Skip to main content

அப்பா வருகிறார்!


Picture 016குமரனின் அப்பா இன்று தான் வருகிறார்.  காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை.  எங்கள் வீட்டில் அப்போது படலை இருக்கவில்லை. இரும்பு கேட் தான், ஓஹோ படலையை கேட் என்று மாற்ற அதிகம் நேரம் பிடிக்காது என்ன? ம்ம்ஹூம் ஏன் வீண் வம்பு, அது படலை தான். நான் குமரனும் இல்லை!


Bicycle-is-a-common-mode-of-transport-for-women-children-and-men-in-Jaffna.-Bicycle-plays-an-important-role-in-the-peoples-lives-in-Jaffna.-People-depend-so-much-on-bicycle-to-travel-short-and-long-distance.
குமரன், வரும் ஆவணிக்கு அவனுக்கு பதின்மூன்று வயது ஆகிறது. எங்கே வசிக்கிறானா? இதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். எப்போதாவது யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்களா? வந்தால் அங்கே  பரமேஸ்வராச்சந்தி என்று ஒரு பிரபல முச்சந்தி இருக்கிறது, ஆம் அதே தான், பல்கலைக்கழகத்துக்கு அண்மையில், நிறைய பையன்கள் கூடும் சந்தி. மாணவிகள் எல்லாம் அந்த வழியால் தினம் சைக்கிளில் செல்வார்கள். சோளககாற்று சீசன் என்றால் போதும். பெண்கள்  தங்கள் பாவாடை காற்றில் பறக்காமல் தடுக்க ஒரு கையால் மூடிக்கொண்டு மறுகையால் ஹான்டிலை பிடித்துகொண்டு போகும் அழகு இருக்கிறதே. அத்தனை பையன்களும் காற்று அடங்கிய பின்னர் தான் வீடு போவார்கள். ஆனால் இப்போதெல்லாம் முன்னே மாதிரி இல்லை.  அவ்வப்போது புலிகள் வந்து பிரச்சாரம் செய்வதால் பையன்கள் குச்சு வீதிகளிலேயே நின்று கதைப்பதுண்டு. அட, ஏதோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன். இந்த சந்தியால் திரும்பி ஒரு நூறு மீட்டர் உள்ளே வாருங்கள். இடக்கைப்பக்கம் ஒரு பெயர்ப்பலகை இருக்கும். "சந்திரசேகரம், உத்தரவு பெற்ற நில அளவையாளர்", கண்டு பிடித்துவிட்டீர்களா?  அந்த வீடு தான் குமரனின் வீடு. சந்திரசேகரம் யார் என்றால் என் அப்பா என்று சொல்லவேண்டும். ஆனால் நான் குமரன் இல்லை என்பதால் அவரின் பெயரை சேகரச்சந்திரன் என்று மாற்றி வாசியுங்கள். அவர் தான குமரனின் அப்பா.




Picture 014
குமரனின் அப்பா பணிபுரிவது நொச்சியாகம என்னும் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், சிங்களப்பிரதேசம். மகாவலி கங்கை அபிவிருத்தி திட்டத்தில் வேலை செய்கிறார். வருடம் ஒருமுறை யாழ்ப்பாணம் வருவார். அவர் தான் சில மாதங்களுக்கு முன்னர் இந்த முறை வருடப்பிறப்புக்கு வீட்டிற்கு வருவதாக தந்தி அனுப்பியிருந்தார். பொறுங்கள், தந்தி என்றால் தபால் தந்தி எல்லாம் கிடையாது. இந்திய இராணுவம் திரும்பிச்சென்ற கையோடு வடக்கு கிழக்கு புலிகள் ஆதிக்கத்தில் வந்தது இல்லையா. அதிலிருந்து மின்சாரம் தந்தி தொலைபேசி எல்லாம் விஞ்ஞானப்புத்தகத்தில் மட்டுமே. குமரனின் அப்பா எப்பாடுபட்டாவது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் ஒரு கடிதத்தையும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வியாபாரிகள் மூலம் கொடுத்துவிடுவார். அப்படி வரும் சம்பளத்தில் தான் வீட்டு செலவை எல்லாம் அம்மா சமாளித்துக்கொண்டு வந்தார். 


அதற்கும் ஆப்பு வந்தது. வவுனியா எல்லையில் சண்டை தொடங்கிவிட்டது. சண்டை என்றால் சும்மா கிளைமோரில் பத்து பேர் பலி கதை கிடையாது. ஊடறுப்பு தாக்குதல். கரும்புலியும் பாய்ந்து கருணா குரூப்பும் இறங்க, அறுவாங்கள் கொஞ்ச நாட்களில் எல்லையை மூடி விட்டார்கள். ஒரு நாள் இல்லை, இரு நாள் இல்லை, கடந்த ஆறு மாதங்களாக பாதை மூடப்பட்டுவிட்டது. வீட்டுச்செலவு கையை மீறிக்கொண்டு போனது. மண்ணெண்ணெய் முன்னூறு ரூபாய். சோப்பு நூறு ரூபாய், சீனி எல்லாம் காணவே கிடைக்காது, பனங்கட்டி தான், சுத்தமான கலப்படம் இல்லாத பனங்கட்டி, அது தான் சீனி நாட்டிலேயே இல்லையே, என்னத்த கலக்கிறது? அம்மாவின் நகை எல்லாம் ஒவ்வொன்றாக வட்டிக்கடைக்கு போய்க்கொண்டு இருக்க,  கோழிக்கூட்டில் இருந்த சேவல் முதற்தொட்டு பேடுகள் வரை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சட்டிக்குள் போனது. விறகு கூட நெருப்பு விலை. ஒரு தூக்கு ஆயிரம் ரூபாய். கட்டுப்படியாகாது. கோழிக்கூடு உடைக்கப்பட்டு கூரை கதவு மரங்கள் எல்லாம் விறகு ஆகிக்கொண்டு இருந்தன. அட இதெல்லாம் சந்தோசமான விடயம் தான். யாருக்கு கிடைக்கும் வாரா வாரம் கோழி இறைச்சிக்கறியும் சோறும்? ஆனால் மாட்டக்கடிச்சு ஆட்டக்கடிச்சு கடைசியில் குமரனின் மடியிலும் கை வைத்துவிட்டார்கள். அது என்னவா?

குமரனிடமும் ஒரு மோதிரம் இருந்தது. ஒரு குட்டி மோதிரம். பக்கத்து தெரு தாரணி, சைக்கிளில் பாடசாலை செல்லும்போது தானும் பின்னாலே சென்று தன்னுடைய சைக்கிளின் ஹான்டிலை அந்த மோதிரத்தால் தட்டுவான். டிக் டிக் என்றால் அவள் ஒரு பக்க ஜடையை எடுத்து பின்னாலே போடுவாள். அடுத்த டிக் டிக் டிக் சத்தத்தில் ரெண்டாவது ஜடையும் பின்னால் விழும். இப்படி முன்னாலே பின்னாலே என்று பாடசாலை வரை ஆதி தாளம் தான். தப்பாது. ஒரு முறை அதுவும் தப்பியது. ஏன் என்று அடுத்த கதையில் பார்ப்போம். இப்போது இந்த மோதிரத்துக்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த நேரம் தான் புலிகள் எல்லா குடும்பங்களிலும் இரண்டு பவுண் தமிழீழ நிதி வாங்கிக்கொண்டிருந்த நேரம். எல்லா நகையும் வட்டிக்கடைக்கு போயிருக்க அம்மாவிடம் ஒரு சோடி காப்பு மட்டும் தான் எஞ்சி இருந்தது.  அது வேறு ஆறு மஞ்சாடி குறைவு என்பதால் காதலித்துக்கொண்டிருந்த குமரனின் மோதிரம் வீரனாய் தேசம் மீட்கப்போய்விட்டது!



Picture 001குமரன் ஒரு பாவம். அன்றைக்கு அந்த மோதிரம் விரலால் வரமாட்டேன் என்றது. சோப்பு போட்டு கழட்டலாம் என்றால்  சோப்பின் விலை அதை விட அதிகம். இழுத்து எடுக்கும் போது கத்து கத்து என்று கத்தினான். சோனியாவை விற்ற போது கூட இப்படி கத்தவில்லை அவன். ஐயையோ இப்போது சோனியா யார் என்று சொல்லவேண்டும்.  சோனியா தான் அவன் வளர்த்த ஆடு. கறவை ஆடு, நல்ல உயரம். ராஜீவ் காந்தி இலங்கை வந்த போது அவனுக்கு சோனியாவைப் பிடித்துவிட்டது. களையான முகம், வெள்ளைக்காரி வேறு, எப்படியும் கணவனிடம் சொல்லி சண்டையை நிறுத்திவிடுவார் என்று குமரன் நினைத்தான். அதனால் ஸ்ரீமா என்று வைக்க இருந்த பேரை சோனியா என்று மாற்றினான். ஒவ்வொருநாளும் தவறாமல் குழை போட்டான்.  பாடசாலை முடிந்து வீடு வந்து செய்யும் முதல்வேலை அது தான், ஒரு நீண்ட கம்பி, அதைத்தூக்கிக்கொண்டு அயல் அட்டமெல்லாம் செல்லவேண்டும். நன்றாக பழுத்த ஆனால் காயாத பலா இலைகளை அந்த கம்பியில் குத்தவேண்டும். சிலவேளை முள் முருக்கமிலை, அது சோனியாவுக்கு மிகவும் பிடித்ததும் கூட. ஆனால் காலம் போக போக, ராஜீவ் இறந்ததோ என்னவோ, சோனியா பால் தருவதில் பாராமுகம் காட்டியது. அம்மாவிடமும் காசு முடை, இறைச்சிக்கு விற்றுவிட்டார். ஆயிரம் ரூபாய் பெறுமதி. குமரனுக்கு தாங்கவில்லை. என்ன இருந்தாலும் அவன் வளர்த்த ஆடு. இப்படி போனது மனம் கேட்கவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்ததால் அம்மா போனால் போகட்டும் என்று ஆறு மஞ்சாடியில் மோதிரம் செய்து கொடுத்தாள்.  அவனுக்கும் நல்ல சந்தோசம். இப்போது எல்லாம் குழை பொறுக்கும் வேலையும் இல்லை தானே. தாரணி வேறு ஜடை போடுகிறாள்.


கதை அங்கே இங்கே ஓடுகிறது என்றால் சொல்லுங்கள். நான் ஒரு நாளும் நிலையாய் ஒரு இடத்தில் நின்றதில்லை. பாதை மூடி விட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஆனால் சரக்கு கப்பல் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை லங்காமுடித்தா கப்பல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும். அத்தனை வடக்கு மக்களுக்கும் கொஞ்சூண்டு உணவுப்பொருட்கள் அனுப்புவார்கள். அதுவும் அனுப்பாவிடில் யாழ்ப்பாணம் தனி நாடு ஆகிவிடுமாம். என்ன இழவோ, இப்படி வரும் கப்பலில் தான் அவசர பயணிகளும் மா மற்றும் சீனி மூட்டைகளோடு மூட்டைகளாக உட்கார்ந்து வருவார்கள். அப்படி மூன்று மாதத்திற்கு முன்னர் தும்மிக்கொண்டு வந்தவர் தான் சாம்பசிவம் அங்கிள். குமரனின் அப்பா காசு கொடுத்து விட்ட நபர். அவர் வீட்டிற்கு வந்த போது ஒரு லேமொன்பப் பிஸ்கட் கொண்டுவந்தார். குமரனின் அப்பா சித்தரைக்கப்பலில் வரும் தகவலையும் அவர் தான் சொன்னார். உடனடியாக திரும்புவதாகவும், கடிதம் ஏதும் கொடுக்கவேண்டும் என்றால் தரும்படியும் சொல்ல, அக்கா அண்ணா என குமரன் வீட்டில் எல்லோரும் ஆளுக்கொரு கடிதம் எழுதினார்கள். குமரனும் ஒரு பேப்பர் எடுத்து எழுத தொடங்கிவிட்டான். அப்போதே!
“அன்புள்ள அப்பா”
நலம் நலமறிய ஆவல். நான் வகுப்பில் இம்முறை நான்காம் இடம். ஆனாலும் நீங்கள் விரும்பும் போல கணிதத்தில் தொண்ணூறு புள்ளிகள். எனக்கு தான் கையஸ்ட்..
நிற்க! மாலினி அக்காவைத் தெரியும் தானே? அக்காவின் நண்பி, அவ “மேலோடிக்கா” என்று ஒரு வாத்தியம் வச்சிருக்கிறா. சும்மா வாயால நீங்க ஊதிகொண்டு கையால பாட்டு வாசிக்கலாம். “ஒ நெஞ்சே ஒ நெஞ்சே”, பாக்கியராஜ் பாடும் பாட்டு எல்லாம் வாசிப்பா. நான் ஒருக்கா தரச்சொல்லி கேட்டன். எச்சில் பண்ணுறன் என்று தாறா இல்லை.  தான் பெரிய ஆள் எண்ட நினைப்பு!
அப்பா நீங்க வரேக்க எனக்கு ஒரு மேலோடிக்கா வாங்கி வாங்க. பிங்க் கலர். அவவின்டையும் பிங்க் கலர். நானும் ஒருக்கா அத வாசிச்சு எல்லாருக்கும் காட்டனும்.
அதோட உங்களால முடியுமேண்டா, ஒரு கிரிக்கெட் பாட்டும் மூண்டு டின் பாலும் வாங்கி வாங்க. சொல்லமறந்த்திட்டன், எனக்கு விஞ்ஞானத்துக்கு எண்பது மார்க்ஸ். நல்லா படிக்கிறன் எண்டு மாஸ்டர் சொன்னவர்.
இப்படிக்கு,
உங்கள் செல்ல மகன்,
குமரன்

1537pk_zusa_k_p1


கடித்ததை மடித்து அம்மாவிடம் கொடுத்த நாள் தொட்டு குமரன் அப்பாவை எதிர்பார்க்கத்தொடங்கிவிட்டான். இது நடந்தது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா வரும் நாளும் வந்தது. இன்றைக்கு தான், அந்த சித்திரை மாதக்கப்பல் யாழ்ப்பாணம் வருகிறது.


Lanka-Muditha-629818காலையிலேயே குமரன் உதயன் பத்திரிகை வாங்கிபார்த்து விட்டான். கப்பல் வரும் சேதி உண்மை தான். சிலவேளை கப்பல் வருவது தடைப்படுவதும் உண்டு. இந்த கப்பலில் தான் ஆர்மியும் தங்களுடைய சாமான்கள் கொண்டுவரும். இதனால் அவ்வப்போது கடல் சண்டையும் நடக்கும். அதில் தோற்றுவிட்டால் ஆர்மி கப்பலை  தங்களின் காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு  மீண்டும் கொழும்புக்கே திரும்பிவிடும். இதையெல்லாம் தாண்டி இந்த கப்பல் வந்து சேர்ந்தால் சந்திப்பிள்ளையாருக்கு ஐந்து ரூபாய் தருவதாய் குமரன் வாக்களித்திருக்கிறான். எப்படியும் வந்துவிடும். 



மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. அப்பா இன்னும் வரவில்லை. அம்மா குளித்துவிட்டு தயாராக இருந்தாள். பவுடர் கொஞ்சம் போட்டிருந்தாள் போல. அக்கா தனது அறையை நன்றாக சுத்தம் செய்து வைத்திருந்தாள். அண்ணன் வெளியே எங்கேயோ நண்பர்களோடு சென்றிருந்தான். அவன் எப்போதும் இப்படித்தான். அப்பா எதிலே வருவார்  என்று குமரனுக்கு ஒரே சிந்தனை. ஓட்டோவில் வரலாம், இல்லை டாக்ஸியில் வரலாம். தெரியவில்லை. குமரனுக்கு அவசரமாக மூத்திரம் வந்தது. புலிப்பாய்ச்சலாய் டாய்லெட்டுக்கு ஓடிப்போய் இருந்துவிட்டு ஓடி வர, அக்காள் டாய்லெட்டுக்கு தண்ணீர்  ஊற்ற மறக்காதே என்று கத்தினாள். அதே வேகத்தில் திரும்பி ஓடி கிணற்றிலே ஒரு வாளி  தண்ணீர் அள்ளிகொண்டு இருக்கும்போது,

“அம்மா … அப்பா வந்திட்டார், ஓடியாங்க”

என்று அக்காள் கத்தும் சத்தம் கேட்க,  வாளியை அப்படியே கிணற்றில் போட்டுவிட்டு வாசலுக்கு ஓடினான் குமரன். அப்பா தான். சேர்ட் எல்லாம் வெளியே தள்ளிக்கொண்டு, தலையிலே ஒரு சிவப்பு தொப்பியுடன் அப்பா. உடுப்பு முழுதும் ஒரே சகதி. சைக்கிள் ஒன்றை வாங்கி அதை கப்பலிலேயே கொண்டுவந்திருக்கிறார். புது சைக்கிள் முழுதும் சேறு அப்பி இருந்தது. ஹாண்டிலின் இருபுறமும் பெரிய சைஸ் பைகள் இரண்டு. பின் காரியரில் பென்னாம் பெரிய சூட்கேஸ். மூன்று நாள் தாடியில் அப்பா சிரித்தார்.

“எப்பிடி பயணம், நல்லா களைச்சு போனீங்க போல, இங்க குமரன் காலம தொட்டு உங்கள தான் பார்த்துகொண்டு இருக்கிறான்” -

அம்மா சொல்லிவிட்டு உடனே தேனீர் தயாரிக்க குசினிக்குள் போய்விட்டாள். அப்பா சைக்கிளை சுவரில் சாய்த்து விட்டு எல்லோரையும் பார்த்துச்சிரித்தார். அக்காவின் தலையை மிருதுவாக தடவியபடியே, மூத்தவன் எங்கே என்று விசாரித்துக்கொண்டு குமரனை அப்படியே அலேக்காய் தூக்கி வைத்து இரண்டு கன்னத்திலும் முத்தம் இட்டார்.

“என்னடா இப்படி வளர்ந்திட்டாய்?  அப்பாவை காலமைல இருந்து தேடினியா செல்லம்? "

----
----
----

“மேலோடிக்கா வாங்கிட்டு வந்தியா அப்பா?” 

என்றான் குமரன் அந்த சூட்கேசையே பார்த்தபடி!


--------------------------  முற்றும் ---------------------------


பின்குறிப்பு: இது நான் ஆங்கிலத்தில் எழுதிய மேலோடிக்கா என்ற சிறுகதையின் தமிழ் வடிவம், திருத்தங்களோடு! இதிலே சில தகவல் பிழைகள் இருக்கின்றன. புனைவுக்கு எது தேவையோ அதை மட்டுமே எடுத்து கற்பனை சேர்த்து இருக்கிறேன்!



Comments

  1. அழகான கதை......

    ReplyDelete
  2. நன்றி Rajh, தொடர்ந்த வருகைக்கும் ஊக்கத்துக்கும்

    ReplyDelete
  3. உண்மையைச் சொன்னா இது எண்ட lifela நடந்த கதை மாதிரியே இருக்கு.. இதே மாதிரித்தான் நானும் மேலோடிக்கவுக்காக வருஷம் 2 தரம் மன்னாரிலிருந்து வரும் அப்பாவை பாத்துக் கொண்டிருந்த நேரம் அவர் எனக்கு புது சைக்கிள் வாங்கி அதை ஓடிக்கொண்டு வந்தவர்.. உங்களுக்கு கிடைச்சுதோ இல்லையோ, அப்பெல்லாம் எனக்கு வீசிங் வரதால மேலோடிக்கா ஊதாக்குடாதம் எண்டு வாங்கலையாம்.. அதனால பள்ளிக்கூட bandla சேர முடியல.. :( அப்புறம் அப்பா திரும்பி ஊருக்கு போறவரை மூஞ்சையை தூக்கி வச்சிட்டிருந்தன்..

    "ஸ்ரீமா" எண்ட பெயர் கேட்ட மாதிரி இல்லையே எண்டு google பண்ணி.. ச்சே பூர் மெமரி.. சிறிமா எண்டா ஒருவேளை டக்கெண்டு பிடிச்சிருப்பம்..

    ReplyDelete
  4. ஹாய் அண்ணா, கதை சூப்பர். ஆங்கிலத்தினை விட தமிழ்தான் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சரியான மொழி என்பதற்கு இந்த கதை சரியான உதாரணம் :).

    //
    சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை
    //

    நாங்க ஒண்ணும் சந்தேகப்படமாட்டோம். உங்க பேரைத்தான் "ஜெக்"கின்னு மாத்திட்டீங்களே!

    ReplyDelete
  5. ஹா ஹா ... ஆடு வளர்த்தது உண்மை .. ஆனா பெயர் எல்லாம் factitious தான். அந்த ஒரு சீசனில மேலோடிகா famous ஒ தெரியேல்ல. Or may be its just a coincidence.

    என்ன கஷ்டமோ துன்பமோ, nostalgic memories எப்போதுமே ஒரு புன்னகையை கொண்டுவரும் இல்லையா?

    ReplyDelete
  6. @விமல், ஆங்கிலத்தை தமிழ் மாதிரி எழுத நான் என்ன சயந்தன் மாதிரி ஷேக்ஸ்பியர் எண்டு நினைச்சீங்களா? என்ன கொஞ்சம் எனக்கு தெரிஞ்ச பீட்டர்ல தாளிச்சுக்கொண்டு இருந்தன்!!!

    அந்த பெயர் குழப்பம் எல்லாம் ஏன் கதையில் வந்தது என்று அறிய நாளை வெளிவரும் வியாழ மாற்றம் பாருங்கள் (சும்மா விளம்பரம் தான்)!!!

    ReplyDelete
  7. பழம் தான் தலைவரே ..

    --சரவணன்

    ======================

    nice da
    -- நிஷாந்தன்

    ======================

    Superb...!
    -- ஆதவன்

    =====================

    super machan...nice to see ur house..thathavin naapagan .

    -- இளங்குமரன்

    =====================

    good thought machan, kanthi matter supper da.
    எல்லாம் ஒரு பொறமை தான்டா, சரி அத விடு இனி எழுதும் கதையிலும் அதை பற்றி உன்னிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர் பார்கிறேன்டா.

    --சுதாகரன்

    =====================

    தம்பி....கதை மிகவும் நன்றாக உள்ளது......இது கதை அல்ல நியம்.......யாழில் இருந்த மக்கள் பலரின் நியக்கதை.......super......

    -- பிரேமாவதி

    ======================

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .