Skip to main content

தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

 

Digital Camera

முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன்.  அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.

நாளை, மறுதினம் .. திருமணம் முடிந்து மூன்று நாட்களாகியும் கௌதமின் கை அவளின் கன்னத்தை விட்டு கீழே தாண்டியபாடில்லை. இவன் பயப்பிடுகிறானோ என்று யோசித்தாள். சேச்சே இருக்காது. படித்தவன். கைனோகொலஜிஸ்ட், நிதம் நிதம் … அப்படி பயப்பிடுவானா? நான் தான் அவசரப்படுகிறேனோ? விவஸ்தை கெட்டவள். ச்சிக் .. என்ன மாதிரி மனிசி நான்? இப்படி எல்லாம் யோசிக்கலாமா?அதில் என்ன தப்பு? மூன்று நாட்களாகியும் மூதேவி முத்தம் கூட தரவில்லையே. இன்றைக்கேனும் ஏதாவது செய்யலாம் என்றால் எமர்ஜென்சி என்று ஆஸ்பத்திரிக்கு போய்விட்டான்.

மஹாகவி கவிதை. அகலிகை படலம். அகலிகை அதிகாலையில் தாபத்தோடு பக்கத்தில் படுத்திருக்கும் கணவனின் நெஞ்சில் கை போடுகிறாள். அந்த பேக்கிழவாண்டி இவள் கைபட்டதும், அட விடிஞ்சிட்டுது என்று நினைத்துக்கொண்டு திடுக்கிட்டு எழுந்து தவம் செய்ய கிளம்புது. பக்கத்தில மேலாடை சரித்து படுத்துக்கிடக்கும் அகலிகையை கணக்கே எடுக்கவில்லை. நம்மாளு எழுதுகிறார்.devibharathi-story-drawing-

அகலிகை தளிர்க்கை கொஞ்சம்
அசைந்ததும் அருகில் தூங்கும்
மிகுதியாய் நரைத்த நெஞ்சுக்
கோதமர் மேற்படர்ந்து
புக, இவர் விழித்துப் பார்த்துப்
பொழுதாயிற் றென்ப தெண்ணி
அகன்றதும் ஆனயாவும்
அவன் அங்கு நின்று கண்டான்.


“நரைத்த நெஞ்சுக்கோதம” ரிலேயே நம்மாளு அனைத்தையும் சொல்லிவிட்டார். “புக” வை புது வரியில் புகுத்தியதை கவனித்தீர்களா? மஹாகவி அல்லவா. அவ்வளவு டபிள் மீனிங் இருக்கும். அடுத்த பாடல். அகலிகை என்ன செய்கிறாள்?

ஆதரவு அயலில் தேடி
அலைந்தகை விரல்கள் மீண்டு
பாதிமூடா மென்மார்பில்
பதிந்தன. நெளிந்த வாயின்
மீதிபுன் முறுவல் மீண்டும்
விளைத்தனள். முயன்று பின்னர்
மாது குப்புறப் புரண்டு
மணையினை அணைக் கலானாள்.

இதில் இன்னமும் பச்சை. வரிக்கு வரி பச்சை நீலம் மஞ்சம் எல்லாமே. அலைந்தகை விரல்கள் மீண்டு அவள் மார்புக்கே வந்ததாம். அதில் அவள் செய்யும் காரியத்தில் அவளுக்கே சிரிப்பு. முயன்று பின்னர் கடைசியில் மாது மணையினை அணைக்கலானாள் என்கிறார் மஹாகவி. என்னா மனுசன்யா. சத்தம்போடாம அளவெட்டில இருந்து எழுதீட்டு மேலே போயிட்டு மனுஷன். வாசிக்க வாசிக்க, இவரை போய் கொண்டாடாமல் விட்டோமோ. ச்சிக்.

இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. கௌதம் இன்னமும் அதை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தான். ஏதாவது ஒரு காரணம். ஏதாவது. சிஸேரியன், கிரிட்டிகலான கேஸ், குழந்தையின் நரம்பு சிக்கிவிட்டது, இருந்து கண்காணிக்கவேண்டும். ஏதாவது சொல்லி லேட்டாக வருவான். வந்தவன் களைத்துப்போய் விழுவான். அகல்யா குழம்பிவிட்டாள். இவன் அவனா?

அன்றைக்கு சிவராத்திரி. கௌதம் புதினமாக வீட்டிலேயே இருந்தான். சமைத்தார்கள். சாப்பிட்டார்கள். டிவி பார்த்தான். சங்கக்காரா மாய்ந்து மாய்ந்து அடிப்பதை ஆவென்று பார்த்தான். மட்ச் முடிய நியூஸ் மாத்தினான். இவளை பார்த்தானில்லை. இவனை வழிக்கு கொண்டுவரவேண்டுமே?

நித்திரை வருகுது படுக்கப்போகிறேன் என்று அவள் சொல்ல,  போ, நான் வருகிறேன் என்கிறான் கௌதம். இவள் படுத்து இரண்டு மணிநேரம் கழித்து வந்து அருகில் கிடக்கிறான். அசையவில்லை. மரம். வெறும் மரம். மூச்சுக்காற்று கூட அண்டவில்லை. மார்பில் கைவைத்தால் எழுந்து சிவராத்திரி விரதம் இருப்பான் போல தோன்றியது. என்ன சனியனுக்கு என்னை கட்டினான்?  இவனுக்கு என்ன ஆயிற்று. தனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல்.

En-Swasa-Katre

கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

 


குறுந்தொகை. பாலைப்பாட்டு. வெள்ளிவீதியார் மூன்றாம் நூற்றாண்டு.  என்னவாம்?  இதே தவிப்பு தான்.  தன் பாலை ஒன்று கன்று உண்ணவேண்டும். அல்லது கொண்டவர் கறந்து உண்ணவேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால், பால் பசுவின் மடியிலேயே கட்டிக்கொள்ளும். அந்த துன்பம் பசுவுக்கு தாளாது. அது தன்னாலேயே அந்த பாலை தரையில் சொரிந்துவிடும். அதேபோல இந்த பாழாய்ப் போன உடலால், தனியனாக இன்பம் துச்ச முடியுதில்ல. தலைவனும் அனுபவிக்கிறானில்ல. இப்படியான என் அல்குல், இடுப்பு, இடுப்புக்கு கீழே, எதுவெதுவோ அதுவெல்லாம் நிலம் கொட்டிய பாலாய் கிடக்கிறதே. பாலாய்ப்போன உடல்.

இந்தப்பாடல் என் சுவாசக்காற்றே திரைப்படத்திலும் வருகிறது. ரகுமானின் திரைப்பாடல்களில் எப்போவாவது நைஸாக இப்படிப்பட்ட சங்கப்பாடல்கள் வந்திறங்கும். இதில் முழுதாக வருவது ஆச்சர்யம். ஒரு பெண் முக்கல் முனகலோடு பாடுவார்.

 

தொடரும் வைரமுத்து பாடலில் ஆங்காங்கே கவிதை மிளிர்கிறது. தீண்டாய் மெய் தீண்டாய் என்ற வரியே ஆழமானது. எது மெய்? பொய்யே மெய்யா? பொய்யா மேனியளா? யோசியுங்கள். அதிலே இன்னொரு ரசிக்கவைக்கும் வரி.

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்ப துன்பம் செய்குவதோ

ஓடிக்கொண்டிருக்கும் நதியின் சாரல் பட்டும் படாமலும் அடிக்கும்போது கரையில் வாடும்(?) பூவின் நிலை.  கொஞ்சம் யோசிக்க ஆச்சரியம் விரியும்.

ஆனாலும் வெள்ளிவீதியாரிடம் இருக்கும் எரோடிசம் வைரமுத்துவுடம் இல்லை. வெள்ளிவீதியார் நிச்சயமாக தலைவனை பிரிந்திருக்கவேண்டும். அல்லது அவன் அகலிகையின் முனிவர் கணவன் போல நம்பர் நைனாக இருந்திருக்கவேண்டும். இன்னொரு பாட்டும் அதே குறுந்தொகையில் எழுதுகிறார்.

இடிக்கும் கேளிர், நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ, நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

ஒருத்தனுக்கு இரண்டு கைகளும் இல்லை. போதாமைக்கு ஊமை. ஆள் அரவமற்ற ஒரு இடத்திலே பெரிய பாறாங்கல் ஒன்று இருக்கிறதாம். அதற்கு மேலே வெண்ணெய்க்கட்டி இருக்கிறது. அதை இந்த ஊமை காக்கவேண்டும். சூரியன் உதிக்கிறது. மேலெழுகிறது. அது உச்சியை நோக்கிச் செல்லச் செல்ல பாறையின் வெப்பம் மீந்து வெண்ணைக்கட்டி உருக தொடங்குகிறதாம். இதைப்பார்த்தவன் என்ன செய்வான்? கையால் எடுத்து உண்ணலாம் என்றால், பாவன் அவனுக்கு இரண்டு கைகளுமில்லை. கையாலாகாதவன். கத்தி யாராவது ஊரவரை கூப்பிடலாம் என்றால் அவனோ ஊமை. அந்த வெண்ணை உருகி உருகி அவன் முன்னாலேயே ஓடித்தீர்ந்ததாம். அதேபோல, தலைவியின் காமமும் வீணாய்ப்போகுத்து என்கிறார் வெள்ளிவீதியார்.

குறுந்தொகையின் உவமானங்கள் இப்படி அளவு கடந்தவை. அனேகமான சங்கப்புலவர்கள் இப்படி உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பாடல்கள் தான் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏனையவை எல்லாம் ஐந்தாறு லைக்குகளுடன் அப்படியே நின்றுவிட்டது.

பெண்களின் இப்படியான உணர்வு எழுச்சியை சங்ககாலம் இயல்பாக கையாண்டிருக்கிறது. பின்னாலே திருக்குறளும் அவ்வளவுக்கு அடித்து ஆடவில்லை. பெண்ணகளின் உணர்ச்சிகளை பெண்கவிஞர்களே பின்னியிருக்கிறார்கள். ஆண்கள் அல்ல. ஒரு சில ஔவையார்களும் எழுதியிருக்கிறார்கள்.

எண்ணாயிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம்பற்றாக்கிடையேபோற் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று.

தன்னை வந்து மிரட்டும் பெண் பேயை பார்த்து, பெண்கள் மேல் இன்னமும் காமுறத்தெரியாமல் இருக்கும் பேடியரை போய் சுரண்டு. என்னை ஏன் சுரண்டுகிறாய் என்கிறாள். யார் அந்த பேடி? ஆழ யோசித்தால் ஔவை கூட ஒரு வெள்ளிவீதியார். பாவம் மனிசி. நாங்கள் ஆத்தி சூடி கொன்றை வேந்தன் என்று மனிசியை ஒரு கட்டுக்குள் அடக்கிவிட்டோம்.

அதற்கு பின்னர் வந்த ஆழ்வார்கள் சும்மாவா?

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே

இதை கீழிருந்து ரசிக்கவேண்டும். அடேய் மன்மதனே. எனக்கு கண்ணன் என்றால் உசிர். இந்தா இருக்கே என் முலைகள். பருவமடைந்த நாள் தொட்டு அவனுக்காகவே கிளர்ந்து பருத்தவை. அதை அவனிடம் கொண்டு சேர்ப்பாயா? அவன் இதை அனுபவிக்க ஏது செய்வாயா? அவனை அடைந்தவுடன் உன்னை மறப்பேன் என்று அஞ்சிடாதே! உன்னை மறக்கா வண்ணம் சுவரிலே மீன்களையும் குதிரைகளையும் கரும்பு வில், சாமரம் வீசும் பெண்கள் என்று எல்லாமே வரைந்து வைத்தேன். இது ஆண்டாள் காமனுக்கு வைக்கும் ஐஸ்.

ஆண்டாள் அவ்வையை விடுங்கள். அவர்களில் ஒரு குழப்பம் இருக்கிறது. பலதை சொல்லாமல் சொன்னார்கள். ஆனால் வெள்ளிவீதியார் உள்ளதை உள்ளபடியே சொல்லி அதன்மூலம் எல்லை மீறி வியாபிக்கிறார். கொஞ்சம் சில்வியா பிளாத், ஷரோன் ஓல்ட் வகை எரோட்டிசம். அந்த வகையில் தமிழின் முதலாவது பின்நவீனத்துவ எரோடிக் கவிதை சங்ககாலத்திலேயே உருவாகியிருக்கிறது. யோனி என்ற வார்த்தையை எழுதிவிட்டு, அதற்குபின்னரே எப்படி கவிதையை முடிக்கலாம் என்று நினைப்பவர்கள் வெள்ளிவீதியாரின் வலியை படிக்கவேண்டும்.

Satham-Podathey-e1371792149874

வெள்ளிவீதியாரைப்போல அகல்யாவுக்கும் மன்மதன் தான் இனி துணை. இதை இப்படியே விடமுடியாது. நாணமில்லா பெருமரம் தான் காமம் என்றார் ஔவையார். இதிலே ஆண் என்ன பெண் என்ன வேண்டிக்கிடக்கு? அகல்யா ஒரு முடிவெடுத்தாள். நாமாகவே ஆரம்பிப்போம். இதில் என்ன வெட்கம்? “அப்பா” என்று மெல்ல அணுக்கினாள். சத்தம் இல்லை. “கௌதம்”. கொஞ்சம் ஸ்டைலாக கூப்பிட்டாள். குறட்டை மெதுவாக வந்தது. வாட் த ஹெக், என்று எட்டிப்போய் அணைத்தாள். விருட்டென எழுந்தான் கௌதம். ஒன்றுமே பேசவில்லை. செம்பெடுத்து தண்ணீர் குடித்துவிட்டு அடுத்தபக்கம் ஒருக்களித்துப் படுத்தான். இவள் விடவில்லை. மீண்டும் கைபோட்டாள். கையை தூக்கி எறிந்துவிட்டு எழுந்து, கட்டிலுக்கு கீழே பெட்ஷீட் போட்டு படுத்தான் அவன். இன்றோடு ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும். இவளும் கீழே இறங்குகிறாள். இறங்கியவளை உதறித்தள்ளிவிட்டான். இவளுக்கு அவமானம். கேட்டே விட்டாள்.

“எதுக்கு இப்பிடி பிஹேவ் பண்ணுறீங்கள்? விசரா?”
”இல்ல .. எனக்கு இது பிடிக்கேல்ல”
”ஏன்?”
”என்னால முடியாது”
”அதான் ஏன்?”
”ஏனெண்டா .. நான் .. நான் ஒரு .. மகப்பேறு .. கைனோகொலஜிஸ்ட் .... எனக்கு பெண்ணுறுப்பு ஒரு கருவறை .. கோயில் மாதிரி .. அங்கெல்லாம்..”
”வாட் த?”
”ஐ ஆம் சொறி அகல்யா”

அகல்யாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏமாற்றப்பட்டுவிட்டேன். அவ்வளவு தானா வாழ்க்கை. இவனால் முடியவே முடியாதா? கைனோ ஆனதால் இப்படியானானா? இப்படியானதால் கைனோ ஆனானா? புல்லானாலும் … ஷிட் இவன் புல்லுக்கூட இல்லையே. பிளடி ச்சீட். கௌதமை அந்தக்கணமே தூக்கிஎறிந்தாள்.

இந்த சிட்டுவேஷன் திரையிலும் வந்திருக்கிறது. அவளுக்கு திருமணமாகிறது. கணவன் ஒரு impotent. மறைத்து கல்யாணம் செய்கிறான். கொஞ்சநாளில் அவன் வண்டவாளம் தெரியவருகிறது. வெள்ளிவீதியார் நிலைமை தான். ஆனால் அவளுக்கு ஒரு இணை கிடைக்கிறது. இது சிட்டுவேஷன். பாடலை பாருங்கள்.

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

பாடலில் வரிகளை அகலிகை, இந்திரன் ஜோடியை மனதில் வைத்து கேட்கும்போது மஹாகவியின் பாடலுக்கு முழு உருவம் கிடைக்கும்! அதை ஆதாரமாக வைத்து கேதா ஒரு முழு நீள கவியரங்கமே செய்தான். பலமுறை அதன் வரிகளை எழுதித்தா என்று கேட்டேன். இதற்குப்பிறகாவது இரண்டு வரிகள் வருமா?

‘நேரிழையைக் கலந்திருத்தே புலனைந்தும் வென்றான்’ என்று அப்பர் சுவாமிகள் ஈசனை பார்த்து பாடுவார். ஆனால் நிஜத்தில் சிலவேளைகளில் அது தவறுவதுண்டு. ஒரு சில வைத்தியர்களும், கடும் கடவுள் போக்காளர்களும் இந்த விஷயத்தில் வீக்காக இருப்பதுண்டு. வைத்தியர்களும், சாமியார்களும் தான் இதிலே கொஞ்சம் டீப்பாகவும் இறங்குவதும் உண்டு.

பட்டினத்தாரின் ஒரு கதை இருக்கிறது. ஒரு அரசனும் துறவியும் கவிதையில் அடிபடுவது போல. அதை கொஞ்சம் மாற்றி அகல்யாவும் கௌதமும் அடிபடுவதாக பார்ப்போமா. கௌதம் கடவுள் கருவறை என்று டகால்டி விட்டன அல்லவா. அகல்யா சொல்கிறாள்.

'செப்பளவு கொங்கை சேயிழை யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டு
கொப்புளந் தொட்டு குளத்தினில் மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!'

இப்போது கௌதம் முறை. எடுத்து விடுகிறான் ஒரு பாடலை. இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.

'சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே- நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்'

இதை கேட்டவுடன் அகல்யா ஒரே ஒருவரிக்கவிதை சொன்னாள்.

ஷிட்.

15satham2

மீண்டும் மெய் தீண்டுவோம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

உசாத்துணைகள்.
அகலிகை – மஹாகவி
401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் – சுஜாதா
The Immigrant – Manju Kapoor (தொடுப்பு கதையின் மூலம்)
ஆண்டாள் பாசுரங்கள், அவ்வை பாடல் -
http://www.tamilvu.org

Comments

  1. தல..! கலக்கல்..! மொட்டத் தலைக்கும் முழங்காலுக்குமே முடுச்சு போடறவர் நீங்க..! எட்டுத்தொகைக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் முடுச்சு போடா சொல்லித் தரணுமா..!? பின்னரீங்க!!! சங்கப் பாடல்களை கையாண்ட விதம் அருமை.. ! கொஞ்சம் சுஜாதா டச் தெரிகிறது..! அந்த கடைசி ஒரு வரிக் கவிதையில் ஜே.கே என்ற எழுத்தாளன்.. சரி விடுங்க பாஸ் இதுக்கு மேல புகழ்ந்தா வெக்கப் படுவீங்க..!! சூப்பர்.. அடுத்த பகுதிக்கு waiting..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல... குறுந்தொகை வாசிச்ச நாள் முதல் எழுதோணும் எண்டு நினைச்சது. ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பதால் விட்டுவிட்டேன். இப்போது நீங்கல்லாம் இருக்கிற நம்பிக்கையில ஆரம்பிச்சாச்சு.

      Delete
  2. Gowtham should not have married. Like swami ramakrishma, swami vivekananda.
    I appreciate your view in support of ahalihai. our cultre does not not recognise this. Anyway now things have changed.
    avvaiyar's word- etrometteromatteru-superb. But what's the meaning.

    siva

    ReplyDelete
    Replies
    1. Thanks Siva .. you would have figured by now. Gautham -- Kauthama munivar ... Akalyaa - Akalikai :)

      Delete
    2. Really. I did not figure taht out. Thanks to teach me.

      Also you must keep sending to Vikatan. One day you may become like Muttulingham. all the best.

      Siva

      Delete
  3. Wow!!! U r genius JK! – U made my day!!! :)
    Uthayan

    ReplyDelete
  4. மிக துல்லியமாக கருத்தோடு இணைந்து சலிப்பில்லாத நகர்வு..... முன்னர் சிலபல சங்ககால பட்டினத்தார் பாடல்களை படித்திருந்தாலும் இவ்வளவு நெருக்கமாக நினைக்கவில்லை.. மகாகவியின் பாடல்கள் குறித்த ஆதங்கள் உண்மை. இன்றைய பல இளம் படைப்பாளிகளுக்கு அவர் பற்றிய அறிமுகங்கள் இல்லை.... நன்றி தலைவா பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெற்கொழுதாசன். மஹாகவியை பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுதவேண்டும். என்னா கவிஞன் அந்தாளு.

      Delete
  5. Explanation with old books is great. Keep it up J.K

    ReplyDelete
  6. முன்பு விகடனில் தொடராக வந்த ஜெயமோகனின் சங்க சித்திரங்களை நான் வெகுவாக ரசித்தேன். அதற்கு பிறகு சங்கத்தை எனக்கும் புரியவைத்து சுவைக்க வைக்கும் தங்களின் எழுத்துப்பணிக்கு நன்றி. தொடாத பல இடங்களை தொட்டிருக்கிறீர்கள். இன்னும் தழுவி இன்பம் பெருக பகிர்க. அகலிகை விரைவில் எழுத்துருவில் எழுந்தருளுவாள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேதா. அகலிகைக்காக காத்திருக்கிறேன்.

      Delete
  7. Pls try to write to Vikatan...keep sending to them... I want you to become famous man...

    ReplyDelete
    Replies
    1. Thanks .. I sent one, not even an acknowledgement .. I am happy with people like you reading and commenting. Cheers.

      Delete
  8. The success of Kalzzli Kaaddu Ithikaasam is also because of Vairamuthu used the native slang of that people. A lost village.

    My wish list from you is in the future, write about Thalaivar in fully Jaffna slang...:)

    ReplyDelete
    Replies
    1. :) .. Thanks buddy .. would be nice to know your name.

      Delete
    2. Srikanth K ;)

      Delete
    3. Cheers Srikanth. Thanks for the comments again.

      Delete
  9. மஹா கவியையும் குறுந்தொகையையும் அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி அண்ணா. இன்றைய அறிமுகப்படலத்தை நன்றாகவே இரசித்தேன். :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சஞ்சுதன்.

      Delete
  10. Great attempt JK. A great way for us to learn at least bits and pieces of sanga ilakkiyam. I was talking to Ketha on the other day about finding references to study these. Probably I will start off with Sujatha's book

    ReplyDelete
    Replies
    1. Thanks Dhanya .. his book is a good start. Definitely worth a buy. But read few poems a week.

      Delete
  11. Hi Anna, I am reading your blog from start. not finished yet. still finding time to read all your writings.
    Everything is suburb and our style. This one is very good. keep waiting for your writings.
    hopefully finish your all writings soon. have a good day.
    Niruban

    ReplyDelete
    Replies
    1. Thanks Niru .. Nice to know. Its always good to leave a comment or message. These comments give great inspiration to write more and more.

      Delete
  12. Hi Anna, I am reading your writings from start. still not finished. this one is suburb. keep waiting for your writings.
    I like your way of writing. have a great future....
    Niruban

    ReplyDelete
  13. தொடர் ஆரம்பமே கலக்கல் தலைவரே.சங்க இலக்கிய பாடல்கள்,அவற்றில் தங்களின் பரிச்சயம், வெகு பாராட்டுதலுக்குரியது. என்னைப் போன்றவர்களுக்கு சங்க பாடல்களை புரிந்து கொள்ள உங்களின் இந்த தொடர் பெருந்துணையாக இருக்கும் .

    ReplyDelete
  14. நல்ல முயற்சி ஜே.கே., உங்களுடைய உழைப்பு, தமிழார்வம், படைப்புத்திறன் இப்பதிவில் தெரிகிறது. //பெண்களின் உணர்ச்சிகளை பெண்கவிஞர்களே பின்னியிருக்கிறார்கள். ஆண்கள் அல்ல.// இதில் என்ன அதிசயம்....வேறாதவது சொல்லவந்தீங்களா? http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html இதுவும் ஒரு பெண் எழுதிய நேர்மையான படைப்பு, அதே சமயத்தில் படைப்பை தான் பார்க்கவேண்டும், எழுதியது ஆணாக இருந்தாலென்ன,பெண்ணாக இருந்தாலென்ன...பிடித்திருந்தால் வாசிக்கவும் இல்லை என்றால் தவிர்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது வந்து, கம்பரில் இருந்து பாரதி வரை பெண்ணைப்பற்றி அதிகம் ஆண்களே எழுதியிருக்கிறார்கள். ஆனால் பெண்ணைப்பற்றி பெண்ணே துணிந்து எழுதும்போது வெளிப்படும் உணர்ச்சி அலாதியானது என்றே சொல்லியிருக்கிறேன். அதிலே அதிகம் பெண்கள் எழுதவில்லை என்ற ஆதங்கமும் அடங்கியிருக்கிறது.

      மற்றும்படி படைப்பை வாசிப்பதற்கு பின்தளம் தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா? ஆய்வுக்குரியது. பாரதி எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தான் என்பது அவன் கவிதைகளுக்கு வலுச்சேர்க்கிறது. கம்பராமாயணம் போன்ற படைப்புகளுக்கு அது தேவையில்லை.

      Delete
    2. மோகன். லீனாவின் கவிதைக்கு பின்னால் இருக்கும் கோபமும் வார்த்தைப்பிரயோகமும் ஓரளவுக்கு புரிந்தாலும் அதன் தேவை புரியவில்லை. இந்த கவிதை யாருக்கு தேவையோ அவர்கள் வாசிக்கப்போவதில்லை. வாசிப்பவர்களுக்கு தேவையுமில்லை. அதையும் தாண்டி மனத்தாங்கல் தான் அந்த கவிதை என்றால், கவிதையில் இருக்கும் ஒருவித சர்வதேசத்தரம் அந்த மனத்தாங்கலின் நிஜவலியை ஏற்றுக்கொள்ள உறுத்துகிறது. சிலவேளை நான் சென்ற பாதையில் இந்த கவிதையில் சாரல் படாததால் புரியவில்லையோ தெரியாது. இதே கவிதையை இசைப்பிரியா எழுதும்போது வரக்கூடும் வார்த்தைகளை யோசித்துப்பார்க்கிறேன். நெருடுகிறது.

      Delete
    3. பதிலுக்கு நன்றி ஜே.கே. அதிகம் பெண்கள் எழுதவில்லை என்ற ஆதங்கம் புரிந்தது, இருந்தாலும் உறுதிபடுத்திக்கொள்ள கேட்டேன். என்னை பொறுத்தவரை கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக எளிய மக்களுக்கும், பெண்களுக்கும் பல உரிமைகள் மறுக்கப்பட்டது. சமையல் குறிப்பை தாண்டி பெண்கள் (தமிழ்நாட்டில்....ஈழம் பற்றி தெரியாது) ஏதாவது எழுதினால் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியதுதான், உதாரணம் குட்டி ரேவதி, லீனா மற்றும் சல்மா. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் யார் எழுதியது என்று பார்க்கும் நமது குணமும் ஒரு காரணம். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு என்பதை நாம் மறந்து விட்டோம். லீனாவின் அந்த இரு கவிதைகளை சுமார் 4 வருடங்களுக்கு முன் படித்தது...அரண்டுபோய்விட்டேன்....அதன் பின்னர் 22 Female Kottayam என்ற மலையாளப்படம் கிட்டத்தட்ட அந்த உணர்வை தந்தது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .