Skip to main content

வாடைக்காற்று

vaadai 7

“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.
அந்த இடத்தில் என்னையறியாமலே ஏலே கீச்சான் என்று ரகுமான் பாடதொடங்கினார். காட்சிக்கு எவ்வளவு பொருத்தமான பாடல். வாசிக்க வாசிக்க நெடுந்தீவு இன்னமும் விரிகிறது. மீன் பிடிக்க மன்னாரிலிருந்து வந்து வாடியமைத்திருக்கும் செமியோன், அவன் சம்மாட்டியார், நாகம்மா பிலோமினா, பொன்னுக்கிழவர். விதானை, எந்த நேரமும் குதிரையோடு திரியும் விருத்தாசலம், கிராமத்து வில்லன் சண்முகம், வடதுருவத்தில் இருந்து பருவத்துக்கு வந்து சேர்ந்த கூழைக்கடாக்கள், இவர்களை எல்லாம் ஒன்றுசேர்த்த “வாடைக்காற்று”, நேற்றோடு ஒரு பத்து தடவை வாசித்திருப்பேன். முதல்முறை, தவ்வல் வயதில் 87/88 காலத்தில் வாசித்தது. பிறகு பேச்சுப் போட்டிக்கு முதல்பரிசாக பத்தாம் வகுப்பில் பாடசாலையில் தந்தார்கள். மனப்பாடம் செய்தேன். இடம்பெயர்ந்து போன இடமெலாம் பையில் வைத்திருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் செங்கை ஆழியான் எழுதிய கிளாஸிக், இன்றைக்கும் வாசிக்கும்போது அந்த மண்ணின் வாசத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறது என்றால் … பச்ச் ..அந்த மனுசனை கோயில் கட்டி கும்பிடவேண்டும்.

சோளகக்காற்று முடிந்து வாடைக்காற்று வீச ஆரம்பிக்க, நெடுந்தீவுக்கு வந்து வாடிபோட்டு மீன்பிடிக்கும் செமியோன், மரியதாஸ், இவர்கள் இருவரின் மீனவர் குழுக்களை சுற்றி பின்னப்பட்ட கதை. கூடவே அதையொட்டிய நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை. பிலோமினா, நல்ல சிவப்பா வெள்ளிக்காரியாட்டம், இன்னொருத்தி நாகம்மா இவர்கள் இருவரது குடும்பங்கள், காதல்கள். நாகம்மாவுக்கு பிழைக்கத்தெரியாத குதிரை மேய்ச்சு திரியும் தாய்மாமன். அவனின் நண்பன் வில்லன். இப்படி போகும் கதையில் சீசனுக்கு சீசன் வேடந்தாங்கல் வரும்பறவைகள் போல நெடுந்தீவுக்கு வந்துசேரும் கூழைக்கடாக்கள். மனிதர்களுக்கிடையே நிகழும் சம்பவங்களை கூழைக்கடாக்களை வைத்து உவமானப்படுத்தும், சில இடங்களில் இரண்டுமே ஒரே புள்ளியில் சந்திக்கும் (தாய்மாமன் கூழைக்கடா ஒன்றை வேட்டையாட நாயாட்டம் அலைவது) கதை சொல்லும்பாணி என்று செங்கை ஆழியான் சத்தம்போடாமல் கலக்கிய நாவல் இது. இந்த நாவலை வாங்கி வாசியுங்கள் என்று நான் சொல்லமுடியாது. அனேகமான ஈழத்து வாசகர்கள் இதை தாண்டாமல் வந்திருக்கமாட்டார்கள். ஒரு நினைவு மீட்டல், அவ்வளவு தான்.

Sengai Aaliyanமுன்னுரையிலே இந்த கதையை பாரதிராஜா ஏறத்தாழ திருடி தன்னுடைய கல்லுக்குள் ஈரத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று செங்கை ஆழியான் மிகவுமே மனம் வருந்தியிருந்தார். பாரதிராஜா நெய்தலை மருதத்துக்கு மாற்றினாலும் பாத்திரங்களும் ஆதாரமான கதையும் ஒன்றே என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். ஸ்வெட்டரை கூட கலர் மாத்தாமல் ஈயடிச்சான் கொப்பியாக சுட்டதுமட்டுமல்லாமல் அது “I am Sam” இல்லை என்னுடைய சொந்தக்கதை என்று கூசாமல் பொய்சொல்லும் திரையுலகத்தோடு, சாதாரணமாக பிறவுன் றோட்டில் சாய்வுநாற்காலியில் இருந்து எழுதும் செங்கை ஆழியான் சில்லுப்படமுடியாது. முன்னுரை மட்டும் எழுதலாம். வாடைக்காற்று ஈழத்திலும் திரைப்படமானது. கையில் சிக்கினால் பார்க்கவேண்டும். ஸ்டில்கள் கதி கலக்குகிறது.

imagesபாரதிராஜா என்றவுடன் தான் இன்னொரு ஞாபகம். கீராவின் “கோபல்லபுரத்து மக்கள்” நாவலில் ஒரு காட்சி. ஒரு இளம்பெண் கணவனோடு கோபித்தபடி, கழுத்தில் நகைகளோடு ஒரு குளத்துப்பக்கம் நடந்துகொண்டிருக்கிறாள். அங்கே திருடன். அவளை நீருக்குள்ளேயே அமுக்கி கொலை செய்ய அவளோ அவன் கால் பெருவிரலை கடித்துவிட்டாள். இப்போது விரலை வெட்டினால் தான் காலை விடுவிக்கமுடியும். இதை வாசிக்க வாசிக்க, அட இது கூட ஒரு படத்தில் வந்ததே என்று யோசித்து, “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வசனமும் ஞாபகத்துக்கு வர, பாரதிராஜா சுட்டதோ அல்லது இன்ஸ்பிரேஷனோ அது தெரியாது. ஆனால் மனுஷன் நல்ல வாசகன் என்று புரிந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போனபோது செங்கை ஆழியானின் மருமகனோடு பேசிக்கொண்டிருந்தேன். “மாமா இப்ப ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்” என்றான். முடித்துவிட்டாரா தெரியவில்லை. கேட்கவேண்டும். அடுத்தமுறை ஊருக்கு போனால் “அவருக்கு முன்னால போய் நிண்டா வாய் டைப் அடிக்குமே” என்ற பயத்தை ஒதுக்கி விட்டு அவர் வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டும். சுஜாதாவை தான் சந்திக்கமுடியவில்லை. செங்கை ஆழியானை மிஸ் பண்ணிவிட கூடாது.

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .