகவியலாளர்கள் இந்தத்துறையில் நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறார்கள். பலனேயில்லை. இது பற்றிய பரிசோதனைகளை பிரபஞ்ச தளத்திலோ குவாண்டம் தளத்திலோ செய்வதற்கு நமக்கு அவ்வளவு வசதியுமில்லை. ஆக ஒரே வழி கணிதம். அதுவும் யாழ்ப்பாணத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்க கணிதத்தை விட்டால் வேறு வழியே கிடையாது.  யாழ்ப்பாணத்தில் கணிதத்துக்கு புரபசர் வீரசிங்கத்தை விட்டால் வேறு ஆளே கிடையாது.  அப்படித்தான் இருந்தது … இனியும் அப்படித்தான் இருக்கும்.

கடந்த பத்து வருடங்களாக இந்த TOE வஸ்துவோடு மல்லுக்கட்டியிருக்கிறேன். அதுவும் கடந்த இரண்டு வருடங்களில் எனக்குக்கிடைத்த புகழ் அளவிலாதது. இதுவரைக்கும் முன்னூற்றியேழு ஜேர்னல் பேப்பர்களை வெளியிட்டிருக்கிறேன். ப்ரின்ஸ்டன், கால்டெக், ஒக்ஸ்போர்ட் போன்ற புகழ்பூத்த பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஒருநாள் கூட உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றியதில்லை. தே டொண்ட் டிசேர்வ் த ஜீனியஸ் வீரா. இங்கே எல்லா இடத்திலும் முழுக்க முழுக்க பொலிடிக்ஸ். எப்படி மற்றவனை கவுக்கலாம் என்பதை காலை கக்கூசிலேயே யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். வீரசிங்கம் தமக்கு தெரியாத ஒன்றைப்பற்றி ஆய்வுசெய்கிறான் என்பதை இங்கே எவராலும் ஜீரணிக்கமுடியவில்லை. நான் நாளைக்கு உலகப்புகழ் அடைந்தால் கம்பஸ் செக்கியூரிடிகார்ட் கூட தூங்கமாட்டான். பொறாமை.

அன்றைக்கு கண்ணன் லொட்ஜிலே கணித பீடாதி சுப்பிரமணியத்துடன் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எதேச்சையாக பேர்மட்ஸ் லாஸ்ட் தியரம் புரூப் பண்ணதெரியுமா என்று கேட்டேன். வட் இஸ் பேர்மட்ஸ் லாஸ்ட் தியரம்? என்கிறான். கணித பீடாதிபதி. காருக்கு டிரைவர்வேறு வைத்திருக்கிறான். பேர்மட்ஸ் லாஸ்ட் தியரம் தெரியவில்லை.   எல்லாமே பந்தம் பிடித்து, வாளி வைத்து, 'வீரசிங்கம் ஒரு கிறுக்கன், பொம்பிளைப்பொறுக்கி, டிபார்ட்மண்டையே சிதைத்துவிடுவான்' என்று பெட்டிசன்போட்டு தட்டிப்பறித்த பதவி. 'வீரசிங்கம் ஒரு அண்டப்புழுகன். வெளிநாடு எல்லாம் சீதனக்காசில போயிட்டுவந்து ஸ்பீச் குடுத்துட்டு வாறதா பீலா விடுறான்'   என்று என் காது படவே சுப்பிரமணியம் மாணவர்களுக்கு சொல்லியிருக்கிறான். காக்கைதீவு சேத்துக்குள்ள மாட்டின கோல்டு பிஷ் போல இந்த பல்கலைக்கழகத்தில வந்து நான் சிக்கிவிட்டேன். ஏன் நான் வெளிநாடு போய் செட்டிலாகக்கூடாது என்ற தார்மீககேள்வி உங்களுக்கு எழலாம். அதுபற்றி நிஜத்தைப் பேசப்போனால் இரண்டுபேரைப்பற்றி பேசவேண்டும். ஒருத்தி லைப்ரரியன் நாகமுத்து. என் … எப்படி அறிமுகப்படுத்த? .. ஆ .. துணைவி. நாகமுத்துவைப்பற்றி பேசத்தொடங்கினால், நீளத்தைப்பற்றிக் கவலைப்படாமல், அவள் இடுப்பை மட்டுமே விஞ்ஞானத்தையும் சங்க இலக்கியத்தையும் கலந்துகட்டி நான்கு பந்திகள் எக்ஸ்ற்றாவாக எழுதுவேன். வாசிப்பீர்களா? வேண்டாம்.  எனக்கும் நேரமில்லை. லெட்ஸ் ஸ்டிக் டு த ஜென்ரர்.

நான் சொல்லும்கதை அந்த இரண்டாவது நபர் பற்றியது.

நந்தி.

பத்துவருடமாக மல்லுக்கட்டினேன் என்று சொன்னேன் அல்லவா? மற்றவன் நிறுவியதை விளங்கவே எனக்கு பத்து வருடங்கள் போதவில்லை. பொதுச்சார்பு விதியை நிறுவுவதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிட்டது. இந்த வள்ளலில் தியரி ஒப் எவ்ரிதிங் எல்லாம் எனக்கு சான்ஸே இல்லை. வீரசிங்கம் கதை கந்தல் என்றே நினைத்திருந்தேன். ஆனாலும் கதையின் “மூன்றாம் பந்தி” தொடர்ந்து எனக்கு ஆசை காட்டியது. எப்பாடுபட்டாலாவது இந்த சூட்சுமத்தை கண்டுபிடிக்கவேண்டும். எப்பாடுபட்டாலும். வீரசிங்கத்தின் வாழ்க்கை வெறும் யாழ்ப்பாண கம்பஸோடு காலாவதியாகக்கூடாது. வருடங்கள் கழிய கழிய எனக்கு பயம் பிடித்துவிட்டது. அலுவகத்தை மறந்தேன். கடவுள் நம்பிக்கை வந்தது. பரமேஸ்வராக் கோயில் மண்டபத்தில் அமர்ந்தே சமன்பாடுகளை நிறுவ முயற்சிசெய்தேன். ஒருமுறை கடவுளைக்கூட கொன்ஸ்டண்ட்டாக போட்டுப்பார்த்தேன், தேவாரம் எல்லாம் பாடி, நல்லநேரம் பார்த்து கொப்பி திறந்து … அபத்தம்தான். பகுத்தறிவுக்கு முரணானதுதான். ஆனாலும் ஒரு நம்பிக்கை. எனக்காக கடவுள் வருவார் என்று. அவர் வரவில்லை.

ஆனால் நந்தி வந்தான்.

ஒருநாள் இப்படித்தான் கோயிலில் சமன்பாடு ஒன்றுடன் படுத்துக்கிடந்தேன். சாப்பாடு இல்லை. ஐந்து மணிநேரமாக ஒரே கணக்கு. தண்ணி காட்டிக்கொண்டிருந்தது. மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கையில் தோளுக்கு பின்னாலேயிருந்து ஒரு தயக்கமான குரல் வந்தது.

“சேர் கிளிட்சிங் மாறிலியை மிஸ் பண்ணீட்டிங்கள் எண்டு நினைக்கிறன்”

ஆச்சரியமாகத் திரும்பினேன். மெல்லிய நோஞ்சான் உருவம். நெற்றி முழுக்க பட்டை. சந்தானம். குங்குமம். கையில் பூவரசு இலை பிரசாதத்தோடு என்று லெந்தாக பல விஷயங்களை சொல்லலாம். முக்கியமில்லை. அவன் சொன்னதுதான் முக்கியம். கிளிட்சிங் மாறிலியைப்போட, வாவ். ஐந்தே நிமிடம்தான். கணக்கு சரியாகிவிட்டது. அன்றைக்கு ஆரம்பித்த கணக்கு இது.

“தம்பி .. நீர் .. வந்து..”

“சண்முகம் நந்தீஸ்வரன் சேர்”

“கம்பசில உம்மை நான் கண்டதில்லையே”

“முதலாம் ஆண்டு சேர் .. உங்கட வகுப்பில படிக்கிறன்…”

“ஓ..”

இப்படி தொடர்ந்த சம்பவத்தையும் அடுத்த இரண்டு வருடங்களில் என்ன நடந்திருக்கும் என்பதையும் ஊகித்தவர்கள் இனி வரும் இரண்டு பந்திகளை ஸ்கிப் பண்ணுங்கள் ப்ளீஸ். நீங்கள் கதையை வாசித்து முடிப்பது எனக்கு முக்கியமானது.

நந்தி. நந்தி என்கின்ற நந்தீஸ்வரன் சண்முகம். ஊர் மண்கும்பான். உள்ளூர்ப்பள்ளிக்கூடத்தில் படித்து அங்கேயே ஓ எல் எடுத்து வாத்தியே இல்லாத வகுப்பறையில் ஏ.எல் எடுத்து பாஸ் பண்ணி பல்கலைக்கழகம் வந்திருப்பவன். அதிகம் பேசமாட்டான். இங்கிலிஷ் சுத்தம். வட்ஸ் யுவர் நேம்? என்றால் 'ஐ ஆர் எ நந்தீஸ்வரன் டொட் எஸ்' என்று இனிஷியலும் சேர்த்துச் சொல்வான். வெள்ளந்தி.

ஆனால் கணிதம் என்று வந்துவிட்டால் நந்தி புலியாகிவிடுவான். ஹில்பெர்டின் தீர்க்கமுடியாத சிக்கல்களை இரண்டுநாளில் தீர்த்துவிட்டு பயந்தபடியே முன்னாலே நிற்பான். ஜீனியஸ். அமுக்கிவிட்டேன். வேறு பேராசிரியர்கள் கண்டுபிடிக்கமுதல் என் குடைக்குள் கொண்டுவந்துவிட்டேன். என் வீட்டிலேயே வாடகைக்கு ரூம் கொடுத்து, அப்பப்போ வீட்டுச்சாப்பாடு கொடுத்து, செண்டிமெண்டலாக நீ என் பிள்ளை மாதிரிடா என்று அட்டாக் பண்ணி நந்தியை என் காலடியிலேயே கிடக்கச்செய்தேன். எவ்வளவு மண்டை தெரியுமா? தனியமா-ஷிமோரா அனுமானத்தை ஐந்தே நாளில் நிறுவினான். வைல்ஸின் பேர்மட் விதி நிறுவலில் சின்ன டுவீக் செய்தான் பாவி. இருநூறு பக்க நிறுவல் இருபது பக்கத்துக்குள் சுருங்கிவிட்டது. நான் அதனை இன்னமும் அப்புரூவ் பண்ணாமல் வைத்திருக்கிறேன். அதை மட்டும் கொன்பரன்சில் சப்மிட் பண்ணினால் ஒவர் நைட்டில் நந்தி கணிதமேதையாக கொண்டாடப்படுவான். நாண்டிஸ் தியரம் என்று நானே மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டிவரும். ஆனால் நந்திக்கு இதுவொன்றுமே தெரியாது. பிரச்சனைகளை நான் கொடுப்பேன். தீர்த்துத்தருவான். உங்களுக்கு சொல்வதில் என்ன இருக்கு? அவனுடைய பல தீர்வுகளை நானே ஜேர்னல் பேப்பராக சப்மிட் பண்ணியிருக்கிறேன். நந்திக்கு சொல்வதில்லை.

இப்படி ஒன்றரை வருடங்கள் சென்றன.

நந்தி ஓரளவுக்கு தயார் என்றவுடன் தியர் ஓப் எவ்ரிதிங் பற்றி அவனோடு டிஸ்கஸ் பண்ணத்தொடங்கினேன். ... புதுப்புது அனுமானங்கள், தியரிகள், நிறுவல்கள் எல்லாமே ஆய்வுக்கட்டுரைகளாக தயார்படுத்தினேன். எதையுமே வெளியிடவில்லை. சந்தேகங்களை வெளிநாட்டு மாநாடுகளுக்கு போகும்போது கேட்டுக்கொள்வேன். நந்திக்கு இது எதுவுமே தெரியாது. மெல்ல மெல்ல எங்கள் ஆராய்ச்சிக்கு முழுவடிவம் கிடைத்தது.  என்னால் நம்பமுடியாமல் மீண்டும் மிண்டும் சரி பார்த்தேன்.

நந்தி இஸ் .. ஸச் எ ஜீனியஸ்.

ஒரு தோட் எக்ஸ்பெரிமெண்ட் சொல்லியிருந்தான். நம் கையில் ஒரு ஈ வந்து உட்காருகிறது. அதனை சடக்கென்று அடிக்க கைகளை ஓங்குகிறோம். ஈ தப்பிவிட்டால் பூமியில் டைனோசர்கள் அழியாமல் தப்பிவிடும். ஈ அடி வாங்கினால் டைனோசர் என்ற இனமே அழிந்துபோயிருக்கும். இந்த பரிசோதனையின் சாத்தியங்களை நந்தி  நிறுவிக்காட்டினான். நாங்கள் இப்போது என்ன செய்கிறோம் என்பது கடந்தகாலத்தை மாற்றும் என்கிறது இந்த விதி. நம்ப முடியவில்லையல்லவா? அடித்தேன். ஈ சப்பளிந்தது. நந்தி சிரித்தான். இன்னொரு ஈயை அடிக்கப்போனேன். பறந்துவிட்டது. நந்தியைப்பார்த்தேன். கணக்கில் ஏதோ நோண்டினான். கரப்பான்பூச்சி இன்னமும் அதனால்தான் உயிர்வாழ்கிறது எனறான். எல்லாமே அபத்தம். சுத்த முட்டாள்தனம். நீங்கள் நினைப்பது புரிகிறது. கதை என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஒன்றை நினைவில் வையுங்கள்.

Conventional wisdom can often be wrong. 

ஆனால் கணிதம் பொய் சொல்லாது. அதுவும் நந்தியின் கணக்கு பிழைக்காது. அடிப்படை இதுதான். நாங்கள் ஒவ்வொரு கணமும் கடந்தகாலத்தை மாற்றிக்கொண்டேயிருக்கிறோம். நிறுவி இரண்டு கோடும் அடித்து வைத்திருக்கிறான் நந்தி. மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். ஐன்ஸ்டீன் எல்லாம் நந்தீஸின் மூத்திரத்தைக் குடிக்கவேண்டும். இதுமட்டும் வெளியானால் என்ன நடக்கும் தெரியுமா?

மீண்டும் மூன்றாம் பந்தியை வாசியுங்கள்.

ஆனால் எனக்கு பிரச்சனை இந்த நந்திதான். இவ்வளவுபெரிய கண்டுபிடிப்பை இருவர் உரிமை கோரலாமா? “வீரசிங்கம்-நந்தி தியரம்”, பெயர் நன்றாகவா இருக்கிறது? “வீராஸ் தியரம்”. எவ்வளவு அழகு. நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் இந்த வீரசிங்கம் அல்லவோ வரவேண்டும். நந்தி கர்ப்பக்கிரகத்துக்குள் வரலாமா? தூக்கம் வரவில்லை. என்னால் தனியாக சமாளிக்கமுடியுமா? முடியும் என்றே தோன்றுகிறது. நந்தியின் நிறுவல்கள் கொஞ்சமே புரிபட ஆரம்பிக்கின்றன. கேள்விகளே இல்லாதவண்ணம் நிறுவிவைத்திருக்கிறான் பாவி. பிரச்சனையே இல்லை.

இனியும் அவனை விட்டுவைத்தால்தான் பிரச்சனை.

கடந்த சில மாதங்களாக நந்தியின் போக்கு சரியில்லை. ஆங்கிலம் படிக்கிறான். முன்னம்மாதிரி சந்தேகங்கள் என்னிடம் கேட்பதில்லை. அன்றைக்கு சுப்பிரமணியத்தோடு பேசிக்கொண்டு நின்றான். அவனுடைய கொம்பியூட்டர் பிரவுஸர் ஹிஸ்டரியில் கால்டெக், பிரின்ஸ்டன், கேம்பிரிட்ஜ் ஆய்வுகூடத்தளங்கள் இருக்கின்றன. ஒரு ஈமெயில், இரண்டு பேப்பர் சப்மிட் பண்ணினால் போதும். நந்தி மாதிரி ஆட்களுக்கு கிரீன்கார்டும் கொடுத்து சிவப்புக்கம்பளம் விரிப்பார்கள். இவன் பழைய நந்தி கிடையாது. மண்கும்பான் புழுதி கிடையாது. நிறைய மாறிவிட்டான். அவனுடைய ஈமெயிலை நான்தான் செக் பண்ணுவேன். எனக்குச்சொல்லாமல் இப்போது பாஸ்வேர்ட்கூட மாற்றிவிட்டான். பேஸ்புக்கில் விஞ்ஞான கவிதை எழுதி லைக்கு வாங்குகிறான். கூடப்படிக்கும் தேவிகாவையும் அவனையும் அடிக்கடி சம்பியன் ரோட்டு மூலையிலே கவனித்திருக்கிறேன். காதல் பண்ணுகிறான். தேவிகா அவ்வளவு சரியில்லை. அன்றைக்கு தனியாக பரமேஸ்வராக்கோயிலில் நின்றபோது சிரித்தேன். முறைத்துக்கொண்டு போனாள். அவள்தான் நந்தியை மாற்றியிருக்கவேண்டும்.

கதவுச்சத்தம் கேட்கிறது. கொஞ்சம் வேகமாக வாசியுங்கள். எளுத்துப்பிழைகளை கவனிக்காதீர்கள். நீங்கள் வாசிப்பதே எனக்கு முக்கியம்.

ஒருமாதத்துக்கு முன்னாலே என் அலுவலகத்துக்கு நந்தி வந்தான். ஸ்டிரிங்க்ஸ் தியரியால் ஈர்ப்பு விசையின் அலைகளை எதிர்வுகூற முடியாது என்று வீராஸ் தியரத்தில் புதிதாக திருத்தம் தந்தான். அவன் போனபிறகு மீண்டும் அவன் திருத்தத்தை செக் பணணினேன். தவறு. பச்சத்தவறு. சென்றவாரமும் இப்படித்தான் அந்த்ரோபியில் தேவையில்லாமல் என்னைக்குழப்ப முயன்றான். நந்தி இதனை வேண்டுமென்றே செய்கிறான் என்று நினைக்கிறேன். என்னைப்பரீட்சித்துப்பார்க்கிறான். அவனில்லாதபோது அவனுடைய ரூமுக்குள் சென்று குடைந்தேன். கட்டிலுக்கு கீழே நிறைய பேப்பர்கள். எல்லாமே கணித நிறுவல்கள். பௌதீகத்தின் தீர்க்கப்படாத சிக்கல்கள் எல்லாம் ஒரு பேப்பரில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் முதல் ஆறும் டிக் பண்ணுப்பட்டிருந்தது. எனக்கு தியரி ஓப் எவ்ரிதிங் ஆய்வில் மாத்திரமே வேலை செய்வதாக சொல்லிவிட்டு தனியாக இவன் மாஸ்டர் பிளான் போடுகிறான். அத்தனை பேப்பர்களையும் போட்டோகொப்பி பண்ணி வைத்துக்கோண்டேன்.

கூட இருந்தவனே குழி பறித்தால் என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

கடந்த இரண்டு வாரங்களாக நந்தியை கம்பஸில் காணவில்லை. ரூம் பூட்டியிருந்தது. மொபைல் வேலை செய்யவில்லை. நிச்சயமாக நந்தி கவுத்துவிட்டான். வீராஸ் தியரத்தை நந்தீஸ் தியரமாக்கப்பார்க்கிறான். அதுகூடப்பரவாயில்லை, என்னுடைய அத்தனை ஆய்வுக்கட்டுரைகளுக்கும் இவன்தான் காரணகர்த்தா என்று உலகுக்கு தெரியவரப்போகிறது. சுப்புரமணியமே நக்கல் அடிப்பான். இதுசரியானால் உபவேந்தராகி, இளைப்பாறியபின்னர் வடக்கு முதலமைச்சர் ஆகக்கூட கனவு கண்டேன். எல்லாத்துக்கும் நந்தி கொள்ளி வைக்கப்போகிறான். எதாவது செய்யவேண்டும். இனியும் பொறுத்திருக்கமுடியாது. சுன்னாகம் யோகனுக்கு தொலைபேசி போட்டேன்.

“யோகன் .. நான் புரபசர் கதைக்கிறன்.”

“சேர் எப்பிடியிருக்கிறீங்கள்? நாகமுத்து அக்கா சுகமா?”

அவன் நக்கலடிக்கிறான். கவனிக்கிறேண்டா. முதலமைச்சர் பிளஸ் பொலிஸ் அதிகாரம். நிரந்தரமாக ஜெயிலிலேயே போடுகிறேன்.

“நீ இப்ப எங்க இருக்கிறாய்? அவசரமா சந்திக்கோணும்”

“இப்ப ஜெயிலில சேர். ஒரு சின்ன குத்துவெட்டு. திங்கள் வெளிய வந்திடுவன். பார்ட்டி ஆரு?”

யோகன் நேரடியாகவே விடயத்துக்கு வந்துவிட்டான்.

“சண்முகம் நந்தீஸ்வரன். பைனல் யியர் சயன்ஸ் பக்கல்டி. நோஞ்ஞானா புட்டிக்கண்ணாடி போட்டு ..”

“கழுத்தா? .. முந்திமாதிரி செய்யேலாது சேர் .. கம்பஸ்காரன் .. ஆர்ப்பாட்டம் செய்வாங்கள். பிரச்சனையாகும்..”

“வேண்டாம். சும்மா ஒரு தட்டு. வலக்கை... இல்ல கொஞ்சம் செலவானாலும் பறுவாயில்ல, ஆளைப்போட்டிடு. என்னில சந்தேகம் வரக்கூடாது.”

“பொறுங்கசேர் ... லைன்ல இருங்க..விசாரிக்கிறேன்.”

“ரூட்டு எட்டு கூட போட்டேன்.
கோடு மேல ரோடு போட்டேன்.
ரோடு மேல ஆட்டம் போட்டேன்.
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்”

இரண்டு நிமிடங்களுக்குப்பின்னர் யோகன் லைனுக்கு வந்தான்.

“சேர் இருக்கிறீங்களா?”

“சொல்லு?”

“அம்மா மட்டும் மண்கும்பான்ல கருவாடு போடுது. மற்றும்படி சொந்தம் ஒண்டுமில்லை. தேவிகா எண்டு ஒரு பெட்டைய லவ்வு பண்ணுறான். பெரிய இடம். அதிண்ட தாய்க்காரிக்கு எம்.பி ஒராள் சொந்தம். இவங்களின்ட லவ்வு விசயம் அரசல் புரசலா வீட்டில தெரியும்போல.”

“உனக்கெப்படி அதுக்குள்ள?”

“காதல் பிரச்சனை வெளியவந்தா சிக்கல் எனறு கொலையை அந்தப்பெட்டையின்ர வீட்டுக்காரர் அமுக்கிடுவினம். பேப்பரிலேயே செய்திவராம பார்த்திடலாம். வேர்ல்ட் கப்பும் டைம், பெரிசா சிக்கல் வராது. செமி பைனல் அண்டைக்கு போட்டிடலாம்.. எவனும் ஐஞ்சு நாளைக்கு சீந்தமாட்டான்”

தயங்கினேன்.

“கொலை கொஞ்சம் அதிகமோ”

“வெறும் வாள்வெட்டு ஆபத்தில முடியும் சேர். அவன் கதைச்சால் பிரச்சனை.”

“இல்லத்தம்பி.”

“என்ன சேர் யோசிக்கிறீங்கள்? முந்தி எண்டால் நீங்களே சண்டியைக்கட்டுவீங்கள்.”

“தெரிஞ்சா மீளேலாது யோகன்.. எதெண்டாலும் யோசிச்சு செய்.. பேமெண்ட் என்ன?”

“அதெல்லாம் எதுக்கு சேர்? விசயம் முடியட்டும் முதலில”

“இல்ல.. சொல்லு”

“வந்து.. இந்த வெட்டுக்குத்து எல்லாம் வர வர கஷ்டமா இருக்கு சேர்”

“ஏத்திட்டியா? பறுவாயில்ல எவ்வளவு சொல்லு?”

“இல்ல சேர் .. உங்களிட்ட காசு வாங்கேலாது”

“அப்பிடியெண்டால்?”

“வந்து … இரண்டு கள்ள சேர்டிபிகட் எடுத்து, நீங்கள் வெளிநாடு போகேக்க என்னையும் அசிஸ்டண்ட் எண்டு கூட்டிக்கொண்டு போங்கோ சேர். அவ்வளவும்போதும். வெளிநாட்டுப்பக்கம் செட்டில் ஆகப்போறன் சேர். ஆட்சி மாறீட்டுது. என்னையும் எப்ப தூக்குவாங்கள் எண்டு தெரியேல்ல”

சுருக்கென்றது. அடி மடியிலேயே கையை வைக்கிறான்.

“அது அவ்வளவு லேசான வேலையில்ல தம்பி. பிடிபட்டா இரண்டு பேருக்கும் சிக்கல். எவ்வளவு காசு என்று சொல்லு. செட்டில் பண்ணுறன்.”

“இல்லை சேர். இது காசுக்காக நான் செய்யேல்ல. பிரான்ஸ் எண்டாலும் போதும்”

ஒன்றுமே செய்யமுடியாது. காலை வைத்தாயிற்று. துபாயில் டிரான்சிட்டில் தொலைத்துவிடலாம். அப்புறம் அவன்பாடு. எல்லாமே பேசித்தீர்த்துவிட்டேன். சிக்கல் இல்லை. நந்தியை கொல்வது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் “மூன்றாம் பந்தி”க்கு முன்னாலே இந்தக் கவலை எல்லாம் அவ்வளவு முக்கியமாகப்படவில்லை. இவனை வளரவிட்டால் நான் பூச்சியமாகிவிடுவேன். பாவம். நாளைக்கு அவன் சாவப்போகிறான் என்கின்ற விஷயம்தான் என்னையும் அவனையும் பரமேஸ்வராக்கோவிலில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்திக்க வைத்ததோ. அவனே கண்டுபிடித்தவிதி.

அவன் விதி இப்படி என்றால் யார் என்ன செய்ய முடியும்?

கோலிங் பெல் அடித்தது. இந்தநேரத்தில் யாராக இருக்கும்? திறந்தேன்.

“இங்கே வீரேயிங்கம் எண்டுறது?”

முன்பின் அறிமுகமில்லாதவன். முரடனாட்டம் தெரிந்தான். யோகன் அனுப்பியிருப்பானோ?

“நீதான் நந்தி அண்ணணிண்ட வாத்தியாரா?”

நந்தி அண்ணனா? எங்கேயோ ஏதோ எலார்ம் அடிக்க, வீட்டுக்கதவை அவசரமாக மூடிவிட்டு உள்தாழ்பாழ் போட்டேன்.

“தட் .. தட் .. ”

யாராக இருக்கும்? நந்தி அனுப்பிய ஆட்களோ? அவன் ஏன் என்னைக் …

“தட்..தட்..தட் டேய் .. வீரேயிங்கம் .. வெளிய வாடா..”

கொல்லப்போகிறார்கள். நிச்சயம் நந்திதான் அனுப்பியிருக்கிறான். தேவிகா நன்றாக நந்திக்கு பவுடர் போட்டுவிட்டாள். ஏன் எதற்கு எப்படி என்பதற்கு நேரமில்லை. வந்திருப்பவர்களுக்கு கதவை உடைக்க அவ்வளவு நேரம் எடுக்காது. மதில்பாய்ந்து ஓடும் வயதில்லை எனக்கு. எப்படித்தப்புவது? எல்லாம் இந்த பாழாய்ப்போன வீராவின் விதியினால் .. ஆ வீராவின் விதி. பொறி தட்டியது. “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்”. அப்படியானால் நாளை என்ன நடந்தால் இன்று உயிரோடு இருப்பேன்? … யோசி விரேயிங்கம்…

“தட்..தட்..தட் டேய் .. வீரேயிங்கம் .. வெளிய வாடா..”

நாளை என்ன நடந்தால் இன்று உயிரோடு இருப்பேன்? … யோசி விரேயிங்கம்.. யோசி… ஐடியா .. தப்புவதற்கு கிடைத்துவிட்டது.

நிதானமாகப்போய் வாசல் கதவை திறந்தேன்.

“நீங்கள் இந்தக் கதையை வாசித்துவிட்டீர்களா?”

 

****************** முற்றும் *******************


படம் : Vishnu Tej M

Comments

  1. கதை வாசித்தேன் நிகழ்காலகடந்த ஒரு துன்பியல் நிகழ்வும் அதனுடன் சேர்ந்த தீவுப்பிரச்சனையும் அதன் பின் இருக்கும் அரசியலும் புரியாத ஏதோகதை!

    ReplyDelete
  2. அட படலைக்கும் தாழ்ப்பாள் போட்டாசா! அடக்கடவுளே!தனிமரம் நீயும் மலைக்கு போய்விடு![[[[[[[[[[[[[[[[[[[[

    ReplyDelete
  3. நன்றி உங்கள் கருத்துக்கு தனிமரம்.

    ReplyDelete
  4. அண்ணே... உங்களால தான் இப்பிடி எல்லாம் எழுத முடியும்! விளங்கிற மாதிரியும் இருக்கு..... ஆனா குழப்புது.....

    எனக்கு விளங்கின கொஞ்சத்த வைச்சு யோசிச்சா "நிகழ்காலத்தின் செயல்கள் கடந்த காலத்தை நிர்ணயிக்கும்" என்ற தமிழாக்கம் இன்னும் பொருத்தமா இருக்குமோ? அவதானிப்பு என்பது observation தானே...

    அந்த theory யின் படி கதையின் முடிவில வீரா "நாளை என்ன நடந்தால் இன்று உயிரோடு இருப்பன்" எண்டு யோசிக்கிறது பொருத்தமா எண்டு கேள்வி வருது. நாளைக்கு நான் ஏற்படுத்த இருக்கிற தாக்கத்துக்காக இண்டைக்கு என்ன செய்யோணும் எண்டு யோசிக்கிறது சாதாரணம் தானே.... அதுக்கு பதிலா இண்டைக்கு நான் உயிரோட இருக்கிறதுக்கு நேற்று என்ன செய்திருக்கோனும் எண்டு யோசிச்சு இண்டைக்கு நான் என்ன செய்தால் நேற்றை மாறும் எண்டு யோசிக்கிறது தானே சரி....

    இதுகள விளங்க படுத்திற மாதிரி பொழிப்பொண்டு போடுங்கோவன்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வீணா ... நாளைக்கு என்ன நடந்தா இண்டைக்கு நான் உயிரோட இருப்பன் எண்டு யோசிக்கிறது வீரசிங்கங்கத்தின் அவுட்திங்கிங் அல்லவா :D .. மீதி இன்பாக்ஸில் டிஸ்கஸ் பண்ணியாயிற்று.. வீரசிங்கத்தை முழுமைப்படுத்த மொடல் தந்தமைக்கு நன்றி ;)

      Delete
  5. கந்தசாமிக்கும் கலக்சிக்கும் எதோ பிரச்சனை போல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .