Skip to main content

N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

 

z_p-24-Facelift-02
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது. “யாராக இருக்கும்?” என்று நினைத்துக்கொண்டே கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால்,

வெளியே நான்கைந்து பொலிஸ்காரர்கள்.

செல்வவடிவேலுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. விடிய வெள்ளன ஏன் வந்திருக்கிறாங்கள்? சும்மா செக்அப் ஆக இருக்குமோ? வீட்டில வேறு இந்நேரம் யாருமே இல்லையே. சிங்களம் வேறு அவனுக்கு டைப் அடிக்கும். மீண்டும் கதவு ஓட்டைகுள்ளால் பார்க்கப்போனவன் தயங்கினான். பொறு.  வெளிச்சம் மாறுவதை வைத்து உள்ளே ஆள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். இப்போது என்ன செய்வது? திறக்காமேலேயே இருந்தால் போய்விடுவார்களா? சொல்ல முடியாது. எதுக்கு சனிக்கிழமை காலமை வந்திருக்கிறாங்கள்? திறப்பதா விடுவதா? செல்வவடிவேலுக்கு ஒரே நேரத்தில் எல்லா யோசனையும் வந்தது.

அடையாள அட்டை பெர்சுக்குள் இருக்கிறது. கம்பஸ் ஐஸியும் இருக்கிறது. பொலிஸ் ரிப்போர்ட் கம்பஸ் பாக்கில் இருக்கிறது. வீட்டு ஒனர் நம்பரை போன் புக்கில் பிடிக்கலாம். தேவை என்றால் வேலாயுதம் அங்கிளை கூப்பிடலாம். ஆறு பேர் ரூமில், சுரேஷ், மட்டக்குளிக்கு அன்ரி வீட்டுக்கு போய்விட்டான். பிரதீபனும் மயூரனும் ஸீமா கிளாசுக்கு; ரமா கம்பஸ் லைப்ரரி. சொல்லிவிடலாம். எல்லோரும் யாழ்ப்பாணம் டவுன் தான். விளக்கம் கேட்டால் கொடுக்கலாம். இந்த ரெஜினோல்ட் தான். பளைக்காரன். எங்கே போயிருப்பான்? கேட்டா என்னத்த சொல்லுறது? ரெஜினோல்ட் ரூமில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அவன் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்ததும் ஞாபகம் இல்லை. ஆளே பார்க்கும்போது சரியில்லை. விசாரிக்காமல் கம்பஸ் என்று ரூம் கொடுத்தது பிழை. அவனை தேடி தான் வந்திருக்கலாம். வேறு வகையில் இங்கே தேடிவர வேண்டிய நிலைமை இன்னமும் வரவில்லை. கேட்டால் என்ன சொல்லுவது? தெரியாது சேர் என்று சொல்லலாம். கேட்கமாட்டாங்கள். ரெஜினோல்ட்; சமாளிக்கவேண்டும். சமாளிக்கலாமா. தனியே இருக்கும்போது மறியலுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டால் எடுத்துவிட ஆள் இல்லை. கதை சரி. கம்பஸ் என்ற கவர் உள்ளே போன பிறகு வேலை செய்யாது.

தட் தட் தட் என்று மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. திறந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஓடலாம். பின் ஜன்னலால் கக்கூஸ் பைப்பில் பிடித்தால் ஒவ்வொரு ஜொய்ன்ட் பிடித்து இறங்கலாம். நான்கு மாடிகள் தான். ஆனால் பக்கத்து பிளாட்காரன் பார்த்தால் கள்ளன் என்று கத்திவிடுவான். பிறகு சங்கு தான். ஓடுவது அடி முட்டாள்தனம். பேசாமல் திறக்கலாம். அது தான் பாதுகாப்பு. செல்வவடிவேல் வீட்டை மறுபடி மேலோட்டமாக பார்த்தான். குப்பை. படு குப்பை. அவசரமாக தன அறைக்குள் போய், கொம்பியூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு, கட்டிலில் கிடந்த பெண்டரை எடுத்து அணிந்து, காற்சட்டையில் இருந்து சாரத்துக்கு மாறி, கம்பஸ் டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு மீண்டும் முன் கதவுக்கு வந்தான். மெதுவாக திறந்தான்.

விஸ்வவித்தியாலய கட்டியோ நே?

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜயரத்ன மொட்டைத்தலையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே முன்னே வந்தார்.

“ஒவ் சேர் .. மொரட்டுவ யூனிவர்சிட்டி,  காட்டத்,கா … ஹூ … ஹூம் யூ வோண்டு டோக்டு?”

“சிங்கள தன்னத்த .. சிங்கள தெரியாது?”

“டிக்க டிக்க சேர்”

“நம மொகத்த? பேரு … பேரு நேம்?”

“சரவணபவானந்தராஜா செல்வவடிவேல் சேர்”

“செல்வா … பாதர்ஸ் நேம்?”

“தட் இஸ் மை நேம் சேர் .. சரவணபவானந்தராஜா இஸ் மை..”

ஜெயரத்னா சட்டைசெய்யாமல் முன் ஹோலை சுற்றும் முற்றும் பார்த்தார். நேற்று இரவு நடந்த பார்ட்டியும் கூத்தும் ரூம் காட்சியின் எச்சங்கள் அப்படியே வெறியில் கிடந்தன.

ஜிடிவியில் “செக்ஸ் அண்ட் த சிட்டி” போய்க்கொண்டிருந்தது. மேலே சீலிங் பாஃன் மூன்றாம் இலக்கத்தில் பேய்த்தனமாக டர் டர் என்று சுற்றிக்கொண்டிருந்தது. நேர் கீழே சாரம் விரித்து தாள் ஆட்டம். ஆறுபேர் ஆட்டம். “கேள்வி; உதவி; உதவி எண்டா மேலே; நூறு; விட்டாச்சு; பத்து; இருவது; டேய் நீ கேளு;  இருவதுக்கு விட்டாச்சு;” எல்லாமே கேட்டன. கொத்துரொட்டியை இடக்கையால் அள்ளி வாயில் போட்டபடியே சுரேஷ் கலாவறை வீத்தை வீசி அடித்தான்.  ஏழாங்கண், ஏசு, ஆடித்தன் கியூ எல்லாம் விழ, கடைசிக்கை பார்த்து கம்மாஸ் என்று எல்லாத்தாளையும் சடக்கென்று எறிந்தான் மயூரன். எறிந்தவன் பியர் போத்திலை எடுத்து ஒரே மண்டில் குடித்துவிட்டு நங்கென்று நிலத்தில் வைக்க, பியர் நிலம் முழுதும் சிந்திச்சிதறியது. கம்மாஸ் லேட் என்று பிரதீபன் சொல்ல,   ஏ ப்ளொக்கில் இருந்து விளையாட வந்த தயாளனும் ஆரூரனும் இல்லை என்று சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். ரமா எழுந்து பாத்ரூமுக்கு போனான்.

நேற்றிரவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது ஜெயரத்னவுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

“நைட் பார்ட்டி த?”

“நோ … யெஸ் சேர் வந்து வெரி ஸ்மோல் பார்ட்டி”

சொல்லிக்கொண்டே செல்வவடிவேலும் தரையை பார்த்தான்.

“லிட்டில் பிட் பியர் அண்ட் கார்ட்ஸ் சேர், தட்ஸ் ஒல் .. அண்ட் சந்தி கடே கொத்துரொட்டி ஒன்லி”

“ஊது பார்ப்பம்”

“ஐ டோன்ட் ட்ரின்க் சேர்”

ஊதிக்காட்டினான். சிகரட் கப்பென்று நாற்றமடித்தது.

“யார் யாரு விளையாடினீங்க?”

“மயூரன், சுரேஷ் … ரமா.. பிரதீபன் .. ரெஜினோல்ட் அண்ட் ஐ .. மீ .. மைசெல்ப் சேர்”

“எல்லோரும் எங்க?”

சொன்னான்.

“ரெஜினோல்ட்… ?”

“ஹீ இஸ் புறம் கிளிநொச்சி சேர் .. யூ நோ பளை … வில்லேஜ்?”

“எங்க போயிட்டான்? பொலிஸ் ரிப்போர்ட் எடு”

கம்பஸ் பையில் இருந்து எடுத்துக்காட்டினான். எட்டாக மடிக்கப்பட்டு ஏற்கனவே துண்டு துண்டாக தொங்கிக்கொண்டிருந்தது. மங்கலாக போட்டோ கொப்பியில் பெயர், ஊர் விவரங்கள் இருந்தன.

“ரெஜினோல்ட் பெயர் இல்ல?”

“என்னட்ட அவனிண்ட ரிப்போர்ட் கொப்பி இல்ல சேர்”

ஜயரத்ன ஏனைய போலீஸ்காரர்களை திரும்பிப்பார்க்க அவர்களும் உள்ளே நுழைந்தார்கள். படுக்கையறைகள், சமையலறை என்று எல்லா இடமும் தேடத்தொடங்கினார்கள். செல்வவடிவேலுக்கு இரண்டு கால்களும் இலேசாக நடுங்க ஆரம்பித்தன.

“சேர் எனி ப்ரோப்ளம்? வீ ஆர் கம்பஸ் ஸ்டுடென்ட்ஸ் சேர் .. பாஃதர் இஸ் எ டீச்சர் .. இங்கிலீஷ்”

“உன்னோட ரூம் எது?”

காட்டினான். நுழையும்போது சிகரட் நாற்றம் மீண்டும் குப்பென்று. மூலையில் புழுதியும் வீபூதியும் படர்ந்த சாமித்தட்டு. குட்டி புத்தர் சிலை ஒன்று நடுவில் இருந்தது. முன்னாலே காய்ந்த அர்ச்சனை இலைகள், சீப்பு, பவுடர் டின் எல்லாமே பரவி கிடந்தன. தட்டுக்கு கீழே ஒரு கயிறு கட்டப்பட்டு அழுக்கு உடுப்புகள், சாரம், பெண்டர் தொங்கின. இழுத்து மூடப்பட்ட யன்னல் கரையோரம் ஒற்றை கட்டில். அதின் நடுவில் மண்ணிறம் மண்டிய ஈரத்துவாய் ஒன்று காயப்போட்டு கிடந்தது. மற்றப்பக்கம் சூட்கேசுகள், இன்னொரு உடுப்பு ராக், பாய், புத்தகங்கள், சிடிக்கள் எல்லாமே இரைந்து கிடந்தன. இந்தப்பக்கம் இருநூறு ரூபாய் மொரட்டுவ சப்பு பலகையில் செய்த மேசையில் டெஸ்க்டொப் கணனி. கீபோர்டில் கைவைக்க் படீர் என்று ஏர்த் கரண்ட் அடித்தது.

“உன் கொம்பியூட்டரா?”

“ஓம் சேர்”

ஜயரத்ன கொம்பியூட்டரை ஒன் பண்ணினார். லாச்சிகளை இழுத்துப்போட்டு சிடிகளை ஒவ்வொன்றாக செக் பண்ணினார். “இளையராஜா ஹிட்ஸ்”, “சிங்கள பைலா”, “சாமி”, “திரிஷா குளியல்” என்று பலவிதமாக பேனாக்களால் கிறுக்கி எழுதப்பட்ட சிடிக்கள். கொப்பி நோட்ஸ்களை படக் படக்கென்று தட்டினார். கொம்பியூட்டர் பாஸ்வேர்ட் கேட்டது.

“பாஸ்வேர்ட் என்ன?”

செல்வவடிவேல் டைப் பண்ண போனான்.

“சொல்லு”

“வந்து …தீபன் வன் டூ  த்ரீ போர்”

“தீபன் .. டபிள் ஈ … பி சேர் .. பி போர் பிஸ்கட்”

ஜெயரத்னா அவனை ஒரு மாதிரியாக திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கணனித்திரையை பார்த்தார். சிம்ரன் இடுப்பை காட்டிக்கொன்று நின்றாள். வெறுமனே இரண்டு மூன்று போல்டர்களை கிளிக் பண்ணி பார்த்தார். கம்பஸ் படங்கள், வோர்ட் டோக்கியூமன்ட் என்று குப்பையாக கிடந்தது. வீடியோக்களை பிளே பண்ணினால், மிஷன் இம்பொசிபிள், காமசூத்ரா போன்ற படங்கள் வந்தன. முறைத்தபடியே எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார்.

காஸ் குக்கரின் மேல் இரண்டு சட்டிகள். ஒன்றில் இறைச்சிக்கறி மிச்சம் ஏதுமில்லாமல் பாண் துண்டால் வழிக்கப்பட்டு இருக்கவேண்டும். சோற்றுப்பானை திறந்துபார்த்தால் கப்பென்று நாறியது. டின்களை திருப்பும்போது, மூஞ்சூறு இரண்டு எங்கேயோ ஓடி மறைந்தன. சீனிப்போத்தல் முழுதும் கருப்பெரும்பு மொய்த்திருந்தது.

“வட் இஸ் திஸ்?”

“சொறி சேர் .. வெரி பிசி .. செமிஸ்டர் எக்ஸாம்ஸ் .. தட்ஸ் வை..”

ஜெயரத்ன அப்படியே குசினிக்கும் பாத்ரூமுக்குமிடையில் இருக்கும் குட்டி விறாந்தைக்குள் நுழைந்தார். கட்டிடத்தின் குப்பை போடும் மூடியை திறந்து உள்ளே தலையை உள்ளே விடப்போனவர், அழுகிய கெட்ட நாற்றம் மூக்கில் நேரே அடித்ததால் சடக்கென்று தலையை வெளியே எடுத்து ஓட்டையை மூடினார். பாத்ரூம் கதவை திறந்தார். குப்பென்று நாறியது. கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்தியபடியே கேட்டார்.

“சூ போனா தண்ணி ஊத்திறதில்ல?”

“சொறி சேர் … ஐ ஆம் ஜாப்பனே டவுன் .. அதர் கைஸ் நாட் எடியுகேட்டட் சேர் … ”

ஜெயரத்னா மீண்டும் முன்ஹோலுக்குள் திரும்பினார். ஏனைய பொலிசாரும் தேடுதலை முடித்துவிட்டு சிகரட் பத்திக்கொண்டிருந்தனர். ஜெயரத்ன யாருக்கோ கோல் பண்ணி திட்டினார்.

“மேஹிங் மொக்குத்நா நே … அற கொல்லோயிங்..”

சிங்களத்தில் கெட்டவார்த்தையால் திட்டினார்.

“வட் ஹப்பின்ட் சேர்? சம் வன் கிவ் எனி ரோங் இன்போர்மேஷன்?”

ஜெயரத்ன முறைத்துப்பார்த்துக்கொண்டே சொன்னார்.

“ஒல் டுடே கம் டு கல்கிஸை ஸ்டேஷன் ஹரிட? யுவர் ஓனர் ஒல்ஸோ.. யூ ஷுட் கெட் நியூ ரிப்போர்ட்”

“ஓகே சேர் … பெடியள் வந்தோன பொலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு வாறன்”

ஜெயரத்ன மீண்டும் ஒருமுறை வீட்டை நோட்டம் விட்டுவிட்டு வெளியேற ஏனைய பொலிஸ்காரர்களும் தொடர்ந்தார்கள். ஓடையால் அவர்கள் சென்று படிக்கட்டுகளில் இறங்கும்மட்டும் காத்திருந்த செல்வவடிவேல், வாசல்கதவை மீண்டும் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் விரைந்தான்.

ஒரு வாளி தண்ணீரை பைப்பில் பிடித்து பவுலை ஊற்றி கழுவிவிட்டு, உடுப்புவாளியில் இருந்த உடுப்புகளை அவசரவசரமாக எடுத்து கீழே போட்டான். அடியில் பொலித்தீன் பையில் ஏதோ சுற்றப்பட்டு இருந்தது. அதை கவனமாக வெளியே எடுத்து துவாயால் மெதுவாக துடைத்தான். பையின் நுனியில் இருந்த கைப்பிடியை ஒரு இளக்கயிற்று துண்டால் கட்டினான். குப்பை போடும் மூடியை திறந்து உள்ளே கையைவிட்டு தேடி ஒரு ஆணியை கண்டுபிடித்து, அந்த பொலித்தீன் பையை நுழைத்து ஆணியில் கொழுவி பலம் பார்த்து, ஓகே என்றதும் தொங்கவிட்டான். மீண்டும் ஒருமுறை பையை இழுத்துப்பார்த்து, விழாது என்பதை உறுதிப்படுத்தி, பானையில் கிடந்த கெட்டுப்போன சோற்றை எடுத்து பையின் மேல் தடவிவிட்டு, தலையை துவாரத்துக்குள் நுழைத்து பார்த்தான். கும்மிருட்டில் பை தெரியவில்லை. திருப்திப்பட்டவனாய் துவாரத்தை மூடிவிட்டான்.

மீண்டும் பாத்ரூமுக்குள் வந்து வாளியை எடுத்து அழக்குத்துணிகளை நிரப்பி சேரஃப்எக்ஸல் இரண்டு கரண்டிகளை போட்டான். பின்னர் கவனமாக தண்ணீர் பைப்பை திறந்து மேலோட்டமாக சலசலம்ப செய்து, இன்னொரு வாளியில் மிகுதி துணிகளை போட்டு, சோப்பு தூள், தண்ணி கலந்து குதப்பும்போது,

படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

 

&&&&&&&&&&&

Comments

  1. அவ்வவ் டிக் டிக் முமென்ட்ஸ்.!

    ReplyDelete
  2. ஆரம்பத்திலே, இது அடிக்கடி நடக்கும் சோதனை தானே, இதற்கேன் இவ்வளவு விபரிப்பு என்று தோன்றியது..
    ஆனால்..
    Recursion உத்தி நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
  3. Bachelors' room பற்றின விபரிப்பு அருமை. ஆனா தண்ணி அடிக்கிறவை சிமா படிக்க மாட்டினமே?

    ReplyDelete
  4. கதை நன்றாக அமந்து (புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்) வந்துள்ளது. வாழ்த்துக்கள். பொலிதீன் பை' வரும் வரை இந்தத் திருப்பத்தை நான் எதிர்பார்கவில்லை. கதையின் நடை, நீங்கள் இனி ஒரு சிறுகதை வெளியீட்டுக்கு ரெடி என்னுமாப்போல இருக்கிறது. ரெஜினோல்ட் பாத்திரம் 'இந்தமாதிரி' என யோசிக்கவைத்து பிறகு 'மற்றமாதிரி' இருக்குமோ என யோசிக்கவைக்கிறீர்கள்.

    முடிவு மாத்திரம் வேறு வித்தியாசமா இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே மிகவும் நன்றி .. முடிவு .. சொதப்பி தான் விட்டேன்.

      Delete
  5. கதை நல்லா இருக்கு. விபரிப்புகள் சொய்சாபுரவில என்ற வீட்டை நினைவுக்கு கொண்டுவருகுது. கடைசி முடிவு எதிர்பாராத திருப்பம்,இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான முடிவை எதிர்பார்த்தனான்.

    ReplyDelete
  6. “திரிஷா குளியல்” சிடியை உங்களுடைய இக்கதையில் ஆவணப்படுத்தியதற்கு தமிழ் கூறும் நல்லுலழகம் கடன்பட்டுள்ளது. Besides that, I have a (dumb) question...this is not a short story right? I guess you are going to continue in the coming weeks.

    ReplyDelete
    Replies
    1. மோகன் .. இது பற்றி விரிவா வியாழமாற்றத்தில டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம். திரிஷா விஷயம் .. ஹ ஹா

      Delete
  7. //ஒரு வாளி தண்ணீரை பைப்பில் பிடித்து பவுலை ஊற்றி கழுவிவிட்டு, உடுப்புவாளியில் இருந்த உடுப்புகளை அவசரவசரமாக எடுத்து கீழே போட்டான். அடியில் பொலித்தீன் பையில் ஏதோ சுற்றப்பட்டு இருந்தது.//
    ஜெயரத்னே கூடவே செல்வா இருக்கிறான். மற்றைய போலீஸ்காரர்களும் இருக்கிறார்களே!
    இப்படியும் முடிக்கலாம் எனத் தோணுது...
    ஒரு வாளி தண்ணீரை பைப்பில் பிடித்து பவுலை ஊற்றி கழுவிவிட்டு, உடுப்புவாளியில் இருந்த உடுப்புகளை அவசரவசரமாக எடுத்தவன் அதிர்ந்தான்...
    அநதப் பொலித்தீன் பையைக் காணவில்லை!

    ReplyDelete
  8. நன்றி நண்பர்களே .. இந்த கதை பற்றிய நீண்ட விவாதம் இங்கே இருக்கிறது.

    http://www.padalay.com/2013/03/21-03-2013.html

    ReplyDelete
  9. கதை முடிவு எப்படியோ போகட்டும் .ஆனால் ஹாஸ்டல் வாழ்க்கையும் ,அடையாள அட்டை வாழ்க்கையையும் நன்றாக ஞாபகப்படுத்தி விட்டீர்கள். ஆண்களின் ஹாஸ்டல் வாழ்க்கை ஒரு விதம் ,பெண்களின் ஹாஸ்டல் வாழ்க்கை இன்னொரு விதம். மொத்தத்தில் ஹாஸ்டலில் இருந்து படித்த அத்தனை பேருக்கும் நிறைய மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும்
    Geetha

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .