நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான்.
“உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது”
“என்ன நடந்தது?” என்றேன்.
“வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது”
தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.
“என்ன சொல்லவது என்று தெரியவில்லை … கொஞ்சநாள் கழித்து பியரோடு சந்தித்துப் பேசுவோம்”
அபத்தமாக இருந்தது. அவனை நான் இனிச் சந்திக்க முயற்சி எடுக்கப்போவதில்லை. அவனும் முயலப்போவதில்லை. எப்போதாவது எங்காவது தற்செயலாகச் சந்தித்தால்தான் உண்டு. அது அவனுக்கும் தெரியும்.
“நிச்சயமாக” என்று சொல்லிக்கொண்டே கட்டிப்பிடித்து, கை குலுக்கினான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அந்த நடுக்கத்துக்கு நிறையக்காரணங்கள். அண்மையில்தான் வீட்டு லோன் அவனுக்கு அப்புரூவ் ஆகியிருந்தது. மனைவி பிள்ளைத்தாய்ச்சி. வாகனம் வேறு விபத்தில் சிக்கி ரைட் ஓஃப் ஆகியிருந்தது. அன்றிரவு அவன் வீட்டில் நிலவப்போகும் நிர்சலனம் அப்போதே தாக்க ஆரம்பித்திருந்தது.
பென் பக்கத்து மேசை மரியஸையும் கட்டிப்பிடித்துவிட்டு விறுவிறுவென்று வாசற்கதவை நோக்கி நகர்ந்தான்.
“வா நிஸ்ஸி …எல்லோரிடமும் விடைபெற்றுக்கொள். நாங்கள் போகலாம்…”
எங்கோ சோஃபாவுக்குள் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த நிஸ்ஸியும் எழுந்து நின்று உடலை உதறி, சில மயிர்களைத் தரையில் நீர்த்தது. கெல்லி ஓடிச்சென்று நிஸ்ஸியைத்தூக்கி ‘ஓ நிஸ்ஸி எங்களை விட்டுப்போகாதே’ என்று இறைஞ்சினாள். பின்னர் அதை இறக்கிவிட்டாள். பென்னும் நிஸ்ஸியும் வாசற்கதவை நோக்கிச் சென்றார்கள். கூடவே டேர்போவும் லூஸியும் அவர்களைப் பின் தொடர்ந்தன. டேர்போ எப்போதும் நிஸ்ஸியிடம் விளையாடிக்கொண்டேயிருக்கும். லூஸிக்கு அவன் நக்கற் போடுவதுண்டு. அவன் அவற்றைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிவிட்டுக் கதவைச் சாத்தியபடி வெளியேறினான். நிஸ்ஸி அவனுக்கு முன்னேயே ஓடிவிட்டது.
அவர்கள் போனதும் அலுவலகம் எதுவுமே நிகழாததுபோல மீண்டும் இயங்க ஆரம்பித்தது. இந்த இடத்தில் மூன்று வருடமாக வேலை செய்தவன் இப்போது இல்லை என்பது எவருக்கும் அருட்டவில்லை. மூன்றுவருடமாக எங்களோடு வாலாட்டியபடி சுற்றிச்சுழன்ற ஒரு நாய் இனி இல்லை என்பதை ஏனைய நாய்களும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நாய்களுக்கு எப்போதுமே சக நாய்கள்மீது அக்கறை இருந்ததாகச் சரித்திரமில்லை. கூட இருந்தால் விளையாடும். இல்லாவிட்டால் ஹூ கெயார்ஸ். தமக்குத் தீன் போடும் மனிதர்களுக்கு வாலாட்டி, வித்தை காட்டி, சாகசம் செய்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மாத்திரமே நாய்களுக்கு முக்கியம். நாய்களின் இருப்பும் அதன்வழியே. எப்போது நாய்கள் மனிதர்களைத் திருப்திப்படுத்தத் தவறுகின்றனவோ அப்போது அந்த இடத்தைத் தரித்திரம் பிடித்த பூனைகளும், பன்றிகளும் எடுத்துக்கொள்ளும். அது நாய்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.
டேர்போவும் லூஸியும் மீண்டுமொருமுறை விக்கிரமாதித்தன்போல என்னருகே வந்து நின்று வாலாட்டின. புதினமாக அம்மா நேற்று களி கிண்டித் தந்திருந்தார். நான் இரண்டு சிறு களி உருண்டைகளை அவற்றுக்கு உருட்டிப்போட்டேன். கபக்கென்று அவற்றை வாங்கிக்கொண்டு அவை அப்பால் சென்றன. சப்பிப்பார்த்து முடியாமல் எங்காவது கொண்டு சென்று கக்கித் தொலையட்டும்.
000
இன்று காலை எலார்ம் அடிக்கமுதலேயே தூக்கம் நாலரையளவில் கலைந்துவிட்டது. மழை பெய்துகொண்டிருந்தது. அலுவலகமும் மனிதர்களும் நாய்களும் இன்னமும் புத்தியில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நான் ஏன் இப்போதெல்லாம் எழுதாமல் ஓய்ந்துபோனேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே எழுதினாலும் அவை நாய்களின் கதைகளாகவே இருக்கின்றன. நாய்களே என் எண்ணத்தையும் சிந்தனையையும் ஆக்கிரமிக்கின்றன. வரவர மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவதே குறைவாக இருக்கிறது. வீதியில்போனால் நாய்கள்தான் தெரிகிறது. அவற்றைக் கூட்டி வரும் மனிதர்கள் வெறும் கோறையாகத்தான் தெரிகிறார்கள். அலுவலகத்திலும் அப்படியே. அவற்றை விடுத்து எழுதுவது என்பது கடினமாகிறது. பேசாமல் வீட்டிலும் ஒரு நாயை வாங்கி வளர்க்க ஆரம்பித்தால் என்ன என்று தோன்றுகிறது. அல்லது நாமே நாயாகிவிட்டாலுங்கூட காரியமில்லை.
அடுத்த வாசகர் சந்திப்பில் ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகம் பற்றி கலந்துரையாடவேண்டும் என்று ஞாபகம் வந்தது. வாசிக்கலாம் என்று புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. நூலகத்தில், வரவேற்பறையில், கட்டிலுக்கடியில், கக்கூஸில், காரில் என்று எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. எவருக்காவது கொடுத்தோமோ என்றாலும், இந்த வீட்டுக்கு அப்படி யார் வந்து எதை எடுப்பார்கள்? ஒரு புத்தகம் எப்படி ஜஸ்ட் லைக் தட்டாகக் காணாமல் போகும்? அல்லது அது என்னிடமிருந்து ஒளிந்துகொண்டுவிட்டதா? சில புத்தகங்களும் நாய்களைப்போல வேலை காட்டும். வாலாட்டி வித்தை காட்டி சாகசம் செய்யும். நாங்கள் கணக்கெடுக்காவிட்டால் கணக்கெடுப்பவர்களை நோக்கிச்சென்று வாலாட்டும். ச்சே, மீண்டும் அதே நாய்ச்சிந்தனை. புத்தங்கள்கூட நாய்களாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அயர்ச்சியாக இருந்தது. நூலகத்தில் வந்து அமர்ந்தேன். சுற்றிவர.
திரும்பவும் பென்னும் நிஸ்ஸியும்தான் ஞாபகம் வந்தார்கள். இந்நேரம் நிஸ்ஸி மழைக்குக் குறண்டியபடி தூங்கிக்கொண்டிருக்கும். பென்னுக்குத் தூக்கம் வந்திருக்குமா? அவன் நண்பிக்கு? இந்நேரம் குழந்தை வயிற்றில் இடித்தால் சிரிப்பாளா அல்லது கரிப்பாளா? பென் அடுத்தவருடம் திருமணம் முடிக்கப்போவதாகக்கூட கூறிக்கொண்டிருந்தான். பிள்ளை பிறந்ததும் திருமணம். நண்பிக்குப் புரபோஸ் பண்ணுவதற்காக வைர மோதிர டிசைனுகளை இணையத்தில் அடிக்கடி அவன் தேடிக்கொண்டிருப்பான். ஐயோ, அவனுக்கு இன்னொரு ஒழுங்கான வேலை கிடைக்கவேண்டுமே. நான் ஏன் அதைப்பற்றி அலட்டிக்கொண்டிருக்கிறேன்? இந்தக் கறுமம் பிடித்த ‘சிதம்பர நினைவுகள்’ எங்கு போய்த்தொலைந்தது? இப்போது நான் என்ன செய்வது? வேறு எதையாவது எடுத்து வாசிக்கலாம் என்று புத்தகவரிசைகளை எல்லாம் நோட்டம் விட்டேன். எல்லாமே ....
பின் தாவாரத்தில் மழை கேட்டுக்கேள்வியில்லாமல் தன்பாட்டுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டியபடி பெருத்த ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தது.
எழுத ஆரம்பித்தேன்.
000
ReplyDelete//நான் ஏன் இப்போதெல்லாம் எழுதாமல் ஓய்ந்துபோனேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே எழுதினாலும் அவை நாய்களின் கதைகளாகவே இருக்கின்றன. நாய்களே என் எண்ணத்தையும் சிந்தனையையும் ஆக்கிரமிக்கின்றன. வரவர மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவதே குறைவாக இருக்கிறது//
.
தொலைந்த படலையின் சாவியை கண்டவர்கள் உரியவரிடம் ஒப்படைக்கவும்