Skip to main content

கணவன் மனைவி!

 

“நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993)  செவ்வாய் கிழமை, வளர்பிறை …..”

குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார்.

99731_f260தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி?

பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில..

கோயில்லையோ?

இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட,

ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ?

இன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள். 

சரியா தெரிய இல்லை முதலாளி,  வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம்.

ஆனா தீவாரல்லோ தம்பி? சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே? வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம்.

குமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார். பத்து லட்சம் வரை கொடுத்து தான் வெளியில் வந்ததாக ஊருக்குள் பேச்சு. சொல்லிவிட்டு கிளம்பும்போது தான் குமரனுக்கு இவரிடம் கேட்கலாமா என்று தோன்றியது. தயங்கினான்.

என்ன தம்பி, பம்முறீர்? வந்த விஷயத்தை சொல்லும்

இல்ல … கலியாணத்தன்று இரவு சினிமா படம் போட போறம் … ஐஞ்சாறு படம். நீங்க ஒரு போத்தல் மண்ணெண்ணெய் தந்தா நல்லா இருக்கும்

எண்ணையோ? அது விக்கிற விலைக்கு படத்துக்கெல்லாம் தர முடியாது.. என்னட்ட இல்ல தம்பி.

எதிர்பார்த்தது தான். சங்கரப்பிள்ளையரிடம் ஐந்து சதம் கூட பெயர்க்கமுடியாது. ஒரு நம்பிக்கையில் தான குமரன் கேட்டான். யாழ்ப்பாணத்தில் யாருக்காவது திருமணம்,  சாமத்திய வீடு என்றால் தான் சினிமா படம் பார்க்கலாம். இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் வெடித்த பிற்பாடு மின்சாரம் நின்று போய் பொருளாதார தடையும் சேர்ந்துகொள்ள,  படம் பார்ப்பது என்பது முயல்கொம்பு. இப்படி ஏதாவது நிகழ்வு என்றால் தான், பணம் வசூலித்து ஒரே இரவில் ஐந்து ஆறு படங்கள் பார்ப்பார்கள். அப்புறம் கல்யானவீட்டு வீடியோ வரும்போது இன்னொரு தடவை. ஒரு படக்கொப்பிக்கு வாடகை அறுபது ரூபா. டிவி டெக் வாடகை தனியாக முந்நூறு ரூபாய். ஜெனரேட்டர் இன்னொரு முன்னூறு. அதுவும் யமாகா என்ஜின் என்றால் ஓயிலும் கலந்து விடவேண்டும். அதற்கு நூறு ரூபாய் தனியாக அழவேண்டும். நிஜமான ஜெனரேட்டர்  என்று ஒன்றும் கிடையாது. நீர் இறைக்கும் பம்பை திருகுதாளம் பண்ணி ஜெனரேட்டர் ஆக்கி வைத்திருந்தார்கள். காபரேட்டரில் இன்னொரு திருகுதாளம் செய்தால் மண்ணெண்ணையில் ஓட்டலாம். பெட்ரோல் இல்லாததால் ஸ்டார்டிட்டிங் டிரபிள். அதற்கு தான் இருக்கவே இருக்கிறது தலை இடிக்கு பூசும் ஓடிகலோன். டின்னரும் பாவிக்கலாம்.

இஞ்ச தம்பி .. சித்த நில்லும்

கேட் வரைக்கும் போயிருந்த குமரனை முதலாளி திருப்பி கூப்பிட்டார்.

அரை போத்தில் வேணுமெண்டா தாறன், ஆனா ஒரு கண்டிஷன்

புரிந்தாலும் குமரன் என்ன? என்று சைகையால் கேட்க,

இந்த “புதிய பறவை” படம் போடுவீங்களா?

புதிய பறவையா? அப்பிடி ஒரு படம் இருக்கா?  ஆர் நடிச்சது?

அட, பழைய பேமஸ் படம் தம்பி, சரோஜாதேவி நடிச்சது. சிவாஜி எல்லாம் ..

சிவாஜியை முதலில் சொல்லாமல் சரோஜாதேவியை முதலில் சொல்லும்போதே புரிந்துவிட்டது,  சங்கரப்பிள்ளையாருக்கு சரோஜாதேவி என்றால் கொள்ளை விருப்பம் என்று. அவரின் மனைவி முகமும் உடனே கண்ணுக்குள் வர, குமரனுக்கு கொஞ்சம் துணிச்சல் வந்தது.

போடலாம், ஆனா ஒரு சின்ன சிக்கல், நிறைய பேர் தங்களுக்கு பிடிச்ச படம் போடோணும் எண்டு கேக்கினம். இரண்டு போத்தல் எண்ணை தாற ஆக்களுக்கு தான் அவயல் சொன்ன படம் போடுறதா முடிவு… 

இல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க, சங்கரப்பிள்ளை யோசித்தார்.  இரண்டு போத்தல் எண்ணை சந்தையில் நானூறு ரூபாய் போகும். கொடுப்போமா விடுவோமா என்று யோசித்தார். குமரன் அடுத்த பந்தை வீசினான்.

போன மாசம் தானாம் இவன் ரமேஷிண்ட தங்கச்சி சாமத்திய வீட்டில “புதிய பறவை” போட்டவங்களாம். புத்தம் புது கொப்பி, தண்ணி மாதிரி கிளியர்.

“புதிய பறவை” யை இதற்கு முதல் கேள்வியே படாத குமரன் அவிழ்த்துவிட்டதை புரிந்துகொள்ளும் மனநிலையில் சங்கரபிள்ளையார் இருக்கவில்லை. சரோஜாதேவி கண் கண்ணை மறைத்துவிட்டது.

இல்ல தம்பி,  என்ன இருந்தாலும் இரண்டு போத்தில் கொஞ்சம் அதிகம்..அதான்..

பட்சி சிக்கிவிட்டது.

நீங்க சொன்னீங்க எண்டு முதல் படமா போடலாம். பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சிடும். நித்திரை முழிக்க தேவையில்லை. வெள்ளன போய் கடை துறக்க லேசா இருக்கும்.

ஒருவழியாக சங்கரப்பிள்ளையார் வழிக்கு வந்தார்.

நீங்களும் இளம் பிள்ளைகள் .. இதுகளை பார்க்க தானே வேணும் .. ஆனா நான் தான் எண்ணை தந்தது எண்டு ஆருக்கும் சொல்லிடாத.

ஒரு வழியாக இரண்டு போத்தல் எண்ணைக்கு வழி பண்ணியாச்சு. இன்னும் நான்கு போத்தல் வேண்டும். கீர்த்தியிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவான். சைக்கிளை நேரே கீர்த்தி வீட்டுக்கு செலுத்தினான். வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்.

“இரண்டு போத்தில் எண்ணை ரெடி, சங்கரப்பிள்ளையர் சரிஞ்சிட்டார்”

“அப்ப, நான் டிவி டெக் அரேன்ஜ் பண்ணுறன். காசு சேத்திட்டியா?”

“சேர்க்கோனும், ஆளாளுக்கு தங்களுக்கு பிடிச்ச படம் போட சொல்லுறாங்கள்”

“எல்லாருக்கு சரி எண்டு சொல்லு, கடைசி நேரத்தில படக்கொப்பி கிடைக்க இல்லை எண்டு சொல்லி சமாளிக்கலாம்!”

“காந்தனிட்ட படம் போடுற விஷயம் சொல்லீட்டயா?”

“சொன்னன், அவன் தானும் ஒரு கொப்பி வச்சிருக்கிறானாம். போட போறதா சொன்னான்”

“கலியாண மாப்பிள்ள, அண்டைக்கு இரவு படம் பாக்க போறானே? அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா?“

“அவனுக்கு சும்மா கதை விட மட்டும் தான் தெரியும் மச்சான், ஒண்டும் புடுங்க மாட்டான் பாரு”

அவசர அவசரமாக காரியங்கள் நடந்தன. முக்கிய வீடுகளிடம் சொல்லி ஆயிரம் ரூபாய் சேர்த்தாச்சு.  சைக்கிள் கடைக்காரன் ரமேஷிடம் டிவி, வீசிஆர், ஜெனரேட்டர், படக்கொப்பிகளுக்கு ஓடர்,  எதற்கும் இருக்கட்டுமே என்று “உறங்காத கண்மணிகள்” படக்கொப்பியும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. தப்பித்தவறி காவல்துறை வந்துவிட்டால், கொப்பியை மாற்றிவிடலாம். பக்கா பிளான் ரெடி.

Brahman hindu priest bleses a young couple in the hindu temle of Chavakachcheri during traditional hindu wedding on 20. November 2005, Chavakachcheri, Jaffna Sri Lanka

செவ்வாய்கிழமையும் வந்தது, ராகு காலம் பன்னிரெண்டு மணிக்கு என்பதால், அவசரம் அவசரமாக ஐயர் மந்திரம் சொல்ல, காந்தன் வானதி கழுத்தில் தாலி கட்டியதும், கட்டும் போது துபாய் பவுனில் செய்த கொடியின் மூன்றாவது திருகு பூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க, பின்னால் நின்ற வானதியின் தங்கை மேகலா காந்தனுக்கு உதவி செய்ததும், அதை பார்த்த கீர்த்தி “மச்சம்டா காந்தனுக்கு” என்றதும்,  குமரன் அதை ரசிக்காததும் … இந்த கதைக்கு வேண்டாத சம்பவங்கள் என்பதால் காந்தன்-வானதி திருமணம் இனிதே நிறைவு பெற்றது!

மாலை ஆறு மணி. காந்தன் வீட்டின் வரவேற்பறை ஹால் நிறைந்து வழிந்தது. மறுவீடு அழைப்புக்கு மேகலா வீட்டிற்கு சென்றவர்கள். இன்னமும் வரவில்லை. முன் வரிசை முழுவதும் சிறுவர்கள் உட்கார்ந்திருக்க, தொடர்ந்து பெண்களும், பின்னால் ஆண்களும் இருந்தார்கள். மேசையில் 21இஞ்ச் நேஷனல் டிவி. சின்ன பிளாஸ்டிக் ஸ்பானர் கொண்டு தான் அந்த டிவியில் சானல் எல்லாம்  டியூன் பண்ணவேண்டும். வயர் இணைக்கப்பட்ட ரிமோட்.  பக்கத்தில் டெக் என்று அழைக்கப்படும் வீசீஆர். அதிலிருந்து வயர் இழுத்து, யன்னலுக்கு வெளியே முற்றத்தில் வைத்திருந்த ஜெனரேட்டரில் இணைத்திருந்தார்கள்.  ஜெனரேட்டர் என்ஜின் பல தடவை இழுத்தும் ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தது.  உடனே குமரன் அதிலே பொருத்தியிருந்த ஸ்பார்க் பிளாக்கை கழட்டி பார்த்தான். கரி மண்டியிருந்தது. Gasoline-Water-Pump-PTG406-ROBIN-EY28-

என்னடா செய்யிற? என்ஜின் பழுதா? சனங்கள் எல்லாம் வந்திட்டுது

கீர்த்திக்கு புரியாமல் குழம்பினான்.

பொறு, சரி செய்யலாம்

ரமேஷை கூப்பிடுவமா?

ஒண்டும் வேண்டாம், ப்ளாக்ல கார்பன் ஏறிப்போட்டுது, நெருப்பில போடோணும்

ஓ ..தணல் எடுத்து வரட்டா?

கீர்த்தி சொல்லிக்கொண்டே இருக்கையிலேயே அவனை கவனிக்காமல் குமரன் எழுந்து  நேரே வரவேற்பறை பக்கமாக சென்றான். எல்லோரும் இவனையே எதிர்பார்த்து இருந்தவர்கள் போல, இவன் பக்கம் திரும்பினர். குமரன் கூடத்தின் நடுவே இருந்த மேகாலாவை பார்த்து..

“மேகலா இஞ்ச ஒருக்கா வாரும், இந்த பிளாக்க கொஞ்சம் சூடாக்கி தர ஏழுமே, கீழ போட்டிடவேண்டாம் கவனம்..”

திடீரென சபை நடுவே குமரன் தன்னை அழைத்தது மேகலாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், வேறு எல்லோரையும் விட்டுவிட்டு தன்னை அழைத்ததை  பெருமையாகவே உணர்ந்தாள். நண்பிகளை பார்த்து சிரித்துவிட்டு, எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்.  இந்த இடத்தில் மேகலாவை பற்றி ஒரு சில வரிகள் அறிமுகம் தேவை.  மேகலா யாழ் இந்து மகளிர் கல்லூரியில், பயோ சயன்ஸ் படிக்கிறாள். படிப்பு சுமார் தான். வானதியை விட ஐந்து வயது இளமை. நிறம் கம்மி.  ஆனால் ஒருமுறை பார்த்து சிரித்தாள் என்றால் ஆயுசுக்கும் அவள் பின்னாலேயே அலையலாம். குமரன் ஆறுமாசமாக அலைந்துகொண்டு இருக்கிறான். அவளுக்கு தெரியாது.  வெளியில் கதை விட்டாலும் கிட்டே போய் ஒரு வார்த்தை தனியே பேச குமரனுக்கு பயம். நூறு மீட்டர் தள்ளி தான் எப்போதும் போவான். திரும்பினாலும் தெரியாது. கண்டால் என்ன நினைப்பாள்? 

“மேகலா, சூடு காட்டேக்க உருகிடும், கொஞ்சம் மெல்லிய தணல்ல வைய்யுங்க”

இடையில் புகுந்த கீர்த்தி தன் பங்குக்கு ட்ரை பண்ண

“இல்ல இல்ல, எவ்வளவுக்கு தணல் போட ஏலுமோ அவ்வளவுக்கு போடுங்க, அது தான் நல்லது, ப்ளாக் ஒருநாளும் உருகாது”

“ஓகே, இப்பவே அடுப்புல கொண்டு போய் போடுறன், தாங்க ..”

“ஐஞ்சு நிமிஷம் போதும், அப்பிடியே கொஞ்சம் ஓடிகலோன் இருந்தா கொண்டு வாங்க, என்ஜின் ஸ்டார்ட் பண்ண தேவை”

தலையாட்டிக்கொண்டே மேகலா செல்ல, ரெட்டை ஜடையில் கருப்பு ரிப்பன். ஜடை முடிவில் மடித்து கட்டாமல் நீண்ட முடியாக தெரிவதற்காக தொய்ய விட்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த குமரன் சட்டென கூட்டம் முழுதையும் கொஞ்சம் நிமிந்து பார்த்துவிட்டு வெளியே வந்தான்.  கீர்த்திக்கு அவமானமாயும் கோபமாகவும் இருந்தது, எந்த பொருளுக்கும் ஒரு கொதிநிலை இருந்து ஆகத்தானே வேண்டும் என்று சொல்ல வாயுன்னினான். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. குமரனை பற்றி காந்தனுக்கு சொல்லிவைக்க வேண்டும் என்று நினைத்தான்.  இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. குமரன் தான் முதலில் தொடங்கினான்.

“இங்க தானே இண்டைக்கு முதலிரவு மச்சான்?”

“மாப்பிள்ள வீட்ட இல்லாம என்ன மயிலிட்டியிலயே நடக்கும்?”

கீர்த்திக்கு கடுப்பு இன்னமும் தீரவில்லை.

“படம் போட்டா அவையல டிஸ்டேர்ப் பண்ணாதா? எது மாப்புள பொம்பிளயின்ட ரூம்?”

டிவி மேசைக்கு பக்கத்தில இருக்கிற ரூம் தான், ஆனா அவங்கட பிஸில இதெல்லாம் கேக்காது .. சொல்லப்போனா டிவி சத்தம் அவைக்கு வசதியா ..….

மேகலா வருவது  தெரிந்து கீர்த்தி பேச்சை நிறுத்தினான். சுட சுட ப்ளாகை ஒரு சட்டியில் போட்டுகொண்டு வந்திருந்தாள்.

“ஓடி கொலோன் இல்லை … பேபி கோலோன் தான் இருக்கு, ஓகே யா?”

“அதுவும் வேலை செய்யும், தாங்க”

“கீர்த்தி இதை கொண்டு போய் கவனமா பூட்டு, நான் கோலனை வாங்கிக்கொண்டு வாறன்”

குமரன் கீர்த்தியிடம் ப்ளாகை கொடுக்க, விஷயம் தெரியாமல் அவன் கையால் எடுக்க,  புளாக் சுட்டது.ஸ்ஸ்..

ஏழு மணி இருக்கும். மாப்பிளை பொம்பிளை திரும்பி விட்டார்கள். அவர்களுக்கென்று பிரத்தியேக இரட்டை கதிரை தயார் செய்யப்பட்டு இருந்தது. வானதி சேலையிலிருந்து சாதாரண பாவாடை சட்டைக்கு மாறி இருந்தாள். புது தாலி சட்டைக்கு வெளியே தொங்கியது. கையில் இருபது காப்பாவது இருக்கும். காந்தன் வேஷ்டி கட்டி,  கட்டம் போட்ட சட்டையில். இரண்டு புறமும் தலையணை போட்டிருந்த அந்த இரட்டை கதிரையிலும் இருவரும் ஒட்டியே இருந்தார்கள். வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான். ஆறு மணிக்கே வந்த கூட்டம் இன்னமும் கலையாமல் இருந்தது. சங்கரப்பிள்ளை முதலாளி, மனைவியை வீட்டில் விட்டு விட்டு தனியாக வந்திருந்தார். மேகலாவுடன் அவள் நண்பிகளும் என ஒரு பத்து பேர். காந்தனின் உறவினர்கள், திருமணத்துக்கு வந்தவர்கள் மீண்டும் வந்திருந்தார்கள். வானதியின் குடும்பத்தில் இருந்து அவள் தம்பியும் மாமாவும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ஜெனரேட்டர் ஒருவழியாக ஸ்டார்ட் ஆனது.  டிவியை ஆன் பண்ணினால் ப்ளக் என்று ஒரு சத்தம். அவ்வளவு தான். டிவியில் எந்த அசுமாத்தமும் இல்லை. குமரன் டெஸ்டர் ஸ்குரூடிரைவரை வைத்து ஏதோ செக் பண்ணிவிட்டு பியூஸ் போய்விட்டது என்றான். டிவியை பின்புறமாக கழட்ட ஆரம்பிக்க கூட்டம் சலசலக்க தொடங்கியது. எங்கேயோ இருந்த பெரிசு “இந்த காலத்து டிவி எல்லாம் இப்பிடி தான்” என்றது. குமரன் ஒரு வயரை எடுத்து, பல்லால் இழுத்து உள்ளே இருந்த கம்பியை வெளியே எடுத்தான். சத்தகத்தால் அதை நன்றாக சீவி பியூசில் பொறுத்திவிட்டு மீண்டும் டிவியை போட, அது இர்ர்ர் என்று இரைந்து வேலை செய்தது. டெக்கை ஆன் பண்ண, டிவி முழுக்க செங்குத்தாக கலர் கலர் சட்டங்கள். முன்னால் இருந்த சிறுவர்கள் சந்தோஷத்தில் கைதட்டினார்கள்.  குமரன் கூட்டத்தை நோக்கி கை காட்டினான்! மேகலா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

புதிய பறவை, அண்ணாமலை, தேவர் மகன், ரோஜா, செம்பருத்தி என ஐந்து படங்கள். முதலில் எது போடலாம் என கீர்த்தி கூட்டத்தை கேட்ட போது,  முன் வரிசையில் இருந்தவர் எல்லோரும் அண்ணாமலை என்று சொல்ல, சங்கரப்பிள்ளை முதலாளி முகத்தில் கோபம். ஒன்றும் பேச முடியாது. அண்ணாமலை சரியாக ஏழு இருபதுக்கு ஆரம்பித்தது. கூட்டம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தது. சரத்பாபு திருமணம் முடியும் போது காந்தனும் வானதியும் முதலிரவு அறைக்குள் போய்விட்டதை கூட்டம் கவனிக்கவில்லை.  பாம்பை துரத்திபோகும் ரஜனி,  குஷ்பு குளிப்பதை பார்த்துவிட்டு சொல்லும் “கடவுளே கடவுளே” காட்சி வந்தது. மேகலா என்ன நினைப்பாளோ என்று குமரன் சிரிப்பை அடக்கிக்கொண்டே எங்கேயோ பார்த்தான். கீர்த்தி விவஸ்தை இல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்க குமரன் அவன் கையை பிடித்து அழுத்திக்கொண்டே சாதுவாக மேகலா என்ன செய்கிறாள் என்று பார்த்தான். அவளோ அடக்கமுடியாமல் சிரித்து சிரித்து பக்கத்தில் இருந்தவள் தோளில் விழுந்துகொண்டிருக்க, குமரனுக்கும் சிரிப்பு வர தொடங்கியது. 

அண்ணாமலை முடியும் போது நேரம் பத்து மணி. என்ஜினை கூல் ஆகட்டும் என்று நிறுத்திவிட்டு சாப்பிட ரெடியானார்கள். மத்தியானம் கல்யாண வீட்டு சோறு கறியை ஒரு பெரிய சட்டியில் போட்டு குழையல். குத்தரிசி சோறு, கத்தரிக்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு கறி, தக்காளிப்பழ குழம்பு, பீட்ரூட் துவையல், கோவா, பருப்பு, தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு, ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்.

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே சங்கரப்பிள்ளையார் அவசரப்படுத்த, கீர்த்தி “புதிய பறவை” போட போவதாக அறிவித்தான். சிறுவர்கள் பெருமூச்சு விட, நடுவில் உட்கார்ந்திருந்த மேகலா “ரோஜா” போடவேண்டும் என்று சொல்லும்போது, கீர்த்தி மெலிதாக அவளை பார்த்து கண்ணடித்ததை குமரன் கவனிக்கவில்லை. “புதிய பறவை” யை வீஸிஆர் இல் நுழைத்து ப்ளே பண்ணினான். படம் தெளிவாக வரவில்லை. “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாட்டு ஜவ்வோ ஜவ்வன்று ஆரம்பித்து “நாம் பழகி வந்தோம் சில காலம்ம்ம்ம்” பேயாய் இழுத்து ஸ்டக் ஆகிவிட்டது. குமரன் திட்டிக்கொண்டே வீசிஆர் ஹெட்டில் பங்கஸ் பிடித்துவிட்டதாக சொல்லி திறந்து கிளீன் பண்ணினான். இனிமேல் “புதிய பறவை” படம் போட்டால் டெக் பழுதாகிவிடும். கொப்பி சரியில்லை. சங்கரப்பிள்ளையார் கோபத்தில் எழுந்து போய்விட, ரோஜா இப்போது சின்னத்திரையில்.

ரோஜா முடியும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது.  சொக்கிப்போய் இருந்தார்கள். குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது.  ஹனிமூனுக்கு கண்டிக்கு போகும்போது ஸ்ரீலங்கா ஆர்மி தன்னை பிடித்துகொண்டு போவதாகவும், மேகலா வந்து பூசா சிறையில் தன்னை மீட்பதாகவும் அபத்தமாக யோசித்தான். பூசாவுக்கு வெளியில் நின்று கட்டியணைக்கும் போது “பட்டிக்காடு” என்று கூப்பிடவேண்டும் போல இருந்தது. அதே போல நீளமான சாம்பல் கலர் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்து …கீர்த்தி தேவர் மகனை ப்ளே பண்ணினான். இப்போது கூட்டம் அதிகமாக இல்லை. முன்னாலே இருந்து பார்த்த குஞ்சு குருமான் நித்திரையில் கிடக்க, ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். பெரிசுகள் எல்லாம் அவுட். மேகலா குரூப்பும், பெடியளும் தான். “இஞ்சி இடுப்பழகா” முடியும்போது மேகலாவும் கிளம்பிவிட்டாள்.

“நித்திரை வருது .. நாங்க போறம் .. இருந்து பார்த்திட்டு மிச்ச கதையை சொல்லுங்க”

“எப்ப சொல்ல?”

குமரன் கேள்விக்கு மேகலா ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு புறப்பட, குரூப் பின் தொடர்ந்தது. இப்போது படம் பார்த்துக்கொண்டு இருப்பது ஐந்து பேர் மட்டும் தான். ஆண்கள். மற்ற எல்லோரும் போய்விட்டிருந்தனர். தேவர்மகன் முடியும் போது நேரம் மூன்று மணி.  கீர்த்தி எழுந்து செம்பருத்தியை ப்ளே பண்ண போகும்போது தான் முதலிரவு அறை சத்தம்போடாமல் திறந்தது.  எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய ஆர்வம். ஒட்டுமொத்தமாக அறை வாசலை பார்த்தார்கள்.

காந்தன் தான் வெளியே வந்தான். சாரம் அணிந்திருந்தான். மேலே சர்ட் ஒன்றும் இல்லை. தலைமயிர் கலைந்திருந்தது.  வேண்டுமென்றே கலைத்துவிட்டு ‘படம்’ காட்ட வருகிறான் என்று குமரன் கீர்த்தியிடம் முணுமுணுத்தான். காந்தன் நேரே போய் அலுமாரிக்குள் ஒளித்து வைத்திருந்த படக்கொப்பி ஒன்றை எடுத்து வந்தான். கீர்த்திக்கு இருப்பு கொல்லவில்லை.

என்னடா இங்கே வந்திட்ட?

படம் பார்க்க தான்!

இல்ல, மூண்டு மணி .. கலியாணம்… களைச்சிருப்ப..

காந்தன் பேசவில்லை

வானதி எங்கேயடா?

அவள் நல்ல நித்திரை!

நீ?

ப்ச் .. நித்திரையே வர இல்லைடா மச்சி

வந்தா தாண்டா தப்பு!

அது இல்லை … என்னட்ட ஒரு படம் இருக்கு .. எல்லோரும் போயிட்டாங்களா?

ஓமடா .. நாங்க மட்டும் தான் .. என்ன படம்டா இது?..அடிபாட்டு படமா?

ஒரு மலையாள படம் …. மேகலாவும் பிரண்ட்ஸும் போயிட்டுதுகள் தானே?

செம்பருத்தி நல்ல படம் மச்சி, மலையாள படத்தை எவன் பார்ப்பான்? .. ஆர்ட் பிலிம் ஒண்டும் விளங்காது!

கீர்த்தி விஷயம் புரியாமல் சொல்ல குமரன் அவனை வாயை மூடுமாறு சைகை செய்தான்.

ஒருத்தரும் இல்லடா  காந்தன் .. நாங்க மட்டும் தான் .. கில்மா படமாடா மச்சி .. என்ன பெயர்?

குமரன் வாயெல்லாம் பல்லாய் கேட்க, காந்தன் நேரே போய் முதலிரவு அறையை இறுக்கி சாத்திவிட்டு வந்து மெதுவாக சொன்னான்..

“கணவன் மனைவி!”

 

***************************************************** முற்றும் ********************************************************

 

பின்குறிப்பு

சிறுகதை மூலம் : ஆங்கிலத்தில் எழுதிய “Kajan’s Wedding Night!”

படங்கள் : இணையம்

Comments

  1. ஆனா ஒரு சின்ன சிக்கல், நிறைய பேர் தங்களுக்கு பிடிச்ச படம் போடோணும் எண்டு கேக்கினம். இரண்டு போத்தல் எண்ணை தாற ஆக்களுக்கு தான் அவயல் சொன்ன படம் போடுறதா முடிவு… //

    கொய்யாலே...குமரன் சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிச்சிருக்கான்!
    சமயம் பார்த்து கவுத்துப் புட்டானே...

    ReplyDelete
  2. வணக்கம் பாஸ், நல்லா இருக்கீங்களா? படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  3. “கலியாண மாப்பிள்ள, அண்டைக்கு இரவு படம் பாக்க போறானே? அவன் தானே அண்டைக்கு முழுக்க படம் பார்ப்பானேடா?“//

    மிஸ்டர் ப்ளாக் ஓனர்...சின்னப் பையன் எனக்கு இந்த இடம் புரியேல்லை..வெளக்கம் ப்ளீஸ்..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. துபாய் பவுனில் செய்த கொடியின் மூன்றாவது திருகு பூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க, பின்னால் நின்ற வானதியின் தங்கை மேகலா காந்தனுக்கு உதவி செய்ததும்,//

    நானறிய, சில கலியாண வீடுகளில ஊசியால தாலியை தற்காலிகமா குத்தி விடும் சம்பவங்களும் நடந்திருக்கு! காந்தன் கொடுத்து வைச்சவன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. டவுட்டு நம்பர் ஒன்...
    இதில வாற கீர்த்த்தி நம்ம மன்மத குஞ்சு இல்லை தானே?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. //மிஸ்டர் ப்ளாக் ஓனர்...சின்னப் பையன் எனக்கு இந்த இடம் புரியேல்லை..வெளக்கம் ப்ளீஸ்..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    தம்பி நிரூபன் , உங்கட பதிவு தலைப்புகளை பார்த்தாலே சொல்லிடுவாங்க நீங்க சின்ன பையனா முத்தின பையனா எண்டு!!

    //இதில வாற கீர்த்த்தி நம்ம மன்மத குஞ்சு இல்லை தானே?//
    அது கீர்த்திட்ட தான் கேக்கோணும்!!

    ReplyDelete
  7. செம கதை...படங் காட்டும் கையோட..நாம அந்த நாளில் ஒரு படம் பார்க்கும் போது எதிர் நோக்கிய சிரமங்களையும் அழகுறச் சொல்லி நிற்கிறது கதை..
    மாப்பிளை மலையாளப் படம் பார்த்த சேதி செம காமெடி.

    ReplyDelete
  8. நன்றி நிரூபன் ... இந்த படம் பார்க்கும் விஷயத்தை விலாவாரியா எழுதோணும் எண்ட ஆசை .. அப்படி இப்படி போட்டு கீட்டு ஒரு சிறுகதை ஆக்கியாச்சு (யாருடா அவன் இத சிறுகதை எண்டது .. கொய்யால!)

    ReplyDelete
  9. பாஸ் இந்த பதிவு U சர்ட்டிபிக்கெட்டா A சர்டிபிக்கெட்டா,நல்லவேளை எல்லாச்சனமும் நித்திரை கொண்டிட்டு, யாராச்சும் முழிச்சிருந்தா புது மாப்பிள்ளை எங்கேயாச்சும் ஒரு ஏரியாவில தண்டவாளம் அறுத்துகிட்டிருந்திருப்பார்..

    நிரூ ஏன் இந்த கேள்வி ..சாத் சாத்..

    ReplyDelete
  10. கீர்த்தி .. அது U தான் ... முடிவு கொஞ்சம் "அந்த மாதிரி" இருந்தாலும் அதில யாழ்ப்பாணத்து irony கொஞ்சம் இருக்கு .. தேவையோட போட்டது தான்!!!

    ReplyDelete
  11. மாப்பிள்ளை படம் பார்த்தது, அதுவும் "முதலிரவு அறையை இறுக்கி சாத்திவிட்டு", கொஞ்சம் உதைக்குது. ஆனால் அங்கங்கே உதைப்பதுதானே வாழ்க்கை! (comment இல்) பின்நவீனத்துவமெல்லாம் இல்லைங்கோ

    ReplyDelete
  12. பழைய நினைவுகளை மீண்டும் தந்தது நான் அப்போது சின்னப் பிள்ளை என்பதால் இவ்வளவு தூரம் தெரியாது
    தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது
    http://www.facebook.com/Channel4.Fake.Video
    எவ்வளவு முடியுமோ comment பண்ணுங்கள்
    fake account விரும்பத்தக்கது

    ReplyDelete
  13. I think you will receive more comments(from boys) for this story.Good luck for your future stories.

    ReplyDelete
  14. சக்திவேல் அண்ணே .. கீதா

    நல்லா கிளப்புறீங்க பீதிய !!

    இந்த கதை நீங்க நினைக்கிற அளவுக்கு அவ்வளவு மோசமா எண்டு எனக்கு தெரிய இல்ல. கதையின் முடிவு, காந்தனின் பாத்திர படைப்பு, யாழ்பாணத்தில் ஒரு சில இளைஞர்களின் உளவியல் தான்.
    //வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்.//
    போன்ற வரிகள் கிளைமாக்ஸ் நோக்கி கதையை நகர்த்தும் வரிகள். சக்திவேல் அண்ணா வாசித்து சொல்லுவார் எண்டு எதிர்பார்த்தேன் :(

    இலேசான நகைச்சுவையுடன் இப்படியான விஷ்யனகளை தொட்டால் வாசகர்கள் நெருங்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. எது பேசா பொருள் என்பதில் ஒரு விவாதம் வேணுமோ?

    இதை கொஞ்சம் தீவிரமா இதே கதைல எழுதலாம் தான். எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவன் எழுத்தையும் இன்னமும் சேர்த்து பார்க்கும் நிலை, நல்ல எழுத்துக்கள் வர பெரிய தடையாக இருக்கும்... பார்ப்போம்

    ReplyDelete
  15. என்ன ஜேகே வேலையில் இருந்து தமிழில் எழுத நேரம் எடுக்கும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன் .அதனால் கதையை விபரிக்க முடியவில்லை கதை நல்லதாக தானே இருக்கிறது Good Luck தானே சொன்னேன் .சரி கதைக்கு வருவோம்
    " மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி"அந்த காலத்தில் அவர்கள் தானஂ ராஜாக்கள்
    "ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ?"ஊரில் கட்டாயம் நடக்கும் விடயம்
    "வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம்."எடுத்த முதலாவது படி
    "வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்."??????????
    "எதற்கும் இருக்கட்டுமே என்று “உறங்காத கண்மணிகள்” படக்கொப்பியும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. தப்பித்தவறி காவல்துறை வந்துவிட்டால், கொப்பியை மாற்றிவிடலாம். பக்கா பிளான் ரெடி."அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது
    "எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்"அட கடவுளே இப்படியும் கவனிக்கிறாங்களா ?
    "“மாப்பிள்ள வீட்ட இல்லாம என்ன மயிலிட்டியிலயே நடக்கும்?”அட ஆமா இல்ல
    “ஓடி கொலோன் இல்லை … பேபி கோலோன் தான் இருக்கு, ஓகே யா?”தேறும்
    "வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்"முன்னேறஂறம் தானஂ எப்ப பாரு குமரனுக்கு இதுவே வேலை
    "ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்."அதற்காகவே காத்திருப்போம்
    " குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது."படித்தானா முடித்தானா யார் கண்டது
    “எப்ப சொல்ல?”இப்ப மட்டும் துனிவு வந்துவிட்டதாக்கும்
    "ஒருத்தரும் இல்லடா காந்தன் .. நாங்க மட்டும் தான் .. கில்மா படமாடா மச்சி .. என்ன பெயர்?"கேட்டது குமரன் கீர்த்தி இல்லை
    "“கணவன் மனைவி!”இதுவே தானஂ கணவன் மனைவியின் அன்யோன்யம்

    நான் எனி commentsபக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் .வார இருதி நாட்களில் வருகிறேன் நன்றி யேகே .தொடர்ந்து எழுதுங்கள் ரசிக்கின்றோம்.

    ReplyDelete
  16. அடடா இவ்வளவு அலசலா .. கதை கம்மாசு போங்க .. உண்மையிலேயே நீங்கள் இவ்வளவு டீடெயிலா வாசிச்சி விமர்சனமும் போட்டது சந்தோசம் ..

    //"வெள்ளிகிழமை என்றாலும் கீர்த்தி வீட்டில் தான் இருந்தான்."//

    அது வந்து அந்த காலத்தில நிறைய இளந்தாரிகள் AL படிச்சிட்டு வெளிநாடு போறது எண்டு சொல்லிக்கொண்டு 25~30 வயசு மட்டும் சும்மா இருப்பினம் .. அதை லைட்டா சொன்னன் .. அவ்வளவு effective இல்ல!

    //"வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்"முன்னேறஂறம் தானஂ எப்ப பாரு குமரனுக்கு இதுவே வேலை //

    எனக்கென்னவோ பெண்கள் அப்போதுமே தெளிவா தான் இருந்தாங்க .. பெடியள் தான் கூட கூச்சம் .. அதுவும் யாழ்ப்பாண பெடியல்!

    ReplyDelete
  17. நன்றி இலங்கை தமிழனே .. அந்த பக்கம் முழுக்க hatred .. நாங்கள் 1+1=2 என்று சொன்னா கூட அது western imperialism என்பார்கள் .. பிரயோசனமில்லை .. அவர்கள் தூங்குவது நடிப்பவர் கூட்டம்

    ReplyDelete
  18. Interesting story, highly gripping, I finished it reading in one sitting. I did not understand the slang fully, still enjoyed it. I did not read your earlier story's original. Hopefully, during spring break, I will find time to read both the English originals.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. >இல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க, சங்கரப்பிள்ளை யோசித்தார்

    இங்கேதான் உங்களுக்குள் ஒளிந்துகொண்டுள்ள குறுப்புச் சிறுவன் வெளிக்கிடுகிறான்.

    >ஆனால் ஒருமுறை பார்த்து சிரித்தாள் என்றால் ஆயுசுக்கும் அவள் பின்னாலேயே அலையலாம். குமரன் ஆறுமாசமாக அலைந்துகொண்டு இருக்கிறான்.

    இப்பவும் அலைந்துகொண்டிருப்பதாக மெல்பனிலிருந்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (டவுட்டு: இரண்டும் ஒரே மேகலாவா?)


    >ஓகே, இப்பவே அடுப்புல கொண்டு போய் போடுறன், தாங்க ..”
    “ஐஞ்சு நிமிஷம் போதும், அப்பிடியே கொஞ்சம் ஓடிகலோன் இருந்தா கொண்டு வாங்க,

    'ங்க' கொஞ்சம் இடிக்குது


    >தலையாட்டிக்கொண்டே மேகலா செல்ல, ரெட்டை ஜடையில் கருப்பு ரிப்பன். ஜடை முடிவில் மடித்து கட்டாமல் நீண்ட முடியாக தெரிவதற்காக தொய்ய விட்டிருந்தாள்
    குமரன் ஒருகணம் எல்லாரும் தன்னைப் (தான் ஜொள்ளு விட்டதைப்) பார்த்துக் கொண்டிருந்தார்களா என்று ஒருகணம் யோசித்தான் :-)

    >“இங்க தானே இண்டைக்கு முதலிரவு மச்சான்?”
    எங்கள் காலத்தில் (நாங்கள் யாழ்ப்பாணத்தில் திரிந்த காலத்தில்), முதலிரவு என்பது பப்ளிக் ஆகக் கதைக்கப்படுவதில்லை. சாத்திரம் பார்த்து நேரம் குறிப்பதும் இல்லை.

    >“அதுவும் வேலை செய்யும், தாங்க”

    மீண்டும் 'ங்க'

    >வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் குமரன் இடையிடையே கவனித்து சிரித்தான்
    அதெல்லாம் வெளிக்கு. பிறகு காஞ்சமாடு கப்பங்கொல்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். (கதைக்கு நான் சொன்னது தேவையில்லைத்தான்; உங்கள் அவதானிப்பு நுணுக்கமானது)

    >. மத்தியானம் கல்யாண வீட்டு சோறு கறியை ஒரு பெரிய சட்டியில் போட்டு குழையல். குத்தரிசி சோறு, கத்தரிக்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு கறி, தக்காளிப்பழ குழம்பு, பீட்ரூட் துவையல், கோவா, பருப்பு, தயிர் என்று

    பசிக்குது; நல்ல வர்ணணை


    >குமரன் கேள்விக்கு மேகலா ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக்கொண்டு புறப்பட, .....
    பிறகு அந்தச் சிரிப்பு ஆயுளுக்கு மறக்காது. சே, சொந்த அனுபவம் இல்லை. இப்பிடி மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டுத்தான்....

    ------------------------------------------------
    நீல எழுத்தில் சம்பாசணை போடுவது கதையின் சீரியஸ் தன்மையைக் குறைக்கிறமாதிரி இருக்கிறது. ஆனால் அது வேறு நிறையப்பேருக்குப் பிடித்திருக்கலாம்.
    3/21/2012 6:09 PM

    ReplyDelete
  21. நல்லாயிருந்திச்சு,நல்லாயிருக்கு,நல்லாயிருக்கும்!கட்டின பொண்டாட்டி இழுத்துப் போத்துக்கொண்டு தூங்கினா கில்மா படம் தான் கைகொடுக்கும் கைபோல?ஹி!ஹி!ஹி!!!!!!!!!

    ReplyDelete
  22. >மாலை ஆறு மணி. காந்தன் வீட்டின் வரவேற்பறை ஹால் நிறைந்து வழிந்தது. மேகலா மட்டும் பளிச் என்று இருந்தாள். மற்றவர்கள் பார்க்காதபோது ஒரு சின்ன வெட்கச் சிரிப்பொன்றை இவனைப் பார்த்து நழுவவிட்டாள். வேறு பேர்வழியைப் பார்த்துத்தானோ என்று ஒருகணம் யோசிக்கக் கோபம் வந்தது. "சே, என்னைப் பார்த்துத்தான் சிரித்தாள் "என்று தன்னைச் சமாதானப் படுத்தக் குமரனுக்குக் கன்னங்கள் சூடாவதுபோல் இருந்தன.

    (இது வேறை மேகலா, வேறை குமரன்)

    ReplyDelete
  23. கதையிண்ட முடிவு சூப்பர். இது பற்றின ஒரு நீண்ட விமர்சன கலந்துரையாடலை ஒருநாள் மெல்போர்ன் மாநகரத்தின் ஒரு நெடுஞ்சாலையில், தொடர்ச்சியான வீதி திருத்த பணிகள் காரணமாக, மிக மோசமான வாகன் நெரிசல் ஏற்பட்ட ஒரு நேரத்தில் மேற்கொள்ள ஆசை!

    ReplyDelete
  24. நன்றி மோகன் ..

    வாசிச்சிட்டு சொல்லுங்க .. மூலக்கதைகள் ஒன்றே ஒழிய .. நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறேன் .. ஸ்லாங் சிக்கல் வராத அளவுக்கு இனி வரும் கதைகளில் கவனம் செலுத்துகிறேன்.

    ReplyDelete
  25. நன்றி சக்திவேல் ..

    இந்த "வாரும்" மற்றும் "வாங்க" ரெண்டையும் கலந்தது பிழை தான். பொதுவாக நான் சந்தித்த குடும்பங்களில்(திருநெல்வேலியா இல்லை தீவுப்பகுதியா என்று தெரியாது) "வாரும்" "நீர்" என்று பாவிக்க மாட்டார்கள். "நீங்க" "வாங்க" "தாங்க" தான்! ஆனாலும் பொதுவான ஸ்டைலில எழுத ட்ரை பண்ணி பிறகு மறந்து போய் "வாங்க" போட்டிட்டன்.

    //(டவுட்டு: இரண்டும் ஒரே மேகலாவா?)//
    மேகலாவை நான் விட்டாலும் நீங்க விட மாட்டீங்க போல! மேகலா ஒரு hallucination .. உங்களுக்கும் எனக்கும் .. எல்லோருக்கும் இருக்கும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருக்கும் .. ஒரே ஆளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை .. அப்பாடி!!

    //வானதி அவன் கையை பிடித்து மடியில் வைப்பதையும், அவன் சங்கடத்தில் விலக்கிக்கொள்வதையும் //
    யாழ்ப்பாணத்து பெண்கள் உண்மையிலேயே கொஞ்சம் forwardness அதிகமானவர்கள் என்பது என் அபிப்பிராயம். ஆண்களில் egotistic chauvinism தான் அவர்களை பின் தள்ளி வைத்திருக்கிறது என்பதும் கதைக்கு பெரிதாக தேவையில்லை .. சும்மா சொன்னேன்!!

    //மற்றவர்கள் பார்க்காதபோது ஒரு சின்ன வெட்கச் சிரிப்பொன்றை இவனைப் பார்த்து நழுவவிட்டாள். வேறு பேர்வழியைப் பார்த்துத்தானோ என்று ஒருகணம் யோசிக்கக் கோபம் வந்தது. "சே, என்னைப் பார்த்துத்தான் சிரித்தாள் "என்று தன்னைச் சமாதானப் படுத்தக் குமரனுக்குக் கன்னங்கள் //

    இந்த மாட்டர் இளையராஜா பதிவில எழுதீட்டன் அண்ணே!!

    நன்றி விரிவான அலசலுக்கு .. அந்த நீலக்கலர் பாவிப்பது காரணத்தால் தான். நம்ம பசங்க பதிவுக்கு வந்து ஸ்கேல் வச்சி பதிவு நீளமா இருந்தா ஸ்கிப் பண்ணிடுவாங்க! கலர் போட்டா distract ஆகி வாசிச்சாலும் வாசிப்பாங்க !!! எல்லாம் மார்க்கட்டிங் கிமிக்ஸ் .. நாமளே எழுதி இதுவும் செய்தா தான் ஒரு நாளு பேராவது வாசிக்கிறாங்க பாஸ்!!

    ReplyDelete
  26. நன்றி Yoga.S.FR வருகைக்கும் கருத்துக்கும்..

    //கட்டின பொண்டாட்டி இழுத்துப் போத்துக்கொண்டு தூங்கினா கில்மா படம் தான் கைகொடுக்கும் கைபோல?//

    இந்த கோணத்தில நான் எழுத இல்லை தலைவரே ... மாப்புள கொஞ்சம் impotent என்று சொல்லாமல் சொல்லும் இடம் அது .. படம் மட்டும் பார்ப்பாரு .. அவ்வளவு தான்!!

    ReplyDelete
  27. கேதா .. பின்னிடுவோம் .. கதையின் முடிவை இங்கேயே பிரிச்சி மெயஞ்சாச்சு!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. >இந்த "வாரும்" மற்றும் "வாங்க" ரெண்டையும் கலந்தது பிழை தான். பொதுவாக நான் சந்தித்த குடும்பங்களில்(திருநெல்வேலியா இல்லை தீவுப்பகுதியா என்று தெரியாது) "வாரும்" "நீர்" என்று பாவிக்க மாட்டார்கள். "நீங்க" "வாங்க" "தாங்க" தான்! ஆனாலும் பொதுவான ஸ்டைலில எழுத ட்ரை பண்ணி பிறகு மறந்து போய் "வாங்க" போட்டிட்டன்.

    இது எனக்குப் புதுத் தகவல். அவர்கள் அப்பிடிப் பேசினால அப்படியே பாவியுங்களேன். அது இயல்பாக இருக்கும். எங்கள் ஊர்ப்பக்கம், "வா, வாங்கோ, வாரும் .." என்பனதான். "வாங்க" அறவே இல்லை. (உண்மையில் நீங்கள் மிக்ஸ் பண்ணியதை நான் கவனிக்கவில்லை. நான் கவனித்தது 'ங்க' தான். இது யாழில் இல்லை என்றே எண்ணியிருந்தேன்).

    ReplyDelete
  30. அண்ணே ... அந்த 'ங்க' சொல்லும்போது தமிழ்நாட்டு நடையில் இருக்காது ... கொஞ்சம் 'எ" கலந்து இருக்கும் .. அதை எப்படி எழுதுவது எண்டு தெரியாது .... இது பற்றி இண்டைக்கு வியால மற்றம் கேள்வி பதில் போடுறன் !!

    ReplyDelete
  31. ஏற்கனவே சக்திவேல் நிறைய வறுத்துட்டதால் நான் மேலும் வறுத்து கருக்க விருப்பமில்லை. சக்தி சொன்னமாதிரி என் அண்டை அயலோடு கொஞ்சம் அந்நியமாகிறது இந்தக் கதை - அது ஒரு குற்றமல்ல, தனிப்பட்டளவில் நெருடல். ஆனால் வழமையான ஜேகே குறும்பும் குசும்பும், இந்தக் கதைக்கு நீல நிற உரையாடல் நல்ல பொருத்தம் ;)

    ReplyDelete
  32. என்ன கையப்புடுச்சு இழுத்தியா?

    ReplyDelete
  33. நன்றி வாலிபரே ...

    என்ன கையப்புடுச்சு இழுத்தியா??

    நன்றி பொபி

    என்ன கையப்புடுச்சு இழுத்தியா?

    ReplyDelete
  34. ஜெனரேட்டர் திருகு தாளங்கள் பற்றிய விரிவான குறிப்பு, குறிப்பா 'உறங்காத கண்மணிகள்' - அது ஒரு ஸ்டாண்டர்ட் படமென்று நினைக்கிறேன் ஏமாற்றுவதற்கு! :-)

    குடைவெட்டு பாவாடை - நீண்ட நாட்களுக்குப் பின் இந்த வார்த்தையைக் கேட்கிறேன் :-)

    //நண்பிகளை பார்த்து சிரித்துவிட்டு, எழும்பும்போது பறக்காதவாறு, குடைவெட்டு பாவாடையை ஒருக்களித்துகொண்டே வந்தாள்//
    கவனிப்பு சூப்பர் பாஸ்!

    //ஆளுக்கு ஒரு அப்பளமும் “பிடி உருண்டையும்” கொடுத்தார்கள்// ச்சே! கொன்னுட்டீங்க பாஸ்! எதற்குமே ஈடாகாது! :-)

    கதை அப்படியே தொலைந்துபோன அந்த நாட்களுக்குக் கூட்டிச் சென்றது!

    ReplyDelete
  35. //இல்லாத கொள்கை முடிவை குமரன் அறிவிக்க//
    செம்ம! இப்படியான் இடங்கள் என்னை மிக ரசிக்க வைக்கின்றன!

    //சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார்//

    கிளாஸ்!!!! :-)
    செம்ம நக்கல் பாஸ்! யதார்த்தம்!! இதைவிடத் தெளிவாக இந்த அரசியலைச் சொல்ல முடியாது! ஆனால் இந்தமாதிரியான வசனங்கள் சமயங்களில் வாசகர்களால் கவனிக்கப்படாமலே போய்விடுவது கொடுமை! எனது பதிவுலக அனுபவத்தில் பலமுறை சந்தித்ததுண்டு!

    ReplyDelete
  36. அந்த கீர்த்தி - காரெக்டரும் கதை ஸ்டைலும் நம்மாளு மாதிரியே!! தெரிஞ்சது போச்சு...அவனேதான்! :-)

    ReplyDelete
  37. வாங்க ஜீ! படலைப்பக்கம் வந்தது சந்தோஷம் தல! நன்றி!

    //ஆனால் இந்தமாதிரியான வசனங்கள் சமயங்களில் வாசகர்களால் கவனிக்கப்படாமலே போய்விடுவது கொடுமை! எனது பதிவுலக அனுபவத்தில் பலமுறை சந்தித்ததுண்டு!//
    ஆரம்பத்தில் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் இப்போது சிலவேளைகளில் வரும் கமென்ட்களை பார்த்தால் திணற வேண்டி இருக்கு! அன்றைக்கு வாசிக்கப்படாவிட்டாலும் என்றைக்காவது வாசிக்காமலா போய்விடுவார்கள். ஒரு நம்பிக்கை தான்!

    ReplyDelete
  38. கஜன்8/11/2013 10:40 pm

    //எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்//

    கேட்காத காலம் வரும். வரவைப்பதற்காக எம்மாலானதை செய்வோம்.

    வீட்டுப்பெயர் கஜன்.

    ReplyDelete
  39. Wow....I had the same experience too. Great writing....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .