Skip to main content

வாரணம் மூன்று!

 

முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை!

எல்லோருக்கும் வணக்கம்!

தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள்.


காலை ஆறு மணி!
தலையில் துவாய்,
கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? 
யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி
302671_114101475361040_106337206137467_85002_905797100_nஊமல் கரியில் பல் துலக்கி,
கரண்டு போன மின்கம்பம்
பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி.
டயர் வாரில் தேடா வலயம்
ஆழக்கிணற்றில் வாரும்போது
அரைவாசி  தண்ணீர்
ஓட்டை வாளியால் ஓடிவிடும்.
முகம் கழுவி
சைக்கிள் எடுத்து
சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும்,
புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்!
அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று
வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்!
பாடசாலை இடை வேளை,
பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்!
அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும்
வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு.
அது முடிந்த பின்னும் நூலகம்
தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு
திருட்டுத்தனமாய் கரையெல்லாம் செண்பகப்பூ!
ப்ரியா, பாவைவிளக்கு,
அவ்வப்போது அம்புலிமாமா.
ஆடிகொருமுறை சங்கர்லால்!
பொன்னியின் செல்வன்,
கடல்புறா, கடல்கோட்டை, குவேனி.
செங்கை ஆழியானையும் சுஜாதாவையும்
காரை சுந்தரம்பிள்ளையையும்
காதலித்து வளர்ந்த ஈழத்து இளைஞன்
புலம் பெயருகிறான்.

புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் படைப்புகளும் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா? இது கருத்தரங்கு தலைப்பு. பார்த்தால் ஏதோ சந்தேகத்தில் எழுந்த கேள்வி போல படுகிறது. சந்தேகம் தேவையில்லாதது. அவர்களும் பங்களிக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லுவோம் என்று நினைக்கும்போது ….. எனக்கும் அந்த பயம் தொற்றிவிட்டது!

புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய பார்வையை, ஈழத்து புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற ஒரு வட்டத்துக்குள் சுருக்கி இந்த கட்டுரையை சமர்ப்பிப்பது சில திசைதிரும்பல்களை தவிர்க்கும் என்று நினைக்கிறேன். ஈழத்து புலம்பெயர் தமிழர்கள், வணிக, தொழின்முறை, மேற்குலக கவர்ச்சி (western imperialism) சார்ந்து புலம்பெயரவில்லை என்று நம்புவதோடு! அவர்களின் புலம்பெயர்வுக்கு மூல காரணம் ஈழத்தின் போரியல் நிலைமையும், இனங்களுக்கிடையேயான காழ்ப்புணர்வும் அடக்குமுறைகளும் என்று இந்த கட்டுரை முடிவு பூணுகிறது. அதை முன்முடிபு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? என்ற  ஆராய்ச்சிக்குள் நுழையும் போது, “ஜூதர்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்” என்று கிறிஸ்தவத்து பழைய ஏற்பாட்டின் உபாகமம் 28:25 சொல்லும் ஒரு விஷயம்.

I dispersed them among the nations, and they were scattered through the countries; I judged them according to their conduct and their actions.

இதிலே dispersed என்ற சொல் அப்புறம் diaspora வாக மருவியதை குறிப்பிடவேண்டும். அப்படியான ஒடுக்கப்பட்ட இனங்கள், புறக்கணிக்கப்பட்ட இனங்கள் தம் தாயகம் தொலைத்து புலம் பெயர்ந்து அங்கே மெதுவாக இலக்கியம் படைக்கும்போது, அவற்றுக்கே உரிய தனித்துவ கூறுகள் அந்த வகை இலக்கியங்களில் செறிந்து கிடக்கும். புலம் பெயர் இலக்கியம் பற்றி கலாநிதி ஷாலீன் சிங் என்ற ஆராய்ச்சியாளர் இந்த விஷயங்களை அலசுகிறார்(Diaspora Literature- A Testimony of Realism).

“Diasporic writing is full of feelings of alienation, loving for homeland dispersed and dejection, a double identification with original homeland and adopted country, crisis of identity, mythnic memory and the protest against discrimination”

புலம்பெயர் இலக்கியம் என்பது, உணர்வுகளையும், ஒதுக்கிவைக்கப்பட்டு இருப்பதால் வரும் ஆற்றாமையையும், தாயகம் மீதான காதலையும், அவர்கள் சிதறிக்கிடப்பதால் வரும் அயர்ச்சியையும், அடையாளங்கள் சார்ந்த குழப்பங்களையும்(identity crisis), நனைவிடை தோய்தலையும், இனவேறுபாடு, காழ்ப்புணர்ச்சக்கு எதிராக கிளர்ச்சியையுமே தன்னகப்படுத்திக்கு கொள்கிறது என்கிறார். இந்த வகை கூறுகள் ஈழத்து இலக்கியங்களில், குறிப்பாக புலம்பெயர் ஈழத்து இலக்கியங்களில், அந்த படைப்பாளிகள் கொண்டிருக்கும் அதிகப்படியான எழுத்துச்சுதந்திரத்தால் ஆளுமைப்பட்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை.

இந்த வகை அடைப்புக்குள் வரையறை செய்யப்படக்கூடிய இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கின்றனவா? எந்த இலக்கியமும், எந்த படைப்பும் அது எழுதப்பட்ட மொழிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவதில்லை. கம்பனும் புகழேந்தியும்,  பாரதியும், கல்கியும், கி.ராஜநாராயணனும், புதுமைப்பித்தனும், சுஜாதாவும், செங்கை ஆழியானும் தமிழ் வளர்க்க இலக்கியம் படைக்கவில்லை. இலக்கியம் அதற்கென்று இருக்கும் இலக்கு நோக்கி எழுதப்படுவதே.  படைப்பாளியின் திறமை, மொழி ஆற்றல், புதுமை, நோக்கு இவையெல்லாம் அபரிமிதமாகும் போது, அந்த படைப்பு சிறப்படைகிறது. அந்த சிறப்பு, அதை போன்ற சக படைப்புகளின் சிறப்பு, அதன் வாசகர் பரப்பு இவை எல்லாமே சேர்ந்து, அந்த மொழிக்கு வலிமை தானாகவே ஏற்படுத்திக்கொடுகிறது. 

தமிழ் எங்கள் மொழி. தமிழில் குறிப்பிடத்தக்க ஆளுமை இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. ஏராளமான எண்ணங்கள், அனுபவங்கள் இருக்கிறது. அதுவும் புலம்பெயர் இனமான பின்னர், சுமந்து வந்த, வரும் சிந்தனைகளும், சூழல், கலாச்சார மாற்றங்களால் காணும் அதிர்ச்சிகளும் ஏராளமானது. இவற்றுக்கு வடிவம் கொடுத்து, வாசிப்பவனுக்கு அந்த வடிவம் நோக்கத்தை கடத்திச்செல்லுமாறு எழுதும்போது அந்த படைப்பு இயல்பாகவே முழுமை அடைகிறது.  இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் படைப்புகளின் நோக்கம் தமிழ் வளர்ப்பதாக இருக்கவேண்டியதில்லை. நீலப்பிடி, நல்ல படைப்புகள் இயல்பாகவே தமிழை வளர்க்கும். தமிழ் ஒன்றும் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது. யாரும் நாம் தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியம் படைக்கவும் தேவையில்லை. நாம் நம் எண்ணங்களை, சிந்தனைகளை பகிர்வதற்கான ஒரு ஊடகம் தான் மொழி. எம் எண்ணங்களும் சிந்தனைகளும் அதை நாம் பகிரும் வண்ணங்களும் சிறப்படையும் போது தமிழுக்கு தானாகவே அந்த வளம் கிடைக்கிறது. செழிக்கிறது. ஆக எழுத்துக்குப்பைகளையும் இலக்கியத்தையும் பிரித்துணரவேண்டிய தேவை அவசியமாகிறது. அதுவும் குண்டுமணிக்குள் குப்பைகள் இருந்த காலம் போய் குப்பைகளுக்குள் குண்டுமணிகளை தேடும் நிலை. சவால் அதிகமானது.

நல்லதொரு படைப்பிலக்கியம் எழுதிவிட்டாலேயே அது தமிழுக்கு வளம் சேர்த்துவிடுமா என்றால் இல்லை. அது யார் வாசிப்பதற்காக படைக்கப்பட்டதோ அவர்களை சென்றடையவேண்டும். அங்கீகரிக்கப்படவேண்டும். கொண்டாடப்படவேண்டும். நாற்பதுகளில் உருவாகிய தமிழ் அச்சு ஊடகங்களின் மலர்ச்சி, திராவிட எழுச்சி, சிறுபத்திரிகைகள் என்பன வாசிப்பு பரம்பலை அதிகரித்தது. எழுத்தாளன் உருவாவதற்கு முதல் தகுதி அவன் வாசகனாய் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகமானார்கள். அவர்களுள் இருந்து எழுத்தாளர்கள் உருவாகினார்கள். இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின்னரான எழுத்தாளர்களுள் மகுடம் சூடியவர்கள் எல்லோருமே 60, 70களில் எழுத்துலகில் காலடி பதித்தார்கள். திராவிட இயக்க எழுச்சியை இந்த வண்ணாத்திப்பூச்சி விளைவின் முதல் படபடப்பாகவும் சொல்லலாம்.

ஈழத்து இலக்கியபரம்பலை இந்த அடிப்படையில் ஆராய்ந்தால், 1983 ம் ஆண்டை ஒரு முக்கிய திருப்புமுனையாக கொள்ளலாம். இது 1988இல் உமா வரதராஜன் எழுதிய “உள் மன யாத்திரை” என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து ஒரு பகுதி.

“ஊரடங்குச்சட்டம் பற்றி திடீர் என அறிவிப்பு வந்தது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரே மாதிரி சொன்னார்கள். தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வாசிக்கவந்தவன் வளமையான ஒரு அறிவிப்பாளனும் இல்லை. அவன் தப்புத்தப்பாக அறிவிப்பை வாசித்தான். சந்தைக்கு போயிருக்ககூடிய தன் மனைவியை. பாடசாலைக்குப்போன தன் குழந்தைகளைப் பற்றி இந்த வேளையில் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்”

இந்த வகை புதுமையான, பல தளங்களில் யோசிக்கவைக்கும் எழுத்துக்கள் 80களில் ஈழத்தில் உருவானது. அதுவே 90களில் சற்றே உணர்ச்சி மேலிட்ட, புரட்சி, போர், இன ஒடுக்கல் சார்ந்த எழுத்துக்கள் நோக்கி தீவிரப்படுத்தப்பட்டது. இதிலே மூன்று வகை இலக்கியங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தோன்றிய இலக்கியங்கள். அவை கோட்பாட்டு ரீதியான எண்ணங்கள் சார்ந்து சிறிதும் பிறழாத எழுத்துக்கள். ஈழத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து உருவாகிய படைப்புக்கள் பல மதில் மேல் பூனை ரகம். 95ம் ஆண்டுக்கு பின்னரான செங்கை ஆழியான் எழுத்துக்களில் அந்த வித தயக்கம் கலந்த நடையை காணலாம். மூன்றாவது வகையான புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் முழு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். 

jeyabalan“கருவில் இருந்தென்

காதல் மனையாளின் வயிற்றில் உதைத்த

பயல் நினைவில் இருந்தென்

நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்

நமக்கிடையே ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கின்றது

விசா என்ற பெயரில்”

என்று மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே நோர்வே சென்று, விசா சிக்கலால் பிரிந்திருக்கும் கணவன் துயர் சொல்லும் ஜெயபாலன் கவிதைகள் இலக்கியத்தரம் மிகுந்து வெளிவந்தாலும், புலம்பெயர் இலக்கியங்கள் என்பது பொதுவாக போர், புரட்சி, கோட்பாடுகள், விரிசல்கள் சார்ந்த எழுத்துக்களால்  ஆளப்பட்டு ஒருவகை வார்ப்புக்குள் சுருங்கிவிட்டது சோகமே.

2003/2004 ம் ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர் இலக்கியம் ஒரு சில எழுத்தாளர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்தந்த நாட்டில் ஒரு பத்திரிகை. சொல்லப்போனால் இரண்டு பத்திரிகைகள். ஒன்று ஆதரிக்கும். மற்றையது எதிர்க்கும்! அவ்வப்போது ஆன்மீகப்புத்தகங்கள், கவிதைத்தொகுப்பு. ஈழத்து வாழ்க்கையை நினைத்து ஏங்கும் சிறுகதைத்தொகுப்புகள் என ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் தாமே பணம் கொடுத்து பதிப்பிக்கும் சோகம். இந்த வகை புத்தகங்களை வாசகன் தேடி தேடி அலைந்து திரிந்து வாசிக்கிறானா என்று கேட்டால் அயர்ச்சி தான் எஞ்சும். இணையத்தளங்களும் பத்திரிகை, சஞ்சிகை வடிவிலேயே இருந்ததால் எழுத்து சமவுடமைப்படுத்தபடாமலேயே இருந்தது. பத்திரிகைக்கு எழுதுவதில் இருக்கும் சிக்கலே இணையத்திலும் இருந்தது. வெள்ளை யானை, பிரபலமான எழுத்தாளராய் இருத்தல் வேண்டும். அல்லது இணையத்தளத்து உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்தாவது இருக்கவேண்டும். அச்சு ஊடகத்தில் படைப்பு வந்திருக்கவேண்டும். அந்த ஊரில் இலவசமாக வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகைக்கு அதன் கோட்பாட்டை மீறாதவாறு எழுதவேண்டும். வாசகர் வட்டம் என்று ஒன்று கிடையாது. இது எல்லாவற்றையும் விட சிக்கல், படைப்பை கணணி எழுத்துருவாக்குவது. தமிழ் விசைப்பலகை தொழில்நுட்பம் கடினமாக இருந்த காலம். எழுத ஆர்வம் இருப்பவனும் இந்தவகை சிக்கல்களால் வாளாமல் இருந்த காலம். தொழில்நுட்பம் தெரிந்து இலக்கியம் புரியாத பலர் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது தான்,

“சற்றுநேரம் என்னையே பார்த்துக்கொண்டு நின்றவள், எனக்கு மிகவும் பரிச்சயமானவள் போல ரகசியக்குரலில், “இந்தபூனை குட்டியாக இருந்தபோது ஆணாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் பெண்ணாக மாறிக்குட்டி போட்டு விட்டது” என்றாள். பிறகு இன்னும் குரலை இறக்கி, “இந்தக்கறுப்பு குட்டிக்கு மாத்திரம் நான் பெயர் வைத்துவிட்டேன். அரிஸ்டோட்டல்” என்றாள்.

ஏன் அரிஸ்டோட்டல்?

பார்ப்பதற்கு அப்படியே அரிஸ்டோட்டல் போலவே இருக்கிறது இல்லையா?

muthuஎன்ற அ.முத்துலிங்கத்தின் “மகாராஜாவின் ரயில் வண்டி” போன்ற, வாசகனையும் புத்திசாலியாக்கும் சுவாரசிய எழுத்துக்கள் அவ்வப்போது வந்துபோகும். அவற்றை “நீயிருந்தால் நான் இருப்பேன்” ரக காதல் கவிதைகள், “தமிழனே புறப்படு, தரணியை வசப்படு” என்ற அர்த்தமற்ற வெறும் சந்தக்குப்பைகள், திரை விமர்சனங்கள், உணர்ச்சிவசப்பட்ட ஊர் நினைவுச் சிறுகதைகளுக்கு மத்தியில் தேடிக்கண்டுபிடித்து கொண்டாடவேண்டியது புலம்பெயர் வாசகர்கள் தமிழுக்கு செய்யவேண்டிய பங்களிப்பும் கூட.

இந்த சூழலில் தான் Unicode எழுத்துருவும் சம காலத்தில் Blogger, Bloglines, Wordpress போன்ற வலைப்பதிவு மென்பொருட்களும் தமிழுக்கு அறிமுகமாகிறது. யார் வேண்டுமானாலும் கணக்கொன்றை ஆரம்பித்து தனக்கென்று ஒரு இணைய சுட்டி, வடிவமைப்பு எல்லாமே ஏற்கனவே இருப்பதால் எழுதுவது மாத்திரமே இங்கே எழுத்தாளன் செய்யவேண்டிய ஒன்று. ஈகலப்பை, கூகிள் இண்டிக் போன்ற எழுது மென்பொருள்கள் தமிழ் தட்டச்சை இன்னமும் இலகுவாக்க இன்ஸ்டன்ட் எழுத்தாளர்கள் புற்றீசல் போல வெளிவர ஆரம்பித்தார்கள். அவற்றுள் ஆந்தைகளும் கழுகுகளும் புறாக்களும் இல்லாமலும் இல்லை.

யார் வேண்டுமானாலும் எப்போதும் எதையும் எழுதலாம் என்ற சுதந்திரம், எழுத்து சமவுடமையாவதற்கு பெரிதும் உதவியது. வாசகர்கள் எழுத்தாளர்களாய் பரிணாமம் அடைய இது ஏதுவானது. இதை திராவிட, இந்திய சுதந்திர போராட்ட சமயத்தில் இடம்பெற்ற சிறுபத்திரிகை, கையெழுத்துப்பத்திரிகை சார்ந்த எழுத்துப்புரட்சியுடன் ஒப்பிடலாம். எழுத முனைவுபவர்களுக்கு களமும் கருத்தும் கொட்டிக்கிடந்தது. இங்கே பதிப்பாளர் தேவையில்லை, இணையத்தள செலவு இல்லை. இன்னாரை திருப்திப்படுத்தவேண்டிய நிலையில்லை என்றவுடன் புதுப்புது இலக்கிய நடைகள், தேடல்கள், கறுப்பு களிறு,  என்று புலம்பெயர் எழுத்தாளர்களின் வெளி அதிகரித்தது. பதிவர்கள் என்ற தனித்துவ எழுத்தாளர் சமூகம் உருவானது. இங்கே வாசகர்களுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள இடைவெளி குறைந்தது. எழுத்தை கொண்டாடும் வாசகர் கருத்துகள், படைப்பு வெளியாகி இரண்டு நிமிடங்களில் பிரசுரமானது. விமர்சனங்களும் தான். எழுத்தாளர்களை வாசகர்களும், வாசகர்களை எழுத்தாளர்களும் இனம் காணுவதற்கு பொதுவான ஒரு சந்தை இல்லாத குறையை திரட்டிகள் தீர்த்துவைத்தன. தமிழ்10, தமிழ்மணம், தமிழ்வெளி, இன்டெலி போன்ற பொதுத்திரட்டிகளும் ஈழத்து முற்றம், ஈழவயல், தேனீ, வினவு போன்ற ஒருங்கமைப்பு தளங்களும் இந்தவகை பதிவர்களை இனம்கண்டுகொள்ள உதவ, புலம்பெயர் படைப்புகள் மெல்ல மெல்ல உச்சம் பெற தொடங்கின. அது இலக்கிய உச்சமா இல்லை வெறும் எழுத்துக்களின் குப்பையா என்பது இன்னமும் விரிவாக ஆராயப்படவேண்டியது.

பதிவுலகத்தின் இலக்கிய பங்களிப்பு பற்றிய ஒரு சின்ன உதாரணம். சயந்தன் என்று ஒரு பதிவர். எழுத்துலகில் நீண்ட காலம் இயங்கி புலம்பெயர்ந்து கோட்பாட்டு வெளிக்கு அப்பால் எழுத்தில் பரிசோதனை முயற்சி செய்யும் எழுத்தாளர். பதிவுலகம் என்ற ஒன்றில்லாவிட்டால் அவர் எழுதிய ஆறாவடு என்ற நாவல் பரந்துபட்ட வாசிப்பையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் அடைந்திருக்காமல் பெட்டிக்குள்ளேயே முடங்கியிருக்கும். ஆறாவடுவை விமர்சனம் செய்கையில், கதை முடியும் தருவாயில் புதிதாக ஒரு உறுத்தலான பாத்திரத்தை அறிமுகப்படுத்துவது நாவல் நெறி அல்ல என்று சுஜாதா சொல்லியதை எடுத்துக்காட்டி காட்டமாக என் பதிவில் விமர்சித்திருந்தேன். பதிலுக்கு ஒரே வாரத்தில் சயந்தன் சிறுகதை ஒன்றை எழுதுகிறார். “மகா பிரபுக்கள்” என்னும் ஈழத்து வீட்டில் கட்டப்படும் கக்கூஸ்கள் தொடர்பான ஒரு பின்நவீனத்துவ சிறுகதை. இடையில் விமர்சகர்களுக்கும் பதில் வருகிறது.

DSC_2561அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிறார்”

அன்னம்மா எதுவும் புரியாமல் விழித்தாள். மருமகளின் பெயர் கவிதா தானே.. இவர் எதையோ மறைக்கிறார். மகன் வரட்டும் அவனையே கேட்டு விடுகிறேன்..என்று நினைத்துக் கொண்டாள்.

வெறுமனே வாசகர்களாய் இருக்கக்கூடிய சுப்பனும் குப்பனும் இலக்கிய தளத்தில் எழுத்தாளனை விமர்சனம் செய்ய, அதற்கு எழுத்தாளன் சிறுகதையிலேயே பதில் கொடுக்கும் சூழல் பதிவுலகத்தில் இருக்கிறது. இலகுவில் பத்தோடு பதினொன்றாக சென்றுவிட்டிருக்கக்கூடிய அவலம் இன்றி, இந்த வகை இலக்கிய சர்ச்சைகளின் விளைவாக தமிழுக்கு ஆறாவடு என்ற நூல் பரந்த அளவில் அறிமுகமாகிறது. இருபது விமர்சனக்கட்டுரைகள். எழுத்தாளனின் பதில் ஒரு சிறுகதையில். இந்த பங்களிப்பு வெறுமனே மூன்று வாரங்களுக்குள் தமிழுக்கு கிடைக்கிறது. இது பதிவுலகம், சமூக ஊடகங்களான Facebook, twitter மூலம் மாத்திரமே சாத்தியப்படக்கூடிய ஒரு அம்சம்.

விசரன், சக்திவேல், வாலிபன், ஜி, கானா பிரபா, அருண்மொழிவர்மன், மணிமேகலை போன்ற அடுத்த தலைமுறை புலம்பெயர் எழுத்தாளர்கள் உடனடியாக நினைவுக்கு வரக்கூடிய இலக்கியம் படைக்கக்கூடிய பதிவர்கள். இந்தவகை பதிவர்களின் பொதுவான ஒரு கூறாக நனைவிடை தோய்தல் என்னும் தங்கள் இளமைக்கால ஈழத்து அனுபவங்களை பகிரும் முறையை காணக்கூடியதாக இருக்கிறது. ஈழத்து தளம் தாண்டிய, எங்கள் போரியல் வரலாறு தாண்டிய எழுத்து என்பதை காண்பது மிக அரிதாக இருக்கிறது. “என் இனிய இயந்திரா”, “மோகமுள்”, “பொன்னியின் செல்வன்”, “குவேனி”, சீரோடிகிரி போன்ற வேறுபட்ட தளங்களை தேடும் எழுத்தாளர்களும், அவற்றை இலக்கியம் என்று அங்கீகரிக்க்கூடிய வாசகர் சமூகமும் எங்கள் சமூகத்தில் இருந்து தொன்றவேண்டிய தேவை ஈழத்து இலக்கியம் ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் செல்லாமல் இருப்பதற்கு மிக முக்கியம்.

பதிவுலகத்தில் மிகவும் பிரபலமான, பலரால் வாசிக்கப்படுகின்ற இரண்டு வகை எழுத்துக்கள் உண்டு. ஜனரஞ்சமான சினிமா, இசை, நகைச்சுவை என்று வாசகர்களை கவரும் விதமாக எழுதப்படும் எழுத்துக்கள். இன்னுமொன்று அரசியல், போராட்டம், புரட்சி, எதிர்ப்பு அரசியல் சம்பந்தப்பட்ட பத்திகள். இந்தவகை எழுத்துக்கள் எந்த மொழிப்படைப்பிலும் இருக்கும் தான். மொழியை ஊடகமாக பயன்படுத்தி வாசகர்களை அடையும் எழுத்துவகை. இவற்றை இலக்கியம் என்ற வரையறைக்குள் அடக்குவது இலக்கியத்துக்கு நாம் செய்யும் துரோகமாக போய்விடும்.

ஏழு வருடங்கள் கடந்தபின் பதிவுலகத்தில் முதலாளித்துவ பாண்பு அதிகரித்து வாசகர்களை கவர்வதற்காக சமரசம் செய்யும் எழுத்துக்கள் அதிகரிக்கத்தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கையை எழுத்துக்கே அர்ப்பணித்திருக்கும் முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்களை விட தினம்தோறும் எழுதப்படும் சினிமா பதிவுகள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த வகையில் எழுதும் நபர்களுக்கு எழுத்து தொழின்முறை துறையும் இல்லை. வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வமும் இல்லை. இவ்வாறான படைப்புகள் காலப்போக்கில் பதிவுலகை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கு, தமிழுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய படைப்புகளை எழுதுபவர்களை இனம் கண்டு கொண்டாடவேண்டும். அதை அச்சு நூல்களில் இலக்கியம் தேடும் தேர்ந்த வாசகர்கள் தான் தங்கள் கடைக்கண்னை பதிவுலகம் பக்கமும் செலுத்தவேண்டும்.

ஈழத்து முற்றம் என்று ஓரளவுக்கு ஈழத்து நினைவுகளை சுமந்துவரும் ஒரு பதிவு தளம் இருக்கிறது. இங்கே சுமார் நாற்பது எழுத்தாளர்கள் இணைந்து அவ்வப்போது ஈழம் சார்ந்த படைப்புகளை தருகிறார்கள். ஆனால் இலக்கியம் மட்டுமே பேசும், இலக்கியம் தவிர்ந்த வேறு எந்த விஷயங்களையும் தள்ளிவைக்கும் ஒரு திரட்டி தளம் நம்மிடம் இல்லை. நம் இலக்கிய படைப்புக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பரந்துபட்ட ஒரு வாசகர் தளத்தையும் ஏன் எழுத்தாளர் தளத்தையும் கூட உருவாக்கலாம். நல்ல படைப்புகள் அச்சில் ஏறுவதை உறுதிப்படுத்தலாம். இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் பதிவுலகத்தை விட்டு ஒதுங்கியிருக்கும் மூத்த எழுத்தாளர்களையும் உள்ளகப்படுத்தும். ஒரு இலக்கிய குலாம் அமைத்து தரமற்ற பதிவுகளை மட்டுறுத்தி, ஆண்டு தோறும் சிறந்த நாவல், சிறுகதை, மரபு இலக்கியம் சார்ந்த பிரிவுகளுக்கு விருதுகள் கூட கொடுக்கலாம்.

இந்த முயற்சிக்கு ஆஸ்திரேலியா எழுத்தாளர் அமைப்பு முன்னின்று ஆதரவு வழங்கினால், நானே முதல் அடியை எடுத்துவைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.

வணக்கம்.

Comments

  1. கட்டுரை நன்றாக உள்ளது.

    உங்களுக்கொரு தனிப்பட்ட மின்னஞ்சல் கடந்தவாரம் போட்டிருந்தேன். மீண்டும் இன்று போடுகின்றேன்.தொடர்பு கொள்லவும்.

    கே.எஸ்.சுதாகர்
    kssutha@hotmail.com

    ReplyDelete
  2. "ஈழத்து புலம்பெயர் தமிழர்கள், வணிக, தொழின்முறை, மேற்குலக கவர்ச்சி (western imperialism) சார்ந்து புலம்பெயரவில்லை என்று நம்புவதோடு!"

    இந்த முன்முடிபு இல்லாமல் ஈழத்து இலக்கியத்தை வரையறுக்கலாம். தொழில் நிமித்தமும், பொருளாதார உயர்ச்சி நாடியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தத்தமது தளத்தில் நின்று செய்யும் எழுத்துக்கள் அது போர் சார்ந்ததாய், அடையாளம் சார்ந்ததாய் ஏன் இன உணர்வு சார்ந்ததாய் இருந்தாலும் கூட அவற்றை பற்றிய கண்ணோட்டத்திற்கு இந்த முன்முடிபு அவசியமற்றது. புலம்பெயர் ஈழத்து இலக்கியத்தில் தீவிர அரசியல், இன உணர்வு அம்சங்களுக்கு அப்பால் போய், சாதாரண மனிதனின் மென் உணர்வுகளை இலக்கியமாக்கும் முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்கள் ஈழத்து வாசிப்பு வட்டத்திற்கு அப்பால் தமிழ் வாசகர் வட்டத்தை கொண்டவர்கள். முத்துலிங்கத்தின் புலப்பெயர்வு இனங்களுக்கிடையிலான பிரிவை விட தொழில் நிமித்தமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. முத்துலிங்கத்தின் மென்போக்கு எழுத்தை காரணம் காட்டி அவரை ஈழத்து இலக்கிய பரப்பிலிருந்து புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூச்சல்களும் இணையவெளியில் இல்லாமலில்லை. ஆக இதுபோன்ற முன்முடிபுகள் பரந்துபட்ட தரமான இலக்கிய படைப்புகள் புலம்பெயர் தமிழர் மத்தியில் எழுவதை தடுக்கும் நிலை உள்ளது.

    கட்டுரையில் போர், இன உணர்வு, ஊர், பழங்கதை, உணர்ச்சிக்குவியல் இவற்றுக்கு அப்பால் போய் தமிழ் இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்ற அரிய கருத்தை சொல்லியிருக்கும் நீங்கள் மேற்சொன்ன முன்முடிபை எடுத்தது கட்டுரையின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை என்பது என் எண்ணம்.

    தமிழ் இலக்கியம் கம்பனையும், ஔவையாரையும், ஒட்டக்கூத்தரையும் ஒருங்கே கொண்டே வளர்ந்து வந்திருக்கிறது. ஆதலால் ஷோபா சக்தி பற்றி இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் எனும் பெரும் பரப்பை ஆய்வு செய்ய முற்பட்ட இக்கட்டுரை, பதிவுலகின் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன ஆய்வை நிறுத்திக்கொண்டதுபோல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

    ஆனால் புலம்பெயர் சமுகத்தின் எழுத்து ஒரு சிறிய வட்டத்துக்குள் ஒடுங்கிவிடக்கூடாது என்ற கருத்து ஆணித்தரமாக சொல்லப்பட்டிருப்பது காலத்தின் தேவை. அத்தோடு தமிழை வளர்க்க எந்த இலக்கியமும் எழுதப்படவில்லை, தவிர தரமான இலக்கியங்கள் படைக்கப்பட்டதால் தமிழ் செழுமை அடைந்தது என்ற யதார்த்தமும் கட்டுரையில் அழுத்தமாக சொல்லப்பட்டிருப்பது அருமை.

    ReplyDelete
  3. நன்றி சுதாகர். மெயில் அனுப்பி இருக்கிறேன் .. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. நன்றி கேதா!

    //இந்த முன்முடிபு இல்லாமல் ஈழத்து இலக்கியத்தை வரையறுக்கலாம்//

    வரையறுக்கலாம் தான் ..ஆனால் எனக்கு இந்த முன்முடிவின் தேவை இருந்தது .. போரியல் நிலைமையால் புலம்பெயர்ந்தவர்கள் என்பதாலேயே போரியல், அடக்குமுறை சார்ந்த படைப்புகளை மட்டுமே தராமல் இலக்கியத்தில் ஏனைய தடங்களிலும் கால் பதிப்பது முக்கியம் என்பதை சொல்வதற்காகவே இந்த கட்டுரையை அந்த வட்டத்துக்குள் சுருக்கிவிட்டேன் .. இலக்கியம் என்பது பரந்தது என்பதையும், அது நம் தளம் சார்ந்து படைக்கப்படவேண்டியதன் அவசியம் இல்லை என்பதும் இந்த கட்டுரையில் சாரம். அதை பொதுவாக சொல்லும்போது, அந்த வகை படைப்பாளிகள் புலம்பெயர் படைப்பாளிகளே இல்லை என்று விலக்கப்படும் அபாயம் இருப்பதும் அந்த முன் முடிவின் தேவையை அதிகப்படுத்துகிறது. முத்துலிங்கத்தை விமர்சிப்பவர்கள் வைக்கும் வாதமும் இதுதான். அதற்காகவே வட்டத்தை சுருக்கி அந்த வாதங்களை சந்தர்ப்பம் அமைக்காதவாறு எழுதினேன் ... இதில் சில குழப்பங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை!


    //நீங்கள் மேற்சொன்ன முன்முடிபை எடுத்தது கட்டுரையின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை என்பது என் எண்ணம். //
    அதை ஆணித்தரமாக சொல்ல எடுத்த முயற்சி தான் அந்த முன்முடிபு .. சரியான வகையில் கருத்து சொல்லப்படாதது கட்டுரையில் தோல்வி தான்.

    //ஆதலால் ஷோபா சக்தி பற்றி இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் எனும் பெரும் பரப்பை ஆய்வு செய்ய முற்பட்ட இக்கட்டுரை//
    ஷோபா சக்தியும் சேரனும் வேண்டுமென்றே விடுபடவில்லை. இந்த கட்டுரை வலைப்பூக்கள் சார்ந்தது .. ஈழத்து இலக்கியத்தின் சாரம், அது விரியவேண்டிய போக்கு பற்றி விளக்கவே ஜெயபாலனையும் முத்துலிங்கத்தையும் எடுத்தாண்டேன். சகல படைப்பாளிகளையும் உள்ளடக்கும் எண்ணம் இருக்கவில்லை. வலைப்பூக்கள் தான் என்னுடைய கட்டுரையில் மூல ஆய்வு என்பதை குறிப்பிட மறந்துவிட்டேன் .. திருத்திவிடுகிறேன்.

    தம்பி .. கட்டுரை என்றவுடனேயே தமிழ் .. புரியாத மொழியில் எழுத ஆரம்பித்துவிடுகிறோம் .. ஏனென்று பகிரவும்!

    ReplyDelete
  5. திருத்தங்கள் இருந்திருந்தால் குழப்பங்கள் எழுந்திராது. தெளிவு படுத்தியமைக்கு நன்றி. சனியன் இந்த மொழிநடை ஏன் இப்பிடி வருகுது?

    ரீசெர்ச் பேப்பர் எண்டா அப்பிடித்தான் இருக்கோணும். வாசிக்கிறவனுக்கு விளங்கக்கூடாது.

    ReplyDelete
  6. வாரணம் மூன்று எனக்கு விளங்கேல்லை , வேற யாருக்காவது ?

    ReplyDelete
  7. புலம் பெயர் சமூகம் தன் பண்பாடு,விழுமியங்களைக் கட்டிக்காத்து, தன் அடுத்த இலக்கியத் தேவையை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல, ஒற்றைப் பரிமாண எழுத்தை விட்டு ஒரு பன்முகத்தன்மையான.....

    சே, எனக்கு என்ன நடந்தது?

    ReplyDelete
  8. ‎"லைக்" பண்ணிட்டு விடுவமா எண்டு பார்த்தேன், ஆனால் அது ஒரு உருப்படி இல்லாத வேலையாக மாறிக்கொண்டு போகிறது. எனவே, கருத்தை பதிவோம்.
    தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் தத்துவங்கள் சார்ந்தே எழுதப்படுகின்றன. நவீன உலகில், எந்தளவுக்கு தமிழ் இலக்கியங்கள் வாசகர் வட்டத்தை தக்க வைக்க போகின்றன என்று ஒரு கேள்வி உள்ளது. சமூகத்தளங்கள் மாறுகின்றன, குரும்பையில் தேர் கட்டி இழுப்பது புத்தக இலக்கியமாக கூட மாறிப்போகலாம். ஒட்டு மொத்த எழுத்துக்களும் பொழுது போக்கு வாசிப்பாக இருப்பது வாசக வட்டத்தை தக்க வைக்குமா என்பது பதில் தேடவேண்டிய கேள்வி. Writings are supposed to bring enlightenment through thought provoking ideas to empower the social well-being and scientific advancement in the community. Which is yet to be triggered.

    ReplyDelete
  9. கோபி .. நவீன உலகு இன்று நேற்று இல்லை .. தொன்று தொட்டே இருந்து கொண்டிருக்கிறது! இலக்கிய வட்டமும் வாசகர் வட்டமும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் ... இலக்கியம் இல்லாத மொழி அதன் இருப்பை காலப்போக்கில் தொலைக்கவே செல்லும் ... தமிழ் நாட்டில் புத்தகசந்தைக்கு கிடைக்கும் வரவேற்பும், பதிவர்களில் அடுத்தடுத்த வருகைகளும் நல்ல உதாரணம். ஈழத்தை பொறுத்தவரையில் இலக்கியம் போகும் போக்கு, ஈழத்து எதிர்காலம் எங்கே போகப்போகிறது என்பதை சொல்லும் என்று நினைக்கிறேன் .. புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் வளர்ப்பார்கள் என்பதை நம்ப மறுக்கிறேன் .. எங்கள் தலைமுறையோடு புலம்பெயர் இலக்கியம் தமிழில் வெளிவருவது அரிதாகிவிடும் ... நம் பிள்ளைகள் வாசிக்கமாட்டார்கள் .. ஆயினும் எழுத்தாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து வருவர். சிலவேளைகளில் niche வட்டங்கள் உருவாகலாம். ஒரு பதிவருக்கு இருபது வாசகர் படி இருநூறு பதிவர்கள் வரக்கூடும் .. ரகுமானின் வரவிற்கு பின்னர் நூற்றுக்கணக்கில் பாடகர்கள் வந்தது போல ... இசை அப்படியே தான் இருந்தது ..இன்னும் எழுதலாம் .. ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரியும் என்று தெரியும் ..

    ReplyDelete
  10. புரிகிறது. ஆனால், எமது எழுத்துலகில் (இலங்கை உட்பட மொத்த இந்திய உபகண்டத்திலும்) எந்த விதமான ஒரு சிந்தனை புரட்சியும் வரவில்லை (we never had an age of enlightenment through literature). இது ஒரு மிகப்பெரிய குறை எமது எழுத்துலகில். நாம் கலாசாரங்களையும் பண்பாடுகளையும் தக்க வைக்க முயல்கிறோம், அதன் தாக்கமாய் எதிர்காலத்தை தொலைக்கிறோம். ஏனெனில் எமது எழுத்துக்கள் எப்பவுமே நடந்து முடிந்த விடயத்தை தான் பேசிக்கொள்கின்றன, நடக்க வேண்டியதை அல்ல. நவீன உலகு எப்பவுமே உண்டு என்பதை ஏற்க்க தயங்குகிறேன். பதினேழாம் நூற்றாண்டுக்கும் முந்திய ஐரோப்பிய (மற்றும் அமெரிக்க ) இலக்கியங்களும், அதற்க்கு பிந்திய இலக்கியங்களும் வேறு தொனியில் பேசின, இடையில் age of enlightenment விஞ்ஞான வணிக புரட்சியை கொண்டுவந்தது. இதை எழுத்தாளர்களே கொண்டுவந்தனர், விஞ்ஞானிகள் அல்ல (விஞ்ஞானிகள் உருவாகினர், சில எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள் ஆகினர், உதாரணம்: பெஞ்சமின் பிராங்க்ளின் , காரணம் சிந்தனை புரட்சி).

    ReplyDelete
  11. நீங்கள் சொல்லும் சிந்தனை புரட்சி தொழில் புரட்சியாக தான இருக்கவேண்டுமேன்பதில்லை .. அது இல்லாமல் போனது ஒரு குறை என்று ஏற்றுக்கொள்கிறேன் ... ஆனாலும் இலக்கியத்தின் பொற்காலம் என்று 1920 களை கூட பலர் குறிப்பிடுவர் .. இந்திய இலக்கியங்களில் தொழில்/விஞ்ஞான சார் இல்லாத enlightenment நடந்தே வந்திருக்கிறது .. விவேகானந்தர், காந்தி போன்றவர்களின் எழுச்சிக்கு நூல்கள் பெரிய பலமாக இருந்திருக்கிறது ... தொழில் சார் துறையில் சுஜாதாவை குறைத்து மதிப்பிட முடியாது .. But I agree we are doing catching up work than leading from the front .. .. இலக்கியம் செய்யவேண்டியது என்று நீங்கள் சொல்லும் விஷயம் ஆய்வுக்கு உரியது என்று நினைக்கிறேன் .. ஆனால் அந்த காரணத்தை வைத்தே இலக்கியத்தை எடை போட்டாலும் கூட .. இதே இலக்கியம் தானே இத்தனை ஆண்டுகளாக கோலோச்சி வந்துகொண்டிருக்கிறது .. நீங்கள் சொல்லும் புரட்சி கூட, தேவை ஏற்படும்போது .. அது நடக்கலாம் .. அந்த trigger நடக்கும் போது ... அப்புறம் epidemic தான்.

    ReplyDelete
  12. இலக்கியம் என்ற வட்டத்தை சிந்தனை புரட்சி, மற்றும் தொழில் புரட்சிக்குள் சுருக்க வேண்டும் அல்லது அதை வைத்து எடைபோடவேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அந்த அங்கம் தவறவிடப்பட்டது என்று நினைக்கிறேன். நவீன ஆங்கில இலக்கியங்களில் கூட பெரும்பகுதி கதை சொல்லும், வழக்கு சொல்லும் பகுதிகளாக தான் இருக்கின்றன என்பதையும் ஏற்றுகொள்கிறேன்.
    //நீங்கள் சொல்லும் புரட்சி கூட, தேவை ஏற்படும்போது .. அது நடக்கலாம்// எனக்கு இது இப்போது எமது சமூகத்தில் தேவை என்ற ஒரு எண்ணம் இருப்பதால் தான் இதை தெரிவிக்க நினைத்தேன். தவிர, நடைமுறை இலக்கியங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை :)

    சரியோ பிழையோ, ஒரு தத்துவ பாதையில் நமது இலக்கியங்கள் நீண்டதூரம் பயணித்து விட்டன, வெற்றிகரமாகத்தான். ஆனால் அதுவே வேடிக்கையான சில வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திவிட்டன. உங்கள் கட்டுரையில் இருந்து இது பலதூரம் பிறழ்ந்து விட்டது, ஏதோ அவசியம் என தோன்றியது. மற்றப்படி, நீங்கள் சொல்லவந்ததை நான் அந்த வட்டத்திற்குள் நின்று வரவேற்கிறேன்.

    ReplyDelete
  13. இல்லை .. ஒரு விவாதத்துக்கு தான் நானும் சொன்னேன் .. எங்கள் இலக்கியங்களில் diversity இல்லை என்பதே என்னுடைய கட்டுரையின் சாராம்சமும் கூட .. என் பிரச்சனை சிந்தனை புரட்சி இல்லை என்பது மட்டுமல்ல .. நாங்கள் முதலில் போரியல் தளம் பற்றி மட்டுமே எழுதாமல் கொஞ்சம் ஏனைய genre ஐயும் தொட்டு பார்க்க முயற்சி செய்யவேண்டும் என்பது தான் ... அந்த அடி வைத்தால் தான் enlightenment என்பது முடியும் ... டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி ப்ரச்சட் எல்லாம் இப்போதைய நிலையில் சாத்தியமே இல்லை .. அதை செய்ய செய்ய தான் ... அடுத்த நிலைக்கு போகலாம் ..

    ReplyDelete
  14. //நாங்கள் முதலில் போரியல் தளம் பற்றி மட்டுமே எழுதாமல் கொஞ்சம் ஏனைய genre ஐயும் தொட்டு பார்க்க முயற்சி செய்யவேண்டும் என்பது தான் // அவசியமான ஒரு தேவை, ஆரோக்கியமான ஒரு பாதையில் இது பயணிக்க வேண்டும். நம்புவோம்.

    ReplyDelete
  15. Jeyakumaran Chandrasegaram, நான் மேலே நெத்தியடி என்று குறிப்பிட்ட வாக்கியத்தை கவனிக்க, நிற்க என்னை Sathiyamoorthy Sakthivel அண்ணையை நினைவுக்கு வரும் இலக்கிய வாதிகள் என்பது ஈழ பதிவர்கள் பற்றிய உங்கள் தேடல் குறைவா இல்லை ஏதும் உள் நோக்கா , தொடர்ந்து வரும் நனைவிடைத் தோய்தல் பற்றிய விமர்சனம் செரியே அனால் பகுதி நேர அதிதீவிரமற்ற பதிவர்களை எழுத்தாளர்கள் என்று முடிவு கட்டுவது அவ்வளவு செரி என்று தெரியவில்லை. இது ஒரு பரந்த ஆராய்ச்சியின் வலிவைக் குறைக்கிறது.

    இந்தக் கட்டுரைக்கான கட்டுரையாளர்கள் அல்லது கட்டுரையின் தேர்வு எந்த அடிப்படையிலானது ? திரட்டிகளில் இருந்து பெற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையிலா ? அல்லது உங்கள் ரசனை அடிப்படையிலா ? ஆராச்சியில் தனி ரசனை செரியா ? பிறகு கனிமொழி செம்மொழியில் ஆராயப்பட்டது போலகிவிடாதா ?

    ReplyDelete
  16. ‎//திரை இசை விமர்சனங்கள்// வாசகனை அறிவூட்டும் -> புத்திசாலி யாக்கதோ ?

    ReplyDelete
  17. கோபியும் நானும் அடிக்கடி கூறிவரும் விடயம் இதுதான். அதாவது இன்றைய ஈழத்து இலக்கியப் படைப்புகளும் அதன் போக்கும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தங்களை தயார்படுத்தாமல் கூறப்பட்ட பழங்கதைகளையே வேறு வேறு சாயங்கள் பூசி மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. இவற்றை இன்றைய வலைப்பூக்களில் நாம் தெளிவாகக் காணலாம். போபி கூறியது போன்று ஒரு புதிய சிந்தனை புரட்சிகளை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் எதுவும் இதுவரை உண்மையில் உருவாகவில்லை. இந்நிலைமை தொடர்ந்திருக்கும் வரை, எத்தகைய தரமான ஆக்கங்கள் வெளிவந்தாலும் அது அதற்குரிய வாசகர்களை சென்றடைந்தாலும் அதன் கருத்தியல் தளம் மாறாத வரை அதனால் மொழியில் வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தமுடியாது என்பதே உண்மை.

    ReplyDelete
  18. தேடலா? நான் ஈழத்து முற்றம், மற்றும் மூத்த பதிவர் oru sriram திரட்டிய தகவல் தான் அது.. புலம்பெயர் பதிவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விடுபட்டதாக நினைக்கவில்லை!! ஈழப்பதிவர்கள் இந்த கட்டுரைக்குள் அடங்க மாட்டார்கள். இது புலம்பெயர் பதிவர் பற்றியது. அருண்மொழி வர்மன், விசரன், கானா பிரபா போன்றவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. தவிர உங்களையும் இலக்கியம் படைக்க கூடியவர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். இலக்கியவாதிகள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது புது தகவல் ;) ... ஒபாமாவுக்கு நோபல் போலவும் எடுத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  19. மனோகரன்.. உங்கள் கருத்தோடு பொதுவாக உடன்படுகிறேன்.. ஆனால் எந்த பதிவுமே அப்படி வெளிவரவில்லை என்பதை விட நீங்கள் வாசித்ததில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லலாம். எழுதுபவர்கள் இருக்கிறார்கள். நாண்கள் இனம்கண்டு கொண்டாடவேண்டும். முத்துலிங்கத்தை தெரியாத வாசகர்கள் இல்லாத தேசம் இது. நம் இலக்கியம் போகும் திசைக்கு வாசகர்களும் முக்கிய காரணம். டக்லஸ் Adams பற்றி எழுதினாலேயே அரைவாசி பேர் அண்டமாட்டாத நிலைமை.. Enlightenment literature .. That will happen slowly.. It took seventeen centuries for Europe as Gopi said.. Will happen in Tamil too.. Or may be we will make it happen.

    ReplyDelete
  20. இலக்கியவாதிகள் என்பதால் நீங்கள் கருதுவது யாது ?

    ReplyDelete
  21. இலக்கியவாதி என்று நீங்கள் தான் உங்களை காப்பில சொன்னீங்க! எனக்கு அந்த பதமே கொஞ்சம் allergic .. ஒரு விளக்கம் கொடுங்க தல !

    ReplyDelete
  22. இலக்கியவாதிகள் இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள் என்பது என் கருத்து... என் அபிப்பிராயத்தில் பதிவர்களை சுலபமாக எழுத்தாளர் என்பது - எழுதுவதெல்லாம் எழுத்து என்று கட்டம் கட்டுவது போலாகிவிடும். இலக்கியம் என்பது நனி சிறந்த எழுத்து என்று கொள்ளின் நான் சொன்ன பதிவர்களை இலக்கியம் பதிக்க வல்லவர்கள் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் என்பது இந்த கட்டுரையை வலுவிழக்க வைக்கிறது.
    நான் வைக்கும் குற்றச்சாட்டு இந்தக்கட்டுரை புலம்பெயர் பதிவர்களை ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் தெரிவு செய்து ஆராயாமல் உங்கள் பரிச்சியத்தின் (அது வாசிப்பின் வழியாக்கவுமிருக்கலாம்) அடிப்படையில் தெரிந்திருக்குரீர்கள் என்பதே.

    ReplyDelete
  23. குறிப்பிட்ட எழு பேரில் மூவர் மட்டுமே எனக்கு பரிச்சயமானவர்கள். அதிலும் சக்திவேல் பதிவுலகம் மூலமே நண்பரானார். மேலும் படைக்க கூடிய திறமை , potential இருப்பதை வாசித்தே அறிந்து கொள்ளலாம். தவிர அவர்கள் எதிர்காலத்தில் இலக்கியம் படைப்பார்களா என்று சொல்லமுடியாது. படித்தால் நல்லம். சுஜாதா விஞ்ஞானியாக இருந்தே எழுதியவர். நான் யாரையாவது தவறவிட்டு இருந்தால் நீங்கள் சொல்வது சரியாகலாம். Facts வேண்டும் தல

    ReplyDelete
  24. இந்த ஏழு பெரும் எந்த அடிப்படையில் தெரிவு செய்தீர்கள் என்பதே என் கேள்வி ? உங்கள் உள்ளுணர்வு அபிப்பிராயம் என்பவை ஆராய்ச்சிக்கு பொருந்தாது,

    ReplyDelete
  25. உங்கள் கருத்து படி இலக்கியவாதிகள் கொஞ்சம் ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள். படைப்பதற்கு அது தேவையில்லை. கோபல்லகிராமம் எழுதும்போது கீரா இலக்கியவாதி இல்லை என்றாகிறது. நான் இதில் உடன்படவோ, மறுக்கவோ இல்லை

    உள்ளுணர்வு ? அப்படிஎன்றால் எல்லோரையும் விட கேதா முதலில் வந்திருப்பான். கவிதைக்கு நீங்கள். நனைவிடை தோயதளுக்கு சக்திவேல். தமிழ் ஆராய்ச்சிகளுக்கு மணிமேகலை. விமர்சன பார்வைக்கு அருண்மொழிவர்மன். ஜனரஞ்சக ஆனால் தரமான எழுத்துக்கு ஜி. வானொலி கானா பிரபா. சிறுகதை விசரன். உள்ளுணர்வு என்னையும் எழுத்தாளர் என்கிறது!!! சொல்லவில்லை!!!

    ReplyDelete
  26. இல்லை ஜேகே, ஒரு அளவுகோல் வேண்டாமா , உதாரணத்திற்க்கு: பதிவுகளின் எண்ணிக்கை, பின்னூட்டங்களின் எண்ணிக்கை, வருகை வாசிப்பு புள்ளிவிவரங்கள், பதிவுகளின் பல்வகைத்தன்மை, பதிவுகளின் பகிர்வு அளவு இப்படி பல பரிமாண அளவுகோலோ எது ஒரு அடிப்படி வேண்டுமில்லையா ? இல்லை அவர்களின் விருது கெளரவங்கள் அங்கீகாரங்கள் பிரசுரங்கள் எதோ ஒரு உருப்படியான அளவுகோல் ?

    ReplyDelete
  27. >புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் வளர்ப்பார்கள் என்பதை நம்ப மறுக்கிறேன் .. எங்கள் தலைமுறையோடு புலம்பெயர் இலக்கியம் தமிழில் வெளிவருவது அரிதாகிவிடும் ... நம் பிள்ளைகள் வாசிக்கமாட்டார்கள்

    அதுதான் நான் போட்ட தேநீரை என் பிள்ளைகள் குடிக்கமாட்டார்கள் என்று என்னாலான பின்நவீனத்துவத்தில் (!!??) எழுதினேன்.

    ReplyDelete
  28. வாலிபன்.. நீங்கள் சொல்லும் அளவுகோல்களில் அங்கீகாரங்கள் கொடுத்ததால் தான் நம் இலக்கியம் இந்த நிலையில் இருக்கிறது... அந்த தவறை நான் செய்யப்போவதில்லை.. நான் வாசித்து .. நான் வாசித்து மதிக்கும் சிலர் வாசித்து அங்கீகாரம் கொடுத்த பதிவர்கள். நடுவர் குழு என்று எடுத்துகொள்ளுங்கள். காவல்கொட்டம் சாகித்திய விருதுக்கு என்ன அளவுகோல்? குழு தானே?

    ReplyDelete
  29. நான் ஏனைய அளவுகோல்களை நீங்கள் மறுத்தது பற்றி இங்கே இப்போ முரண்பட விரும்பவில்லை. குழு அமைத்து தெரிதல் கூட ஒரு நல்ல முறைமை, அனால் குழு எந்தெந்த பதிவர்களை கருத்தில் கொண்டீர்கள் அதில் தேர்வு எப்படி என்பதும் உங்கள் குழு அங்கத்துவர்களும் அவர்கள் தெரிவு போன்ற சிக்கலான கேள்விகளை தொடர்ந்து எழுப்ப முடியும்.

    நான் இதை தேர்ந்த ஆராய்சிக் கட்டுரைக்கான தளத்தில் வைத்தது விமர்சிப்பதால் காட்டமாக இருக்கலாம், இதில் நான் இன்னமும் முழுமையாக முரன்படவே இல்லை. :)

    ReplyDelete
  30. நான் இலக்கியம் படைப்பதாக நானே நினக்கவில்லை. (என்றாலும் கேட்கக் குளுகுளு என்றுதான் இருக்கிறது)

    என்றாலும் இலக்கியம் படைக்க இலக்கிய அறிவு வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வைக்கம் முகம்மது பஷீர் 5ம் வகுப்பு வரைதான் படித்ததாகக் கேள்விப்பட்டேன். அவரின் "பூவன் பழம்"கதை வாசித்தீர்களா?அந்த இருட்டான பொழுதில் மனைவிக்குப் பூவன் பழம் வாங்க ஆற்றில் நீந்திச்சென்ற முரட்டுக் கணவன்.ஆறு, மாலை இருட்டு, பகலில் விளக்குஏற்றிய கடை என்று ஒன்றை என் முகத்தின் முன் நிறுத்துகிறார்.

    பஷீரின் சகோதரன் உண்மையில் பண்டிதர். பஷீரின் கதைகளில் நிறை இலக்கணைப் பிழைகள் இருப்பதாகப் பிகு பண்ணுவார். அவரையும் "பாத்துமாவின் ஆடு"கதையில் ஒரு வாங்கு வாங்குவார் பஷீர்.

    ReplyDelete
  31. இலக்கியவாதி என்பவர் இலக்கிய அறிவு கொண்டவர் என்பது என் சொல்பயன்பாடு, நிற்க இலக்கியம் படைக்க திறன் அவசியம். இலக்கியம் எது என்று கோடு கிழிப்பது கடினம் - எழுதுவதெல்லாம் எழுத்தல்லவே.

    ஜேகே அடிப்படை விடயங்களில் தெளியலாம்:

    இந்தக் கட்டுரை: "புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் படைப்புகளும் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா? " (இதில் வலைப்பூக்கள் உங்கள் தரப்பு குறுந்தலைப்பு, கட்டுரையில் முகப்பில் இது தெளியப்படுத்தல் வாசிப்பவனுக்கு இலகுபடுத்தும்) தமிழ் படைப்புகள் எனும் சுருக்கம் கட்டாயம் அல்ல ஆனால் ஏற்புடையது.

    படைப்பால் தமிழுக்கு வளம் என்பதை நீங்கள் இப்படி வரையறுக்குறீர்கள்: நல்ல படிப்பிலக்கியமும் அதன் அங்கீகாரமும்: வாசிப்பு மற்றும் வரவுகள்.

    நல்ல இலக்கியம் கெட்ட இலக்கியம்: கோடு எப்படி எங்கே கிளிக்குறீர்கள்.

    ReplyDelete
  32. நான் அளவுகோல்கள் எதனையும் வைத்திருப்பதில்லை. பிடித்திருந்தால் நல்ல கதை , இல்லாவிட்டால் ..' பொல்லாத கதை" . எனக்கு நல்ல கதை இன்னொரு ஆளுக்குப் பொல்லாத கதையை இருக்கலாம்.

    சொல்லப் போனால், கதையின் கடைசியில் புதுப் பாத்திரம் வரக் கூடாது என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் அதற்காக விதியை உடைகிறேன் பேர்வழி என்று எழுதினாலும் 'விதியை உடைத்தது' என்பதை மட்டும் வைத்துக் கொண்டு கதை நல்லது என்று கூறமாட்டேன்.

    தேநீர்க்கடை பாகம் 2 ரெடி. எங்கேயையா ஓடுகிறீர்கள்? :-)

    ReplyDelete
  33. ஐயா சாமிகளா நான் ஆட்டத்துக்கே வரவில்லை .. வழமை போல

    என்ன கைய பிடிச்சி இழுத்தியா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...