Skip to main content

படிச்சதென்ன? பிடிச்சதென்ன?



வலைப்பதிவு ஆரம்பித்தபோது சிறுகதை மட்டும்தானே எழுதப்போகிறாய் என்று பலர் கேட்டனர். ஒரு சிலர் ஈழத்து வாழ்க்கையின் வலிகளை பதிவு செய்யவேண்டும் என்றனர். சிலர் நான் எழுதுவதை சீரியஸ் ஆகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கென்னவோ அவர்கள் தான் முக்கியமானவர்கள் போல படுகிறது. “இவன் இது தான் எழுதுவான்” என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அது தவிர்க்கமுடியாது போலும். Originality will become stereotyped someday. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாரும் எழுத்தில் ஒரு பாணியை தமக்கென உருவாக்க முயல்வதில்லை. But it happens. எல்லோருமே ஒரு கட்டத்தில் தேங்கி விடுவோம். ஓடிக்கொண்டே இருப்பது நதிகளால் கூட முடியாத காரியம். அதிகம் வேண்டாம், அலைகளுக்கு கூட ஒரு வித repetition வந்து விடுகிறது இல்லையா. எனவே இந்த கட்டுப்பாடுகளுக்குள் எதை சொல்ல போகிறோம் என்பது தான் கேள்வியே.

இந்த சிறுகதை போட்டி அறிவுப்பு வந்திராவிட்டால் மூன்றாவது பதிவிலேயே தேங்கி இருப்பேனோ என்னவோ? நானும் ஒரு துப்பறியும் கதை, அதுவும் யாழ்ப்பாணத்தளத்தில் எழுதுவது என்பதை எல்லாம் சென்றவாரம்  நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டேன். ஆனாலும் எழுதுவது என்று தீர்மானித்தபின்னர், சும்மா ஒரு கதை, அதிலே இரு கொலை என்று எழுதுவதில் இஷ்டமில்லை. அதனாலேயே அந்த non linear கதை அமைப்பும், கதையில் வரும் அனைத்து நபர்களுமே இறுதியில் கொல்லப்பட்டதும்(Well, arguable!) நிகழ்ந்தது. எனக்கு எந்த கிரைம் கதைகள் இன்ஸ்பிரேஷன் என்றால், ஒன்றுமே ஞாபகம் இல்லை. தமிழ்வாணன் சொல்லலாம். அவருடைய சங்கர்லால் கதைகள் சிறுவயதில் வாசிக்கும்போது ஆளைக்கட்டிபோடும். அப்புறம் சுஜாதாவை விடுங்கள், எதை எழுதினாலும் அந்த ஆளின் பாதிப்பு இல்லாமல் போகாது. அக்காள் ஒருத்தி அழைத்து சொன்னாள், தான் மீண்டும் ஸ்ரீரங்கத்து தேவதைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டதாக. நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சில கதைகள் அவளை அந்த புத்தகத்தை மீண்டும் வாசிக்கத்தூண்டியிருக்க வேண்டும், தலைவரே அப்பிடி என்ன அவசரம், கொஞ்ச நாள் இருந்திருக்கக்கூடாதா?

என்னுடைய முதலாவது பதிவில் ஆங்கில எழுத்தாளர்களில் லாஹிரி ஒரு  பெரிய inspiration என்று சொல்லிருப்பேன். நேற்று அலுவலகத்தில் ஒரு குஜராத்திய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சேட்டன் பகத்தின் “Three mistakes of my life” புத்தகம் பற்றிய உரையாடல் எழுந்தது. நான் சந்தித்த குஜராத்திகளுக்கு நரேந்திரமோடி மீதும் காந்தி மீதும் ஒருவித இறைநிலை வழிபாடு இருக்கிறது. ஒருமுறை “ஹேராம்” படத்தைப் பற்றி நான் சொல்லியபோது “நீ எதற்கு காந்தியை தவறாக காட்டும் குப்பைகளை பார்க்கிறாய்? நான் உனக்கு நல்ல படங்களை காட்டுகிறேன்” என்றார். "ஹேராம்” இல் கமல் என்ன சொல்ல விழைகிறார் என்பதைக்கூட புரிந்தகொள்ள முயற்சிக்காத அளவுக்கு அநேகமானவர்களுக்கு காந்தி வழிபாடு அதிகம். ஈழத்தவருக்கு பிரபாகரனில் உள்ள பக்தி போல.

ஆ, எதிலோ ஆரம்பித்து எங்கேயோ போய் விட்டது, ஆனாலும் என்ன, பின்நவீனத்துவம் என்று பீற்றிக்கொள்ள வேண்டியதுதான். அப்படியே உரையாடல் தொடர்ந்த போது இதே சேட்டன் பகத் எழுதிய call centre நாவல் மனதில் வந்தது. ஆனால் உடனடியாக பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னாலே அது “One night @ call centre” என்பது விக்கிபீடியாவில் தான் அறிய முடிந்தது. அந்த புத்தகத்தை எல்லாம் மறந்தது  வருத்தம் இல்லை. ஆனாலும் நம்முடைய ஞாபகங்கள் நிலைக்கபோவதில்லை என்பது தெளிவாகிறது. சில புத்தகங்கள் இதற்கு விதிவிலக்கு. எனக்கு ஒன்பது வயது இருக்கும், வீட்டிலே திருட்டுத்தனமாக வாசித்த ஒரு புத்தகம் அது. அந்த வயதில் வீட்டிலே அம்புலிமாமா வகையறாக்களையே வாசிக்கத்தருவார்கள். இதுவோ ஒரு காதல் கதை.  அந்த பையன் ஒரு பண்ணையார் வீட்டில் வேலை செய்கிறான். பண்ணையாரின் மகளுக்கும் அவனுக்கும் காதல். இருவருமே intelligents. சந்தர்ப்பவசத்தால் அவள் சாகரன் என்பவனை மணக்கிறாள். இவனோ படித்து வைத்தியர் ஆகிறான். சாகரன் நல்லவனா கெட்டவனா என்று இறுதி வரை குழப்பமாகவே இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் அவன் இறந்து போக கதை ஒரு கவிதை போல முடிவடையும்.கேரளத்து சுவை கதையில் கட்டு மீறும். இருபத்திரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. பல புத்தகங்களை தாண்டி வந்திருக்கிறேன். இது போல கதைகளும் திரைப்படங்களும் ஏராளம் வந்து விட்டன. ஆனால் எண்டமூரியை வாசித்தவர்களுக்கு தெரியும், அவரின் எழுத்து நடையும் பாணியும் அப்படி ஒரு காந்தம். அந்த புத்தகம் “ஒரு பறவையின் விடுதலை”. சென்றவருடம்  அந்த புத்தகத்தை சிங்கப்பூர் நூலகத்தில் பார்க்க கிடைத்தபோது வாசிக்கவேண்டும் என்று எடுத்த்தாலும். இறுதி கணத்தில் வேண்டாமே என்று திருப்பி வைத்துவிட்டேன். என்னவோ ஒரு பயம், எங்கே இப்போது பிடிக்காமல் போய்விடுமோ? சின்ன வயதில் நான்கு வரிசை தள்ளி இருந்து படித்த ப்ரியாவையும் துளசியையும் பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இப்போதும் அதே சின்ன வயது முகங்கள் தான் மனதில் படிமமாக இருக்கும். அது அப்பிடியே இருக்கட்டும்.

ஆ, தொடரை பற்றி சொல்ல வேண்டும், இது வாரம் வாரம் வரப்போகும் தொடர் கிடையாது. ஆனால் புத்தகங்கள் சார்ந்து எது தோன்றுகிறதோ அதை இங்கே எழுதுவேன். இது போல என்றும் வைத்துக்கொள்ளலாம். அது “Merchant of Venice” ஆகவோ, "கனவுத்தொழிற்சாலை” ஆகவோ “Kite Runner” ஆகவோ இல்லை “Madol Doova” ஆகவோ இருக்கலாம். ஒரு புத்தகத்தை மையமாக வைத்துதான் அது இருக்கும் என்றும் சொல்லமுடியாது. பார்ப்போம், நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த முயற்சி. அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள், கருத்துகளை விட்டுச்சென்றால் தன்யனாவேன்! பார்த்தா பாவமா இல்லை? ரொம்ப கெட்டவன் இல்லை, கொஞ்சம் நல்லவன் தான்!
“Think of it like giving someone in hell a glass of fresh ice-water” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது போல!

நீண்டு விட்டதால் ஒரு சிறிய புத்தக அறிமுகத்துடன் இந்த தொடரின் முதல் பாகத்தை முடிக்கிறேன்.

sayanthan

இந்த கதைகள் பல சொல்லும் புகைப்படம் தான் அந்த புத்தகம். நண்பன் சயந்தன், ஈழத்தின் நம்பிக்கைகளின் ஒருவன் என்று சொல்லி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவன் அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது எடுத்தது. என்னை சற்று தடுமாற வைத்தது என்றே சொல்லலாம். எப்போதாவது ஒருமுறை தான் இப்படிப்பட்ட காட்சி ஒரு புகைப்படகலைஞனுக்கு அமையும். எனக்கென்னவோ காந்தியை அந்த பூனை ஒரு மாதிரி பார்ப்பது போலவும், காந்தியின் கதர் இராட்டினம் மூடப்பட்டு இருப்பது போலவும் தோன்றுகிறது. அண்ணா ஹசாரே வேறு இந்த நேரம் மனதில் வந்து தொலைக்கிறார்.

காந்தியை முதலில் புரிந்துகொள்ள முயற்ச்சிப்போம். இன்னொரு திலீபனும் முத்துக்குமாரும் வேண்டாமே ப்ளீஸ்!


             ---------------------          என்ன தொடரலாமா?     -------------------------------

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .