Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்


மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில் நடந்தது. நல்லை ஆதீனத்தில் இடநெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று,அப்பாவை இம்சித்து,என்னை தூக்கிவைத்து காட்டச்சொல்லி பார்த்த பட்டிமண்டபம்.

“இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும் தொடேன்” 
என்று சொல்லி பின்னாலே சீதைக்கு சிதை மூட்டச்சொன்ன போது அடைந்த கோபம் ராமனில் வந்ததா இல்லை அதற்கு வக்காலத்து வாங்கிய கம்பனில் வந்ததா என்று ஞாபகம் இல்லை.
“சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” 

என்று அவர் ஔவையை அறிமுகம் செய்தபோது அதை மீண்டும் மனப்பாடம் செய்யும் தேவை இருக்கவில்லை.

ஈழத்தில் தொண்ணூறுகளில் தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி. என்னுடைய முதல் காதலியும் கூட.



ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை இளைஞர்களாகவோ இருந்தவர்களை கேளுங்கள். கதை கதையாய் சொல்வார்கள்.  அவர் அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு வித இலக்கிய எழுச்சியை உருவாக்கிக் கொண்டு இருந்தவர்.  போர் முரசும், மாவீரர் தினங்களும், சோக கீதங்களும், வெற்றி முழக்கங்களும் கொலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், சோழ நாட்டில் இலக்கியமும் இணைக்கு இணையாய் தளைத்தது என்று மார் தட்ட ஜெயராஜ் தான் முழுமுதற் காரணம். எங்கள் வீட்டு முற்றத்தில் மூன்று கதிரைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்துவிட்டு நானே நடுவர் நானே பேச்சாளர் என்று ஒரு தனி பட்டிமண்டபமே நடத்துவேன். வீட்டு நாய்க்குட்டி ஜிம்மியும் என்னுடைய செல்ல ஆடும் அசை போட்டுக்கொண்டே முன்னால் இருந்து பார்த்துகொண்டிருக்கும். தீர்ப்பு சொல்லும்போது ஜெயராஜ் போலவே குரலை குறித்த இடங்களில் குழையவிடுவேன். அவரைப்போலவே ஆங்காங்கே இடைவெளி விட்டு, குரலை உடையவிட்டு, உயர்த்தி தாழ்த்தி, அப்பப்பா தமிழை காதலிக்க வைத்தவர். அவர் கம்பனை காதலிக்க நாங்கள் அவரை காதலிக்க, எம்மை பலர் காதலித்தார்கள் என்றால், நண்பன் கஜன் இதற்கு மேல் வேண்டாமே என்பான்!
“ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பிரிந்ததாலே திகைத்தனை போலும் செய்கை” 
இந்த பாடலில் "திகைத்தனை" என்ற இடத்தை அவர் சொல்லும் போது குரல் உடையும். ராமனில் கோபம் வரும். பேடி போல அம்பு எய்தாலும் அது பெண்ணின் மீதான காதலால் தான் என்று சொல்லும் வாலியைப் பார்க்க துரோகி சுக்ரீவனை கல்லால் அடிக்க தோன்றும். தோன்ற வைத்து விட்டு பின்னர்
"தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும்
இருமையும், தெரிந்து எண்ணலை, எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ"
என்று இராமன் சொல்வதைச்சொல்லி வாலிக்கு இராமனின் முன்னே நின்று  போரிடும் தகுதியே கிடையாது என்ற ரீதியில் பதில் சொல்வார். அட அதுவும் சரிதானே என்று நம்ப வைப்பார். நாமும் நம்பினோம்.

ஜெயராஜ் எப்படி இந்த எழுச்சியை ஒரு முக்கிய போராட்ட காலத்தில் நிகழ்த்தினார் என்பதை இப்போது யோசித்தாலும் ஆச்சரியம். புலிகளின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் இருந்த காலம், மின்சாரம் இல்லை, டிவி இல்லை என்று பல இல்லைகள். ஒருமுறை பிரசங்கம் செய்துகொண்டு இருக்கும் போது குண்டு விமானங்கள் வந்துவிட்டன. மக்கள் கூட்டமோ அலை மோதுகிறது. விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லோரும் அமைதியாக இருந்து விமானங்கள் சென்றபின்னர் பிரசங்கம் மீண்டும் தொடங்கியது. மக்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்து முடியும் வரை கேட்டனர். அது தான் ஜெயராஜ். அது தான் எம் மக்களும் கூட!



பாடசாலை, வீடு, தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வப்போது கிரிக்கெட், இது தான் எமது வாழ்க்கை. யாழ்ப்பாணம் ஒரு வித மழைநீர் தேக்கம் போல இருந்த காலம். வேறு நதிகள் ஒன்றும் இணையாத நேரம், அங்கே மழை மட்டுமே, அதனால் எந்த நீர் எந்த நதியில் வருகிறது என்று வடிகட்டவேண்டிய தேவை புலிகளுக்கும் இருக்கவில்லை. மக்களுக்கும் இருக்கவில்லை. மக்கள் ஒன்று சேர்வது இரண்டு காரியங்களில், ஒன்று போராட்ட நிகழ்வுகள் மற்றயது வழிபாட்டு நிகழ்வுகள். ஆரம்பத்தில் கம்யுனிசம் பேசிய புலிகள் அதில் பின்னர் பாராமுகம் காட்டியது ஒரு நல்ல இலக்கிய சமய சூழலுக்கு வழிவிட்டது எனலாம். அதனால் கம்பனும், ஜெயராஜும் சாதி சமயம் தாண்டி இலக்கியத்தின் மூலம் மக்களை சென்றடைந்து கொண்டு இருந்தனர் எனலாம். 

ஜெயராஜ் இந்த களத்தை நன்றாகவே கையாண்டார். கம்பன் கழகம் என்ற குழு தவிர அவரின் தனி பிரசங்கங்கள் பல கோவில் திருவிழாக்களின் crowd pullers ஆகின. அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெயராஜின் நிறுவனப்படுத்தப்பட்ட இலக்கிய சேவை. பலர் இன்றும் கருதுவது தமிழும் தமிழ் சார்ந்த சேவையும் இலாபநோக்கமின்றி செய்யப்படவேண்டும் என்று.  Go to hell! தமிழ் ஒன்றும் எவரினுடைய charity சேவையையும் எதிர்பார்த்து நின்றதில்லை, நிற்கப்போவதும் இல்லை. அந்த காலத்தில் ஜெயராஜை அதிகம் விமர்சித்த, குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தாங்கள் என்ன சமூகத்துக்கு செய்தார்கள் என்பதை நினைத்ததில்லை. நம் துறையில் நம்மை விட ஒருவன் பிரகாசிக்கும் போது, அதுவும் நம்மை போல பட்டம் எதுவும் பெறாதவன், கசக்கும் தான். எனக்கென்னவோ செங்கை ஆழியானும் ஜெயராஜும் ஈழத்துக்கு செய்த சேவை சிவத்தம்பியின் சேவைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை என்றே சொல்வேன். 

ஜெயராஜ் ஒரு பிரசங்கம் என்றால் அந்த காலத்திலேயே ருபாய் ஐயாயிரம் வாங்குவாராம். இப்போது புரிகிறது அது ஏன் என்று. பணம் கொடுக்கும் போது தான் அதை ஒழுங்குசெய்பவர்களும் அந்த நிகழ்வு வெற்றிபெற உழைக்கவேண்டியவராகின்றனர். பணம் கொடுத்து வாங்கும் பொருளுக்கு இருக்கும் மதிப்பை நாம் இலவசத்துக்கு கொடுப்பதில்லை.தமிழ் இலக்கியத்தை நிறுவனப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சி பலரை சென்றடைகிறது. பல இளைஞர்களை தமிழறிய செய்கிறது. இது தான் ஒரே வழி சரியான வழி என்பது இல்லை. ஆனால் இது ஒன்றும் தவறான வழியும் கிடையாது. கிழக்கு இந்திய கம்பனி இதை அந்த காலத்திலேயே ஆங்கிலத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் செய்துவிட்டது.

2000ம் ஆண்டு காலப்பகுதி. கொழும்பு என்பதால் மழைநீர் தேக்கத்தில் பல நதிகளும், தொழிற்சாலை கழிவுகளும் இப்போது சேரத்தொடங்கியிருந்தன. வடிகட்டிகள் அங்கே இல்லாததால் நீர் குடிக்கும் அருகதையை அந்த தேக்கமும் இழக்கத்தொடங்கி இருந்தது. இப்போது ஜெயராஜ் பற்றிய விமர்சனம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. நம்மவருக்கு ஒரு கருத்து இருக்கிறது. எந்த துறையினரும் அரசியலில் நாம் விரும்பும் கருத்தை எடுத்து ஆதரிக்கவேண்டும் என்பது. இலக்கியவாதிக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் அரசியலில் கருத்து சொல்லவேண்டும்? என்றெல்லாம் யோசிப்பதில்லை. அசின் இலங்கைக்கு போனதால் அவரை தடை செய்யவேண்டும் என்று ஒரு நண்பன் facebook இல் status போட்டிருப்பான். அவன் இருப்பது கொழும்பில், வேலை செய்வது சிங்களவர் கம்பனியில். இது தான் நாம்.  ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் வாங்கும் போது ஈழத்தமிழருக்கு குரல் கொடுக்கவில்லை என்று புலம்பவில்லையா? ஆனால் தேர்தல் நடந்தால் அறுபது வீதம் தான் வாக்களிப்பு. என்னத்த சொல்ல?

இது போதும் எமக்கு இவரை துரோகி என்று சொல்ல!

ஜெயராஜின் ஒருமுறை இந்தியாவில் பேசிய பேச்சு
நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" 
எனக்கென்னவோ ஜெயராஜின் அந்த நெருப்பு அப்படியே தான் இருக்கிறது. இந்தியாவில் அவரை கொண்டாடுகிறார்கள். ஈழத்தமிழருக்கு தன்னளவில் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார். அதே சமயம் நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. பதிமூன்று வயதில் எனக்கு அவரை மட்டும் தான் தெரியும். இப்போது ஜக்கி முதல் ஓஷோ வரை, சிவத்தம்பி முதல் டெர்ரி பிரச்செட் வரை, ஜெயமோகன் சொல்வது போல, பாலகுமாரனை வாசித்து பின் அதை தாண்டி வா என்பது போல, தாண்டி எங்கே போனோம் என்று தெரியவில்லை தாண்டிவிட்டோம் என்பது மட்டும் வெளிச்சம். ஆனால் பதினொரு வயது பாடசாலை செல்லும் சிறுவனுக்கு இன்னமும் ஜெயராஜ் தேவை என்றே நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் யோசித்தால் ஜெயராஜின் கருத்துகளில் பல இடங்களில் மாறுபடுகிறேன். வாலி தான் பிறன் மனை நோக்கினான். இந்த ராமன் தன் மனையை சந்தேகித்தான். முன்னையதை விட பின்னையது இன்னும் அசிங்கம். மற்றவன் புறம் சொல்லுவான் என்று நீ அப்படி செய்தால் புறம் சொல்பவனை கணக்கில் எடு என்று ஆகிறதே. இருக்கட்டும், அது கம்பன் தானே. எல்லாமே சரியாக சொல்ல அவன் என்ன கடவுளா? அட கடவுளாய் இருந்தால் மட்டும் சரியாக சொல்லிவிடுவானா என்ன?

ஒருமுறை நான் பேச இருந்த பட்டிமண்டபம் ஒன்றுக்கு ஜெயராஜ் நடுவராக வருவதாக இருந்தது. வரவில்லை. முதல் காதலி! ஒருதலைக்காதல், இப்போது இது ஒன்றும் புதுசு இல்லை! ஜெயராஜ் நீங்கள் என்றாவது ஒருநாள் இதை வாசிக்க முடிந்தால்,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
....
....
.... 
அண்ணல் நான் இல்லை ஆனாலும் அன்று தொட்டு நோக்குகிறேன்!
அவள் நீ ஜெயராஜ் எப்போது எனை நோக்குவாயோ?

---- **** ---


Comments

  1. //ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை//
    //ஆனால் பதினோரு வயது பாடசாலை செல்லும் சிறுவனுக்கு இன்னும் ஜெயராஜ் தேவை என்றே நினைக்கிறேன்.//
    அனுபவபூர்வமான உண்மைகள்..

    ReplyDelete
  2. நன்றி அனந்தன் வருகைக்கும் கருத்துக்கும். அவரை பார்த்து படித்த எங்களுக்கு தான் தெரியம் அவரின் அருமை பெருமை.

    ReplyDelete
  3. டெஸ்ட்டிங்

    ReplyDelete
  4. வாசித்து முடித்த பின் யோசிக்க வைப்பதே நல்ல படைப்பு... அந்தவிடயத்தில் இந்த பதிவு என்னை பாதிக்க வைத்தது, சாரி மச்சி நானும்கூட உன்னோட கொல்லைபுறத்து காதலியின் ஒருதலைக்காதலன் தான்,உன்னுடன் சேர்ந்து நல்லூர் வீதியினில் பார்த்த சுழலும் சொற் போர் தொடங்கி அவரின் அனைத்து பிரசங்கங்களுக்கும் பேச்சுக்கும் அடிமையப்பா,ஆனாலும் பிற்காலப்பகுதியில் கால கட்டாயத்தால் அவர் அரசியல் சாக்கடை வெள்ளப்பெருக்கில் இழுத்துச்செல்லப்படதே வருத்தம்

    ReplyDelete
  5. தலை, எல்லாரையும் எல்லாத்திலேயும் பெர்பெக்ட் ஆ இருக்கோணும் எண்டு எதிர்பார்க்கக்கூடாது. ரஜனியின் வியாபார தந்திரத்தை விமர்சித்தால் அவரின் நடிப்பை ரசிக்கமுடியாது. நாங்க மட்டும் என்ன பெரிய திறமா? அன்னப்பறவையாய் இருப்பதே மேல். அந்த சுழலும் சொற்போர், நல்லூர் வடக்கு வீதியில் நடந்தது, ஸ்கூல் முடிஞ்சு போய் பார்ப்போம். மறக்க ஏலாது. எக்ஸாம் டைம்ல கூட கம்பன் விழா மிஸ் பண்ண மாட்டம்.

    ReplyDelete
  6. 1995 ற்கு முற்பட்ட காலத்தில் கம்பன் கழகம் என்பது ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக இருந்ததில் எவருக்கும் ஐயமில்லை. ஜெயராஜ் என்ற நாமம் எல்லோர் உள்ளங்களிலும் கொலுவீற்றிருந்தது. எங்கெல்லாம் பட்டிமண்டபம், வழ்க்காடு மன்றம் நடைபெறுகிறதோ அதையெல்லாம் சைக்கிளில் சென்று பார்த்து கேட்டு இரசித்திருக்கிறோம். அவர் நெறியாளகையில் நடக்கும் கம்பன் விழா கனகச்சிதமாக நடக்கும். கொழும்பில் நடக்கும் கம்பன் விழாவும் அவ்வாறே.

    சொற்பொழிவு பேச்சு என்று வருகின்ற வரும்போது அங்கே ஜெயராஜ் பற்றிக் கதைக்காமல் கடந்து போக முடியாத அளவுக்கு தனது கால்களை மிக ஆழமாகவே பதித்திருக்கிறார். அதிலும் இலக்கியம் மீதான அவரின் தீராத காதலும், அதில் இருக்கின்ற ஆழ்ந்த புலமையும் முறையாகப் பட்டம் பெற்று அராய்ச்சி செய்தோரே பொறாமை கொள்ளும் அளவுக்கு இருந்தது. இதற்கு பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களுடன் அடிக்கடி நடக்கும் முரண் உரையாடல்கள் சான்று.


    ஆனால் அவர் மீதிருந்த மதிப்பு எல்லாம், 2004ம் ஆண்டு அவர் சுடரொளிப் பத்திரிகையில் எழுதிய “வாராதே வரவல்லாய்” என்ற கட்டுரையோடு கொஞ்சம் குறைந்து போனது. புலம் பெயர் தமிழரை எவ்வளவு இழிவு படுத்தமுடியுமோ அவ்வளவுக்கு இழிவுபடுத்திவிட்டார். அதற்கு கி.பி. அரவிந்தன் “குடம் குடமாய் பாலும், ஒரு துளி விஷமும்” என்ற தலைப்பில் கம்பவாரிதியை மிகக் காட்டமாக விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார். என்னளவில் கம்பவாரிதியின் அந்தக் கட்டுரை ஒரு “திமிர்” ஆன நிலைப்பாட்டில் இருந்து எழுதப்பட்டது என நினைக்கிறேன்.


    மீண்டும் இப்போது கொழும்பில் அவர் தனது ஆலயமாகக் கட்டிவரும் ஐஸ்வரியம்மன் கோவிலுக்கு கே.என்.டக்ளஸ்தேவானந்தா 5 இலட்சம் கொடுத்ததும் அவரே தமிழினத்தின் அடுத்த தலைவர் என்று உரைத்தார். இங்கு நான் இவரை துரோகி என்று ஒரு போதும் சொல்லமாட்டேன். ஆனால் மனிதர் மிக கேவலமாக நடந்து கொண்டுவிட்டார்.

    1995 இல் புலிகளோடு முரண்பட்டு தென்னிலங்கை வந்தவர், மீண்டும் யாழ்ப்பாணத்தில் கால்வைக்க கூசுகிறார். ஏன் என்று தெரியவில்லை. இன்று எதுவித கட்டுக்கோப்பும் இல்லாத இந்தவேளையில் அவரது இலக்கியப் பணி மீண்டும் தேவை அந்த மண்ணில். மக்களின் மனதை ஒரு முகப்படுத்தவும், தேவையற்ற சிந்தனைகளில் நாட்டம் கொள்ளாது தடுக்கவும் அவரின் சொற்பொழிவுகள் தேவை. இதுதான் நல்ல சந்தர்ப்பம். ஆனால் மனிதர் போவதற்கு தயாராக இல்லை.

    இன்றும் சொல்கிறேன்..அவர் மீது எவ்வளவு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும், இலக்கியத்தை அவர் சொல்லுகின்ற பாணி எவரிடமும் இல்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    உங்கள் கட்டுரை அருமை....கடந்தகால நினைவுகளை ஒருதடவை மீட்டிச் சென்றது. நன்றி நண்பரே...!!!!

    --வைகுகன்

    ReplyDelete
  7. நன்றி வாகுகன், வருகைக்கும் கருத்துக்கும், ஜெயராஜின் அரசியல் கருத்துகளை நான் செவி மடுப்பதில்லை. அரசியலில் உள்ளே நுழைந்துவிட்டு அதை சொன்னால் அது வேறு. அவர் ஒரு இலக்கியவாதி, அவருக்கு அரசியல் தெரிந்திருக்க ஞாயம் இல்லை. என்னை போல, எனக்கும் தெரியாது, ஆனால் நான் நினைப்பது தான் சரியான நிலைப்பாடு என்று நினைப்பேன். எவ்வளவு அபத்தம் அது. எனவே ஜெயராஜையே அந்த அளவிலேயே நிறுத்தவேண்டும் என்பது என் எண்ணம். உதாரணத்துக்கு சம்பந்தரோ இல்லை பிரபாவோ சுஜாதாவை விட பாலகுமாரன் தான் நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களை புறக்கணிப்போமா? இல்லை தானே, புன்சிரிப்புடன் கடந்து செல்வோம் இல்லையா .. அது போல தான்!

    ReplyDelete
  8. ரசிகன்யா நீ..

    ReplyDelete
  9. நன்றி கிச்சா .. அதென்ன கிச்சா எண்டு பெயர்?

    எல்லாருமே ரசிகன் தான் தல .. நாள் எழுதுறேன், மத்தவங்க மனசுக்க நினைச்சிட்டு போறாங்க!

    ReplyDelete
  10. வர வர உங்களது சிறுபிள்ளைத்தனம் உச்சத்தினைத் தொடுகின்றது.

    ஒரு வருடமாக உங்கள் பதிவுகளைப் படிக்க விடாமல் உங்களது அடிப்படைத் தெளிவற்ற எழுத்துக்களும், தம்பட்டமும், முட்டாள்த்தனமான 'முகஸ்துதிகளும்' தடுக்கின்றன.

    பிரபயல்த்துக்காக ஏங்கும் அலையும் ஒரு தெருக்குப்பையாய்ப் போனீர்கள்.

    எனக்குத் தனிப்பட்ட முறையில மயூரனைப் பிடிக்காது. அவருக்கும் புத்தி போதாது. ஆனால் உங்களை விடவும் அதீதமாயிருக்கிறது. கொஞ்சமாவது கண்களைத் திறந்து வாசித்துத் தொலைக்கவும். அடிப்படைகளைப் புரிந்து கொள்ளத் துப்பில்லாத நீர் என்னத்தை எழுதிக் கிழிக்கிறீர்?
    http://mauran.blogspot.com/2005/05/blog-post_23.html?view=sidebar

    நீங்கள் எழுதுவதை விட வாசிப்பதே அவசியம் JK. வர வர உங்கள் போக்கு வாந்தியினை வரவழைக்கிறது. வாசிப்பதை நிறுத்தி விட்டுப் பேசாமல் இருந்து விட்டேன். அப்படியும் வர வர படு மோசமாய் வருவதால் பொறுக்க முடியாதிருக்கிறது. :(

    //ஜெயராஜின் அரசியல் கருத்துகளை நான் செவி மடுப்பதில்லை. அரசியலில் உள்ளே நுழைந்துவிட்டு அதை சொன்னால் அது வேறு. அவர் ஒரு இலக்கியவாதி, அவருக்கு அரசியல் தெரிந்திருக்க ஞாயம் இல்லை. என்னை போல, எனக்கும் தெரியாது, ஆனால் நான் நினைப்பது தான் சரியான நிலைப்பாடு என்று நினைப்பேன்// எவ்வளவு முட்டாள்த்தனமான கருத்து. அரசியல் என்றால் என்ன என்பது உமக்குத் தெரியவில்லை. மறுபடி அழுத்துகின்றேன். கட்டமைப்புகளினதும் பெருவாரியான நகர்வுகளினதும் சின்னப் பகடையாகிப் போகாதீர். நீர் அடிப்படையில் நல்ல மனதுடையவர் என்று நம்பித்தான் நான் நேரத்தை கொன்று இந்த மடலை வரைகின்றேன். நான் உம்மை விடப் பதினொரு பிராயங்கள் குறைந்தவன், சிறுவன் (நான் புத்தி சொல்லுறன் எண்டா உம்மட நிலைய யோசிச்சிப் பாரும்?)

    //சம்பந்தரோ இல்லை பிரபாவோ சுஜாதாவை விட பாலகுமாரன் தான் நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களை புறக்கணிப்போமா? இல்லை தானே, புன்சிரிப்புடன் கடந்து செல்வோம் இல்லையா .. அது போல தான்!// நான் சுஜாதாவினை 8 வயதுகளிலிருந்து வாசிக்கின்றேன். ஏறக்குறைய முழுப்புத்தங்களையும் 13க்குள் முடித்திருக்கின்றேன். சுஜாதா மிகவும் நைச்சியமான அரசியல்வாதி. இடதுசாரியம் நல்லது என்பது தெரிந்தும் மீண்டும் ஜீனோ முதலான நிறையப் புத்தங்களில் சாடியிருக்கிறார், பிழையான வழிகாட்டுதல்களை 'வலு சிம்பிளாக' ஜஸ்ட் லைக் தட் சொல்லிப் போகிறார், அதுவும் நைச்சியமாக. அசிங்கமான மனோநிலை அது.

    தயவு செய்து தம்பட்டத்தியும் கேவலமானவர்களுக்குப் பூசை செய்வதையும், சும்மா பிரபலங்களைத் தொழுது (சுஜாதா, வாருதி ஆதர்சமாயிருந்தாலும் அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல, உது உமது தனிப்பட்ட ஆதர்சம், சமூகப் பொறுப்புத்தான் உமக்கு முதலில் வேண்டும்)

    9,10 வயதுகளில் பைத்தியமாக அலைந்தாலும் போகப் போக 'பாலியலைத் தவிர' (அது ஒரு வியாபார உத்தி, எந்த ஒரு பெண்ணையும் அவர் சிறப்பாகக் காட்டியதில்லை, இதெல்லாம் ஒரு பிழைப்பா, சுஜாதா கதைகளில் உங்கள் மனைவி ஒரு கதாபாத்திரமானால் உங்கள் மனது எவ்வளவு பாடுபடும்?).

    அசிங்கமானதொரு அரசியல் புத்தி, ஏமாற்றுப் புத்தி அவரினுள் ஊறிப் போய்க் கிடப்பதைக் கண்டேன். எனது மரியாதை தொலைந்து போனது. உங்களது அடிப்படை அறிவில்லாத தன்மை வருத்தமளிக்கிறது. :(

    ReplyDelete
    Replies
    1. Hi Buddy,

      Appreciate first you leave your name when writing something. How do I address you? Anonymous posts deserves no attentions. Yet replying.
      //உங்களது அடிப்படைத் தெளிவற்ற எழுத்துக்களும்//
      This I always admit, I dont have a proper vision on anything, I learn and evolve, you will see em in my writings if you keep doing so.
      //எனக்கும் தெரியாது, ஆனால் நான் நினைப்பது தான் சரியான நிலைப்பாடு என்று நினைப்பேன்//
      Do you realise this is exactly what you do also.. How do you know what you think is right? Conscience? well that's a subjective feel.

      Last but not least, you can always ignore if you see my post is a rubbish. You dont need to spoil your mind reading me. When everybody ignores my writing and when everybody realising my writing is a holy crap, people will stop reading and I might stop writing as well. Its my website, its not published anywhere and readers visit to my website on their own consent.

      Hope you respect that! Next to be honest to reveal your identity.

      Cheers,
      JK

      Delete
  11. வனவாசம் முடிந்ததோடு கம்பராமாயணம் முடிகிறது. பிறகு எங்கே சீதையை சந்தேகிப்பது. இராமன் சந்தேகப்பட்டது ஒட்டக்கூத்தாரின் எழுத்தில் என்று தான் ஞாபகம். ஏனய்யா, ஆராயமல் எழுதுவீர்களா?

    - நாடோடி

    ReplyDelete
  12. இதை நான்
    Screen shot எடுத்து எனது iPhone app வைத்திருந்தேன் .
    இன்று தான் வாசித்தேன்!
    தமிழை முழுமையாக எழுதாமைக்கு மன்னிக்கவும்
    நானும் 90. க்கு பின் தான் இரண்டு காற்சட்டை போடுமளவுக்கு மாறினேன்!

    இப்போதைக்கு ஐயாவின் இலக்கிய சம்பந்தமான (இந்தியாவில் அவர் ஆற்றிய உரைகளை ) விசயங்களை அறிந்துகொள்வேன்
    ஏனோ இலங்கையில் நடப்பவை பற்றி அறிய கூடிய முயற்சி இனி இந்த படலையில் இருந்து வரும்!

    நானும் உங்களுடன் பயணிப்பேன்!
    சுன்னாகம் நிவேந்தன்.அ
    அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் இருந்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .