காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன்.
“தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்”
அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம்? குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது? பிறகென்ன? சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது.
“ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள்? என்ன இந்த நேரம்?”
சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை.
“தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”
அண்ணா ஒரு ஜீன்ஸ், டீசேர்ட் போட்ட நவீன சாத்திரியார். யார் யாருக்கு எந்தெந்தக் கிரகம் எந்தெந்த வீட்டில் இருக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவர். கிரக சோதிடம், எண் சோதிடம், குறி கேட்டல், சாயி, கல்கி, அம்மா, அப்பா, மாமா, மாமி என இன்னபிற பகவான்கள், மலையாளக் காண்டம் வாசிப்பு, சிவன், முருகன், வேளாங்கண்ணி, மடு, நயினாதீவு அம்மன், துர்க்கை அம்மன் என்று அத்தனை சமய, ஆன்மீகம் சார்ந்த விடயங்களிலும் நம்பிக்கை வைத்திருப்பவர். நல்லூர்த்திருவிழாவின் வைரவர் மடை உட்பட்ட இருபத்தேழு நாட்களும் வெளிவீதி பிரதட்டை பண்ணுவார். சாதாரணமாக அவருடன் சேர்ந்து எந்தக் கோயிலுக்கும் செல்லமுடியாது. வாசற்கோபுரத்தை நாம் அண்ணாந்து கும்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே அண்ணா தடாலென்று கீழே விழுந்து பிரதட்டை அடிக்க ஆரம்பித்து வடக்கு வீதியில் சத்தி எடுத்த்துக்கொண்டிருப்பார். வயிற்றுவலிக்கு மருந்து “கூற்றாயினவாறு” என்பார். வருடத்தில் சில நாட்கள் தவிர மீதி எல்லா நாட்களும் அவருக்கு ஏதோ ஒரு விரதமோ, கோயில் பூசையோ இருக்கும். முறையான பக்தி மார்க்கமும் நிறைந்த கிரகபலனும் முன்வினைப் பயனும் ஒருசேர்ந்தால் வாழ்வில் ஒருவருக்கு செல்வமும் ஜீவன் முக்தியும் கிடைக்கும் என்பார். நான் பொதுவாக அவருடைய நம்பிக்கைகளோடு சுரண்டுவதில்லை. அவரவர் கணக்கு அவரவர்க்கு.
“சரி அண்ணை. வியாழன் அதுபாட்டுக்கு மாறுது. நமக்கென்ன? இதைச்சொல்லவா விடியவெள்ளன போன் எடுத்தீங்கள்?”
“நானா எடுத்தன்? அம்மாளாச்சி எடுக்க வைக்கிறா. உனக்கு ஏற்கனவே ஏழரைச் சனி நடக்குது. வியாழன் வேற பத்தாம் இடத்துக்குப் போனால் சில்லெடுப்புத்தான். ஆனானப்பட்ட சிவபெருமானே பத்தில வியாழன் இருக்கேக்க பிச்சை எடுத்தவர். ஆரிட்டையும் வாயைக் குடுத்திடாத”
“சிவபெருமானுக்கு ஆரண்ணை சாதகக்குறிப்பு எழுதினது? அவர்தான் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி அல்லோ?”
“இந்த .. இந்த வாயைத்தான் அடக்கிக்கொண்டிரு. கேள்வி கேக்காத. என்ன வேணுமெண்டாலும் நடக்கட்டும். நமக்கென்ன? எல்லாம் அம்மாளாச்சி பார்த்துக்கொள்ளுவா.”
நான் பொதுவாக யாரிடமும் போய் வாயைக்கொடுப்பதில்லை. நானுண்டு என் வேலையுண்டு என்றிருப்பவன். ஆனால் தெருவால் போகிறவர்கள்தான் அடிக்கடி என் வாயைப்பிடித்து இழுத்துத் தனகுவார்கள். கொஞ்சநேரம் ஆவென்று பொறுமை காக்கலாம். ஒருகட்டத்துக்கு மேலே கடித்து வைத்துவிடுவேன். எனக்கோ பல்லெல்லாம் விஷம். அலறித்துடித்துக் கதறிக் கூப்பாடு போட்டுவிடுவார்கள். புற்றுக்குள் கையை விட்டுக் கடிவாங்கினாலும் விட்டவரை விட்டுவிட்டுப் கடித்ததை அடித்துக் கொல்லும் உலகம் இது. அண்ணாவுக்கும் அது நன்றாகவே தெரியும்.
“அப்பரைப்போல வாய்தான் உனக்குப் பிரச்சனை. ஆராவது வலியவந்து தனகினாலும் தலையைக் குனிஞ்சுகொண்டு போயிடு. எட்டரைச்சனியும் பத்தில வியாழனும் ஒரே வீட்டில இருக்கிறது, சூறாவளியும் சுனாமியும் ஒண்டாச் சேர்ந்து வாறதுமாதிரி. மீட்சி இல்ல.”
“வியாழன் அப்பிடி என்னத்தத்தான் செய்யும் அண்ணை?”
அண்ணா சலனமே இல்லாமல் சொன்னார்.
“வேலை போயிடும். கொம்பனியில யாரோடையும் கொழுவிடாத. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இரு. நானும் இருக்கிறன். ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. பலனை மாற்ற முடியாது. ஆனால் இம்பக்டைக் குறைக்கலாம். ஏலுமெண்டா நாலுநாள் லீவு எடுத்து டிக்கட்போட்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு வா. அப்பிடியே ஒரு எட்டு பொன்னாலைக்கு. திரும்பி கொழும்பு வரேக்க தெகிவளை கிருஷ்ணன் கோயிலுக்கும் தலையைக் காட்டு. அப்ப வேற என்ன? நான் பிறகு கதைக்கிறன். பாய்”
அவ்வளவுதான். தொலைபேசி கட்டாகிவிட்டது. சிவனே என்று இருந்தவனுக்கு அதிகாலையில் அழைப்பு எடுத்து எதற்காக இப்படி ஒரு எச்சரிக்கை செய்யவேண்டும்? எனக்கு என்னுடைய நட்சத்திரம் எதுவென்றுகூடச் சரியாகத்தெரியாது. எங்கள் ஊரில் குறி சொல்லுபவர்கள் இப்படித்தான் திடீரென்று படலையடியில் வந்து நின்று ஏதாவது குறி சொல்லிவிட்டு ஒரு தேத்தண்ணியையும் வாங்கிக்குடித்துவிட்டுத் தம்வழியில் போய்விடுவார்கள். இப்போது அந்தத் டிரெண்ட் தொலைபேசிக்குத் தாவிவிட்டதுபோலும். இராசியாவது பலனாவது, வேலையைப் பார்க்கலாம் என்று அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.
இரயிலில் ஏறியதும் வழமைபோல ஒரு புத்தகத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தால் எந்த வரியும் உள்ளே புகமாட்டேன் என்றது. “பத்தில வியாழன், வேலை போயிடும், கொம்பனியில் யாரோடையும் கொழுவிடாத” என்று ரயில் பெட்டியில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் என்னையே திரும்பிப்பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் அட்டைப்படம் உட்பட்ட அத்தனை பக்கங்களும் அதனையே சொல்லின. கல்கியோ, கோகுலமோ தெரியாது, “ராகு என்ன செய்யும்?” என்று சிறுவயதில் வாசித்த ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது. ராகுவை எள்ளி நகையாடிய ஒருத்தனை ராகு எப்படியெல்லாம் சிப்பிலியாட்டினார் என்று போகும் கதை அது. இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது. மேல்பேர்னின் பத்துப்பாகை பனிக்குளிரிலும் சாதுவாக வியர்க்க ஆரம்பித்தது. கிரகபலன் என்பது உண்மைதானோ? யாரையாவது கடித்துக்கிடித்து வைத்துவிடுவேனோ? கடவுளே.
உடனடியாகவே தொலைபேசியில் “பத்தில் குரு” என்று தேட ஆரம்பித்தேன். பழைய கவிதை ஒன்று எட்டிப்பார்த்தது.
“ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும்
ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்
சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்
வன்மை யற்றிட ராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்
மன்னு மா குரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பவே.”
பாட்டாகவே எழுதி வைத்திருக்கிறார்கள் பாவிகள். அண்ணா சொன்னதுபோலவே ஈசனாருக்கு பத்தாம் இடத்திலே குரு இருந்தபோது மண்டையோட்டிலே இரந்துண்டாராம் என்கிறது பாடல். அட இடுகாட்டான் ஈசன் தலையோட்டிலே இரந்துண்பது ஒன்றும் துர்பலன் அல்லவே. இதை ஏன் பாட்டாக எழுதிவைத்திருக்கிறார்கள்? சந்தேகத்தோடு மேலும் தேடினேன்.
'அலக்கணும் இன்பமும்
அணுகும் நாள், அவை
விலக்குவம் என்பது
மெய்யிற்று ஆகுமோ?
இலக்கு முப்புரங்களை
எய்த வில்லியார்,
தலைக் கலத்து, இரந்தது
தவத்தின் பாலதோ?
கம்பராமாயணப் பாடல். துன்பமும் இன்பமும் வருவதை நாம் தடுக்க முடியுமோ? முப்புரங்களையும் எரித்த சிவபெருமானே தலையோட்டில் பிச்சை எடுக்கவில்லையா? அதுவென்ன அவன் தவமிருந்து பெற்ற பலனா? என்கின்றது பொருள் விளக்கம். சிவபெருமானுக்கு பத்தில் வியாழன் இருந்தபோதே, பிரம்மனோடு மல்லுக்கட்டி அவருடைய சிரம் கொய்தி சேட்டை விட்டு பிரம்மகத்தி தோஷத்துக்கு உள்ளானார். அதனால் அவர் கொய்த அந்த மண்டை ஓட்டிலேயே இரந்து உண்ணும் பிச்சாண்டி ஆனார். இது அவருக்கு நிகழ்ந்தது பத்தில் வியாழன் இருந்தபோது. அப்போது அவருக்கு ஏழரைச்சனியும் நடந்துகொண்டிருந்ததா என்பதற்கு ஊர்ஜிதமான தகவல்கள் இல்லை. ஆனால் எனக்கு இரண்டுமே ஒன்றாய் வரப்போகிறது. ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் சிவபெருமான் மண்டையோட்டில் பிச்சை எடுத்துக்கொண்டுபோனார். புலித்தோல் போர்த்து, முடியில் கங்கை பாய்ந்ததில் ரயில் எல்லாம் ஈரமாகி எல்லாமே மெஸ்ஸாகிக்கொண்டிருந்தது. பயம் குளிரைப்போல எங்கெனும் வியாபிக்க கைகளைக் குறுக்கிக்கொண்டேன்.
மனம் தொடர்ச்சியாக அலைபாய்ந்துகொண்டிருந்தது.
வேலை எப்படி எனக்குப் பறிபோகும்? அலுவலகத்தில் நான் ஒரு இன்வின்சிபிள். நானும் என் மனேஜர் பீட்டரும் மிக நெருங்கிய நண்பர்கள். கொம்பனியின் நிதிநிலவரம் உறுதியாக உள்ளது. புரஜெக்டுகள் வரிசையாக காத்துக்கிடக்கின்றன. நான் அதிகமாகப் பேசும் பேர்வழியும் இல்லை. வேலையைத் தந்தால் டிசைன் பண்ணி, ஏனையவர்களின் டாஸ்க்குகளைக் கொடுத்துவிட்டு என்னுடையதோடு குந்திவிடுவேன். இதிலே யாரையும் கடிப்பதற்குச் சந்தர்ப்பம் இல்லை. அப்புறம் எப்படி வேலை போகும்? சான்ஸே இல்லை. எனக்கு மீளவும் நம்பிக்கை வந்தது. வியாழனும் சனியும் தலைகீழாய் நின்றாலும் எதையும் சாதிக்கமுடியாது. கடவுளே இல்லையாம், இதில ராசி என்ன? மண்ணாங்கட்டி என்ன? அப்படியே வேலைபோனாலும் என்னதான் ஆகிவிடப்போகிறது? நாளைக்கு மூன்று வேலை அழைப்பிதழ்கள் லிங்க்டின்னிலே வருகின்றன. பதில் அளித்தால் நேர்முகத்தேர்வு. தொடர்ந்து முயற்சிசெய்தால் இரண்டே வாரங்களில் புதுவேலை கிடைக்கப்போகிறது. மனம் ஒரு சீருக்கு இப்போது வந்தது. எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த ரயில் பயணிகள் எல்லோரும் தத்தமது வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அலுவகத்துக்குப்போனால் எல்லாமே வழமைபோல இயல்பாக இயங்கியது. அண்ணா சொன்ன கணக்குப்படி வியாழன் மாறுவதற்கு இன்னமும் ஒருநாள் இருந்தது. நாளைக்கே ஏதாவது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழுவதற்கு சாத்தியமில்லை. காதிலே ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு நான் புரோகிராமிங்கினுள் மூழ்க ஆரம்பித்தேன். என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்கிற? என்று அருண்மொழி பாட ஆரம்பித்தார். அண்ணாவின் பத்தில வியாழன் புற்றுக்குள் படுத்துவிட்டது.
பதினோரு மணிபோல என்னுடைய டெஸ்க்குக்குப் பீட்டர் வந்தான்.
“Mate you free for a chat?”
இருவரும் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தோம். கதவைச்சாத்திவிட்டுவந்து பெருமூச்சுடன் உட்கார்ந்தான்.
“How are things JK?”
“Cut the chase and get to the point buddy.”
“இப்படியெல்லாம் இனி ஆட்களோட பேசாத. நாசூக்காகப் பழகு” என்று அண்ணா வைட்போர்டில் சத்தம்போடாமல் எழுதிக்கொண்டிருந்தார். நான் சட்டை செய்யவில்லை. எனக்கு மூளைக்குள் எழுதிக்கொண்டிருந்த கோடிங் இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது. நனைந்தபிறகு நாணம் எதற்கு? என்று ஜானகி விட்டகுறையத் தொடரவேண்டும்.
பீட்டர் சிறு தயக்கத்துக்குப்பின்னர் சொன்னான்.
“Alright ... I am resigning”
லப்டொப்பில் நீலத்திரை வந்ததுபோல எல்லாமே ஸ்தம்பித்தது. என்னது? பீட்டர் விலகுகிறானா? சீரணிக்கவே முடியவில்லை. ஐந்து வருடங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். பீட்டர் எனக்கு முன்னரேயே அங்கே இணைந்தவன். டெக்னோலஜியை நானும் மனேஜ்மெண்டை அவனும் கவனித்துக்கொண்டிருந்தோம். இப்போது அவன் விலகுகிறான் என்றால் இந்தச் சமநிலைக்கு என்னாகும் என்று என்னால் யோசிக்க இயலவில்லை. பீட்டருடன் நீண்டநேரம் அவனுடைய புதுவேலை மாறும் கதையைக் கேட்டுவிட்டு மீண்டும் என் இடத்துக்கு வந்தேன். ப்ரோகிராமிங் நகரவேயில்லை. ஹெட்செட்டில் “பத்தில வியாழன், வேலை போயிடும், கொம்பனியில் யாரோடையும் கொழுவிடாத” என்று அண்ணாவின் அசரீரி திடீரென்று கேட்க ஆரம்பித்தது. பீட்டர் போனால் என்ன? வேறு ஒரு மனேஜர் வரப்போகிறார். நான், என் புரோகிராமிங் என்று அலுவலகத்துக்குள்ளேயே தனிக்குடித்தனம் பண்ணுபவன். ஒரு சிக்கலும் இல்லை என்று வேலையைப்பார்க்க ஆரம்பித்தாலும் ஏதோ எங்கேயோ நெருடியது.
அண்ணா எதற்காகக் காலையிலேயே தோலைபேசி எடுக்கவேண்டும்?
மதியம் மூன்றுமணிபோல பீட்டரின் மேலதிகாரி எம்மிருவரையும் ஒரு மீட்டிங்குக்கு அழைப்பு விடுத்தார். பீட்டர் விலகுவது பற்றித் தெரிவித்து என்னை இனிமேல் பீட்டருடைய பொறுப்பையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். பீட்டரும் அதனையே வலியுறுத்தினான். நான் யோசிக்கவேண்டும் என்றேன். வேலை அதன்பின்னர் ஓடவில்லை. ஐந்துமணிக்கே கிளம்பிவிட்டேன்.
இரயிலில் செல்லும்போது யோசனை வேலை பற்றியே இருந்தது. முகாமைத்துவத் துறை எனக்குரியதில்லை. அதனை நான் எப்போதுமே ரசித்துச் செய்யப்போவதில்லை. முதலில் எனக்கு மனிதர்கள் என்றாலே ஆகாது. அட்ஜஸ்ட் பண்ணிப்போகத் தெரியாது. ஒரு வேலையை நேர்த்தியாகச் செய்யாவிட்டால் அவர்களை நான் புழுவைப்போல டிரீட் பண்ணுவேன். ஒவ்வொருவரையும் அவரவர் குணங்களுக்கமைய, திறமைக்கமைய முகாமைத்துவம் செய்யவேண்டும். எனக்கு அது சுட்டுப்போட்டாலும் வராது. எனக்குத்தெரிந்தது எல்லாமே கதை எழுதுவது. நாளுக்கு ஒன்பது மணிநேரம் கணணிமொழியில் புரோகிராம் எழுதுவதும் கிட்டத்தட்ட கதை, கட்டுரை எழுதுவது போன்றதுதான். மொழிதான் வேறே ஒழிய புரோகிராமிங் கொடுக்கின்ற அற்புத தருணங்கள் எழுத்து கொடுக்கும் இன்பத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல. ஒரு சிக்கலைத் தீர்க்கும்போது கிடைக்கும் திருப்தி மிக அலாதியானது. ஒரு நேர்த்தியான அல்கோரிதம் எழுதிமுடிக்கையில் கிடைக்கும் பெருமிதம் ஒரு நாவல் அனுபவத்துக்கு இணையானது. காதிலே கார்த்திக் ஐயர் வயலினைக் கேட்டபடி, கால்களை ஆட்டியபடியே நம்முடைய இன்செப்ஷன் உலகத்தில் புரோகிராம் மொழியினூடே கிளாசுகளோடும் ஒப்ஜெக்டுகளோடும் நிம்மதியாக உரையாடிக்கொண்டிருக்கலாம். கந்தசாமியும் கலக்சியும் நாவலில் எலிதாசர்கள் செய்ததுபோல, புரோகிராமிங் கோடுகளை நகமும் சதையும் கொண்ட மனிதர்களாகவே உருவகிக்கலாம். அவர்கள் தவறு செய்தால் பிக்ஸ் பண்ணலாம். மாற்றியமைக்கலாம். தீர்க்கவேமுடியாது என்றால் கொன்றுவிட்டு மீள உருவாக்கலாம். நிஜத்தில், நிஜமான மனிதர்களோடு அதனைச் செய்யமுடியாது. நிஜ உலகின் மோசமான மனிதர்களை என்னால் மேய்க்கமுடியாது. புரோகிராமிங் என்பது இன்ட்ரோவேர்ட்டுகளுக்கென்றே உருவாக்கப்பட்ட துறை. அதிலிருந்து விலகி வாழ்க்கையை எதற்கு நரகமாக்குவான்? இரண்டு நாள் கூடத்தாங்கமாட்டேன்.
அடுத்தநாள் அலுவலகத்தில் எனக்கு பீட்டரின் பதவியில் ஆர்வம் இல்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டேன். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் புரிந்துகொண்டார்கள். நீ உன்னிஷ்டப்படியே வேலை செய் என்றார்கள். நாம் புதிதாக ஒரு மானேஜரைத் தேடுகிறோம் என்றார்கள். எல்லாமே நன்றாகப்போனது. பத்தில் வியாழன் வருகைதந்த சமயம் என்னுடைய பார்த்தசாரதி தேரினைப் நிலத்தினுள் அழுத்தியிருக்கவேண்டும். தலைக்கு வந்த பிரம்மாஸ்திரம் தலைப்பாகையோடு போய்விட்டது. மீண்டும் பழையபடி “சொர்க்கத்தின் வாசற்படி”. ஆழ்ந்துபோனேன்.
சொன்னபடியே அலுவகத்தில் இரண்டே வாரங்களில் பீட்டரின் இடத்திற்குப் புதிதாக ஒருவரை நியமித்தார்கள்.
பெயர் ஹேமமாலினி நாயர்.
ஹேமமாலினிக்கு நாற்பது வயது. சுருக்கமாக ஹேமா. பூனே, நியூஜேர்சி, லண்டன் என்றெல்லாம் வேலைசெய்து ஈற்றில் மெல்பேர்னில் கரையேறியவர். முன்னைய நிறுவனங்களில் அவரை தலையில் வைத்துக் கொண்டாடினார்களாம். ஹேமமாலினிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தமகனுக்கு பன்னிரண்டு வயது ஆகிறது. வேதாந்த். அவனுக்கு டெனிஸ் பிடிக்கும். இரண்டாவது மகள். பத்துவயது. ரேணு. அவளுக்குச் சீஸ் கேக் என்றால் போதும். மூன்றாவது மகன் ராகுல். மூன்று வயது. ராகுல் படு சுட்டி. இரவு மூன்றுமணிக்கு அவன் எழுந்து அழுதால் ஹேமா அடுத்தநாள் மீட்டிங்கிற்குத் தாமதமாகவே வருவார். வரும்போது ராகுலை டார்னிட்டில் ஒரு சைல்ட்கெயாரில் விட்டுவிட்டே வரவேண்டும். திங்கள் செவ்வாய்களில் ஹேமா ராகுலை சென்று கூட்டவேண்டும். மீதித் தினங்களில் நாயர் அதனைச் செய்துகொள்வார். கிறிஸ்மஸ் விடுமுறைக்கு எல்லோரும் திருவனந்தபுரம் போகிறார்கள். ஆழப்புழாவில் அவர்களுக்கு மூன்று தென்னம் வளவுகள் உண்டு. வேதாந்துக்குப் தாய்வழிப் பாட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அவன் இந்தியாவைவிட்டுத் திரும்பிவரவே மாட்டேன் என்று ஒவ்வொருவருடமும் அடம்பிடிப்பானாம். ஹேமாவுக்கு அவருடைய கணவர் நாயரும் ஒரு குழந்தைதான். அவர் எதையும் ஒழுங்காகச் செய்யமாட்டாராம். ஹெமாதான் பாவம், எல்லாவற்றையும் சொல்லி, சமயத்தில் செய்துங்காட்டித் திருத்தவேண்டும். ஹேமாவுக்கு அவருக்கு கீழே வேலை செய்பவர்களும் குழந்தைகள்போலத்தான். எல்லோரையுங் கண்ணுங்கருத்துமாக.
“Cut the crap.”
கர்ணன் தன்னுடைய சபதத்தைமீறி மீண்டும் பிரம்மாஸ்திரத்தை எய்திருக்கவேண்டும். என்னால் தாங்கவே முடியவில்லை. பின்னர் என்னதான் செய்வதாம்? ஒவ்வொருமுறையும் மீட்டிங்கின்போது புரஜெக்டரில் கணணியை இணைக்கும் குறுகிய வேளைக்குள் தன்னுடைய குடும்பம் பற்றியே கதை. மீட்டிங் தாமதமானால் தொலைபேசியில் மூன்று பிளஸ் அந்த நாயர், மொத்தமாக நான்கு குழந்தைகளின் படங்கள். அவர்கள் கடலில் குளிப்பது முதற்கொண்டு சிவாவிஷ்ணு கோயிலில் செருப்புக் கழட்டுவதுவரை படம் படமாகக் காட்டிச் சொல்லிக்கொண்டிருந்தால் எவரால் தாங்கமுடியும்? பத்தில வியாழன் நேரே என்னுடைய நாக்கிலேயே விமானத்தை இறக்கிவிட்டது. கட்டுப்படுத்தமுடியவில்லை. அப்போதுங்கூட நான் மெதுவாகத்தான் சொன்னேன். வியாழன் அம்பிளிபை பண்ணிவிட்டது. ஹேமாவுக்கு நான் சொன்னது கேட்டிருக்கவேண்டும்.
“Beg you a pardon JK?”
இப்போது வியாழன் நர்த்தனமே ஆட ஆரம்பித்துவிட்டது.
“I honestly don’t care what you do outside of this building. All I care is work. So just get to the point Hema.”
ஹேமா இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. நிச்சயம் நாயர் தன்னுடைய வாழ்நாளில் ஹேமாவை எதிர்த்து சிறு டெசிபல்கூடக் குரல் எழுப்பிப் பேசியிருக்கமாட்டார். மீட்டிங் ரூமிலே, எல்லோருக்கும் முன்னாலே நான் அப்படிச் சொன்னபோது ஹேமாவின் முகம் வெளிறிப்போனது.
“Sorry, I didn’t mean to … Excuse me”
அவர் அழுதுகொண்டே வெளியேறினார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அலுவலகத்தில் ஒரு ஆண் அழுதால் அவன் ஒரு அலுக்கோசு என்பார்கள். பெண் அழுதால் அவளை அழவைத்தவனை அலுக்கோசுவைக்கொண்டு தூக்கில் போட்டுவிடுவார்கள். ஆனால் ஹேமா வெளியேறியதும் மொத்த மீட்டிங்ரூமே வெடிச்சிரிப்புச் சிரித்தது. நெட்டாலியா எழுந்துவந்து என்னை ஹக் பண்ணினாள். ஜிம் ஹைபை கொடுத்தான். எல்லோரும் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தது, நான் பூனைக்கு மணியைக் கட்டிவிட்டேன். கொஞ்சம் பெருமிதமாகவும் இருந்தது.
அண்ணா திடீரென்று புரஜெக்டர் ஸ்க்ரீனில் தோன்றினார்.
“தம்பி, உன்னை ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கிறாங்கள். நாளைக்கு அவனவன் ஒன்றுமே நடக்காததுபோல ஹேமாவுடன் பழகுவான். நீதான் தனிச்சிடுவாய். பார்த்தியா பத்தில வியாழன் வேலையைக் காட்டுது”
எனக்கு டிக் என்றது. வியாழன் உண்மையிலேயே நாக்கில் ஏறிவிட்டதா என்ன? நாக்கைக் கடித்துப் பார்த்தேன். வலித்தது. அன்று முழுதும் சஞ்சலமாகவே இருந்தது. என் மேல் விழுந்த மழைத்துளியே பாடலே கசத்தது. வேலை முடியும் நேரம் ஹேமாவிடம் நேரே சென்றேன்.
“Apologies if I hurt you. I meant no offence.”
பொய்தான் சொன்னேன். பதிலுக்கு அவரும் பொய் சொன்னார்.
“That’s alright, My apologies if I made you uncomfortable. I shouldn’t have …”
இருவருக்கும் பொய் பிடித்திருக்கவேண்டும். உள்ளே கறுவிக்கொண்டே சிரித்தோம். அன்று மாலை வீடு திரும்புகையில் இரயிலில் அவசர அவசரமாக லிங்க்டின்னுக்குச் சென்றேன். கடந்த ஐந்தாறு நாட்களில் பத்துப் பதினைந்து தொழில் முகவர்கள் மெயில் அனுப்பியிருந்தார்கள். எனக்கேற்ற ஒன்றிரண்டு மெயில்களுக்கு “Interested” என்று பதில் அனுப்பினேன். இரயிலால் இறங்கி காருக்கு நடந்து போவதற்குள் ஒருவர் கோல் எடுத்தார். பேசினோம். அது ஒரு மனிதரை மெய்க்கும் லீடர்ஷிப் ரோல் போலத்தெரிந்தது. மறுத்துவிட்டேன். காரில் சென்றுகொண்டிருக்கும்போது புளூடூத் அலறியது. இம்முறை வேறொருவர். நாம் நிச்சயம் சந்தித்துப்பேசவேண்டும் என்றார். சரி என்றேன். அடுத்தநாளே சந்திக்கலாம் என்றார். தயங்கியபடியே சம்மதித்தேன்.
அடுத்தநாள் அலுவலகத்தில் ஹேமா எதுவுமே நடைபெறாதமாதிரிப் பழகினார். ஒரு சின்ன வித்தியாசம். நாலு குழந்தைகளின் பேச்சே எடுக்கவில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் சொறி சொன்னார். ஹேமாவா இது? ஆச்சரியம் தாளவில்லை. என்பாட்டுக்கு வேலை செய்ய ஆரம்பித்தேன். “லக்கி லக்கி, நீயும் லக்கி. லவ் பண்ணத் தெரிஞ்சா நீ லக்கி”. மதியம் முகவரைச் சந்தித்தேன். நிறைய விடயங்களைப்பேசினோம். நாளுக்கு ஒன்பது மணித்தியாலங்களுக்கும் அதிகமாகச் செய்யும் வேலை. பிடித்தமானதாக இருக்கவேண்டும். ரசிச்சு ரசிச்சுச் செய்யவேண்டும். டிசைன் உட்பட்டத் தெரிவுகளில் பூரண சுதந்திரம் வேண்டும். விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன் என்றேன். ஒன்றரை மணிநேரம் கப்புசீனோவை உறிஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தோம். இறுதியில் கைகொடுக்கையில் முகவரின் பிடியில் ஒருரு அழுத்தமான மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்தநாளே முகவர் நேர்முகத்தேர்வு ஒன்றை ஒழுங்குபண்ணினார். இவ்வளவு வேகம் கூடாதோ என்று பல்லி சொன்னது. ஒரு பெண்ணைப் பிடித்துப்போய் காதலிக்கிறேன் என்கிறீர்கள். அவள் என்ன பெயர் என்றுகூட விசாரிக்காமல் ஒகே சொன்னால் எப்படி இருக்கும்? ஏனடா கேட்டோம் என்று இருக்குமா இருக்காதா?
அடுத்தநாள் இன்டர்வியூவுக்குச் சென்றால், வாசலில் இரண்டு நாய்கள் குரைத்தபடியே வரவேற்றன. “They work here” என்றார்கள். வேலைத்தளம் பூராக அவை பந்துகளை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தன. எனக்கு நாய் என்றால் கெட்ட பயம். ஆனாலும் “I just love dogs” என்றேன். “Lucy and Grace” என்றார்கள். இங்கே நாயை நாய் என்று அழைக்கமாட்டார்கள். பெயர் சொல்லியே கூப்பிடவேண்டும். வெள்ளை நாய் லூசி. கறுவல் கிரேஸ். இரண்டுமே பெட்டை நாய்கள்.
நேர்முகத்தேர்வு விரைவிலேயே முடிந்துவிட்டது. அவர்கள் என்னுடைய ஆதி அந்தம் இஞ்சி இடுக்கெல்லாம் விசாரித்துவிட்டே அழைத்திருக்கிறார்கள். நான் எந்தெந்த ஏரியாவில் தேர்ந்தவன், எதெது பிடிக்கும் என்பதெல்லாவற்றையும் சொல்லிவிட்டுச், சரிதானே என்றார்கள். எழுதுவதுக்கூடத் தெரிந்துவைத்திருந்தார்கள். கேள்விகள் எல்லாமே அடிப்படைகள் சார்ந்து, பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அணுகும்முறை சார்ந்து இருந்தது.
இறுதியில் “We will let you be yourself here” என்றார்கள். Win. Win. சிரித்துக் கைகொடுத்துவிட்டு என் அலுவலகத்துக்கு அவசரமாக ஓடினேன். உள்ளே நுழையும் முன்னமேயே அந்த முகவர் மீண்டும் அழைப்பு எடுத்தார். புது நிறுவனம் என்னில் ஆர்வமாக உள்ளதாகச் சொன்னார். சம்பளம் பேசினோம். எனக்கு சிறு அவகாசம் வேண்டும். வார இறுதி கழிந்து திங்கள் சொல்வதாகச் சொன்னேன். “Absolutely” என்றார்.
மணித்துளிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன. வேலையும் காதலும் ஒன்றுதான். உள்ளூறப் பிடித்துபோய்விட்டால் பின்னர் எல்லாமே நல்லதாகவே தெரியும். எல்லாமே நன்மைக்கு என்று எண்ணினேன். பத்தில வியாழன் மேற்கில் விதைத்து கிழக்கினில் உதிக்கவைக்கும் என்று தோன்றியது. ஈசன்கூட சாதாரண திருவோட்டிலே எடுத்ததைவிட பிரம்மனுடைய மண்டையிலே நிறையப் பிச்சை வாங்கியிருக்கலாம். எனக்கு அந்தப் புதுநிறுவனத்தில் கிடைத்த ஒருவித எழுந்தமானம் பிடித்திருந்தது. இயல்பாகப் பழகின மனிதர்கள் பிடித்துப்போனது. பிடித்தவேலையைச் செய்யவிடுவார்கள் என்று தோன்றியது. என்ன ஒன்று. அந்த நாய்கள். ஊரிலே பெட்டைநாய்கள் என்றாலே எனக்குப் புழுத்தபயம். ஒருமுறை ஒரு பிள்ளைத்தாய்ச்சி நாய்க்கு அருகாலே சைக்கிளில் செல்லும்போது அது கடிக்கவந்துவிட்டது. ஆனால் லூசியும் கிரேசும் அப்படியல்ல. இவை நன்றாகப் பழக்கப்பட்ட நாய்கள். ஒப்ரேஷனும் செய்திருப்பார்கள். சிக்கல் இல்லை என்று தோன்றியது. இனியெல்லாம் சுகமே என்று லூசியோடும் கிரேஸோடும் டூயட் பாடாத குறை. ஒன்றிரண்டு பேரிடம் அறிவுரை கேட்டேன். நான் எல்லாவற்றையும் நல்லதாகவே சொன்னதால் அவர்களும் மாறு என்றார்கள். “அதுதான் நீங்கள் முடிவு செஞ்சிட்டீங்களே, பிறகெதுக்கு என்னட்டக் கேக்கிறீங்க?” என்றாள் மனைவி. அவள் அப்படித்தான்.
திங்கட்கிழமை காலையே முகவரை அழைத்து புதுவேலைக்கு ஒப்புக்கொண்டேன். அலுவலகத்தில் தயங்கித் தயங்கிச் என் முடிவைச் சொன்னபோது பெரும் கிளைமோரே வெடித்தது. ஓரிரு வார இடைவெளிகளிலேயே என்னையும் பீட்டரையும் இழக்க நிறுவனம் தயாராகவிருக்கவில்லை. அன்று முழுதும் ஹேமா, ஹேமாவின் ஹேமா, ஹேமாவின் ஹேமாவின் ஹேமா என்று மாறி மாறி மீட்டிங் ஒழுங்கு பண்ணினார்கள். கவுண்டர் ஒபர் பண்ணினார்கள். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டு மறுத்தேன். ரதம். கதம். வேலையை இராஜினமாப் பண்ணிவிட்டேன். பத்தில வியாழன் பதியைவிட்டு கிளப்பிவிட்டது.
அன்றைக்கு மாலை வீடு திரும்பும்போது அண்ணாவுக்கு இந்தத்தகவலை சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவர் சொன்னபடி எல்லாமே நிகழ்ந்ததே. வேலை போய்விட்டதே.
அண்ணாவுக்குக் கோல் பண்ணினேன்.
“ஹாய் அண்ணா”
“என்ன விஷயம்?”
“நீங்க அண்டைக்கு எனக்கு பத்தில வியாழன், வேலை போயிடும் எண்டு சொன்னிங்களல்லோ?”
“ஓ அதுவா ... நானே உனக்கு எடுக்கோணும் எண்டு நினைச்சனான். பிஸில மறந்துபோனன்”
“அது பரவாயில்லை அண்..”
“நீ ஒண்டுக்கும் யோசியாத, நான்தான் பிழையாப் பாத்திட்டன்”
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“என்ன சொல்லுறீங்கள்? பிழையாப் பாத்திட்டிங்களா?”
“ஓமடா, நான் நீ தனுசு ராசி எண்டு மாறி நினைச்சிட்டன். பிறகுதான் குறிப்பைப் பார்த்தா, நீ உண்மையில துலா ராசி.. துலா ராசிக்காரருக்கு பன்னிரண்டிலதான் வியாழன் ..”
“பன்னிரண்டில வியாழனா?”
“பன்னிரண்டில வியாழன் எண்டா வேலைக்கு ஒண்டும் நடக்காது. இருக்கிற வேலைலயே உனக்கு நிறைய புரமோஷன் கிடைக்கும் .. ஒண்டுக்கும் கவலைப்படாத ... ஆறாம் பாவத்தால மேலதிகாரிகளோடு நெருக்கமும் இன்கிரிமெண்டும் கிடைக்கும்”
“அண்ணோய்...”
“வேற வேலை வந்தாலும் மாறிக்கீறி விட்டிடாத. அங்கேயே இரு. எங்கேயோ போயிடுவாய். வேற என்ன? நான் பிறகு கதைக்கிறன்”
கட்டாகிவிட்டது.
************ முற்றும் ************
இனி எப்ப பத்துக்கு வியாழன் விசிட் பண்ணுவார் என்று இப்பவே கேட்டு வையுங்கோ .....ஒரு முன்னேச்சரிக்கையாக ....
ReplyDeleteஹா ஹா... கஷ்டம் தான் பாஸ்.. சும்மா இருந்தாலும் சாத்திரம், பலன் என்று சொல்லி எங்களையும் அப்படியே எல்லாத்துக்கும் யோசிக்க வைச்சிடுவாங்க..
ReplyDeleteHa ah! Real nice one. நீங்க வேல மாறுன கத இது தானா? என்ன பாஸ் Sai Global ல CEO ஆகிற chance இப்படி விட்டுடீங்க. சரி விடுங்க உங்களால் புது company பெருமை கொள்ளட்டும்.. வெற்றி நிச்சயம்
ReplyDeleteSorry boss just realised if it is confidential discard that earlier comment. Lucky you have moderator.
ReplyDeleteonce again love it and can't predict its just q story or real ? Is it true brother . about Peter you have mentioned in other stories as well. Today I read your Jaffna displacement post . I was 10 that time and still it hurts me . Thanks for al keep writing god blESS you.
ReplyDeleteரசித்தேன். வாய் விட்டுச்சிரித்தேன். எவரும் விதியிலிருந்து தப்ப முடியாது என்பதையே தங்கள் கதை புலப்படுத்துகிறது. வாழ்த்துக்கள். எல்லாம் கடந்து போகும். அன்புடன் முருகபூபதி
ReplyDelete
ReplyDeleteஎத்தனையை பார்த்திட்டோம் .......
பத்தில வியாழன் பதியை விட்டு தூக்கும் என்று எத்தனை தரம் இடம்பெயர்ந்திருப்போம்.......
சந்தடி சாக்கில் பெர்த்தில் இருந்து தான் இப்படி பட்ட ஆட்களின் போன் வரும் என்று சொல்லுறீங்க