Skip to main content

சப்பல் மன்னர்கள்

 

8185429625_3f6d8b2b70_z

மோகனவடிவேல்.

சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே  எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும்.  கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா?” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட் சொன்னாப்பிறகும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் மீண்டுமொருமுறை சொறிவான். அனேகமான வேளைகளில் வாத்தி விடைத்தாளை அவனிடமிருந்து பறித்தே எடுக்கவேண்டியிருக்கும். பரீட்சை முடிந்தபின்னும் அதே விழுங்காத கொழுக்கட்டையோடு அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடுவான்.

வீடுக்குப்போய் மறுநாள் சோதினைக்கு சப்பத்தொடங்குவான்.

மோகனவடிவேல் போன்ற சப்பல் மன்னர்கள் ஒரு வகுப்பில் இருவராவது இருப்பர். அவர்கள் படிக்கின்ற ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். பாடப்புத்தகத்தில் அரசு அச்சகத்தால் அச்சடிக்கபட்ட ஆண்டு முதல் “ஐ ஆம் முரு” என்ற நீக்ரோகாரனுக்கு பக்கத்திலே மீன் குழம்புக்கறை பட்டிருந்தால் அதையும் பாடமாக்கும் பிரகிருதிகள். அம்மாவிடம் சமூகக்கல்வி புத்தகத்தைக்குடுத்து கேள்வி கேட்கச்சொல்லி பதில் சொல்லிப்பார்த்து தம்மை பரீட்சைக்கு தயார் செய்பவர்கள். “கோட்டே இராசதானியின் முதல் மன்னன் யார்?” என்று தாய்க்காரி கேட்டால் “பண்டுகாபயன் அனுராதபுரத்தை ...” என்று ஆரம்பிப்பார்கள்.  அவர்களுக்கு படிக்கும் ஓர்டர் முக்கியம். ஆறெட்டு எவ்வளவு என்று கேட்டால் ஆறொன்று ஆறு என்று பாடத்தொடங்குவார்கள். எடுத்த எடுப்பிலேயே நியூட்டனின் மூன்றாம் விதி எது என்று கேட்டால் குழம்பிவிடுவார்கள்.

சப்பல் காய்கள் வகுப்பிலே ஆசிரியரின் ஆஸ்தான மாணவனாக இருப்பதுண்டு. வாத்தி வந்தவுடன் கொப்பி கொடுப்பது, முதல் நாள் என்ன படிப்பித்தது என்று சொல்லுவது, கரும்பலகையை தண்ணிபோட்டு அழிப்பது, பூசைக்கு சீமைக்கிழுவை முறிக்கப்போவது என வகுப்பின் அத்தனை வேலைகளையும் சிரமேற்கொண்டு செய்வார்கள். இவர்களின் கொப்பிகள் பொலித்தீன் உறை போடப்பட்டு, ஸ்டிக்கரில் ச. மோகனவடிவேல், ஆண்டு எட்டு B, விஞ்ஞானம் என்று பக்காவாக எழுதப்பட்டு இருக்கும். உள்ளே தலையங்கங்கள் பச்சை நிறப்பேனாவால் எழுதப்பட்டு கீழே இரண்டு சிவப்புக்கோடுகள் செல்லும். அதிகம் கேள்வி கேட்பவனே சிறந்த மாணவன் என்கின்ற ஐதீகம் இருப்பதால் வகுப்பில் இவர்கள் வகை தொகை இல்லாமல் டவுட் கேட்பார்கள். வாத்தி விளக்கம் கொடுத்தபின்னர் மறக்காமல் தாங்யூ சொல்லிவிட்டு அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொள்வார்கள். ஆறாம் ஏழாம் ஆண்டுகளில் இவர்கள் வகுப்பில் முதல் ஐந்து இடங்களுக்குள் எப்படியும் வந்துவிடுவர். இப்படியே ஓ/எல் வரைக்கும் வண்டியை ஒட்டிவிடுவார்கள்.  எட்டு டி, பத்து ஏ எடுத்த பிரகிருதிகளும் சப்பை மன்னர்களில் உண்டு.

ஆனால் உயர்தரத்தில் சப்பும்போது அவர்களுக்கு கல்லு கடிபடத் தொடங்கிவிடும்.

ஓ/எல் மாதிரியே ஏ/எல் ஐயும் ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் நம்மாள் முதல் தவணையை தொடங்குவார். மார்க்சும் நன்றாக வரும். ஆனால் இரண்டாவது தவணை பக்கிள் அடிக்கத்தொடங்கும். கணக்குகள் மிரட்டும். இருந்தாலும் ஒரு சில சப்பல் காய்கள் தன் அக்கா அண்ணாவின் நோட்ஸை பாடமாக்கிக்கொண்டு வகுப்புக்கு வருவார்கள். எங்கள் ஊர் வாத்திமார்களும் ஒரே கணக்கை சங்கிலியன் காலந்தொட்டு கொடுப்பதால், சப்பல் மன்னர்கள் கேள்வி சொல்லி முடிக்குமுன்னமேயே விடை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.  வாத்திக்கு எழுந்து கொப்பி காட்டுவார்கள். சில பெட்டைகள் கொப்பியைக்காட்டிவிட்டு திருப்பி வாங்கும்போது பெருமிதச்சிரிப்போடு எங்களையும் நக்கலாகப் பார்க்கும். நீங்களெல்லாம் படிச்சு என்னத்தையடா கிழிக்கப்போறீங்கள்?

ஆனால் மூன்றாம் தவணை ஆரம்பிக்க, சப்பைக்காய்கள் எல்லாம் நாக் அவுட்டுள் புகுந்த தென்னாபிரிக்க அணிபோல ஆகிவிடுவார்கள்.

மூன்றாம் தவணை, உயர்தரத்தில் பாடங்கள் சூடு பிடிக்கத்தொடங்கும் பீரியட். வாத்திமாருக்கும் சிலபஸ் முடிக்கவேண்டுமே என்ற கவலை எட்டிப்பார்க்கும். பாடம் வேகமாகப் பறக்கும். சப்பை மன்னர்கள் அதற்கு ஈடு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் தலையங்கத்துக்கு புட் ரூலரால் இரண்டு சிவப்புக்கோடு அடிப்பதற்குள் வாத்தி நாலு கணக்கு தாண்டியிருக்கும். மூச்சுத்திணருவார்கள்.  விளங்காது. ஆரம்பத்தில் ஆறுதலாக அவர்கள் டவுட்டுக்கு விளக்கம் கொடுத்துவந்த வாத்தி இப்போது அந்தப்பக்கமே தலைவைத்துப்படுக்காது. வீட்டில் கொப்பியைக்கொடுத்து தாய்க்காரியிடம் கேள்வி கேட்கச்சொன்னால் தாய்க்காரி சீரியஸாக மா அரிக்கப்போய்விடும்.

இது போதாதென்று வகுப்பில் உள்ளவன் மிரட்ட ஆரம்பிப்பான். இதுநாள் வரைக்கும் அட்ரஸ் இல்லாமல் திரிந்தவன் பெயர் எல்லாம் கெட்டிக்காரன் என்று வகுப்பில் அடிபடும். அவனுக்கு கணக்கு சமப்படும். ஆளாளுக்கு விதம் விதமான புத்தகங்களின் பெயர்களை சொல்லி டென்சனாக்குவார்கள். ஒருவன் லோனி என்பான். இன்னொருவன் அறுபதாம் ஆண்டு அப்பர் எடுத்த எக்ஸாம் பேப்பர் என்று சொல்லி கொண்டுவருவான்.  குட்டி மக்கர் படிப்பித்த செக்சன் மணியம் படிப்பிக்கேல்ல என்பார்கள். நாகர் டீப் என்பார்கள். சோதி சிலபஸ் கவர் பண்ணாது என்பார்கள். சிலர் சிலபஸ்  கவர் பண்ணவேண்டுமென்று முன்னைய பட்ச்காரரோடு போய்ப்படிப்பார்கள். கிரேக் சப்பல் குழம்பிவிடுவார். இன்னமும் அதிகமாக வீட்டிலிருந்து குத்துவார். சப்பென்று சப்பி அரை வட்டக்கோல் கணக்கொன்றை செய்துவிட்டு அடுத்த கேள்வியில் கொஞ்சம் பாகையை மாற்றிவிட்டால் அண்ணருக்கு சமன்பாடு ஸ்டக் ஆகிவிடும். வாத்தி சரியில்லை, வீட்டுக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் என்ற பெயரில் கம்பஸ் எண்டர் பண்ணியிருக்கும் ஆட்கள் அழைக்கப்படுவார்கள். சப்பலுக்கு அழகான அக்காவோ, தங்கையோ இருந்தால் எக்ஸ்ட்ரா கிளாசுக்கு பீஸ் வாங்காமல் இன்னொரு எக்ஸ்ட்ரா கிளாஸ் போடப்படும். சப்பல் எண்டர் பண்ணுவான் என்று வருங்கால மாமியாருக்கு ஆசை காட்டப்படும்.

சப்புவதன்மூலம் ஒரு கட்டத்துக்குமேலே தாக்குப்பிடிக்கமுடியாது என்று நம்ம சப்பல் சுதாரிக்கும் சமயத்தில் உயர்தரத்தின் மூன்று முயற்சிகளும் வீணாகப்போயிருக்கும்.

&&&&&&&&&&&&&&&

சப்பல் மன்னர்களுக்கு நேர் எதிரான கோஷ்டி ஒன்று இருக்கிறது. ஆபத்தான கோஷ்டி. அவர்கள் இரவிரவாக குத்து குத்தென்று குத்திவிட்டு மறுநாள் காலை ஒன்றுமே படிக்காதவர்கள் போன்று பாவ்லா காட்டுவார்கள். “உனக்கென்ன மச்சான், நீ குத்தியிருப்பாய், எனக்கு காய்ச்சல், சரியாக படிக்க முடியவில்லை” என்று சொல்லி கடுப்பேற்றுவார்கள். கொஞ்சம் சராசரிக்கு மேலான அத்தனை கெட்டிக்காரர்களுக்கும் இந்த பிக்காளிக்குணம் இருக்கிறது. படித்தேன் என்று சொல்லுவதற்கு அப்படி ஒரு பிகு. அதற்கு தெளிவான ஒரு காரணம் இருக்கிறது. தப்பித்தவறி மார்க்ஸ் குறைவாக வந்துவிட்டால், நான் படிக்கவில்லை, அப்பவே சொன்னேனில்லையா என்று தப்பிக்கலாம். நல்ல மார்க்ஸ் வந்துவிட்டால், தான் படிக்காமல் மார்க்ஸ் எடுக்கும் மண்டைக்காய் என்று மற்றவர்களை நினைக்கவைக்கலாம்.

மேற்சொன்ன இரண்டு பிரிவுகளையும் தவிர்த்து மேலுமிரண்டு பிரிவுகள் இருக்கின்றன. கொஞ்சம் நேர்மையான பிரிவுகள். பரீட்சைக்கு முதல்நாள் புத்தகம் திறந்து விடிய விடிய படித்து, காலையில் கண்ணெல்லாம் இரத்தச்சிவப்போடு கொப்பியின் கடைசிக்கட்டை படக் படக்கென்று ஓடும் பிரகிதிகள். அடுத்தபிரிவு கடும் மண்டைக்காய்கள். அலட்டிக்கொள்ளாமல் வந்து, மண்டபத்துக்கு வெளியே மற்றவர்களின் கடைசிநேர டவுட்டுகளை கிளியர் பண்ணிவிட்டு உள்ளே போய் சாவகாசமாக எக்ஸாம் எழுதும் கெட்டிக்காரர்கள். பரீட்சை அன்றைக்கும் வகுப்பென்று நினைத்து பாடசாலைக்கு வரும் பிரிவினர் எப்படியும் இந்தப்பந்திவரையும் வாசிக்கப்போவதில்லையென்பதால் அவர்களை இங்கே விட்டுவிடுவோம்.

&&&&&&&&&&&&&&&

schoolboy

சப்பலோ, சச்சினோ நம்மாட்கள் படிப்பதற்கு பயன்படுத்தும் மெதடுகள் தனிரகம். எங்கள் வீட்டிலேயே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மார்க்கமாக படிப்பார்கள். அண்ணா ஒரு சமன்பாடு பாடமாக்கினால் ஒரு நாவுக்கரசர் தேவாரம் பாடுவார். அப்போதுதான் சமன்பாடு மறக்காவண்ணம் சிவன் பார்த்துக்கொள்வார் என்பது அவரது நம்பிக்கை.

அக்கா ஏ/எல்லில் பயோ படித்தவர்.  அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. அக்காவும் நண்பிகளும் இரவிரவாக படிப்பார்கள். விடியக்காலமை ஐந்துமணி வரைக்கும் அது போகும். ஏ. ஆர். ரகுமான் ஜாதி. தூக்கம் வராமலிருக்க சரவச்சட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதற்குள் காலை வைத்துக்கொண்டு படிப்பார்கள். சளிப்பிடிக்கும். மேசை லாம்புக்கு ஒரு இரவில் இரண்டு மூன்று தடவைகள் எண்ணெய் நிரப்பப்படும். மண்ணெண்ணெய் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருநாள் டேர்ன் வைத்து கொண்டுவரவேண்டும். விடியக்காலமை அக்கா தட்டி எழுப்புவா. ஒரு பிளேன்ரியும் தருவார்.

“சுதர்சினி அக்காவோட வீடுவரைக்கும் போயிட்டுவாடா அச்சாப்பிள்ளை”.

பகல் முழுதும் தூங்குவார்கள்.

எங்கள் வீடு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்துக்கு அருகிலிருந்ததால் வீட்டு ரூம்களில் ரென்ட்டுக்கு இருக்கும் அக்காமார்களும் கலைப்பீட மாணவர்களாகவே இருப்பார்கள். அதிலே ரமணா, சந்திரா என்று இரண்டு அக்காமார். ஒருவர் ரஞ்சகுமார், முருகையன் கவிதைகளை ஆராய்ச்சி செய்தார். மற்றையவர் பளைப்பிராந்திய இடங்களுக்கான காரணப்பெயர்களை ஆராய்ந்தவர். இருவருமே அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து படிப்பார்கள். மெலிதாக பி. சுசீலா கேட்பார்கள். ஓரிருமுறை நானும் அவர்களோடு சேர்ந்து படிக்கப்போகிறேன் என்று எலார்ம் வைத்து எழுந்து, அவர்கள் ஊற்றித்தரும் பிளேன்ரீயை குடித்துவிட்டு, இலங்கையின் பரப்பளவு 65,610 சதுரமீட்டர்கள் என்பதை பாடமாக்கிவிட்டு மீண்டும் படுத்திருக்கிறேன்.  

&&&&&&&&&&&&&&&

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு.

சந்திரிக்கா-ரத்வத்தை கூட்டணியின் முன்னேறிப்பாய்தல் தாக்குதல் ஜூலையில் இடம்பெறுகிறது. மொத்த வலிகாமம் மேற்குப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து யாழ் நகரப்பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அனேகமான வீடுகளில் குறைந்தது ஒரு குடும்பமாவது இடம்பெயர்ந்து தங்கியிருந்தது. ஓகஸ்ட் மாதத்தில் உயர்தரப்பரீட்சை. ஒருமாதம் கூட இல்லை. வீடுகளில் படிப்பதற்கேற்ப சூழல் இல்லை. எங்கே பார்த்தாலும் ஆட்கள். ஆறுபேர் சேர்ந்தால் தாள் ஆட்டம். நான்குபேர் சேர்ந்தால் தாயம் என்று பொழுதுபோக்கிக்கொண்டிருக்கையில் படிப்பது எப்படி? “புக்காரா, எடித்தாரா, போயாச்சே எடுப்பாரா?” நாற்சந்தி மூலைகளில் எல்லாம் சுடச்சுட கொம்போஸ் பண்ணி பாட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். படிப்பது எப்படி முடியும்? பரீட்சை நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்த சமயம் அது. பரீட்சைத்தாள் வந்த கப்பல் தாமதமானதால் பரீட்சைகூட இரண்டுமணிநேரம் கழித்தே அவர்களுக்கு ஆரம்பித்தது.

ஆனாலும் அந்த ஆண்டு உயர்தரத்தில் யாழ்ப்பாணம் முழு இலங்கைக்குமே ஒரு காட்டு காட்டியது.

யாழ் இந்துவிலிருந்து வகுப்பு வகுப்பாக எண்டர் பண்ணினார்கள். ஏராளமான மாணவர்கள் சுப்பர்மெரிட்டில் தேர்ச்சியடைந்திருந்தார்க்கள். அதற்கு அந்த மாணவர்கள் கெட்டிக்காரர்கள் என்பது முக்கிய காரணம். ஆனால் அதோடு வேறு சின்ன சின்ன காரணங்களும் இருக்கின்றன.

Connecting the dots now.

தொண்ணூற்றொன்று முதல் தொண்ணூற்றைந்து வரை யாழ்ப்பாணத்து ஊர்களைப் பொறுத்தவரை போர் நேரடியாக பாதிக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம். ஷெல்லடி, பொம்மரடி, அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகள் இடம்பெற்றாலும் பெரும்பான்மை யாழ்ப்பாணம் இடம்பெயராமல் அங்கேயே இருந்தது. அப்படியே இடம்பெயர்ந்தாலும் இரண்டொரு நாட்கள் இடம்பெயர்வார்களேயொழிய மாசக்கணக்கில் இடம்பெயர்ந்தது குறைவு. பாடசாலை, தனியார் கல்வி நிலையங்கள் எல்லாமே இடையூறு இல்லாமல் இயங்கின. போர், போர்சார்ந்த நடவடிக்கைகள் இருந்தனவேயொழிய சமூக சீரழிவு என்ற சேட்டைக்கே அப்போது இடமில்லை. போதை, கூசிழிவு போன்ற விடயங்கள் பாடசாலை மாணவர்களை அண்டவே அண்டாது. நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக, கவனக்கலைப்பான்கள் இல்லாமல் அந்த மாணவர்களால் படிக்கமுடிந்தது.

இன்னொரு முக்கியகாரணம் குறைந்தபட்ச வாழ்க்கைமுறை.

அப்போது ஊரிலே கரன்ட் இல்லை. டிவி இல்லை. தொலைபேசி இல்லை. சினிமா என்ற பெயரில் ஸ்ரீதரில் உறங்காத கண்மணிகள் ஒரு வருடமாக ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களுக்கு படிப்பதைத்தவிர செய்வதற்கு வேறு வேலைகள் இருக்கவில்லை. மேசை லாம்பில் படித்ததுகூட இன்னொரு முக்கிய காரணம். விளக்கு வெளிச்சம் புத்தகம், மேசையை என்ற ஒரு குறிப்பிட்ட வட்டத்தையே சுற்றியிருக்கும். அப்பாலே எல்லாமே இருட்டாக இருக்கும்? ஏமாலாந்தவே முடியாது. வளையில் எலியை தொடரமுடியாது. கவனம் புத்தகத்திலேயே இருக்கும். குட்டிக்குட்டி காரணங்கள். ஆனாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தின. யோசித்துப்பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் மாணவர் பெறுபேறுகளை மாத்திரமே வைத்துக்கொண்டு Freakonomics பாணியில் ஒரு ஆராய்ச்சிப்புத்தகம் எழுதலாம்போல் இருக்கிறது. சரி, பிழை, முன்முடிபுகளை விலத்திவைத்து காரணங்களை மாத்திரமே ஆய்வு செய்யும் ஒரு முயற்சி. செய்யலாம்.

&&&&&&&&&&&&&&&

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு கணிதப்பிரிவில் சஞ்சீபன் அண்ணா அகில இலங்கையில் இரண்டாமிடம் வந்தது உதயன் முன்பக்கச்செய்தியானது. அவ்வளவு சச்சரவுக்குள்ளும் அவர் எப்படிப்படித்தார் என்று பாடசாலைகளில் பல பேச்சுகள் உலாவின. அவர் தண்ணி டாங்குக்குள் இருந்து படித்ததாக குணம் வாத்தியார் பின்னாளில் ஒரு வெடியைக்கொழுத்திப்போட்டார்.

அது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம்.

சண்டை, இடம்பெயர்வு காலங்களில் படிப்பதற்கென்று நம்மாட்கள் இப்படி சில ட்ரிக்குகளை வைத்திருக்கிறார்கள். அச்சமயங்களில் பங்கர்கள், பாழடைந்த ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள், கோழிக்கொட்டில்கள், மரத்தடி எல்லாம் ஸ்டடி ரூமாக மாறிவிடும். வீட்டு சன்ஹூட்டுக்கு மேலே மேசை  போட்டுப் படித்தவர்களும் உண்டு. பழுதைப்போய் பின்பத்தியில் நிற்கும் காருக்குள் இருந்து படிப்பார்கள். ஒரு தனிமையான இடம் வேண்டும். அவ்வளவுதான். ஆக சஞ்சீபன் அண்ணா தண்ணி டாங்கியினுள்ளேயிருந்து படித்தது அவ்வளவு ஆச்சரியமில்லை.  ஆள் நடமாட்டம் இருக்காது.  பேச்சரவம் இராது. படிக்கலாம். ஏறி உட்கார்ந்துவிட்டால், இலகுவில் இறங்கிப்போக முடியாது. இருந்து படிக்கலாம். அலுப்படிக்கும்போது வெளியே எட்டிப்பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் யார் யார் குளிக்கிறார்கள், உடுப்புத்தோய்க்கிறார்கள், கள்ளக்காதல் முதல் மூலை வீட்டு ஆச்சி வேலிப்பக்கமாக ஒதுங்குவதுவரை எல்லாவற்றையும் லைவ்விலே பார்த்துவிட்டு மீண்டும் கணக்கை தொகையிடலாம்.

வேறென்ன வேணும்? வாழ்ந்திருக்கிறார்கள்.

&&&&&&&&&&&&&&&

வன்னியில் இடம்பெயர்ந்திருந்தபோது படிப்பு மெதடுகள் மொத்தமாக மாறிவிட்டன. ஒருவருடம் பாடசாலையே இல்லை. நாம் தங்கியிருந்த வீடு ஒருமாதிரி பண்ணை வீடு. நாற்பது பேரளவில் தங்கியிருந்தார்கள். அங்கேயே தமிழாசிரியர் சுந்தரம்பிள்ளை ஒரு குட்டி வகுப்பறையை உருவாக்கினார். அங்கே ஒவ்வொருவரும் தமக்கு கீழே வரக்கூடிய வகுப்புக்கு பாடம் எடுப்பார்கள். நான் ஒன்பதாம் வகுப்புக்கு எடுப்பேன். ஒன்பதாம் வகுப்புக்காரன் எட்டாம் வகுப்புக்கு எடுப்பான். அக்கா எனக்கு கணிதம் விஞ்ஞானம் சொல்லித்தருவார். திடீரென்று ஒரு அண்ணா வந்து உனக்கு நான் கணக்கியல் படிப்பிக்கிறேன் என்பார்.

“படிக்கிற பிள்ளைகள்” என்று நம் எல்லோருக்கும் சிறப்பு கவனிப்பு இருக்கும். அதிகாலை பால் கறந்து முதல் டீ நமக்குத்தான். அரிதாகக்கிடைக்கும் முட்டைப்பொரியல் நமக்குத்தான். “படிக்கிறான் வேலை வாங்காதே”, “படிக்கிறான் தண்ணி அள்ளச்சொல்லாதே”, “அவன்ர உடுப்பையும் சேர்த்துத்தோய்”, “படிக்கிற பெடியன் நல்லா சாப்பிடு”, இப்படி நிறைய. நாற்பது பேர் மத்தியில் கைமாறும் ஒரேயொரு சோனி ரேடியோ படிக்கும் சமயத்தில் நம் கொன்றோலுக்குள் வந்துவிடும். எமக்கென்று கன்றுக்குட்டிகள் கட்டப்படும் சிறிய கொட்டிலை படிப்பதற்காக ஒதுக்கித்தந்தார்கள். கரும்பலகை, சோக்கட்டி என்று எங்கிருந்தோ எல்லாம் ஐட்டங்கள் வந்திறங்கின. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுப்பிவிடுவார்கள். சிமினி துடைத்து, எண்ணை நிரப்பி  மேசை விளக்கை ஜம்மென்று  கையில் தருவார்கள். மற்றக்கையில் டீ. தப்பவே முடியாது. படித்தே ஆகவேண்டும்.  படித்தோம்.

இன்று நான் எப்போது ஊருக்குப்போனாலும் வட்டக்கச்சிக்குப் போகாமல் திரும்புவதில்லை. திருமணம் முடித்ததும் மனைவியோடு சென்ற முதல் வீடும் அவர்களதுதான். அப்படி என்னப்பா அவர்கள் மீது பிரியம்? என்று கேட்பாள்.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

&&&&&&&&&&&&&&&

உயர்தரத்தில் என் நண்பர் குழாமின் படிப்பு இசையாலே பின்னப்பட்டிருந்தது. என் எல்லா நண்பர்களுக்கும் இசை என்றால் பைத்தியம். பிரியா, ரகுமானின் சுப்பர் போலிஸ் பாடல்களையே ஆயிரம்தரம் கேட்பான். பார்த்திக்கு பாண்டு மாஸ்டர். நான் அழகான மஞ்சப்புறா என்பேன். 

$_1

நாங்கள் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. ஆனால் பாட்டுக்கேட்பதற்காகவே படித்தோம். ஒன்பதாம் வகுப்பளவிலேயே கதிரையில் உட்கார்ந்திருந்தபடி கால்களால் மிதிக்கக்கூடிய டைனமோ சைக்கிளை சுபாகரன் அண்ணா பரிசாகத்தந்தார். அதுவே பின்னர் நண்பனாகிவிட்டது. டைனமோ சைக்கிளை காலால் மிதித்தபடி, “தானந்தன கும்மிக்கொட்டி” என்றபடியே ஆறாம் வகுப்புப்பாடம் படித்தது நினைவில் இருக்கிறது. சில சமன்பாடுகளை, தேற்றங்களை பாடல்களோடு சேர்த்து பாடமாக்கியிருக்கிறேன். வீட்டிலே ஆரம்பத்தில் சொல்லிப்பார்த்தார்கள். ரேடியோவை பறித்து வைத்தார்கள். படிக்காமல் திரிந்தேன். ஏதோ படித்தால் போதுமென்று திருப்பித்தந்து கைகழுவி விட்டார்கள்.

அறையில் ரேடியோ எந்நேரமும் ஓய்வில்லாமல் பேசிக்கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருக்கும்.

இருபது நிமிடம் கணக்கு. அடுத்த ஐந்து நிமிடம் கொப்பியை மூடிவைத்துவிட்டு சித்ராவுடன் கண்ணாமூச்சியேனடா. மீண்டும் இருபது நிமிடம் கணக்கு. சோலைக்கொல்ல காட்டுக்குள்ள. மீண்டும் கணக்கு. நீ காற்று. பைத்தியம் தொற்றிக்கொண்டது. இறுதிப்பரீட்சை நெருங்க நெருங்க, கரும்பலகையில் முழு நாள் வேலைத்திட்டமே எழுதிவைத்திருந்தேன். எல்லாமே வானொலி நிகழ்ச்சிகளை மையமாக வைத்து போட்ட பிளான்.

    • காலையில் தூத்துக்குடி வானொலி நிலையம் - அசேதன இரசாயனம்.
    • இலங்கை வானோடி சர்வதேச வர்த்தக ஒலிபரப்பு – இலத்திரனியல்.
    • விவிக்பாரதி – வட்டம்.
    • நித்திரை.
    • இலங்கை வானொலி உள்ளூர் சேவை -  சார்பு வேகம்.
    • ஆல் இந்திய ரேடியோ – வெப்பக்கடத்தாறு
    • வெரித்தாஸ் – தொகையீடு
    • திரைத்தென்றல் - பொது இரசாயனம்
    • பிபிசி – சடத்துவத்திருப்பம்
    • சிங்கப்பூர் வானொலி (பனி கொட்டினால்) – வகையீடு.
    • இன்று ஒரு தகவல் - பாஸ்ட் பேப்பர்ஸ்

காலையில் ஒலிபரப்பப்பட்ட அதே “இன்று ஒரு தகவல்” மீண்டும் இரவு பதினொரு மணிக்கு மறு ஒலிபரப்பாகும். சரி பார்த்துக்கொள்வேன். அப்புறம் பாஸ்ட் பேப்பர்ஸ் செய்யத்தொடங்கினால் பதினொன்றரைக்குப் பின்னர் ஆல் இந்திய ரேடியோவில் பழைய பாட்டுப்போகும். “பிருந்தாவனனும் நந்தக்குமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ” என்று ஏ. எம் ராஜா பாடலில் ஆரம்பிப்பார்கள். ஒரு மணிவாக்கில் “தேசுலாவுதே” என்று அவர்கள் சுதந்திரத்துக்கு முன்னே போகவும் எனக்கு தூக்கம் வரவும் சரியாகவிருக்கும்.

அதெல்லவோ .. ப்ச்ச்.

****************

 

படங்கள்
https://www.flickr.com/photos/balavasakan/
http://www.colorishi.com/2015/02/any-worries.html

Comments

  1. அதுவல்லவோ வாழ்க்கை..! திருப்தி..!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்ந்தம் பாஸ்!

      Delete
  2. அந்தக்காலம் போல இன்று இல்லை! அருமையான சப்பல் நினைவுகள்.

    ReplyDelete
  3. பருவாயில்லை அண்ணா.. உங்கட 5வது Category யும் முழுக்க வாசிச்சு முடிச்சிருக்கு. ..

    ReplyDelete
    Replies
    1. ஹா … முதலில விளங்கேல்ல .. கலக்கல்!

      Delete
  4. அடி தூள் பாஸ். இந்த சப்பல்காரங்களிட்ட ஒரு தனிக்குணம், எவனையும் நம்பமாட்டாங்கள். ஏனெண்டா அவங்கள் தங்களையே நம்பிறேல்ல. உள்ள கோயில் திருநீறு சந்தனம், செவ்வரத்தை எல்லாத்தையும் தலையில ஏத்தி இருப்பாங்கள். கேக்க தேவையில்லாத கேள்வியை கேப்பாங்கள், யாரும் சொன்னா கேட்டு கேள்வியில்லாம நம்புவாங்கள். அந்த படிக்கும் ஓடர் மாட்டார் செம பாஸ். ஒரு நாலு தரம் வாசிச்சு சிரி சிரியெண்டு சிரிசுப்போட்டன்.

    ஒருக்கா நம்மட வரலாறு வாத்தியார் இப்பிடி ஒரு சப்பல் மன்னனுக்கு விட்ட கிளி இன்னும் காதுக்குள்ள கேக்குது. "எழுதுவியள் பத்துப்பக்கம் நிறைய, ஒரு மண்ணும் இருக்காது" :)

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ... அந்த ஓடர் மாட்டரை நீயும் கவனிச்சிருக்கிறாய் போல.

      Delete
  5. அந்தக் காலம் மீண்டு வராது. இந்தக் காலத்துக்கு இது எதுவும் விளங்காது...

    -Anojan

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தர் காலமும் அவரவருக்கு பொற்காலமே. எம் பொற்காலத்தில் போர்க்காலமும் இருந்தது தனி ஸ்பெஷல்!

      Delete
  6. இந்த அனுபவங்கள் எனக்கு இல்லை. ஆனால் வாசிக்கும்போது எதையோ ஹெவியாக மிஸ் பண்ணின மாதிரி ஒரு பீலிங்.
    செம செம.. சப்பல் நினைவுகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமல்ராஜ். அது ஒரு அருமையான வாழ்க்கை. அவ்வப்போது அவற்றையும் பகிருகிறேன்.

      Delete
  7. செம பதிவு தலை.:) நினைச்சாலும் முடியிதில்லை பழையபடி வாழ்ந்து பார்க்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சிவா.

      Delete
  8. குணா6/20/2015 11:38 pm

    அச்சு அசலாக A/L படிப்பை கூறியிருக்கிறீர்கள். அனால் ஒரு விஷயம் சப்பல் காயாக இருந்து கம்பஸ் போன ஆக்களையும் காண முடியும் இலங்கையில் எல்லாம் பாஸ்ட் பேப்பர் தான் ஒரு முப்பது வருஷம் பேப்பர் முழுசா சப்பி மூண்டு தரம் எக்ஸாம் எழுதி சிலதுகள் என்ரர் பண்ணுதுகள் அதுகளை எல்லாம் நீங்கள் மண்டை காயாக கருத கூடாது. மற்றது இந்த சப்பல் பிரச்சினை சயன்ஸ்.மட்ஸ் க்கு தான் பிரச்சினை மற்ற கோமஸ்,ஆர்ட்ஸ் சப்பி போகலாம்.

    ReplyDelete
    Replies
    1. கவனித்திருக்கிறேன். ஓரளவுக்கு பாஸ்ட் பேப்பர்ஸ் செய்துபார்த்துளம் உள்ளே போய் இறங்கலாம். என்னதான் சொன்னாலும் அலுப்பில்லாமல் சப்புவதென்பதும் ஒரு கலையே.

      Delete
  9. இதே மண்டைகாய்கள் என கூறப்படுபவர்கள் இலங்கையின் பல்கலைக்கழக கல்வியை பொறுத்தவரை first class எடுக்க முடியாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு முற்றுமுழுதாக சப்பல் தானே பயன்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு முழு மண்டைக்காய் பல்கலைக்கழகத்திலும் கலக்குவான். ஆனால் தற்போதுள்ள செமிஸ்டர்/அசைன்மன் சிஸ்டத்துக்கு கடைசிநேரம் நாசூக்காக படித்து தள்ளுபவன் சமாளிக்க திணறுகிறார். சப்பல் காய்க்கு தற்போதைய பல்கலைக்கழக படிப்பு அல்வாமாதிரி. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

      Delete
  10. A/L என்றாலும் பரவாயில்லை திறமை தான் முக்கியம் அனால் இலங்கையின் கம்பஸ் கல்வி ... கணக்கு இலக்கம் கூட மாத்தாமல் அப்படியே கேள்வியை போடுவாங்க! பிறகு என்ன பாடசாலை கல்வியை தமிழில் படித்து திடிரென ஆங்கிலத்துக்கு மாறுபவனுக்கு சப்பல் தானே தெய்வம்.

    ReplyDelete
  11. //“படிக்கிற பிள்ளைகள்” என்று நம் எல்லோருக்கும் சிறப்பு கவனிப்பு இருக்கும். அதிகாலை பால் கறந்து முதல் டீ நமக்குத்தான். அரிதாகக்கிடைக்கும் முட்டைப்பொரியல் நமக்குத்தான். “படிக்கிறான் வேலை வாங்காதே”, “படிக்கிறான் தண்ணி அள்ளச்சொல்லாதே”, “அவன்ர உடுப்பையும் சேர்த்துத்தோய்”, “படிக்கிற பெடியன் நல்லா சாப்பிடு”, இப்படி நிறைய.// இந்த மாதிரியான விஷயங்கள் ஊரில் இன்னமும் நடக்குதா? தமிழ்நாட்டில் இதற்கிணையான விஷயங்கள் இருந்தது, ஊரை விட்டு வந்து நாளாகிவிட்டதால் எனக்கு தெரியவில்லை அதான் கேட்கிறேன். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பிரிவினர்கள் (தமிழ்நாட்டில்) நான் படிக்கும் போது இருந்தார்கள், சிங்கப்பூரிலும் இருந்ததாக என் நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். நான் ஒன்று மற்றும் மூன்றாம் பிரிவின் கலவை. அதாவது இயல்பிலேயே கெட்டிகாரர்கள் கிடையாது, கடுமையாக உழைத்து புரிந்து கொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு படிப்பார்கள். இந்த பிரிவில் குறைந்த பேர்களே இருப்பார்கள்.

    ReplyDelete
  12. //“படிக்கிற பிள்ளைகள்” என்று நம் எல்லோருக்கும் சிறப்பு கவனிப்பு இருக்கும். அதிகாலை பால் கறந்து முதல் டீ நமக்குத்தான். அரிதாகக்கிடைக்கும் முட்டைப்பொரியல் நமக்குத்தான். “படிக்கிறான் வேலை வாங்காதே”, “படிக்கிறான் தண்ணி அள்ளச்சொல்லாதே”, “அவன்ர உடுப்பையும் சேர்த்துத்தோய்”, “படிக்கிற பெடியன் நல்லா சாப்பிடு”, இப்படி நிறைய.// இந்த மாதிரியான விஷயங்கள் ஊரில் இன்னமும் நடக்குதா? தமிழ்நாட்டில் இதற்கிணையான விஷயங்கள் இருந்தது, ஊரை விட்டு வந்து நாளாகிவிட்டதால் எனக்கு தெரியவில்லை அதான் கேட்கிறேன். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பிரிவினர்கள் (தமிழ்நாட்டில்) நான் படிக்கும் போது இருந்தார்கள், சிங்கப்பூரிலும் இருந்ததாக என் நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். நான் ஒன்று மற்றும் மூன்றாம் பிரிவின் கலவை. அதாவது இயல்பிலேயே கெட்டிகாரர்கள் கிடையாது, கடுமையாக உழைத்து புரிந்து கொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு படிப்பார்கள். இந்த பிரிவில் குறைந்த பேர்களே இருப்பார்கள்.

    ReplyDelete
  13. மோகன். பல குடும்பங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு விசேட கவனிப்பு கிடைக்கும். அது இப்போதும் உள்ளது.

    ReplyDelete
  14. அருமையான பதிவு அண்ணா.. பத்து இருவது வருசத்துக்கு முன்னால நடந்தத அப்பிடியே கண் முன்னால கொண்டாந்திட்டியள்.. கவனக்கலைப்பான்கள் குறைவாக இருந்தது 2000 க்கு முற்பட்ட காலப்பகுதியில் படிக்க வசதியாக அமைந்தது என்னவோ உண்மை..
    உந்த கதிர எரியும் வரை காலுக்க தண்ணி வச்சு குத்திறவங்க்கள் ஏலேவல், கம்பஸ் காலத்தில கஸ்டப்பட்டதயும் அவதானித்திருக்கிறன்..

    எங்கட ப்ரைஸ் கிவிங்ல ஒரு பயல் எல்லா பாடத்துக்கும் அவனே பரிசு வாங்குவான்.. வாசிக்கிற துசியந்தன் சேருக்கு வாய் உழைஞ்ச்சிரும் ... அவன் இறங்கி போய் இருக்கும் வரை ஒரு பத்து நிமிஷம் கைதட்டு விழும்... அடுத்ததா அந்த 75% வீத்துக்கு மேலே எடுத்ததுக்கு ஒரு அம்பது ரூவா வச்சி ஒரு மொக்க பரிசு தருவாங்கள்.. அது ஒரு பெரிய கும்பலுக்கே கிடைக்கும்.. காட்டு குத்தனுக்கு கைதட்டின சனம் மேடயால இப்ப அவிட்டு விட்ட ஆடுகள் மாறி வத வத எண்டு இறங்கி வாறதுகள ஒரு பாவமா பாக்கும்... நான் அப்ப யோசிச்சிருக்கிறன் படுபாவி எப்பிடித்தான் அவனுக்கு முடியுது எண்டு... பயபுள்ள பக்க நம்பர் எல்லாம் பாடமாக்கி வச்சிருந்தவன்.. ஆனா தங்கமான பெடியன்.. கேட்டா சொல்லித்தருவான்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஐம்பதுரூவா பீசாக நானும் சின்ன வயதில இருந்த துன்பியல் காலம் மறக்கேல்ல தம்பி.

      Delete
  15. தன்யா6/27/2015 5:37 pm

    JK, thank you for the note. I really enjoyed it.
    ஸ்டிக்கர், பொலிதீன், சிவப்பு அடிக்கோடு, குட்டை நாய் சொறியிற உவமை எல்லாமே அருமை.
    கொப்பியிண்ட முதல் பக்கத்தை முக்கோணமா மடிச்சு அதில பேர் எழுதிறதை விட்டிட்டிங்கள. சளி பிடிச்சிருக்கேக்க குப்பி விளக்கில படிச்சிருப்பிங்கள் தானே. அடுத்த நாள் 'clean' பண்ணேக்க 'monochome' தெரியும். :D

    ReplyDelete
  16. தன்யா6/27/2015 6:04 pm

    95 பிரச்சினை பற்றி வாசிக்கேக்க ஞாபகம் வந்த இன்னொரு விஷயம். அன்று பள்ளிகூடம் (வேம்படி) இடை நிறுத்தப்படும் கடைசி நாள். காலை 10, 11 மணிக்கே அம்மா அப்பாமார் பிள்ளைகளை வந்து கூட்டிக்கொண்டு போய்ட்டினம். எனக்கு அப்பா கொழும்பில. அம்மாட்டை வாகனம் இல்லை. வழக்கமா பள்ளிக்கு கூட்டிக்கொண்டு வந்து கூட்டி செல்ல arrange பண்ணின ஐயா வழக்கமான 2 மணிக்கு தான் வருவார். ஊரெல்லாம் செல்லடி. நான் பள்ளிக்கூட வாசலில் பயத்தோட தனித்திருந்தேன். ஆரவாரம் எல்லாம் அடங்கி school வெறிச்சிருந்தது. ஆபத்பாந்தவனா ஒரு சீனியர் அக்கா. பெயர் அபர்ணா என்று ஞாபகம். சுருட்டை ஹிப்பி தலை மயிர், நல்ல உயரம், மெல்லிய அக்கா, dark. என்னை சைக்கிளில் கொண்டு போய் வீடு வரைக்கும் பத்திராம விட்டிட்டு போனா. எப்பவாவது சந்திச்ச திரும்பவும் நன்றி சொல்ல வேணும். நன்றி JK.

    ReplyDelete
  17. 95 இடம்பெயர்வு டைம் அம்மாவும் அப்பாவும் அனுராதபுரத்தில். அக்காவோடு தனியாக இரவு முழுதும் நடந்தது. அதன் பாதிப்பில் எழுதிய சிறுகதைதான் “அக்கா”

    கனகாலத்துக்குப்பிறகு படலைப்பக்கம் வந்திருக்காப்ப்ள!

    ReplyDelete
  18. சேர். உவர் பிழையாச் சப்பியும் என்னெண்டு பாஸ் பண்ணினவர்.....இலங்கையின்ரை பரப்பு 65610 சதுர கிலோமீற்றர் எல்லோ... உவர் கிலோவை விட்டுட்டார்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல ... குதிரையோடியிருக்கலாம்.

      Delete
  19. இப்படி ஒரு வாழ்க்கை நாம் தான் வாழ்ந்தோமா என்று பெருமையாக இருக்கிறது
    காலுக்குள்ள தண்ணி இருந்தாலும் நித்திரை வந்தால் எப்படியும் குணசீலன் சார் வந்து எழுப்பி விட்டுடுவார் . என்ன இடை இடையே சோதியர் தான் மண்டை காய் எல்லாம் பாட்டையும் கொஞ்சம் கேட்க்கும் என்று கடுப்பேத்துவார் . தம்பர் வந்து தூங்க வைக்கும் வரை படிப்பு தொடரும்

    //வீட்டுக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் என்ற பெயரில் கம்பஸ் எண்டர் பண்ணியிருக்கும் ஆட்கள் அழைக்கப்படுவார்கள். சப்பலுக்கு அழகான அக்காவோ, தங்கையோ இருந்தால் எக்ஸ்ட்ரா கிளாசுக்கு பீஸ் வாங்காமல் இன்னொரு எக்ஸ்ட்ரா கிளாஸ் போடப்படும். சப்பல் எண்டர் பண்ணுவான் என்று வருங்கால மாமியாருக்கு ஆசை காட்டப்படும்.//
    ம்ம்ம்உங்களுக்கும் அனுபவமோ
    //பரீட்சை அன்றைக்கும் வகுப்பென்று நினைத்து பாடசாலைக்கு வரும் பிரிவினர் எப்படியும் இந்தப்பந்திவரையும் வாசிக்கப்போவதில்லையென்பதால் அவர்களை இங்கே விட்டுவிடுவோம்.//
    //யோசித்துப்பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் மாணவர் பெறுபேறுகளை மாத்திரமே வைத்துக்கொண்டு Freakonomics பாணியில் ஒரு ஆராய்ச்சிப்புத்தகம் எழுதலாம்போல் இருக்கிறது. //
    நிச்சயமாக நிறைய விடயங்களை அதில் அடக்கலாம் ,தொடங்குங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...