Skip to main content

என்ர அம்மாளாச்சி!

 

“மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்"

 

684398-footscray-stationஎப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக  வந்திருப்பான் போல. அடுத்தவன் கறுப்பன்.  ஒரு பெண்ணும் இருந்தாள். கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள். இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா? எல்லோருக்கும் பதினேழு பதினெட்டு வயசுக்குள் தான். ஒரே சிகரெட்டில் எல்லோர் மூச்சும் மாறி மாறி.

அவர்களில் ஒருவன் என்னை கவனித்தான் போல இருந்தது. ஆஸி ஸ்லாங்கில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றியோ தெரியாது. நான் பார்த்ததை கவனித்திருப்பார்களோ? என் பாக்கில் இருக்கும் புதிதாக வாங்கிய Raybon கண்ணாடியை எதற்கும் எடுத்து மாட்டினேன். Mc Donalds இல் வேலைக்கு சேர்ந்து முதல் வார சம்பளத்தில் வாங்கியது. 250 டாலர். இலங்கைக்காசுக்கு 30,000 ரூபாய். குளுகுளு என்று இருந்தது. நேரே Safety Zone இல் இருக்கையில் போய் அமர்ந்தேன். மேலே சர்வீலியன்ஸ் காமரா. இன்று வேறு சனிக்கிழமை, குடித்துவிட்டு திரிவார்கள். என்னை பார்த்தாலே சும்மாவே நாலு தட்டு தட்டவேண்டும் போல தோன்றுமோ என்னவோ. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் லேலூர் நிலையத்தில் இரவு வேலை முடிந்து சென்றுகொண்டிருந்த இந்திய மாணவனை அடித்துப்போட்டு இருந்தார்கள்.

ட்ரெயின் இன்னும் வரவில்லை. இருக்கையின் மற்ற பக்கத்தில் ஒரு வயதான பெண்மணி. அன்றைய Herald Sun இல் வந்திருந்த crossword புதிரில் நெற்றி சுருங்கியிருந்தாள். எட்டிப்பார்த்தால், வாவ் ஏறத்தாள முடிந்துவிட்டது. ஒரே ஒரு சொல் சிங்கியடிக்கிறது போல. G இல் ஆரம்பித்து E இல் முடிகிறது. நாலாவது எழுத்து O. மொத்தமாக எட்டு எழுத்துகள் உள்ள சொல். புரிபடவில்லை. தமிழில் என்றால் ஓகே! இங்கிலிஷ் சரிவராது. பத்திரிகையின் மற்ற பக்கத்தில் Kony2012 ஒளிப்படம் பற்றிய செய்தி. எங்கேயோ தென் அமெரிக்காவில் நடக்கும் பிரச்சனை! எனக்கென்ன?

“என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நா..” முடிக்கும் முதல் ரயில் வந்து நின்றது. எப்பிங் கடைசி நிலையம். ரயிலில் யாருமே இல்லை. வேகமாக முதல் பெட்டிக்கு ஓடினேன்.  முதல் பெட்டி தான் எப்போதும் பாதுகாப்பு. ஏதாவது சிக்கல் என்றால் டிரைவர் கதவை தட்டலாம். யன்னல் சீட் பிடித்து உட்காரும்போது அந்த பெண்மணி கொஞ்சம் தள்ளி  இன்னொரு சீட்டில். இன்னமும் நெற்றி சுருங்கி இருந்தாள். இங்கிலீஷ்காரிக்கே தெரியாத சொல்லா? யோசித்துக்கொண்டு இருக்கும் போது கப்பென்று மூக்கில் அடித்தது. வந்து உட்கார்ந்தான். வெறும் பனியன். முழங்கால் நீள காற்சட்டை. பார்த்து சிரித்தான். கடவாய் பல்லு வெள்ளி, இன்னும் இரண்டு உடைந்திருந்தது. கவனமாக என் பாக்கை எடுத்து மடியில் வைத்தேன். ஒரு பியர் கானை நீட்டினான்.

“எடுத்துக்கோ”

“நோ ..வேண்டாம் தாங்கஸ் நான் ஒரு teetotaller.”

எப்போதோ ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்த சொல்லு, இன்றைக்கு ஆஸியில் பாவிக்க முடிகிறது.

“Pardon?”

அவன் இங்கிலீஷ்காரன் இல்லை. லெபனானிஸ் ஆக இருக்கலாம். என் அளவுக்கு ஆங்கிலம் தெரியாது ம்ம்ம்

“நான் மது குடிப்பதில்லை”

“ஆ . இது மது கிடையாது .. வெறும் பியர் தான்.. சும்மா குடி”

சிரித்தேன்.

“நீங்கள் இந்தியர்கள் தண்ணீர் கூட குடிக்கமாட்டீர்கள்”

Carly-John-Runningசொல்லிவிட்டு ஹ ஹா ஹா. இவனுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது? இங்கே ஆஸியில் பியரை தண்ணியாக தான் குடிப்பார்கள். வேற்றுலகவாசிகளும் இந்தியர்களும் தான் அவர்களுக்கு குடிப்பதில்லை. பிடிப்பதுமில்லை. அவனை சமாளிப்பது கஷ்டம் போல் தோன்றியது. எழுந்து வேறு இருக்கைக்கும் போக முடியாது. பாக்கில் இருந்து “கோபல்ல கிராமம்” எடுத்து வாசித்தேன். ஒன்றமுடியவில்லை. அவன் நாற்றம் இன்னமும். மூடி வைத்துவிட்டு யன்னல் வழியாக விடுப்பு பார்த்தேன். நாற்பது வயசு இருக்கும், கையில் ஒரு பட்டி, பட்டியின் அடுத்த பக்கம் ஒரு Doberman சாதி நாய் ஒன்று. கன்னங்கறுப்பு, நடை பழக்கிக்கொண்டு ஜாக்கிங் போகிறான். நாய் இழுத்த இழுப்புக்கு பின்னால் போகிறான். நாய் அடிக்கடி லைட் போஸ்ட் தேடி அலைந்தது. எந்த ஊர் நாய்க்கும் போஸ்ட் மேல் ஏன் அவ்வளவு பிரியம்?  

ட்ரெயின் புறப்பட தயாராக, கதவுகள் தானாக மூடின.  நிமிர்ந்து உட்கார்ந்த போது தான் .. அவள். யெஸ்..! அவள் தான். ட்ரெயினை நோக்கி கை அசைத்துக்கொண்டே காரில் இருந்து அவசரமாக இறங்கினாள். விறு விறுவென தன் ஹாண்ட் பாக்கையும் இன்னொரு பையையும் எடுத்துக்கொண்டே ஏதோ எங்களை பார்த்து கத்தினாள். எனக்கு என்னவென்று புரியவில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று ஞாபகம் வந்து காரை லாக் பண்ணினாள். ட்ரெயின் புறப்படப்போகிறது. ஓடும்போது ரசித்தால் ஓடுவதை விட்டுவிடுவேன். ஆனாலும் ரசி என்றாள்.  கறுப்பு ஷூ. ஷூக்கு மேலே அரை அடி இடைவெளியில் வெறுங்கால் கிளீனாக இருக்க, டெனிம் ஜீன்ஸ்.  முழங்காலுக்கு கொஞ்சம் மேலே ஒரு பெரிய பொத்தல் அவள் வெள்ளைக்காரி என்றது. நீல நிற ஜீன்சுக்கு பிங்க் நிறத்தில் பெல்ட். ஓடும்போது  அவள் அணிந்திருந்த கை இல்லாத வெள்ளை டாப் சற்றே மேலெழ மெல்லிய மஞ்சள் இடுப்பு  “கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட” என்று ஆகாய வெண்ணிலாவே ஜேசுதாஸ் ஐபாடில்!

பிளாட்பாரமுக்குள் அவள் இன்னமும் நுழையவில்லை. ரயில் அவளுக்காக காத்திருக்கும் போல தெரியவில்லை. டிரைவர் ஆணாக இருக்கலாம். புறப்படுவதற்காக ஒரு ஹாரன் அடித்தபோது தான் என் முன்னால் இருந்த கப்பு ஒரு காரியம் செய்தான். ஓடிப்போய் கம்பார்ட்மண்டின் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு நின்றான்.  கதவு மூடாமல் வண்டி எடுக்கமாட்டார்கள். அவள் இவன் செய்ததை கண்டிருக்கவேண்டும், கை வீசிக்கொண்டே ஓடிவரும்போது அவள் ஹாண்ட் பாக் விழுந்துவிட, குனிந்து எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு,  முன்னைவிட வேகமாக. பம்பாய் படத்து மனீஷா கொய்ராலா கரும்பாறை பலதாண்டி காற்றாக ....

bxp51287

வந்தாள். வந்தவள் வாசலிலேயே நின்று டிரைவருக்கு தம்ஸ் அப் காட்டினாள். கதவை திறந்து வைத்திருந்தவனுக்கு கன்னம் முட்டினாள். நமக்கேன் இந்த ஐடியா வரவில்லை? எப்போதுமே நான் லேட் தானா? சீ.. இப்போது இருவரும் உள்ளே வந்து என் முன்னே இருந்தார்கள். இருவருக்கும் முன் பின் அறிமுகம் இருக்குமாப்போல தெரியவில்லை. உட்கார்ந்த பின் பேசவில்லை. அவள் இப்போது என் நேர் எதிரே.  நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது. என் Raybon கண்ணாடியை கவனித்திருப்பாளா? அவள் மெதுவாக தன் கைப்பையை பக்கத்து சீட்டில் வைத்து, மற்ற பைக்குள் இருந்து ஒரு மெல்லிய நீல நிறத்து காடிகனை(cardigan) வெளியே எடுத்து சற்று உதறும்போது தான் என்னை கவனித்திருக்க வேண்டும். முகமே புன்னகைத்தது!

“Hai ..how are ya?”

பேசிவிட்டாள். எனக்கு உதறியது. இப்போது என்ன சொல்வது? “Good Thanks, How are you?”, Excellent yourself?” அல்லது அமெரிக்கர் போல “Gooday”. குழப்பம். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். யாருமே இங்கே பதிலை எதிர்பார்த்து கேட்பது கிடையாது! ஏதாவது சொல்லவேண்டும் ..

“I am fine .. How do you do?”

அடச்சீ சொதப்பிவிட்டேன். “How do you do?” கேட்டால் மாத்திரமே “how do you do?”  சொல்லவேண்டும் என்று சண்முகநாதன் மிஸ் சொல்லித்தந்தாரே. எனக்கேன் பரசுராமர் சாபம் போல், பெண்களை கண்டால் சரியான ஆங்கிலம் வரமாட்டேங்கிறது?

“Oh Thanks .. I am great .. perfect weather ha .. bit cool..!”

Oh my god! நான் நன்றி சொல்ல மறந்துவிட்டேன். இங்கிதம் தெரியாதவன் என்று நினைத்திருப்பாள். நேரம் கெட்ட நேரம் பார்த்து டிஎம்எஸ் “தேன் மல்லிப்பூவே” என்று உச்ச சுருதியில் பாட, எங்கே தமிழ் பாட்டு அவளுக்கு கேட்டுவிடுமோ என்ற வெட்கத்தில், ஐபோட்டை எடுத்து, இருந்த ஒரே ஒரு இங்கிலீஷ் திரில்லர் அல்பத்தை ப்ளே பண்ணினேன். வால்யூம் கூட்டினேன்! மைக்கல் ஜாக்சன் பீட் இட்!

“ம் .. மெல்பேர்ன் weather அல்லவா? எப்போது மாறும் என்று சொல்லமுடியாது .. பெண்களை போல”

பழைய ஜோக் தான். ஆனாலும் சிரித்தாள். “எக்ஸ்கியூஸ் மீ” என்று எழுந்து நின்று கார்டிகனை அணிந்தாள். பட்டன் போடவில்லை. உள்ளே வெள்ளை நிற டாப். அப்படியே வெளிர் பிரவுன் நிற தலைமுடியை கோதிக்கொண்டே உட்கார்ந்தாள். நீல நிறத்து கார்டிகன். அந்த சிரிப்பு. “நீ நீல வானம்”  என்று கமல் பாடும்போது பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரி அப்படியே தலைமுடி கோதியது ஞாபகம் வர, வேண்டாம் ஜேகே, படத்தில் அந்த வெள்ளைக்காரி விபத்தில் இறந்துவிடுவாள். நீ தாங்கமாட்டாய். பாட்டை மாத்து.

அவள் காதில் Backstreet Boys இன் “Show me the meaning of being lonely” கேட்டது.  பிரஸ்டன் நிலையம். அவள் இப்போது யன்னலால். அடிக்கடி அவளை பார்த்தால் கண்டு பிடித்துவிடுவாள். ஏதாவது செய்யவேண்டுமே! கோபல்ல கிராமத்தை எடுக்காமல் “The Namesake” எடுத்தேன்!  சென்ற வாரமே படித்து முடித்துவிட்ட புத்தகம். நல்லகாலம் பாக்கில் இருந்தது. சும்மா ஒரு பக்கத்தை புரட்டினேன். கோகுல் மாக்ஸீனின் பண்ணை வீட்டில். மாக்ஸினின் அம்மா அப்பா அங்கே இல்லை. இருவரும் சேர்ந்து … புத்தகத்தால் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். அவள் இப்போது சௌகரியமாக உட்கார்ந்திருந்தாள்.  அந்தப் “பொத்தல்” மேல் கால் போட்டு ஒய்யாரமாக, எவ்வளவு அழகான கால்கள்? இடுப்பின் இடைவெளியை மறைக்கும் எண்ணம் சிந்தனை இல்லை. அல்லது வேண்டுமென்றே செய்கிறாளா? பெண்களின் ஒவ்வொரு அசைவும் ஆண்களின் கவனத்தை ஈர்க்கத்தான் என்று கஜன் சொல்லும்போதும் ராப்பிஷ் என்று தோன்றியது. ஷாவனிஸ்ட். எல்லாப்பெண்களும் அப்படியா என்ன? நிச்சயமாக இவளைப்பார்த்தால் அப்படி தோன்றவில்லை. அக்காவுக்கு இன்றைக்கு போன் போடவேண்டும்.

இப்போது அவள் காதுகளில் “Never Gone” பாட்டு, கண் மூடி கொஞ்சம் ஏக்கத்தில், அவளுக்குள் ஏதோ ஒரு சோகம் விம்மி விம்மி எழுந்தது! கை இல்லாத அந்த வெறும் பனியன் டாப் அதை மறைக்கமுடியாமல் திணறிக்கொண்டு இருக்க, அவளும் அப்படியே விட்டுவிட்டாள். இடது பக்க கழுத்தில் ஏதோ ஒரு டாட்டு. சைனீஸ் எழுத்து. அவள் பெயராக இருக்கலாம். ஏதாவது ஜென் தத்துவமாக இருக்கலாம்.  இப்போது கொஞ்சம் முகத்தையும் பார்த்தேன். கீழுதட்டில் வெள்ளி நிறத்தில் இரண்டு பியர்சிங். அதற்கு மாட்சிங்காக வாட்டர் ஷைன் டயமண்ட் லிப்ஸ்டிக். அது வேண்டாம், உனக்கு அழகாகவே இல்லையடி என்று சொல்ல வாய் உன்னியது. நிச்சயமாக இவள் போலிஷ் அல்லது ஹன்கேரியன் தான். வெள்ளை என்றால் மா வெள்ளை. கொஞ்சம் நீளமான முகம். நீல கண்கள். சந்தேகமேயில்லை.  போலிஷ் தான். ஒல்காவின் அன்னாவும் இப்படித்தான். அந்த சைக்கோ காதல் .. ஹா

2-in-1-child-harness-buddy-gallery-1நோர்த்கோட் நிலையம். ஒரு தாய் தன் குழந்தைக்கு இடுப்பில் பட்டி கட்டி கையால் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அது பாவம் அங்கேயும் இங்கேயும் இழுபட்டு ஓட அந்தத்தாய் பட்டியை இறுக்கி,  கிட்டே வா என்று மிரட்ட, ஏனோ முதலில் பார்த்த doberman நாயும் பட்டியும் அதன் சொந்தக்காரனும் ஞாபகம் வந்தது. நாயின் பட்டி கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கலாம். தாயும் குழந்தையும் என் அருகே வந்து உட்கார, அவள் குழந்தையை பார்த்து சிரித்தாள். அப்போது தான் என்னை மீண்டும் கவனித்தாள். மீண்டும் அந்த சிரிப்பு. வேண்டாம் கண் மூடிடாதே ஜேகே.

ஹே .. இது … ஆப்கான் கதையல்லவா? என்ன அது Kite Runner ஆ?

ஓ புத்தகமா?.. “The Namesake” ..You know? writer லாஹிரி?

பேசும்போது இந்த “யூ நோ” சனியன் எப்படியும் வந்துவிடும். டோணி, மகேலவின் இன்டரவியூ எல்லாம் இனிமேல் கேட்ககூடாது.

கேள்விப்பட்டிருக்கிறேன்.. Booker பரிசு வென்றவர் இல்லையா? என்னுடைய Ex க்கு  மிகவும் பிடிக்கும்!

Ex என்கிறாள். அப்படியானால் பிரிந்துவிட்டார்கள். அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ். விட்டிடாத ஜேகே, எப்போதாவதுதான் இது வரும் இப்ப கஜனுக்கு கால் பண்ண நேரம் இல்லை. 

Oh Sorry .. நான் என்னை அறிமுகப்படுத்தவே இல்லை… I am JK .. Nice to meet ya!

‘You’ வை எப்போதும் ‘Ya’ என்றே இங்கே சொல்லவேண்டும். அப்போது தான் நான் அண்மையில் தான் இங்கே வந்தேன் என்று யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள்.

Nice to meet you too JK.. This is ஜெஸ்ஸி!

ஜெஸ்ஸி…?

Ya… ஜெஸ்ஸி ..டீக்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன்.

ஜேகே ஜெஸ்ஸி .. ஜெஸ்ஸி ஜேகே … என்னே ஒற்றுமை. இரும்பு கேட் மாத்திரம் இருந்திருந்தால் குதித்து பாய்ந்து இந்நேரம் “அந்த நேரம் அந்தி நேரம்” தான்.  அப்படியே அவளை … “Listen and respond. Don’t be looking at her mouth, don’t be wondering what she looks like naked.” ஹிட்ச் படத்தின் ரூல் வந்து மிரட்ட பூமிக்கு வந்தேன்!

ஆங்கில இலக்கியம்! வாவ் அதுவும் லாஹிரியை தெரிந்த இலக்கியத்தை நான் meet பண்னுகிறேனா? ரயிலிலா? What a surprise?

திரும்பவுமா? பேசும்போது முழுசாக வசனம் அமைக்காதே. இது என்ன யாழ்ப்பாணம் இங்க்லீஷ் வகுப்பா? ச்சே நாடகத்தனமாக பேசிக்கொண்டு இருக்கிறேன். Bluff என்று நினைக்கப்போகிறாள்.

Booted: Chris Brown was fined for allegedly having his feet on a seat. His fellow passenger may not be aware that she, too, risks footing the bill.ஏன் உனக்கும் பிடிக்குமா?

What .. Come Again?

உனக்கும் … ஆங்கில இலக்கியம் பிடிக்குமா?

ம்ம்ம் வாசிப்பேன் .. எப்போதாவது தோன்றினால் எழுதுவேன்.. ஏதாவது

ஏதாவதா? சொல்லேன்?

ஈழத்து வாழ்க்கையை எழுதுவதாக சொல்லுவோமா? அது அவளுக்கு போர் அடிக்கும். பீத்தோவன் ஆராய்ச்சி? கேட்டால் “தில் தில் தில் மனதில்” பாட்டை ஆங்கிலத்தில் ஹம் பண்ணி காட்டலாம்! வேண்டாம் இலக்கியத்தனமாக ஷேக்ஸ்பியர், தாதாவாஸ்கி என்று ஏதாவது. இம்ப்ரெஸ் செய்யவேண்டும் … ஷேக்ஸ்பியர் தான பெட்டர்.

எதை என்று சொல்ல? சில நேரங்களில் Merchant of Venice… தென் அமெரிக்க இலக்கியங்கள் .. பின் நவீனத்து….

நீ ஸ்ரீலங்கன் .. டமில் தானே .. உங்கள் வாழ்க்கையை எழுதுவதில்லையா?

Jesus Christ!.. நான் தமிழ் என்று எப்படி .. ஐ மீன் ஸ்ரீலங்கன் தமிழ் ..

Hushh … உன் பேச்சில் உள்ள ஸ்ரீலங்கன் ஆக்சன்ட் … இந்த அடர்த்தி மீசை .. டமில் தான்!

மெல்லிய வெட்கம் அவளில். என்னை கவனித்ததை உளறிவிட்டாளா?

சூப்பர் .. எங்களை பற்றி அவ்வளவு தெரியுமா?

தேடி தேடி வாசித்திருக்கிறேன். The Cage மூன்று தடவை. டீக்கின்ஸில் உங்கள் பிரச்சனை பற்றி கருத்தரங்கு நடந்ததே? வந்தாயா?

ஆ .. நடந்ததா? … நான் சிட்னி போயிருக்கவேண்டும் ..

சுருக்கென்றது. ச்சே சொதப்பிவிட்டேன். அப்போதே சொல்லியிருக்கவேண்டும் நான் ஈழம் பற்றி எழுதுகிறேன் என்று. “You cannot use what you do not have. If you’re shy, be shy. If you’re outgoing, be outgoing.” என்ர ரூல் பொறுத்தநேரத்தில் மறந்துவிட்டது. பரசுராமர் சாபம்.

நானும் சில விஷயங்கள் எங்கள் பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன். Kite Runner போல ஒரு நாவல் என்றாவது…

புரிந்து சிரித்தாள் போல் இருந்தது. மேலே பேச்சை தொடரமுடியவில்லை. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பேசினால், வழிகிறேன் என்று நினைப்பாள். அவள் இரண்டடி இடைவெளியில், வாசிக்கவும் முடியாது. வாசிக்க ஆரம்பித்தேன்!  என்ன மாதிரி பெண் இவள்? இலக்கியம் பேசுகிறாள். “Kite Runner” தெரிகிறது. ஈழத்தமிழரே சீண்டாத “The Cage” கலந்துரையாடலுக்கு போகிறாள். என்னை வாழ்க்கையை எழுது என்று அட்வைஸ். இதெல்லாம் ஏன் சொல்கிறாள்? நான் பார்ப்பது போல அவளும் என்னை பார்க்கிறாளா? தேடுகிறாளா? இவள், முன்னால் காதலனும் இலக்கியவாதி தானே? ஏன் பிரிந்தார்கள்? இவளை பார்த்தால் தப்பாக ஏதும் செய்வாள் போல இல்லையே? அவன் தான் அயோக்கியன். இந்த இலக்கியம் எழுத்து என்று திரிபவர்கள் எல்லாருமே ஏமாற்று பேர்வழிகள். நம்பமுடியாது. கழுத்தறுத்துவிடுவாங்கள்.

அவள் இப்போது மின்ட் சூவிங்கம் ஹான்ட்பாக்கில் இருந்து எடுத்து ஒன்றை எனக்கு நீட்டினாள். தாங்க்ஸ் சொல்லி வாயில்போட்டேன். யாராவது ஆஸி ட்ரெயினில் சூவிங்கம் தந்தால் வாங்கிவிடவேண்டுமாம். வாய் மணக்க கூடாது என்று போடுவது. சில வேளைகளில் எம் வாய் நாற்றம் தாங்கமுடியாமலும் தருவார்கள். சூவிங்கம் அசையுடன் அவள் ஜன்னல் வெளியே பார்க்கும் அந்த casualness அழகை விவரிக்க சுஜாதாவுக்கு ஆபரேஷன் சக்ஸஸ் ஆகியிருக்கவேண்டும். பார்த்தால் easy going பெண். நானோ பக்கா introvert. சரிவருமா? இவள் கலாச்சாரம் என்ன? ஏதோ ஒரு இந்தியத்தனம் இவளில் இருக்கிறது. பார்க்கும் போது கண் சற்று தாழ்ந்து, முகம் ஒரு புறம் சரிந்து.. எங்கள் பெண் தான். மஞ்சள் கலரில் பச்சை நிற பார்டர் போட்ட சேலை தூக்கலாக இருக்கும். சுடிதார் கூட! என்னோடு சரிப்பட்டு வருவாளா? இளையராஜாவை தெரிந்திருக்குமா? சான்ஸ் இல்லை. குறைந்த பட்சம் ரகுமான்? ஜெய்ஹோ என்பாள். “நெஞ்சே நெஞ்சே” வை ஒரு இயர் பீஸை அவள் காதிலும் மற்றயதை என் காதிலும் மாட்டி, மெல்பேர்ன் வசந்தகால பூங்காவில், 25 டிக்ரீ வெதரில், வான் பார்த்து புல்வெளி சாய்ந்து … ச்சே என்ன இது? ஏன் இப்படி யோசிக்கிறேன்? இவள் எங்கே நான் எங்கே? எனக்கு இரவென்றால் புட்டும் கட்டாக்கருவாட்டு குழம்பும் சாப்பிடவேண்டும். கிட்ட வருவாளா? எப்படி இந்த இங்க்லீஷ் சனியனை சமாளிக்கபோகிறேன். எவ்வளவு வாசித்தும் வருகுதில்லை.  எவ்வளவு காலம் தான் தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் பேசுவது?  வெளியில் தான் அது என்றால், வீட்டிலுமா? தாங்குமா? அம்மா சமாளிப்பாவா? அம்மாவுடனும் அப்பாவுடனும் இன்னமுமே ஒரே வீட்டில் இருப்பதை பார்த்து வெள்ளைக்காரி காறி த்தூ? அம்மா எப்படி இவளோடு பேசுவாள்? அம்மாவுக்கும் இங்கிலீஷ் படிப்பிக்கவேண்டும். சென்டர்லிங்கிடம் சொல்லி ஸ்போக்கின் இங்கிலீஷ். Hey Jessie, would you like to have Puttu for dinner? அம்மாவுக்கு ஆஸி இங்க்லீஷ் வருமா? வரவேணும்! இவள் வேண்டும் எனக்கு. தப்பித்தவறி என் அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலும், இவளை திருமணம் செய்து கொண்டால் நாடு திரும்ப தேவையில்லை. White gold இல் engagement மோதிரம்!

இன்னமும் அங்கே தமிழர்கள் கஷ்டப்படுகிறார்களா? உன்னை பார்த்தால் படித்தவன் போல் தெரிகிறது? ஊருக்கு எப்போதாவது போவாயா?

தமிழர்கள் … முன்னம் என்றாலும் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடியதாக இருந்தது. இப்போது சொன்னாலே கஷ்டம் என்ற நிலைமை தான். ஊருக்கு போக முடியாது. போனால் திரும்ப முடியுமோ தெரியாது .. அது ஒரு Mystery தேசம்.

ஏன் Arab Spring போல ஸ்ரீலங்காவில் ஒன்றும் நடப்பதில்லை

ஏனென்றால் ஸ்ரீலங்கா ஆரேபியாவில் இல்லை!

Ouchhhh..

 

train-420x0அவள் இப்போது கொஞ்சமே யோசித்தால் போல் இருந்தது. ஓரளவுக்கு உருப்படியான பதில் இப்போது தான் சொல்லியிருக்கிறேனோ? இவளுக்கு ஏன் எங்கள் பிரச்சனையில் அவ்வளவு ஆர்வம். பிரச்சனையில் ஆர்வமா இல்லை என்னிலா? நான் அவ்வளவு அழகா? என்னோடு கூட ஒருத்திக்கு பேசவேண்டும் போல இருக்குமா? என்னை பிடிக்குமா? என் வயிற்றில் பிசையும் ஆவர்த்தன அட்டவணை அவள் வயிற்றிலுமா? கேட்டால் “Bloody Indians” என்று திட்டுவாளா? நான் தான் ஸ்ரீலங்கன் என்று அவளுக்கு தெரியுமே? இப்போது மட்டும் நான் ஸ்ரீலங்கன் என்ற அடையாளம் தேவையாய் இருக்கிறது. இல்லை அவள் அப்படியானவள் இல்லை.  “No matter what, no matter when, no matter who; any man has the chance to sweep any women off her feet, he just needs the right broom” என்று இன்னொரு ரூல் இருக்கிறதே. எங்கே அந்த துடைப்பம்? இவள் ஏன் எனக்கு சரிவரமாட்டாள்? அழகு அறிவு எல்லாமே இருக்கிறது. தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற அகங்காரம் இல்லாதவள். என்னையும் ஆங்காங்கே கொண்டாடுகிறாள். இந்த அளவுக்கு என்னை யார் தான் புரிந்துகொள்ள முடியும்? ட்ரெயின் கொலிங்வூட் நிலையத்தில் நிற்கிறது!

கேட்டு விடலாமா? என்ன கேட்பது? எப்படி கேட்பது. I think I am in love with you? வேண்டாம், வெள்ளைக்காரர்கள் எடுத்த எடுப்பில் காதலித்து அப்புறம் அவஸ்தை படமாட்டார்கள். டேட்டிங் தான். எப்படி டேட்டிங் கேட்பது. டீ குடிக்க அழைக்கலாமா? டீ? டீ இங்கே பெரிதாக குடிக்க மாட்டார்களே. காப்பி, காப்பி தான் டேட்டிங் போக சரியான ஆயுதம். காபி குடிக்க வருகிறாயா என்று எப்படி இங்கிலீஷில் கேட்பது? இன்னமும் இரண்டு ஸ்டேஷன் தான். இறங்க வேண்டும். அதற்குள் கேட்டு, சமமதிக்கவைத்து, நம்பர் கொடுத்து, வாங்கி .. என்னவென்று கேட்பேன்? “ Would you like to have a coffee?”. அடச்சே, ரெஸ்டாரண்டில் வெயிட்டர் கேட்பது போல இருக்கிறது. “Hey, I think it would be fun if we both went for a coffee?”. ம்ம்ம் இது புதுசு, அய்யய்யோ, அங்கே “went” வருமா இல்லை “go” வருமா? அல்லது “gone” ஆ?எனக்கேன் இந்த இங்கிலீஷ் கருமம் மட்டும் வரமாட்டேன்கிறது? அதிலும் கிராமர் தகிடுத்தத்தம். எல்லாம் இந்த  அப்பாவால் வந்தது. ஒழுங்காக எனக்கு சின்ன வயதிலேயே இங்கிலீஷ் படிப்பித்து இருந்தால் இவ்வளவு அல்லல் படுவேனா? அதெப்படி உலகத்தில் உள்ள எல்லோருக்கும் அப்பா அம்மா படித்து இருக்கிறார்கள். Intellects.... எனக்கு மட்டும்? ச்சே ..விதி.

ஜோலிமொன்ட் நிலையம் தாண்டிவிட்டது. அடுத்தது மெல்பேர்ன் சென்ட்ரல். இறங்கவேண்டும். எப்படியும் கேட்கவேண்டும். எப்படி? சிம்பிளாக கேட்போம். “Hey how about going for a coffee?”, இல்லை எடிட் பண்ணு. “Hey how about coffee?”. சூப்பர். நயினை நாகபூஷணி அம்பாளே. இது மட்டும் சரிவந்தால் உனக்கு நான் பால்காவடி தான். அம்மாளாச்சி அம்மாளாச்சி அம்மாளாச்சி … கேட்டிடவேண்டியது தான் ..

“Hey JK … You free now? ……  Up for a coffee?” தயக்கத்துடன் தலைசாய்த்து சிரித்தாள்.

என்ர அம்மாளாச்ச்ச்ச்ச்ச்சி….!

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  முற்றும் &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

குறிப்பு:

இந்த சிறுகதை சில வருடங்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதியது. ரீமேக் செய்யும்போது நிறைய தடுமாற்றங்கள். முக்கியமாக உரையாடலில். அதையெல்லாம் விமர்சிப்பீர்கள் என்று நினைக்கிறேன். பிடித்தாலோ பிடிக்காவிட்டாலோ .. ரெண்டு வார்த்தை ப்ளீஸ்!

http://jk-profound.blogspot.com.au/2010/04/i-am-jake-in-short-jk-errrh-jessie.html

Comments

  1. Ok... ரெண்டு வார்த்தை

    ReplyDelete
  2. நன்பேண்டா3/12/2012 5:37 pm

    பீலிங் குட் .....இதமான ஒரு படைப்பு... விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்தபோது உணர்ந்த ஒரு பீலிங்....

    ReplyDelete
  3. நன்றி பெயரெல்லா ..Ok... ரெண்டு வார்த்தை .. மொத்தமாக நாளு வார்த்தை .. நன்றி உங்கள் ஊக்கத்துக்கு!

    ReplyDelete
  4. நன்பேண்டா! சரியாக கண்டு பிடித்திருக்கிறீர்கள் .. இந்த கதை விண்ணை தாண்டி வருவாயா பார்த்துவிட்டு வந்த பாதிப்பில் 2010 இல் Identity Crisis சார்ந்து எழுதவேண்டும் என்று நினைத்து எழுதியது(ஆங்கிலத்தில்) .. நன்றி தல!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தமிழ்ப் புத்தகத்தை மறைத்துவிட்டு இங்கிலிஷ் புத்தகம் எடுத்தனீங்கள் இன்னும் மீசையை வழிக்கவில்லையா? :-)

    வெக்கறைக் கேசுகளுக்கு ஒரே ஒரு chance தான் உண்டு. அவளாகவே கேட்பது. அதுசரி மேகலா இதை வாசிக்கமாட்டாளா?

    ReplyDelete
  7. Very nice!
    சிரிச்சாலே காதலிக்கலாமா என்று நினைக்கிற நம்ம போசை அப்படியே வெளிப்படுத்தியிருக்கீங்க..!

    ReplyDelete
  8. என்னய்யா நடக்குது? Connex காலத்தில நடந்த கதை போல இருக்கு. நாங்கள் இப்போ Metro காலத்தில வந்திருக்கிறம். ஒண்ணுமே மாட்டுதில்லையே...ஒரு வேளை Southmorang வரை ஸ்டேசன் விஸ்தரிக்கிறதால JK அண்ணருக்கு அதிஷ்டம் அடிச்சிருக்குமோ;-))))

    டீக்கன் பக்கம் எனக்கு கிட்ட தான்...நான் Coffee குடிக்க கேட்கலாம் என்றிருக்கேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நல்ல எழுத்து நடை. அழகிய வர்ணனைகள்!

    ReplyDelete
  9. Congrats for winning terror kummi award!!

    ReplyDelete
  10. I did not read fully, but looks like the character Jessy also asking you to write your (Eelam) story like me. Today, at work while surfing BBC during lunch time, I saw the pictures of Channel 4 documentary. It is heart breaking (not just because of whose Son it was), now a days media waiting for the right time to tell truth like movie launch date. Either way, you guys don't get distracted by these, concentrate on projects like YarlITHub. Catch you later.

    ReplyDelete
  11. ha ha,
    gd one JK,
    என்ன ஒரு ஏக்கம்!


    ”ஏனென்றால் ஸ்ரீலங்கா ஆரேபியாவில் இல்லை!”- எமது யதார்த்ததை முழுவதுமாய் வெளிப்படுத்திய 4 சொற்கள்!

    ReplyDelete
  12. @சக்திவேல்

    "எடுத்தனீங்கள்" என்று எழுத்தாளர் நீங்களே சொல்லியிருப்பது கதையின் உண்மையான வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாமா?

    நன்றி தலைவரே ...

    //மேகலா இதை வாசிக்கமாட்டாளா?//
    வாசிப்பாள் .. அவள் மேகலாவாக இருந்தால்!

    ReplyDelete
  13. @valvaithenral

    இது ஒரு வித Identity Crisis .. கொஞ்சம் சுவாரசியமாக சொல்ல முயற்சித்தேன்!

    ReplyDelete
  14. @சிவகுமார்

    நன்றி தலைவரே!

    ReplyDelete
  15. @மோகன்

    // now a days media waiting for the right time to tell truth like movie launch date.//

    Which I think its a right thing to do .. otherwise nobody would give a dare on this documentary and everything will be easily forgotten. I really appreciate how channel4 executed their action plans on releasing these clips part by part. after three years, this actually gives a big slap on all these countries..

    ReplyDelete
  16. நன்றி @நிரூபன்

    முயற்சி திருவினையாக்கும்!!!

    ReplyDelete
  17. நன்றி பாலா .. என்ன ஆளையே காணோம்?

    ReplyDelete
  18. நொட்டை3/15/2012 1:18 pm

    நன்றி JK எங்களது encoding-decoding (தமிழில் யோசிச்சு ஆங்கிலத்தில் கதைப்பது) முறையை ஒரு சுவாரிசமான கதையாக தந்ததற்கு...
    I watched the movie "Dafur" (About Dafur Genocide). There are many disturbing scenes which you cannot believe really happened. I thought it is exaggerated as usual in a movie. But if you watch Channel4's documentary, you can't find a reason to refuse to accept any distressing scenes in movies

    ReplyDelete
  19. Thanks Nottai Anna ...

    Do you have the movie with you?

    Anna, we witnessed all these, so we don't need someone to authenticate the videos anyway!

    The argument of this impacts the reconciliation is a total bullshit .. First of all there should be a reconciliation effort .. and then, if someone who killed my sisters and shot down my infant baby, comes in-front and tells me, "Hey don't talk about it, let's unite" ... what would I do?

    Sinhalese will never get this and ever they will .. after all they don't have any reason to understand .. most of them dumped their moral values long ago anyway.

    Its so pathetic we are in the receiving end, handicapped and handcuffed ...

    ReplyDelete
  20. ஆனந்த விகடன் மாதிரி சஞ்சிகைகளில் பிரசுரிக்கும் தகுதி கொண்ட நல்ல கதை இது, மொழி பெயர்க்காமல் மீள தமிழில் எழுதியது போல இருக்கு.

    எழுத்தாளருடன் இருக்கும் பரிச்சியத்தையும் தாண்டி வாசித்தால் இந்தக்கதை தரும் அனுபவம் இன்னும் சுவை படும். அதுவும் குறிப்பாய் உலகத்தை சுற்றத் தொடங்கும் சமயத்தில், எங்கள் ஊர் அமைப்பின் படி பெண்மையை அதிகம் நெருங்கிப் பார்த்திராத பழகி இராத வாலிபத்தை கொண்டவர்கள் தங்களை நிச்சயமாய் அடையாளம் கண்டு கொள்ளலாம் - கொள்ளுவினம்.

    ReplyDelete
  21. நன்றி வாலிபன் .. எனக்கு இப்போதைக்கு இருக்கும் பிரச்சனை இது தான் ... வாசிப்பவர்கள் பலர் என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் என்பதால், என்னையும் கதையில் வரும் பாத்திரங்களையும் போட்டு குழப்புவார்கள். நானும் என் பங்கிற்கு பெயர்களை வெறு வேணுமென்றே அப்படி போட்டு வெறுப்பேத்துவேன் ...

    இந்த கதை உருவான விதம சுவாரசியமானது. இங்கே மெல்பேர்னில் ட்ரெயின் பயனிகளுக்கேன்றே MX என்று ஒரு பத்திரிகை தினமும் ப்ரீயாக கொடுப்பார்கள். அதில் ஒரு வாசகர், தன் முன்னே ஒரு ஆணும் பெண்ணும் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்து விட்டு, அவன் இறங்கும் தருவாயில் அவளிடம் Coffee கேட்டதை "Dating on the fly" என்று சொல்லி விவரித்திருந்தார். உண்மை சம்பவம்.

    அதை அடிப்படையாக வைத்து, எங்களுக்கு இருக்கும் identity crisis ஐ சுவாரசியமாக சொல்ல விளைந்த கதை. ஆங்கிலத்தில் எழுதி ஓரளவுக்கு பலர் வாசித்ததால் எனக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் வந்தது.

    ReplyDelete
  22. "கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள்.இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா?"
    இப்படி விபரிக்க எனி ஒருவன் பிறந்து தானஂ வரவேண்டும் .

    " அக்காவுக்கு இன்றைக்கு போன் போடவேண்டும்."
    'அதுக்கு இப்ப என்ன' என்று தானஂ கேட்பா

    "அது பாவம் அங்கேயும் இங்கேயும் இழுபட்டு ஓட அந்தத்தாய் பட்டியை இறுக்கி, கிட்டே வா என்று மிரட்ட, ஏனோ முதலில் பார்த்த doberman நாயும் பட்டியும் அதன் சொந்தக்காரனும் ஞாபகம் வந்தது."
    பார்த்து மிகவும் கவலைப்பட்டு ஒருத்தியிடம் கேட்டு விட்டேன் இது இங்கு சகயமாம் .அம்மாமார் வாசிக்கவும் ."ஆடுறா ராமா ஆடு" ஞாபகம் வரவில்லை

    இந்த இலக்கியம் எழுத்து என்று திரிபவர்கள் எல்லாருமே ஏமாற்று பேர்வழிகள். நம்பமுடியாது. கழுத்தறுத்துவிடுவாங்கள்.
    விமர்சனம் தேவையில்லை என்று நினைக்கிறேன்

    யாராவது ஆஸி ட்ரெயினில் சூவிங்கம் தந்தால் வாங்கிவிடவேண்டுமாம்
    ஆனால் அம்மா வேண்ட வேண்டாமாம்

    தப்பித்தவறி என் அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டாலும், இவளை திருமணம் செய்து கொண்டால் நாடு திரும்ப தேவையில்லை.
    எவ்வளவு ஒரு யதார்த்தமான விடயம் படுகிறவர்களுக்கு படும்

    ஏனென்றால் ஸ்ரீலங்கா ஆரேபியாவில் இல்லை! நச்

    எவ்வளவு காலம் தான் தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் பேசுவது? வெளியில் தான் அது என்றால், வீட்டிலுமா? தாங்குமா? அம்மா சமாளிப்பாவா? அம்மாவுடனும் அப்பாவுடனும் இன்னமுமே ஒரே வீட்டில் இருப்பதை பார்த்து வெள்ளைக்காரி காறி த்தூ?
    Coffee வரைக்கும் போயிருக்க தேவையில்லை

    இது மட்டும் சரிவந்தால் உனக்கு நான் பால்காவடி தான்
    பால்காவடி எடுத்ததா?

    ReplyDelete
  23. வாசிக்கையில வயிற்றுக்குள்ள ஏதோ பிசையுது...ஏதும் விவகாரமாக முடிஞ்சுருமோ என்டு...நல்ல வேளை...அம்மாளாச்சி காப்பாத்திட்டா. நல்ல நடை. அடுத்தது ஏன் குறும் படத்துக்கு திரைக்கதை எழுதக் கூடாது?

    ReplyDelete
  24. @கீதா ...

    என்னா விமர்சனம் இது .. அடுத்த கதை எழுதக்க வயித்த கலக்க போகுது எனக்கு !! நன்றி

    //ராவது ஆஸி ட்ரெயினில் சூவிங்கம் தந்தால் வாங்கிவிடவேண்டுமாம்
    ஆனால் அம்மா வேண்ட வேண்டாமாம் //
    எங்கள் வாய் மணக்கலாம் .. அதனால் தான் தருகிறார்களோ என்று சந்தேகித்தால் அட்லீஸ்ட் கையோடு டிக்டக் ஆவது கொண்டு திரியவேனும்

    //பால்காவடி எடுத்ததா?//
    ஒவ்வொரு வருஷமும்!!

    ReplyDelete
  25. நன்றி ரமேஷன்

    //அடுத்தது ஏன் குறும் படத்துக்கு திரைக்கதை எழுதக் கூடாது?//
    வாசிப்பும் கொஞ்சம் இலக்கியமும் தான என் விருப்பங்கள். அதின் நீட்சி தான் எழுத வந்ததும். சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் ஆங்கிலத்தில் எங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக "Kite Runner" போன்று எழுதவேண்டும் என்று ஒரு கனவு .. குறும்படங்கள் குழப்பிவிடலாம். ஆனாலும் ரீச்சுக்காக செய்வதில் ஆட்சேபனை இல்லை! நானும் இரண்டு நண்பர்களும் இப்போது ஒரு documentary செய்துகொண்டுதான் இருக்கிறோம்!

    ReplyDelete
  26. It was great to read this in a train and on a Saturday deserted train; but not Epping line. Thanks JK. It made me to laugh on certain potions and the other passengers were looking at me strangely. Nothing new when I read some FB comments either. Poor Kajan..

    Cheers
    Senthuran Anna

    ReplyDelete
  27. Interesting..(with a bit of 'Sujatha' flavour :)

    ReplyDelete
  28. @Thanks Senthuran Anna .. Ha ha .. nothing to do with Kajan!! (பெயர் போட்டா கடுப்பாகிறான் அண்ணா)

    ReplyDelete
  29. Thanks Dhanya ... Of-course 'Sujatha' is my idol .. can't help :)

    ReplyDelete
  30. // என் பாக்கில் இருக்கும் புதிதாக வாங்கிய Raybon கண்ணாடியை எதற்கும் எடுத்து மாட்டினேன். Mc Donalds இல் வேலைக்கு சேர்ந்து முதல் வார சம்பளத்தில் வாங்கியது.//

    ஆஸ்திரேலியாவில் சம்பளத்தை மாதக்கடைசியில் கொடுக்க மாட்டங்களா தல ?

    இது வரை ,தாங்கள் எழுதிய படைப்புகளை வாசித்ததில் ,இந்த சிறுகதை வாசிக்கும் போதுதான் , உங்களின் படைப்பாற்றல் தன்மை என்னை முழுவதும் ஆக்கிரமித்துவிட்டதாக உணர்கிறேன் . இன்னொரு விஷயம் என்னவென்றால் கதை வாசிக்க ஆரம்பித்த முதல் ,முடிக்கும் வரை ,இதனை தங்களின் மெல்பெர்ன் நகர ரயில் பயண அனுபவ கட்டுரையாகவே எண்ணி வாசித்து முடித்தேன் .கடைசியில்தான் தெரிந்தது ,........ பல்ப் வாங்கிவிட்டோம் என்று !!!

    வெள்ளைகார முரட்டு ஆண்களை பார்த்து பயம் கொல்லுவது, teetoller ஆக இருப்பது ,வெள்ளைக்கார பெண்களின் மனதில் இடம் பிடிக்க எடுக்கும் பிரயத்தனம் ,,,,என பல இடங்களில் மனதை கவருகிரீர்கள் . கடைசியாக உங்களின் கிளைமாக்ஸ் வரிகள் அற்புதம் !!

    //“Hey how about coffee?”. சூப்பர். நயினை நாகபூஷணி அம்பாளே. இது மட்டும் சரிவந்தால் உனக்கு நான் பால்காவடி தான். அம்மாளாச்சி அம்மாளாச்சி அம்மாளாச்சி … கேட்டிடவேண்டியது தான் ..//

    யாழ்பாணம் சென்று எப்போது பால்காவடி எடுக்க போறீங்க ?

    சூப்பர் தல . அருமையா முடிச்சிருக்கிங்க .கலாச்சார முரண்பாட்டை(Identity Crisis) மையப்படுத்தி இந்த சிறுகதை எழுதியதாக பின்னுட்டத்தில் பதில் கூறி இருக்கிறீர்கள் . அருமை தொடர்ந்து எழுதுங்கள் .

    பின்குறிப்பு :
    அம்மாளாச்சி: கடவுள் பெயரா? இந்த வார்த்தையின் பொருள் என்ன தல .
    .

    ReplyDelete
  31. நன்றி முருகேசன்

    //ஆஸ்திரேலியாவில் சம்பளத்தை மாதக்கடைசியில் கொடுக்க மாட்டங்களா தல ?//

    சாதாரணமாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேன் மெல்பேர்னில் சம்பளம். ஆனால் casual job என்றால் வாரம் தோறும் கூட கொடுப்பார்கள். மாசச்சம்பளம் இங்கே அரிது.

    //அம்மாளாச்சி: கடவுள் பெயரா? இந்த வார்த்தையின் பொருள் என்ன தல .//

    அம்மாளாச்சி என்பது அம்மனை எங்கள் ஊர் பாஷையில் குறிப்பிடுவது. "அம்பாள் + ஆச்சி".

    தொடர்ந்து வாசிக்கும் உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி. ஈழத்து வழக்குகள் எங்கேயாவது புரியாமல் போனால் கேளுங்கள். அவ்வப்போது பாவிப்பதுண்டு.

    ReplyDelete
  32. another good on from you JK,

    ஏனென்றால் ஸ்ரீலங்கா ஆரேபியாவில் இல்லை! நச்
    My friend (Canadian) told me the same thing, "Why we should care, your country has nothing, if you have crude oil or something we will come and fight for you, not for you but for the oil."

    Mano

    ReplyDelete
  33. I accidentally discovered your blog page. Enjoy reading it. Keep posting.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...