நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா? கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.