Skip to main content

ஹரிஹரன் - சித்ரா

 

ks_chithra_gallery07

தமிழ் திரையிசையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பாடகர் ஜோடி இதுகாலமும் கொடிகட்டிப் பறந்து  வந்திருக்கிறது.

“ஏ.எம் ராஜா - ஜிக்கி”, “சுசீலா- டி.எம்.எஸ்”, “எஸ். பி. பி - ஜானகி”, “சித்ரா - மனோ” என்று இப்படி ஒரு லிஸ்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஒரு கொன்றாஸ்ட் இருக்கும். இவர்கள் சேர்ந்து பாடும்போது ஒரு தனித்துவம் கிடைக்கும்.

 

ஏ. எம். ராஜா - ஜிக்கி

ஏ. எம் ராஜா குரலிலே எப்போதுமே ஒரு மென்மை. நோகாமல் பாடுவார். "துயிலாத பெண் ஒன்று கண்டேன்" என்று அவர் பாடும்போதும் அப்படியே ஐஸ் ஸ்கேடிங் போவதுபோன்ற உணர்வு வரும். ஆனால் ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கும். “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே, பசும்புல் படுக்க பாய் போடுமே” என்று மயக்கும் மாலையை ஏ. எம். ராஜா விவரிக்க ஆரம்பிக்க, ஜிக்கி அதற்கு ஒரு ஆலாபனை போடுவார். "பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே, புன்னை மரங்கள் அன்பினாலே போடும்போர்வை தன்னாலே " என்று பாட்டு மேலே செல்லும். ராஜா ஜிக்கியைத்தவிர்த்து வேறு எந்த ஜோடியையும் நினைத்துப்பார்க்க முடியதாவண்ணம் முத்திரை பதித்திருப்பார்கள். மென் சிறகு.

*******************

சுசீலா–டி.எம்.எஸ்

சுசீலா - டி. எம். எஸ் ஜோடியின் குரலில் அந்த sharp contrast தெளிவாகவே தெரியும். எத்தனை பாடல்களை பாடியிருக்கிறார்கள். அம்மாடி.

இது ஒரு துளிதான்.

"மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர் வரிசை"

என்று சுசீலா நிஜமாகவே குரலில் கொஞ்சுவார். அவ்வளவு உயர் ஸ்தாயி கணீர் குரலிலும் கொஞ்சத்தெரிந்த நிஜக்குயில் சுசீலா. இவருக்கு எப்படி பதில் பாடுவது? திருப்பிக் கொஞ்சலாம். அப்படி கொஞ்சினால் அது டி. எம். எஸ் இல்லை. டி. எம். எஸ் தனக்கேயுரிய கர்வத்தோடு அடுத்த வரிகளை பாடுவார். கர்வத்தோடு கொஞ்சம் எள்ளலும் இருக்கும்.

இந்தப்பாடலில் அட போடும் இன்னும் இரண்டுபேர்கள். ஒருவர் கண்ணதாசன். அடுத்தவர் இளையராஜா!

*******************

 

அடுத்த ஜோடி எஸ்.பி.பி – ஜானகி!

 

சுசீலாவையே தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்பார்கள். எனக்கென்றால் சுசீலாவின் குரலுக்கும் லதாவின் குரலுக்கும் அவ்வளவு சம்பந்தம் தெரிவதில்லை. ஆனால் ஜானகியின் குரலில் நிறைய லதாவின் டச் இருக்கும். “நாதம் என் ஜீவனே” என்றால் குரல் சத்தம்போடாமல் மலையுச்சிக்கு சென்று திரும்பும். அவரோடு எஸ். பி. பி சேரும்போது கதையே கிடையாது. ஏட்டிக்குப்போட்டி பாடகர்கள். அவர் ஆலாப்பு போட்டால் இவரும்போடுவார். சிரித்தால் சிரிப்பார். ஆ என்றால் ஆஆ என்பார். அதுவும் ஜானகி  கிராதகி.

இவர்கள் ஜோடியை மீறி இன்னொரு ஜோடி வரவுமில்லை. இனி வரப்போவதுமில்லை.

எனக்கு எஸ்.பி. பி ஜானகி என்றவுடன் ஒரு பாட்டின் சரணம் கண் முன்னே வந்துநிற்கும். "புது நெல்லு புது நாத்து" படத்துப்பாடல். இராட்சசனின் இசை. பாட்டு மண்ணெண்ணெய் ஊத்தின சாரைப்பாம்பு மாதிரி கிடு கிடுவென வளைஞ்சு வளைஞ்சு  ஓடும்.  போகிறவழி எல்லாம் சங்கதிகள். அதுவும் பொடி சங்கதிகள். இந்தாப்பாரு சங்கதி போடுகிறோம் என்று சொல்லாமல் போட்ட சங்கதிகள். இருவரும் பின்னிப்பெடல் எடுத்திருப்பார்கள். ஒவ்வொரு எண்டிங்கையும் கவனியுங்கள். இளையராஜா! உதிரித்தகவல்.”Nothing But Wind” புல்லாங்குழல் ஒன்று அப்படியே இங்கேயும் இருக்கிறது.

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பலவிதத்தில் பாடுது பாவை நிலை
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
முடி முதல் அடி வரை
மோகமென தொடர்கிற தாகமென
பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற

*******************

எஸ். பி. பி  ஜானகிக்கு அடுத்தது யார் என்ற கேள்வி வந்தபோது இயல்பாக எல்லோரும் ஏற்றுக்கொண்டது சித்ரா-மனோ ஜோடியைத்தான்.  காரணம் இதயத்தை திருடாதேயாக இருக்கலாம். மதுர மரிக்கொழுந்தாகவும் இருக்கலாம். குடகுமலை காடாகவும் இருக்கலாம். வா வா வா கண்ணா வா, வானத்தில வெள்ளிரதம் முதல் வயக்காடு மச்சினன் வயக்காடு வரை சித்ராவும் மனோவும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். விழியில் புது கவிதை வரைந்தேன் என்றொரு பாட்டு. சித்ரா மனோ ஜோடி கலக்கியிருக்கும். ஆனாலும் என்னைக்கேட்டால் சித்ரா மனோவைவிட எஸ்பிபியோடுதான் அதிகம் பாடியிருக்கிறார். மனோ-ஜானகியும்  ஏராளம் பாடியிருக்கிறார்கள். ஒரு ஜோடி வேண்டுமேன்றபதற்காக சித்ராவையும் மனோவையும் இணைத்துவிட்டார்கள்.

யோசித்துப்பார்த்தால் இந்த ஜோடி கட்டுவதே சும்மா ஒரு பிளே லிஸ்ட்டுக்காகத்தானே ஒழிய, மற்றும்படி எல்லோரும் எல்லா ஜோடிகளுடனும் கலக்கியிருக்கிறார்கள். ஜேசுதாஸ்-வாணிஜெயராம், ஜேசுதாஸ்-உமாரமணன், ஜேசுதாஸ்-சித்ரா, சுசீலா-ஏ.எம்.ராஜா என்று எல்லோருக்கும் தனித்தனி ப்ளே லிஸ்ட் போடலாம். எல்லோருமே எமகாதக பாடகர்கள். சும்மா ரசனைக்காக நாங்களே ஜோடி பிரித்து ரசித்துக்கொள்கிறோமே ஒழிய எவர் எவரோடு பாடினாலும் பாடல் நன்றாகவே இருக்கும். .

ரகுமானின் வருகைக்குப்பிறகு ஒரே ஜோடி அதிகம் பாடும் டிரென்ட் குறைந்துவிட்டது. ஒரு ஜோடி ஐந்து பாடல்களை சேர்ந்து பாடியிருந்தாலே ஆச்சரியம் எனும் நிலை.

ஆனாலும் ஒரு ஜோடி மட்டும் இதில் விதிவிலக்காக அமைந்து இன்றைக்கும் அடி பின்னிக்கொண்டிருக்கிறது. அதுதான் ஹரிகரன் சித்ரா ஜோடி.

*******************

ஹரிஹரன்- சித்ரா, பம்பாயின் “உயிரே உயிரே”யில் ஆரம்பித்த கூட்டணி. சும்மா யோசிக்காமல் கடவென்று அவர்கள் சேர்ந்து பாடிய பாடல்களை வரிசைப்படுத்தப் பார்க்கிறேன்.

உயிரே உயிரே (பம்பாய்)
மலர்களே மலர்களே (லவ் பேர்ட்ஸ்)
நீ பேசும் பூவா பூவனமா (கோல்மால்)
நீ காற்று நான் மரம் ( நிலாவே வா)
உடையாத வெண்ணிலா (பிரியம்)
தொட தொட எனவே (துள்ளாத மனமும் துள்ளும்)
மாளவிகா மாளவிகா (உன்னைத்தேடி)
ராசா ராசா உன்னை வச்சிருக்கேன் (மானஸ்தன்)
வானும் மண்ணும் (காதல் மன்னன்)
நகுமோ  (அருணாச்சலம்)
மின்னல்  ஒரு கோடி (வி. ஐ. பி)
அன்பே அன்பே நீ என்  (உயிரோடு உயிராக)
சொல்லாதே சொல்லச்செல்லாதெ (சொல்லாமலே)
இந்த நிமிஷம்  (ஹலோ)
அழகுசுந்தரி எனை ஆழப்போகிறாய் (பட்ஜெட் பத்மநாதன்)
இந்துமகா சமுத்திரமே (மன்னவா)
கண்ணுக்குள் உன் உருவமே (உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்)
தோம் தோம் தித்தித்தோம் (அள்ளித்தந்த வானம்)
முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது (ஆகா)
வருகிறாய் (அ ஆ)
யமுனா தீரம் (தெலுங்கு)
சிறுபூத்திருக்கும் மனமே (மலையாளம் )

இதிலே "ராசா ராசா உன்னை வச்சிருக்கேன்"  என்ற தட்டிவான் பாடலைத் தவிர்த்து ஏனைய அத்தனை பாடல்களும் மென்சிறகு ரகம். அத்தனையுமே. கொஞ்சம் அப்படி இப்படி ரகம்கூட கிடையாது. அனைத்துப்பாடல்களுடனும் கண்ணை மூடிக்கொண்டு புல்வெளியில் சாய்ந்து கிடக்கலாம். பொற்கணங்கள். எப்படி? அதுவும் ஒரே ஜோடியை இசையமைப்பாளர்கள் மீண்டும் மீண்டும் பாட வைக்காத ஒரு சூழலில் இவர்கள் இருவருக்குமட்டும் எப்படி ஒரு மவுசு இருக்கிறது? 

காரணம் அந்த contrastful singing தான்.

ஹரிகரனின் பாடும்பாணியைப்பற்றி எல்லாம் டோர்ச் அடிப்பது வேண்டாதவேலை. மனுஷனுக்கு மண்டைக்குள் என்ன சங்கதி ஓடுகிறதோ அது தொண்டையில் வந்துவிழும்.  சமயத்தில் நினைக்காததும் வந்து விழும். "வானம் தரையில் வந்து வீழ்ந்ததே" என்று ஒரு பாட்டிருக்கிறது. ஹரிகரனால் மாத்திரமே அப்படி பாடமுடியும். அவ்வளவு விஷயங்கள். சோகப்பாட்டான உயிரே உயிரேயிலேயே "நிலவே .. நினைவே" எனும்போது அவர் விழுத்தும் விஷயங்கள் ஓடிவரும் மனிஷாவையே மறக்கடிக்கும்! இப்படிப்பட்ட ஹரிஹரனோடு சேர்ந்து கூடப்பாடுவது என்பது விவகாரமான விஷயம்.

ஆனால் சித்ரா ஹரிஹரனையே தூக்கிச்சாப்பிடுவார்.

சித்ராவின் குரலில் எப்போதுமே ஒரு மென்மையான பெண்மையிருக்கும்.  கேட்கையில் இந்தா பிடிச்சுக்கோ என்று வயிற்றுக்குள் உருளும் உருண்டையை கையில் பிடித்துத்தரும்.  இசை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பவனும் சித்ராவின் குரலுக்கு சரிவான்.  "தேவனே காத்திருப்பேன், தீயிலே பூத்திருப்பேன், ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன்" என்று அவர் பாடுவதை கேட்டுப்பாருங்கள். தேவன் வந்தேயாகவேண்டும். அப்படி அடிக்கும்.

இதே சித்ராவுக்கு சங்கதிகளும் சாதாரணம். கடகடவென்று விழும். ஆனாலும் பாடலின் உணர்ச்சி மாற்று கொஞ்சமும் பிசகாது. இந்தாப்பாரு, சங்கதி போடுகிறேன் என்றெல்லாம் சொல்லமாட்டார். "நேற்று ராப்போது சந்திரன் வந்த நேரம்" என்று பாடுகையில் சந்திரன் சர்ரென்று அங்கிருந்து பூமிக்கு வரும். ஒரு பாட்டில் ஆனானப்பட்ட ஜேசுதாசுக்கே அல்வா கொடுத்த சங்கதியை, சித்ரா சத்தம்போடாமல் போட்டிருப்பார்.

"முத்தமிழ் கவியே" சரணம். சித்ராதான் ஸ்டார்ட்ட்டிங்.

"காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்"

அதிலே "நான்" இலே ஒரு பிர்கா இருக்கும். கிளீன் லாண்டிங்.

இனி ஜேசுதாஸ் முறை.

"கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்"

MH380.

ஆக இப்படிப்பட்ட ஹரிகரனும் சித்ராவும் இணைந்து பாடுகையில் எப்படியிருக்கும்?

 

"மின்னல் ஒருகோடி" பாடல். முதல்சரணம் ஹரிகரன் பாடி இரண்டாவது சரணத்தில் சித்ரா இறங்குவார். ஹரிஹரனின் ஸ்டைலுக்கு முற்றிலும் வித்தியாசமான ஸ்டைல்.

“எனை மீட்டியே நீ இசை ஆக்கினாய்.
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் ..
மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே”

என்று சித்ரா முடிக்க,

“லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே”

என்று ஹரிஹரன் தன்னுடைய டச் வைக்க சித்ரா அப்போதும் விடமாட்டார்.

“உன் வார்த்தை தேன் வார்த்ததே!”

அவ்வளவுதான். ஹரிகரன் ஸ்டைலுக்கு நேர் எதிரில் இருக்கும். அப்பீலே இல்லை. 

இதே நிலைமைதான். “முதன்முதலில் பார்த்தேன்” பாடலிலும். ஹரிஹரன் முதல் சரணத்தில் கொடி நாட்டிவிட்டுப்போக, அடுத்த சரணத்தில் கொடியை பிடுங்கி இன்னும் கொஞ்சம் மேலே நாட்டிவைப்பார் சித்ரா. வருகிறாயிலும் அதுதான். அழகு சுந்தரியும் அப்படித்தான். “சொல்லாதே சொல்லச்சொல்லாதே” பாட்டு சரணத்தில் எங்கெல்லாமோ போய் வரும். இருவரும் நம்மையும் கூட கூட்டிக்கொண்டுபோவார்கள். மலர்களே மலர்களே, நீ காற்று நான் மரம், நீ பேசும் பூவா பூவனமா எல்லாம் ஹரிஹரன் சித்ரா உச்சம் தொட்ட பாடல்கள். ஒரே பாட்டை ரிப்பீட்டில் விட்டு ஒரு நாள் பூராக கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இளையராஜா இந்த ஜோடியை ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் பயன்படுத்தவில்லை. ஆனால் மலையாளத்தில் இளையராஜாவின் டிப்பிக்கல் தொண்ணூறுகள் ஸ்டைலில் ஒரு பாட்டை ஹரிஹரன் சித்ரா பாடியிருக்கிறார்கள்.

 

ஹரிகரன் சித்ரா சேர்ந்துபாடும்போது ஏதோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் பாடுவது புரியும். ஏட்டிக்குப்போட்டி போடமாட்டார்கள். நீ சங்கதி டிபார்ட்மெண்டை கவனித்துக்கொள்ளு, நான் உணர்ச்சிகளை பார்த்துக்கொள்கிறேன் என்பார் சித்ரா. ஹரிகரன் அனாயசமாக சங்கதிகளையும் பிர்காகளையும் போட்டுத்தாழிக்க, அவருக்கு நேரெதிராக மென்மையும் காதலுணர்வுமாக பின்னுவார் சித்ரா. இந்த பாணி பாடலுக்கு ஒரு சிறந்த பலன்ஸை கொடுக்கும். உயிரே உயிரேயிலேயே ஆரம்பித்த இந்தப்பாணிக்கான ஐடியாவை ரகுமானே கொடுத்திருக்கலாம். அது அப்படியே தொடர்ந்துவிட்டது. “வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே உறைந்துகொண்டது உந்தன் உறவே” என்று பாடும் ஹரிகரன் குரலுக்கு பதிலாக “உறங்காத நேரம் கூட உந்தன் நினைவே நினைவே” என்று சித்ராவின் குரல் ஏங்கும். அவர் “வருகிறாய் தொடுகிறாய்” என்றால் சித்ரா “வருகிறேன், தொடுகிறேன்” என்பது டோட்டலி வேறு டோனிலே பாடுவார்.

நீ காற்று மரத்திலே இந்த ஸ்டைல் வேறு ஒரு தளத்துக்குப்போகும். பாடலின் வரியும் காட்சியமைப்பும் கூடவே சேர்ந்துகொள்ள, தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த டூயட்டுகளுள் ஒன்றாக “நீ காற்று” சேர்ந்து எல்லா இசை ரசிகர்களினதும் பிளேலிஸ்டுகளில் இடம் பிடித்துவிட்டது. விஜயிடமும் இப்படிப்பட்ட படங்களை யாராவது போட்டுக்காட்டவேண்டும்.  முந்தியெல்லாம் நடிச்சிருக்கிறீங்கள் பாஸ்!

 

சித்ரா ஹரிஹரன் லிஸ்டிலே ஒரு குறிப்பிட்ட பாடல் மிகுதி எல்லாவற்றையும்விட வித்தியாசமாக ஒலிக்கும். மெலடிதான். ஆனால் நிறைய கஸல் டச் உள்ள பாடல். சந்தீப் சவுட்டா என்பவரின் இசை. உனையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கின்ற தெலுங்கு டப்பிங் படம். இப்போது அதிகம் கேட்கப்படாத இந்தப்பாடலை தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் அடிக்கடி அப்போது ஒலிபரப்பும்.

இதில் உள்ள வித்தியாசம், வழமைக்கு மாறாக சித்ராவும் ஒரு டுவென்டி டுவென்டி அடிப்போம் என்று முடிவெடுத்து பாடிய பாடியிருப்பார்.  கடைசிப்பல்லவி முழுதுமே சிக்ஸர்கள்தானே. ஒரு பந்து ஸ்டேடியம் தாண்டியும் விழும். கேட்டுப்பாருங்கள்.

 

 

இந்தப்பாடலில் அப்படி என்ன இருக்கிறது? மிருதுவான கிட்டார் இசையோடு ஆரம்பித்து பின்னர் ஹரிஹரன் சித்ராவிடம் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு இன்டர்லுடை வயலினும் மற்றையதை புல்லாங்குழலும் எடுத்துக்கொள்கிறது. பாடல் முழுக்க பேஸ் கிட்டார் ஒலிக்கிறது. புதுமையான எந்த வாத்தியங்களோ ஒலியமைப்புக்களோ இல்லை. முழுக்க முழுக்க கொம்பஸிஷனிலேயே புதுமை காடுகிறார்கள். பாடலில் ஒரு உயிரைப்பிடித்து வைத்துக்கொண்டு எல்லோரும் அதனை சீராட்டுகிறார்கள். அதனால்தான் இருபது வருடங்கள் தாண்டியும் பாட்டு நம்மை போட்டுத்தாக்குகிறது. இந்த சூட்சுமத்தை தெரிந்தவர்களே காலகாலத்துக்கும் கொடி நாட்டினார்கள். புதிதாக வருகின்ற இசையமைப்பாளர்களிடமும் ரசிகர்கலாகிய நாம் எதிர்பார்ப்பதும் அதுவே. உயிரைப்பிடியுங்கள். மீதி தன்னாலே வரும்.

துடிக்கின்றே இதழே நீ
சொல் என்றே நான் கேட்டேன்
மனத்துக்குள் ஆசைகளை.
நிலம் பார்த்து நான் நின்று
எதிர்பார்த்தேன் நீ பேச
துணிவுக்கு இடம் இல்லையே.
எதிர்பார்த்த நேரத்தில்
இரவொடு பகல் போக
நாள் ஒன்று வீணானதே!

அடுத்த ஹரிஹரன் சித்ராவின் பாட்டுக்காக எதிர்பார்த்தபடி …


ஏனைய இசைப்பதிவுகளுக்கு.

படங்கள் : vanitha.manoramaonline.com

Comments

  1. அத்தனை பாடல்களும் அருமை
    இந்த நிமிஷம் எலலாம் எண்ணுக்கணக்கு மறந்து கேட்டதுண்டு
    பாராட்டும் நன்றியும் பகிர்விற்காய்

    ReplyDelete
  2. அருமையான பதிவு அண்ணா... சித்ராவும் ஹரிஹரனும் மெல்லிசையின் உச்சம்...

    இதப்போல எனக்கு பிடிச்ச ஜோடி ஒண்டு இருக்கு : கார்த்திக் அண்ட் சின்மயி...

    காதல், நெருப்பில் நடனம் (வெயில்)
    லேசா பறக்குது மனசு (வெண்ணிலா கபடி குழு )
    அதோ வானிலே நிலா போகுதே (இசை)
    உன் பார்வை அருகில் (விஞ்ஞானி )
    நான் அவள் இல்லை (மாஸ்)
    கனிமொழியே (இரண்டாம் உலகம் )
    போய் வரவா (துப்பாக்கி)
    இதழில் (நாங்க )
    விழிகளிலே (குள்ள நரி கூட்டம் )

    And lots more of stage shows and BGM humming of them for A R Rahman! :)

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் சின்மயி ஒரு அசத்தல் சோடி. விழிகளிலே ஒரு கிளாஸ் சோங்.

      Delete
  3. //இளையராஜா இந்த ஜோடியை ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் பயன்படுத்தவில்லை//இளையராஜா, ஹரிஹரன் ரெண்டு பேரோட ரசிகராயிருந்தும், இந்த தகவல் நமக்கு புதுசு :-) .

    இளையராஜா இசையில ஹிந்திலயும் கூட பாடியிருக்காங்க. Sazaa E Kaalapaani (தமிழ்ல சிறைச்சாலை) படத்துல Bachpan Ke Saathi Mere & Zindagi Mein Tum Mile பாடல்கள்.

    ஹரிஹரன் & சித்ரா பாடுன மேலும் சில ஹிந்தி பாடல்கள் (எனக்கு தெரிஞ்சு):
    Thoda Thoda Pyaar - Priyanka
    Mera Yaara Dildara - Kabhi Na Kabhi
    Tu Mange Dil - Aflatoon
    Tumhen Arpan - Charas

    தமிழ்ல விடுபட்ட சில பாடல்கள்:

    துளி துளி பனித்துளி - பெரிய மனுஷன்
    சொன்னால் தான் - சொன்னால்தான் காதலா
    எனக்குள்ளே இருப்பவன் - சிரித்தால் ரசிப்பேன்
    பூ ஒன்று வேண்டும் - என்றென்றும் (ஆல்பம்)
    விழிகளில் விழுந்தவளோ - புகழ் (நேத்துதான் பாட்டு ரிலீசாகிருக்கு :-) )

    - ராஜா

    ReplyDelete
    Replies
    1. நேற்று ரிலீஸ் ஆனா பாட்டுகூட சொல்லியிருக்கிறீங்கள். நன்றி ராஜா. கேக்கிறன்.

      Delete
  4. ஹரிஹரனின் குரலுக்கு சொத்தையே எழுதி கொடுக்கலாம் என்று சொன்னால் SPB வந்து அப்ப எனக்கு தந்தது என்ன என்று கேட்பார்ஆண்டி ஆனாலும் பரவாயில்லை எழுதிட்டா போச்சு .
    ஹரிஹரனின் காதல் வேதம் எல்லாமே அருமை .'என் நெஞ்சில் தூங்க வா 'பாடலில் சித்ராவின் குரல் வந்திருக்கலாம் என்று நினைப்பது உண்டு .
    கவலை ,தோல்வியில் இருக்கும் போது ஹரிஹரனின் பாடல்கள் கேட்காமல் இருப்பது நல்லது என்று நினைத்தாலும் அதை தேடியே மனம் ஓடும் .
    //விழியில் புது கவிதை வரைந்தேன் என்றொரு பாட்டு. சித்ரா மனோ ஜோடி கலக்கியிருக்கு //
    ம்எனக்கு என்னவோ மனோ அவசரமாக படுவது போல் இருக்கும் சித்ரா ரொம்பவே க்ளீன் சிங்கிங்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...