Skip to main content

கக்கூஸ்

 

யிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான்.

அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வாசித்த புத்தகம். உணர்வுகளை கட்டுப்படுத்தலை எத்தனை அழகாக சொல்கிறது. “When being in control gets out of control...” அய்யய்யோ, இப்ப நான் என்ன கன்ட்ரோல்ல இருக்கிறேன்? ஷிட், எது யோசிச்சாலும் அங்க தான் போய் நிற்கிறது. அட, அவசரத்திலேயும் என்ன “சுத்த தமிழ்” வேண்டி இருக்கு? “நிக்குது”. என்னப்பா இது! ஒண்டையும் யோசிக்கவேண்டாம். முதலில் ஆபீஸ் போவம். முருகப்பெருமானே அது வரைக்கும் என்னோட கக்கூசை கட்டுப்படுத்தும் வரம் தா. அடுத்த நல்லூர் தேருக்கு காவடி தூக்கிறேன்!

அலுவலகம் வந்துவிட்டது. கால்களை ஒருக்களித்தே ஒரு மார்க்கமாக நடந்தபடியே உள்ளே நுழைகிறேன். ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தாள். பதிலுக்கு சிரித்துவிட்டு எதுவுமே காட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்தேன். கக்கூஸ் இடது பக்க மூலையில் இருந்தது. திரும்பும்போது தான் ஜிம் எதிரே வந்தான்.

“Hey maite … how are ya?”

இந்த ஆஸ்திரேலியர்கள் தொல்லை தாங்க முடியாது. எங்கே கண்டாலும் “How are you?” சொல்லுவார்கள். பற்றாக்குறைக்கு “mate” என்பதை “maite” என்று உச்சரிப்பார்கள். அது புரிவதற்கே எனக்கு ஆறு மாசம் எடுத்தது. எது சொன்னாலும் பதிலுக்கு ஒரு “Thanks” சொல்லி வைப்பார்கள்.

“I am good .. Jim … yourself?”

“I am great … Thanks, How was your weekend…?”

அடடா weekend பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். இவனுக்கு பதில் சொல்லி, பதிலுக்கு இவன் weekend இல் என்ன செய்தான் என்று கேட்பதற்குள் இங்கேயே ஆய் போய் விடும்! வெட்ட வேண்டியது.

“Sorry Jim, I gotta make an urgent call.. catcha in a while”

“No worries maite ..…”

ஜிம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்னரேயே கழிப்பறை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடும்போது தான் லேப்டாப் பை இன்னமும் தோளில் கிடந்தது ஞாபகம் வர, அட லாப்டாப் பையுடன் கக்கூசுக்குள் போனால், அத்தனை அவசரமா என்று எல்லாரும் சிரிப்பார்களே என்று துணுக்குற்றேன். ம்ஹூம், வேகமாக என் காபினுக்கு திரும்பி வந்து பையை வைக்கும் போது தான் பார்த்தேன். பக்கத்தில் பீட்டர் உட்கார்ந்திருந்தான். அடடா ..இவனா, தொடங்கினால் நிறுத்தமாட்டானே!

“Hey buddy … How’s thing? Had a great weekend?”

“Was cool Peter …. Excuse me mate... I really have to make this call urgently”

பீட்டர் என்ன பதில் சொன்னான் என்பதை கேட்கும் நிலையில் நான் இல்லை. மெதுவாக ஆனால் வேகமாக கக்கூஸ் நோக்கி நடந்தேன். ஓடினேன் என்று தான் சொல்லவேண்டும். கதவை திறந்தபோது தான் பெருத்த நிம்மதி வந்தது. அப்பாடா ஒருவரும் உள்ளே இல்லை. மொத்தமாக ஐந்து அறைகள் காலியாக இருந்தது. நேரே வரிசையில் கடைசியில் இருந்த அறைக்கு ஓடினேன். திறந்து பார்த்தால் யாரோ ஒரு நாதாரி பயல் டாய்லெட் சீட்டை மடிக்காமல் ஒன்றுக்கு போயிருக்கவேண்டும். சீட் முழுதும் மஞ்சள் நிறத்தில் திட்டு திட்டாய் ஈரம். இவர்கள் எல்லாம் எப்படி பெண்கள் இருக்கும் வீடுகளில் வாழ்கிறார்களோ தெரியாது. ஒன்றுக்கு போகும்போது சீட் தூக்கி விட்டு தான் போகவேண்டும் என்று கூட தெரியாதவனுக்கு எல்லாம் எப்படி இங்கே வேலை கிடைத்தது? அது சரி, இண்டர்வ்யூ என்றால் மினுக்கிக்கொண்டு பேசத்தேரிந்தவர்கள் தானே!

எந்த ஒரு பொது கக்கூஸ் அறைகளிலும் முதலாவதாக இருக்கும் அறைக்கு தான் போகவேண்டுமாம். உளவியல் ஆராய்ச்சிப் படி பொதுவாகவே எல்லோரும் கடைசியில் இருக்கும் அறையை தான் நாடுவார்களாம். அதனால் அது அசுத்தமாகவும், முதலாவது அதிகம் பாவிக்கப்படாமல் சுத்தமாகவும் இருக்குமாம். அந்த அவசரத்திலும் எங்கோ வாசித்தது மூளையில் புலப்பட, உடனடியாக, வரிசையில் முதலாவதாக இருந்ததுக்கு ஓடினேன். சுத்தமாக இருந்தது. டிஷு உருண்டையும் புதுசாக இருக்க, சீட்டை விரித்து அதை சர சரவென்று இழுத்து சீட்டில் இன் மீது கவனமாக விரித்தேன். அப்படியே திரும்பி, ஜீன்ஸை இறக்கி ஆயாசமாய் உட்காரும்போது தான் போது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ச்சே யாரோ வந்துவிட்டான்!

யாராக இருக்கும்? மெலிதான விசில் சத்தம். நான் இருக்கும் கக்கூஸ் கதவிடுக்கால் வெளியே பார்க்கலாம். வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியுமா? இந்த நிலையில் என்னை பார்த்து விடுவானா? இதை எல்லாம் கட்டும்போது கவனிக்கமாட்டார்களா? சரி, யார் தான் வந்தவன்? இந்த விசில் எங்கேயோ கேட்ட விசில் ஆச்சே! கதவிடுக்கினை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். கலிங்கத்து சிறையில் அகப்பட்டிருந்த கருணாகரபல்லவன், சிறை நடமாட்டங்களை, தான் தப்புவதற்காக உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது தான் ஞாபகம் வருகிறது. கூடவே இருந்த கூலவாணிகனின் அசட்டை ஆச்சரியாமாய் தோன்றியது. அவனைப்போய் எப்படி சோழர் ஒற்றனாக நியமித்தார்கள்? அட கருமமே! கக்கூஸில் இருக்கும் போது கடல்புறாவா? மற்றவனும் இப்படித்தான் ஆய் போகும் போது ஏறுக்கு மாறாக சிந்திப்பானா? இடுக்கினூடாக பார்க்கும் பொது அந்த ஆள் கடந்து போவது தெரிந்தது. கடவுளே இது அதே ஜிம் தான். சந்தேகமேயில்லை. இவன் ஏன் இங்கே வந்தான்? நான் இருக்கும் நேரம் பார்த்து தான் வரவேண்டுமா? எனக்கு தான் யாராவது அருகில் இருப்பது தெரிந்தால் ஒன்றுமே போகாதே! பக்கத்து அறைக்கு தான் போகிறான். ஐயோ இவனுக்கு நான் இங்கே இருப்பது வேறு தெரிந்திருக்குமோ? நான் கக்கூஸ் போகும்போது டர் புர் என்று சத்தம் வந்து அவன் கேட்டுவிட்டால்? ஐயோ  அவமானமாய் போய்விடுமே! ஆண்டவா ஏன் இப்படி மீண்டும் மீண்டும் என்னை சோதிக்கிறாய்?

இரண்டு காதுகளையும் தீட்டிக்கொண்டேன். ஜிம் அவசர அவசரமாக அவன் டாய்லட் சீட்டினை டிஷ்ஷு பேப்பரால் துடைக்கும் சத்தம் கேட்கிறது. ம்ம்ம் வெள்ளைக்காரன், வெட்கம் மானம் இல்லாதவன். பக்கத்து கக்கூஸில் ஒருத்தன் இருக்கிறான் என்ற விவஸ்தை இல்லாமல் கர் குர் சத்தத்தோடு சிவனே என்று போவான். அட அவனுக்கு எப்படி சிவனை தெரியும்? கக்கூஸில் எதுக்கு கடவுளை நினைக்கிறேன்? ஆக்கப் பொறுத்தவன், ஆறப்பொறுப்பது தான் உசிதம். ஜிம் முடித்துவிட்டு போகட்டும். இரவு வேறு டக்கீலாவுடன் பப்பாளி பழம் சேர்த்து சாப்பிட்டது. நாற்றத்தில் கண்டுபிடித்துவிடுவான். கொஞ்சநேரம் தான், அடக்கிவிடலாம். ஆனால் ஜிம் நான் இருப்பதை சட்டை செய்வதாய் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு யேசுவே என்று போய்க்கொண்டு இருந்தான். அவன் சப்பாத்து கூட மர அடைப்புக்கு கீழால் தெரிந்தது. அடிடாஸ் பிராண்ட். இவனுக்கு எவ்வளவு சம்பளம் வரும்? என்னை விட அதிகம் தான். என் சப்பாத்தின் பிராண்ட் எனக்கே தெரியவில்லை. சப்பாத்தை கொஞ்சம் உள்ளே இழுத்துக்கொண்டேன். ஏன்தான் இந்த கக்கூஸ் பக்கத்து மர அடைப்புக்கு கீழே இத்தனை இடைவெளி விடுகிறார்களோ!

எனக்கு இதற்கு மேல் அடக்க முடியவில்லை. கொஞ்சம் வியர்க்கவும் ஆரம்பித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவதை வீரம் என்கிறார்கள். இதை எவன் அடக்க முடியும்? நான் வீரனா கோழையா? வேண்டாம். இன்னும் கொஞ்சநேரம் தான். ச்சே ஜெஸ்ஸி தான் என்னை தவிக்கவிடுகிறாள் என்றால் ஜிம் கூடவா! மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! பேசாமல், வெட்கம் பார்க்காமல் ஆய் போய் விட்டால் தான் என்ன? ஐயோ வேண்டாம் இந்த விஷ பரீட்சை! எனக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. அவமானமாக இருக்கும். இத்தனை அடக்கிவிட்டு இனி ஆய் போனால் சத்தம் வேறு இன்னும் பெருத்து கேட்கும். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்ப்பது. வேண்டாம். மனிதனாய் பிறந்தால் எப்போதும் dignity மிக முக்கியம்.

ஜிம் முடித்துவிட்டான். வெட்கம் கெட்டவன். இப்படியா ஒருத்தன் கக்கூஸ் போகும்போது சத்தம் போடுவது? அது வேறு அந்த நாற்றம் நாறுகிறது. என்ன கருமத்தை நேற்று சாப்பிட்டானோ! இருந்து முடித்த ஆயாசத்தில் பெருமூச்சு வேறு. ச்சே நாடு விட்டு நாடு வந்து நிமமதியாய் கக்கூஸ் கூட போகமுடியாத நிலைக்கு போய்விட்டென். ஆ, டிஷ்யூ உருண்டை உருளும் சத்தம். இனி போய் விடுவான். சப்பாத்தும் அசைகிறது. போடா ராசா போடா.

புறப்பட்டு விட்டான். இன்னும் முப்பது செகண்ட்ஸ் தான். கையை கழுவி, துடைத்துவிட்டு போய்விடுவான். இனி ஒருத்தரும் இல்லை. நிம்மதியாய் போகலாம். பத்து செகண்ட்ஸ் தான். பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, ஒன்று! ஜிம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, அப்பாடி இனி வாழ்க்கையில் நிம்மதி. ஆயாசமாய் கண்ணை மூடிக்கொண்டு ஆய் போகலாம் என்று ரெடியாகும் போது தான் புதிதாக ஒரு பேச்சு குரல் கேட்டது.

Hi Jim, how are ya?

Great Thanks .. Yourself  Peter?

ஐயோ பீட்டரா? எண்ட கடவுளே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

பிற்குறிப்பு: இந்த கதையில் காட்டப்படும் உணர்வை Parcopresis என்று உளவியல் நிபுணர்கள் அழைப்பார்கள். பக்கத்தில் யாராவது இருந்தாலோ, இருப்பது போல பிரமை கொண்டாலோ அவர்களால் இயல்பாக இயற்கை கடன்களை கழிக்கமுடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு!

http://en.wikipedia.org/wiki/Parcopresis

பண்புடன் இணைய இதழுக்காக

Comments

  1. வித்தியாசமான முயற்சிதான் , வாழ்த்துக்கள் அண்ணா ..!
    தனக்கு தானே பேசிக்கொள்ளும் விதம் ,
    கணபொழுதுகளில் வந்து போகின்ற ஓராயிரம் சிந்தனைகளையும்
    அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..அத்துடன் அந்த கான்செப்ட் 'Parcopresis'புதிதாக இருந்தது...
    haa haa முடிவுதான் என்னாயிற்றோ ;) ?

    ReplyDelete
  2. தேங்க்ஸ் காயத்திரி .. முடிவு என்ன? ஆப்பு தான்! ஹ ஹ ஹா

    ReplyDelete
  3. பெயரில்லா சொன்னது…

    wow நல்ல எழுத்து. நானும் சத்தம் போடாமல் disabled toilet தான் பாவிப்பேன். பெரிது. அத்தோடு well-sound sealed ! என்றாலும் நன்றாக மூடியைத் துடைத்து, பிறகு மேலே tissue இனை விரித்து, பிறகு உள்ளேயும் கொஞ்சம் tissue ஐப்போட்டு (தண்ணீர் தெறிக்காமல் இருக்க) .... ம்ம்ம் பிறகு அலுவல்.

    ---

    சும்மா இருங்கோ. பேர் போட வெட்கமாக இருக்கு. நான் யார் என்று கண்டுபிடிப்பீர் என நம்புகிறேன்.

    -----ல்

    ReplyDelete
  4. நல்ல முயற்சி... உங்கள் எழுத்துநடை வேறுபடத்தொடங்கி இருப்பது நல்லது...

    ReplyDelete
  5. நொட்டை1/12/2012 5:03 pm

    சரி முடிவாக என்னதான் நடந்தது: கக்கூசு உங்களுக்கு போனதா இல்லை உங்களுக்கு கக்கூசு போனதா? Nice JK

    ReplyDelete
  6. தாங்க்ஸ் .....ல் அண்ணா!! "உள்ளேயும் கொஞ்சம் tissue ஐப்போட்டு (தண்ணீர் தெறிக்காமல் இருக்க)" .. இது புதுசு!!

    ReplyDelete
  7. வாலிபா வா வா, இனி வட்டம் அடிக்கலாம்!

    தாங்க்ஸ் தலைவரே

    ReplyDelete
  8. நொட்டை பாஸ் போனத பற்றி நான் அப்புறமா விசாரிக்கிறது இல்ல!!!

    ReplyDelete
  9. Hello,

    This is my first comment. Sorry Bro; I should have given more inputs.
    I was introduced to your blog by Balamurugan SJC A/L 98. I can easily sync with your writing, because I also have very similar background and thought process.

    This story is a definitely a milestone as this has a new plot which is outside your comfortable zone. Keep writing. Don’t bother satisfying a certain group of people/ fans :-)
    My 2 cents.

    Cheers,
    Bobby Gajendra

    ReplyDelete
  10. Unable to control my laugh, JK. Keep writing.Your writing is superb. But a lot of smell too :)

    Regards
    Kurinchi

    ReplyDelete
  11. Thanks @Bobby
    Really appreciated you read and commented the story. I will try different genres, a month ago, I had the hesitancy to trial and error because of the positive response received. But now leaning towards trying different things. If something fails on the line, let it be as you said. Its still a learning.

    Thanks again, Keep in touch .. Thanks @Bala too :)

    ReplyDelete
  12. @kumaran

    Machchaan Kurinchi, Thanks da.. You believe me or not, the story was written keeping you in mind! I remember you had something like this when we were in hostel!!!! And this plot was in my mind for sometime! but now I written . ha ha ha

    ReplyDelete
  13. மச்சி கதைசொன்ன விதம், வந்து போன நபர்களும் இடையிடையே வந்த சென்ற கடல்புறா வர்ணனைகளும் நன்றாக இருந்தன.. ஒரே கேள்விதான், ஏண்டா நம்ம ஊரு வவுனியா ரெயில்வே ஸ்டேசனிலேயே நவீன கழிப்பிடம் கட்டி மிகவும்
    சுத்தமா வைச்சிருக்காங்களே அவுஸி ரெயில்வே ஸ்டேசனில ஒரு நவீன கழிப்பிடம் கூடவா இல்லை..

    குறிஞ்சி- மச்சிஎன்னால் அந்த ஒரு நாள் ஹாஸ்டல் குளீயலறைக்காட்சி மறக்கமுடியாதது..

    ReplyDelete
  14. தாங்க்ஸ் மச்சி ... இங்க station toilet எல்லாம் படு மோசம் பாஸ்!

    குறிஞ்சி மாட்டார் .. ஹ ஹ ஹா

    ReplyDelete
  15. பீ போவதற்கு கூட வெட்கம் ,தன்மானம் என்று அடக்கி அடக்கி வைத்து அல்லல்படும் ஒரு சமுகம் !!!.
    தாங்கள் எழுதிய சிறுகதைகளில் இதுதான் பின்நவீனத்துவ சிறுகதையாக என் சிற்றறிவுக்கு படுகிறது .

    அருமை !! தொடர்ந்து வியாழ மாற்றத்தில் கும்முங்கள் .

    ReplyDelete
  16. நன்றி முருகேசன் ... இது கொஞ்சம் வித்தியாசம் தான் .. "கதை சொல்லாத கதை" வாசித்துப்பாருங்கள் .. அதிலும் அடியேன் கொஞ்சம்!

    ReplyDelete
  17. அருமை, உங்க‌ளை ஒரு ந‌ல்ல‌ எழுத்தாள‌னாக‌க்காட்டும் க‌தை, அங்க‌த‌ம் சும்மா புகுந்து விளையாடுது... ப‌ல‌ இடங்க‌ளில் வாய்விட்டு சிரித்தேன், Parcopresis உண‌ர்வு உப‌க‌ண்ட‌த்தில் இருந்துவ‌ரும் எம‌க்கு அதிக‌மாக‌ இருக்குமோ????,என்னுட‌ன் வேலை பார்க்கும் இந்திய‌ ந‌ண்ப‌ர் யாரும‌ற்ற‌ க‌க்கூசு தேடி முத‌லாவ‌து த‌ள‌த்தில் இருந்து நான்காம் த‌ள‌ம் ம‌ட்டும் தேடி போற‌வ‌ர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க‌லேன்...தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .