“ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதிமிதாவை திறந்து முகத்தில் மதுமிதாவை இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு, மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவை திறந்து மதுமிதாவை படித்தான்”
நம்ம தலைவர் சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இதை வாசிக்காமல் சுஜாதாவை வாசித்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்திலும் தலைவரின் டச் இருக்கும். மதுமிதா மாதிரி ஒரு பெண்ணை காண மாட்டோமா என்று ஏங்க வைக்கும். வெகுளி, what is வெட்கம்? என்று கேட்கும் மது, அப்பா சொன்னார் என்பதற்காகவே ரகுவை காதலிக்கிறாள். அவனை கிஸ் பண்ண சொல்லுகிறாள். அமெரிக்கன் ரிட்டர்ன் ராதா வந்த போது ரகுவுக்கு சங்கு. ரகு தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டு அமெரிக்கா வர, அங்கே அவன் மதுவை கண்டு, மதுவோடு கண்டு! வரும் சிக்கல். அமெரிக்க இந்தியர் வாழ்க்கை தலைவர் பாணியில் … அப்போது தான் “என்னுடைய” ரத்னா அறிமுகம்!
“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பத்தி ஏதாவது புரளியா?” என்றான்.
இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யு இன் திஸ் பார்ட்டி
எதுக்கு
நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டு இருக்கு
இப்படி ஆரம்பிக்கும் ரத்னா “காய்ச்சல்” போக போக எகிறுகிறது. புத்திசாலி அமெரிக்க வாழ் இந்திய பெண். ஈகோ ஏறிய ஆண்களுக்கு எரிச்சல் வர வைக்கும் க்யூட் இண்டலக்ட். அவள் ரகுவுக்கு முகத்துக்கு நேரேயே அவன் வண்டவாளத்தை புட்டு புட்டு வைக்க நெற்றி வியர்க்கும். பிரிவோம் சந்திப்போம் வாசித்த நாள் முதல் ரத்னாவுடன் பேசி, சேர்ந்து பாடி, இளையாராஜா, ரகுமான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணி, wall street இல் இன்றைக்கு ஆப்பிள் வாலியுவேஷன் 600பில்லியனாம், ஐம்பது ஷேர் வாங்குவோமா என்று பிஸ்னெஸ் பேசி ... ரத்னா.
இந்த கதையை படமாக்குகிறார்கள். திரைக்கதை வசனமும் தலைவர் தான் என்றவுடன் ஜிவ்வென்று எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ரத்னா கரக்டருக்கு “ருக்மணி தேவி” என்றவுடன் புதுமுகம், ஹெவியான ரோல், சொதப்பபோறாங்கள் என்று நினைத்து பயந்தபோது தான் படம் வெளிவந்தது. வரும்போது சுஜாதா உயிரோடு இல்லை! படத்தை ஓரளவுக்கு நேர்மையாக எடுத்திருந்தார்கள். அதிலும் அந்த ரத்னா, what a brilliant casting! சாஸ்திரிய நடனம் பயின்ற திறமையான நடிகை. ருக்மணி தேவி.
இசை ஜி.வி.பிரகாஷ். சுஜாதா படம் என்பதால் பையன் கொஞ்சம் கவனம் எடுத்து “சுடாமல்” இசையமைத்ததில் பல வைரங்கள்! “பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே”, “கள்ளில் ஆடும் தீவே” என்று வைரமுத்து ஆனந்த தாண்டவம் ஆடிய பாடல்கள்! நானும் எந்த வகையிலும் ராஜா ரகுமானுக்கு சளைத்தவன் இல்லை என்று ஜிவி சொல்லிவைத்து போட்ட பாட்டு தான் “கனா காண்கிறேன்”. இப்படி ஒரு பாடல் எப்போதாவது ஒரு முறை தான் ராஜாவோ, ரகுமானோ அல்லது வித்தியாசாகரோ மனமுவந்து தருவார்கள். ஜி.வி நம்பிக்கை தருகிறார்.
பாடியவர்கள் நித்யஸ்ரீ, சுபா முட்கல் என்ற ஹிந்துஸ்தானி பாடகருடன் சேர்ந்து வினித்ரா என்ற புதிய பாடகி. பாடலில் உள்ள மென்மையான குரல் வினித்ராவுடையது.
மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
என்னும்போது நித்யஸ்ரீ நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு “மடியோடு” என்ற இடத்தில் அலாதியாக ஒரு ஆலாப் போட, அப்படியே நெஞ்சுக்குழி கிறுகிறுக்கும் என்று நான் சொன்னால், நான் ஏதோ கிறுக்கில் எழுதுகிறேன் என்று நினைப்பீர்கள். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. கிறக்கம் தீரும் முன்னர்!
Comments
Post a Comment