ஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.