Skip to main content

இரண்டாம் உலகம்

 

578277_10150989535508313_449493115_n

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள் உதற ஆரம்பித்தன. விஞ்ஞானம் என்றாலே பிரேமுக்கு ஓடாது. அதுவும் அன்றைக்கு செயன்முறை காட்டவேண்டிய இறுதிநாள். இரண்டு நாட்களாக யோசித்து, யோசித்து ஒன்றுமே சரிவராமல் நேற்று இரவு தான் அவசர அவசரமாக இதை ஒப்பேற்றிக்கொண்டு வந்திருந்தான். வேலை செய்யாட்டி கதை கந்தல்.

மீண்டும் ஒருமுறை மனதுக்குள் பேசவேண்டியதை யோசித்துக்கொண்டான். “கறுப்பு துளை, திண்மம் சுருங்க சுருங்க, ஈர்ப்பு விசை கூடி கூடி, முடிவிலி மையம் உருவாகி வெடித்து …ஒல்ரைட் சமாளித்துவிடலாம்” என்று நினைத்தவாறே தைரியமாக கதிரையில் இருந்து எழுந்தான். முன்னே மணியம் மாஸ்டர் சிரித்தும் சிரிக்காமலும் “வெள்ளன வாடா” என்றார். அவரின் வலக்கை விரல்கள் மூக்கு ஓட்டையிலும், இடக்கை விரல்கள் ஏற்கனவே பிரிந்த மூங்கில் பிரம்பிலும், தாளம் போட்டுக்கொண்டிருந்தன.

நடுங்கியபடியே தன்னுடைய வீட்டுவேலையை எடுத்துக்கொண்டு வகுப்பு முன்னே போகிறான். பிரேம் நடுங்கிய நடுக்கத்தில் இந்தோனேஷியா டெக்கான் தட்டுகள் இடம்மாறி, சுனாமி உருவாகி சுமாத்ரா கரையோரம் வழித்து துடைக்கப்பட்டது. இருபதானாயிரம் பொதுமக்கள் ஜஸ்ட் லைக் தட்டாக இறந்தார்கள்.

தயக்கமாக “வணக்கம் சேர்” என்றான்.

“என்ன செய்தோண்டு வந்திருக்கிற? ஐட்டத்தை எடுத்துவிடு பார்ப்பம்”

பிரேம் கையில் வைத்திருந்த கார்ட்போர்ட் பெட்டியை நிலத்தில் வைத்து திறந்தான். உள்ளிருந்து பட்டும் படாமலும் கவனமாக ஒரு உருண்டை வடிவான பொருளை வெளியே எடுத்தான். அந்த உருண்டை பச்சை நீலம் கலந்த நிறத்தில் இருந்தது. மிகச்சின்னதாக, தன்னைத்தானே சுற்றியபடி …

“என்னடா இது?”
”பூமி சேர்”

“பூமியா?” என்றபடியே மணியம் மாஸ்டர் அந்த உருண்டையை வாங்கினார். தொட்டுப்பார்த்தார். கச கச வென்று இருந்தது. மூக்கை நோண்டிய விரலாலே ஈரலிப்பாக இருந்த பகுதியை நோண்டப்போனார்.

“வேணாம் சேர் .. அமுக்க மாற்றம் வந்திடும் .. ஆக்கள் எல்லாம் செத்துப்போயிடுவினம்”
”ஆக்களா?”
”ஓம் சேர் … ஆக்கள் .. யூ நோ .. பசுக்கள்”
”வலு இன்டரஸ்டிங் .. கொஞ்சம் விளங்கப்படுத்து”

பிரேம் குரலை செருமியபடியே, சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினான்.

அனைவருக்கும் வணக்கம். இன்றை வகுப்பில் நான் உங்களுக்கு காட்சிப்படுத்தும் செயன்முறையின் பெயர் பூமி. தோரியத்தை உயர் அழுத்தத்தை உருவாக்கி, செயற்கை முறையில் கறுப்பு துளை ஒன்றை ஏற்படுத்தி, அதற்குள் திணிவு சேர்த்து சேர்த்து …

ஓகே ப்ளக்ஹோல் வெடிக்க வச்சு செய்திருக்கிற .விளங்குது ... அதவிட்டிட்டு இந்த பூமியை பற்றி சொல்லு

பூமி, இதில் எல்லாமே இருக்கிறது. நிலம் கடல் இரண்டுமே ஒரே உருண்டையில் இருக்கிறது. நம்மை போல தண்ணீருக்கு இன்னொரு கிரகம் செல்ல தேவையில்லை. எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில் வசிப்பது போல டிசைன் பண்ணியிருக்கிறேன். ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு கிரகம் என்று டிசைன் பண்ண எனக்கு டைம் இருக்கேல்ல.

பிரேம் சொல்லிக்கொண்டே போக மணியம் மாஸ்டர் இடைமறித்தார்.

“பொறு பொறு .. அதெப்பிடி எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில்? ஒரே விதமான காலநிலையில் ஒரே மாதிரியான கூர்ப்பு தானே நடக்கோணும்? வேற வேற மிருகங்கள் உருவாக சான்ஸ் இல்லையே?”

பிரேம் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுதாரித்தான்.

“இல்ல சேர் … எல்லா இடத்திலையில் எல்லா நேரத்திலையும் ஒரே காலநிலை இருக்காது. அதால ஓர்கானிக் கொம்பவுண்டுகள் திரிபு அடையிறது எங்கட கிரகத்தில மாதிரி ஒரே சீரா இருக்காது”

மணியம் மாஸ்டர் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் ஏதோ குறித்துகொண்டார். திடீரென்று அந்த உருண்டையில் இருந்து சின்னதாக பறந்து வந்து நடுவில் வெடித்து சிதறியது.

“என்னடா ஏதோ பறக்குது?”
”மங்கல்யான் சேர்”
”அதென்னது?”
”ரொக்கட் சேர் .. எங்கட பட்டாசு மாதிரி … ”
”வெரி குட் சின்ன சின்ன டிடெயிலிங் எல்லாம் கவனித்து டிஸைன் பண்ணியிருக்கிறாய். ஒவ்வொரு மனிதன், விலங்கு, பறவை .. மரம் மட்டை … அணு”
”குவாண்டம் ஸ்பின் திசை வரைக்கும் புரோகிராம் பண்ணியிருக்கிறன் சேர்”

மணியம் மாஸ்டர் மீண்டும் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் பதிந்துவிட்டு நிமிர்ந்து வகுப்பை பார்த்து கேட்டார்.

“உங்களில ஆராவது கேள்வி ஏதும் கேக்க போறீங்களா?”

இவ்வளவு நேரமும் தங்களுக்குள் சலசலத்துக்கொண்டிருந்த வகுப்பு திடீரென்று அமைதியானது. சிலர் அப்போது தான் பிரேமின் உருண்டையையே கவனித்தார்கள். பலர் தம்முடைய செயன்முறைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

“சேர் ஒரு டவுட்”

545951_10150989535458313_1103390399_nபின் வாங்கிலிருந்து சிவா எழுந்து நின்றான்.

“இந்த பூமில கடவுள் ஆரு?”

கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கணேஷை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பும் சிரித்தான். பிரேம் அசரவில்லை.

“நீ தாண்டா கடவுள்”

மொத்த வகுப்புமே கோல்லென்று சிரித்தது. மணியம் மாஸ்டரின் கை மீண்டும் மூங்கில் பிரம்புக்கு நெருக்கமாக போக, பிரேம் அவசரமாக விளங்கப்படுத்தினான்.

“சத்தியமா சேர் .. புரோகிராம் பண்ணேக்க சிவா, கணேஷ், கௌதம் இவங்களையே கடவுள் ஆக்கிட்டன். எப்பவுமே வகுப்புக்கு ஹோம்வேர்க் செய்யாம வந்து தோப்புக்கரணம் போடுற கணேஷுக்கு இந்த பூமில ஆக்கள் தோப்புக்கரணம் போடுற … .”

வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்க, கணேஷ் முகம் கறுத்துவிட்டது. “சத்தம் வரக்கூடாது” என்று மாஸ்டர் மீண்டும் வகுப்பை மிரட்டினார்.

“பிரேம் .. இந்த பூமில ஒரு மனிசனை சாம்பிளுக்கு காட்டினா சரி .. உண்ட அலுவல் முடிஞ்சிடும்”

“சரி சேர்”

நுணுக்குகாட்டி ஒன்றை பிரேம் மணியம் மாஸ்டரிடம் கொடுத்துவிட்டு அதை கொண்டு பூமியைஜூம் பண்ண சொன்னான்.

“சேர் இப்ப நிலப்பகுதி தெரியுதா?”
”ம்ம்”
”இன்னும் ஜூம் பண்ணுங்க .. என்ன சுத்திவர கடல் இருக்கிற நிலமா?”
”யெஸ்”
”ஒகே அது தான் தீவு .. இலங்கை … அப்பிடியே வடக்கு பக்கமா போகஸ் பண்ணி ஜூம் பண்ணுங்க”

அவன் சொல்ல சொல்ல, அவரும் தொடர்ந்து செய்தார். யாழ்ப்பாணம் என்றான். நல்லூர் என்றான். பள்ளிக்கூடம் என்றான். மணியம் மாஸ்டர் நுணுக்குக்காட்டியில் இருந்து கண்களை நகர்த்தாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.

“சேர் இப்ப என்ன தெரியுது”
”வகுப்பறை மாதிரி இருக்கு ..”
”முப்பது பெடியள் இருக்கிற வகுப்பில ஒருத்தன் முன்னுக்கு நிக்கிறானா?”
”ஓமடா”
”பக்கத்திலேயே ஒருத்தர் ஒரு உருண்டையை உத்துப்பார்த்துக்கொண்டு …”

கண்களை வெளியே எடுக்காமலேயே ஏதோ சொல்ல முனைந்தவர் திடீரென்று நிறுத்தி அதை கவனித்து கேட்டார். திடுக்கிட்டார். குரல் அடைத்தது.

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

 

************************

நன்றி படங்கள் கேதா (www.colourshades.com.au)

Comments

  1. சாரே!
    இது தொடர்கதையா இல்லை விடுகதையா???????????

    Ajanthan

    ReplyDelete
    Replies
    1. குழப்பத்தை தெளிவாக்க கொஞ்சம் முடிவை மாற்றியிருக்கிறேன்.

      Delete
  2. இதுதான் சமாந்தர பிரபஞ்சமா தலை? கந்தசாமிக்கு பிறகு கலக்கல் விஞ்ஞான கதையொண்டு.

    ReplyDelete
  3. உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலாய் அலகிலா விளையாட்டுடையார் :) தலை இதுதான் சமாந்தர பிரபஞ்சமா? அதுவும் நடுக்கத்தில இருபதினாயிரம் பேர் செத்தது எல்லாம் என்ன ஒரு நுணுக்கம். பின்னிட்டீங்க பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. தல .. இதை சமாந்தர பிரபஞ்சங்கள் என்று சொல்ல இயலுமோ தெரியேல்ல. ஒரு பிரபஞ்சத்தில, பிரேம் ப்ளக்ஹோல் அடிப்பை (bigbang) பாவிச்சு ஒரு குட்டி பிரபஞ்சத்தை ஏற்படுத்துறான். அதில இருக்கிற பிரேம் இன்னொன்றை .. அப்படி போய்கொண்டே இருக்கிற கற்பனை இது. சமாந்தர பிரபஞ்சங்களில பிரேம் ஏக காலத்தில(காலம்?) இதை செய்யேக்க அமெரிக்க ஜனாதிபதியா இன்னொன்றில இருப்பான். எழுதோணும்.

      Delete
  4. சுப்பர் அண்ணா!
    இருபதினாயிரம் பொதுமக்கள் ஜஸ்ட் லைக் தட் ஆக இறந்தார்கள்! :)
    கலக்கல்!!!!

    ReplyDelete
  5. you made me to think that this earth is for all living beings.
    But human disturbed all because of foolishness.

    Siva

    ReplyDelete
  6. சுவையான விஞ்ஞானக் கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. சில விடயங்கள் நம்ப முடியாவிட்டாலும்...
    வித்தியாசமான கதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .