Skip to main content

“சின்ன குயிலின் சோகம்!”


220px-Kschithraஅலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை!

“பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க முடியாமல் ஐபாடை நிறுத்திவிட்டு அந்த சின்ன பொண்ணையே வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு தாய்க்கு இதை விட வலி வேண்டாம்.



உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம்
என் தன் கண்ணீர் துளிகளே




நந்தனா பிறந்த போது நானும் அக்காவும் பேசிக்கொண்டது ஞாபகம் வருகிறது. தவமிருந்து பெற்றபிள்ளை. சித்ரா எங்கு போனாலும் பொண்ணை கூட்டிக்கொண்டே போவார். அப்போதெல்லாம் நந்தனாவை குறிப்பிடாமல் எந்த ஒரு சித்ராவின் பேட்டியும் இருக்காது. அத்தனை பாசம்.  இந்த அழகு நிலவே பாடலில் கூட அந்த தாயின் ஏக்கம் நிறைந்து வழியும். இதைக்கேட்டு கண்கலங்காமலும் இருக்க முடியுமா? இதற்கு மேலும் அந்த குழந்தையையும் தாயையும் பார்க்க தைரியமின்றி பாடலையும் மாற்றிவிட்டு நானும் இடம் மாறுகிறேன்..

என்ன பாடல் அடுத்தது என்று ஸ்கிப் ஆகி ஸ்கிப் ஆகி எதிலும் மனம் லயிக்காமல் இந்த பாட்டில் வந்து நின்றது. முதலில் வந்தது யேசுதாஸ் பாடல் தான், ஸ்கிப் ஆகி சித்ராவின் பாட்டுக்கு தாவினேன்.

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும்ம் ஓய்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்


 
 
இந்த பாடலை எல்லாம் சித்ரா அடுத்த சில வருஷங்களுக்கு கேட்காமல் இருப்பது அவருக்கு நல்லது. எங்களாலேயே கேட்க தாளவில்லை. அந்த சின்ன வயதிலேயே இத்தனை கனமான பாடல் பாடி இருக்கிறார். பாடறியேன் பாடிவிடலாம். நானொரு சிந்து தான் கடினம். அதை போல தான் இதுவும்.  அத்தனை உணர்ச்சிகள் கொட்டி கிடக்கிறதே.
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
 
இந்த ஜென்மத்திலேயே அந்த சந்தர்ப்பம் வாய்த்ததே! ஆனால் கை நழுவிவிட்டது. கடவுள் சிலவேளை உண்மையிலேயே இருக்கிறானோ? என்ற நம்பிக்கை துளிர்விடும் போதெல்லாம் இல்லவே இல்லை என்று அடித்துக்கூற இப்படி பல சம்பவங்கள் நடைபெறும். அட அப்படியே இருந்தாலும் அவனால் ஒன்றுமே புடுங்க முடியாது என்று அவனே நிரூபிக்கும் தருணங்கள் இவை. ஆனாலும் எமக்கு வேறு வழியில்லை.  மீண்டும் மீண்டும் ஏதும் செய்வான் என்று நம்பிக்கொண்டு பூச்சொரிய வேண்டியது தான். இது தெரிந்து தான் பூக்கள் எல்லாம் ஒரே நாளிலே அழுகி விடுகின்றனவோ தெரியவில்லை!
 
அப்படியே சமகாலத்து பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் ஞாபகம் வந்தது. இந்த பாடல் ..

இந்த ராஜா இருக்கிறாரே. சிலவேளை ஏன் தமிழனாக பிறந்தோம்? என்று நொந்து போக வைப்பார். அப்படி பிறந்து இருக்காவிடில் இந்த மாதிரி பாடலை எல்லாம் கேட்டிருக்கவேண்டி வந்திருக்காது. நானும் எம்பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்திருப்பேன். இராட்சசன் இப்படி பாடல்களை எல்லாம் போட்டு நம் தூக்கத்தை தொலைப்பார்.  சரணத்தில் வரும் மெட்டு. ஐயோ .. இந்த கொலைக்கெல்லாம் சட்டத்தில் தண்டனை இல்லையா?

நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே

பிறகு அந்த பொண்ணை கொன்றுவிட்டு ஒரு காட்சி. அந்த தாய் படும் அவஸ்தை. அதற்கு ராஜாவின் ஈவிரக்கமற்ற இசையை கேளுங்கள்..

 
 
 
 
என்னடா இது, இனி பாடலே வேண்டாம் என்று முடிவெடுத்த போது அடுத்த பாடல் மாறியது. இன்றைக்கு எனக்கு சந்திராஷ்டமி தான் போல..
 
தேவேந்திரனின் “வேதம் புதிது” பாடல். இது கொஞ்சம் வித்தியாசமான பாடல். படம் பார்த்தவருக்கு இந்த பாடல் அடி மனதை ஒரு அருட்டு அருட்டும். பாடும் பெண், பிரிந்த காதலன் இன்று வருகிறான் என்று பாடும் பாடல். சித்ரா பாடும் போது காதலனின் முடிவு தெரிந்து பாடுவதால், பாட்டில் ஒரு மெல்லிய சோகம் புலப்படும். தேவேந்திரன் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர், தெரிந்தே அந்த சரணத்து இசையை மீட்டி இருக்கிறார்! சரணத்தில் மேல்ஸ்த்தாயி எட்டும் போது ஒரு ஏக்கம் பயம் எல்லாமே வெளிப்படும். தேவனே என்று சொல்லும் இடத்தில் சின்ன அயர்ச்சி கூட குரலில் வெளிப்படும். தெரிந்தே செய்யும் ஜாலங்கள் இவை.  பாடலின் இசை கோர்ப்பு,  முதலாவது interlude இசையில், கிட்டார் வயலின் கோர்த்த பின் ஒரு அரை வினாடி நிசப்தம், பின் புல்லாங்குழல் தபெலாவுடன் ஆரம்பிக்கும். அது ராஜா செய்யும் ஜாலம் இல்லையா? தேவேந்திரன் நிச்சயம் ராஜாவின் அதி தீவிர ரசிகனாக இருக்க வேண்டும்!
 
அடுத்து என்ன பாடல் என்ற போது எனக்கு இப்போது மனதிலே பல ஞாபகங்கள். மனம் தானாகவே “எங்கே எனது கவிதைக்கு” தாவியது. சிலவேளை எம் சோகத்தை மற்றவர் சோகத்தில் கண்டு கொண்டாடுவோம் இல்லையா? சோகத்தை எல்லாம் கொண்டாடுவதா? இல்லை அனுஷ்டிப்பதா?
 
ரகுமானும், சித்ராவும் வைரமுத்துவும் கொண்டாடுகிறார்கள். இந்த பாடலை முதலில் வேறு ஒருவர் தான் பாடுவதாக இருந்ததாம்(மூலம்: அப்துல் ஹமீது), ஆனால் பாட்டில் அந்த உணர்வு கொண்டு வர முடியாததால் சித்ராவையே பாட வைத்தார்களாம். அவர் தான் first choice ஆக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நான் நினைக்கிறேன் ஏற்கனவே “கண்ணாமூச்சி ஏனடா” தனி மற்றும் டூயட் பாடல்களை கொடுத்துவிட்டதால் ரகுமான் முதலில் தயங்கி இருக்கலாம். ஆனால் வேறு யாரால் இந்த வலியை உணர்ந்து பாட முடியும்? அப்போது ஸ்ரேயா கோஷலும் இல்லை! ரகுமானும் சித்ராவும் வைரமுத்துவும் எத்தனை முறை காதலில் தோல்வி அடைந்திருந்தால் இத்தகைய பாடல்களை தந்திருக்க முடியும்? எனக்கென்றால் இப்படி பாடல்கள் தர முடியுமென்றால் மீண்டும் மீண்டும் காதலில் தோல்வி அடைவதில் தப்பு இல்லை. ஏன் .. கேட்டு ரசிக்க கூட!
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
வரிகளை கேட்டுகொண்டு எழில்மிகு மெல்போர்ன் நகரத்தில் நடப்பதற்கு தனி வைராக்கியம் வேண்டும்!
 

இன்னும் ஒரே ஒரு பாடல் ப்ளீஸ் .. இனி ஒரு பதிவில் சித்ராவின் இத்தகைய பாடல்கள் பகிர்வேனோ தெரியாது!! அண்மையில் வந்த பாடல். படம் வெள்ளித்திரை.
உணர்ச்சிகளை கொட்ட பதிவில் இனி இடம் இல்லை. மனதிலும் பலம் இல்லை. அதனால் வரிகளோடு முடித்து கொள்கிறேன்!

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேன்
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உயிரையும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்

எழுதி முடித்தவுடன், ஆரம்பத்து மாருகோ மாருகோ பாடலை அகற்றலாமா என்று தோன்றியது. ஒட்டவில்லை என்பதற்காக உண்மை பொய்யாகாது என்பதால், அப்படியே விட்டு விடுகிறேன்!
மீண்டும் அடுத்த வாரம் இன்னுமொரு இசை அனுபவத்துடன் ….


















Comments

  1. நன்றி புதுகை அப்துல்லா ... நீங்கள் வந்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் .. கருத்து தெரிவித்தது எனக்கு பெருமை ..

    சந்தோசம்.

    ReplyDelete
  2. புதுகை அப்துல்லான்னா யாரோன்னு நினைக்காதிங்க. உங்க கதையைத் தெர்ந்தெடுக்க நடுவராய் இருந்த அதே எம்.எம்.அப்துல்லாதான் நான் :)

    தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறேன். இதே இடுகையை முன்பே படித்தும்விட்டேன். திருமதி.சித்ரா தொடர்பான ஒரு தேடலில் இருந்தபோது இதை மீள்வாசிப்பு செய்ய நேர்ந்தது. நேரமும் இருந்தது. பின்னூட்டம் இட்டேன் :)

    ReplyDelete
  3. அப்துல்லா அண்ணே .. "சிவ சிவா இயேசுவை மறப்பேனா" என்று யாழ்ப்பாணத்தில் ஒரு பேச்சு வழக்கு இருக்கு! உங்களை போய் மறப்பேனா.. எங்கே வராத நீங்களே வந்திருக்கிறீங்க என்ற சந்தோஷத்தில் போட்ட கமெண்ட் அது! .. நீங்க தொடர்ந்து வாசிக்கிறீங்க என்பது கொஞ்சம் வயத்தை கலக்குது!!

    ReplyDelete
  4. JJ Anna, my insights saying after reading your blog's , Neengalum oru " Thevadas" kadchi pola entru. If so as Pirubudeva said in Kadhalan, " Take It Easy Uurvasi.. Sorry JJ"

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...