Skip to main content

ஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்

 

150px-1002

“அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்”

“சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ!”

-- யாழ்ப்பாண இராத்திரிகள்.

யாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது.

நேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று கிழமைகள் யாழ்ப்பாண அனுபவங்களை அசை போட்டபடி அப்போதுதான் இரண்டு உடுப்பை மடித்து பாக்கிற்குள் வைக்க ஆரம்பித்திருந்தேன். இந்த மூன்று கிழமைகளில் செய்யவேண்டும் என்று நினைத்தவற்றை ஓரளவுக்கு செய்தாயிற்று. போகவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய நபர்கள் என்று போனில் குறித்து வைத்திருந்த லிஸ்ட் எல்லாம் டிக்காகி விட்டது. ஆனாலும் எதையோ ஒன்றை மிஸ் பண்ணியது போன்ற உணர்வு. யாரையோ சந்திக்காமலேயே போகிறோம் என்றது உள்மனது. குட்டி போட்ட பூனையாட்டம் அறையை சுற்றி சுற்றி வருகிறேன். திடீரென்று பொறி தட்டியது… எப்படி அவரை மறந்தேன்?

செங்கை ஆழியான்.

நாற்பத்தேழு நாவல்கள். இருநூறுக்குமதிகமான சிறுகதைகள். ஏராளமான கட்டுரைகள், நேர்காணல்கள், வரலாற்று ஆராய்ச்சிகள். செங்கை ஆழியானை வாசித்து முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு புத்தகக்கடைக்குள் இறங்கினால் அங்கே மேலும் புதிதாக வாசிக்காத அவருடைய புத்தகங்கள் பத்துக்கு மேலே மாட்டும். அதையும் வாசித்துவிட்டு மீண்டும் நுழைந்தால் மேலும் கிடைக்கும். செங்கை ஆழியான் ஒரு எழுத்து மெஷின். ஈழத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவரும் அவரே.

செங்கை ஆழியானின் சமகால இலக்கியவாதி சோ. பத்மநாதனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் செங்கை ஆழியான் பற்றி  ஒரு வசனம் சொன்னார்.

"Sengai Aazhiyaan is the most prolific eezham writer todate".

இவ்வளவுதூரம் வந்தும் அவரைப்பார்க்காமல் போவது பெரிய பாவம் என்று தோன்றியது. உடனே அவசர அவசரமாக பிரவுண் ரோட்டில் இருக்கும் அவர் வீட்டுக்கு விரைந்தோம். வாசலில் அவரின் மனைவிதான் வரவேற்றார். செங்கை ஆழியான் ஒரு சாய்மனைக் கதிரையில் தளர்ந்துபோய் படுத்திருந்தார். நிறைய பேசுவதற்கு போயிருந்தேன். அவரை அந்நிலையில் பார்த்ததும் எதுவுமே பேசமுடியாமல் வாய் டைப்படித்தது.

“நான் உங்கட பயங்கர பாஃன்… வாசகன் .. அவ்வளவு பிடிக்கும் ..”

தலையசைத்து சிரித்தார். அவரால் இப்போது ஓரிரு வார்த்தைகள்தான் பேச முடிகிறது. படுத்த படுக்கை. எழுதுவது, வாசிப்பது எதுவுமே இப்போது இயலாது. எவ்வளத்துக்கு எழுதிக்குவித்த மனுஷன். அந்த நிலையில் அவரை பார்க்கவே முடியவில்லை. வாடைக்காற்று எழுதிய காலத்தில் திருவிழாபோல அவருக்கு விழா எடுத்தார்களாம்.

ஈழத்தின் எந்த வாசகனும் செங்கை ஆழியானை கடக்காமல் வந்திருக்கமுடியாது. என்னை மாதிரி ஆட்களுக்கு சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வத்தை உண்டு பண்ணியதிலும் அவருக்கு நிறைய பங்குண்டு.  சின்ன வயதில் தமிழ் பேச்சுப்போட்டி ஒன்றிலே முதலிடம் பெற்றமைக்கு மூன்று புத்தகங்கள் பரிசாக கிடைத்தது. அதில் ஒன்று “கடல் கோட்டை”.  அன்றைக்கு தொடங்கியது. இன்றைக்கு என் வீட்டு நூலகத்தில் செங்கை ஆழியானின் முப்பதுக்குமதிகமான நூல்கள் இருக்கின்றன. என்னுடைய வாசிப்பனுபவத்தை  பதின்மத்தில் நாவல்களாலும் பின்னாளில் வரலாற்று நூல்களாலும் நிரப்பியவர் செங்கை ஆழியான்.  வாடைக்காற்று, முற்றத்து ஒற்றைப்பனை, கடல் கோட்டை, யானை, குவேனி, காட்டாறு, கங்கைகரையோரம், கிடுகுவேலி, சாம்பவி, ஜன்மபூமி, ஈழத்தமிழர் வரலாறு, கந்தவேள் கோட்டம் போன்றவை உடனே ஞாபகத்துக்கு வரும் அவரின் எனக்கு பிடித்தமான படைப்புகளில் சில. நாவல்களில் “யானை”யும் ஆராய்ச்சி நூல்களில் “ஈழத்தமிழர் வரலாறு”ம் அவருடைய பெஸ்ட் என்பேன். கடல் கோட்டை ஈழத்து சூழலுக்கு முற்றிலும் புதிது. கடல் கோட்டை ஒரு புனைவு சாராத நாவல் என்கிறார் செங்கை ஆழியான்.

DSC00706“அந்த வைரவ சூலத்தை ஒருவன் வழிபட்டான். என் குதிரையின் காலடிச் சத்தம் கேட்டதும் அந்த வைரவ சூலம் சிலுவையாக மாறிய அதிசயத்தைக் கண்டேன். எப்படியென்று அதிசயப்படுகிறீரா? அந்தச்சூலம் சிலுவையாகவும் சூலமாகவும் மாறக்கூடிய அமைப்பில் செய்யப்பட்டிருந்தது.”

பால்தேயஸ் வியப்புடன் வந்கொயனைப்பார்த்தார். அவருக்கு இருந்தாற்போல சிரிப்பு வந்தது. சற்று பலமாக நகைத்தார்.

“எனக்கும் அப்படியொரு அனுபவம். ஞாயிறு தேவாலயத்துக்கு ஒரு பிரமுகர் வரவில்லை. சென்றவாரம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். உடனே அவர் “சிவ சிவா இயேசுவை மறப்பேனா?” என்றார்.

வன்கோயன் புன்னகைத்தான்.

“இத்தலைமுறை கழியவேண்டும் … கிறிஸ்துவர்ளாக மாறுபவர்களை விட கிறிஸ்தவர்களாக பிறப்பவர்கள் உருவாகும்போதுதான் இப்பிரதேசத்தில் எங்கள் மதம் நிலைக்கும்.”

-கடல்கோட்டை

செங்கை ஆழியான் எங்கள் காலத்தில் ஈழம் முழுதும் கொண்டாடப்பட்ட “ஜனரஞ்சக” எழுத்தாளர். எளிமையான மேலோட்டமான எழுத்துக்கள் அவருடையது என்கின்ற விமர்சனம் அவர் எழுத்துக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அதற்கு அவர் “இலக்கியம் வாசிக்கப்படவேண்டும் என்று நம்புபவன் நான். ஒரு சிலருக்காக இலக்கியம் படைக்கப்படுவதில்லை” என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். “ஆரம்பத்தில் மார்க்சிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை முற்போக்கு இலக்கியமாக சீல் குத்துவதற்காக ஏனையவர்களின் எழுத்துக்களை வெறும் ஜனரஞ்சக எழுத்துக்கள் என்று படிக்காமலேயே முத்திரை குத்தி விட்டார்கள்” என்று அதே நேர்காணலில் விமர்சகர்கள் மீது அவர் ஒரு குத்து விட்டிருப்பார். எது எப்படியோ அவருடைய திறமைக்கு இன்னமும் ஆழமான படிநிலைகளைக்கொண்ட நாவல்களை எழுதியிருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் அவர் அதனை செய்ய முயலவில்லை.

“உங்கட வரலாற்று நூல்கள் மிக முக்கியமானவை. எல்லாளன் சோழ மன்னன் இல்லை, அவன் பூநகரியை ஆண்ட ஈழ மன்னன் என்ற விஷயம் கூட உங்கள் மூலமாகவே தெரியவந்தது. ஈழத்தவர் வரலாற்றை எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் குடுத்ததுக்கு நன்றி”

கேட்கையில் அவரின் கண்களில் சந்தோசம் தெரிந்தது.

“கந்தசாமியும் கலக்ஸியும்” நாவல் இறுதி அத்தியாயம் எழுதும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம், நாவலை எப்படி முடிப்பது என்கின்ற குழப்பம். அந்த நாட்களில் “குவேனி” வாசித்துக்கொண்டிருந்தேன். குவேனி மட்டும் வந்தேறியை காதலிக்காமல்போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கற்பனை வாசிக்கும்போது எழுந்தது. உடனேயே விறுவிறுவென்று இறுதி அத்தியாயம் எழுதி, அதில் சுமந்திரன் அவர்களின் காதலை தடுக்க முயல்வதாக நாவலை முடித்தேன். திடுப்பென்று வந்த ஐடியா. உபயம் செங்கை ஆழியான்!

“உங்கட வாடைக்காற்று, யானை, குவேனி எல்லாம் பிடிக்கும்… நானும் கொஞ்சம் எழுதுவன் .. உங்கட இன்ஸ்பபிரேஷனில நிறைய எழுதியிருக்கிறன் …”

உள்ளிருந்து அவருடைய மகள் ஹம்சா ஹோலுக்குள் வந்தார்.

“அவருக்குத் தெரியும் … ஜேகே .. நீங்க எழுதினதை அவருக்கு வாசிச்சு காட்டியிருக்கிறம்”

நிறைய சந்தோசம், கொஞ்சம் ஆச்சரியத்தோடு செங்கை ஆழியானிடம் திரும்பினேன். ஏதோ சொல்ல முயன்றார். புரியவில்லை. அவரிடம் கேட்கவென்று நினைத்தவற்றை அவர் மனைவியிடமே கேட்டேன். கிட்டத்தட்ட செங்கை ஆழியானின் உத்தியோகபூர்வ பயோகிராபர் போன்று தகவல்களை புட்டு புட்டு வைத்தார். நாற்பது என்று நான் சொன்ன நாவல் எண்ணிக்கையை நாற்பத்தேழு என்று திருத்தினார்.

செங்கை ஆழியான் கையால் எழுதுவதில்லை, டைப் பண்ணுவார் என்பது புதிய தகவலாக இருந்தது. அறுபத்தைந்தாம் ஆண்டே கை எழுத்திலிருந்து டைப் ரைட்டருக்கு மாறிவிட்டாராம். இரவிரவாக எழுதுவாராம். நடுச்சாமத்தில் அந்தவீட்டில் டைப் ரைட்டர் சத்தம்  வேகமாக ஒலித்தால் அடுத்தநாள் “சேர் என்ன கதை எழுதுறார்” என்று பக்கத்துவீட்டுக்காரர்கள் வந்து கேட்பார்களாம். தொண்ணூற்றொன்பதில் டைப்ரைட்டர் கொம்பியூட்டராகிவிட்டது.

வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்து சிறிது நேரத்திலேயே எழுதப்போய்விடுவாராம். சிலவேளை நடுச்சாமத்திலும் ஏதாவது ஒரு ஐடியா வந்து எழுத உட்காருவதுமுண்டு. “வாழ்நாளில் வீட்டுச்சாமான் என்று வாங்க அனுப்பியதில்லை, வீட்டு வேலை எதுவும் அவரிடம் வாங்கியதில்லை, அவருண்டு அவர் எழுத்துண்டு என்று விட்டுவிட்டோம்” என்று சிரித்தபடி அவர் மனைவி சொன்னார். “சிறுவயதில் அப்பா நாவல்கள் எதுவும் வாசிக்கத்தரமாட்டார். சுஜாதாவெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. கெட்டுவிடுவோமாம். அம்புலிமாமா, ராணி காமிக்ஸ்தான்” என்று சிரித்தார் அவரின் மகள்.

செங்கை ஆழியானைத் திரும்பிப் பார்த்தேன். குழந்தையாய் சிரித்தார்.

செங்கை_ஆழியான்

செங்கை ஆழியானின் தாயார் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை அறிய முடிந்தது. நிறைய புராணக்கதைகள் சொல்வாராம். விக்கிரமாதித்தன், ஏழு கடல்கள் தாண்டிய இராஜகுமாரன் கதை, வேலைக்கு அமர்த்திய முனி என்று பல கதைகளை சிறு வயதில் குழந்தைகளுக்கு சொல்லியிருக்கிறார். ஒருநாள் மாலை அந்த அம்மையார் ராஜம் கிருஷ்ணனின் “மலர்கள்” நாவலை முற்றத்தில் கதிரைபோட்டு வாசித்துக்கொண்டிருக்கிறார். அந்தி சாய்ந்துகொண்டிருந்ததில் அவர் இருந்த இடத்திலிருந்து வெளிச்சம் விலகிக்கொண்டிருந்தது. வாசிப்பு சுவாரசியத்தில் அவர் வெளிச்சத்தோடே புத்தகத்தை நகர்த்தியபடி விடாமல் வாசித்துக்கொண்டிருந்தார். தன்னிலையறியாமல் இப்படி நகர்த்திக்கொண்டிருந்ததில் ஒரு கட்டத்தில் கதிரை தடுமாறி தவறி விழுந்துவிட்டார். காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கும் அந்த நாவலின் அடுத்தபாகத்தை கொண்டுவா என்று கேட்டிருக்கிறார். கொண்டுபோய்க்கொடுப்பதற்குள் அந்த அம்மையார் இறந்துவிட்டாராம்.

“உங்கட பெரியக்காவைப்பற்றி கதைக்க நிறைய ஆசை. வீட்டுக்குப்பின்னாலிருந்த புளியமரம் ..வற்றாநதியில் நிறைய எழுதியிருக்கிறிங்க ..”

அதற்கும் சிரிப்புத்தான். வீட்டில் கடைசி என்பதால் வீட்டில் இவர் செல்லம் என்றார் மனைவி. செங்கை ஆழியான் நிறைய பேச முயன்றாலும் அவரால் ஒரு வார்த்தைக்கு மேலே பேச முடியவில்லை.

“நாங்கள் சாத்திரத்தைக்கூட நம்புறதில்லை தம்பி, ஆனா இவர் நல்லா எழுதிக்கொண்டிருந்தவர், சாகித்திய அகடமியில பெரிய போஸ்ட் எல்லாம் கிடைத்தது. இன்னமும் எவ்வளவோ எழுத இருக்கு. அநியாயத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கள்”

மனைவி கவலைப்பட்டார்.

பத்திரிக்கை ஒன்றிலே தொடராக வெளிவந்த  “நாக நாட்டு இளவரசி”தான் செங்கை ஆழியானின் முதல் நாவல். பின்னாளில் அதன் தரம் காரணமாக அவர் அதனை அச்சில் கொண்டுவரவில்லை. ஆனாலும் பேப்பர் கட்டிங்கை தொகுத்து இன்னமும் வீட்டில் வைத்திருக்கிறார்கள். இதைக்கேட்டபோது எனக்கு தேவையில்லாமல் ஹார்ப்பர் லீ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தார்.

அவர்களுடைய குடும்ப பதிப்பகமான “கமலம் பதிப்பகம்” மூலமே பெரும்பாலான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அவரின் புத்தகம் வெளியான முதல் நாளிலேயே முந்நூறு புத்தகங்கள் வரையிலும் விற்பனையாகிவிடுமாம். ஆனால் இப்போதெல்லாம் யாருமே வாங்குவதில்லை, புத்தகம் வெளியிட்டு எங்களுக்கு நட்டமேயொழிய எந்த இலாபமுமில்லை என்றார் அவரின் மனைவி. கடைக்காரர்கள் புத்தகம் விற்றாலும் அதற்கான பணத்தை கொடுப்பதில்லையாம். ஒரு டிவி சானல்கூட அவருடைய நாவல் ஒன்றை தொலைக்காட்சித் தொடராக்க அனுமதி பெற்று, ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் வாங்கி, பணம் கொடுப்பதாகக்கூட சொல்லிச்சென்றிருக்கிறார்கள். டிவியில் தொடர்கூட வெளிவந்துவிட்டது. பணம் வரவில்லை. “காசு வேண்டாம் தம்பி, சிடியாவது கொடுங்கள்” என்று போன் பண்ணிக்கேட்டதுக்கும் பதிலில்லை.

செங்கை ஆழியான் இறுதியாக எழுதியது “யாழ்ப்பாணம் பாரீர்” என்ற சுற்றுலா நூல். அச்சிலேறுவதற்கு தயாராக இருக்கிறது. பதிப்பாளர்கள் அதிக பணம் கேட்பதால் தாமே பிரிண்ட் பண்ணுவோமா என்று யோசிக்கிறோம் என்றார் அவர் மனைவி. அவருடைய மனைவியை பேட்டி கண்டே செங்கை ஆழியானின் சுய சரிதத்தை தொகுத்துவிடலாம்போல் தோன்றியது. சொன்னேன். பார்ப்போம் என்றார். செங்கை ஆழியான் ஒரு தலைமுறையின் எஞ்சிய பிரதிநிதிகளில் ஒருவர். மிகச்சுவாரசியமான, சர்ச்சைக்குரிய ஏழு தசாப்தகால வாழ்க்கையின் சொந்தக்காரர். விரைவில் சுகப்பட்டு அவரே அதை எழுதவேண்டும்.

எழுதுவார் என்று நம்புவோம்.

விடைபெறும்போது கூட நின்று படம் எடுத்துக்கொண்டேன். உடம்பு தேறினதும் மீண்டும் வந்து படம் எடுத்து பேஸ்புக்கில் போடுகிறேன் என்று சொல்லி சிரித்தேன். பதிலுக்கு சிரித்தார். கிளம்பிவிட்டோம். நான் போகும்வழியையே அவர் கண்கள் பார்த்துக்கொண்டிருந்ததை அறிவேன். திரும்பிப்பார்க்க மனமில்லை.

வீடு போகும் வழியில், அவரிடம் நான் கேட்ட கேள்வி ஒன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

“அடடா இதை எழுதாமல் போய்விட்டேனே என்று நினைத்து ஏங்கும் ஏதாவது கதை உள்ளதா?”

மறுபடி மறுபடியும் எதையோ முணுமுணுத்தார். மனைவியும் கேட்டுப்பார்த்தார். விளங்கவில்லை. ஹம்சாவும் கேட்டுப்பார்த்தார். ஒருவருக்கும் அவர் சொல்ல முயன்றது விளங்கவில்லை. மீண்டும் கேட்டேன்.

“அடடா இதை எழுதாமல் போய்விட்டேனே என்று நினைத்து ஏங்கும் ஏதாவது கதை உள்ளதா?”

இம்முறை அவர் மேலும் குரலை உயர்த்தி எதையோ சொல்ல முயன்றார். தான் சொல்ல விழைந்தது எமக்கு விளங்கவில்லையே என்கின்ற ஏக்கம் அவர் கண்களில்.

என்ன சொல்ல முயன்றிருப்பார்?

********************

Comments

  1. அதற்கு தான் நீ இருக்கிறாயே என்று சொல்ல நினைத்திருப்பார்
    -Kurinchi

    ReplyDelete
    Replies
    1. இல்ல மச்சி. நான் இதில நத்திங். அவர் ஏதோ ஒன்றை ஆர்வமாக சொல்ல முயன்றார் :(

      Delete
  2. மரணங்கள் மலிந்தபூமியும்,அந்த அவர்களும் இந்த இவர்களும் நாவல்களும் இன்னும் நீங்கா நினைவுகளில்.செங்கையாழியான் நலம்பெற பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. நலம் பெற்று அவர் திரும்பவேண்டும்.

      Delete
  3. பதின்ம வயதுகளில் கல்கியில் ஆரம்பித்து, சாண்டில்யன் வரை வரலாற்று புதினங்களுக்குள் சுற்றிக்கொண்டிருந்த நேரம், எங்கட வரலாற்றை கொண்ட புனைவுகள் இல்லையே என்ற ஒரு ஏக்கம் இருந்தது. அப்போ குவேனியை தந்து என்னிடம் அறிமுகமாகியவர் செங்கை ஆழியான் ! அன்றிலிருந்து செங்கை ஆழியானை அவ்வளவு பிடிக்கும். ஒரு ஹீரோ போல.
    நாவல்களின் தீவிர ரசிகன். வாடைக்காற்றை கொண்டாடியிருக்கிறேன் (பள்ளிக்கூட லைப்ரரியில் இருந்து திருடி;) ) வரலாற்று புதினங்கள் சற்று மேலோட்டமாகவே எழுதப்பட்டிருந்தன என்ற கருத்து எனக்கு இருந்தாலும் பிடிக்கும். இதுவரைக்கும் அவர் எழுதியதில் அரைவாசியை கூட படித்து முடித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஆறு ஏழு புத்தகங்களைத்தான் சொந்தமாக வைத்திருக்கிறேன் இன்னும் தொடரும். தொடரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அவர் தலைமுறையின் ஈழத்தவர் வாழ்வை படிக்கவேண்டும் அவரை வாசித்து முடிக்கவேண்டும்.

      Delete
  4. இவர் உடல் நலமின்றி இருக்கிறார் என்பதனை இப்போதே அறிகிறேன். அவர் எங்கு பணி நிமிர்த்தம் சென்றாரோ அந்த ஊர் பற்றி ஒரு கதை. அருமையாகத் தருவார்.
    நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நலம்பெற்று திரும்பவேண்டும்.

      Delete
  5. U brought tears in my eyes JK. Some magic in ur writing. I also read some novels of "senkai aliyan" . After reading your this I feel , we should have given some importance. I wish u to Continue ur search.

    ReplyDelete
  6. அம்மாடி.. எத்தினயோ வருசமாச்சு.. இத வாசிச்ச பிறகுதான் யானைய வாசிச்சது ஞாபகம் வருது.. அந்த வாசிப்பில இருந்து ஏதோ ஒரு உணர்வைப் பெற்றது மட்டும் தான் இப்ப ஞாபகம் இருக்கு. மறுபடி அந்த புத்தகத்த வாங்க வேணும். இலங்கை போனா அவற்ற மிச்ச புத்தகம் எல்லாம் வாங்கோணும். மெத்த பெரிய உபகாரம் இத எழுதினதுக்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி. பூபாலசிங்கத்தில் அவரின் நூல்கள் கிடைக்கும்.

      Delete
  7. செங்கை ஆழியானின் மகள் ரேணுகாவிடமிருந்து வந்த மடல்.

    நீங்கள் பதிவு செய்த ஊரோச்சம் 1 இனை உடனடியாகவே எனது தந்தையாருக்கு வாசித்துக் காட்டினேன் . மிகவும் மகிழ்ச்சியுடன் செவிமடுத்தார், அருமையான ஆக்கம் என பதில் எழுதக் கூறினார். பதில் எழுதுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும். பின்னர் ஊரோச்சம் 1 இல் நீங்கள் வினாவிய இறுதி வினாவை வினாவிய போதுதான் என்னால் உணர முடிந்தது எனது தந்தையாரினுள் இவ்வாறான ஒரு ஆற்றாமை அல்லது இயலாமை இருப்பதை. இதை எமக்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றிகள். சம கால நிகழ்வுகளை வைத்து ஒரு மிகப்பெரிய நாவல் கருவாக முழுமையாக உருவாகி விட்டதாகக் கூறினார். ஆனால் அதை எழுத்தில் ஏற்ற முடியாமல் போன வேதனையை வெளியிட்டார். நிறைமாத கர்ப்பிணி பிரசவிக்க முடியாது பிரசவ வேதனையில் துடிதுடிக்கும் வேதனையை உணர முடிந்தது. ஆனால் இந்த வேதனையை எவ்வகையிலும் தீர்க்க முடியாத இயலாமையுடன் அவ்விடத்தை விட்டு அகலத்தான் என்னால் முடிந்தது என்பதே உண்மை. ஆனால் ஒன்றை மட்டும் உணர முடிந்தது இன்றைய நிலையில் கூட எனது தந்தையின் முதல் காதலியான எழுத்தும் , எழுத்தாளர்களுடனான சந்தப்புகளுமே அவரை மகிழ்ச்சிப்படுத்துகின்றது என்பது. அந்த வகையில் அவரை நேரில் சந்தித்து அளவளாவி அவரைப் பற்றி ஆவணமொன்றைப் பதிவு செய்து எனது தந்தையை சந்தோசமடையச் செய்த உங்களுககும் , உங்கள் எழுத்துக்கும் நனறிகள் பல.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...