Skip to main content

எளிய நாய்!

 

dogindex

நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம்.

அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க.  “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா? கொஞ்சம் நிறம் குறைஞ்ச பிள்ளை. தலையை ஸ்ட்ரெய்ட் பண்ணி, கண்ணெல்லாம் பெயின்ட் அடிச்சு அரியண்டம் பண்ணியிருக்கும். கடும் நாவல் கலர்ல லிப்ஸ்டிக் அடிச்சிருக்கும்.

எனக்கு தான் நாய்க்குணம். இவ்வளவு நோண்டி நோண்டி பார்த்திருக்கிறன் எண்டா நீங்களும் ஏன் ஆவெண்டுறீங்க? அடுத்த போட்டோவுக்கு போங்க. அது என்ன யாழ்ப்பாணத்தில எடுத்த போட்டோவா? அதே தான். அந்த படத்திலயும் இதே மனீஷா பிள்ளை ஒரு கியூட்டான நாயை கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிக்குமே? அந்த நாயிண்ட இடப்பக்க காது மேற்பகுதி சாதுவா கடிவாங்கி பிஞ்சு போயிருக்குமே? அந்த போட்டோவில “மீ அண்ட் மை ஜிம்மி” என்று விளக்கம் குடுத்திருக்குமே. நான் கடைசியா பாக்கேக்க எண்பத்து நாலு லைக் விழுந்திருந்தது. பொம்பிளைப் பிள்ளை படம், எப்பிடியும் இன்னொரு ஐம்பது லைக்கு இத்தனைக்கும் விழுந்திருக்கும். அந்த நாய் வேற வடிவான நாயில்லையா ... கட்டாயம் விழுந்திருக்கும். எனக்கென்னண்டு இவ்வளவு டீடெய்ல் தெரியும் எண்டு நினைக்கிறீங்களா? இதை சொல்லுறீங்க. எனக்கு அந்த நாயிண்ட காது எப்பிடி பிய்ஞ்சது எண்டது கூட தெரியும். சீசரிண்ட வேலை அது. தொண்னூற்றொன்பதாம் ஆண்டு நந்தாவில் அம்மன் கோயில் திருவிழா டைம், தெற்கு வாசல் சாமி சுத்தேக்க எங்கட பக்கத்து ஐயர் வீடும் எண்ட ஐயா வீடும் அடுத்தடுத்து அரிச்சனை மேசை வச்சவை. அந்த டைம் ஐயர் வீட்டு நாய் சீசரும், பாருங்கோவன் கலிகாலத்தை, செய்யிறது பூசை. நாய்க்கு பேர் சீசர்.  கடுப்பாகிட்டேன் நான். கடுப்பாகீட்டன் இந்தியா தமிழா? இது வேற அப்பப்ப சிக்கிக்கும். இந்த தமிழ் இப்ப தான் படிச்சது. அப்ப கடுப்பாகேல்ல. அண்டைக்கு கெட்ட கோபம் வந்திட்டுது. அதால தான் சீசரை கடிக்க போனன்.  கருமம் பிடிச்சவன் நான் கடிக்கமுதல் அவன் என்னை கடிச்சுப்போட்டான். செவிடு கிழிஞ்சு போச்சு.

என்ன புரிகிறதா?

கட் கட் கட். கமல் பாட்டு வரிகளை சொன்னா நல்லா இருக்கும்  நாயே.

நாயே எண்டு கூப்பிடாதீங்க .. ஜிம்மி .. எங்க .. சொல்லுங்க .. ஜிம்மி

சொறி .. ஜிம்மி. ஒகே .. லாஸ்ட் த்ரீ லைன்ஸ் ரிப்பீட். டேக்.

என்று இயக்குனர் இனியவன் சொல்ல ஜிம்மி ஒருமுறை குரைத்து செருமிவிட்டு ஆரம்பித்தது.

‘கடுப்பாகீட்டன்’ இந்தியா தமிழா? இது வேற அப்பப்ப சிக்கிக்கும். இந்த தமிழ் இப்ப கொஞ்ச நாளா தான் படிச்சது. அந்த காலத்தில இந்த கடுப்பெல்லாம் பாவிக்கிறதில்லை பாருங்கோ. அப்பேக்க பயங்கர கோபம் தான். அண்டைக்கு இந்த ஐயர் வீட்டு சீசர் குலைச்சதை பாத்து பயங்கர கோவம். அதால தான் சீசரை கடிக்க போனன். கருமம் பிடிச்சவன் நான் கடிக்கமுதல் அவன் என்னை கடிச்சுப்போட்டான். என்ர செவிடு கிழிஞ்சு போச்சு.

என்ன .. யாரென்று தெரிகிறதா? இவன் நாய் என்று புரிகிறதா? ஐ ஆம் த வன் அண்ட் ஒன்லி ஜிம்மி.

நல்லாருக்கு .. ஆனா இங்கிலீஷ் வேண்டாமே.  உங்களுக்கு ஈழத்து நடை நல்லாவே வருது.

நான் எண்ட பாட்டுக்கு குலைச்சுக்கொண்டு நிக்கிறன் .. அதை நடை எண்டுறீங்க. ஒகே .. ரிப்பீட். ஒன்லி லாஸ்ட் லைன் ஒகே.

என்ன .. யாரென்று தெரிகிறதா? இவன் நாய் என்று புரிகிறதா?  ஜிம்மியும் நானே. மனீஷா கொஞ்சிய உஞ்சுவும் நானே. உங்களோடு இப்போது பெசிக்கொண்டிருப்பவனும் நானே.

கட் கட் கட். எக்சலன்ட் ஜிம்மி. சும்மா கவிதையா வருது உங்களுக்கு. அப்பிடியே இதை வொயிஸ் ஓவர்ல போட்டு உங்கட வீட்டு பத்திக்கு கமராவை ரோல் இன்ல கொண்டு வரலாம். கலக்கும்.

வாற வழில ஊத்தை தண்ணி போற பைப் பம்பர் இருக்கு. ரோலிங் கமரா தடக்கீடும். கமரா ஆடிடும் அண்ணே.

ஒரு நாய் தன்னை அண்ணே என்று அழைப்பதை கேட்டு இனியவன் ஆத்திரப்பட்டாலும் இப்போதைக்கு நாயிண்ட காலம், நான் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்துகொண்டார்.

பார்த்தியா .. வெறும் நாய் எண்டாலும் இந்த விஷயங்களையும் கண்டு பிடிக்கிறாய்?. எப்பிடி உன்னால முடியுது?

உன்னால எப்பிடி நாயை பேச வைக்க முடியுது எண்டு நான் கேட்டனா? இல்லை தானே. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன இப்ப?

மீண்டும் ஜிம்மியின் குத்தல் கதை. ஒருமையில் கதைத்தால் மறக்காமல் ஒருமையிலேயே பதில் சொல்லுகிறது. சமாளிக்கவேண்டும். ஒரு நாய் பேசும் டோக்குயூமெண்டரியை இன்றைய திகதிக்கு அல்ஜஸீராவில் கூட காட்டியதில்லை. இந்த நாய் வேறு பேஸ்புக் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. இதோடு குழம்பினால் வேலை நடைபெறாது என்று இனியவன் நினைத்துக்கொண்டார்.

அடுத்ததா உங்கட இடத்தை சுத்திக்காட்டுறீங்களா ஜிம்மி?

ஜிம்மி கமரா குரூவை பின்பத்திக்கு கூட்டிக்கொண்டு போனது. அது ஒரு டிப்பிக்கல் யாழ்ப்பாணத்து வீட்டு பத்தி. ஒரு பக்கம் பொச்சு மட்டை இளக்கயிற்றில் கோர்த்து தொங்கவிடப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் தேங்காய் குவியல். ஒரு பக்கம் உரல், அம்மி, அந்த ஏரியாவில் ஈரம் மண்டி கால் வைத்தால் கறுப்பு கறுப்பாக அடிக்கால் ஒட்டியது. மற்ற பக்கம் கக்கூஸ். சரியாக தண்ணீர் ஊற்றப்படாமல் நாறியது. அப்படியே அதை தாண்டி போனால், பழைய கொட்டில் ஒன்று. கொட்டில் என்றால் பிள்ளை கிடத்திற தொட்டில் அது. கீழே இறக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு மூலையில் பழைய சாரம், கிரீஸ் துணி, வீரகேசரி எல்லாமே ஒன்றன் மேல் ஒன்று இழுபட்டு, ஒருவிதமாக படிந்து போய் கிடக்க, இன்னொரு பக்கம் பழைய நாய் சங்கிலி ஒன்று கறல் பிடித்துப்போய் கவனிப்பாரற்று கிடந்தது. தள்ளி ஒரு கோப்பையில் கொஞ்சம் சோறு, பூசணிக்காய் கறி பூஞ்சணம் பிடிச்சு கறுத்துப்போய் இருந்தது.

ஜிம்மி போய் வீரகேசரிப்பேப்பரை கொஞ்சம் கிளறி உள்ளே இருந்த காய்ந்து கல்லு போல கிடந்த ஒரு எலும்புத்துண்டை எடுத்து கால் இடுக்குக்குள் வைத்தபடியே இனியவனை பார்த்து சொன்னது.

“வீ ஆர் ஹோம்”

செணி நாற்றம் அடித்தது. இனியவன் மூக்கை பொத்திக்கொண்டார்.

“ம்ஹூம் .. மண்டேலா இருபத்தேழு வருஷம் இப்பிடி இருந்தவர்… ”

அதற்கு பதில் சொன்னால் ஜிம்மி தென்னாபிரிக்க அரசியல் பேசும் போல தோன்றியது. இனியவன் அதை சட்டை செய்யாமல் பத்திக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த கொடியை அவதானித்தார். இரண்டு சாயம் போன வேட்டிகள். நூல் சீலை இரண்டு. பிளவுஸ். உள் பாவாடை. லேஸ். வேலைக்காரப்பெண்ணின் உடுப்புகள். அடுப்புத்துணி எல்லாமே ஒன்றாக கிடந்தன. காய்ந்து கிடந்தன. எடுக்கப்படவில்லை.

“காய்ஞ்சு கிடக்கு எடுக்கேல்ல எண்டு நினைக்கிறீங்களா? இந்தா நான் படுத்துக்கிடக்கிறனே சாரம்? மூண்டு மாசத்துக்கு முதலில கொடில காயப்போட்டிருந்தினம்.  அண்டைக்கு பயங்கர குளிர். உருவி இழுத்து போர்த்துக்கொண்டு படுத்திட்டன். கண்டே பிடிக்கேல்ல”

“ஏன் இதெல்லாத்தையும் கவனிக்கமாட்டினமா?”

“இங்க இப்ப எல்லாமே இப்பிடித்தான்””

“ஆனா வீட்டுக்காவல்காரன் நீங்களே இப்பிடி செய்யலாமா?”

“அப்ப என்ன செய்ய சொல்லுறீங்க? குளிர்ல நடுங்கி சாக சொல்லுறீங்களா?”

“வீட்டுக்காரர் … அவையள் ஒண்டும் சொல்ல மாட்டீனமா?”

ஜிம்மி மீண்டும் அந்த எலும்பு துண்டை வீரகேசரிக்கு கீழே பதுக்கிவிட்டு குரைத்து செருமிவிட்டு பேச ஆரம்பித்தது.

 

இந்த மார்கழி தமிழுக்கு மூண்டு நாள் கழிந்தால் எனக்கு பதினாலு வயசு. நம்புவீங்களா? இதே ஏரியா தான். ரெயில்வே ட்ரக் பக்கமா நாலு பொம்பிளை சகோதரத்துக்கு நானும் சீசரும் தான் ஆம்பிளை பிள்ளைகள். ஆறு பிள்ளைகள். பிறந்த அண்டைக்கு, அம்மா நந்தாவில் அம்மன் கோயில் வாசலில எங்களையும் கூட்டிக்கொண்டு விடியக்காலமையே கும்பிட போனவாவாம். அங்க வந்தது சனியன். நித்தியகல்யாணி ஆய வந்த ஐயரிண்ட ரெண்டாவது குமர் எங்களை பார்த்திருக்கோணும். உடனே நாய் வளர்க்கோணும் எண்டு அதுக்கு ஆசை வந்திட்டுது. கோயிலடியிலேயே சீசர் பிள்ளை ஆப்பிட்டு போனார். அம்மா சீசரை மீட்கிறதா இல்ல எங்களை காக்கிறதா எண்டு குழம்பிப்போட்டாவாம். அம்மாளுக்கு பூசை வேற தொடங்கப்போகுது. சனம் வரப்போகுது. அதில குலைச்சுக்கொண்டு நிக்கவும் ஏலாது. அம்மா ரெயில்வே ட்ரக் பக்கமா எங்களையும் தூக்கிக்கொண்டு வந்து ஒதுங்கீட்டா.  ஆனாலும் விதி விடேல்ல.

ஐயர் வீட்ட சீசர் போய் நிண்டு அழ தொடங்கினோன பக்கத்து வீட்டு சிவராசா குடும்பத்துக்கு தாங்களும் நாய் வளர்க்கோணும் எண்டு ஆசை வந்திட்டுது. அப்போ சிவராசா வீட்ட சிவராசாவிண்ட மகம் சூரியராகவன் இருந்தவன். ஏஜெண்டுக்கு காசை கட்டிப்போட்டு ஐஞ்சு வருஷமா ஏஜென்ட் கோல் பண்ணுவான், கனடா போகலாம் என்று வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தவன்.  வெயிட் பண்ணின டைம்ல சும்மா இருக்கேலாம ஆரியகுளத்தடில இருந்த பான்ஸிகுட் கடைல வேலை செய்த பெட்டையோட லவ்வாயிட்டுது. வீட்டை கூட்டிக்கொண்டு வந்திட்டான். பிள்ளை வரேக்கயே வயித்தில பிள்ளை. அந்த பிள்ளைக்கு வாங்கின கொட்டில் தான் இது.. நான் படுத்துக்கிடக்கிறது. .. இதில தான் மனீஷா பிள்ள உருண்டு பிரண்டவ. இப்ப கேட்டுப்பாருங்களேன். ஷிட் எண்டுவா. 

கேட்டீங்களா?

ரெண்டு வருசத்துக்கு முன்னாலே சூரியராகவன் குடும்பம் யாழ்ப்பாணம் வந்தது. அப்ப எடுத்தது தான் நீங்க பேஸ்புக்ல பார்த்த படம். ஐயாண்ட செத்தவீட்டுக்கு அடுத்த நாள் எடுத்த படம் அது.

சிவராசா செத்துப்போனாரா?

பின்ன? மனுஷன் சேடம் இழுக்குது என்ன … எனக்கே விசர் பிடிச்சு போயிட்டுது. நான் நாயா குலைக்கிறன்.  அந்த பப்பா மரம் தெரியுதே ..

எது .. அந்த ஆண் பப்பாவா?

ஆ … பூத்துக்கிடக்கே .. அதுக்கு நேர் மேலாலே தான் எமன் குதிரைல வந்தவர் … நான் எண்டா கண்டிட்டு ஊளை இடுறன் .. எமன் வாறான் .. எவண்ட தலையை கொண்டு போகப்போறானோ .. எண்டு ஊளை இடுறன். இவள் வேலைக்காரி கோமதி நித்திரை குழம்புது எண்டு கறிச்சட்டியை கொண்டுவந்து வச்சிட்டாள்.

பேந்து?

நான் ஊளையை நிப்பாட்டிட்டு சட்டியை நக்க தொடங்கீட்டன்.

ச்சசிக் .. அத கேக்கேல்ல .. எமன் குதிரைல வந்தான் எண்டீன்களே .. எருமைல அல்லோ வாறவர்?

ஐயா இழுத்த இழுவைக்கு அம்புலன்சில வந்திருந்தாலே லேட்டாகி இருக்கும். இதில எருமைல வந்திருந்தா? .. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டே.

சொல்லுங்க

எமனுக்கு வாகனம் கிடையாது

வட்?

அம்மான சொல்லுறன் .. எமனுக்கு வாகனமே கிடையாது .. பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தான். இந்தப்பக்கத்தால எது வருதோ அதில தொத்தி வருவார். அவர் எருமைல வந்து ஒரு நாள் கூட பார்த்ததில்ல.

ம்ம்ம் எமனை அடிக்கடி பார்த்திருக்கிறாய் .. கடவுளையும் பார்த்திருக்கிறியோ?

ஆரு கடவுள்?

இனியவன் ஜிம்மியோடு அதிகம் பேச்சுக்கொடுக்ககூடாது என்று தீர்மானித்தார். வயது போனதால் புத்தி பேதலிக்கிறது போல. கதையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டது இந்த நாய். பேசாமல் இன்டர்வியூ பண்ணவேண்டியது தான்.

அது இருக்கட்டும் ஜிம்மி. உங்கட வாழ்க்கைல மிகவும் சந்தோஷமான காலம் எது?

சமாதான காலம்.

ரணில் டைமா?

இல்ல இல்ல .. ஐயர் வீடும் சிவராசா வீடும் கதைச்சு பேசிக்கொண்டிருந்த டைம். அது ஒரு வசந்த காலம். வாங்க காட்டுறன்.

ஜிம்மி இவர்களை மீண்டும் முற்றத்து கேற்றடிக்கு கூட்டிக்கொண்டு போனது.

இங்க பார்த்தீங்களா? ரெண்டு கதவு கேட். அந்த டைம் கீழால நான் பூரேல்லாத மாதிரி நெட்டு அடிச்சிருந்தவை. இப்ப பிஞ்சு போச்சு. பின்னேரம் ஐஞ்சு மணிக்கு தான் கேட்டு திறந்து விடுவினம்.  எனக்கெண்டா அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போகும் அப்ப. அடக்கி வச்சிருந்ததை எல்லாம் போய் ரெயில்வே ட்ரக்கில கொண்டுபோய் கொட்டுவன். கொட்டுற டைம் தான் அங்கனைக்க பெயர் வைக்க ஆள் இல்லாத சில கட்டாக்காலி நாய்கள் திரியும். நாங்கள் அவயளை உஞ்சு எண்டு சொல்லி நக்கல் அடிப்பம். அதில சில பெட்டைகளும் திரியும். அதுகளை கண்டா காணும். இந்த சீசர் எங்கனக்க இருந்தாலும் ஓடி வந்திடுவான். சீசரை ஐயர் வீட்டுக்காரர் கட்டி வளர்க்கேல்ல. அவன் வேணுமெண்டா எந்த நேரமும் வேலை பார்க்கலாம். ஆனா அந்த நாய்க்குணம், நான் போய் நிக்கிற நேரம் தான் அவனும் வருவான். அதில ஒருக்கா ரெண்டு தரம் சண்டை பிடிச்சு பார்த்தன். அவன் என்னை விட பலசாலி. சரி நாயே, எதையாவது செய்திட்டு போடா என்று அவனை முதலில விட்டுட்டு தான் நான் பிறகு செய்யிறது.

IMG_0109

இதெல்லாம் முடிஞ்சு திரும்பி இங்கே, கேட்டடிக்கு வந்தா ஐயரம்மாவும் எங்கட வீட்டம்மா, சிவராசாண்ட மனிசி. கமலாம்மா. அவவும் கேட்டிண்ட தூணுக்கு ஒண்டா சக்கப்பணியாரம் இருந்து கதை அளப்பினம். முழுக்க விடுப்பு. வலு கலாதியா இருக்கும். அப்பிடியே உடம்பை ஒருபக்கமா சரித்து கிடத்திக்கொண்டு பின்பக்க வலக்காலை கவட்டுக்குள்ள குறு குறு எண்டு சொறிந்தபடியே ஒழுங்கை நடுவில கிடந்தது அவங்கட விடுப்பு கேக்கிறது என்ன சுகம் தெரியுமா? அந்த ஏரியாவில என்ன விஷயம் என்றாலும் அப்போது எனக்கு அப்டுடேட்டாக இருந்துது. இந்த கலைவாணி அக்கா இருக்கிறா, முன் ஒழுங்கை .. அவவுக்கும் சுரேஷ் அண்ணேக்கும்….

“இல்ல ஜிம்மி .. அது வேண்டாம்…. உங்கட கதையை சொல்லுங்க”

பிறகு 2005ம் ஆண்டில ஐயர் வீட்டில டாட்டா இண்டிகோ கார் ஒண்டு வாங்கிச்சினம். மூத்தமகன் அனுப்பினது. இதை பார்த்திட்டு சிவராசா சூரியராகவனிடம் கார் வாங்கித்தா கார்வாங்கித்தா எண்டு கேட்டுப்பார்த்தார். எனக்கும் கார்ல ஒரு விருப்பம். இவன் சீசர் அவங்கட வீட்டு காருக்கு கீழே படுக்கிறவன். பிறகு வந்து அந்த ஒயில் மணத்தை பத்தி எனக்கு வந்து அளப்பான். அந்த கடுப்புல தான் கிரீஸ் துணியை போட்டு இப்ப படுத்திருக்கிறன். அதுவும் கொஞ்சம் மணக்கும் தானே.

“சூரியராகவன் கார் அனுப்பினவனா?”

அவன் கெட்ட கிருமி. நான் சொன்னன் தானே. இல்லையா? காசு வேற மனிசி வீட்டுக்கு தான் அனுப்புறவனாம். கமலாம்மாவிண்ட தாலிக்கொடி வச்சு தான் இவர் வெளிநாடு போனவர். இவன் கார் வாங்கி குடுக்காத கவலை,  ஆனானப்பட்ட ஐயர் கார் வாங்கி ஓடுறானே எண்ட கடுப்பு, சிவராசா டென்ஷனில படுத்த படுக்கையா போனார். அந்த நேரம் தான் இந்த வளவில் இருந்த தென்னை மரத்து காய் ஐயர் வீட்ட விழுந்திட்டுது. அதுகள் எடுத்துட்டு தம்மெண்டு இருந்திட்டுதுகள். எனக்கு நல்லா தெரியும். எடுக்கேக்க குலைச்சனான். ஆனா எவன் எண்ட பேச்சை கேட்டான்? விழுந்த சத்தம் கமலாம்மாவுக்கும் கேட்டிருக்கோணும். அடுத்த நாள் போய் தேங்காயை கேக்கேக்க அதுகள் தேங்காயா? தென்னம்பிள்ளை வச்சு மூணு மாசம் தான் எண்டு அவயளிண்ட செவ்விளனி மரத்தை நக்கலா காட்டிச்சினம். மனிசி நெருப்பெடுத்துட்டுது. பேந்தென்ன. இந்த மனிசி அந்த மனிசியை பார்த்து குலைக்க, சிவராசா ஐயரை பார்த்து குலைக்க, நான் சீசரை பார்த்து குலைக்க .. கடைசில சென்றில நிண்ட ஆர்மிக்காரன் வந்திட்டான். வந்தவன் சிவராசாவை கன்னத்தில அடிச்சுப்போட்டான்.

ஏன் அவன் சிவராசாவை அடிக்கோணும்?

ஏண்டா அந்த ஆர்மிக்காரனுக்கு ஐயரிண்ட குமர் மேல ஒரு கண்

உனக்கென்னண்டு தெரியும்?

அந்த நாய் எனக்கு நைஸ் பிஸ்கட் குடுக்கமாட்டான். ஆனா சீசருக்கு குடுப்பான்.

ம்ம்ம் .. அந்த ஆர்மிக்காரன் சிவராசாவை அடிக்கேக்க நீ கடிக்கேல்லையா?

நான் என்ன லூஸா? அவன் துவக்கு கட்டையால மண்டைல போட்டா எண்ட கதை சரி .. ஆர்மி எண்டா எனக்கு கொஞ்சம் பயம். அதையே ஐயர் கையை வச்சிருந்தா அவர்ட வேட்டியை உருவியிருப்பன்.

ஜிம்மி சொல்லிக்கொண்டே அவர்களை மீண்டும் உள்ளே கூட்டிக்கொண்டு போனது. கதவைத்தள்ளிக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்றது. வீடு தாறுமாறாக கிடந்தது. உதயன், சினிமா எக்ஸ்பிரஸ், ரமணிச்சந்திரன் புத்தகங்கள் தொடக்கம் தீயா வேலை செய்யணும் குமாரு வரைக்கும் இரைந்து கிடந்தது. ஒரு பக்கம் கொம்பியூட்டர் மேசை இருந்தது. மற்றப்பக்கம் டிவி. பிரிட்ஜ் கூட முன் ஹோலில் இருந்தது.

“இந்த வீட்டில ஆரு கொம்பியூட்டர் பாவிக்கிறது .. சிவராசாவிண்ட மனிசியோ?”

உஷ்.. சத்தம் போட்டு கதைக்காதீங்க. கமலாம்மா சிவராசா போனதில இருந்து ரூமை விட்டு வெளிய வாறது குறைவு. பத்திக்கு போறதுக்கும் எப்பாவாச்சும் இருந்திட்டு குளிக்கிறதுக்கும் தான் வெளிய வரும்.

அப்படீண்டா?

வீட்டை இப்ப முழுக்க முழுக்க கொன்றோல்ல வச்சிருக்கிறது வேலைக்காரி கோமதி தான். கோமதி தான் பேஸ்புக் கூட எனக்கு பழக்கினது. பிரான்சில நான் பேமஸ் எண்டு எனக்கெப்பிடி தெரியும்? ரெக்கொர்டிங்க நிப்பாட்டினா இன்னொரு விஷயமும் சொல்லுவன்.

நிப்பாட்டியாச்சு சொல்லுங்க..

அப்பா கமராவில சுவப்பு லைட் எரியுது?

சொறி .. இப்ப சரி .. சொல்லுங்க..

ஆ .. என்னெண்டா இந்த கோமதி இருக்கிறாளே. பச்சைக்கள்ளி. சூரியராகவன் மூன்று மாசத்துக்கொருக்கா முன்னூறு யூரோ அனுப்புறவன். அத இவள் அம்மாட்ட குடுக்கிறன் எண்டு சொல்லிட்டு தான் எடுத்துப்போடுவாள். கமலாம்மாக்கு முன்னூறு ரூவா மாத்திரம் காட்டுவாள்.  யூரோ ரூவா கொன்பியூஷன் ஸ்கைப்பில தெரியாது தானே.

பகல் கொள்ளையா இருக்கே நீ இத ஒண்டும் கேக்கிறதில்லையா?

கேட்டு என்ன செய்யிறது? இந்த நேரம் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி எந்த லாபமும் இல்ல.  முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. அட வளர்ந்த வீட்டில இப்பிடி ஒரு அநியாயம் நடக்குது. பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறமே எண்டு குத்தீச்சு. ஆனா கோமதி அண்டைக்கு நல்ல பாரை மீன் தலையை சதையோட எனக்கு போட்டாள். அவ்வளவு தான் கட்சி மாறீட்டன்.

துரோகம் இல்லையா?

முதலில குழப்பமா இருந்திச்சு. இப்ப வீட்டில மூண்டு பேரு. வயசான மனிசியும் கோமதியும் நானும். அதில கோமதியும் நானும் துரோகி எண்டாலும் மஜோரிட்டி நாங்க தானே.

அதுக்கு?

ரெண்டு துரோகிங்க நல்லா இருக்கோணும் எண்டதுக்காக ஒரு நல்லவனை பலிகடா ஆக்கலாம்

இனியவனுக்கு இம்முறை கொஞ்சம் கோபம் வந்தது. என்ன தான் பேசும் நாய் என்றாலும் நாயுக்கேன்று இருக்கின்ற தார்மீக நெறிகளை மீறலாமோ? நன்றி மறக்கலாமோ?

ச்சே .. நாய் ஜென்மத்திலேயே நீயொரு ஈனப்பிறப்பு .. நன்றி எண்டது ஒரு சதத்துக்கும் இல்ல.

ஜிம்மிக்கு வந்ததே கோபம். சிலிர்த்தெழுந்தது.

ஓன் பண்ணுங்க.

ஆ?

அந்த வீடியோ கமராவ ஓன் பண்ணுங்க.

இனியவன் தயங்கினார்.

கமோன் .. டூ இட் ஐ சே.

இனியவன் பதட்டத்துடன் ரேக்கொர்டிங்கை ஓன் பண்ண ஜிம்மி குரைத்து செருமிக்கொண்டே பேச தொடங்கியது.

“ஆரு ஈனப்பிறப்பு? நானா? அம்பிட்டன் எண்டதுக்காக போட்டு மொங்குவீங்களா? மத்த நாயள் எல்லாம் தம்மெண்டு இருக்க நான் உண்மைய சொல்லுறது பிழையா? இவன் சூரியராகவனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் அப்ப சொல்லேல்ல .. மனிசி பிள்ளைத்தாச்சியா வீட்டில இருக்கு. இவர் எண்ட கழுத்துல காதல் கடிதம் கட்டி முன் வீட்டுக்கு குடுத்துவிடுறார். இது நடந்துது. இதெல்லாம் சொல்லக்கூடாது எண்டு பார்த்தன். இந்த கோமதி கூட ஆரெண்டு .. சரி விடுங்க .. தாய்க்காரி ஒரு ரூமில கிடையா கிடக்கே .. ஒரு போன் போட்டு கதைக்கவேண்டாம்? ஸ்கைப்பில தான் கதைப்பார். ஏண்டா கார்டுக்கு காசு போயிடுமாம். யாழ்ப்பாணத்து புரோன்ட்பாண்டு வேற விட்டு விட்டு நாய் மூத்திரம் அடிக்கிறது போல தான் வரும். அதில தாய்க்காரி மகனை பாக்குமா பேத்தியை பாக்குமா? சரி ஸ்கைப்பில தான் கதைக்கிற.. நாலு வார்த்தை நல்லா கதைக்கவேண்டாம்? தாயை போட்டு திட்டுவான் அவன். 

dr_17

ஒருக்கா செத்து துலையேண்டி எண்டு பேசிறான் அந்த கேடு கெட்டவன். ஏனாம்? வீட்டை சிவராசா சீவிய உரித்து வச்சு எழுதிப்போட்டாராம். தன்னால விக்க முடியேல்லயாம். ஏதோ இவரு உழைச்ச வீடு மாதிரி. அவன் செத்து துலையேன் எண்டு சொல்ல எனக்கு அழுகை வந்திட்டு தெரியுமா? நானும் வயசு போனவன் தான். பின் பக்கம் கொஞ்சம் குட்டை பிடிச்சு போச்சு. வீட்டுக்குள்ள வந்தாலே செணி நாறும். ஆனாலும் இண்டைக்கும் அந்த மனிசி நான் அறைக்குள்ள போனா பிளேன்டீயை நிலத்தில ஊத்தி நான் நக்கி முடிக்கும் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கும். நான் துரோகி தான். ஆனாலும் ஒரு நாளும் அந்த மனிசி சாகோணும் எண்டு நினைக்கிற ஆள் இல்ல. அண்டைக்கு கூட நந்தாவில் அம்மானிட்ட போய் அந்த சூரியராகவன் நாய்க்கு கை கால் விளங்காம போகணும் எண்டு நேர்த்தி வச்சனான். பிறகு மீட்டிட்டன். என்ன இருந்தாலும் அவன் தான் காசு அனுப்புறவன். பிறகு எங்களுக்கு சாப்பாடு சிக்கீடும்.”

இப்ப கொஞ்சநாளா எமன் நடமாட்டம் கூடவா இருக்கு. என்னை தான் எடுக்க வாறானோ இல்ல மனிசியை தூக்க போறானோ தெரியேல்ல. போன மாசம் சீசர் செத்துப்போனான். அண்டைக்கு பூனை வாகனத்தில் எருமை வந்தான். எனக்கு தெரிஞ்சு போச்சு அண்டைக்கு சீசர் தான் எண்டு. சீசர் சீசர் எண்டு ஊளையிடுறன். அவனை எனக்கு பிடிக்காது. ஆனாலும் அவன் போனா பிடிக்காம விடுறதுக்கு ஆளும் இல்ல எனக்கு. அவன் சாகக்கூடாது. ஊளை ஊளையா இடுறன். கோமதி கருவாட்டு துண்டு ஒண்டு போட்டு பார்த்துது. ம்ஹூம். சீசர் வேணும் எனக்கு. ஆனா எமன் எடுத்துக்கொண்டு போட்டான். சீசர் .. என்னோட பிறந்து வளர்ந்து சண்டை போட்ட சீசர். அவன் இருக்கும் வரைக்கும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருந்தன். இண்டைக்கு அவன் இல்ல. ஆனா எதுவுமே இங்க மாறேல்ல. இன்னும் மோசமா தான் போயிட்டுது. என்னாலையும் பழைய படி குலைக்க முடியேல்ல.

ஒண்டே ஒண்டு சொல்லுறன். சூரியராகவனுக்கு ஏலுமெண்டா சொல்லிவிடுங்க. நான் செத்துப்போனா அம்மாவோட பிழைப்பு நாய்ப்பிழைப்பா போயிடும். கோமதி சுத்திவிடுவாள். நேற்றைக்கு ரெயில்வே ட்ரக்கடில ஒரு புள்ளைத்தாச்சி நாய் திரியிறதா கதைச்சுக்கொண்டு இருந்தாள். அது குட்டி போட்டா ஒண்டை கொண்டந்து வளர்ப்பாள். அது எப்பிடி வளரும்? கோமதிக்கு விசுவாசமா தான் வளரும். அப்பிடீண்டா இனி அவளிண்ட ராஜ்ஜியம் தான். நான் கோமதியை எதிர்க்காட்டியும் கூட இருந்து அம்மாக்கு ஒண்டும் ஆகாத மாதிரி பார்த்துக்கொண்டன். இனி ஆரு அம்மாவை பார்ப்பா? நினைச்சு பார்த்தா விசர் பிடிக்குது.. எப்பிடி இருந்த வீடு இது..

ஜிம்மி பொரிந்து தள்ளிவிட இனியவன் அதிர்ந்து போய் இருந்தார். தயங்கி தயங்கி சொன்னார்.

இத நீ .. நீங்க சூரியராகவனோட ஸ்கைப்பில கதைக்கேக்க சொல்லியிருக்கிறீங்களா?

அதை ஏன் கேக்கிறீங்க .. அந்த எளிய நாய்க்கு அத ஒரு நாள் கோமதி இல்லாத நேரம் பாத்து படிச்சு படிச்சு சொன்னனான்

அதுக்கு அவர் என்ன சொன்னார்?

சொன்னதை எல்லாம் ஹாயா கேட்டிட்டு ரெண்டே ரெண்டு சொல்லு தான் சொன்னார்?

என்னது?

வள் வள்!

&&&&&&&&&&&&&&&&&

Comments

  1. நல்லா இருக்கு

    ReplyDelete
  2. Boss, kalakiiteenga.

    தமில் "வால்"க.

    ReplyDelete
  3. Today I read Puttumai-Pittan's story 'eppothum Mudivele Inbam' (Always end is Happy). This story is about Rabbit, Dog & Fox living in a Collectors house. They talk, plan and move around. it is a classic. Your story is also coming to that category.

    If you do not tell you can not sell.

    Therefore sending to Vikadan is important.It is not guaranteed it will get published. You must try.
    Please see my reply to your reply in the previous Viyalamaatram-Oshhh.

    Siva
    Siva

    ReplyDelete
    Replies
    1. Thanks Siva... Yea I remember the story you say although hardly recall the plot... Its about a proud rabbit living in a collector's house right. Should read it.

      In the movie Thenali, there is a TV interview. Kamal would start it with full of mockeries and jokes and end with an emotional outburst. I watched in the Youtube recommendation accidentally, laughing at it and all of a sudden this story idea came. Initially designed it with a servant in the house, then changed it to a dog character, then it became non-stoppable plotting :D

      Delete
  4. யாழ்ப்பணத்தில இந்த மாதிரி நிறைய முதியவர்கள் நாய்களின் துணையோடு மட்டும் வாழ்கிற, பராமரிப்பு அற்ற, வாழ்ந்து கெட்ட வீடுகளை பார்க்கலாம். நான் பார்த்த அந்த சூழலையும் தனிமையும் கண் முன்னே கொண்டு வந்த விபரிப்பு.

    நாய்களிற்கு வாயிருந்தா எவ்வளவு பேசுமெல்லா?
    This is my another favorite. JK rocks.

    ReplyDelete
    Replies
    1. ஆழமா யோசிச்சா,

      "Violence is like dropping a stone into a pond; The ripples of consequence can spread almost forever".
      இப்படி ஒரு status Facebook இல எழுதின ஞாபகம். போருக்கும் அது பொருந்துமெல்லா?

      Delete
    2. நன்றி தன்யா... எழுதேக்க பல விதமான விஷயங்கள் வந்துது. இத மட்டும் தான் நாய் சொல்லக்கூடாது எண்டதுக்காக அதிண்ட பாத்திரத்தை கொஞ்சம் அலம்பல் பாத்திரம் ஆக்கவேண்டியிருந்தது. நாய் சூழலுக்கேட்ப தன்னோட குணங்களை மாற்றிக்கொண்டாலும் அதின் ஆதாரமான உணர்ச்சிகள் நிஜமானவை. அதே நேரம் வீட்டுக்காரரின் greedy குணம் நாய்க்கும் தொத்துது. இப்ப திரும்பி வாசிக்கேக்க .. எழுதியிருக்கிறோம் என்ற சின்ன ஆச்சர்யம் வருது. பெருமை இல்ல அது. ஒரு வித உவகை எண்டு சொல்லலாம்.

      என்னெண்டு யோசிச்சு எழுதியிருக்கிறோம் என்ற ஆச்சர்யம் தரும் உவகை எனக்கு ஒவ்வொரு வெள்ளியும் கிடைக்கொனும் எண்டு கடவுளை பிரார்த்திக்கிறேன் ..
      ஆரு கடவுள்?

      Delete
  5. //அதே நேரம் வீட்டுக்காரரின் greedy குணம் நாய்க்கும் தொத்துது// That is exactly something I felt. I missed it in the comment.

    ReplyDelete
  6. kadavul kidakiraar. YOu keep it up JK

    ReplyDelete
  7. நல்லா இருக்கு பாஸ்..! :-) நேற்று வாசிச்சுட்டேன். இப்போ திரும்ப வாசிச்சிட்டு கமென்ட் பண்றேன்.

    சில பதிவுகளை வாசிக்க ஆரம்பிக்கும்போதே எங்களையறியாமல் ஒரு முன்முடிவு அல்லது எதிர்பார்ப்பு வந்துடும். அப்படித்தான் நான் வேற எதையோ எதிர்பார்த்துக் கொண்டே வாசித்தேன். சமயங்களில் அது தவிர்க்க முடியாத தவறாகவும் இருக்கும்.

    //துரோகம் இல்லையா?

    முதலில குழப்பமா இருந்திச்சு. இப்ப வீட்டில மூண்டு பேரு. வயசான மனிசியும் கோமதியும் நானும். அதில கோமதியும் நானும் துரோகி எண்டாலும் மஜோரிட்டி நாங்க தானே.//

    இந்த இடத்தைத்தான் எதிர்பார்த்தேனோ என்னமோ தெரியல. நாய் என்று வரும்போது துரோகம் பற்றிப் பேசுவதுதான் (முரண்) சிறுகதைக்கு அவசியமாக இருக்கலாம்.

    //அவன் இருக்கும் வரைக்கும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருந்தன். இண்டைக்கு அவன் இல்ல. ஆனா எதுவுமே இங்க மாறேல்ல. இன்னும் மோசமா தான் போயிட்டுது.//

    இதத்தான் ஆரம்பத்திலயும் எதிர்பார்த்தேன். இருந்திருக்கலாம். நான் சரியாக உள்வாங்கும் மனநிலையில் இல்லையோ என்னமோ! :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீ ... கதையில ஆங்காங்கே அரசியல் இருக்கு. அது எப்பிடி எண்டா ஒரு சாதாரண யாழ்ப்பாணத்தான் பேசிற அரசியல். நான் நீங்க எல்லோருமே அரசியல் பேசுவோம். ஆனா அரசியல் மட்டுமே பேசமாட்டோம். நாயும் அத தான் செய்யுது.

      இந்த கதைல வேற ஆட்களை தேடாமா நாங்களே எங்களை தேடுறமாதிரி தான் எழுதியிருக்கு எண்டு நினைக்கிறேன். அதனால எந்த முன்முடிபோட வாசிக்கிறீங்களோ அது மட்டுமே தெரியும் அபாயம் இருக்கு. முன்முடிபே இல்லாம வாசிக்கேக்க இன்னும் நிறைய விஷயங்கள் மாட்டலாம்.

      //இதத்தான் ஆரம்பத்திலயும் எதிர்பார்த்தேன். இருந்திருக்கலாம். நான் சரியாக உள்வாங்கும் மனநிலையில் இல்லையோ என்னமோ! :-)//
      ப்ளாக்கர் ஒரு டயரி எழுத்தாளன் என்ற அபிப்பிராயம் இருக்கிறதால வாற பிரச்சனையாக இருக்கலாம். அல்லது வாசகனை சரியாக தயார்படுத்தாதது எண்ட பிழையாவும் இருக்கலாம்.

      போக போக பார்ப்பம் பாஸ்.

      Delete
    2. //ப்ளாக்கர் ஒரு டயரி எழுத்தாளன் என்ற அபிப்பிராயம் இருக்கிறதால//

      அப்படியெல்லாம் அபிப்பிராயம் இல்லை பாஸ்! அது எனக்காக மட்டும் நான் ஏற்படுத்திக் கொண்ட வரையறை - அனுபவத்திலிருந்தும்!

      //அல்லது வாசகனை சரியாக தயார்படுத்தாதது எண்ட பிழையாவும் இருக்கலாம்.//

      அதற்கான முயற்சிகளை நீங்க செய்ய வேண்டியதில்லை. /நான் சரியாக உள்வாங்கும் மனநிலையில் இல்லையோ / எனக்குறிப்பிட்டது என சொந்தக் குழப்பங்கள் சார்ந்த மனநிலை மட்டுமே! :-))

      Delete
  8. வாசிச்சு முடிக்கேக்க நாங்கள்தான் எளிய நாயள் எண்டொரு நினைப்பு வருகுது. அந்த ஒயில் மண சுகம், ரெயில் ரோட்டு பெட்டை நாயள், நந்தாவில் அம்மன் கோவில் ஒரு நாய்ட வாழ்கையில எப்பிடி இருந்திருக்கும் எண்டு காட்டிப்போட்டியள். மனுஷன் நாயா பேயா மாறி எழுதி இருக்கெண்டு சொல்லலாம். துரோகிகள் எண்டாலும் "இப்ப நாங்கதான் மஜோரிட்டி, இருக்கும்வரைக்கும் திட்டினான், இப்ப கவலைப்படுகிறன்" இந்த அரசியல் அருமை தலை. இதிலை கனக்க விசயம் இருக்கு. ஒவ்வொரு வரியையுமே திருப்ப திருப்ப வாசிக்கலாம். தலிவா you are great!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவா ...

      //அந்த ஒயில் மண சுகம், ரெயில் ரோட்டு பெட்டை நாயள், நந்தாவில் அம்மன் கோவில் ஒரு நாய்ட வாழ்கையில எப்பிடி இருந்திருக்கும்//
      இதுகளை மறக்கமுதல் எழுதி முடிக்கொணுமே எண்டு இப்ப ஒரு பயம் வருது .. எவ்வளவு நினைவுகள்.

      Delete
  9. யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் அறியாதவர்களுக்கு இந்த கதையில் விரவி கிடக்கும் காஸ்யங்களை சுவைப்பது கடினமே!? மரினா பீச் காதலை விகடனில் காலகாலமாக வாசித்து மரினா பீச் இப்படிதான் இருக்கும் எண்டு நாமும் ரசித்தோமே, அதேபோல நந்தாவில் ரயில்வே track தெரியாதவர்களும் ரசிப்பார்கள் அவர்கள் ஊர் பெட்டைநாய்களோடு ஒப்பிட்டு !!!!!
    நல்லா எழுதுரீங்கண்ணே! தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு கலியாணம் ஆக கூடாதெண்டு கடவுளை ( எனக்கு ஆரெண்டு தெரியும்(கடவுளை) கும்புடுறேன், நடந்தால் வியாழன்கள் மட்டும் தான் வரும் மாற்றங்கள் வராது !!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே/தம்பி/அக்கா/தங்கச்சி ... பேசிக்கலி நண்பரே! (அடுத்தமுறை பெயரை போடுங்க பாஸ்)

      // உங்களுக்கு கலியாணம் ஆக கூடாதெண்டு கடவுளை ( எனக்கு ஆரெண்டு தெரியும்(கடவுளை) கும்புடுறேன், நடந்தால் வியாழன்கள் மட்டும் தான் வரும் மாற்றங்கள் வராது !!!!//
      இறைவா எதிரிகளை நான் கவனித்துக்கொள்கிறேன். நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று.

      Delete
  10. JK

    //என்னெண்டா இந்த கோமதி இருக்கிறாளே. பச்சைக்கள்ளி. சூரியராகவன் மூன்று மாசத்துக்கொருக்கா முன்னூறு யூரோ அனுப்புறவன். அத இவள் அம்மாட்ட குடுக்கிறன் எண்டு சொல்லிட்டு தான் எடுத்துப்போடுவாள். கமலாம்மாக்கு முன்னூறு ரூவா மாத்திரம் காட்டுவாள். யூரோ ரூவா கொன்பியூஷன் ஸ்கைப்பில தெரியாது தானே. //

    என் நிலையும் இதுதான், என்னுடைய பாவபட்டியலின் முதலிடத்தில் இருக்கிறது...எங்கே குளித்தாலும் கரையாது....

    Mohan

    ReplyDelete
    Replies
    1. மோகன் .. இந்த பிரச்சனை எல்லா புலம்பெயர் மக்களிடமும் இருக்கிறது. இது பாவமா அல்லது எங்கட சோகமா என்று சொல்ல தெரியேல்ல.

      உங்களை ஓரளவுக்கு கருத்துக்கள் மூலம் அறிந்தவன் என்ற வகையிலும், உங்கள் மனஉறுதத்தலில் இருக்கின்ற மனிதத்தை உணரும்போதும், நீங்கள் உங்கள் கடமையை சரியாகவே செய்து வருகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

      Delete
    2. Thanks for your kind words JK.

      Delete
  11. அருமை அண்ணா.......அலுவலகத்தில கள்ளமா வாசிச்சும் வாய்விட்டு சிரிச்சுப்போட்டன்... நல்ல காலம்..... எங்கள் வீட்டு ரெக்ஸ் ஜோன் ஞாபகம் வந்தது.........சவீதா...

    ReplyDelete
  12. அண்ணா செமையா இருக்கு...!

    மென் இன் பிளக் படத்தில் ஒரு நாய் வருமே, அதுக்குத் தமிழில குடுக்கிற டப்பிங் வொய்ஸைத்தான் இதை வாசிக்கும்போது குடுத்து வாசிச்சன்.

    மிக மிக ஆழமான கதை. நாயின் ஹாஷ்யமான பேச்சும், அதனுடைய நக்கல்கள் எல்லாம் ரசிக்க வைத்தன.

    அசல் யாழ்ப்பாணத்துத் தமிழ் நடை அழகு சேர்க்கிறது.

    ReplyDelete
  13. ஒவ்வொரு வரியிலயும் ஒவ்வொரு கதை.

    //எனக்கு தான் நாய்க்குணம். இவ்வளவு நோண்டி நோண்டி பார்த்திருக்கிறன் எண்டா நீங்களும் ஏன் ஆவெண்டுறீங்க//

    அப்படி எல்லாம் உடனடியாக மாற முடியாது

    //தொண்னூற்றொன்பதாம் ஆண்டு நந்தாவில் அம்மன் கோயில் திருவிழா டைம், தெற்கு வாசல் சாமி சுத்தேக்க எங்கட பக்கத்து ஐயர் வீடும் எண்ட ஐயா வீடும் அடுத்தடுத்து அரிச்சனை மேசை வச்சவை.//

    கலப்பு திருமண சிக்கல்கள்

    //கடுப்பாகீட்டன்’ இந்தியா தமிழா? இது வேற அப்பப்ப சிக்கிக்கும்//

    கொஞ்ச காலமாக உங்களின் தமிழை பூத கண்ணாடி கொண்டு பார்த்தவர்களை எல்லாம் இப்போது காணக்கிடைப்பதில்லையே.

    //எமனுக்கு வாகனம் கிடையாது//

    எமனுக்கு வாகனம் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் என்று மட்டும் தான் தெரியும் கடவுளை எல்லாம் தெரியாது போல

    //சீசர் .. என்னோட பிறந்து வளர்ந்து சண்டை போட்ட சீசர். அவன் இருக்கும் வரைக்கும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருந்தன்.//

    தான் ஆடாவிட்டாலும்.....சீசரை சகோதரமாக காட்டாமல் நண்பனாக காட்டியிருக்கலாமோ

    //அது குட்டி போட்டா ஒண்டை கொண்டந்து வளர்ப்பாள். அது எப்பிடி வளரும்? கோமதிக்கு விசுவாசமா தான் வளரும். அப்பிடீண்டா இனி அவளிண்ட ராஜ்ஜியம் தான்//

    வயதானவர்களின் இன்றைய நிலை

    //நான் ஊளையை நிப்பாட்டிட்டு சட்டியை நக்க தொடங்கீட்டன்.//
    //ஆர்மி எண்டா எனக்கு கொஞ்சம் பயம். அதையே ஐயர் கையை வச்சிருந்தா அவர்ட வேட்டியை உருவியிருப்பன்.//
    //அப்ப கமராவில சுவப்பு லைட் எரியுது?//

    டிபிக்கல் குணம்.நுட்பமான கவனிப்பு எழுத்தில் மிளிர்கிறது.

    வாள் வாள் என்று கத்துவது மட்டும் தான் நடக்கிறது வேறொன்றும் இல்லை.

    அனேகமாக எல்லாமே வாசித்து முடித்துவிட்டேன். கடைசியாக நல்ல ஒரு திருப்தியான பதிவுடனே நிறைவு.மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .