விகாஸ் சுவார்ப் எழுதிய இந்த நாவலை தான் சிலம்டோக் மில்லியனார் என்று குதறினார்கள். ராம் முஹமட் தோமஸ் என்ற தராவியில் வசிக்கும் இளைஞன் Who will win a Billion? என்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டு கேள்விகளுக்கும் எப்படி சரியாக பதில்சொல்லி பில்லியன் ரூபாய்கள் வெல்கிறான்? என்கின்ற கதை. படத்தில் வந்த கதை தான். ஆனால் கேள்விகளும் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களும் வித்தியாசம்.
சம்பவங்கள் இந்தியா முழுதும் பயணிக்கும். ராம் எப்படி தோமஸ் ஆகி மொகமட் ஆகிறான் என்று விளக்கும். திமோதி என்கின்ற சேவை மனப்பாங்கு நிறைந்த பாதிரியார், அனாதை ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் போது, ராம் தோமஸ் ஆகிறான். கிறிஸ்தவ நிறுவனத்துக்குள் வெள்ளைக்கார பாதிரியார்கள் சிலரில் வண்டவாளங்கள், அவர்கள் செக்ஸ் படம் பார்ப்பது எல்லாம் கதையில் வரும். பிரேம்குமார் என்கின்ற பாலிவுட் ஹீரோ எப்படி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கிறான் என்று இன்னொரு சம்பவம். அவுஸ்திரேலியாவை சேர்ந்த இராஜதந்திரியின் வீட்டில் இவன் வேலை செய்கிறான். அங்கே அவுஸ்திரேலிய உச்சரிப்புகளை பழகுகிறான் (No worries, Maite, fair enough). அந்த இராஜதந்திரி ஒரு உளவாளி என்று தெரியவருகிறது. உளவாளியை போட்டுக்கொடுத்துவிட்டு தப்புவது. பின்னர் ஒரு நடிகையின் வீட்டில் வேலை செய்வது. தாஜ்மகாலில் டூரிஸ்ட் கைட் வேலை. அங்கே தான் நீதாவை சந்திக்கிறான். அவள் ஒரு விலை மாது. காதலிக்கிறான். கதை வெகு இயல்பாக நகரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த சம்பவம் சார்ந்த கேள்வியும் அதற்கு அவன் சரியாக பதிலளிப்பதாயும் இருக்கும்.
பதினொறாவது கேள்வி ஷேக்ஸ்பியரின் எந்த படைப்பில் கொஸ்டார்ட் என்ற பாத்திரம் வருகிறது? Ask the friend மூலம் தான் உதவிய டீச்சரை அழைத்து அவரிடம் சரியான பதிலை கேட்கிறான். கடைசிக்கேள்வி பீத்தோவன் சம்பந்தமானது. அந்த கேள்விக்கு இவனுக்கு சுத்தமாக பதில் தெரியாது. கையில் இருக்கும் நாணயத்தை சுண்டி, தலை விழுந்தால் ஒப்ஷன் A என்று தீர்மானிக்கிறான். தலை விழுகிறது. வெற்றி பெறுகிறான்.
படத்தில் நடந்தது போலவே அவனை போலீசில் மாட்டுகிறார்கள். அங்கே ஒரு பெண் வக்கீல் இவனுக்கு உதவுகிறாள். இறுதியில் இவன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட, வெற்றிப்பணம் கைக்கு வர, டிவி நிறுவனம் திவாலாகிறது. கதை முடிவில் அவனுடைய அதிர்ஷ்ட நாணயத்தை அந்த வக்கீல் வாங்கிப்பார்க்கிறாள். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமுமே தலை தான். “Its my lucky coin, but luck has nothing to do with it” என்று சொல்லி சிரிக்கிறான்!
திரைப்படத்தில் நிறைய விஷயங்களை வெட்டி, இந்தியாவை எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை நாடாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருப்பார்கள். நாவல் அப்படி இல்லை. ஒரு சராசரி இந்தியாவை அதன் நல்லது கெட்டதுகளுடன் எழுதியிருப்பார் விகாஸ். நாவலில் நாடகத்தன்மையோ, நீதாவும் ஜமாலும் கிஸ் அடிப்பதோ எதுவுமே இல்லை. கக்கூஸ் குழிக்குள் விழுந்து எழுந்து ஓடிப்போய் அமிதாப்பிடம் ஓட்டோகிராப் வாங்கும் தராவி குழந்தையும் இல்லை. சொல்லப்போனால் அவன் இறுதியில் தான் தராவியில் வசிக்கிறான். ஆரம்பம் டெல்லியில் தான்.
இந்தப்புத்தகம், திரைப்படம் வெளியாகி தலைவர் இசை என்று தெரிந்தவுடம் ஓடிப்போய் வாங்கி வாசித்த புத்தகம். முடித்த சூட்டோடு படத்தையும் பார்த்து சூடுபட்டுக்கொண்டது தான் மிச்சம். Five Point Someone க்கும் இது தான் நிகழ்ந்தது. ஆனந்த தாண்டவம், கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாமே சேம் ப்ளட். இதிலே The Namesake ஓரளவுக்கு நாவலுக்கு நேர்மை சேர்த்த திரைப்படம்.
வாசிக்கும்போது நாமே டீஆர் போல கலை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் எல்லாம் சிருஷ்டித்து வாசிப்பதால், நாவல் தரும் அனுபவத்தை எந்த திரைப்படமும் நெருங்ககூட முடியாது என்பது மீண்டும் இதில் நிரூபணமானது.
Comments
Post a Comment