Skip to main content

ஆச்சி பயணம் போகிறாள்!

3.4

ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள்.  பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,
ஆச்சி பயணம் போகிறாள்.
பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.
“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா? நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.
“மாத்தையா மொனவத பொண்ட”
“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”
இது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.

பார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய்,  பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை.  மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.

இதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா? என்று யாராவது கேட்டால், பதிலுக்கு புதுமைப்பித்தனை துணைக்கு அழைக்கவேண்டும்.  “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார். “ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல!”
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது. “இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி “பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு” என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.
“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்ப எனக்கு இல்லையா?”
புதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு!

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...