Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்





ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

அன்றுதான் ரோஜாவின் தமக்கையை பொண்ணு பார்க்க ரிஷி வருகிறான். அவர்கள் வரும் காரை ஒளிந்து நின்று பார்ப்பதற்காக ரோஜாவும் அவள் நண்பியான ஒரு சிறுமியும் ஆடுகளை காருக்கு குறுக்கே விடுகிறார்கள். கார் மேலே செல்லமுடியவில்லை. நிற்கிறது. இந்த இடத்தில் அவன் ஸ்டைலாக காரைவிட்டு இறங்குகிறான். ரிஷி. சிகரட் பிடிக்கிறான். இன்னொரு கதவைத்திறந்து அவன் தாய் இறங்குகிறாள். அம்மாவும் பிள்ளையும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். 

கிராமத்துக்குள் நுழைகிறார்கள். கிராமத்து பெரிசுகள் மாப்பிள்ளையிடம் சம்பளம் விசாரிக்க, நகரத்தில் வளர்ந்தவன் சொல்லவே மாட்டான். சின்ன சின்னதாய் நகர கிராமிய கலாச்சாரங்களின் வேறுபாடுகளை நூலிழையாய் வெளியில் தெரியும். செண்பகத்தை பெண் பார்க்கும் படலத்தில் ரிஷி தனியே சந்திக்கிறான். அவள் பேசுகிறாள் இல்லை. 

“ஏதாவது சொல்லு, ஸ்ரீதேவின்னு சொல்லு, இல்ல கொல்லங்குடி கருப்பாயினு சொல்லு, ஜஸ்ட் சே சம்திங்”
“எனக்கு.. எனக்கிந்த கல்யாணத்தில இஷ்டமில்ல”
“வாட்? கம் எகைன்?” 
செண்பகம் தன் மாமன் மகனை விரும்புவதாக குண்டை தூக்கிப்போட, வேறு வழியில்லாமல் ரிஷி ரோஜாவை திருமணம் செய்ய போவதாக சொல்ல, டிபிக்கல் திருமண சச்சரவுகள் முடிந்து அவரவர் ஜோடியைச் சேர்ந்து, ரோஜா ரிஷியுடன் சென்னை வருகிறாள். அப்புறம் நடைபெறும் ஒரு பத்து இருபது நிமிட காட்சிகள்தான் படத்தில் உயிர் நாடி. ரிஷி ரோஜாவுக்கிடையிலான கியூட்டான ஊடல். அந்த காதலை ரிஷியின் அம்மா மற்றும் மேலதிகாரி மூலம் மணிரத்னம் டிரைவ் பண்ணுவார். ஒரு சீனில் ரிஷி தவறுதலாக ரோஜாவை இழுக்கும் பொது அவள் ஜாக்கட் கிழிந்து விட, நாமெல்லாம் ஆயுசுக்கும் மறக்காத ரோஜா வசனம்உருவானது. 

“சாரி” 
“இங்க பார், தெரியாம நடந்திச்சு, சாரி” 
“எஸ் . ஓ ஆர் ஆர் வை கோபப்படுறியா? அதான் சாரி சொல்லிட்டனே. மறந்திடேன்.” 

ரோஜா ஒன்றுமே பேசாமல் கோபத்தோடு நிற்பாள். 

“நான் ஒன்னும் மோசமானவன் இல்ல. கொஞ்சம் நல்லவன் தான்.” 

ம்ஹூம். சிலமனே இல்லை. 

“இங்க பாரு. பார்த்தா பாவமா இல்ல?” 

இந்த காட்சியை பார்த்துகொண்டிருப்பவருக்கும் காதல் வரும். ரகுமான் வேறு எங்கள் அவஸ்தை புரியாமல் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற பாரதி பாடலின் பொதுவான மெட்டை புல்லாங்குழலில் இசைக்க, முடித்தால் ரோஜா போல ஒரு ஸ்மார்டான கிராமத்து பொண்ணை தான் முடிப்பது என்று தீர்மானம் போட்டு இருபது வருஷங்கள் ஆகிறது... “மூக்கு புடைப்பாக இருந்தாதான் இப்படியெல்லாம் யோசிக்கத்தோணும்”.. “அம்மா .. என்ர முதுகு”. பின்னர் ரோஜா தன் தவறை உணர்ந்து மீண்டும் ரிஷியிடம் வந்து அதே வசனங்களை சொல்லும் இடம் நச். முதன் முதலில் காதல் ரோஜாவின் இசை அறிமுகமாகும் இடம். 

என்னா படம்டா இது? ரோஜா. 

“பூ கொடியின் புன்னகை” பாடல். காட்சியில் நடிக்கும் இருவரும் நிஜமாகவே காதல் வயப்படுகிறார்கள். “நீ ஒருமுறை திருப்பிக்கொண்டால், என் உயிருக்கு உறுதியில்லை” என்ற வரிகள் வரும் வேளையில் கௌதமியும் மோகன்லாலும் தன்னிலை மறப்பார்கள். காட்சி குழம்பிவிட, இயக்குனர் கட் கட் என்பார். கிராமபோன் அடிக்கடி அபஸ்வரமாக நிறுத்தப்படும். மீண்டும் ரீடேக். மீண்டும் உணர்ச்சி வசப்படல். மீண்டும் கிராமபோன் கீச்சிடும். நிஜத்தில் காதல் திரையில் காட்சிப்பிழை. அப்படி என்றால் திரையில் காதல் நிஜத்தில் காட்சிப் பிழையாகிறது. கவிதை. அதை கமராவில் கொண்டுவருவார் நம்மட ஆள். படம் இருவர். 

காதலர்கள் களவாக ஒரு ரெஸ்டோரண்டில் கோப்பி குடிக்க வருகிறார்கள். காதலியின் அப்பாவும் அங்கே வருகிறார். அவள் பயந்துபோகிறாள். அவன் ஒரு மான்லி ஹீரோ. துடுதுடுப்பானவன். இங்கிருந்தே அவளின் தகப்பனை அழைக்கிறான். “Mr சந்திரமௌலி, உங்களை தான்” என்று அவன் சத்தமாக கத்த, அவள் மேசைக்கு கீழே பதுங்குவாள். கியூட்டாக இருக்கும். படம் மௌனராகம். 

இடம் விபச்சாரவிடுதி. அவன் உள்ளே நுழைந்து சாவகாசமாக ஷேர்ட்டை கழட்டிப்போட்டுவிட்டு அவளைப்பார்க்கிறான். அவள் கண்களில் கொஞ்சம் பயம். நிறைய குழந்தைத்தனம். 

“நாளைக்கு கணக்கு பரீட்சை, சீக்கிரமா விட்டீங்கன்னா கணக்கு போட்டு பழகிக்குவேன்” 

அவள் சொன்னதை கேட்கும்போது அவனைப்போலவே எமக்கும் நெஞ்சு கனக்கும். இப்படி ஒரு நாயகி தமிழ் சினிமாவில் அறிமுகமாவதே எமக்கு புதுசு. படம் நாயகன். 

ஒரு பாலைவனத்து இரவுக்குளிர். பக்கம் பக்கமாக அந்த ஆணும் பெண்ணும். இருவருக்குள்ளும் ஏராளம் ஆசைகள். இருவேறு கனவுகள். ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று இருக்கிறதே. அது விலக விலக நெருங்கிவரும். அவன் அவள் மூக்கு வரை நெருங்கிவிட்டான். கேட்கிறான். 

“உலகத்திலேயே உனக்கு பிடிக்காதது என்ன?”
“நீ இவ்வளவு கிட்ட வர்ரது, உன் சிரிப்பு, உன் அதிக பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற அந்த சந்தோஷம், அது பிடிக்கல”
“ஆக்சுவலா உனக்கு என்னைப் பார்த்தா பொறாமை”
“ஆமா” 
இந்த வரிகளில்தான் எத்தனை உண்மைகள். அந்த பெண்ணுக்குள் புதைந்திருக்கும் ஆழ்மனது உணர்வை வெளியே கொண்டுவரும் காட்சி. படம் உயிரே. 

காந்தியவாதியான பத்திரிகையாளரும் அம்பானியும் சந்தித்து பேசும் இடம். 

“நீ கண்ட இடத்திலையும் உன்னோட காசை இரைச்சி விட்டிருக்கே இல்ல” 
“நானாஜி .. ஓலகத்தில எல்லா விதமான ஆளுங்களும் இருக்கிறாங்க .. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டி இருக்கு.. அதால ரெண்டு டைப் செருப்போட நான் சுத்திக்கிட்டிருக்கேன். ஒன்று தங்கத்தில, மற்றது வெள்ளியில, யாருக்கு எது தேவையோ அதால அவங்களை அடிச்சிட்டு முன்னேறிக்கொண்டே இருப்பேன்” 
“எனக்கு என்ன மாதிரி செருப்பு வச்சிருக்கே?” 
“உங்களுக்கெல்லாம் காந்தி!” 
“அப்ப நீ என்னையும் செருப்பால அடிப்பே இல்ல” 

இது அம்பானி வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் குரு. 

மணிரத்னம். இந்தப்பெயரை கேட்டாலே கும்மிருட்டுக்குள்ளால் இருந்து ஒரு ஒளிக்கீற்று தென்படும் காட்சி கண்களுக்குள் வரும். அது அவருடைய படங்களை பார்த்த தாக்கத்தால் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் விடிவுக்கு முயற்சித்த ஒளிக்கீற்றும் அவரே என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சினிமாவை கமராவால் கதை சொல்லும் ஒளி வடிவமாக்கிய மாபெரும் இயக்குனர். 

1997ம் ஆண்டு பொங்கல், வவுனியாவில் உள்ள ஒரு அகதிமுகாமில் இருக்கிறோம். அம்மாள் நோய், முட்கம்பிவேலிக்குள் வாசம், வாரத்தில் சில நாட்கள் அதுவும் பகல் சில மணி நேரங்கள் வெளியே சென்று வர இராணுவத்தின் அனுமதி கிடைக்கும். அன்று நண்பர் ஒருவர் வந்து அழைத்துச்சென்றார். என்ன செய்ய போகிறாய்? கோயிலுக்கு போவோமா? என்று அவர் கேட்டபோது நான் சொன்னது, “இருவர்” பார்க்கவேண்டும் என்று. அந்தப்படம் அவ்வளவு பிடிக்கும். அதில் ஒரு காட்சி வரும். 

சட்டசபை தொகுதி தேர்தல் நிலவரங்களை, கனிமொழிக்கு பாடம் சொல்லிக்கொடுத்தபடியே ராஜாத்தியுடன் கருணாநிதி பேசும்காட்சி. தமிழும் அரசியலும் கலக்கும் இடம். எம்ஜீஆரின் வளர்ச்சியை கண்டு பயந்து போய் இருக்கும் சமயம் ராஜாத்தியும் கருணாநிதியும் பேசும் இந்த காட்சியும் ஒரு தனி அழகு. 

“உங்க இடத்த அவர் பிடிச்சுருவாரோ என்று ஒரு பயம்”
“ஆனந்தனா? கட்சி என்ன ஆறது?”
“இதில நாம கட்சிக்கு நல்லது கேட்டது என்னு பாக்கலியே? நம்ம நலத்ததானே பாக்கறோம்?”
“ஆ, சுயநலம் தான், எனக்கும் ஆசை இருக்கு, தமிழ்நாடே பார்க்காத சிறந்த முதலமைச்சர் நானாதான் இருக்கணும்னு.. முன்னாடியோ சரி .. பின்னாடியோ சரி.” 

மௌனராகத்தில் அந்த மோகனின் நடிப்பு, யார் அப்படி கொண்டுவர முடியும்? என்ன ஒரு உணர்ச்சிபோராட்டம். அவரின் பக்குவமான ஈகோவுக்கும் ரேவதியின் குழந்தைத்தனமான ஈகோவுக்கும் இடையிலான போராட்டம். சான்சே இல்லை. எதை எடுக்க எதை விட? நாயகனின் அந்த ஒருவித டிலேயிட் டைமிங் வசனங்கள். பின்னாளிலே சிவாஜியோடு கமல் தேவர்மகனில் செய்தபோது, அடடே இது நாயகன் நடிப்பு இல்லையா என்று எண்ணத்தோன்றியது. 

தளபதி. ரஜனி “நடித்த” இறுதிப்படம். அதில் ஒரு கவிதை இருக்கும். மணிரத்னம் எழுதிய கவிதை. ஸ்ரீவித்யாவும் ரஜனியும் கோயிலுக்கு வருகிறார்கள். இருவரும் பிரகாரத்தில் நின்றுகொண்டு சாமியை வணங்குகிறார்கள். அப்போது புகைவண்டிச் சத்தம் கேட்கிறது. அந்தச்சத்தம் இருவருக்குமே மிகவும் பெர்சனலானது. அந்த வண்டியில்தான் மகனை அவள் கைக்குழந்தையாய் இருக்கும்போது பெட்டியில் வைத்து அனுப்பினாள். ஒவ்வொருதடவையும் புகைவண்டிச்சத்தத்தை கேட்கும்போது அவளுக்குள் ஒரு ஏக்கம் குடிகொள்ளும். அவனைக் காண்போமா? அவனுக்கும் அந்த வண்டியில்தானே தாய் தன்னை அனாதையாய் விட்டுப்போனாளே என்கின்ற ஏக்கம். வண்டிச்சத்தம் இன்னமும் பெரிதாக கேட்க, இருவருமே ஏக சமயத்தில் வண்டிச் சத்தம் வந்த திசையில் அனிச்சையாக திரும்புவார்கள். கவிதை. இந்த காட்சியை இன்னமும் கவனமாக பார்த்தால் கவிதைக்கு இன்னொரு அர்த்தமும் வெளிப்படும். 

தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசையை பார்க்கும் தருணத்தில் கமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாய்க்கு முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான். தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்குதான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார். 

ஒரு படம் காட்சிப்படுத்தும்போது இப்படி எல்லாம் சிந்திப்பார்களா? என்றால், ஆம், மணிரத்னம் சிந்திப்பார். அதுவும் 80-90 களில் இருந்த மணிரத்னம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படியே அவர் யோசிக்காமல்தான் அந்த காட்சியை அமைந்திருந்தாலும் என்ன இப்போ? ஒரு நல்ல இலக்கியம் படைப்பாளனையும் தாண்டி யோசிக்கவைக்கவேண்டும். 

பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான ரொபேர்ட் பிரவுணிங்கிடம் போய் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில், 

"இதை எழுதும்போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!" 

திருடா திருடா. தமிழில் ஒரு ஸ்டைலிஷ் அக்சன் கொமெடியை இந்தப்படத்தில் தந்து அசத்தினார் மணிரத்னம். படத்தில் “களவாணிப் பசங்களா” என்று ஹீரா சொல்லும் ஒவ்வொரு முறையும் நமக்கும் சிரிப்புவரும். பம்பாய் படத்தை சொல்லவும் வேண்டுமா? உயிரே உயிரே பாட்டில் மனிஷா அந்த பர்காவை விலத்திவிட்டு விடுதலையடையும் ஒரு பாடல் காட்சி போதாது? 

மணிரத்னம் இசையில் செய்த தலைமுறை மாற்றங்கள் ரகுமானை அறிமுகம் செய்தது மாத்திரம் இல்லை.. பகல்நிலவின் “பூ மாலையே, தோள் சேரவா” என்ற பாடலின் மிக்ஸ் தமிழுக்கு புதுசு. அதை இளையராஜா தன்னிச்சையாக உருவாக்கினார் என்று வைத்தால் கூட, பின்னாளில் வந்த “மன்றம் வந்த”, “பனிவிழும் இரவு” போன்ற கொன்டெம்பரரி மெட்டுகள் ராஜாவின் கைவண்ணத்தில் உருவானமைக்கு மணிரத்னம் ஒரு மூலம் என்பதை மறுக்க முடியாது. அக்னிநட்சத்திரத்தில் தபேலா வாத்தியமே கிடையாது என்று நினைக்கிறேன். அந்த நாளில் ராஜா அதை பரிசோதனை செய்தமைக்கு மணிரத்னம் ரசனையும் ஒரு காரணம். ராக்கம்மா கையத்தட்டில் “குனித்த புருவம்” தேவாரம் வருவதும், சுந்தரி கண்ணால் ஒரு சேதியின் சிம்போனி ஸ்டைல் ஒர்கஸ்ராவும் முக்கிய மணிரத்னம் ஆளுமைகள். அவை ராஜாவின் குழந்தைகள்தான், ஆனால் குழந்தை பிறக்க ஆணும் வேண்டும் அல்லவா. பின்னர் ரகுமான் வந்த பிறகு சோதனை முயற்சிகள் இன்னும் அதிகமாகின. ராசாத்தி, சந்தோஷ கண்ணீரே, வெள்ளைப்பூக்கள், தேரேபினா, நெஞ்சமெல்லாம், செப்டெம்பர் மாதம், ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி என்று பரிசோதனை மேல் பரிசோதனை. மணிரத்னமும் பாடல்களும் என்று தனி தொடரே எழுதலாம. 

கிறிஸ்மஸ் விடுமுறைக்கு நேபாளம் சென்று திரும்பும் வழியில் டெல்லியில் சில நாட்கள் தங்கினேன். அப்போது ராஷ்ட்ரபதி பவன், நாடாளுமன்றம் அந்த அகன்ற வீதி எல்லாம் பார்க்கும்போது “மன்றம் வந்த தென்றலுக்கு” காட்சிதான் ஞாபகம் வந்தது. பின்னர் தாஜ்மகால் சென்றபோது மோகன் ரேவதிக்கு காட்டிய தாஜ்மகாலும் “வெண்ணிலா வெண்ணிலா” என்ற இருவர் பாடலும் ஞாபகம் வந்தது. எத்தனை படங்கள் டெல்லியையும் ஆக்ராவையும் சுற்றிச் சுற்றி காட்டினாலும் இவர் காட்டியது போல எவரும் காட்டவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயில் த்ரிஷா சொல்வது போல, இவர் கண்ணால் பார்க்கும் போது மட்டும் அவை அத்தனை அழகாக தெரிகின்றதோ? நீயொரு காதல் சங்கீதம் பாடலில் கமலும் சரண்யாவும் ஒரு ஓட்டை வீட்டுக்குள் குடித்தனம் பண்ணுவார்கள். மழை பெய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கூரை ஒழுக்கில் இருந்து துளி வடிய இவர்கள் ஒதுங்க இடம் தேடுவார்கள். மழை இன்னமும் அதிகரிக்க, வெளியிலிருந்து குடுகுடுவென புறாக்கள் கூட்டம் உள்ளே ஒதுங்குவதற்கு இடம்தேடி நுழையும். கவிதை. மணிரத்னம் ஒளிப்பதிவிலும் காட்சியமைப்பிலும் செய்த புதுமைகள் உணர்வோடு ஒன்றியிருக்கும். இசையை போலவே இந்த துறையிலும் ஒரு தலைமுறை மாற்றத்துக்கு காரணமானவர் அவர். 

மணிரத்னத்தின் அண்மைக்கால படங்கள் மனதுக்குள் கொஞ்சம் சலிப்பை வரவைப்பவை. ராவணனில் ஆரம்பித்த ஒருவித சலிப்புத்தன்மை கடல் படத்தில் உச்சம் பெற்றது. ஒரு கதையை எப்படி தொய்வில்லாமல் இறுதிவரை ஸ்டைலிஷாக நகர்த்துவது என்று இந்த பயலுகளுக்கு சொல்லிக்குடுத்த ஆளு மணிரத்னம். மௌனராகம் கிளைமக்ஸில் ரேவதி வசனம் பேசும் காட்சியாகட்டும். “என் நண்பனை கொண்ணுட்டியேடா” என்று ரஜனி ஆத்திரத்தோடு அழுவதாக இருக்கட்டும். அந்த பாலத்தில் அரவிந்சாமி உருண்டுவரும்போது மதுபாலா ஏங்கிப்போய் பார்ப்பார். “உன் கண்ணில் நீர் வழிந்தால்” பிஜிஎம் மீண்டும் போகும். அலைபாயுதே கிளைமக்ஸ். கன்னத்தில் முத்தமிட்டாலில் இராமனாதபுரம் காட்சிகள். நந்திதாதாஸிடம் கேள்வி கேட்கும் அமுதா. எங்க போயிற்று தலைவரே இதெல்லாம்? கடல் படம் முழுக்க அழுத்தமே இல்லாத காட்சிகள். கதையின் ஓட்டத்துக்கு ஒட்டாத வசனங்கள். சாத்தான் இயேசு என்று ஒருமுறை சொன்னா போதாதா? திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு. படம் எடிட் பண்ணிய பிறகு பார்க்கவே இல்லையா? போங்காட்டம் சாரே. 

சுஜாதா இல்லாமல்தானே நாயகன் உருவானது. மணிரத்னம் யானை அல்ல குதிரை என்பது தெரியவேண்டும். அடுத்தபடத்திலேயே தெரியவரும். வரவேண்டும். 

என் வயதுக்காரர் அப்போது ரோஜா மதுபாலா போன்ற பெண்ணையே காதலிக்கவேண்டும் என்று நினைத்தது போல, எனக்கு ஒரு ஐந்து வயது மூத்தவர்கள் மௌன ராகம் ரேவதி போன்ற ஒரு பெண்ணை மணம் முடிக்கவேண்டும் என்று நினைத்தார்கள். இளையவர்கள் அலைபாயுதே ஷாலினி என்றார்கள். இதிலே இருக்கின்ற நடைமுறை இன்டலக்சுவல் சிக்கலை மணிரத்னம் இலாவகமாக எமக்கு மறைத்துவிட்டார். ஒரு குக்கிராமத்து ரோஜாவும் கிரிப்டோகிராபிக் என்ஜினியரும் எப்படி நாளாந்த வாழ்க்கையில் தம்முடைய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு மணிரத்தினத்திடம் பதில் இல்லை. சொல்லவேண்டிய தேவையும் இல்லை. இது ஒரு கலைதானே. இரண்டு எக்ஸ்ட்ரீம் ஈகோ மனிதர்கள் திருமண வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பார்கள்? என்று காட்டும் முன்னமேயே மௌனராகம் படத்தின் இரண்டு மணி நேரம் முடிந்துவிட்டது. மணிரத்னம் ஒருவிதமான பன்டசி கதை உலகை படைத்து அதில் எம்மை வாழ வைத்துவிடுவார். அவருக்கே உரித்தான கதை சொல்லும் பாணி, வசனநடை, காட்சியமைப்பு எல்லாம் அந்த ட்ரீம் உலகை உண்மை என்று நம்ப வைத்து விடும். இன்செப்ஷன் படத்தில் வரும் நாயகனின் மனைவி சிந்தித்தது போல. அதுதான் மௌனராகம், அதுதான் ரோஜா, அதுதான் கன்னத்தில் முத்தமிட்டால். உண்மையை ஓரளவுக்கு நெருங்கச் சொல்லியது குருவும் இருவரும். ஆனால் அந்தப்படங்கள் பலரை சென்று அடையவில்லை. 

ஒருமுறை சக்தி டிவியின் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” நிகழ்ச்சி செய்யும்போது, ராஜேஷ்கண்ணா தொலைபேசியில் அழைத்து “எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டான். அப்போது நான் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம். “மணிரத்தினம் போல ஒரு இயக்குனராக வர ஆசைப்படுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். நிகழ்ச்சியை லைவ்வாக கேட்ட அப்பா டென்ஷனாகிவிட்டார். ஆனால் அந்தவயதில் மணிரத்னம் என்ற பெயர் வெறும் இயக்குனரோடு சம்பந்தப்பட்டதல்ல. அந்தப்பெயர் ஒரு இன்ஸ்பிரேஷன். எதையுமே ரசித்து ரசித்து, தூய்மையாக அழகியலோடு சமரசங்கள் இல்லாமல் செய்யவேண்டுமென்பதை உணரத்திய பல ஆளுமைகளுள் மணிரத்னமும் ஒருவர். அவர் தமிழ் சினிமாவில் இருப்பதால் இன்னமும் எம்மோடு நெருங்கிப்போகிறார். 

“உன்னோடு நான் கொண்ட பந்தம்”
“மண்ணோடு மழை கொண்ட சொந்தம்”
“காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்”
“கண்ணில் கண்ணில் கண்ணில் இன்பம்”

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூலிலிருந்து.

Photo Credits : Wikipedia 

Comments

  1. நன்றி மனோ, வருகைக்கும் கருத்துக்கும்!!!

    ReplyDelete
  2. JK, அருமையான பதிவு , கன்னத்தில் முத்தமிட்டால் கிளைமாக்ஸ் சீன் தான் எதிர்பார்த்தேன் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

    தீபன்

    ReplyDelete
  3. மச்சி, இதிலே எதை எடுக்க எதை விட என்ற ஒரு பிரச்சனை... ஆனானப்பட்ட ரோஜாவை கூட downplay பண்ணி இருப்பன்.... ஓரளவுக்கு கண்டுகொள்ளப்படாத விஷயங்களை தான் எழுதினேன். ஆனால் நிறைய மிஸ்ஸிங் .. அஞ்சலி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை ..sorry

    ReplyDelete
  4. அண்ணா,
    வாசித்து கொண்டுபோனதில் முடிவு வந்ததே தெரியவில்லை. இனிமையாக இருந்தது. "என் கொல்லைப்புறத்து காதலிகள்"யில் Part-2 எழுதக்கூடாது என்று யார் சொன்னது? அல்லது இங்கு miss ஆனதை வேறொரு தொடரில் எழுதுங்கோ :).

    "இருவர்" படம்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அதில் இறுதிகாட்சிகளில் வரும் ஒளிப்பதிவிற்காகவே எத்தனை தடவையும் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு,மணீரத்தினத்தின் ஸ்பெசாலிட்டியை ஒரு பதிவில் மட்டுமே எழுதி விடமுடியாது எனவே பாகம் 1 என போட்டு தொடரும் என முடித்திருக்கலாம்.மச்சி மணிரத்தினத்தின் ஸ்பெசாலிட்டியே குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டாமல் அனைத்து திரைக்கதைகளையும் நம் கண்முன்னே கொண்டு வந்தது, ஆனால் அதில் வெற்றி கொண்டது காதலின் பின்பான காதலர்களின் வாழ்வின் தருணங்களை திரையில் அப்பட்டமாக காட்டியதுதான் .மெளனராகம் ,ரோஜா,பம்பாய்,அலைபாயுதே,குரு,உதாரணம், ஆனால் எனக்கு பிடித்த காட்சி அலைபாயுதேவில் சின்னப்பொண்ணூ சாலினிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து மாதவனிடம் கொடுத்து விட்டு சென்றது சாலினி-மாதவனின் முகத்தில் காதலர்களின் பிரிவின் வலி உச்சத்தை கண்முன்னே காட்டியதுதான்.. மணிரத்தினம் பாணியைத்தான் பல காதலர்கள் விரும்புவது உண்மை.சின்ன வருத்தம் அஞ்சலி படம் பற்றிய எந்த ஒரு கருத்தும் இங்கே பதியப்படவில்லை என்பதுதான்..

    ReplyDelete
  6. @விமல் .. coffee with anu ல ஒரே ஆட்கள் வருஷம் ஒரு தரம் வருகிற மாதிரி அடுத்த ரௌன்ட்ல போட்டா போச்சுது..

    இருவர் அவரின் the most complete படம் என்று நினைக்கிறேன். அங்குலம் அங்குலமாக அதை ரசிக்கலாம்.

    ReplyDelete
  7. @மன்மதகுஞ்சு நன்றி தல

    இதயத்தை திருடாதே யும் மிஸ் ஆயிடிச்சு.. இன்னொரு சந்தர்ப்பம் கிடச்சா அடிச்சு ஆட வேண்டியது தான்

    ReplyDelete
  8. நன்றி KSS Rajh ... வருகைக்கு

    ReplyDelete
  9. Anna, Writing Good. Keep it up :-)

    ReplyDelete
  10. Thambi .. Thanks ... if you put your name, I would know who is this brother then!

    ReplyDelete
  11. எனக்கு மணிரத்தினம் என்ற இயக்குனரைத்தான் பிடிக்கும் மணிரத்தினம் என்ற மனிதரை அல்ல... ஏனெனில் அவரின் கொள்கைகளும் எனது கொள்கைகளும் இரு துருவங்கள்..

    சாதரணமாக மணிரத்தினத்தின் படங்களில் "நாயகன்"-ஐ தான் எல்லோரும் பிடிக்கும் என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு "இருவர்" தான் பிடிக்கும்.. அவரால் நாயகன் போன்றொரு படத்தை திரும்ப எடுத்தாலும் இருவர் போன்ற படத்தை இனி எடுக்கவே இயலாது அப்படி அதி உன்னதமான படம்தான் "இருவர்"..
    "இருவர்" படத்தில் ஒரு காட்சி, மோகன்லாலின் புதிய படம் (ரிக்ஷாக்காரன்) ரிலீஸ் ஆக இருக்கும் போது பிரகாஷ்ராஜ்ஜிடம் அவரது தொண்டர்கள் வந்து "இந்த படத்தோட ரிலீஸை தடுத்திடலாமா?"என்று கேட்க அப்போது பிரகாஷ்ராஜ் சொல்வார் "3 மணி நேர சினிமா பார்த்து கெட்டுப்போற மாதிரியா நாம அரசியல் பண்ணியிருக்கோம்?"....இதுதான் என்னைப்பொறுத்தவரையில் இந்தப் படத்தின் உச்சம் என சொல்வேன்.. இதே வசனத்தை "விஸ்வரூபம்" பிரச்சினை அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தியது...

    அதேபோல பி.ஸி.ஸ்ரீராம்-ஐ "நாயகன்"என்ற 3 மணி நேர படம் விரும்ப வைக்காததை "பச்சை நிறமே" என்ற பாடலில் பைத்தியமாக்க வைத்த பெருமையும் மணிரத்தினத்தையே சாரும்...

    ஆனால், இப்படிப்பட்ட ஒரு இயக்குனரை 'கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற படத்தில் ஈழத்தமிழரை கொச்சைப்படுத்தியதோடு அறவே வெறுக்கவும் செய்தேன்.... அதோடு இவரின் "மௌனராகம்" மோகன் பாத்திரமும் எனக்கு பிடிக்கத ஒரு பாத்திர அமைப்பு... அதிலிருந்து தான் மணிரத்தினம் என்ற இயக்குனரை நான் ரசித்தாலும் அந்த மனிதரை நான் வெறுக்கிறேன்...

    -வாமணன்-

    ReplyDelete
    Replies
    1. மணிரத்தினம் ஒரு இயக்குனர். இயக்குனரிடம் நல்ல படங்களை தான் எதிரபார்க்கவேண்டும். எனக்கு மணிரத்னம் கொள்கை எதுவென்றே தெரியாது. தெரியவேண்டியதுமில்லை. கொள்கைகளை விவேகானந்தர், கார்ல்மாக்ஸ், ஓஷோ போன்றவர்களிடம் தேடலாம்.

      ரோஜாவுக்கு அடுத்தபடியாக பிடித்த படம் இருவர் தான்.

      //"மௌனராகம்" மோகன் பாத்திரமும் //
      ஆச்சர்யம். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரப்படைப்பு. பாத்திரங்கள் இயல்பான பலவீனங்களோடு அமைக்கப்படவேண்டும் என்று நினைப்பவன் நான். அதனாலேயே மோகன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடிச்சது.

      Delete
    2. எப்படியும் ஒரு படைப்பளியின் ஆழ்மனதில் உள்ள கொள்கைகள் தானே ஒரு படைப்பாக உருவாகும்??? அதேபோல, மணிரத்தினமும் அதற்க்கு விதிவிலக்கில்லை என நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை.. அவருடைய படங்களின் மூலத்தைப் பாருங்கள் ஏதாவது ஒருவகையில் முன்னைய படங்களுடன் ஒத்துப் போகும்...

      மௌனராகத்தில் மோகனின் கதாபாத்திரம் அதிகூடிய பொறுமையை கொண்டதாக உள்ளதோ என நான் நினைக்கிறேன். தனக்கு திருமணம் வேண்டாம் என சொல்ல வருபவன் தனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என சொல்பவளைப் பார்த்து உடனே காதல் வயப்பட்டு, அவளை திருமணம் செய்து, அவளின் ஒத்துழையாமையை சகித்து, பின்னாளில் அவளுடைய பழைய காதலை அறிந்து, அப்பொதும் அவளின் விவாகரத்து ஆசையை நிறைவேற்ற முனைந்து, இந்த இடைவெளியில் மீண்டும் அவளை தன்னுடன் சேர்ந்து இருக்க வைக்க முனைவதும் என யதார்த்தத்துக்கு (என்னைப் பொறுத்தவரையில்) அப்பாற்பட்ட பொறுமை உள்ள கதபாத்திரம் என நான் கருதுவதால் தான் எனக்கு அந்த கதபாத்திரத்தை பிடிக்கவில்லை....ஆனாலும் அதில் வரும் கார்த்திக் இப்பொதும் எனக்கு ரொம்ப பிடித்த பாத்திரம்..

      -வாமணன்-

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .