Skip to main content

Island of Blood

109612-M

ஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.


இப்படியான சூழ்நிலையிலேயே அனிதாவும் சியாமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். இந்திய இராணுவத்துக்கு தெரியாமல் களவாக யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை பேட்டி எடுக்கும் உயிரை பணயம் வைக்கும் பயணம். அன்றிரவு இந்திய இராணுவத்தின் நடமாட்டம் அதிகம் என்று அவர்களை புலிகள் அங்கேயே தங்க வைக்கிறார்கள். சாப்பாடு? மீனவனின் மனைவி, இருந்த காற்சுண்டு அரிசிக்குள் குட்டி கிளாக்கன் மீன் இரண்டையும், பின்பத்தியில் கிடைத்த நான்கைந்து கீரைத்தண்டையும் ஆய்ந்து போட்டு ஒரேயடியாக சோறாக்கி கொடுக்கிறாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட, அந்த பெண்ணோ அன்றிரவு பட்டினி.

The ability to share often decreases with rising wealth என்று தன்னோடு அந்த மீனவ மனைவியை ஒப்பிட்டு அனிதா எழுதும் பத்தி பல கற்களை எம்முள்ளே நகர்த்தும். யாரென்றே தெரியாமல் வீட்டுக்குள் அழைத்து, சாப்பாடு போட்டு இரண்டு வருடங்கள் பெற்றபிள்ளைகள் போல என்னையும் அக்காவையும் கொண்டாடிய வட்டக்கச்சி குடும்பம் கண்முன்னே வந்து கனக்கும். இப்படி நூலின் ஒவ்வொரு வரிகளும் பதைபதைக்கவைத்து ஆயாசப்படுத்தி ஆணவப்படுத்தி அப்புறம் எம்மை ஒரு நிலைப்படுத்தி .. Thanks a lot அனிதா.

“Island of Blood” என்ற நூலுக்கு அறிமுகம் தேவையில்லை. ஈழத்து போராட்டத்தில் சிறிதேனும் ஆர்வம் கொண்ட எவருமே படித்திருக்ககூடிய புத்தகம் தான் இது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகிய புத்தகம். கொஞ்சநாளிலேயே யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் மொழிபெயர்த்து வீரகேசரியிலோ, தினக்குரலிலோ எழுதி வாசித்திருந்தேன். பின்னாளில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஒருமுறை கண்ணில் மாட்டியது. அந்த புத்தகத்தை பெய்ட்டாக வைத்து யார் வாசிக்கிறாங்கள் எண்டு கண்டுபிடிச்சு உள்ள போடப்போறாங்களோ என்ற பயத்தையும் ஒதுக்கிவிட்டு வாசித்து முடித்தபுத்தகம். பின்னர் இங்கே வந்து ஈபேயில் வாங்கி கட்டியணைத்துக்கொண்டு வாசித்த,  எ ஜெம்.

anita_prathap_005ஊடகவியலாளராக தான் கண்டு உள்வாங்கிய அனுபவங்களை அனிதாபிரதாப் எழுதுகிறார். இலங்கையில் தான் சந்தித்த, 83 கலவரம், ஜேவிபி கிளர்ச்சி பின்னர் நடந்த ஈழப்போர்கள், பிரபாகரனை பல்வேறு சந்தரப்பங்களில், சென்னை, டெல்லி, யாழ்ப்பாணம் என பல இடங்களில் சந்தித்து கண்ட பேட்டிகள் என 2000ம் ஆண்டுவரையான ஈழப்போராட்டத்தை ஒரு தீர்க்கமான பார்வையில் எழுதி ஆச்சர்யப்படுத்தியிருப்பார். இதே அனிதா ஆப்கானில் தலிபானோடு தலிபானாக, பர்தா அணிந்து அந்த சண்டையை கவர் பண்ணியவர். அயோத்தி மதக்கலவரத்தை பக்கத்தில் நின்று ரிப்போர்ட் பண்ணி, பால் தாக்கரேயை இன்டர்வியூ பண்ணி, பின்னர் பங்களாதேஷில் நடந்த பாரிய புயல் சேதங்களையும் உலகுக்கு நேரில் கண்டு விவரித்தவர். தேசியவிருது பெற்று மூன்றே நாட்களில் தற்கொலை செய்த சோபாவின் குடும்பத்தின் ஹளூசினேஷன் சூழலையும் பாலுமகேந்திராவின் வண்டவாளத்தையும் புட்டு புட்டு வைத்தவர். இவ்வளவு விஷயத்தையும் ஒரே மூச்சில் விவரித்திருக்கும் புத்தகம் தான் Island of Blood.

அனிதாபிரதாப் எங்கள் போராட்டம் எந்த நிலையை அடைய போகிறது என்ற ஊகத்தை அப்போதே சொல்லிவிட்டார். பிரபாகரனுடனான சந்திப்பு ஒன்றில் அவர் சொல்லிய வசனம் இது.
If eelam finally dawned, expatriate Tamils would rejoice but by then, most Tamils in their homeland would be six feet under
ஈழப்போராட்டத்தின் நிகழ்வுகளை பக்கச்சார்பில்லாமல் பதிந்த, நான் வாசித்த ஏனைய இரு புத்தகங்களான “முறிந்த பனை” மற்றும் “The Cage” இற்கும் “Island of Blood” க்கும் உள்ள வித்தியாசம், அனிதா ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட தமிழர் சார்பில் இருந்து உணர்வுபூர்வமாக இதை பதிவு செய்தது தான். ரஜனியின் எழுத்தில் தகவல்களின் கோப்புகளே முக்கியத்துவம் பெறுகிறது. கோர்டன் விஸ் கொஞ்சம் சாட்சியமாக பயன்படக்கூடிய தகவல்களை ஊர்ஜிதப்படுத்தி எழுதியிருப்பார். அனிதா இருபதாண்டு ஈழத்தோடு தான் கண்டு கேட்டு உய்த்து அறிந்ததை பிறழாமல் எழுதியிருக்கிறார்.

அனிதா என்ற ஊடகவியலாளரின் ஆளுமை புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஒரு பெண், அதுவும் துணிச்சல் நிறைந்த பெண், அவளுக்கே உரிய உணர்வுகளுடன் போராட்டங்களை பதிவு செய்யும்போது அந்த நூலுக்கு இரத்தமும் சதையும் உணர்வும் தானாகவே வந்துவிடுகிறது. நான் மிகவும் கொண்டாடும் ரசிக்கும் சமகாலத்து பெண் ஐடல்களான ஜூஹும்பா லாகிரி, மிச்சல் ஒபாமா வரிசையில் எப்போதுமே முன்னணியில் இருக்கும் லெஜெண்டரி ரிப்போர்ட்டர் இந்த அனிதா பிரதாப். தலை சாய்த்து வணங்குகிறேன்.

"Island of Blood" ஐ வாசிக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...