Skip to main content

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்


திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம்
ஆல் இந்திய ரேடியோ
தூத்துக்குடி வானொலி நிலையம்
நேரம் இரவு எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்
திரைத்தென்றல்!

உங்களில் எத்தனை பேருக்கு இந்த அறிவிப்பு ஞாபகம் இருக்கிறது? அட நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவரா? தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு குட்டி ரேடியோவுடன் அலைந்தவரா? தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சி கேட்காமல் இரவு சாப்பாடு உங்களுக்கும் நிச்சயம் இறங்கி இருக்காது. என்னை மீண்டும் 90களின் அந்த இனிமையான நாட்களுக்கு அழைத்துச்செல்ல இன்றைக்கு முயல்கிறேன்! நீங்களும் வருகிறீர்களா?

ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணிக்கு கை கால் முகம் கழுவி படிப்பதற்கு மேசைக்கு போகவேண்டும். அது வீட்டில் எழுதப்படாத சட்டம். நான் படிப்பது சிவபெருமான் புட்டுக்கு அணை கட்டியது போல தான். தொடர்ந்தாப்போல் அரை மணித்தியாலம் கூட என்னால் இருந்து படிக்க முடியாது. அந்த நேரம் தான் தண்ணீர் விடாய் வரும். சாமி கும்பிட தோன்றும். பாத்ரூம் போகவேண்டும் போல இருக்கும். பேனா மக்கர் பண்ணும. பென்சில் கூர் தீட்ட வேண்டி இருக்கும். ஆனால் அம்மா எவ்வளவு கேட்டாலும் சாப்பிட மட்டும் போக மாட்டேன். அதற்கு எட்டரை ஆக வேண்டும். ஆம் எட்டரை!

இந்த பாட்டு திரைத்தென்றலில் ஒலிபரப்பானால் எங்களுக்கு அன்று தீபாவளி தான். இந்த பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எப்படி சொல்வது? ம்ம்ம் நீங்கள் ஒரு பெண்ணை பார்த்து பார்த்து காதலிக்கிறீர்கள். ஆனால் கேட்க தயக்கம். ஒருநாள் தயக்கத்தை விட்டுவிட்டு கேட்டே விட்டீர்கள். அவள் முகம் நெருப்பு எடுக்கிறது. மாட்டேன் என்கிறாள்.  நீங்களும் கேட்டுவிட்டு ஆடிப்போய் அங்கேயே உட்காருகிறீர்கள். ஐந்து நிமிடம் இருக்குமா?  பின்னால் இருந்து ஒரு கை மிருதுவாக தோளில் ஆதரவாய் விழுகிறது. திரும்பினால் அவள் தலையை இடப்பக்கமாக சரித்து மெலிதாக புன்னகைக்கிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படி இருக்கும் எனக்கு திரைத்தேன்றலில் இந்த பாடல் ஒலிபரப்பும் போதெல்லாம். என்ன, இப்போதெல்லாம் திரைத்தென்றல் நிகழ்ச்சியே நின்று விட்டது!

மணி சரியாக எட்டரை அடிக்கும்போது அம்மா பசிக்குது என்பேன். அம்மா சிரித்துக்கொண்டே எல்லோரையும் சாப்பிட அழைப்பாள். எட்டரைக்கு வெரித்தாஸ் வானொலி கேட்க தொடங்குவோம். ஜெகத்கஸ்பார் ஈழத்தமிழருக்காய் மணிலாவில் இருந்து உருகோ உருகென்று உருகுவார். அக்கா மிக சீரியஸ் ஆக கேட்டுக்கொண்டு இருப்பாள். எனக்கு எப்போதடா எட்டே முக்கால் ஆகும் என்று இருக்கும்.

Narasimhan-Photoஇந்த பாடல் பாசமலர்கள் படம். அழகான மெலடி. V.S.நரசிம்மன் இசை. பிரபலமான வயலின் வித்துவான். “ஆவாரம்பூவு ஆறேழு நாளா” என்று சுசீலா பாடிய பாடல். ஞாபகம் இருக்கிறதா? இசை ராஜா என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை, இவர் தான் இசை. அட இது எதுக்கு, “How to name it” என்ற ராஜாவின் master piece க்கு வயலின் வாசித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் நரசிம்மனே! Beautiful Song!
மனிதன் கொண்ட காதல் மட்டும் மறைத்து வைப்பதென்ன?
மழைகாற்றில் ஆடும்தளிர் போல் மனம் துடிப்பது என்ன?

அடடா  முக்கியமான விஷயம் நாங்கள் எப்படி ரேடியோ கேட்பது என்பது தான். ஒரு சின்ன mono cassette ரேடியோ, சிவப்பு கலர் Panasonic, ஆறு பாட்டரிகள் போடவேண்டும். அட கடுப்பு ஏத்தாதீங்க. 94ம் ஆண்டு பகுதியில் பாட்டரிக்கு எங்கே போவது? குட்டியின் அண்ணா தான் எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்தார். சைக்கிள் டைனமோவையும், ஒரு பழைய சைக்கிள் ரிம்மையும், பாவித்து மரவேலை செய்பவரிடம் சொல்லி ஒரு சின்ன வீல் டைனமோ சரி செய்து தந்திருந்தார். கதிரையில் இருந்தவாறே, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பாட்டின் தாளத்துக்கு ஏற்ப மிதிக்கலாம். கொஞ்சம் வேகமாக மிதித்தால் சத்தம் கூட கேட்கும். மெதுவானால் சுஜாதா காதுக்குள் தான் கிசுகிசுப்பார். என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் பாருங்கள்!

தூத்துக்குடி வானொலி நிலையத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒரு விதமான மெலடி ரசிகர்கள். அவர்கள் ஒலிபரப்பும் பாடல்கள் எல்லாமே தனிரகம். இந்த பாடல் எல்லாம் திரைத்தென்றல் இல்லாமல் போயிருந்தால் எப்படி கேட்டு இருப்பேனோ தெரியாது. “மணிரத்னம்” தான் படத்தின் பெயர். யார் இசை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் பாடல் சூப்பர்!

அக்கா  இண்டைக்கு  என்ன பாட்டு போடுவினம்?
அதானே கொஞ்ச நேரத்தில கேட்க போறாய்?
Bet பிடிப்பமா?
சும்மா போடா?
நான் சொல்றன் “கொஞ்சி கொஞ்சி” தான்
சான்ஸே இல்ல, போன கிழமை தான் போட்டவங்கள், இண்டைக்கு “அஞ்சலி அஞ்சலி” தான்
என்ன bet?
தோத்தா நாளைக்கு நீ தான் டைனமோ மிதிக்கோணும்
இல்லாட்டி நீ .. சரியா?
பார்ப்பம்

நானும் அக்காவும் அடுத்த பாடல் எது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நேரம் தான் ஒருமுறை இந்த பாடல் ஒலிபரப்பானது. மனோ ஜானகி பாடிய இன்னொரு gem என்று சொல்லலாம். மனோவின் குரல் அப்படியே தாலாட்டும். இன்றைக்கு youtube இல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  விடுவோமா? இப்போது ஏத்தியாச்சு! ராஜா ரசிகர்களே, எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கள்!!
கூட வரும் நிழல் வேறு எது? கொண்டவளை போல இங்கே?
இந்த நிழல் இருட்டினிலும் பின் தொடர்ந்து ஓடி வரும்

இந்த பாடல் 94 கால பகுதியில் சும்மா ஒரு கலக்கு கலக்கியது. ராஜாவின் comeback படம் என்று வீராவையும் சிறைச்சாலையையும் குறிப்பிடுவார்கள்(ராஜாவுக்கு comeback தேவையில்லை என்பது அப்போது எனக்கு புரியவில்லை). தளபதிக்கு கூட நான்கு தடவை தான் ரீரெகார்டிங் செய்த ராஜா இந்த படத்துக்கு இருபத்தெட்டு முறை ரீரெகார்டிங் செய்ததாக இந்திய டுடே பத்திரிகையில் இந்த படம் சம்பந்தமாக ராஜாவில் கவர் ஸ்டோரி வந்து நாம் திரும்ப திரும்ப வாசித்த ஞாபகம். SPB அநாயசமாக பாடி அசத்தி இருப்பார்.

கொஞ்சி கொஞ்சி பாட்டுக்கும் அஞ்சலி அஞ்சலி பாட்டுக்கும் அந்த காலகட்டத்து ரஜனி-கமல் ரேஞ்சுக்கு போட்டி இருந்தது. “பவர் தரும் ஒலிச்சுடர்” என்று நடராஜசிவம், இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக கொஞ்சி கொஞ்சி முதல் இடத்திலும், அஞ்சலி அஞ்சலி இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஒரு நாள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் “ஊர்வசி ஊர்வசி” பாட்டு இந்த பாட்டை புறம்தள்ளி முதல் இடத்தை பெற்றது. கேட்டுக்கொண்டு இருக்கும் பொது எனக்கு ஒரே படபடப்பு. வீட்டில் வேறு அக்கா இல்லை. எனக்கும் ரியுஷனுக்கு நேரமாகியிருந்தது. யாரிடமாவது சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். வேறு வழியில்லாமல். ஒரு பேப்பரில் விலாவாரியாக “ஊர்வசி ஊர்வசி” முதலிடம் வந்த செய்தியை கடிதம் போல எழுதி மேசையில் வைத்து விட்டே நான் புறப்பட்டேன். அக்கா மறந்திருக்கும். போன் பண்ணி இந்த பதிவை வாசிக்க சொல்லவேண்டும்! அது ஒரு கனாக்காலம். இந்த பாட்டு அடிக்கடி திரைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள். அந்த சுரம் வரும் இடத்தில் நானும் சேர்ந்து சுரம் பிடிக்க, அக்கா சொல்லும்.

“டேய் போடுறதே மூண்டு பாட்டடா, அதில நீ வேற பாடிக்கொல்லாத!”

சாப்பிட்டு முடிந்து கோப்பை காய்ந்து போயிருக்கும். அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் திரைத்தென்றல் முடியும் மட்டும் ஒரு அடி நகரமாட்டோம். நிறைய பாடல்கள் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகம் ஆகி இருக்கிறது. 90களின் இறுதிகளில் திரைத்தென்றல் அதன் சோபை இழந்து கொண்டு இருந்தது. FM வருகை, விரும்பிய பாடலை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலை வந்தாலும் கூட, மின்சாரம் இல்லாத அந்த நிசப்த நாட்களில், டைனமோவின் கிறீச்சிட்ட சத்தத்துடன் கேட்ட அந்த பாடல்களின் சுகம் எனக்கு பின்பு கிடைத்ததா என்பது சந்தேகமே. இன்றைக்கு வீடு முழுதும் அதிரும், நுண்ணிய ஒலிகள் கூட கேட்கும்படியான Home Theatre System வீட்டில் இருக்கிறது. எனக்கென்னவோ குட்டியின் அண்ணா தந்த அந்த டைனமோ வீலில் மிதித்து கேட்கும் திரைத்தென்றல் தான் வேண்டும் என்கிறது. கிடைக்குமா?

இதுவரை ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ தொடரில்!
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “மேகம் இடம் மாறும்போது!!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “சின்ன குயிலின் சோகம்!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “கொச்சின் மாடப்புறா!”
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪– “நிலவும் மலரும் பாடுது”

Comments

  1. அருமை அருமை, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது

    ReplyDelete
  2. மன்மதகுஞ்சு12/07/2011 5:13 am

    டேய் இது ரொம்ப ஓவர்டா ,நான் என்ன விடயத்தையெல்லாம் சொல்லாம் என நினைக்கிறோனே அதெல்லாத்தையும் அழகான உனது ஸிடலிலே அழகான ஒரு நல்லிரவின் நடசத்திரம் ,நிலவு,ஒளிவட்டம்,கிறீச்சிட்டு செல்லும் வான் நட்சத்திரங்கள் போல பதிவினை எழுதிவிடுகிறாய்,யாரை மறந்தாலும் என்னால் தூத்துக்குடி வானொலியை மறக்கமுடியாது..அதுவும் நாங்கள் வன்னியில் இருந்தகாலகட்டத்தில் எனக்கும் அக்காவுக்கும் தலைமுடி பிய்த்துக்கொள்ளும் அளவிற்க்கு சண்டை வரும் யார் 8.45 க்கு சின்ன பொக்கட் வானொலியை வைத்திருப்பது எண்டு ,8.45 க்கு பிறகு கடவுளே சொன்னாலும் நாங்கள் புத்தகம் திறபதில்லை குசினிக்குள்ளே ஒதுங்கிக்கொள்வோம் ரேடியோவுடன்,அது பரீட்சை நாளாகா இருந்தாலும், அதிலும் ஞாயிற்றுகிழமைகளில் 8.30 தொடக்கம் பாடல் போடுவார்கள்,அதிலும் 96 ம் ஆண்டு கொஞ்சநாள் பொறூதலைவா அந்த வஞ்சிக்கொடி என்ற நேருக்கு நேர் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள் யாழ்ப்பாணத்திலும் ஒட்டுசுட்டானிலும் பின்னர் ,புதுகுடியிருப்பிலும் பற்றீயை கடித்து கடித்து பாட்டு கேட்ட காலம்

    ReplyDelete
  3. நன்றி பிரபா .. உண்மை தான் .. அது ஒரு தனி அனுபவம்!

    ReplyDelete
  4. தேங்க்ஸ்டா கீர்த்தி .. நிறைய பாட்டு மிஸ்ஸாகிடிச்சு

    ஒ ப்ரியா பிரியா
    பாலைவனத்தில் ஒரு ரோஜா
    ஆலப்போல் வேலப்போல்
    ராசி தான் கை ராசி தான்
    வெள்ளி நிலவே ..
    செம்பூவே பூவே

    அப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

    ReplyDelete
  5. “How to name it” excellent piece of work. உங்கள் கொல்லைப்புறத்து காதலிகளில் ராஜாவிடம் எதிர்பார்த்தேன். ஆனால் வெளித்தெரியும் அழகான இசைக்குப் பின் கூடவிருந்து உழைத்தவர்களை மறக்கக்கூடாது என்பதை தெளிவாய் சொல்லிவிட்டீர்கள். நன்று. :)

    ReplyDelete
  6. Pa: அருமையான பகிர்வு அண்ணா .

    அதே போல முதல் நாள் "Cricket match score " எதாவது miss ஆனால் காலையில் 5.30 தூத்துக்குடி வானொலி நிலையத்தின் செய்தியில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

    அப்படியே தென்கச்சி கோ.சுவாமிநாதனின் கதையையும் கேட்கலாம்..

    ReplyDelete
  7. நன்றி @Gowri .. ராஜாவை பற்றி எழுதலாம் தான். ஆனா இசை பற்றிய தொடர் ஏற்கனவே எழுதுவதால் கொல்லைப்புறத்து காதலியில் எழுதவில்லை. திரைத்தென்றல் கூட முதலில் காதலியாக எழுதலாம் என்று நினைத்து விட்டு இறுதியில் இங்கே எழுதிவிட்டேன்!

    ReplyDelete
  8. நன்றி பெயரில்லா நண்பரே, நானும் அந்த விளையாட்டு செய்தி கேட்டு இருக்கிறேன்..

    ஆல் இந்தியா ரேடியோவில் இரவு பதினோரு மணியளவில் "இன்று ஒரு தகவல்" மறு ஒலிபரப்பு ஆகும். அப்புறம் அதிகாலை 1 மணிக்கி இனிமையான பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதை கேட்பதற்காக நித்திரை முழிப்பேன். அந்த கேப்ல போனா போகுதுன்னு படிச்சது, இன்னிக்கு சாப்பாடு போடுது!
    Moral of the story : படிக்கும் போது பாட்டு கேட்க அனுமதியுங்க!

    ReplyDelete
  9. கிழமையில் ஓரு நாள் ஒரு படத்தின் ஒலிநாடாவ ஒலிபரப்புவார்கள். கேட்டதில்லையோ?

    ReplyDelete
  10. "தென்றல் வரும் தெரு" என்ற படம் அப்படி பார்த்தது தான்!!!

    ReplyDelete
  11. Actual ஆ கேட்டது .. :)

    ReplyDelete
  12. 90களின் இறுதிகளில் திரைத்தென்றல் அதன் சோபை இழந்து கொண்டு இருந்தது. FM வருகை, விரும்பிய பாடலை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற நிலை வந்தாலும் கூட, மின்சாரம் இல்லாத அந்த நிசப்த நாட்களில், டைனமோவின் கிறீச்சிட்ட சத்தத்துடன் கேட்ட அந்த பாடல்களின் சுகம் எனக்கு பின்பு கிடைத்ததா என்பது சந்தேகமே. இன்றைக்கு வீடு முழுதும் அதிரும், நுண்ணிய ஒலிகள் கூட கேட்கும்படியான Home Theatre System வீட்டில் இருக்கிறது. எனக்கென்னவோ குட்டியின் அண்ணா தந்த அந்த டைனமோ வீலில் மிதித்து கேட்கும் திரைத்தென்றல் தான் வேண்டும் என்கிறது. கிடைக்குமா? ethirpaarpoom

    ReplyDelete
  13. நன்றி கோபி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...