முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.
அடேல் பாலசிங்கத்தின் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. மெல்பேர்னில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பண்ணை ஊரான வராகுளில் பிறந்து வளர்ந்தவர். தாதியாக பயிற்சி பெற்றவர். சொந்த ஊரிலேயே இருந்தால் பெரிதாக ஒன்றும் கிழிக்கமுடியாது என்று தெரிந்து இருபத்திரண்டு வயதில் வன்வே டிக்கட்டோடு இங்கிலாந்து பயணமாகிறார். அங்கேயும் நாடோடி வாழ்க்கை, தன்னம்பிக்கையின்மை, மனம் ஒத்துக்கொள்ளாத வேலை என்று எதுவித நிம்மதியும் இல்லை. ஒரு கட்டத்தில் இதெல்லாம் வெறுத்துப்போய் சமூக விஞ்ஞான பட்டப்படிப்பை தொடங்குகிறார். இரண்டாம் ஆண்டில் காலடி வைத்தபோது தான், அதே பாடநெறியில் கலாநிதி ஆய்வு செய்துகொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்தை சந்திக்கிறார். கொஞ்ச நாள் பழக்கத்திலேயே காதல். இருவரும் சேர்ந்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், கிழக்கு திமோர், எரித்திரியா, பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த கூட்டங்களுக்கெல்லாம் போய் வருகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். அவர்கள் இவர்களின் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். பேசுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக லண்டனில் இருந்த தமிழர் இயக்க உறுப்பினர்கள் இவர்கள் வீட்டுக்கு வந்து போக, அனைத்துலக விடுதலைப்போராட்டங்கள் பற்றிய முழு அறிவோடு பிற்காலத்தில் இடம்பெறப்போகும் அரசியல் நெறியாழுகைகளின் வித்து இங்கே போடப்படுகிறது.
1979ம் ஆண்டு அன்டனும் அடேலும் இந்தியா பயணமாகி பிரபாகரனை சந்திப்பதிலிருந்து இவர்களின் அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நிகழ்கிறது. அதன் பின்னரான பேச்சு வார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தம், புலிகள் பிரேமதாசா தொடர்புகள், சந்திரிகா என்று அச்சுக்கு சென்ற ஆண்டான 2001ம் ஆண்டு வரையிலான புலிகளின் சார்பான கோணத்தை இந்த புத்தகம் சொல்லுகிறது. அடேலும் தன் எல்லைக்குள் உச்சபட்டமாக காட்டக்கூடிய நடுவுநிலையையும் காட்டியிருப்பதால், ஓரளவுக்கு உள்ளிருந்து முதன்முதலில் உணரச்சிவசப்படாத தொனியில் வெளிவந்த முதல் புத்தகம் என்று “The Will To Freedom” நூலை சொல்லலாம்.
1979ம் ஆண்டு அன்டனும் அடேலும் இந்தியா பயணமாகி பிரபாகரனை சந்திப்பதிலிருந்து இவர்களின் அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நிகழ்கிறது. அதன் பின்னரான பேச்சு வார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தம், புலிகள் பிரேமதாசா தொடர்புகள், சந்திரிகா என்று அச்சுக்கு சென்ற ஆண்டான 2001ம் ஆண்டு வரையிலான புலிகளின் சார்பான கோணத்தை இந்த புத்தகம் சொல்லுகிறது. அடேலும் தன் எல்லைக்குள் உச்சபட்டமாக காட்டக்கூடிய நடுவுநிலையையும் காட்டியிருப்பதால், ஓரளவுக்கு உள்ளிருந்து முதன்முதலில் உணரச்சிவசப்படாத தொனியில் வெளிவந்த முதல் புத்தகம் என்று “The Will To Freedom” நூலை சொல்லலாம்.
இந்த நூல் வெளிவந்தது 2002 சமாதான காலத்தில். கொழும்பில் இருக்கும்போது வாசித்த புத்தகம். எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலுமான தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை அறியவேண்டுமானால், திறந்த மனதுடன் நான்கு புத்தகங்களை வாசித்தல் வேண்டும். அனிதா பிரதாப்பின் “Island Of Blood”, அடேல் பாலசிங்கத்தின் “The Will To Freedom”, எஸ். எம். கார்மேகத்தின் “ஈழத்தமிழர் எழுச்சி” மற்றும் ரஜனி திரணகமவின் “The Broken Palmyrah”. நான்கு புத்தகமுமே ஓரளவுக்கு தட்டுத்தடுமாறி போராட்டம் என்ற யானையை தத்தமது கண்ணோட்டத்தில் புரியவைக்க உதவக்கூடிய புத்தகங்கள். முடிக்கும்போது அளவுக்கதிகமான சோர்வும், அயர்ச்சியும், இயலாமையும் வந்து சேர வைக்கும் புத்தகங்கள். இத்தோடு கூடவே The Cage உம் Still Counting The Dead உம் வாசித்தால் தாளாமையோடு கொஞ்சம் தனிமனித பொறுப்பும் சேர்ந்துவரும். வாசிக்கும்போது எனக்கும் பீறிட்டுக்கொண்டு வரும். கொஞ்ச நாளில் அடங்கிவிடும்.
நூலின் மிக நுணுக்கமான பகுதி புலிகள் பிரேமதாசா இருபகுதியும் ஆடிய மங்காத்தா ஆட்டத்தை பற்றியது. ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட என்று பிறேமதாசாவிடமே ஆயுதம் கேட்கிறார் அன்டன். அன்டனின் இந்த கோரிக்கையை கேட்ட அமைச்சர் ஹமீது கொஞ்சம் ஆடித்தான் போனார். ஆனாலும் அன்டனின் ஆளுமை அவர்களை சம்மதிக்கவைத்தது. அன்டன் எப்படி கேட்டார் தெரியுமா?
“புலிகளுக்கு ஆயுதம் கிடைப்பது முக்கியம். வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டால், இந்தியப்படைகளை வெளியேற்றவேண்டும் என்ற பிரேமதாசாவின் உறுதியான எண்ணம் என்றுமே நிறைவேறாது போகலாம்”
என்கிறார். “நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப்புலிகள்” என்று சொல்லும்போது அன்டன் எப்படி சிரிப்பை கட்டுப்படுத்தியிருப்பார் என்று யோசித்தேன். அதை வாசிக்கும்போது எனக்கு “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலில் சுமந்திரன் சொமரத்னவை படுக்கவைத்துவிட்டு கந்தசாமியோடு கள்ளுக்கடைக்கு போகும் சம்பவம் ஞாபகம் வந்தது! சுமந்திரன் இப்படி செம கில்மாக்களை அந்த நாவல் பூராக செய்வார். நம்ம நிஜ சுமந்திரனுடைய பேச்சுகள் கூட சிலசமயம் இந்த வகையிலேயே இருக்கும்!
அடேல் இப்போது தென் இங்கிலாந்திலே அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருவதாக தெரிகிறது. இவரை பெண்புலி என்றும், யுத்தக்குற்றவாளி என்றும் ஒரு ஆவணப்படத்தை அண்மையில் இலங்கை அரச சார்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருந்தது. ராஜபக்ஸவை கேள்விகேட்க முதல் அடேலை கைதுசெய்யவேண்டும் என்ற தொனி அதில் இருந்தது. பிரிட்டன் அரசாங்கம் அதனை கணக்கெடுக்கவில்லை. இந்நாட்களில் ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், கூட்டங்கள் என்று எந்த தொடர்புமில்லாமல் அவர் விலகியே இருக்கிறார். இருக்கவும் விரும்புகிறார் என்று தெரிகிறது. தொடர்புகொள்ள முயன்றவர்களிடம் கூட முடியாது என்று சொல்லி தன்மையாக மறுத்தும் இருக்கிறார். முப்பது வருடங்களாக தன் வாழ்க்கையை ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நீரிழிவு கணவனுக்கும் அர்ப்பணித்த மதிப்பிற்குரிய பெண்மணி அடேல் அன்ரி.
மனிசி நிம்மதியாக வாழட்டும்.
நாட்டுக்காக, கணவனோடு வந்தவர்களில் இவரும் திரு. நடேசன் அவர்களின் மனைவியும் போற்றப்பட வேண்டியவர்கள். சிங்களவராக இருந்து கொண்டு தன்னினத்துக்கு எதிராகப் போராடும் கணவரோடு பயணிக்க அசாதாரணமான மனது வேண்டும்.
ReplyDelete- நாடோடி