“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார். “ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்” சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். “உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..” “சேர்…” இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் இருந