Skip to main content

சகியே நீ தான் துணையே!


1_175ilayarajaAR-Rahman01
பாடல்கள் தரும் அனுபவங்கள் தனித்துவமானது. மேலும் மேலும் தேடல்களை உருவாக்கி அதற்குள் எம்மை தொலைத்துவிடும் அபாயங்களை ஏற்படுத்திவிடக்கூடியது. நேற்று அந்த தொலையும் அனுபவம் மீண்டும். இரவு ஒன்பது மணி இருக்கலாம். மேல்பேர்னின் கோடைக்காலத்து முதல் நாள். வெளிச்சம் இன்னமும் பரவலாக பல நிறங்களில் வியாபித்து, மெல்லிய சூட்டுடன் கொஞ்சமே தென்றலும் கூட சேர, நடை போவதற்கு அதைவிட சிறந்த நேரமோ காலமே கிடைக்காது. சகட்டு மேனிக்கு எங்கேயெல்லாம் போகப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் பாட்டை கேட்டுக்கொண்டு நடக்கவேண்டும். பெயர் கூட கேள்விப்படாத பறவைகள் வற்றிப்போய்க்கொண்டிருக்கும் நீர்மண்டுகளில் தண்ணீர் தேடும், சேற்றில் சிறகடிக்கும். விளையாட்டு காட்டும். அவ்வப்போது பெண்கள் கூட்டம். கோடையின் வரவை பறைசாற்றிக்கொண்டு போட்டும் போடாமலும் ஓடும். பின்னாலே நாய்க்குட்டியும் ஓடும். எல்லாமே மனதுக்குள் ஒரு இதத்தை கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்காது. பாரத்தை தான் கொடுக்கும். அந்த பாரம் நம்மை இன்னும் வேகமாக நடக்க செய்யும். இந்த முன்னிரவு அனுபவம் கொடுக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அதோடு இந்த பாட்டும் சேர்ந்துவிட்டால் கதை கந்தல்.

இந்த பாட்டை தேஷ் ராகத்தில் அமைந்தது என்கிறார்கள். பாரதிதாசன் பாடல். மெட்டுப்போட இரண்டு வருடங்கள் எடுத்ததாக தண்டபாணி தேசிகர் கூறுகிறார். வேறு எந்த ராகமும் அந்த வரிகளுக்கு பொருந்தவில்லையாம். “பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க வரமாட்டாயா?” என்ற ஆண்டாள் ஏக்கம் … ஆணிடம் இருந்து இம்முறை. இதை சாதாரணமாக பாடிவிடமுடியுமா? என்ன ராகம் என்றெல்லாம் யோசித்து கடைசியில் தேஷிடம் போய் சேர்ந்திருக்கிறார் தேசிகர். அவரே விளக்குகிறார் இங்கே.
கேட்டு முடித்தபின் அடுத்த பாட்டுக்கு தாவமுடியவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு என் பாட்டுக்கு நடக்கதொடங்கினேன். “அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா?” பாட பாட அப்படியே “பூமியை கேட்டா வான்முகில் கூவும்? பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்? வீதியை கேட்டா தென்றலும் வீசும்? சாதியை கேட்டா காதலும் தோன்றும்?” என்ற தலைவர் பாட்டு சரக்கென்று நுழைந்தது. என்னடா இது என்று ப்ளேயரில் அந்த பாட்டை தேடி கேட்டுப்பார்க்க அட .. அதே உணர்வு. அதே எண்ணங்கள். அதே வரிகள். ஆண் ஆண்டாளாகும் இடம் மீண்டும் அந்தி மந்தாரையில். இம்முறை அடித்து ஆடுபவர்கள் ரகுமானும் வைரமுத்துவும். உன்னிகிருஷ்ணன் குரல் … ராகம் தேஷ் தானா? என்று இசை படித்தவர்கள் சொல்லுங்கள்.
இந்த பாட்டில் இருக்கும் ஒருவித crying, ஏக்கம் தலைவரின் பாட்டு ஒன்றிலும் இருக்கிறது. எது என்று உடனே கண்டுபிடிக்கமுடியவில்லை. தலைவர் ராகத்தை அதன் ஆதார தாளத்தில் இருந்து விலக்கி வேகம் சேர்த்து வயலின் கிட்டார் என்று ஒர்கஸ்ட்ரா சேர்த்து வேறு தளத்துக்கு கொண்டு செல்வார். ஆனாலும் அந்த சாஸவதம் குலையாமல் உணர்வு அப்படியே எம்முடன் சேர்ந்து என்னவோ செய்யும். என்னடா அந்த பாட்டு என்று குழம்பி குழம்பி … திடுக்கென்று ஒரு சரணம் தட்டுப்பட்டது. “அங்கிங்கெனாது எங்கும் உன் எண்ணங்கள் என்னை விடாது” என்ற வரிகளின் மெட்டு … கொஞ்சம் ஸ்லோவாக பாடினால் “பூமியை கேட்டா வான் முகில் கூவும்?” மெட்டு வரும். இன்னும் ஸ்லோவாக்கினால் “அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி” வந்து இணையும். அட. விழியில் புது கவிதை படித்தேன் .. எங்கள் ராஜா தேஷில் பண்ணின ஒரு அதிசயம்.
சித்ரா குரலிலேயே ஒரு தேஷ் இருக்கிறது. பெண்ணுக்கே உரிய ஏக்கம், அல்லது பெண்ணின் ஏக்கம் என்று எமக்கு சொல்லப்பட்ட ஏக்கம்! அவர் “கண்ணன் வராது கல்யாண பெண் என்ற இன்பம் வராது” என்று பாடும்போது அந்த இடம் …. கடவுளே … அது காதல் ரோஜாவே ஹம்மிங் ஆயிற்றே.  தேஷ் தான். ஏக்கத்துக்கு தேஷை விட்டால் வேறு வழி ஏது?
ரகுமானின் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் ராஜா சொன்னது. இசையமைப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தான் பேசவேண்டும் என்பதில்லை. அவர்கள் சப்தஸ்வரங்களாலேயே பேசிக்கொள்வார்கள். தேசிகரும் ராஜாவும் ரகுமானும் அதை தான் இங்கே செய்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்வதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வப்போது அவர்கள் பேசுவது எங்களுக்கும் புரியும். அல்லது புரிகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். அவ்வளவே!
&&&&&&&&&&&&&&&&&

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .