அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!
கணவனா மகனா என்று குழப்பத்தில் வாழும் ஜானகி. கணவன் இறந்த பின்னர் தனக்கு துணை மகன் தானே என்று மகனை கொண்டாட, மகன் அவளை மதித்தானில்லை. ஒரு கட்டத்தில் மகன் சங்காத்தமே வேண்டாம் என்று கணவனில் நண்பனை காணும் பெண்ணின் கதை.
மார்கரெட், புத்திசாலி, கெமிஸ்ட்ரியில் தங்கப்பதக்கம் பெற்றவள். காதலித்து திருமணம் செய்யும் கணவன் ப்ரின்சிபலாக இருக்கும் அதே பாடசாலையில் இவள் ஆசிரியை. கணவன் ஒரு ஷாவனிஸ்ட். மனைவியை மதிக்கத்தெரியாதவன். ஒரு வித நாசிஸ்ட் என்றும் சொல்லலாம். மார்கரெட் எப்படி அந்த கணவனை வழிக்கு கொண்டு வருகிறாள் என்பது இன்னொரு கதை.
பிரபாதேவி, பணக்காரி. கணவன் தங்க வியாபாரம். இவளுக்கு தனக்கென்று ஒரு ஆளுமை வேண்டுமென விருப்பம். ஆனால் எப்படி என்று தெரியாமல் இறுதியில் தானே சுயமாக நீச்சல் பழகுகிறாள். ஒருநாள், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரையை எட்டும்போது அந்த ecstasyயை எட்டுகிறாள்.
ஷீலா, பதினாலு வயது பெண்ணுக்கும் ராங்கிக்காரி பாட்டிக்கும் இடையில் உள்ள க்யூட் உறவு.
மரிக்கொழுந்து ஒரு ஏழைப்பெண். செட்டியார் வீட்டில் வேலைக்கு போய், அங்கே ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, பிறந்த குழந்தையை சீண்டாமல், ஒரு கட்டத்தில் லெஸ்பியனாகி, அதுவே பை செக்ஸுவலுக்கும் மாறி ... ஒரு இருண்ட கதை இது. தன் செயல்களுக்கு அவளே சுயபச்சாதாபம் அது இது என்று காரணங்களை தேடிக்கொள்ளுகிறாள்.
நாவலில் எனக்கு பிடித்த பாத்திரங்கள் அகிலாவும் மார்கரேட்டும் தான். கணவன் சுகதேகியாய், கட்டுடலுடன் இருப்பது தான் அவனின் சுபீரியாரிட்டி கொம்பிளக்ஸுக்கு காரணம் என்பதை அறிந்து, எண்ணெய், நெய், இறைச்சி என்று சுவையான சாப்பாட்டை மூன்று நேரமும் கொடுத்து, ஒரு கட்டத்தில் மூன்றடி நடந்தாலே அவனை மூச்சிரைக்க வைக்கிறாள். வாய் ருசியை தேட, உடல் தளர அவனுக்கு மனைவியின் தேவை அதிகரிக்க, அவள் காலடியே தஞ்சம் என்று கிடக்கிறான்.. scary!
அகிலாவோ, பஸ்சில் நெரிசலில், முகம் தெரியாதவன் இடுப்பை பிடிக்க, அதில் திரில் ஆகி, தினமும் அதே பஸ்சில் வேண்டுமென்றே கூட்ட நெரிசலில் சென்று அந்த முகம் தெரியாதவனின் கைகள் இடுப்பை சுற்ற அனுமதிக்கிறாள். இத்தனைக்கும் அவள் தப்பான பெண் என்றால், நோ வே… சின்ன சின்ன விஷயங்கள் .. அனிதா நாயர் வியக்க வைக்கும் இடங்கள் இவை.
பெண் எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோஹும்பா லாகிரி தான். ஆனால் அவர் பொதுவாக ஆண்களின் பார்வையில் தான் கதையை கொண்டுபோவார். தமிழில் சிவசங்கரி. அவர் எழுத்தில் ஒரு சோகம் இருக்கும். வீணான சுய பச்சாதாபங்கள், பெண் எப்போதுமே தோற்கும் விஷயங்கள் என சிவசங்கரி எழுத்துக்கள் சிலசமயம் சீரியல் ரேஞ்சில் இருக்கும். Except நூலேணி.
அனிதா நாயர் ஒருவித லாகிரி டைப் எழுத்தாளர். நிறைய உருவகங்கள் கதையில் இருக்கும். திருக்குறல் கூட ஒருமுறை சாடப்படும். பெண்களின் சில பெர்சனாலான பார்வைகள், ஆண்களை அவர்கள் அணுகும் விதம் …எனக்கு புதுசு. I am sure, எங்கள் சமூகத்தில் எண்பது வயது தாத்தாவுக்கும் புதுசு. ஏனென்றால் அதை அறியும் ஆர்வம் எங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. Why should we care? என்ற எண்ணம் தான். “லேடிஸ் கூ” வாசிப்பது முக்கியம். வெறுமனே பெண்களை அறிந்துகொள்ள மட்டுமில்லாமல், ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க இந்த நாவல் ஒரு பால பாடம்! திருமணம் முடித்தவர்கள், பெண் மனது புரியும் என்று நினைக்கும் ஐன்ஸ்டீன்கள் .. போய் இதை ஒருமுறை வாசியுங்கள்! அட்லீஸ்ட் இன்னமும் புரிவதற்கு நிறைய இருக்கென்றாவது புரியும்!
Comments
Post a Comment