Skip to main content

பாலு மகேந்திரா

 

balumahendra

அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் முன்வீட்டில் ஒரு விடலைப்பையன் வசிக்கிறான். இவர்கள் வீட்டில் புத்தகம் வாங்க வருவான். இவளோடு சேர்ந்து விளையாடுவான். அக்கா அக்கா என்று கூப்பிடுவான். இவளது தாபம் அவன் மீது மோகமாய் திரும்புகிறது. ரீடர் படத்தின் கேட் வின்ஸ்லட்டின் நிலைமை. ஒருநாள் அவன் கிணற்றடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவள் குளிக்கப்போகிறாள். சூழவும் வாழைமரங்கள் நிற்கின்றன. தென்னைமரங்களும் தான். அவள் குறுக்குக்கட்டு கட்டிக்கொண்டு குளிக்கிறாள். இவனை தூண்டும் வகையில் பாவாடையை சற்று மேலே இழுக்கிறாள் .. இப்படி போகும் கதையில், ஒரு இடத்தில் படீரென்று தெளிந்தவளாய் “என்ன காரியம் செய்யத்துணிந்தேன்” என்று ஓடிப்போய் காதலனின் படத்தை எடுத்து மடியில் வைத்து அழுதுகொண்டிருப்பாள் என்று அந்த கதை முடியும்.

இந்த சிறுகதைக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா. ஈழத்து சிறுகதைத்தொகுப்பு ஒன்றில் வெளியானது. இருபது வருஷத்துக்கு முதல் வாசித்தது. வயது கொஞ்சம் அப்படி என்பதால், சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசித்தது. இன்றைக்கும் அந்தக்கதை ஞாபகம் இருக்கிறது.  இந்தவகை genre பாலுமகேந்திராவுக்கு பாயாசம் போல. தான் முதன்முதலில் கமராவை தொட்டுப்பார்த்தபோது அடைந்த உணர்ச்சிக்கு ஒரு உவமானத்தை பேட்டி ஒன்றின்போது சொல்லியிருந்தார். அதை இங்கே எழுதமுடியாது. அது தான் பாலுமகேந்திரா.

அந்த பாணியை அவர் திரைப்படங்களிலும் புகுத்தினார். தமிழ் திரைக்கலைஞர்களில் இமேஜ் பற்றி யோசிக்காமல் கொஞ்சமே லத்தீன், பிரெஞ்சு பாணி கதைக்களனை எடுத்து ஆண்டவர் பாலுமகேந்திரா. ஜெயமோகனின் அனல்காற்று வாசித்தீர்களா? அதிலே சந்திரா என்ற மூத்த வயதுடைய பெண்ணோடு ஒரு இளைஞனுக்கு உறவு. சிக்கலான உறவுக்கூறுகளை கொண்ட நாவல் அது.   அனல்காற்று வாசித்தவர்களுக்கு தெரியும். அதிலே ஒரு பாலுமகேந்திராத்தனம் இருக்கும். ஜெயமோகன் அதை  பாலு மகேந்திராவுக்காகவே எழுதினார். ஏனோ அது படமாக்க ப்படவில்லை. வாசிக்கும்போது கொஞ்சம் சதிலீலாவதி காட்சிகள் கிளைமாக்ஸில் எனக்கு ஓடியது. அதுவே படமாக்கப்படாததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஐம்பத்திரண்டு சிறுகதைகளை அவர் “கதைநேரம்” தொடராக டிவியில் கொடுத்தது முக்கியமானது. முன்னுதாரணமாகவும் கடைசி முயற்சியாகவும் போனது.

ilayarja_balu_mahendra

அவர் படங்களில் இயற்கை சத்தங்கள் அதிகமாக இருக்கும். அமைதியின் வெம்மையில் காது கிழியும். கேட்டடியிலிருந்து வீட்டுக்குள் போகும் மூன்று செக்கனுக்குள் தேவையில்லாமல் பேஸ் கிட்டாரும் வயலினும் முழங்காது. சருகு மிதிபடும் சத்தமே கேட்கும். ஸ்லோ மெலடி டிராமா வகை படங்கள் அவருடையது. நகைச்சுவையாக எடுத்த சதிலீலாவதியில் கூட இந்த பாணியே இருக்கும். அவர் இயக்கிய திரைப்படங்களில் “வீடு” இம்மை மறுமை இல்லாமல் எனக்கு பிடிக்கும்.   “மறுபடியும்” முடிவு என்ன என்று தனியாக ஒரு தீஸிஸ் எழுதுவேன். மூன்றாம் பிறை அதன் முடிவின் லொஜிக் இடிப்பதால் அவ்வளவு கவரவில்லை. பின்னை நாளில் அவர் படங்களில் இருந்த புத்திசாலித்தனம் மூன்றாம் பிறையில் இல்லை. ஆனால் மேக்கிங் மேக்கிங் தான். அது ஒரு கனாக்காலமும் டிபிக்கல் பாலுமகேந்திரா படம்.  சந்தியாராகம், கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டிருக்கும். எவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்கிறது. போர்ட்ரைட் ஓவியங்களின் டைம்லாப்ஸ் போன்று அவ்வளவு படிமம்.

ராஜாவையும் இவரையும் பிடிக்கமுடியாது. “தும்பி வா” ஒன்றே போதும் இவர்கள் செய்த பரிசோதனைகளை அறிந்துகொள்ள. "ஏய் சிந்தகி களல காலே" பாட்டின் குளிர்மையை எவன் மறப்பான்? என் இனிய பொன் நிலாவே ,  ராஜ ராஜ சோழன் நான், கண்ணே கலைமானே, இள நெஞ்சே வா என்று ராஜா, ஜேசுதாஸ் பாலுமகேந்திரா கூட்டணி எப்போதுமே நெஞ்சை கொள்ளை கொள்ளும் கூட்டணி. ராஜாவின் "பொத்திவச்ச மல்லிகை"யையும், “காற்றில் எந்தன் கீதத்”தையும், "காதல் ஓவியத்தை”யும், “தும்பி வா” வையும் ஹிந்திக்கு கொண்டுபோக செய்தவர். இந்தக்கூட்டணியின் சின்ன சறுக்கல் என்றால் அது வீடு தான். உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றான வீடு படத்துக்கு ராஜாவின் How to name it வயலின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது கதையின் போக்கிற்கு குறுக்காக முழிந்துகொண்டு நிற்கும். பலருக்கு பிடித்தது. எனக்கு அந்த பின்னணி இசை ஒரு கவனக்கலைப்பான்.

ஒரு தேர்ந்த இலக்கியவாதி சினிமாவுக்குள்ளும் நின்று அடித்து ஆடலாம். தமிழிலும் கூட அது சாத்தியமானது என்று நிரூபித்தவர் பாலுமகேந்திரா. இவரும் மகேந்திரனும் இலக்கியரசிகர்களை திரைப்படம் பார்க்கவைத்தார்கள். சிறுகதைகளை, நாவல்களை திரையில் கொண்டுவந்தார்கள். திரைப்படம் ஒன்றும் தீண்டப்படத்தகாத ஜந்து இல்லை என்றார்கள். படைப்பிலே சமரசங்களை செய்யத்தயங்கினார்கள். இலக்கியத்தின் நீட்சி தான் சினிமா என்ற நிலைமையை ஏற்படுத்த முயன்றார்கள். அதற்காக நேர்மையான பாசாங்குகள் எதுவுமற்ற திரைப்படங்களை கொடுக்க முயன்றார்கள்.

பாலுமகேந்திரா என்ற கலைஞனின் படைப்புகளை கொண்டாடுவோம்.

Director-Balumahendhira-1

&&&&&&&&&&&&&&&&&&

Comments

  1. மிக குறுகிய நேரத்தில் இப்படியொரு தொகுப்பை எங்கள் பாலு மகேந்திராவுக்கு படைத்ததுக்கு பாராட்டுகள்.
    //அமைதியின் வெம்மையில் காது கிழியும்// அருமை..
    'வீடு' படமல்ல - அம்மா வீடு கட்டும்போது நேரில் பார்த்ததை திரையில் பார்த்து வியந்த படைப்பு. சில படங்களில் அங்கில பட பாதிப்புகள் இருந்தாலும், ராஜாவின் இசையில் அந்த காட்சிகளை பாலுவின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது வரும் சுகத்திற்கு அளவே கிடையாது..
    R.I.P Balu Sir
    Uthayan

    ReplyDelete
    Replies
    1. நன்றி உதயன்... வியாழமாற்றம் எழுதிக்கொண்டிருந்தேன்.. இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் அதை ஒத்திப்போட்டுவிட்டு இதை எழுதியாயிற்று. இவர் எழுதிய அந்த சிறுகதையை எப்பவாவது குறிப்பிடோணும் என்று நினச்சனான். இன்றைக்கு தான் அது நடந்திருக்கு.

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. They are the Mastros. No doubt about that.
    I told my friend he got the guts to direct the film, Aliyatha Kolangal.
    My teacher said, people did not understand Moodu Pani.
    Saathi Leelavathi I saw recently. Hilarious.
    siva

    ReplyDelete
  4. பாலு மகேந்திரா ஒரு நல்ல கலைஞன். வண்ண வண்ண கனவுகள் அவரது ஒலிப்பதிவின் உதாரணம்.

    ReplyDelete
  5. மூன்றாம்பிறை ஷோபாவின் இழப்பை பற்றிய திரைப்படம், இழப்பை அனுபவித்தவர் அவர்தான், அவருக்கு அந்த படம் திருப்தியானது மேலும் அந்த படத்தினூடாக அந்த தற்கொலைக்கு தனது பக்க விளக்கத்தை கொடுத்ததாகத்தான் எனக்கு பட்டது.
    நன்றி
    -வாகீ

    ReplyDelete
  6. மூன்றாம்பிறை ஷோபாவின் இழப்பை பற்றிய திரைப்படம், இழப்பை அனுபவித்தவர் அவர்தான், அவருக்கு அந்த படம் திருப்தியானது மேலும் அந்த படத்தினூடாக அந்த தற்கொலைக்கு தனது பக்க விளக்கத்தை கொடுத்ததாகத்தான் எனக்கு பட்டது.
    நன்றி
    -வாகீ

    ReplyDelete
  7. நல்ல பதிவு அண்ணா.. பாலுமகேந்திரா படங்களின் ஏதாவது ஒரு காட்சியின் இரண்டு நிமிடமே போதும், அது ஒரு பாலுமகேந்திரா படம் என்று கண்டுபிடிக்க.. அதுதான் அவரது படங்களின் தனிசிறப்பு..

    ReplyDelete
  8. தமிழ் சினிமாவில் "வீடு" போன்ற ஒரு நேர்மையான படைப்பை நான் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட Woody Allenன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைப்போன்று இவர்மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், படைப்புகள் நேர்மையானதாக இருந்தது. தனது மாணவர்களை தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களாக விட்டுச்சென்றது இவரது சாதனையாகும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் மோகன்.

      Delete
  9. dear jk sir
    why don't you post one write up on balu mahendra's personal life.

    ReplyDelete
  10. அழியாத கோலங்கள் எனக்கொரு திறவுகோளாக அமைந்தது என்பதை இவ்விடத்தில் பதிய விரும்புகிறேன் ஜேகே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .