“விளக்கு வச்சாபிறகு தான் அந்த ஈர்வலிய எடுத்தோண்டு போய் நல்லா இழு, உள்ள தரித்திரம் எல்லாம் வந்து சேரட்டும்”
இரண்டு ஈர் அடிப்பதற்குள் அம்மா குசினிக்குள் இருந்தவாறே திட்ட ஆரம்பிக்க கரண்டும் கட்டாக சரியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை என்றால் கம்பஸ் பகுதிக்கு மின்வெட்டு என்பதை ஏதோ ஒரு ஞாபகத்தில் மேகலா மறந்துபோயிருந்தாள். சிமினி எதையுமே துடைத்துவைத்திருக்கவில்லை. உடனேயே தட்டுத்தடுமாறி எழுந்துபோய் மெழுகுதிரி ஒன்றை கண்டுபிடித்து ஏற்றிக்கொண்டு, பழைய உதயன் பேப்பரை கிழித்து அரிக்கன் லாம்பையும், மேசை லாம்பையும் கவனமாக துடைத்தாள். கத்திரிக்கோலால் முனை கருகியிருந்த திரிகள் இரண்டையும் நேர்கோட்டில் வெட்டிவிட்டு, நெருப்புக்குச்சியை தட்டும்போது, தம்பி அறைக்குள் இருந்துகொண்டு “விளக்கை எடுத்தண்டு வர இவ்வளவு நேரமா?” என்று நாட்டாமை செய்தான். அவனுக்கு இன்னமும் இரண்டு மாதத்தில் ஒஎல் பரீட்சை. சலலகினி சந்தேஷயவையும் குசுமாசனதேவியையும் மனப்பாடம் செய்வதற்கு அவன் செய்யும் அலப்பறைக்கு பதிலாக தான் பேசாமல் டொக்டருக்கே படித்திருக்கலாம் என்று மேகலா சமயத்தில் நினைப்பதுண்டு. முதல் ஆளாய் அவனுக்கு தான் விளக்கு கொடுக்கவேண்டும். அவன் அறைக்குள் சென்று மேசை லாம்பை வைத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டே குசினிப்பக்கம் போனாள். அங்கே அம்மா ஏற்கனவே கைலாம்பை ஏற்றிவிட்டு புட்டு கொத்திக்கொண்டிருந்தாள். இந்தநேரம் பார்த்து உள்ளே நுழைந்தால் “புட்டுக்கு எப்பன் தேங்காய் துருவித்தா” என்று ஆரம்பித்து கோரிக்கை “சம்பல் கொஞ்சம் இடிச்சு தா” வரைக்கும் நீளும் என்று மேகலாவுக்கு நன்றாகவே தெரியும். அம்மாவுக்கு தெரியாமல் பூனை போல ஹாலுக்குள் போய், மெழுகு திரியை அப்பாவின் அலுவலக மேசையில் வைத்துவிட்டு, ஒரு ஸ்டூலையும் கதிரையையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு முற்றத்துக்கு போய் ஆசுவாசமாக அமர்ந்தாள். அப்பாடி!
மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. வெளிச்சம் இல்லாத யாழ்ப்பாணம், இடம்பெயர்வுக்கு முன்னிருந்த நாட்களை நினைவுபடுத்தியது. அவ்வப்போது ஒழுங்கையால் போய்வரும் சைக்கிள் சத்தங்களும் கொஞ்சமே அடங்கியிருந்தது. விளக்கை நன்றாக குறைத்துவிட்டு அப்படியே சாய்ந்து மேலே பார்த்தால் அருந்ததி தெரியுமாப்போல, அது ஓரியனா என்ற குழப்பமும் கூடவே சேர்ந்தது. புரட்டாசியில் ஓரியன் தெரியுமா? அருந்ததி தான். இப்போதே பார்த்து வைக்கலாம் என்று நினைக்க, மேகலாவுக்கு உள்ளூர அந்த குறுகுறுப்பு மீண்டும். முன் வளவு வாழைகளும், பங்குக்கிணற்றடி தென்னை பாலைகளும் சேர்ந்து ரம்மியமான ஓசையோடு இரவு நேரத்து வெக்கையை விரட்டிக்கொண்டிருந்தன. பனசொனிக் ரேடியோவை எடுத்து திருகினால் ஜெகத்கஸ்பார் வெரித்தாஸில் ஈழத்தவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்க, நிறுத்திவிட்டு உள்ளே போய் லாச்சிக்குள் இருந்த பிரிவோம் சந்திப்போமை எடுத்துகொண்டு வந்து, லாம்பை மறுபடியும் தூண்டிவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்.
அந்த பெண்ணை சற்று நிமிர்ந்து பார்த்து மீண்டும் தன் கையை பார்த்துக்கொண்டான். அவள் கூந்தலைப்பின்னாமல் அலைய விட்டிருந்தாள் என்பதை மட்டும்தான் கவனித்தான்.
“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பற்றி ஏதாவது புரளியா?” என்றான்.
“இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யூ இன் திஸ் பார்ட்டி”
“எதுக்கு?”
“நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டிருக்கு”
மேகலா தன்னையறியாமலேயே “களுக்” என்று சிரித்தாள். பக்கத்தில் இருந்த அரிக்கன் லாம்பும் தன் பங்குக்கு சேர்ந்து சிரித்தது. பின் பத்தியில் கட்டியிருந்த வில்சன், இவள் முற்றத்தில் தான் இருக்கிறாள் என்று அறிந்தவுடன் கள்ள ஊளை இட ஆரம்பிக்க, இவள் புத்தகத்தின் பக்கம் மடித்து வைத்துவிட்டு பத்திக்கு சென்று வில்சனை அவிழுத்துவிட்டாள். அந்த சந்தோசத்தில் அவள் மீண்டும் முற்றத்துக்கு வருவதற்கு முன்னரேயே, வில்சன் பதினெட்டு முறை மேகலாவை சுற்றி சுற்றி வந்து எம்பி எம்பி விளையாட ஆரம்பித்திருந்தது.
குமரன்! வில்சனை பார்க்கும்போதெல்லாம் அந்த செல்ல எருமையின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வருவது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. கள்ளன், இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? போய்ச்சேர்ந்திருப்பானா? இல்லை யாராவது கறுப்பியை பார்த்து வழிந்து விழுந்துகொண்டிருப்பான், பச்சைக்கள்ளன் ப்ச் .. என்ன மாதிரி அண்டைக்கு வந்தானப்பா“, மேகலா முகம் முழுக்க புன்னகை பார்த்து, எண்ணெய் தீர்ந்த அரிக்கன் லாம்பு பக் பக் என்று கண்ணடிக்க, உள்ளே போய் மண்ணெண்ணெய் எடுத்துவந்து கொஞ்சம் விட்டுவிட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தாள் மேகலா.
“என்ன சாப்பிடுறீங்க? விஸ்கியா? ஆரம்பமே நல்லா இல்லையே?”
“நான் அதிகம் குடிக்கிறதில்ல .. பார்ட்டிக்கு வந்துதான் ..”
“எனக்கு கொடுக்காம தனியா குடிக்கிறீங்களேன்னு கேட்டேன்”
மேகலாவுக்கு “பிரிவோம் சந்திப்போம்” ரத்னாவை உடனடியாக பிடித்துக்கொண்டது. லொஸ் ஏஞ்சலஸ், குமரன் அவன் வாழும் வீடு என எல்லாமே கண் முன்னால், மேகலா புத்தகத்தை மூடிவிட்டு கற்பனையில் ஆழ்ந்தாள். அவன் இப்போது எங்கிருப்பான். ச்சே … ஒரு மாதம் இருக்குமா? முதல் நாள் நேரே விரிவுரை மண்டபத்துக்கே வந்துவிடுவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. மதியம் தான் பலாலிக்கு லயன் எயர் விமானம் வந்திறங்கும். எப்படியும் அவன் உரும்பிராய் போய் வீட்டுக்காரரை சந்தித்து, ஆற அமர பின்னேரம் தான் தன் வீட்டுக்கு வருவான் என்று நினைத்திருந்தாள். அந்த மஞ்சள் நிறத்தில் பச்சை கலர் போர்டர் போட்ட சாரி, அதற்கு தாமரைப்பூ டிசைன் போர்ச் குத்தி, சின்னதாய் கனகாம்பர பூ மாலை முடிந்து, சிம்பிளாக ஆளை அடித்துப்போடலாம் என்றால், அவன் பார்த்து இப்படி திடுப்பென்று பல்கலைக்கழகத்துக்கே வந்துவிட்டிருந்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ “
வகுப்பறை வாசலில் கேட்ட சத்தத்தை சட்டை செய்யாமல் மேகலா தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.
“I had rather hear my dog bark at a crow than a man..”
“… மிஸ் மேகலா?” இம்முறை சற்று அழுத்தமாகவே கேட்க மேகலா வாசல் பக்கம் திரும்பினாள். கடவுளே. அவனே ..ப்ச் … அவரே ப்ச்.... அவனே தான். குமரன். கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மாமா கொடுத்த படத்தில் மீசை இருக்கவில்லை. இப்போது மீசையோடு ரிக்கி பாண்டிங் தாடி. ஆனாலும் கண்டுபிடித்துவிட்டாள். எழுதிக்கொண்டிருந்த சோக்கட்டி நடுக்கத்தில் உடைந்து விழுந்தது. கால்களின் உதறலில் நைலக்ஸ் சாரி படபடத்து, ஐந்தும் கேட்டு அறிவும் கெட்டு அனிச்சையாய் சாரியின் பிளீட்ஸை சரிசெய்தாள்.
“சொறி டு டிஸ்டேர்ப் .. யு பெட்டர் பினிஷ் த லைன்”
“… வாட்? .. என்ன?”
“யூ பினிஷ் தட் ஷேக்ஸ்பியர் லைன் .. ஐ வில் வெயிட் அவுட்சைட்”
அன்றைக்கு அறிமுகமானது தான் அவனின் அந்த டிப்பிகல் நரிச்சிரிப்பு. மேகலாவுக்கு நடப்பது ஒன்றுமே தலைகால் புரியவில்லை. எல்லாமே கண் மூடி திறப்பதற்குள், என்ன சொல்லுவதே என்று தெரியாமல் வெறும் ஒகே என்பதற்குள் அவன் போய்விட்டிருந்தான். திரும்பி வகுப்பை பார்த்தால், முழு வகுப்புமே நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது. கூச்சமும் சங்கோஜமும் ஒன்று சேர மீண்டும் கரும்பலகை திரும்பி வசனத்தை தொடர்ந்தாள்.
“I had rather hear my dog bark at a crow than a man swear he loves me..”
எழுதி முடிக்கும்போது தான் உறைத்தது. படுபாவி. இவனுக்கு ஷேக்ஸ்பியர் தெரிந்திருக்கிறது. இந்த வரியும் .. ச்சே முதல் சந்திப்பிலேயே இப்படியா? வாழ்க்கை முழுக்க இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வதைக்கபோகிறானோ? தன் பின்னால் முழு வகுப்பும் பார்த்துக்கொண்டிருக்க ஆசையாய் ஒரு வெட்கம் கூட படமுடியாமல் மேகலாவுக்கு வெட்கம் பிடுங்கித்தள்ளியது.
“Why would Benedick and Beatrice have fought each other all the time? critically analyse.” என்று மனதில் தோன்றியதை கேட்டுவிட்டு மேகலா மேசையில் வந்து அமர்ந்து கொண்டு கடிகாரம் பார்த்தாள். ஐந்து நிமிடம், மூன்று நிமிடம் .. ஒரு நிமிடம், தட்ஸ் இட். பாடம் முடிய, வகுப்புக்கு வெளியே வந்தால், விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு, இரண்டு பெரிய சூட்கேஸுகள் அருகருகே இருக்க, குமரன் அங்கேயே அப்படியே. ஸ்டாப் ரூம் போய் முகத்தை சரிசெய்ய கூட சந்தர்ப்பம் இல்லாமல் .. முகத்தில் மாறாத அதே நரிச்சிரிப்பு! இவனோடு எப்படி காலம் தள்ளபோகிறோம்?
வில்சன் கால் பாதங்களை செல்லமாய் விறாண்ட விறாண்ட கூச்சத்தில் உதறிவிட்டாள். அணுங்கியது. சிரித்துக்கொண்டே வில்சனை தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள். அதற்கும் எஜமானியின் மூட் புரிந்ததோ என்னவோ, இப்போது கன்னங்களையும் இலேசாக நக்க ஆரம்பிக்க, மேகலா “போடா நாயே” என்று செல்லக்கொபத்தில் திட்டியவாறே கீழே இறக்கிவிட்டாள். வில்சன் அப்போதும் அவள் காலை போய் விறாண்டி விளையாடிக்கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. பெயர் வச்சவன் அவனல்லோ. அந்த நரிக்குணம் அப்படியே இருக்கு ..,
“குட்டிக்கு என்ன பெயர்?”
“பெயரா? .. நேற்று தான் தம்பி எங்கேயோ தாழையடிக்குள்ள இருந்து தூககியோண்டு வந்தான் .. இன்னும் பெயர் வைக்கேல்ல”
“அப்ப எப்பிடி கூப்பிடுவீங்க?”
“உஞ்சு தான்.. என்னத்த வச்சாலும் அம்மா கடைசில உஞ்சு எண்டு தான் கூப்பிடப்போறா.. முதலில இருந்த நாய்க்கு ஹீரோ எண்டு வச்சம்.. அம்மா அதை ஹீரா ஹீரா எண்டு சொல்லுறத நீங்க”
“வில்சன் எப்பிடி?”
“வில்சன்?”
“யியா .. வில்சன் ..நல்ல பெயரா … காஸ்ட் எவே வொலிபோல் பெயர்”
“காஸ்ட் எவே? யா“
“ம்ம் காஸ்ட் எவே .. போன வருஷம் ரிலீஸ் ஆன படம்.. சூப்பர்ப் மூவி தெரியுமா? .. டொம் ஹான்ஸ் மூவி .. அதில ஒரு வொலி போல் ..”
“ப்ச் .. தமிழ் படம் பாக்க கேட்டாலே அப்பா பென்ட் எடுப்பார் .. இங்க்லீஷ் படம் சான்ஸ்சே இல்லை”
“சரிவிடு .. நீ எல்ஏ வரும்போது பார்க்கலாம்”
குமரனின் “நீங்க” சாதரணமாக “நீ”யானதை மேகலா கவனித்து புன்முறுவல் செய்தாள். அமுசடக்கி கள்ளன், கொஞ்சம் கொஞ்சமாக அடித்தடம் கூட தெரியாமல் அவன் தன்னுள்ளே வியாபித்துக்கொண்டிருப்பதை மேகலா உணரத்தொடங்கினாள்.
“எல் ஏ யா?”
“யேப் .. எல் ஏ .. லொஸ் ஏஞ்சலஸ் .. நாங்க இருக்கிற இடம் டோரன்ஸ்.. அதில இருந்து கொஞ்சம் தெக்கால போகணும் .. எ ப்ளேஸ் டு லிவ் .. ஒரு பீச் இருக்கு .. சான்ஸே இல்ல .. சாகும் வரைக்கும் அங்கேயே கிடக்கலாம் தெரியுமா?”
“நாங்க எண்டா .. யார் யாரெல்லாம் இருக்கிறீங்க? கறுப்பியா? வெள்ளையா? நான் ஆரு இதில?”
“கறுப்பி”
“என்ன நக்கலா?”
“பின்ன .. இன்றைக்கு சரியா ஏழாவது நாள் .. ஒரு கிஸ் .. அட்லீஸ்ட் ஒரு ஐ லவ் யூ கூட கிடைக்காதா?”
“ரப்பிஷ்”
குமரன் முகம் போன போக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் மேகலா.
“பிள்ளை வந்து ஒருக்கா இந்த சம்பலை இடிச்சு தா”
அம்மாவுக்கு மூக்கு மேலே மணந்திருக்கவேண்டும். கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாள். மேகலா மனம் முழுதும் குமரனிடமே இருந்தது. சனியன் பிடிச்சவன். ஒரு மாசம் இருக்குமா? ஒரு லீவில் வந்து ஊருலகத்து அநியாயம் முழுக்க செய்து, இப்ப விசர் பிடிச்சவள் மாதிரி இருக்கவேண்டி இருக்கு. குறிப்பு கொண்டுவந்த சோமசுந்தரம் மாமா மீது கோபம் கோபமாக வந்தது. உலகத்தில எத்தினையோ வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இருக்கேக்க ..இப்பிடியா ஒருத்தனை பிடித்துக்கொண்டு வருவது?
மேகலா அந்த செல்லக்கோபமும் சிரிப்புமாகவே கட கடவென்று உரலையும், உலக்கை நுனியையும் துடைத்து, பொரித்த செத்தல் மிளகாயை போட்டு டொக் டொக் என்று இடிக்க தொடங்கினாள். மனம் எங்கோ இருக்க, கை தன் பாட்டுக்கு உலக்கை பிடிக்க, உரல் முழுதும் ஏறுக்கு மாறாய் பட்டு சத்தம் நங் நங் என்று கேட்டது.
“ஒரு சம்பலை சத்தம் போடாமா இடிக்க மாட்டியா? .. கல்லை இடிச்சு ஊரோச்சம் வைக்காம பார்த்து இடி”
அம்மா தான் மீண்டும். அவள் எப்போதுமே இப்படித்தான். மனம் மீண்டும் குமரன் பால் திரும்பியது. அவன் ஏன் அப்படி திடீரென்று லக்கேஜும் கையுமா வந்து மீட் பண்ணோணும்? அந்த நேரம் பார்த்து அந்த பாழாய்போன ஷேக்ஸ்பியர் வசனத்தை ஏன் நான் படிப்பிச்சுக்கொண்டு இருக்கோணும்? அவனோடு எப்படி அவ்வளவு ஈசியா ஒட்டிக்கொண்டு, ச்சே அவ்வளவு ஸ்டுடன்ஸ் பார்க்கத்தக்கனையா கம்பஸ் கிரவுண்ட் மரத்தடி பெஞ்சில இருந்து மணிக்கணக்கா .. அந்த சனியனில எதோ ஒண்டு .. ப்ச் .. எல்லாமே ஒரே மாசம் தான் .. சரியா இருபத்தொன்பது நாட்கள் முடிந்து, எவ்வளவு பேசியிருப்போம்? எவ்வளவு பேச இருக்கு இன்னமும்? இடையில் இரண்டு நாள் அவனுடைய முதல் காதல் கதை கேட்டு கோபப்பட்டு பேசாமல் இருந்து, ச்சே அதை வேறு வேஸ்ட் பண்ணீட்டன் .. கடவுளே எங்கேயும் எப்போதும் அவனை விட்டு பிரியாமல் எல்ஏ ஒ இல்லை இங்கேயோ அவனோடு என்றென்றும் சேர்ந்திருந்து அவன் அலம்பலை நாள் முழுதும் கேட்டு … கேட்கவேண்டும் .. அடச்சீ எல்லாமே டக் என்று முடியுமென்று மேகலா கனவிலும் எதிர்பார்த்திருந்தாளில்லை. இரண்டு நாள் முன்பு அந்த நாளும் வந்தது .. அவன் திரும்பிப்போகும் நாள்.
“நீ பேசாமா இங்கேயே நில்லேன் .. இங்கேயே .. சயன்ஸ் டிபார்ட்மென்ட்ல ஜோயின் பண்ணி .. வொர்ஸ்ட் கேஸ் ஐஐஎஸ்ல டீச் பண்ணலாம் .. ஆறு மாசம் … வெடிங் முடிஞ்சதும் நாங்க சேர்ந்து போகலாம் ப்ளீஸ்”
மேகலாவுக்கு அந்த “நீங்க” சரளமாக “நீ” ஆவதற்கு இரண்டு வாரமானது. அவன் இவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவான் என்று பக்கத்தில் இருக்கும்போது தோன்றவில்லை. பத்தாக்குறைக்கு நேற்று நல்லூர் தேர் முட்டியடியில் யாருமே பார்க்காத சமயம் சனியன் கிஸ் வேறு பண்ணிவிட்டான். படுத்துகிறது. இப்போ பார்த்து திடீர் என்று புறப்படுகிறேன் என்று சொன்னால், என்ன சேட்டையா விடுறார்?
"ஐ நோ .. மேகலா .. ஆனா போகணும் .. ஐபிம் ரிசெர்ச்ல வேர்க் கிடச்சிருக்கு, விட சொல்லுறியா? இட்ஸ் மை ட்ரீம் ..ஆறு மாசம் தானே .. ஐ வில் பி பக் போர் த வெடிங் .. நெக்ஸ்ட் டைம் ஸ்ரீலங்காவால இருந்து கிளம்பும்போது இரண்டு பேருமா தான் போறம், ஓகேயா?”
“ …. “
“ஹேய் மேகலா”
“என்ன”
“வந்து … நீ இன்னமுமே என்னை பிடிச்சிருக்கா இல்லையாண்டு..”
“ரப்பிஷ்”
“இந்த முப்பது நாளில் நான் ஒரு முன்னூறு ஐ லவ் யூ .. பதிலுக்கு நீ ஒண்டு கூட சொல்ல இல்ல தெரியுமா?”
“அட்டர் ரப்பிஷ்”
நினைக்க நினைக்க மேகலாவுக்கு அவன் நினைவு இன்னும் இன்னும் வாட்டியது, ஏதோ ஒரு கோபத்தில் ஓங்கி ஒரு போடு போட, அப்போது தான் உரலுக்குள் போட்டிருந்த வெங்காயம் உலக்கை அடி பட்டு தெறித்து, ஒரு துண்டு கண்ணில் பாய்ந்தது. செத்தல் மிளகாயும் வெங்காயத்தில் ஒட்டியிருக்க, கண் வேறு கடுமையாக எரியத்தொடங்கவும், டெலிபோன் அடிக்கவும் சரியாய் இருந்தது. அவன் தான் … இந்நேரம் லாண்ட் பண்ணியிருப்பான். அப்பாடி .. ஒழுங்கா போய் சேர்ந்திட்டான் ..போட்டது போட்டபடியே, ஒரு கையால் கண்ணை கசக்கியபடியே ஹாலுக்குள் ஓடிப்போய் ரிசீவரை எடுத்தாள்.
“ஏய் குமரன் .. ஒரு மாதிரி போய் சேர்ந்திட்டியா?”
“இன்னும் இல்ல … ஸ்டில் இன் த பிளைட் மேகலா”
“யூ சீரியஸ்? அவ்வளவு அவசரமா? கிரெடிட் கார்ட்டை வேஸ்ட் பண்ணாத .. இனி இனி பொறுப்பு வரோணும் உனக்கு”
“மேகலா…”
“நீ தான் கோல் பண்ண போறாய் எண்டு தெரியும் குமரன்.. விஷயம் தெரியுமா? பிரிவோம் சந்திப்போம் வாசிச்சுக்கொண்டிருக்கிறன் .. நீ சொன்னது போலவே ரத்னா .. ஜோர்ஜஸ் கரக்டரைசேஷன் .. அப்படியே கொஞ்சம் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி மரியான் குணம் கூட அவளுக்கு ..ஐ ஆம் ஷூர் சுஜாதா மஸ்ட் ஹாவ் ரெட் இட் ..”
“ஹேய் லிட்ரேச்சர் லூஸ்.. நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியா”
வழமையாக புத்தகம் என்றால் துள்ளிக்குதிக்கும் குமரனின் குரலில் ஒருவித பதட்டம் இருந்ததை கண்ட மேகலா துணுக்குற்றாள்.
“டென்ஷனா இருக்கிறியா? .. சொல்லு .. என்ன விஷயம்?”
“மேகலா . ஐ தினக் இட்ஸ் எ பாட் நியூஸ்”
“சொல்லுடா .. என்ன?” மேகலாவுக்கு இனம்புரியாத பயம் ஒன்று அடிவயிற்றில் பரவ ஆரம்பித்திருந்தது. அம்மாளாச்சி, எல்லாமே நல்லதா நடக்கோணும், உனக்கு முப்பது தடவை அடி அழிச்சு,
“எங்கட பிளேனையும் கடத்தி இருக்கிறாங்கள் .. இன் பிளைட் புல்லா ஆர்ம்ஸ் வச்சுக்கொண்டு .. அரப்காரங்கள் போல … கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ரெண்டு பிளைட் போய் வோர்ல்ட் ட்ரேட் செண்டரில மோதி வெடிச்சிருக்கு…
“என்னடா லூசுத்தனமா .. சும்மா என்னை வெருட்டாத குமரன் .. டெல் மி யு ஆர் சேஃப்.. விளையாடாத ப்ளீஸ்”
“ஐ தின்க் அமரிக்கா இஸ் அண்டர் அட்டாக் .. எல்லா பிளைட்டையும் கடத்தி கொண்டுபோய் பில்டிங்க்ஸோட .. ஐம் சொறி மேகலா .. ஒரு மாசம் .. நீ தேவதை மாதிரி வந்து … நான் வேற உன்னை குழப்பி ..”
“டேய் .. அப்பிடி ஒண்டுமே நடக்காது .. தே வில் லாண்ட் அண்ட் ரிலீஸ் யூ .. தெரியும் .. அம்மாளாச்சி எங்கள கைவிடமாட்டா”
“அம்மா .. அம்மாவுக்கு கூட நான் கோல் பண்ண இல்ல மேகலா .. இனி சான்ஸே கிடைக்காது .. அம்மாவை கட்டிப்பிடிச்சு ..”
“குமரன்”
“இங்க கொஞ்ச பேர் அவங்கள அட்டாக் பண்ண ப்ளான் பண்ணுறாங்கள் .. நோ யூஸ் .. இன்னும் கொஞ்ச செக்கன்ஸ் தான் மேகலா .. ஏதாவது பேசு .. பிடிச்சுதா … பிரிவோம் சந்திப்போம் எந்தளவுல இருக்கு? அந்த வேகாஸ் சீன் வந்திட்டுதா?”
மேகலா ஸ்தம்பித்துப்போய் இருந்தாள். என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு கூட இப்படி நடக்குமா? ஏன் எனக்கு மட்டும் திரும்ப திரும்ப .. எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே .. ச்சே பாரதி பாட்டு வேற நேரம் காலம் இல்லாமல்,
“குமரன் .. ப்ளீஸ் ஹோல்ட் ஸ்ட்ரோங் .. என்னை விட்டு போயிடாதடா ப்ளீஸ் .. ஸ்டே ஹோல்ட் … சொல்லோணும் எண்டு நினைக்கிற போதெல்லாம் சொல்லாம.. திரும்பி வாடா .. நீ வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லும் மட்டும் ..”
“என்ன அந்த … “ரபிஷ்ஷா?”
கேட்ட கணத்திலேயே மேகலா உடைந்து போனாள், தெரியும். இந்தக்கணம் கூட அந்தப்பக்கம் இருந்து அதே நரிச்சிரிப்பு சிரித்திருப்பான். இவனை இந்தக்கணத்தோடு மிஸ் பண்ண போகிறோமா? இவன் முகம், இவன் காதல், நான் ஒவ்வொருமுறையும் முறைக்கும்போது கொடுக்குக்குள் சிரிப்பானே ஒன்று, அப்படியே தோளில் கை போட்டானென்றால் .. ஐயோடா கடவுளே …
“ஐ லவ் யூ குமரன் .. ஐ லவ் யூ டாம் ஸோ மச் ……ஐ லவ் ….”
மேகலா ரிசீவரின் காதுப்பகுதியை பொத்திக்கொண்டு எட்டூருக்கும் கேட்கும் வண்ணம் மவுத் பீஸை நோக்கி கதறிக்கொண்டே இருந்தாள், நிறுத்தாமல்.
************************************************************
பின் குறிப்பு 1: கதையின் முடிவு டிராமடிக் என்று சிலவேளை வாசிப்பவர்கள் நினைக்ககூடும். அவர்களுக்கு 9/11 விசாரணையின் பொது பதிவு செய்த சாட்சியம் ஒன்று சாம்பிளுக்கு,
"Honey, it’s bad news."
"Lyz I need to know something. One of the other passengers has talked to their spouse, and he said that they were crashing other planes into the World Trade Center. Is that true."
[His wife pauses, not knowing what to say, but finally tells him it is true. There is a pause of a few minutes after hearing this.]
"I love Emmy, take care of her. Whatever decisions you make in your life, I need you to be happy, and I will respect any decisions that you make. Now, I need some advice - what to do? Should we, you know, we’re talking about attacking these men, what should I do?"
Reference : http://www.jeffhead.com/attack/heroes.htm
பின் குறிப்பு 2: இந்த சிறுகதை 9/11 சம்பவித்து சில மாதங்களில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழருவி சஞ்சிகையில் வேறொரு களத்தில் வெளியாகி, பின்னர் ஆங்கிலத்தில் Door Mat என்று இரண்டு வருடத்துக்கு முன்னர் எழுதப்பட்டது.
அன்பரே! அப்பாவைப் பற்றிக் குறிப்பிடும் போது, அப்பா வந்தார் போனார் என்று இயல்பாக எழுதுகிறீர்கள்.
ReplyDeleteஅப்பா வந்தான் என்று கனவிலும் சொல்ல உன்ன மாட்டீர்கள். ஆனால் அம்மா வந்தாள், போனாள் என்று உங்கள் பிறந்த மண்ணின் பண்புக்கும் , உங்கள் இயல்புக்கும் மாறாக எழுதுகிறீர்கள் . எனது ஐயா "எங்கையடா தம்பி கொம்மா?" என்று கேட்டு ,நானும் " தண்ணி அள்ளப் போட்டாள்" என்று மறுமொழி சொல்லியிருந்தால்...? அப்பர் விடுகின்ற அறையிலே என்னுடைய செப்பட்டை திரும்பியிருக்கும். உங்கள் வீட்டு நடப்பும் பெரிய வேறுபாடாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
உங்கள் இயல்பு மாறாமல் பேச்சு வழக்குப் படி ,அம்மா ,அவ வந்தா, போனா என்று எழுதுங்கள். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. நீங்களும் மற்றும் பலரும் இந்திய எழுத்தாளர்களைப் போல தாய், மூத்த பெண்களைக் குறிப்பிடும் போது இப்படி அவள்,இவள் என எழுதுவதை மாற்றி கொள்ள வேண்டும். வாசிக்க மனசுக்குக் கயிட்டமாய் இருக்கிறது. மாறுபட்ட சூழலில் வளரும் இளந்தலைமுறை மரியாதை இல்லாமல் கூப்பிடப் பழகி விடுவார்கள்.
>அம்மாவுக்கு மூக்கு மேலே மணந்திருக்கவேண்டும். கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாள்.
ReplyDeleteநான் தனியாகச் சொன்னால் கேட்கமாட்டீர்கள். இப்ப சப்போ(ர்)ட்'டுக்கு 'ந.குணபாலன்'வந்திட்டார் :-)
நன்றி குணபாலன் அவர்களே .. அம்மாவை பற்றி அப்படி எழுதுவது ஒரு வித உரிமையிலும் நான் வாசித்து வளர்ந்த புத்த்க்கக்ங்களின் தாக்கத்திலுமே .. இனி வரும் காலங்களில் அம்மாவுக்கு அதிக மரியாதை கொடுக்க முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteநன்றி சக்தி அண்ணா.. வாசிப்பவர்கள் கதையை சுற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்று எண்ணுவதால் இந்த அம்மா விஷயத்தை இப்படியே விடுவோம் என்று தோன்றுகிறது (அதிகாலை மூன்று முப்பது மணிக்கு எழுதி முடித்த கதைக்கு கிடைத்த முதல் கொமென்ட் குணபாலன் அவர்களோடது!, ஆனால் எனக்கு இது புதுசில்லை).. ஆனாலும் ஆச்சியை மரியாதை குறைவாய் அது இது என்று அகிர்த்திணையில் அழைக்கும் ஆட்கள் நாங்கள்! வட்டார வழக்கு என்று அதற்கு சமரசம் செய்யலாமா?
ReplyDeleteமுதலில் நல்லதொரு கதைக்கு உரிய கருத்துரை எழுதாமல் விட்டுவிட்டேன். அது என் பிழை. மிகவும் திறமையுடன் வாசகர் மனமும் மேகலாவின் தவிப்புக்களை அனுபவித்து உணர்ந்திடும் படிக்கு வடிவாகச் சித்தரித்திருக்கிறீர்கள். அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநான் சொன்னதை குறையாகக் கருதாமல் வேண்டுகோளாகக் கருதி எனது பிழையைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
பேச்சுவழக்கில் அம்மாவை அவள் என்று நாங்கள் புழங்கியிருந்தால் எனக்கு இது உறைத்திருக்காது.கனக்க வேண்டாம், இன்றைய நாட்களில் இந்தியத் தொலைக்காட்சிகளில் சின்னப் பிள்ளைகளிடம் செவ்வி காணும் போது "எங்கம்மா சொல்லிக் குடுத்தாங்க" எனப் பிள்ளைகள் வலு மரியாதையுடன் சொல்கிறார்கள். அப்படியிருக்க இந்திய எழுத்தாளர்கள் மட்டும் ஏன் இப்படி எழுத வேண்டுமோ தெரியவில்லை.
எனது மனைவிக்கும் " ஐயா எங்கை போட்டுது?, அம்மா வந்திட்டுதோ?" என்று கதைப்பது பிடிக்காது. "ஆடோ? மாடோ? போனது? வந்தது?" என்று பேசுவா. அப்படியான சொற்களை கேட்டு வளர்ந்த எனக்கு மரியாதைச் சொற்களாகவே அவை படுகின்றன.
குணபாலன் அவர்களே.. உங்கள் கருத்தை மிகவும் தீவிரமாகவே கருத்தில் கொண்டேன்.. வட்டார வழக்கில் அதிக சிரத்தை எடுப்பதில்லை என்று சக்தி அண்ணா, வாலிபன் போன்றவர்கள் குட்டி குட்டி தான் இப்போது எழுதும்போது ஒன்றுக்கு ரெண்டுமுறை செக் பண்ணுவதுண்டு.. அம்மாவை நீ நான் என்று என் பாத்திரங்கள் விளிக்காது. ஆனால் நரேஷனில் அது எனக்கு ஏதொ அதிகம ரிலேட் பண்ணும் போல இருப்பதால் தான் அப்படி எழுதுவேன். இனி வரும் காலங்களில் கதைக்கு உறுத்தாத வரைக்கும் இப்படியான தவறுகள் வராமல் பார்த்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteதமிழருவி நான் பெரிசா கவனித்து வாசிக்காததை ஒட்டி வருத்தம் - கதை அருமை - உணர்வுகளை காட்சிப் படுத்துவதில் கில்லாடித்தனம் தெரிகிறது. ஆனால் இந்த கவுதம் மேனன் கீரோ எல்லாம் மெக்கானிக்கல் இஞ்சினியர் என்ட மாதிரி உங்கள் கதைகளில் துருத்தும் ஜேகே அடையாளங்கள் - உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
ReplyDelete>.. ஆனாலும் ஆச்சியை மரியாதை குறைவாய் அது இது என்று அகிர்த்திணையில் அழைக்கும் ஆட்கள் நாங்கள்! வட்டார வழக்கு என்று அதற்கு சமரசம் செய்யலாமா?
ReplyDeleteI believe it is going in side-kick. But let me answer.
Of course Yes. Whether right or wrong is another issue. I grow up listening to that kind of 'addressing'. And when we write, I cannot change it. It has to 'reflect' the period.
Same is true about someone complaining 'his wife's cooking is not right'. if you argue 'This is male chauvinism" then yes it is right. But do you 'correct it' and write something that did not happen? or do we write what happened?. or what would have happened......Probably I should stop pointing to those....
Sorry to type in English. You know the reason.
Sakthi Anna,
ReplyDeleteI totally second your view and obviously that's where I was coming to. I still have second thoughts on concentrating too much on dialects in the narrations by the author not the character. I understand the dialogs in a story should be perfected well. But narration? perhaps, we need to mix it up with pure tamil and bit of a dialect flavor.
Cheers,
JK
>perhaps, we need to mix it up with pure tamil and bit of a dialect flavor.
ReplyDeleteThat is what I am tryin to do. But only others can say whether it look nice or it look odd and funny. You can see that I am mixing words like " பின்னே, அப்ப, தேத்தண்ணி" into the narration, but also mostly I write in pure tamil in narration. I am not in favour of wrting in full pure tamil nor dialect (in narrration);
Again whether I am achieving the 'likabilty' by the readers, I do not know. I expect 'brutal' reviews/critism.
கதை அருமையா இருக்கு, அதுவும் இந்த சம்பல் இடிக்கிற, விளக்கு சுடர் தட்டுற, தம்பி படிக்கிறதென்டு குடுக்கிற பந்தா அந்த விவரிப்புகள் நல்லா இருக்கு. நாய் நக்கின விசயமும் அதை சொன்ன விதமும் அருமையிலும் அருமை. பாரதியை அந்த பாழாய்ப்போன பிச்சைக்கார யானை மிதித்த நாளில் பாரதி கவிதைகளோடு ஒரு கதை. தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்திருப்பதால் இப்ப ஊரில மட்டுமல்ல எங்கயும் அடிவாங்கலாம் என்ற யதார்த்தமும் கதையோட சேர்ந்து போகுது. பென்சில்வேனியாவில் விழுந்த அந்த மூன்றாவது விமானம் பற்றிய ஒரு திரைப்படம் யுனைடெட்93 பார்த்தனான். யார் யாரோ கண்டுபிடிச்சதை பாவிக்கேக்க இருக்கிற சுகம், யாரோ எவனுக்கோ அடிக்கேக்க அடிவாங்கவும் செய்யுது என்ன செய்ய.
ReplyDeleteஇந்த நிஜ ஜேகே துருத்தாம இருக்க இனிமேல், குமரன் கணக்கு பார்க்காம, சகட்டுமேனிக்கு செலவு செய்யும், அழகிய இளம் வாலிபனாக சித்தரிக்கப்படலாம். அதோட அவன் ஒரு BMW, Benz AMG போன்ற எரிபொருள் குடிக்கும் விலை உயர்ந்த வாகனங்களை விரும்பி ஓடுவதாய் காட்டலாம். இளையராஜா, சுஜாதா போன்ற படைப்பாளிகளை முற்றிலும் அறியாதவனாகவும் சித்தரிக்கபடலாம். எல்லாத்தையும் விட குமரன் என்ற பெயரையே பாவிக்காமல் விடலாம். எதோ நம்மளால முடிஞ்சது.
ReplyDeleteகதைக்காகவென்றாலும் குமரனை இப்படிப் பிளேனில் ஏற்றி விடமுடியாது. அதைத்தான் கேதா'உம் மேலே சொல்லுகிறார் போல...
ReplyDeleteநீங்கள் எழுதுற 'girlish thoughts ' தத்ரூபமா இருக்கு. அக்காக்களோட வளர்ந்தபடியாலா?
ReplyDeleteஅழ வச்சிட்டிங்கள். உண்மை சம்பவம் என்ட படியா இன்னும் கனக்குது.
பிறகு அந்த நாய் சேட்டை சூப்பர்
ReplyDeleteஉங்கள் மறுமொழி கண்டு மனம் மகிழ்ந்தேன். நன்றி. உங்கள் எழுத்துக்கலை மென்மேலும் வளர வேண்டும் என்பது என் அவா.
ReplyDelete(இதென்னடா திரும்பவும் ஒரு அவா வந்து அவத்தைப் படுத்திது எண்டு நினைக்காதயுங்கோ.)
நன்றி வாலிபன்,
ReplyDelete//துருத்தும் ஜேகே அடையாளங்கள்//
இந்த கதையில் இருக்கும் .. இது பத்து வருடங்களுக்கு முதல் எழுதின கதை .. இரண்டு வருஷத்துக்கு முதல் திருப்பி எழுதி இது மூன்றாவது வெர்ஷன்! .. மேகலா குமரன் கதைகள் புதுசாக எழுதுவதாக இல்லை. பாத்திரங்களின் பண்புகளை ஏற்கனவே எழுதின கதைக்கு மாறாக மாற்றுவதில் இஷ்டமிருக்கவில்லை! சோ டோன்ட் வொரி பாஸ்!
நன்றி சக்தி அண்ணா .. நீங்க என்ன சொல்ல வாறீங்க எண்டு புரியுது .. இதில கொஞ்சம் இன்னும் சிரத்தை எடுக்கிறன் இனி.
ReplyDeleteநன்றி கேதா ..
ReplyDelete//இந்த நிஜ ஜேகே துருத்தாம இருக்க இனிமேல், குமரன் கணக்கு பார்க்காம, சகட்டுமேனிக்கு செலவு செய்யும், அழகிய இளம் வாலிபனாக சித்தரிக்கப்படலாம்.//
மச்சி நடுநிசி நாய்கள் ரேஞ்சுக்கு ஒரு குமரன எழுதி தாக்குவோமா?
சக்தி அண்ணா!
ReplyDelete//கதைக்காகவென்றாலும் குமரனை இப்படிப் பிளேனில் ஏற்றி விடமுடியாது. அதைத்தான் கேதா'உம் மேலே சொல்லுகிறார் போல...//
நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கிறார் .. கொலரை தூக்கிவிட்டா பட்டன் அறுந்திடும் எண்டு .. சோ நாங்க எப்பவுமே டொயாட்டா 93 மொடல் தான்!
நன்றி தன்யா ..
ReplyDelete//நீங்கள் எழுதுற 'girlish thoughts ' தத்ரூபமா இருக்கு. அக்காக்களோட வளர்ந்தபடியாலா?//
அக்கா மாரிட்ட இருந்து எவ்வளவு பொறுக்கினது என்று தெரியாது ... வாசிப்பும் .. நண்பிகளும் தான் எண்டு சொன்னாலும் பொறாமை பிடிச்சவங்கள் நம்பவும் மாட்டாங்கள்!
jokes apart , curiosity தான் மெய்ன் காரணம் .. என்னுடைய அபிமான லாஹிரி எழுத்துக்கள் எப்போதுமே ஒரு ஆணின் பார்வையில் இருக்கும் .. ஏன் என்று ஒருமுறை இன்டர்வியூவில் கேட்ட பொது அவருடைய பதில்!
Q) You write frequently from the male point of view. Why?
A) In the beginning I think it was mainly curiosity. I have no brothers, and growing up, men generally seemed like mysterious creatures to me. Except for an early story I wrote in college, the first thing I wrote from the male point of view was the story "This Blessed House," in Interpreter of Maladies. It was an exhilarating and liberating thing to do, so much so that I wrote three stories in a row, all from the male perspective. It's a challenge, as well. I always have to ask myself, would a man think this? do this? I always knew that the protagonist of The Namesake would by a boy. The original spark of the book was the fact that a friend of my cousin's in India had the pet name Gogol. I wanted to write about the pet name / good name distinction for a long time, and I knew I needed the space of a novel to explore the idea. It's almost too perfect a metaphor for the experience of growing up as the child of immigrants, having a divided identity, divided loyalties,etc.
Reference : http://hinduism.about.com/library/weekly/extra/bl-jhumpainterview.htm
வாங்க குணபாலன் .. நாங்க கொமேன்டில காரசாரமா டிஸ்கஸ் பண்ணுவோம் .. சக்திவேல் அண்ணையோட உருண்டு பிரண்டெல்லாம் இருக்கிறோம் .. அதெல்லாம் பாக்காமா நீங்க தொடர்ந்து வாங்க .. தவறா எழுதினா குட்டுங்க .. அப்பா தான் நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா ஏதாவது உருப்படியா எழுதுவம்/
ReplyDeleteஅருமையாக நகர்த்திச் சென்று,இறுதியில் அழ வைத்து விட்டீர்களே?
ReplyDelete//பிரிவோம் சந்திப்போம் வாசிச்சுக்கொண்டிருக்கிறன் .. நீ சொன்னது போலவே ரத்னா .. ஜோர்ஜஸ் கரக்டரைசேஷன் .. அப்படியே கொஞ்சம் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி மரியான் குணம் கூட அவளுக்கு ..ஐ ஆம் ஷூர் சுஜாதா மஸ்ட் ஹாவ் ரெட் இட் .//
ReplyDelete:) புடிச்சிட்டிங்க....
ஆங்காங்கே கொத்து கொத்தாய் உங்க வட்டார மொழி விலங்க இல்ல... இருந்தும், விடல... கொஞ்சம் மீண்டு மீண்டு படிச்சு புரிஞ்சுக்கிட்டேன்... பத்து வருசத்துக்கு முன்னாடியா? பின்னி இருக்கீங்க... கூடிய விரைவில் பதிவுகளுக்கு முழுக்கு போடலாமுன்னு நெனச்சிட்டு இருக்கேன்.. அந்த எண்ணத்தை இது போன்ற எழுத்துக்கள் "நீயெல்லாம் எதுக்கு எழுதிட்டு இருக்கே"ன்னு ஆணி அடித்து ஆமோதிக்கிறது...
அப்புறம், திடுதுப்புன்னு சுமந்திரன நம்பாதேன்னு சொல்லிட்டு உங்கபாட்டுக்கு விசையறு பந்து, மீண்டும் மேக்லான்னு போயிட்டீங்க... பால்வெளிக்கு திரும்பவும்..
Very touching story.! I wish I can write like this
ReplyDeleteVani
வியாழமாற்றம் நின்றது போல் கந்தசாமியும் நின்று போகும் ஆனால் இப்படியான கதை , பாட்டு ரசனை என்றும் உங்களை விட்டு போகாது ,இவை தான் உங்கள் மனதில் இருந்து வருபவை .தயவு செய்து உங்களை மற்றவர்களுக்காக மாற்ற வேண்டாம் .இப்படியான ரசனைக்கு தான் வரவேற்பு அதிகம் .மற்றய பதிவுகளுக்கு விமர்சனம் எழுதாதது இதுவும் ஒரு காரணம் .
ReplyDeleteதொடந்து எழுதுங்கோ , கந்தசாமி உட்பட :-)
ReplyDeleteபயப்படாமல் எல்லாரையும் சீனச்' சட்டிக்கை போட்டு வறுத்தெடுங்கோ . வாசிக்க (அத்தோடு திட்டிக் கொள்ள) நாங்கள் இருக்கிறம்.
நன்றி யோகா
ReplyDeleteநன்றி மயிலன் .. அந்த சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு.. இந்த கதையில செருகியாச்சு!
ReplyDeleteகந்தசாமி இந்த வாரம் வரும் .. அதுக்கு நிறைய வொர்க் பண்ணனும் .. பண்ணிடுவோம்..
Thanks Vani... Knowing ur depth of emails, I am sure you can write even better than this.
ReplyDeleteநன்றி கீதா .. கந்தசாமி நிச்சயம் வரும்.. என் எழுத்து ஒரு வட்டத்துக்குள் சிக்க கூடாது என்பது ஒரு confession ... நிச்சயம் இந்த வகை எழுத்துக்களும் அடிக்கடி வரும்.
ReplyDeleteசக்திவேல் அண்ணா .. தாக்கிடுவோம் பாஸ்
ReplyDeleteஅருமையாக நகர்த்திச் சென்று,இறுதியில் அழ வைத்து விட்டீர்களே?
ReplyDeletethats JK
Mano
நன்றி மனோ!
ReplyDelete/பக்கத்தில் இருந்த அரிக்கன் லாம்பும் தன் பங்குக்கு சேர்ந்து சிரித்தது/
ReplyDelete/எண்ணெய் தீர்ந்த அரிக்கன் லாம்பு பக் பக் என்று கண்ணடிக்க/.
அரிக்கன் லாம்பாகமாறி எம்பிட்டு சில்மிசங்கள் செய்யிறீங்கள் மேகலாவ!.. தல !
அருமையான கதை.. ரசித்தேன்.
/'ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யூ இன் திஸ் பார்ட்டி'/
தமிழில் வாசிச்சு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பிறகு தமிழில சிந்திக்கிரதால கதையின் ஆர்முடுகல் சற்று தடைப்படுவது போல இருக்கு,உங்கள் வாசகனாகிய எனக்கு
விட்டுப்பெயர் கஜன்.
Thanks THala.
Delete// ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யூ இன் திஸ் பார்ட்டி”//
That's an extract from Sujatha's pirivom santhipom .. as it is!