சயந்தன் எழுதிய 'திசை ஒன்பது’ நாவலைப்பற்றி நான் எழுதிய கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. காலத்தில் நீளம் என்பது நாட்களில் அல்ல, அது நிகழ்வுகளால் ஆனது. ஒரு குறுகிய காலத்தில் நிறைய நிகழ்வுகளுக்குச் சாட்சி ஆகிறபோது அக்காலம் நீண்ட நெடியதாக நினைவில் பதிகிறது. இதுவே நீளமான கால இடைவெளியில் வெறுமனே துயில் கலைவது, கடுமையாக வேலையைச் செய்வது, தூங்குவதென்று வாழ்வு ஒடுங்கினால் அது குறுங்காலமாகவே நெஞ்சில் தங்கிவிடுகிறது. திசை ஒன்பது நாவலும் அத்தகைய அனுபவத்தையே பதிகிறது. பதினான்கு ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளை இளங்கோ உக்ரெய்னின் கீவ் நகரத்தில்தான் கழிக்கிறான். அங்கே அவனுடைய வாழ்வு ஒன்றும் பெருங் கொடுமை நிறைந்த தடுப்பு முகாம் வாழ்வும் அல்ல. நகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஹன்னாவோடு அவன் எளிமையான வாழ்வினையே வாழ்கிறான். ஒரு மூலைக்கடையைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறான். ஆனால் நாவலில் இப்பகுதி ஒரு தற்செயல்போல வந்துபோகிறது. இந்நாவல் ஒரு நதி எனில், இக்காலம் ஒரு சம தரையில் சலனங்கள் ஏதுமின்றி, எங்கோ எதிர்கொள்ளப்போகும் நீர்வீழ்ச்சியை ஆழ்மனதில் எதிர்பார்த்தபடியே மெதுவாக நகர்க...