Skip to main content

ஊரோச்சம் : சோ.ப


sopa

யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம்.

இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன்.

“சோ.ப சேர் இருக்கிறாரா?”

“ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி.

“பொடியள்
வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள்
வெடிகளில் எத்தனை வகை!”

என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும்.

நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடிகளின் மீதான ஆர்வம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? ஒரு சீனன் வெடியின் திரி உஸ்ஸ் என்று பற்றும்போதும் ஏன் அடிவயிறு நெருடுகிறது? அது பேப்பர்த்துண்டுகளைத் துப்பியபடி வெடித்துச்சிதறும்போது எங்கிருந்து ஒரு சிறுவனுக்குப் பரவசம் ஏற்படுகிறது? வெடிகளின் சத்தத்தில் அப்படி என்னதான் ஒரு ஈர்ப்பு? விளையாட்டுப்பொருள் அங்காடியில் பொம்மைத்துப்பாக்கிகளுக்கு என்ன வேலை? சிறுவர்களுக்கு அறிமுகமே செய்யக்கூடாத ஒன்றை எப்படி பொம்மைகளாக விற்பனை செய்கிறோம்? ஒவ்வொரு நல்லூர்த் திருவிழாவுக்கும் துவக்குத்தான் வேண்டும் என்று நான் ஏன் அடம்பிடித்து வாங்கினேன்? அப்பாவும் எப்படி வாங்கிக்கொடுத்தார்?

கவிதை நீள்கிறது. அந்தப்பொங்கலுக்கு மாமா மனமிறங்கி ஆனைவெடிப்பெட்டி ஒன்றை வாங்கிக்கொடுக்கிறார். மருமகனுக்கோ அள்ளுகொள்ளையாய்ச் சந்தோசம்.

“ஓட்டைப்பானைக்குள் ஒரு வெடி
தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு வெடி
அடிவளவில் நிற்கும்
நாவல் மரப்பொந்துக்குள் ஒரு வெடி
கொளுத்தி வேகமாக உயர வீசி
அந்தரத்தில் வெடிக்க வைக்கும்
அற்புதம் மற்றொண்டு”

காட்சி விரிகிறது. சீனன்வெடியின் திரியைப்பற்றவைத்து ஓங்கி உயரமாக வீசினால் பனைமர உயரத்திலே அது வெடித்து அத்தனையும் பறக்கும். அந்தநாளில் ஹெலி எரிகுண்டு வீசினாலும் அப்படித்தான். வானத்திலேயே அது எரியத்தொடங்கிவிடும். சீனன் வெடி வானத்தில் பறந்து வெடித்தால் குட்டி குட்டி பேப்பர் துகள்கள் எல்லாம் ஊரடங்குக்கால நோட்டிஸ் துண்டுகள்போல வெள்ளிச்சிதறல்களாய்ப் பறக்கும். அதைப்பார்த்த பெரியம்மா சொல்லுகிறார்.

“மாபாவி, தேடியதெல்லாம்
ஆகாசமாகப் போகுதடா!”

அவ்வளவுதான். கவிதை முடிபுற்றது. “சோ. ப”வினுடைய “சுவடெச்சம்” கவிதைத்தொகுப்பிலிருக்கும் கவிதை இது.

“சோ. ப” என்று எல்லோராலும் அறியப்பட்ட சோ. பத்மநாதன் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக ஈழத்து அனுபவங்களைச் சுமந்துவருபவர். தன் கவிதைகளாலும் மொழிபெயர்ப்புகளாலும் தமிழ், ஆங்கில இலக்கியப்பரப்பில் காலூன்றி நிற்பவர். மொழிபெயர்ப்பு என்றால் அது “சோ.ப”தான் என்னுமளவுக்கு அவருடைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றவை. இன்றைக்கு மரபுக்கவிதைகளின் சுவடெச்சம் சோ.ப எனலாம். ஓசையும் நயமும் அவர் பேசும்போதே வெளிப்படும்.

“ஓம், வரட்டாம். உள்ளுக்க போங்கோ”

அலுவலக அறையினுள் நுழைகிறேன். கண்ணாடி போட்ட மெல்லிய உருவம். நூல் வேட்டி. முழுக்கைச் சேர்ட். இவர்தான் “சோ. ப”! இதற்கு முன்னர் நான் அவரை நேரில் சந்தித்துப்பேசியதில்லை. ஓரிருமுறை ஆதீனகாலக் கம்பன்கழகக் கவியரங்குகளில் பார்த்திருக்கிறேன். சண்முகநாதன் மிஸ் அடிக்கடி அவருடைய ஆங்கிலக்கவிதைகளைச் சிலாகிப்பதுண்டு. அவருடைய மொழிபெயர்ப்புகளை வாசிக்கச்சொல்வதுண்டு.

“நான் நீயல்ல
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை”

என்கின்ற லைபீரியக்கவிதை சோ.ப மூலமாகவே தமிழில் இறவாவரம் பெற்றுக்கொண்டது. ஆனால் “இதை மொழிபெயர்த்தது உங்கள் ஊர்க்காரர்தான்” என்று சுஜாதா கற்றதும் பெற்றதிலும் எனக்கு சோ.பவை அறிமுகப்படுத்தவேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிலே அவருடைய ஆக்கங்களை வாசித்ததாகவும் ஞாபகம். கண்ணன் அருணாசலத்தினுடைய ஆவணப்படங்களில் பார்த்தும் கேட்டுமிருக்கிறேன். ஆளுமைகளை அவர்களுடைய படைப்புகளினூடு அணுகுவது இலகு. வாசிப்பினூடு பேசுவது எளிது. நேரில் சந்திக்கும்போது என்னத்தைப்பேசுவது? உங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கிறது என்றா? அபத்தமாக இராது? உங்கள் மொழிபெயர்ப்புகள் பிடிக்குமென்றா? சிரிக்கமாட்டாரா?

“சேர் … நான் … ”

“அடடே … வாரும் வாரும் … உம்மளத்தான் பார்த்துக்கொண்டிருந்தன் … எங்கட கொல்லைப்புறத்துக்காதலிகள்...”

சிரித்தபடியே வரவேற்றார். இந்தக்கணத்தை எது கொடுத்தது என்று யோசிக்கிறேன். “சோ. ப” விடம் கொல்லைப்புறத்துக் காதலிகளை கேதா யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது கொடுத்திருக்கிறான். எனக்குச் சொல்லவில்லை. அவரும் வாசித்துவிட்டு பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு பாடம் ஒன்றுக்கு “பங்கர்” அத்தியாயத்தைக் கொடுத்திருக்கிறார். அவரின் மாணவர் ஒருவரின் மூலமே அதுவும் எனக்குத் தெரியவந்தது. சில மாதங்களில் அகிலன்  “சோ.ப சேர் கொடுத்துவிட்டவர்” என்று சொல்லி ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து தந்தான். “சோ.ப 75” என்ற புத்தகம். திறந்துபார்த்தால் அவர் கைப்பட எனக்கென ஒரு வாசகம். மிகப்பேர்சனலானது. இங்கே வேண்டாம். கூஜாவுக்குள் அடைத்துக் கடலில்விட்ட பூதம்போல புத்தகங்கள் எங்கெங்கெல்லாமோ கரையேறியிருக்கின்றன. நானறியாமலேயே யார் யாருடனோ அவை பேசியிருக்கின்றன. தற்செயல்களின் சாத்தியங்களை மீறிப் புள்ளிகளை இணைத்திருக்கின்றன.

நான் ஏதாவது பேசவேண்டும்.

“சண்முகநாதன் மிஸ் உங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறா. குறிப்பாக உங்கட மொழிபெயர்ப்புகளை…”

“சோ.ப” சிரிக்கும்போது கொஞ்சமாகக் கூச்சப்படுவார்.  கண்ணன் ஏனோ அதனைத் தவறவிட்டுவிட்டார்.

Freedom
My daughter is drawing a picture
My son wants it to shine like the sun
My wife prefers a cooling moon
My mother wants a lot of stars on it
My father prefers gathering clouds
I want a never ending sky
But the brush said:
”The choice is mine”

-- Sri Lankan Tamil Poetry, An Anthology

தமிழில் முல்லா முஸ்தபா எழுதியது. மூலக்கவிதையை நான் வாசிக்கவில்லை. மொழி பெயர்த்தது சோ.ப. எனக்கு மொழிபெயர்ப்பே போதும்போலத்தோன்றுகிறது. கவிதையில்தான் எத்தனை தளங்கள். தெரிவு ஓவியரிடம்கூட இல்லை. தூரிகையிடமே உள்ளது. அப்படித்தூரிகை நினைத்துக்கொண்டு முரண்டுபிடிக்கிறது! இன்னும் மேலே சென்றால், இவர்கள் கேட்பது எல்லாமே அண்ணாந்துபார்த்தாலே கிடைத்துவிடக்கூடியது. எதற்குத் தூரிகையிடம்போய் மண்டியிடவேண்டும்?

“புத்தரின் படுகொலை” என்று யாழ் நூலக எரிப்பு சம்பவத்தை ஒட்டி எம். நூஃமான் ஒரு கவிதை எழுதியிருப்பார். அதன் ஒரு பகுதி.

புத்தரின் படுகொலை!

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'

இதற்கு சோ.ப செய்த மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள்.

Last night
I had a dream
Lord Buddha was shot dead
by the police –
guardians of the law.
His body lay drenched in blood
on the step
of the Jaffna Library!
Under cover of darkness
came the ministers
‘His name – not in our lists!
Why did you kill him?’
they ask in anger
‘No, sirs, no!
Without bumping him off
it was impossible
to harm even a fly.
Therefore ….’, they stammered
There was no mistake.
‘Okay, okay!
Hide the corpse.’

இறுதி இரு வரிகளில் கவிதை மீள நிகழ்த்தப்படுகிறது. சொல்லுபவரின் அவசரம், உதாசீனம் எல்லாமே அடிக்கிறதல்லவா. மொழிபெயர்ப்பு மூலத்துக்கு உரம் சேர்க்கும் தருணம் அது.

சோ.ப ஒரு கற்பகதரு. பல ஆண்டுகளாகவே சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் சிறுவர் இல்லம், கைவினை விருத்திச் சங்கம் போன்றவற்றில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். இளங்கலைஞர் மன்றத்தில் செயற்பாட்டாளர். பல்கலைகழக விரிவுரையாளர். மொழிபெயர்ப்பாளர். பக்குவப்பட்ட இலக்கியவாதி என்று வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும்மேலே மனுஷன் பயங்கர ரசிகன். முன்முடிபுகளில்லாமல், விமர்சனநோக்கமில்லாமல் இலக்கியத்தை அணுகும் ரசிகன். யாரையும் கடுகேனும் இழிவுபடுத்திப்பேசமாட்டார். பேசும்போது நமக்கும் அக்குணம் இயல்பாகத் தொற்றிக்கொள்கிறது.

அவருடைய இசையறிவுகூட ஆச்சரியமானது.

“உம்மட இளையராஜா, ரகுமான் பற்றிய கட்டுரைகள் எல்லாம் வாசிச்சன். எனக்கு ரகுமான் அவ்வளவு பிடிபடுறதில்லை. அவர் என்காலத்துக்குப் பிந்திய ஆள் எண்டதால என்று நினைக்கிறன். கர்நாடக சங்கீதத்தில ஆர்வம் இருக்கா?”

“இருக்கு சேர், ஆனாத் தெரியாது”

கொல்லைப்புறத்துக்காதலிகள் நிகழ்வில் ஒரு சில இராகங்களை எடுத்து ஆலாபனை செய்து திரையிசையைத் தொடுத்து சுரஸ்தானம் எல்லாம் கோர்த்து அகிலன் கச்சேரி செய்ததைக் கூறினேன்.

“ஓம், அகிலனைப்பற்றியும் எழுதியிருந்தீர். பூமாலை வாங்கிவந்தாள் பாட்டும் அலைபாயுதே கண்ணாவும் ஒரே ராகம்தான். கானடா. அலைபாயுதே கண்ணாவை ஜேசுதாசும் ஜானகியும் பாடியிருக்கிறினம் தெரியுமே? என்ன படம் எண்டு மறந்துபோனன், இப்பத்தான் யூடியூபில தேடிக் கேக்கலாமே”

எனக்கு அதுவரைக்கும் அது தெரியாது. வீடுபோய்க் கேட்டுப்பார்த்தேன். டிவைன்.

“கர்நாடக சங்கீதம் படிச்சீங்களா? பாடுவீங்களா?”

“படிக்கேல்ல, ஆனால் இது கல்யாணி, இது தோடி என்று கண்டுபிடிப்பன். ஆரோகணம் அவரோகணம் சொல்லு எண்டால் தெரியாது. மரபுக்கவிதைமாதிரி”

“விளங்கேல்ல..”

“பலர் நினைக்கினம், மரபுக்கவிதை எண்டுறது யாப்பிலக்கணம் படித்திட்டு தளைதட்டாமல் சீர்வரிசைப்படுத்தி எழுதுறது என்று. அது அப்படியல்ல. யாப்பிலக்கணம் தெரியாமலேயே மரபுக்கவிதை எழுதலாம். மட்டக்களப்பு கிராமியப்பாட்டு ஒன்று இருக்கு.
‘வாழைப்பழமே - என்ர
வலதுகையின் சக்கரையே,
ஏலம், கராம்பே, உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?’
என்று பாடியவளுக்கு சீர் தெரியுமா? தளை தெரியமா? இயல்பாக விழுகிறதல்லவா? ஆனால் இது கலித்தளை தம்பி. 
‘பூவலைத் தோண்டி
புதுக்குடத்தைத் தான்நிறுத்தி
ஆரம் விழுந்தகிளி
அள்ளுதுகா நல்லதண்ணி’
கவிதையில யாப்பமைதி இருக்கு. சும்மா இல்ல. ஆனால் அது தெரிஞ்சா கமஞ்செய்யிறவன் பாடியிருப்பான்?
கர்நாடக சங்கீதமும் சிலவேளை அப்படித்தான்!”

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. சீதா இராமரின் திருமணத்தைக்காண மொத்த அயோத்தியும் மண்டபத்துக்கு விரைகிறது. வீதிகள் பூராவும் மக்கள் கூட்டம். அதை விவரிக்கும் கம்பனின் பாடல்.

“குரைத்த தேருங் களிறுங் குதிரையும்
நிரைத்த வார்முரசும் நிமிர்ந் தெங்கணும்
இரைத்த பேரொலியால் இடை யாவரும்
உரைத் துணர்ந்திலர் ஊமரின் ஏகினார்”

இது சந்தோசத்தோடு மக்கள் கூடும் கூட்டம். “சோ.ப” இந்த எழுச்சிப்படலத்தை தொண்ணூற்றைந்து யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குப் பயன்படுத்துகிறார்.

“கார் உருண்டன, வான் உருண்டன
கட்டை வண்டிகள் தாம் உருண்டன
பாரடங்கலும் ஓடும் வாகனம்
பயணமாயின பாதை நீளமும்”

“இவ்விரண்டுபேர் சைக்கிள் ஏறுவர்
இயலு மானதற் கதிக மாகவே
ஒவ்வொருத்தரும் சுமைகள் காவினர்
உயிர்கைக் கொண்டுதாம் ஊர்ந்து போயினர்”

“குடுகுடு கிழம் கோலொ டூர்ந்தன
குழந்தைகள் விரல் பற்றி ஊர்ந்தன
நடுநடுங்கி நல் இரவெலாம் ஒரு
நாடிலாதவர் போல ஊர்ந்தனர்”

கம்பருடைய பாதிப்பு. நேரிசைக் கவிதை. கடைசிவரியில் கருப்பொருள் சொல்லும் ஆங்கில இலக்கியக் கவிமரபு. இதுதான் “சோ.ப”.

தேநீர் வந்தது தெரியாமல் பேச்சு நீண்டுகொண்டே போனது. ராஜிவ விஜேசிங்க, ஹீவகே, மார்ட்டின் விக்கிரமசிங்க, மஹாகவி, நுகுமான், கைலாசபதி, புதுவை, கம்பன் கழகக் கவியரங்குகள், செங்கை ஆழியான் என்று பேச்சு எங்கெல்லாமோ தாவியோடிக்கொண்டிருந்தது. ஒரு புள்ளியை எடுத்துக்கொடுத்தாற்போதும். “சோ.ப” அந்த நினைவுகளுக்குள்ளேயே சென்றுவிடுவார். அவருடைய மனம் என்ற மிகப்பெரிய நூலகத்துக்குள் சென்று எனக்குப்பிடித்த புத்தகங்களை இழுத்துப்போட்டுக்கொண்டேயிருந்தேன். அவர் வாசித்துக்கொண்டேயிருந்தார். அற்புதமான கணங்கள். எவ்வளவு அனுபவங்கள், எவ்வளவு ரசனை, எவ்வளவு ஞாபகசக்தி. மஹாகவி கவிதைகளை அள்ளிவீசும்போது கேட்கவேண்டுமே. பொறாமையாய் இருந்தது.

மணியைப்பார்த்தார்.

“தம்பி, பின்னேரம் திருவிழாவுக்கு நேரம்போகுது. ஒருக்கா வீட்டுக்கு வாறீரா? உமக்குச் சில புத்தகங்கள் தரவெண்டு வச்சிருக்கிறன்”

சொல்லிக்கொண்டே ஒரு C90 யில் புறப்படுகிறார். நான் பின்னால் தொடருகிறேன். வேட்டியில், ஒருபக்கம் சற்றுச் சரிந்திருந்து “சோ. ப” வண்டியோட்டும் பாணி எனக்குத் தொண்ணூறுகளை நினைவூட்டியது. C90 பொற்பதி விதியினுள் நுழைந்து உள்ளே ஒரு குச்சொழுங்கை ஒன்றினுள் திரும்புகிறது. அவரைக்கண்டதும் இரண்டு பப்பு வகை நாய்க்குட்டிகள் வாலை ஆட்டிக்கொண்டே வந்தன. குரைக்கவில்லை.  உள்ளேபோய் “பிக்கு சொன்ன கதைகள்", "Sri Lankan Tamil Poetry", "சுவடெச்சம்" என்ற மூன்று புத்தகங்களைப் பரிசாகத் தந்தார்.  தயங்கினேன். நீண்டநேரமாக கேட்கலாமா விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தது.

"சேர் யாழ் நூலக வாசகர் வட்டம் கொல்லைப்புறத்துக்காதலிகள் நூலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நீங்கள் வந்து பேசினால் எனக்குப்பெருமையாக இருக்கும்"

"கேள்விப்பட்டன், எனக்கும் வரவிருப்பந்தான் ஜேகே, ஆனால் அண்டைக்கு ஒரு கொமிட்டி மீட்டிங் இருக்கு, வரேலுமோ தெரியாது"

எனக்கு முகம் வாடிவிட்டது. அவர் மீண்டும் உள்ளே சென்று வேறொரு புத்தகத்தை எடுத்துவந்தார். அது அவருடைய முதல் நூலான "நினைவுச்சுவடுகள்".

"இது என்னட்ட ஒண்டுதான் இருக்கு. நீர் வாசிச்சிட்டு போகமுதல் திருப்பிக்குடுத்துடோணும். ஒருக்கா ஆறுதலாக வந்தீர் என்றால் நிறையப்பேசலாம், இண்டைக்கு கோயிலுக்கு வருவீர்தானே"

"ஒவ்வொருநாளும் வாறனான். நாங்கள் ஒரு போட்டோ எடுப்பமா?"

"இந்தச் செல்பிதானே, எங்க எடும் பார்ப்பம்."

sopaandme

ஒவ்வொரு இலக்கியவாதியும் ஒரு குழந்தைதான். அல்லது குழந்தைகளால்தான் இலக்கியத்தைப் படைக்கவும் முடியுமோ என்னமோ. அவர்கள் அளவுக்குத் தேடல் வேறு எவருக்கு உண்டு? ஹெமிங்வே ஒரு குழந்தையாகவே வாழ்ந்து மறைந்தவன். நம் பாரதிகூடக் குழந்தைதான். எனக்கென்னவோ கண்ணம்மா வேறு யாருமில்லை, அது பாரதியே என்றே தோன்றுகிறது. "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று தன்னைப்பார்த்து யாரேனும் பாடமாட்டார்களோ என்று பாரதி ஏங்கியிருப்பான் அல்லவா. குழந்தை. தனக்குத்தானே பாடிவிட்டது. சமூகத்தை எதிர்கொள்ளும் குழந்தை ஒன்று வெட்கப்பட்டு முகத்தைத்திருப்புகிறது, அல்லது சின்னதாய்ச் சிரிக்கிறது. கைகொட்டுகிறது. மற்றவர் தூங்கும்போது விழித்துக்கொள்கிறது. பகலில் தூங்குகிறது. தன்னை யாரும் கவனிக்காவிட்டால் கோபம் கொள்ளுகிறது.  “சோ.ப” என்ற குழந்தையை நாமெல்லாம் பத்திரமாகப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அன்று முழுதும் சோ.ப ஞாபகமாகவே இருந்தேன். நினைவுச்சுவடுகளை உடனே வாசிக்க ஆரம்பித்தாயிற்று.  அன்றிரவு பத்து மணிக்கு அவரே மீண்டும் தொலைபேசி எடுத்தார். சிறிதுநேரம் பேசினார். மீண்டும் ஆற அமரப்பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நான் நினைவுச்சுவடுகளை வாசித்துக்கொண்டிருந்தது அவருக்குத்தெரிந்திருக்கலாம். நான் கோம்பையன்மணல் சுடுகாட்டிலே சின்னானோடு பேசிக்கொண்டிருந்தது அவருக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.  புத்தகங்கள் வெறும் வெள்ளைத்தாள்களோ அச்செழுத்துக்களோ அல்ல. அவை அவதார் திரைப்படத்து ஐவா பொன்றவை. வார்த்தைகளோடு விவரிக்கமுடியாத தொடர்பாடல் ஒன்றை வாசகர்களோடு அவை பேணுகின்றன. அனிச்சையான உணர்வுகள் அவை. "சோ.ப" வுக்கு நிச்சயம் என் வாசிப்பு உறுத்தியிருக்கும்.

“செத்தவீட்டை நடத்துவது
ஒரு கலை
நடத்துபவரும் ‘கலை’யில் நிற்பார்
அவருடைய அதிகாரம்
“எளிய சாதியள்” மேல்
எளிதில் செல்லும்
இப்படித்தான்
அன்றும்
பொன்னுத்துரை
அதிகாரம் செய்துகொண்டிருந்தார்
கணக்கு தீர்க்கும் கட்டம்
மூப்பன்
நாலு கூட்டம் மேளத்துக்கு
காசு கேட்டான்
வந்தது மூன்று கூட்டந்தான் என்று
வாதாடினார் பொன்னுத்துரை
சூடேறியது
“டேய், உனக்கு என்னைத் தெரியேல்ல!
ராசுக்கோல்
அடிச்சனெண்டா…”
“நயினார் அடிச்சா
நாலு பேருக்குத் தெரியும்
நான் அடிச்சா
உலகமெல்லாம் தெரியும்!”

-- நினைவுச் சுவடுகள்.

ப்ச்… மீண்டும் அந்தக் கடைசி இரு வரிகள்.

ஒரு வாரத்தில் மீண்டும் அவரைச் சந்திக்க மனைவியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கே போய்விட்டேன். வீடு முழுக்கப் புத்தகங்கள். மொழிபெயர்ப்பு முயற்சிகள். கச்சான் சாப்பிடுங்கோ என்று ஒரு பக்கற்றைத் தந்துவிட்டார். தர்ப்பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி பேணிக்குள் போட்டு அவருடைய மனைவி கொண்டுவந்து கொடுத்தார். வெயிலுக்குக் ஐஸாய்க் குளிர்ந்தது. பேச ஆரம்பித்தோம். பேசிக்கொண்டேயிருந்தோம். அவர் பேசினார். நாம் கேட்டோம்.

“தேவிமலர் வாய்சிந்து புன்னகைபன்
னீரள்ளித் தெளிக்க, என்றன்
ஆவியையும் அதுபற்றி அப்பாலுக்
கப்பாலாய்ப் போயிற்றம்மா
ஓவியம், இன்னிசை, நடனம், நாடகமென்
அத்தனையும் ஒன்று சேர்ந்த
காவியமோ இவள் சிரிப்பு?

கவிதை இதுவரையும் சாதாரண தளத்திற்தான் நின்றது. அடுத்த வரி பல்வேறு தளங்களுக்கு மொத்தக்கவிதையையும் கொண்டுசெல்லுகிறது.

காவியமோ இவள் சிரிப்பு? - கலையென்ற
தத்துவத்தின் கடைசிக்கீற்று.

-- வடக்கிருத்தல்

பேச்சு சைவ விருத்திச்சங்கம் பக்கம் திரும்பியது. அவருடைய சிறுவர் இல்லம் எப்படி இயங்குகிறது என்பதுபற்றி விளக்கினார். லண்டன் கோயில் ஒன்று அவர்களின் முயற்சிக்கு உதவுவதைச்சொன்னபோது சந்தோசமாகவிருந்தது. ஆண் பிள்ளைகளுடைய விடுதி எழுபது ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் கறையான் புற்றெடுத்தும் சலாகைகள் உக்கியும் போய்விட்டன. மழைக்காலத்தில் கூரை ஒழுகுகிறது. சிறுவர் இல்லத்துக்கு நிதியுதவி தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். சைவ இல்லத்தில் படித்த மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள். அவர்களுக்கான கற்கை நெறிகள் என்று பலவற்றை விளக்கினார்.

தற்போதைய ஆங்கில வாசிப்புகள் பற்றிப்பேசினோம். லாகிரியை வாசிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சோ.ப ஆங்கிலத்தில் எழுதவேண்டியதன் அவசியம்பற்றிச்சொன்னேன். வாசிக்கவோ, பதிப்பிக்கவோ ஆள் இல்லை என்றார். தன்னுடைய நூல்கள் எல்லாவற்றையும் தானே பதிப்பித்ததாகவும், புத்தகக்கடைகளில் எவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகின என்ற கணக்குக்கூடத் தனக்குத்தெரியாது என்றும் சொன்னார். பணமும் கிடைப்பதில்லை என்றபோது எங்கோ வலித்தது. செங்கை ஆழியான் மனைவியும் இதனையே சொன்னார். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை “விஜிதா யாப்ப” நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எத்தனைபேர் வாங்கி வாசித்திருப்பார்கள் என்று தெரியாது. இப்போதெல்லாம் மழை பெய்தால் கூடவே ஒரு கவிதைப்புத்தக வெளியீடும் கந்தகமழையாய்த் துமிக்கிறது. முத்துலட்சுமி ராகவனும் ரமணிச்சந்திரனும் புத்தகக்கடைகளின் முன் அலுமாரிகளை நிரப்புகிறார்கள். இவற்றுக்கு மத்தியிலே “சோ.ப” வின் புத்தகங்கள் எங்கோ மூலையில் பூச்சிபிடித்துக்கிடப்பது நமக்கு நாமே விதித்துக்கொண்டது. புத்தகக்கடைகளை குற்றஞ்சொல்லி என்ன பயன்?  தவறு வாசகர்களிடமல்லவா உள்ளது. வறுமை. சமூக வறுமை. 

“உங்களுக்குக் கோபம் வருவதில்லையா? விமர்சனங்களை எப்படிப்பார்க்கிறீர்கள்? இலக்கியவெளியில் உள்ள காழ்ப்புணர்வுகள், பகைமைகள் உங்களை அண்டுவதில்லையா?”

“எதுக்கு அண்டவிடோணும்?”

நினைவுச்சுவடுகளில் இருந்த “மகா வாக்கியம்” கவிதையே ஞாபகத்துக்கு வந்தது.

மகாவாக்கியம்

150px-8369அம்மா பரமசாது
யாரோடும்
சண்டைக்குப் போகமாட்டா
சகோதரிகளுக்கிருந்த
நாவன்மை கூட
அம்மாவுக்கு இருந்ததில்லை
அவவுக்கு
ஆரும் பகையில்லை
அயல் அட்டம் எல்லாம்
நல்ல பெயர்

அபூர்வமாக ஒருநாள்
சகோதரியர் இருவர்
உரையாடுவது காதில் விழுந்தது
அம்மாவை
சிலாவிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்
இதே பெண்கள்
முதல்நாள்
அம்மாவோடு
மணிக்கணக்காய் அளவளாவியவர்கள்.

பொறுக்க முடியவில்லை என்னால்
அம்மாவிடம் கேட்டேன்
“உன்னைக் குறை கூறுகினம்
அவையோடை என்ன கதைபேச்சு?”
வழக்கம்போல
சுருக்கமாகவே பேசினா அம்மா
“அவை செய்யிறது அவையோட”

-- நினைவுச் சுவடுகள்

கவிதை கல்லை அப்படியே பிரட்டிப்போடுகிறதல்லவா.

“ஒரு நாவல் எழுதவேண்டும், இதுவரைக்கும் ஆழ இறங்கி எழுதப்படாத பகைப்புலம் ஒன்றிருந்தால் சொல்லுங்களேன்” 

இதற்காகவே காத்திருந்ததுபோலச் சொல்லத்தொடங்கினார். ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். அரைமணிநேரமும் சின்னச் சின்ன தகவல்களைக்கூட விவரித்தார். இனி கதையையும் பாத்திரங்களையும் தீர்மானித்து எழுதுவதுதான் வேலை. எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு விரைவிலேயே எழுத உட்காரவேண்டும். 

விடைபெற்றுக்கொண்டோம். “சோ.ப”வுடன் ஒரு மாதம் தங்கி அவர் பேச கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும் என்று தீராத ஆசை. முதன்முதலாக வயோதிபத்தின்மீது பொறாமை வந்தது. நான் கேட்டறிந்த விடயங்களை இவர் அனுபவித்திருக்கிறார். என்னால் ரசிக்கமுடியாதவற்றைக் கண்டு கேட்டு ரசித்து விவரிக்கிறார். எப்படி முடிகிறது? பெரியவர்கள் நம்மை மேலும் மேலும் சிறியவர்கள் ஆக்கிவிடுகிறார்கள். கொஞ்சமேனும் ஏதோ இருக்கிறதோ என்று எட்டிப்பார்க்கும் குட்டியனின் முளைக்கொம்பு சடக்கென்று உள்ளே இழுத்துக்கொண்டுவிடுகிறது. மேன் மக்கள் மேன் மக்களே.

ஒருவாரம் கழிந்து யாழ் நூலக மண்டபத்தில் “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” அரங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இடைநடுவில் கதவைத்திறந்தபடி  அவர் வருகிறார். அதே வேட்டி, அதே சேர்ட் அரக்கப்பறக்க உள்ளே நுழைகிறது. அவையிலிருந்த மனைவியிடம் “சோ.ப சேர் வந்திட்டார்” என்று உற்சாகமாகக் கண்ணடித்தேன். “தயவுசெய்து பேசோணும்” என்று கேட்டுக்கொள்ள மைக்கை வாங்கினார். நிறையச்சொன்னார். எதுவுமே எனக்குக்கேட்கவில்லை. பாராட்டியதுபோலவும் தோன்றியது. கேட்கவில்லை. ஆனால் “குட்டி” பற்றிப்பேசத்தொடங்கியவர் பேசமுடியாமல் கண் கலங்கி அழத்தொடங்கினார். அவர் பேசாமல் அழுதது செவிப்பறை அதிரக்கேட்டது.

கலையென்ற தத்துவத்தின் கடைசிக்கீற்று அது.


உசாத்துணைகள்
சுவடெச்சம்
நினைவுச் சுவடுகள்
Sri Lankan Tamil Poetry, An Anthology
பிக்கு சொன்ன கதைகள்
http://iam.lk/the-teacher/

Comments

  1. When I was reading I was worrying about his absence to your function. In the last para you changed everything that's your icon anna👍🏻

    ReplyDelete
  2. I figured he was going to attend the function and speak as well. Thats him. Great man.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...