“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர்! கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை!
சாண்டில்யன் பாணி சரித்திர நவீனம்! மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு! இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா?). இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெறும் அரசனின் பார்வையில் இல்லாமல் ஒரு படைத்தலைவன் பார்வையில் வந்த கதை. இதிலே தான் புகழ்பெற்ற “சிவ சிவா இயேசுவை மறப்பேனா” வசனமும் வருகிறது. நாமறியாத இருநூறு வருஷம் பழமையான ஈழமும் அறிந்த ஈழமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை மிக செடேட்டிவாக சொல்லாமல் சொல்லி, இயல்பாக தன் பாணியில் எழுதியிருப்பார் செங்கை ஆழியான்.
செங்கை ஆழியான் அளவுக்கு ஈழத்தவர் வாழ்க்கையை படம் பிடித்து வேறு யாரும் காட்டியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை. எங்கள் இலக்கியங்களில் போரும், சுய பச்சாதாபமும், அளவுக்கதிகமான வீரமும், வெறுப்பும், எம்மை விட்டால் யாரும் இல்லை என்ற திமிரும் இருக்கும். செங்கை ஆழியான் இதில் விதிவிலக்கு. வாழ்க்கையை அப்படியே தந்தவர். அதிலே எந்த பகட்டும் இல்லை. வெறுப்பும் இல்லை. வீராவேசமும் இல்லை. செங்கை ஆழியானை நான் எப்போதும் ஒரு லிபரல் எழுத்தாளர் என்று சொல்லுவேன். தனக்கென்று ஒரு அரசியல் பார்வை, அஜெண்டா வைத்துக்கொள்ளாமல் தன் போக்கில் எழுதுவதால் அவர் எழுத்துக்கள் மிகவும் உண்மையாகவும் மிகைப்படாமலும் இருக்கும். அவரை இனி வரும் தலைமுறை வாசிக்காமல் தவிர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் சொல்லுகிறேன். உங்கள் வீட்டு லைப்ரரியில் அட்லீஸ்ட் அவருடைய யானை, கிடுகுவேலி போன்ற புத்தகங்களையாவது நிச்சயம் வாங்கி அடுக்குங்கள்.
Comments
Post a Comment