Skip to main content

கடல்!

 

kadal5தூத்துக்குடியை அண்டிய கடற்கிராமம். ஒரு குட்டி ஒழுகல் குடிசையினுள்ளே நான்கு வயது சிறுவன் மழைக்குளிரில் நடுங்கிக்கொண்டு; பக்கத்தில் தாய் படுத்துக்கிடக்கிறாள். சாமம். ஒரு குடிகார மீனவன் கதைவை தட்டி, சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு அந்த அந்த பெண்ணை நெருங்கும்போதுதான் அவள் குளிரில் விறைத்து இறந்து போய்கிடப்பது தெரிகிறது. அவளை கிராமத்தில் ஒதுக்கப்பட்டவர்களை புதைக்கும் இடத்தில் ஒரு ஐஸ் பெட்டியில், அதுவும் கால்கள் அதற்குள் அடங்காததால் மண்வெட்டியால் உடைத்து உள்ளே மடக்கி மூடி புதைக்கிறார்கள். அந்த குடிகாரன் தான் சிறுவனின் தந்தை. அரவணைக்காமல் துரத்திவிடுகிறான். சிறுவன் அந்த குடிகாரனின் வீட்டு வாசலில், ஏக்கத்துடன் கதவுத்தூணுடன் சாய்ந்தபடி நிற்பான். வெறும் பொத்தல் பனியன் மட்டுமே சட்டை. அவன் முகம் ஆயிரம் கதை சொல்லும். குளோசப்பில் அந்த சிறுவனின் முகம். “அம்மா தானேடா நீ என்ர அப்பன் எண்டு சொன்னது” என்று அவன் கண்கள் கதை பேசும். என்ன சீனுடா இது. என்னையறியாமலேயே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

மணிரத்னம் யானையில்ல … குதிரை … இருபத்தைந்து வருடங்களில் ஒரே ஒரு படம் ராவணன் தான் சறுக்கியது. ஆனா சும்மா டக்குனு தல எழும்பீட்டுதில்ல! என்று சந்தோசம். கொஞ்சம் பெருமையும் கூட. ஒரு ஐந்து செக்கன் போயிருக்காது. யாரோ தோளில் தட்டியது போல தோன்றியது... திரும்பிப்பார்த்தால் அட நம்ம ஜெயமோகன்.

வாங்க வாத்தியாரே. என்ன சொல்லும்?
இந்த படத்துக்கு யாரு கதைன்னு தெரியுமாடே?
நீங்க தான் சாமி… டைட்டில்ஸ்ல பார்த்தோமே.
வசனம் யாருன்னு சொல்லணுமாக்கும்?
அதுவும் நீங்க தான்லே?
அதுக்கு பிறகு என்ன மண்ணுக்கடா ரஜனி டயலாக் எல்லாம் சொல்லுதே?
இல்ல சாமி… இது வரைக்கும் படம் நல்லா தானே போய் கிட்டிருக்கு .. உங்கடே வசனம் கூட பின்னுதே?
டேய் மக்கா .. இது வெறும் பத்து நிமிஷம் தான்லே ..முழுப்படத்தை நீ பாக்கணுமே.
என்ன பாஸ் சொல்லுதீக? அப்படின்னா படம் இப்பிடியே நல்லா போகாதா?
ஐ .. ஆசை தோசை அப்பளம் வடே!

கர்ணன், சத்தியவான் சாவித்திரி, இராவணன் என்று எல்லாமே இந்து புராண கதைகளாக இருக்குதே. ஒரு சேஞ்சுக்கு கிறிஸ்தவ மத கதையை எடுப்போமா? என்று மணிரத்னத்துக்கு அட்டமத்து சனி உச்சத்தில் இருக்கும்போது சுகாசினி அட்வைஸ் பண்ணியிருக்கலாம். கிறிஸ்தவ மத கதைக்கு எங்கே போறது? என்று மணிரத்னம் யோசிச்சிருக்கலாம். ஜெயமோகன் கிறிஸ்தவ கதைகள் ஐந்தாறு வைத்திருக்கிறார். நம்ம நாகர்கோவில் பக்கம் தான். பின்னுவார் என்று சுகாசினி சொல்லியிருக்கலாம். அவரு தான் இந்திய தத்துவ மரபியல் கோட்பாடுகளை எழுதுவாரே என்று மணி குழம்பினாலும், இல்ல பாஸ் எழுதுவார் நம்புங்க என்று யாராவது சொல்லியிருக்கலாம். வந்த சான்ஸை விடுவானேன் என்று ஜெயமோகனும் “கடலும் கடல் சார்ந்த பகுதியையும் சேர்த்தபடி கிறிஸ்தவ கதை ஒண்ணு நம்மகிட்ட இருக்கடே” என்று சொல்லியிருக்கலாம். விளைவு? சுஜாதா வைகுண்டத்தில் இரண்டுமுறை எண்ணெய் சட்டிக்குள் தற்கொலை முயற்சி செய்து எமர்ஜென்சி வார்டில் அட்மிட் ஆகி இருக்காப்ல.

சரி ஓட்டியது போதும், கதைக்கு வாடா! ஹியர் யூ கோ! படம் பார்க்க போகிறவர்கள் தயவு செய்து இந்த கதை சுருக்கத்தை வாசிக்கவும். அப்போது தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் இந்த கதையை படத்தில் கண்டுபிடித்திருப்பேன் என்று பார்க்கும்போது தான் புரியும்.

kadal_135823854211அரவிந்சாமி, ஒரு இளம் பாதிரியார் (இவர் கடவுளின் தூதராக்கும், அட ஏசுநாதர்லே) , theology கல்வி கற்பதற்காக ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அங்கே கற்பிக்கும் போதகர் அர்ஜூன். பைபிளை கற்று தேர்ந்தவர். அதன்படி நடக்கமாட்டார். ஜெபிக்கமாட்டார். அன்பை போதிக்கமாட்டார். ஆனால் பைபிளை அக்குவேறு ஆணிவேறாக சொல்லிக்கொடுப்பார். சாத்தான் வேதம் ஓதுகிறது பாஸ். இரவானால் எவளாவது ஒருத்தியுடன் படுப்பார். ஒருமுறை அதை அரவிந்சாமி கண்டுபிடித்து, முறைப்பாடு செய்து அர்ஜூனை அந்த தேவாலயத்தை விட்டே விரட்டுகிறார். போகும் போது அர்ஜூன்,  “நான் சாத்தான்லே … பாவிலே… நீயும் பாவம் செய்வாய் .. பாவியாய் அனுபவிப்பாய் .. அப்போ புரியும் சாத்தானின் சக்தி” என்று சாலன்ஜ் பண்ணிவிட்டு போவார்.  முதல் பத்து நிமிஷத்தில் கடவுள், சாத்தான் இருவருக்கும் இடையில் உள்ள போட்டி, ஸ்கெட்ச் போட்டாச்சு. இனி அடித்தாட பூமியும் மனிதர்களும் வேண்டும். அது தான் அந்த தூத்துக்குடி மீனவர் கிராமம்.

தூத்துக்குடியில் அந்த தாயை இழந்த சிறுவன் ஒரு எடுபட்ட பயலாக யாரின் அரவணைப்பும் இல்லாமல் வளர்கிறான். பேசிக்கலி பாவியாக வளர்கிறான். இப்போது பாவியை இரட்சிக்க கர்த்தர் வரவேண்டும். அரவிந்சாமி மோட்டர்சைக்கிளில் அந்த ஊருக்கு பாதிரியாராக வருகிறார். சிறுவனை கொஞ்சம் கொஞ்சமாக நல்வழிப்படுத்துகிறார். அவன் வளர்ந்து கார்த்திக்கின் மகனாகிறான்! கௌதம் பாஸ்.

kadal-posters (1)

ஒருமுறை கடற்கரையில் அடிபட்டு கிடக்கும் அர்ஜூனை அரவிந்சாமி காப்பாற்றுகிறார். காப்பாற்றும் அவரையே வீண் பழி போட்டு, ஊர் மக்களாலேயே அடிக்கவைத்து, இரத்தம் சிந்த சிறைக்கு அனுப்பும் சூழ்ச்சியை அர்ஜூன் செய்கிறார். அரவிந்சாமி மண்டை எல்லாம் இரத்தம். சிலுவையில் அறையவில்லை. ஜீப்பில் இழுத்து போகிறார்கள்.

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.

அப்படி கவ்விய டைமில் தான் கௌதம் அர்ஜூனிடம் சேர்ந்துவிடுகிறான். நல்லவனாய் இருந்து என்ன பயன்? எவனும் மதிக்க மாட்டேங்கிறான். ஏன் எதற்கு என்று கேள்வி இல்லாமலேயே அடிக்கிறான். இந்த நல்லவன் பிஸ்னெஸ் வேண்டாம் என்று சொல்கிறான். கடவுள் எம்மோடு இல்லாத நேரங்களில் சாத்தான் எம்மை ஆக்கிரமித்துவிடுவான் இல்லையா? ஆனாலும் கடவுள் அப்போது இன்னொரு தூதுவனை எமக்கு அனுப்புவார். கௌதமுக்கு அது துளசி நாயர் வடிவில் வந்து மிரட்டியது! அந்த பெண் இவன் பாவங்களை ஜஸ்ட் லைக் தாட்டாக மன்னிக்கிறாள். ஒரு மனிதனை கொல்லும்போது வெளியேறும் இரத்தக்கறையை விட  ஒரு உயிர் பிறக்கும்போது வெளியேறும் இரத்தக்கறை ஏற்படுத்தும் பரவசம் அளப்பெரியது என்று உணர்த்துகிறாள். அழித்தலை விட ஆக்குவது கொடுக்கும் ஆத்மார்த்தத்தை புரியவைக்கிறாள். கடல் படத்தில் சமந்தா நடிக்காததால் எங்களுக்கு எவ்வளவு இழப்பு என்பதையும் தெரியவைத்து நோகடிக்கிறாள்! சக்கை பாஸ். வெறும் சக்கை.

அப்புறம் என்ன? இறுதியில் அரவிந்சாமி திரும்புவதும், அர்ஜூனின் அநியாயங்கள் தொடர்வதும், கௌதம் மீண்டும் அறவழிக்கு திரும்புவதும் இறுதிக்காட்சியில் கடவுளும், மனிதனும் சேர்ந்து சாத்தானை தோற்கடிப்பதுமாக படம் முடிகிறது.

“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்”. ஐ… வன் லைனர் கண்டுபிடிச்சிட்டோம்ல மக்கா. எவ்ளோ பெரிய மாத்திரை .. அது ஏன் மாத்திரை .. ஏமாத்திற! முடியல பாஸ்.

Life of Pi படம் கூட, கடவுள், சாத்தான் மனிதன் சார்ந்த கதை தான். இந்த முக்கோண தளத்தில் அடிச்சு சாத்தியிருக்கலாம். முதல் இருபத்தைந்து ஓவரும் சச்சினும் கங்குலியும் மின்னினார்கள். துளசி ஒரு சீனில் ஐங்ங்ங்.. என்று ஓடிப்போய் கொன்வென்ட் சிஸ்டரை கட்டிப்பிடித்து அழுவார். ஜெர்க் ஆயிட்டோம் பாஸ். அப்புறம் படம் அவ்வளவு தான். அதுவும் இரண்டாம் பாதி .. படத்தின் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள், அந்த காலத்தில் மௌனராகம், நாயகன், தளபதி, ரோஜா, இருவர் .. ஏன் கொஞ்ச காலத்துக்கு முதல் கூட கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்றெல்லாம் படங்கள் வந்தது. டைம் இருக்கும் சமயங்களில் அந்த டிவிடிகளை போட்டு பாருங்கள். ஆனால் மறந்தும் அந்த படங்களின் இயக்குனரின் மனைவியோடு எந்த இலக்கிய தொடர்பும் வைத்திருக்காதீர்கள். வைகுண்டத்தில் சுஜாதா என்பவர் வசிக்கிறார். அவர் ஈமெயில் கண்டுபிடித்து தொடர்பு கொண்டால் இன்னமும் சேமம்.

Rajiv_Menonராஜீவ் மேனன். ஏற்கனவே பம்பாய், குரு என்று இணைந்த கூட்டணி. அதுவும் அந்த சிறுவன் கௌதம் ஆவதற்கு முதல் வருகின்ற தூத்துக்குடி காட்சிகள். கண்ணுக்கு அவ்வளவு இதம். வறுமை என்றாலும் அந்த வாழ்க்கை கொடுக்கும் ஒருவித அமைதியும் வெள்ளந்தியும் வெகு இயல்பு. அதை வெறும் கமரா வித்தை மூலமே கொண்டுவந்திருக்கும் ஜாம்பவான். ஆனால் அந்த கிளைமாக்ஸ் சிஜி கடல் காட்சி. செம மொக்கை. இயற்கையை இயல்பா ஆர்ப்பாட்டம் இல்லாமலேயே எடுத்திருக்கலாம் பாஸ். கடலுக்கு கீழால கப்பல் போன பீலிங் இருந்துது. ஒட்டவேயில்லை. தலைவரே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்கு பிறகு காய்ஞ்சு போய் கிடக்கிறோம். அடுத்த படத்த எடுங்க முதலில.

ஜெயமோகன் கதை வசனம் இரண்டுமே. வசனம் முதற்பாதி அட போட வைத்தது. “எங்கட”, “நிப்பாட்டுங்க” என்ற மலையாள, ஈழத்தமிழ் நெடி கலந்த வட்டாரவழக்கு. அதுவும் இடம் விசாரிக்க வந்த பாதிரியாருக்கு வலுக்கட்டாயமாக மீன் விற்கும் காட்சி. காஸட் ரேடியோவில் ரெக்கோர்ட் பண்ணும் ஊர்க்காரரின் வசனங்கள். ஜெயமோகன் சிறுகதைகளில் கண்டு ரசித்த வசனங்கள். சுப்பேர்ப். ஆனால் துளசி வந்தவுடன் இவரும் ஜெர்க் ஆகிட்டாரு. எங்கே ரசிகர்களுக்கு இது கடவுள்-சாத்தான் கதை என்று புரியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் கிளிப்பிள்ளை போல இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை, நான் சாத்தான்லே, நீ இயேசுலே,  நான் பாவிலே, நீ தேவதைலே, நான் மகுடிலே, நீ பாம்புடே என்று சொல்லி சொல்லி வெறுப்பேத்துகிறார். ரசிகர்களை என்ன அவ்வளவு மொக்கை பசங்கள் என்று நினைச்சீங்களா பாஸ்? அன்பே சிவம் தமிழ் படம் தான், எடுத்த் பாருலே!

mani-ratnam-s-kadal-location-stills-48d1984bஏ ஆர் ரகுமான். மிஸ்டர் கர்மயோகி. தளசியை பார்த்தும் கூட பீல் பண்ணி அப்பிடி பிஜிம் குடுத்து இருக்கிறார் என்றால், பச்ச் … அது தான் உண்மையிலேயே “கடமை கண்ணியம் கட்டுப்பாடு”. ராஜீவ் மேனனும் ரகுமானும் சேர்ந்து அதகளம் ஆடியிருக்கிறார்கள். சித்திரை நிலா டியூன் ஆங்காங்கே கிட்டாரில் கிளாசிக்காக பயன்படுத்தியிருப்பார்.  கிளைமக்ஸில் “நீயில்லையேல்” என்று ஹரிஷரன் அமைதியால் சலனமாக கிழித்துக்கொண்டு பாடும் இடம் வாவ். அடியே, ஏலே கீச்சான் மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். மூங்கில் தோட்டத்தில் சமந்தா நடிச்சிருந்தால் கமறியிருக்கும். என்ன செய்ய, அந்த பொண்ணுக்கு தான் கடல் தண்ணி ஒத்துக்கலையாமே?

இப்ப நம்ம தல. என்னுடைய கொல்லைப்புறத்து காதலி. எல்லோரையும் விட அவரை நான் ஒரு படி அதிகமாகவே காதலிக்கிறேன் என்று எப்போதுமே நினைத்தவன். ஒருமுறை சக்தி டிவியின் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” நிகழ்ச்சி செய்யும்போது, ராஜேஷ்கண்ணா தொலைபேசியில் அழைத்து “எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டான். அப்போது நான் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம். “மணிரத்தினம் போல ஒரு இயக்குனராக வர ஆசைப்படுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். நிகழ்ச்சியை லைவ்வாக கேட்ட அப்பா ஜெர்க்காகிவிட்டார். அவ்வளவு பிடிக்கும் மணிரத்தினத்தை. ரோஜாவை தனியாகவே கொல்லைப்புறத்து காதலியாக எழுதினேன். உயிரே ரிலீஸ் சந்திரனில். டப்பிங் படம். கிளாஸ் கட் பண்ணி முதல் நாள் ஷோ. இருவர் இஞ்ச் இஞ்சாக பிடிக்கும்.

mani-ratnams-kadal-first-still-mani-ratnam-29-12-12

ஒரு கதையை எப்படி தொய்வில்லாமல் இறுதிவரை ஸ்டைலிஷாக நகர்த்துவது என்று இந்த பயலுகளுக்கு சொல்லிக்குடுத்த ஆளு நீங்க. மௌனராகம் கிளைமக்ஸில் ரேவதி பேசும் காட்சி போதும். “என் நண்பனை கொண்ணுட்டியேடா” என்று ரஜனி ஆத்திரத்தோடு அழுவதாக இருக்கட்டும். அந்த பாலத்தில் அரவிந்சாமி உருண்டுவரும்போது மதுபாலா ஏங்கிப்போய் பார்ப்பார். “உன் கண்ணில் நீர் வழிந்தால்” பிஜிஎம் போகும். அலைபாயுதே கிளைமக்ஸ். கன்னத்தில் முத்தமிட்டாலில் இராமனாதபுரம் காட்சிகள். நந்திதாதாஸிடம் கேள்வி கேட்கும் அமுதா. எங்க போயிற்று தலைவரே இதெல்லாம்? அழுத்தமே இல்லாம காட்சிகள். கதையின் ஓட்டத்துக்கு ஒட்டுதே இல்லியே? சாத்தான் இயேசு என்று ஒருமுறை சொன்னா போதாதா? திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு.. படம் எடிட் பண்ணிய பிறகு பார்க்கவே இல்லையா? போங்காட்டம் சாரே.

“மச்சான் ட்ரைலர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கு யோசிச்சிட்டு போ” என்றான் கஜன். “டேய் கன்னத்தில் முத்தமிட்டால் இராமநாதபுரம் காட்சிகளை பாரு. அந்த லொகேஷனில புல் அண்ட் புல் லவ் ஸ்டோரி எடுத்தா பின்னும்” என்றேன். “இல்ல மச்சி, அர்ஜூன் துவக்கு சூடு எல்லாம் பண்றாப்ல. எங்கேயோ இடிக்குது” என்றான். “அது ஆயுத எழுத்து மச்சி. அவ்வளவு ஸ்டைலிஷாக இருக்க போகுது. துறைமுக மீனவர் குப்ப வாழ்க்கை. கடத்தல். அதற்குள் காதல். நாயகன் + ஆயுத் எழுத்து + கன்னத்தில் முத்தமிட்டால். மின்னும் மச்சி” என்றேன். “என்னவோ போடா, மணிரத்னம் இப்போ முன்ன மாதிரி இல்லைடா, அதுவும் சுஜாதா போனா பிறகு ..” என்று அவநம்பிக்கையாகவே சொன்னான். “டேய் மணிரத்தினம் என்ற பெயர் நம்மோடையே கூடி வாழ்ந்து வளர்ந்து வந்த ஆளுமை மச்சி. சும்மா தப்பா பேசாதே” என்று சொல்லிவிட்டு சிட்டிக்கு போனால் அங்கே எதோ கிளாசிபிகேஷன் சிக்கல் என்று சொன்னார்கள். தளராமல் மொனாஷுக்கு கேதாவையும் வீணாவையும் இழுத்துக்கொண்டு போய் படத்தை பார்த்து .. இதெல்லாம் யாருக்காக?

Gautham-Karthik-and-Thulasi-Nair-Kadal-First-Look

பச்ச் போங்க பாஸ் .. ஏமாத்திட்டீங்க .. இந்த கஜன் பயலுக்கு இப்ப நான் என்னெண்டு சொல்லுவன்?

&&&&&&&

விஸ்வரூபம் ரோஜா
மணிரத்னம்
Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!
மணிரத்னம் எழுதிய கவிதை!

Comments

  1. மொக்கை என்று ஒரு வரியில் சொல்லியிருக்கலாம்.

    >ஜெயமோகன் கதை வசனம் இரண்டுமே. வசனம் முதற்பாதி அட போட வைத்தது. “எங்கட”, “நிப்பாட்டுங்க” என்ற மலையாள, ஈழத்தமிழ் நெடி

    நாகர்கோவில் தமிழ் கொஞ்சம் யாழ்ப்பாணத் தமிழ் மாதிரி இருக்கும். நிறையத் தொடர்புகள் இருந்திருக்கும். இதை நிறைய ஆராய வேண்டும். ஒரு காலத்தில் கப்பல் கப்பலாக வந்து இறங்கியிருப்பார்கள் ... மன்னிக்கவும் இறங்கியிருப்போம், நாகர் கோயில் பக்கத்திலிருந்து.யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை இதையெல்லாம் கண்டு கொள்ளும் என்று நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நாகர்கோவில், கேரள தாக்கும் எங்கட வாழ்க்கைல நிறையவே இருக்கு. தேசவழமை, தாய் வழி முதுசம், புட்டு, தேங்காய், மொழி வழக்கு என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டும். யாழ்ப்பாண வைபவ மாலை கொஞ்சம் இதை அலசுகிறது. இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. அரைவாசியில் அலுப்பு தட்டிவிட்டது!

      Delete
  2. அத்தோடு ..
    http://veeduthirumbal.blogspot.com/2013/02/first-on-net.html

    ReplyDelete
  3. From the trailer I felt that the film lacks nativity and full of fantasy (I have felt the same with his previous films too).
    Watch 'Neerparavai' anna - the director has narrated the life in a fishery village close to reality (But you rarely liked my suggestions).

    ReplyDelete
    Replies
    1. Thanks Dhanya.

      To make it clear, I like fantasy makings. He was awesome in Thiruda Thiruda, Agni Natchaththiram and Aayutha Eluththu, films one might call fantasy. Its only Raavan and now Kadal I didn't like. Still Kadal in many aspects way better movie than Raavan.

      Neerparavai got lot of pathos and sorrow they say. Keerthi said he cried in the end :) .. I am not prepared to spend 3 hours to watch a sorrow movie especially I watch five or six movies a year. Anyway I will try to give it a shot!
      //But you rarely liked my suggestions//
      which ones? I always liked your book suggestions :)

      Delete
    2. இது அநியாயம், நீங்கள் மட்டும் குமரனை flight இல சாகப்பண்ணி எங்களை அழ வைக்கலாம்.சிங்கம் நீங்கள், சோக சீனுக்கேல்லாம் பயந்துகொண்டு. அது கடைசியில மட்டும் தான் அப்பிடி வருகுது. மற்றப்படி சிரிக்க நிறைய சீன் இருக்கு. உங்கட அழுகுணி friend சொல்ல மறந்திருப்பார்.

      Delete
    3. fantasy தப்பெண்டு சொல்லேல்ல. ஒரு அளவுக்கு மேல திகட்டீடும்.

      Delete
    4. ஆகா .. செண்டிமெண்டா அடிச்ச்சிட்டாங்களே .. பார்த்திடுவோம் மேடம் ... இதுக்கு பிறகும் நான் பார்க்காட்டி டைப்படிக்கிற கைக்கு போஜனம் கிடைக்காது. பாட்டுகளும் அந்த படத்தில நல்லா தான் இருந்துது.

      //fantasy தப்பெண்டு சொல்லேல்ல. ஒரு அளவுக்கு மேல திகட்டீடும்.//
      இல்லை எண்டு சொல்லேல்ல ... நான் நினைக்கிறன் ஆளாளுக்கு அளவிடை மாறும்போல .. end of the day, a good movie is all about how you feel when watching it. கடலை பொறுத்தவரைல அது ரெண்டு பேருக்கும் சேம் ப்ளட் போல.

      Delete
    5. தமிழ் சினிமா இப்ப வரைக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு விஷயமாத்தான் இருக்கு. நிறைய புத்தகம் படிக்கிறவர்களுக்கு உள்ள மரியாதையை நிறைய சினிமா பார்பவர்களுக்கு இல்லை.

      ஆனா சினிமா மிகச்சிறந்த ஆவணப்பெட்டகம். நூறு வருஷத்துக்கு பிறகு வரும் தலைமுறைக்கு நாங்கள் இப்ப எப்பிடி இருந்தம், எங்கள் பேச்சு வழக்கு, உடை, ஊர், நிலம் என எல்லாத்தையும் ஒளியும் ஒலியுமா படம் பிடிக்கிற வாய்ப்பு உள்ள ஊடகம். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குனர்கள் அதை தேவையில்லாம fantasy சேர்த்து திரிபு படுத்த தேவையில்லை என்பது தான் நான் சொல்ல வருவது.

      Delete
    6. Yes and No :) .. படைப்பாளி தன் சுய திருப்திக்கும் + பணத்துக்குமாகவே படம் எடுக்கிறான். அந்த திருப்தி சிலநேரங்களில் ஆவணப்படங்களில் கிடைக்கலாம். சில சமயம் fantasy இல் கிடைக்கலாம். நூறு வருஷம் கழிச்சு முதல் மரியாதை ஒரு சிறந்த ஆவணப்படைப்பாக காட்டப்பட்டால் நிச்சயம் ரோஜா சிறந்த கலைப்படைப்பாகவே பார்க்கப்படும். அதத அந்த சட்டத்தில பார்க்கவேண்டியது தான்.

      அதுவும் தன்யா போன்ற இலக்கிய வாசகர்கள் சினிமாவில அவ்வளவு நுணுக்கமாக ஆவணத்தை எதிர்பார்க்காம நல்ல நூல்களை ப்ரொமோட் பண்ணுறது நல்லம்! அதே போல ஆரோ வியாழனானால் refresh பண்ணி படலையை பார்ப்பன் எண்டு ஸ்டேட்மெண்ட் விட்டினம் .. அதுக்கு பிறகு வியாழக்கிழமை படலைப்பக்கமே தலைவச்சு படுக்கிறதில்லை. அதையும் கவனத்தில எடுத்தா இன்னும் நல்லம்!!

      Delete
    7. தலாணியில தலை வச்சு படுக்கவே நேரம் இல்ல. thesis thesis . வாசிக்கிறனான், comment தான் போடுறேல்லை

      Delete
  4. "இப்போ முன்ன மாதிரி இல்லைடா, அதுவும் சுஜாதா போனா பிறகு ..."... there you have it! He must have been riding on the master writer's back. Evident from Raavan and now, Kadal. TIME TO RESTRICT YOURSELF WITH PRODUCTION(WITHOUT INTERVENING IN THE STORY) MR.MANI

    ReplyDelete
    Replies
    1. "He must have been riding on the master writer's back" -- Though I made that statement with the flow, I am not sure that was right. Sujatha joined hand with Mani only from Roja and Mani made classics like Nayakan, Mounaragam, Anjali, agni natchaththiram, keethaanjali and Thalapathy even before. So not sure what happened to him. May be he needs to get back to a normal city life story. But anyway he knows it better than us I guess.

      Delete
  5. அண்ணா, விமர்சனத்தை ஆழ்ந்து அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. உங்க மனசில இருக்கிற வலி எழுத்தில வழியுது.. படத்தின் (Trailer + ஒற்றை ரூட்டு பேர்வழி ஜெயமோகன்) போன்ற விஷயங்களால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை என்பதே நிஜம்.. இன்றைக்கு படம் பார்த்தால் மனது வலிக்கும் என்பதால் டேவிட்டுக்கு போனோம்.. இந்த படத்தை பார்க்கும் நாள் வரும்வரை, விமர்சனங்களை வாசித்து மனதை தயார்படுத்தி கொள்ளவேண்டியதுதான்..

    ReplyDelete
    Replies
    1. படம் வரும்வரைக்கும் தான் எதிர்பார்ப்பு .. பார்க்க தொடங்கினா பிறகு அதுவும் ஒரு படம் தானே பாஸ். என்னென்றாலும் டேவிட் என்ற படம் வர்றதே போஸ்டர் பார்த்தா பிறகு தான் தெரிந்துது. அது பார்க்க சான்சே இல்லை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .