இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை. ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வீட்டை விட்டே வெளியேறுகிறான். காட்டில் அலைகிறான். வழியில் காணும் விலங்குகளிடம் அவன் தன்னைப்பற்றிச் சொல்லவும், அவையும், நீ வேலை செய்வதில்லை, நன்றியுடையவனாய் இல்லை, மக்களோடு பழகுவதில்லை என்று ஒவ்வொரு காரணங்களாய்ச் சொல்லி அவனை முட்டாள் என்று விளிக்கின்றன. இவற்றையெல்லாம் கேட்டு அவனது மனம் மேலும் சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அவன் ஒரு முயலைக் காண்கிறான். முயல் அவனை அரவணைத்து ஆறுதல் சொல்கிறது. தன் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்று தான் சேகரித்து வைத்திருந்த பருப்புகளைத் தின்னக்கொடுத்...