டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள்.
“யாரடா அந்த பொண்ணு?”
“பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க!
“The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது!
ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிரோதமான மனைவியின்(?) மகள். உருது மொழியில் ஹராமி என்று அசிங்கமாக அழைப்பார்கள். நீங்கள் ஆப்கானில் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்களோ, அதை போல பத்து மடங்கை அனுபவிக்கிறாள். இன்னொருத்தி லைலா. உயர் குடி, ஆங்கிலம் படித்த ஆப்கான் பெற்றோருக்கு பிறந்தவள். கூட படிக்கும் இளைஞனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆப்கான் அரசியல் போர் மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் இருவருமே ரஷீதை மணக்கவேண்டிய சூழல். அங்கே ஆரம்பிக்கிறது Family violence இன் உச்சம். இதற்குள் லைலா கர்ப்பம், குழந்தை என்று பல சிக்கல்கள். வெளியாலே ஆப்கானுக்கே உரித்தான ஆக்கிரமிப்புகள். இவற்றின் முடிச்சு தான் “A Thousand Splendid Suns”. நான் அறிமுகப்படுத்தும் சில புத்தகங்களை ஓரிருவர் வாங்கி வாசித்தும் இருக்கிறார்கள்! என்பதால் ரங்கனுக்காக, கதையை இதற்கு மேலே வளர்க்கவில்லை!
வாசிக்கும்போது ஆப்கான் பிராந்திய அரசியல் ஓரளவுக்கு பிடிபடுகிறது. அங்கே ஏன் ஒரு குழப்பமான ஆயுத குழுக்கள், முகாஜுதீன், தலிபான், சோவியத் ஆக்கிரமிப்பு, ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, ஈரான், பாகிஸ்தான், இப்போது அமெரிக்கா, இதற்குள் ஜனநாயகம் என்ற கழுதை வேறு! எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லும் a must, must, must read! Hats off to Khaled Hosseini!
இப்படியான அரசியல் சூழ்நிலையில், சமாந்தரமாக, குடும்ப வன்முறைகளையும் எடுத்து ஆள, அதையும் மிகவும் அயர்ச்சி வராமல் தர, தைரியம் வேண்டும். Khaled க்கு இருக்கிறது. மரியத்தின் மீது வரும் ஒரு பரிதாபம், லைலா மீது வரும் ஒரு மெல்லிய காதல், அவள் பெண் மீது வரும் பாசம், இதை வைத்து அடித்து ஆடி இருக்கிறார் எழுத்தாளர். அரங்கேற்ற வேளையில் குறிப்பிட்டது போல காலித் ஹோசைன் போன்று எங்கள் வாழ்க்கையை, ஈழத்து வாழக்கையை, எங்களுக்காக இல்லாமல், ஏனைய இனங்களுக்காக எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆங்கிலத்தில் திக்கி திணறி கொஞ்ச நாள் எழுதியத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் ஆணியே புடுங்கமுடியாது என்பது ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது! Khaled Hosseini ஆப்கான் வாழ்க்கையை ஆங்கிலத்தில் எழுதும்போது, அதை ஆப்கான் சமுதாயமே அமெரிக்காவில் ப்ரோமொட் பண்ணி, வாசிக்க வைத்து … அமெரிக்காவுக்கும் அந்த தேவை இருந்தது உண்மை தான் என்றாலும் அந்த இரண்டு புள்ளிகளும் சந்தித்தது இல்லையா?
அரசியல் என்பது, கூட்டமைப்போடு இணைந்து/எதிர்த்து/தள்ளிநின்று/தட்டிக்கொடுத்து/வியாழமாற்றம் எழுதும் விஷயம் மட்டுமே கிடையாது. இலக்கியத்தில் செய்யும் அரசியல், பொருளாதாரத்தில் செய்யும் அரசியல், தொழில்நுட்பத்தில் செய்யும் அரசியல் இது எல்லாமே ஒரு “Nation Building Process” இன் தூண்கள் தான். அதை புரிந்து கொண்டாட என்றைக்கு நாங்கள் துணிகிறோமோ அப்போது தான் அட்லீஸ்ட் இரண்டு ஆணியாவது ட்ரை பண்ணலாம் அப்பிரசிண்டுகளா!
Comments
Post a Comment