Skip to main content

கல்லைக்கண்ட அரசியல்வாதி!

 

rock-painter

கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்? 

கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே இருந்திருக்க முடியும்? அதை கற்றதனாலாய பயனே எம் இனம்! எம் இலக்கியங்களில் கல்லுக்கென்று எப்போதுமே தனியிடம் இருக்கும். கல்லும் கவி சொல்லும். கல்லுக்குள் பெண் இருப்பாள். சமயங்களில் கல்லோடு கட்டி கவிஞர்களை கடலிலும் போடுவார்கள். "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா" என்று கல்லை கடவுளாக்கியவர்கள் நம் முன்னோர்கள். அந்தக்கல்லையே கவிப்பொருளாக்கிய அரங்கு இது. தலைப்பு "கல்லிலே கலைவண்ணம் கண்டார்". அரங்கில் கல்லைக்கண்ட விஞ்ஞானியாக கீர்த்தனா, கல்லைக்கண்ட சாமியார்யாக ஆனந்த், கல்லைக்கண்ட கந்தசாமியாக (பாமரன்) ஜெயகாந்தன்
மற்றும் கல்லாய் அமைந்து மறுமொழியை கேதாவும் பகர்ந்தார்கள்.

இதில் என் பங்கு அரசியவாதி. கல்லை அரசியல்வாதியாகவும் அரசியல் கண்ணோட்டத்திலும் நோக்கியிருக்கிறேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (முழு தொகுப்பு கிடைத்தவுடன் பகிர்கிறேன்).  நன்றி.

புதுமைக்கு புடம்போட்டு
இளமைக்கு இடம்கொடுத்து
தமிழ் வாழ வடம் பிடிக்கும் – கேசி
தமிழ் அவையே, தலை வணக்கம்.

கல்லுக்கு அவை அமைத்து
சொல்லுக்குள் பொருள் தொடுத்து
கவிபாட வந்திருக்கும்
கற்றோர்க்கு முதல் வணக்கம்.

சுவையில்லா கவிதைக்கு
கரகோசம் எதுக்கென்று
கல்லாக சமைந்திருக்கும்
சிலருக்கும் ஒரு வணக்கம்.

நானொரு கல்லுளி மங்கன்.
கவிதை எனக்கு,
வரும்.….ஆனா வராது…
சொல்லுக்கும் எனக்கும் காததூரம்.
என்னோடு கவிசொல்லும்
தோழர்களை பார்க்கின்றேன்.
ஒருபக்கம் டோனி அபோட்.
மறு பக்கம் ஸ்காட் மொரீசன்.
ஜூலி பிஷப் கீர்த்தனா.
கேதாரசர்மா கோத்தா.
இன்னிலையில் இங்கெனக்கு
எங்கிருந்து கவிதைவரும்?
பாவமெண்டு ரெண்டு வரி
படகு ஏறி வந்தாலும்,
நடுவழியில் மறிக்கப்பட்ட
அகதியாக திரும்பிவிடும்.

நான் ,
கல் பற்றி கவி சொல்ல,
அதை திருப்பி நீர் எறிய
எதுக்கு இந்த பொல்லாப்பு?
கவிதையை விடுவோம்.
ஒரு கதை விடுகிறேன்.

இது ஒரு கல்லின் கதை.
கல்லு விழுந்த காரணத்தால்
பேரு வந்த ஊரு கதை
யாவும் கற்பனை!

அது ஒரு அழகான
யாழ்ப்பாணத்து
விடியாத அதிகாலை.
பென்னம்பெரிய கல்லு ஒண்டு
கல்வியங்காட்டு சந்தியிண்ட
சென்டரில கிடக்கு எண்டு
வெள்ளனவே வெளிச்சிட்டுது.

கல்லு விழுந்த கதையைகேட்டு
அள்ளுப்பட்டு வந்த சனம்
சங்கக்கடை வரிசை போல
தள்ளுப்பட்டு நிற்கிறது.

அம்மாமார் சோட்டியோட
அப்பாமார் சாரத்தோட
அக்காமார் ஆரத்தோட
அண்ணாமார் ஈரத்தோட!

அவசரத்தில் வந்தவரும்
விளக்காத வாயால
ஆவெண்டு பார்த்ததில
ஊரெல்லாம் நாற்றத்தில.

ஏது இந்த கல்லு?
எப்படி இங்கு வந்தது?

இளந்தாரிப் பெடியள் வந்து
உருட்டிப்பார்க்க
அசையவில்ல.
ஆச்சாரி மார்வந்து
சுரண்டிப்பார்க்க
தங்கமில்ல.
பரிவட்டகல்லேண்டு
தூக்கிப்பார்க்க,
முடியவில்லை.
கரண்டியில பாலு ஊத்தி
குடுத்துப் பார்த்தா
கடவுள் இல்ல!

ஏது இந்த கல்லு?
எப்படி இங்கு வந்தது?

வீரர்கள் பலர் சேர்ந்து
ட்ரோஜானின் குதிரைபோல
ஊருக்குள் வந்திருக்கும்
எம்மினத்தின் மித்திரரோ?

தலைவனுக்காய் காத்திருந்து
காணாமல் தாளாமல்
பூலோகம் உருண்டுவந்த
நவயுகத்து அகலிகையோ?

பருப்போடு அரிசி எண்டு
பொறுப்பற்ற அயல்தேசம்
நம்தலையில் உருட்டிவிட்ட
கருங்கல்லு பாறையிதோ?
பிரேமதாசா போட்ட பீக்குண்டா?
இல்லை,
நாமே நம் தலையில் போட்டுக்கொண்ட
அணுகுண்டோ?

எட்ட நின்று பார்த்த சனம்
இன்னும் நல்லா குழம்பிப்போச்சு.
இதுக்கு மேலே தாமதித்தால்
இன்னல் ஏதும் வருமென்று
அவசரமா அரசியலின்
தலைவரையும் அழைத்தாச்சு.

அரசியல்வாதி வருகிறார்.
பராக் பராக்.
வெள்ளைச் சட்டை.
வெள்ளை வேட்டி
வெளிச்சம் பட்டா
கிளப்பும் பட்டை.
தொங்குதாடி மீசையோட
கட்டைதுரை வருகிறாரு.

பராக் பராக்.
கல்லா மனிதராய்
பேயாய் கணங்களாய்
எல்லாப் பிறப்பும்
ஓட்டுக்காய் பிறந்திழைத்து
படுகுழியில் எம்மினத்தின்
விடுதலையை புதைத்தொழித்த
பெருமகனார் வருகிறார்.
பராக் பராக்.

வந்தவரு மலையளவு
முன்னிருந்த கல்லைக்கண்டு
கண்விரிய பார்த்தவரு.
கால் நனைய நிற்கிறாரு.
நானொருவன் இங்கிருக்க
பாறையினை கொண்டுவந்து
போட்டவனை கண்டறிந்து
போடவேண்டும் என்கிறாரு.

ஈழத்தில் மீதிருக்கும்
எறிபத்த நாயனார்
எனைவிடுத்து யாரு உண்டு?
தாடியினை தடவுறாரு.

கல்லு வெட்டி போட்டிடவும்
நாயை வெட்டி போட்டிடவும்
என்னைவிட்டால் இந்த ஊரில்
விண்ணன் எவனும் இருக்கிறானோ?
நம்மாளு குழம்பிவிட்டார்.

கிட்டக்க சென்று
தட்டொன்று தட்டியும்
கெட்டியாய் நின்றது கல்லு.
வெட்டியும் கொத்தியும்
திட்டியும் பார்த்தார்.
சிலமனும் இல்லை.
முன்ன பின்ன அசையவுமில்ல.
என்ன இது கல்லு?
இத்தனை அடிகளையும்
வலியோடு சுமக்கிறதே.
இது நம்
ஈழத்து தமிழனின்
கூர்ப்படைந்த பிறப்போ?

சந்தேகம் வந்தது.
கூட்டமாக கல்லெடுத்து
கூரை எல்லாம் விட்டெறிந்த
சாதுக்களை நினைத்தபடி
வீம்புக்கு கல்லெறிந்தார்
கம்மென்று இருந்தது கல்லு.
நெருப்பெடுத்து
எரித்தும் பார்த்தார்.
கல்லு சிரித்தது.
என்ன இது?
அடித்தும் எரித்தும்
அசையாமல் இருக்கிறதே.
இணக்க அரசியல் செய்யும்
ஈழத்து முசுலிமோ?

இந்தப்பக்கம் ஆராய்ச்சி
இப்படியா போகையிலே
அந்தப்பக்கம் ஆமத்துறு
கூட்டம் வந்து நிற்கிறது.

தெற்கிலிருந்து வண்டியேறி
தெய்யோ என்று வந்திறங்கி
அய்யோ என்ற கூட்டத்தினை
நையப் புடைத்து துரத்திடிச்சு.

வரலாறு வழமைபோன்று
வலியவனால் புனையப்பட்டது.

இது
வெறும் கல்லு அல்ல.
அவரின் பல்லு என்று
மகா பள்ளு ஒன்று
உடனே பின்னப்பட்டது.
பாறை அருகில் கூரை போட்டு
அரசு மரத்து கொப்பு ஒன்று
அரை நொடியில் நாட்டப்பட்டு
அந்த இடம் சுடப்பட்டது.

கல்லு விழுந்த காரணத்தால்
கல் வியங் காட்டுக்கு
கல்லோயா என்றபெயர்
மறுகணமே இடப்பட்டது.
ஆரியகுளத்து தாமரை மலர்கள்
ராணுவ வண்டியில் வந்து இறங்கி
பந்தலோடு பன்சலையும்
பத்து நொடியில் நடப்பட்டது.

இதைக்கண்ட நம்மாளு
எட்டு நாலு பல்லு தெரிய
பிக்குமாரு கூட்டத்தோட
கூடிக்குலவி நிற்கிறாரு.

காலு மேல காலு போட்டு
வாழ வேண்டும் எண்டிருந்தா
கல்லு மண்ணு பார்க்காம
காலில் விழ வேணுமெண்டு

காணி நிலம் எமக்கு வேண்டாம்
சோறு மட்டும் போதும் என
வீணி வடிய நம்ம வீரர்
அடிக்கிறாரு கிரிபத்து.

கல்லைக்கண்டும் நாயைக்கண்டும்
அடிக்க ஒரு நாதியற்று
நின்ற சனம் அத்தனையும்
நிராயுதபாணியாச்சு.

இந்தப்பெருமை எங்களுக்கு
இன்று நேற்று வந்ததில்லை.
ஏழு நூறு நண்பரோடு
ஆழி தாண்டி வந்தவனை
கூடி நின்று பார்த்ததாலே - நாட்டை
கோட்டை விட்ட கூட்டம் இது.

அன்று தொட்டு இன்று வரை
கல்லைக்கொடுத்து அடிவாங்கி
நாடு தாண்டி ஓடிவந்து
கூழு குடிக்கும் கோஷ்டி இது.

ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு
நன்றி சொல்லி செல்லுகிறேன்.

அரிசிக்குள்ளே புதைந்திருக்கும்
குறுனிக்கல்லை பொறுக்கிடவே
மலையெடுத்து குடைபிடிக்கும்
மாயக்கண்ணன் தேவையில்லை.

இது புரிந்தால் எல்லோரும்
எம்மருகே விழுந்திருக்கும்
கல்லைநகர்த்தி போடுவதில்
கஷ்டமேதும் இனியில்லை.

நன்றி வணக்கம்.


நன்றி : கேசி தமிழ் மன்றம்

Comments

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...