இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள்.
“சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
“ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”
எங்கள் அலுவலகத்தில் சொந்த நாய்களை மட்டுமில்லாமல் பக்கத்துவீட்டு, சொந்தக்கார, தெரிந்தவர், தெரு நாய்களையும் அழைத்துவந்து உலாவவிடலாம் என்ற விடயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெற்ரா கழுதை சைஸில் இருந்தாள். நான் கோப்பி மெசினில் கொட்டைகளைப் போட்டு அரைத்துக்கொண்டிருக்கையில் பின்புறமாக வந்து முதுகுத்தண்டில் ‘டொக்’கென்று மூக்கால் முண்டினாள். யாரடா என்று திரும்பினால் நாக்கைத் தொங்கப்போட்டபடி நின்றாள். தண்ணீர் விடாய்த்திருக்கவேண்டும். ஒரு கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். மூசி மூசிக் குடித்துவிட்டு மீண்டும் தொங்கப்போட்டாள். மீண்டும் கிண்ணியில் நிரப்பிக்கொடுத்தேன். குடித்தாள். அவளுக்குப் போதவில்லை. அலுவலகத்தில் ஹீட்டர் போட்டிருந்ததோ என்னவோ, தொண்டை வறட்டியிருக்கவேண்டும். நான்கு தடவை நாக்கைத்தொங்கப்போட்டுத் தண்ணீர் வாங்கிக்குடித்தாள்.
அவ்வளவுதான்.
பெட்றா நாள் முழுக்க எனக்குப்பின்னாலேயே திரிய ஆரம்பித்தாள். என்னருகேயே நின்று பெயார் புரோகிராமிங் செய்தாள். நான் என்னுடைய டெஸ்க்கில் இருக்கும்போது மிகக் கவனமாக என்னருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த பேப்பர், டிஸ்ஸியூ எல்லாவற்றையும் வெளியே இழுத்துப்போட்டாள். நான் பாத்ரூம் போனால் என் பின்னாலேயே தொடர்ந்துவந்து வாசலில் படுத்துக்கிடப்பாள். திரும்பும்போது இன்னுமொரு கிண்ணி தண்ணீர் வாங்கிக்கொடுப்பாள். மதியம் நான் சலட் சாப்பிடும்போது ஒரு ரொக்கட் இலையை அவளுக்குத் தூக்கிப்போட்டேன். நன்னிப்பார்த்துவிட்டு பக்கத்து வியற்நாமியின் மீன் வாசத்துக்கு எடுபட்டுப்போய்விட்டாள். மதியத்துக்கு மேலே நான் ஒரு பீன் பையினுள் புதைந்திருந்து மடிக்கணினியை நோண்டிக்கொண்டிருக்கையில் அவள் என் மொட்டைத்தலையில் பேன் பார்த்தாள். ஓரளவுக்குமேலே அவளைப்பற்றிய எண்ணத்தை மறந்து வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.
காதில் இளையராஜா.
‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’
கொஞ்சநேரத்தில் கெட்ட நாத்தம் ஒன்று மூக்கில் அடித்தது. கஸ்தூரியார் ரோட்டு முட்டுச்சந்திகளில் அடிக்கும் நாத்தம் அது. நாய் மூத்திரம். இந்த அலுவலகத்தில் நான் அறிந்துகொண்ட முக்கியமான விடயம் இதுதான். உலகம் முழுதும் நாய் மூத்திரத்தின் நாற்றம் ஒன்றுதான். எனக்குக் கொஞ்சம்தள்ளி இருந்த வைட்போர்ட் அடியில் பெற்ரா பெய்ஞ்சு வைத்திருந்தது. அது பெற்ராவின் வேலையா அல்லது அலுவலகத்தின் நிரந்தர நாய்களான லூசி, கிரேசி, டேர்போ, பக், டேவ், இதுகளின் ஒன்றின் வேலையா என்று எனக்குத்தெரியவில்லை. பெற்ரா புதிது என்பதால் அதன் வேலையாகவே இருக்கலாம். நான் போய் நாயைக்கூட்டிவந்ததிடம் ‘பெற்ரா பெய்து வைத்திருக்கிறது’ என்பதைச் சொன்னேன்.
‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அவள் பெற்ராவைத் தடவிக்கொடுத்துவிட்டு அது பெய்துவைத்திருந்த இடத்தைத் துடைத்துக் கழுவிவிட்டாள். அதன்பிறகும் பெற்ரா என்னருகே வந்திருந்து பேன் பார்த்தது. பெய்த நாயைப் பக்கத்தில் விட எனக்கு இப்போது இஷ்டமில்லை. அது பெரிய கிளியோபெற்ராவாகவே இருக்கட்டும். இப்போது எனக்கு அதன் மூத்திர நாற்றமே மூக்கில் அடித்துக்கொண்டிருந்தது. ‘ஓடு நாயே’ என்று விரட்டினேன். அது வேண்டுமானால் என்னைக்கடித்துவிட்டிருக்கலாம். ஒரே கடிதான். யாழ்ப்பாணப் பனங்கொட்டைத்தலையை சுவைத்திருக்கமுடியும். ஆனால் இந்த ஊரின் இராசி அப்படி. நாய் என்றால் கடிக்காது. அன்னாசி இனிக்காது. பாரை மீன் குழம்பு பச்சைத்தண்ணியாக இருக்கும். பச்சை மிளகாய் உறைக்காது. சரி விடுவோம். என்னுடைய தொடர்ச்சியான புறக்கணிப்பாலோ என்னவோ, ஜீலியஸ் சீசருக்குப்பிறகு மார்க் அன்ரனியைக் கவிழ்த்ததுபோல பெற்ரா இப்போது அந்த மீன் சாப்பிட்ட வியற்நாமியிடம் போய்ப் பேன் பார்த்தது. பெற்ராக்களின் இயல்பே இதுதான். ஐந்தே நிமிடங்களில் வியற்நாமி எழுந்துப்போகவும், மீண்டும் ‘ஓ நோட்டி பெற்ரா’ என்று அந்தப்பெண் ஓடிப்போகவும், எனக்கென்றால் அப்படி ஒரு புளுகம். போனஸாக இம்முறை மார்க் அன்ரனியின் கால்களிலேயே பெற்ரா பெய்துவிட்டது.
சற்று நேரத்தில் அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரு ஈமெயில் வந்தது.
‘தயவுசெய்து நாய்களுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுக்கவேண்டாம்’
எனக்குக் கடுப்பாக இருந்தது. உனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா?
நான்கு மணிக்கு நான் இன்னொரு கோப்பி ஊற்றலாம் என்று போனேன். பெற்ரா வந்தது. இம்முறை அது என் முதுகை முண்டவில்லை. நாக்கைத் தொங்கப்போடவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டு மீண்டும் கிண்ணியில் தண்ணி வார்த்து வைத்தேன். அதற்குக் குடிக்க மனமில்லை. ஆனால் தண்ணி கிடைக்கிறதே என்று குடித்துவைத்தது. மீள நிரப்பிவிட்டேன். அரைவாசியைக்குடித்துவிட்டு ஓடிவிட்டது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு என் பீன் பாக்குக்குத் திரும்பினேன். பெற்ராவின் சிலமனைக் காணவில்லை. பொதுவாக அலுவலகத்து நாய்கள் என்னை அண்டுவதில்லை. அவை வந்த முதல்நாள் நட்பு பாராட்டுவேன். பெயர் சொல்லி அழைப்பேன். கியூட் என்பேன். வந்த பின்னேரமே அவைகள் எனக்கு வெறும் நாய்களாகத் தெரியத்தொடங்கிவிடும். நாய்களை நான் வெறுப்பவன் கிடையாது. அதே சமயம் நாய்களை எனக்கு பிடிக்கவும் செய்யாது. யாரோ எங்கோ சொன்னமாதிரி, நாய்களை காதலிக்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன? சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.
ஹெட்போனை காதில் மாட்டி, பாட்டை பிளே பண்ணாமல் இருந்தேன். வெயிட்டிங் … வெயிட்டிங்… வெயிட்டிங்…. யெஸ். குரல் கேட்டுவிட்டது.
‘ஓ நோட்டி பெற்ரா…’
மகிழ்ச்சியில் உடல் குலுங்கி எக்காளத்துடன் தொடர்ந்து வேலை செய்யத்தொடங்கினேன்.
//நாய்களை காதலிக்கவேண்டும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன? சைவம்கூட அன்பே சிவம் என்றுதானே சொல்கிறது.
ReplyDeleteஉனக்குத் துடைக்கவும் கழுவவும் கஷ்டம் என்பதற்காக தவிக்கிற நாய்க்குத் தண்ணீர் கொடுக்காமல் விட முடியுமா?//
மற்றவர்களுக்காக நாய் வளர்த்து பட்ட பாடு இருக்கே ,,,,,,