Skip to main content

மன்னிப்பாயா?

 

mar08

காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது.  இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்.

"இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும்
நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்?
வாழ்க்கை என்னும் பயணம்.
இதை மாற்றிடவா முடியும்?"

தொண்ணூறுகளில் இந்த பாடலை முணுமுணுக்காமல் எவனும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டான். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது.

குப்புசாமி ஞானமணி. தமிழ்நாடு வேலூரைச்செர்ந்தவர். யார்? எவர்? என்று எனக்கு தெரியாது. "குட்டி” பற்றிய பதிவைப்பார்த்துவிட்டு "அடுத்த தலைமுறைகளுக்காக தம்முயிரை துறந்தவர்களை நினைக்க நினைக்க கண்ணீர் தன்னாலே கலங்கி வழிகிறது" என்று எழுதியிருந்தார். முகம்தெரியாத ஒரு மனுஷிக்காக வடிக்கும் கண்ணீர். அந்தப்பதிவை நான் எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு பிறகு எத்தனையோ முறை படலையில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நூற்றுக்கணக்கில் எழுதியாயிற்று. இப்போது திடீரென்று இந்த முகம் காணாத மனிதர் நேற்று அதை வாசித்து அழுதிருக்கிறார். அவர் அப்படி அழுது கொண்டிருக்கையில், அதை எழுதிய நானோ இந்தவாரம் எதை எழுதலாம்? என்று யோசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். எழுதும்போது என்னோடு கூட இருந்த உணர்வு ஆழ்மனதுக்கு மீண்டும் திரும்பிப்போய்விட்டது. வாசித்தவருக்கு அதே ஆழ்மன உணர்வு நேற்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்த அபத்தம் புரிய கொஞ்சம் சலிப்பும் கூடவே வருகிறது.

ஒருமுறை மாவீரர் தினத்துக்கு நண்பன் ஒருவனோடு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, எனக்குத் தெரிந்த, முகம் அறிந்த, போரில் மரணித்தவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டுவந்தேன். அவர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு பற்றியும் சொன்னேன். நான் சொல்லும்போது அதில் ஒரு சின்னத்தனமான பெருமையும் இருந்தது. "பார்த்தியா இவரை எல்லாம் எனக்கு தெரியும்" என்கின்ற பெருமை. பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்தவன், விடைபெறும்போது சாதாரணமாக சொன்னான்.

"எண்ட தம்பியும் இப்பிடித்தான் அடிபாடு ஒண்டில செத்திட்டான். வெளிய தெரிஞ்சா பிரச்சனை எண்டு ஒருத்தருக்கும் சொல்லுறதில்லை "

பளார். 

மாவீரர் தினமன்று திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஊரில் அப்போதெல்லாம் பிரமாண்டமாக நடக்கும். எல்லோருடைய படங்களும் எங்கேயோ ஏதோ ஒரு சந்தியிலாவது இருந்திருக்கும். இப்போது வெளிநாடுகளில் சிறிய அளவுகளில். இருபது முப்பது பேரின் படங்களை வைத்து செய்யப்படும் அஞ்சலிகள். கூட்டத்துக்கு வருகின்ற எல்லோரும் ஒவ்வொரு படங்களையும் உற்றுப்பார்த்துக்கொண்டு போவார்கள். அவற்றில் எதையோ  அவர்கள் தேடுவது போல இருக்கும். வேறொன்றுமில்லை. தம் பிள்ளையோ, அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ அங்கே படங்களில் இருக்கிறார்களா? என்கின்ற தேடல். அனேகமாக அவர்கள் தேடும் படங்கள் இருக்காது. ஆனாலும் அழுவார்கள். அதற்கு அர்த்தங்கள் ஏராளம். எழுதி விளக்கக்கூடாது. முடியாதது.

நான் அப்படியான சந்தர்ப்பங்களில் யாரைத் தேடுவேன்?

அங்கிருந்த படங்களில் இருக்கும் எல்லோருமே எனக்காக இறந்தவர்களே. இல்லாதவர்களும் எனக்காக இறந்தவர்கள். என் நண்பனின் தம்பியும் எனக்காகத்தான் இறந்திருக்கிறான். பெயர் தெரியாது.  அவசரத்தில் அவனிடம் கேட்கவும் இல்லை. அவன் வீரவேங்கையா? 2ம் லெப்டினன்டா? லெப்டினன்டா? கப்டனா? ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதற்கு மேலே என்றால் தெரிந்திருக்கும். இப்படி ஒருவர் இல்லை. இருவர் இல்லை. ஆயிரக்கணக்கில், நமக்காக இறந்தவர்கள்.

என் அப்பாவோடு நான் நிறைய சண்டை பிடிப்பேன். அம்மாவை ஏசியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதட்டப்படுவதும் நான்தான். மனைவி மீதான பாசமும் அப்படித்தான். சகோதரங்கள், நண்பர்கள் என்று எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மீது அபரிமிதமான பாசம் இருக்கிறது. அவர்களுக்காக என்னவெல்லாமோ செய்யத் தலைப்படுகிறோம். நாம் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தபோது எம்மை பாதுகாத்த குடும்பம் எனக்கு இன்றைக்கும் கடவுள் போன்றது. ஊருக்குப்போனால் அவர்கள் வீட்டில் தலைகாட்டாமல் திரும்புவதில்லை.

என் சொந்த அக்கா அண்ணன் எல்லோருமே பிறப்பாலே எனக்கு உறவானவர்கள். மாவீரர்கள் எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள். இறந்து நம்மோடு கூடப்பிறந்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல. போரிலே காயப்பட்டு, காணாமல் போய், குடும்பங்களை தொலைத்து, உருக்குலைந்து, சின்னாபின்னப்பட்டு .... இதெல்லாமே நமக்காக செய்தவர்கள். எல்லோருமே நமக்கு உறவுதான். ஒரு பாடல் வரி ஞாபகம் வருகிறது.

யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே.

யோசித்துப்பார்க்கிறேன். ஒரு காதலன் காதலிக்கு சொல்லுகின்ற உச்சப்பட்ட வார்த்தை "நான் உனக்காக உயிரைக்கூட கொடுப்பேன்". எப்போவாவது கதைகளிலோ திரைப்படங்களிலோ இதைப்பார்க்கும்போது அபத்தமாக இருக்கும். எவன் இந்தக்காலத்தில் உயிரை எல்லாம் கொடுக்கப்போகிறான்? ஆனால் இவர்கள் எல்லோருமே எமக்காக உயிரைக்கொடுத்தவர்கள். இந்த சொந்தத்தை நாங்கள் இலகுவில் மறந்துவிடுகிறோம். பெற்றதாய்க்கு கூட தன் குழந்தைகளில் யாரோ ஒருவரிடம் அதிக பாசம் இருக்கும். அது இயல்பு. ஆனால் இவர்களிடம் அந்த சிந்தனையே இல்லை. எம்மை வைத்து அரசியல் செய்வார்களா? மறந்துவிடுவார்களா? தம் குடும்பம் என்னாகும்? எந்த யோசனையும் இல்லை. என் பெயர் கூட இவர்களுக்கு தெரியாது. ஆனால் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். கோபம் வருகிறது. சேர்ட்டு கொலரைப்பிடித்து உலுக்கிக்கேட்கவேண்டும் போன்றிருக்கிறது. எதற்கு? நான் யார் உங்களுக்கு? எனக்காக ஏன் இப்படிப்போய் இறந்தீர்கள். உங்களை நாங்கள் அவனா? இவனா? என்கின்ற அரசியலுக்குள் அடக்கிவிடுகிறோம். உங்கள் பெயரைச்சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று சீண்டாமல் இருக்கிறோம். இந்தக் கையாகாதவனுக்காக ஏன் இறந்தீர்கள்?

இதை எழுதும்போதும் "இவன் ஏன் இதை எழுதுகிறான், இன்றைக்கு மாவீரர் தினம் இல்லையே, இதற்குள் ஏதாவது அரசியல் இருக்குமோ?" என்று யோசிக்கிறோம். நானே யோசிக்கிறேன். சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன திடீரென்று? என்றால், அதுதான் மனிதமனம். எப்போதோ இறந்த அன்னைக்காக திடீரென்று அழுபவர்களை கண்டிருக்கிறோம். அவர்களிடம் எதுக்கு திடீரென்று அம்மா ஞாபகம்? என்று கேட்கமுடியாது. அது எப்போதும் வரும். சிலவேளைகளில் எதுக்கு வேண்டாத வேலை? என்கின்ற கோழைத்தனத்தை மீறியும் வரும். அதுபோலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மாவீரர்வாரம் வேண்டியதில்லை. நம் மனத்துக்கு தர்க்கங்கள்  செய்யத்தெரியாது. சில கணங்களுக்காக உணர்ச்சிவசப்படவே முடியும். அது எக்கணத்திலும் நிகழும். நாம் அழும்போது உலகத்தில் இன்னொருவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிரிக்கும்போது எங்கோ ஒருவீட்டில் ஒப்பாரி கேட்டுக்கொண்டே இருக்கும். இது நியதி. அவர்கள், இவர்கள், தவறு, சரி இதெல்லாமே அரசியல் சார்ந்தது. அது வேறு. அதெல்லாமே ஆராயப்படவேண்டியதுதான். ஆனால் எந்த அரசியல் பகடைக்குள்ளும் இவர்களை நாம் இட்டு துகிலுரிக்கக்கூடாது. அப்படி உரித்தாலும் உரிபடுவது நாமே ஒழிய அவர்கள் அல்ல.

ஆனால் நாங்கள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக  எம்மோடு சேர்த்து இவர்களையும் துகிலுரிக்கவே முயலுகிறோம். இருக்கிறோம். மற்றவனை விட நாமே அதிகமாய் அதை செய்கிறோம். இதை படம் பிடிக்க சனல் 4 தேவையில்லை. தினம் தினம் எங்கள் வீடுகளிலேயே நிகழ்கிறது.

நண்பர் குடும்பம் ஒன்று சென்றவாரம் இலங்கை சுற்றுலா சென்று திரும்பியது. சந்திரமௌலீச்சரம் உட்பட அத்தனை ஈச்சரங்களுக்கும் சென்று வந்தோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஆர்மிக்காரங்கள் கூட நல்லா தமிழ் கதைக்கிறாங்கள் என்றார். ஆனால் அவர் மகனால் தமிழ் பேசமுடியாது. என்ன ஒரு முரண்நகை இது. ஒருபுறம் நமக்காக, தமிழுக்காக உயிரை மாய்த்தவர்கள். இன்னொருபுறம் அவர்கள் யாருக்காக உயிரை மாய்த்தார்களோ அவர்கள் பரம்பரை தமிழை பயிலவில்லை. கொன்றவன் தமிழ் பயில்கிறான். அதுதான் இந்த முரண்நகைகளின் உச்சம். 

எம் நிர்வாணங்களை நிலைக் கண்ணாடி காட்டும்போது நமக்கே அவமானமாக இருக்கிறது. அவமானம் உச்சமாகி குற்ற உணர்ச்சி மேலோங்கினால் சிலர் தம்மைத்தாமே குத்தி இரத்தம் வரவைப்பார்கள். தனிமையை நாடுவார்கள். கோபம் வரும். கழிவிரக்கம் வரும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி உண்டு. நமக்கு தெரிந்தது இப்படி எழுதுவது. இதெல்லாமே இயலாமையே. "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசிக்கும்போது இந்த இயலாமைக்கான மூலம் ஓரளவுக்கு தெளிவானது. அதிலே மொரி ஒரு கருத்து சொல்லுவார்.

"முதலில் நீ உன்னை மனப்பூர்வமாக மன்னிக்கப் பழகவேண்டும்"

எம்மை நாம் மன்னிக்காவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. காலம் பலதை மறக்கடிக்கச்செய்யும். மறந்துபோவதால்தான் நாலு வேளையும் நமக்கு வயிறு செரிக்கிறது. ஆனால் மறப்பதைப் போன்றதொரு துரோகம் வேறொன்றுமில்லை.  மன்னிக்க வேண்டும். நம்மை. ஒருகணம் கண்ணைமூடி நாம் செய்த தவறுகளை மன்னிக்க முயன்றுபாருங்கள். இயலாது. நம்மை நாமே மன்னிப்பதென்பது சாதாரண விடயம் இல்லை. மன்னிப்பதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் தகுதிவேண்டும். அது மட்டும் முடியுமானால் நாமெல்லோருமே என்றைக்கோ நல்லவராகியிருப்போம். “மன்னிப்பவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன் பெரிய மனுஷன்” என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும். இங்கே இருவருமே நாமாக இருக்கையில் நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும்?  அது முடியாமலேயே வாழ்க்கை முழுக்க குற்ற உணர்ச்சிகளோடு சுற்றித்திருந்து தம் வாழ்வையும் சூழவிருப்பவர் வாழ்வையும் துன்புறுத்துபவர்களே இங்கே அதிகம். தன்னை மன்னிக்க முடியாதபோது அது ஏற்படுத்தும் கோபமும் கழிவிரக்கமும் மற்றவர்கள் மீது திரும்புகிறது.

அடுத்த பாடல் வருகிறது.

“எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது”

மன்னிப்பாயா?

*****************

பாடல் சுட்டிகள்
இங்கு வந்து பிறந்தபின்னே
எம்மை நினைத்து

Comments

  1. வார்த்தைகள் இல்லை.... மாவீரர்களின் குருதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அபலைக்கு... அழுகை தாண்டி ஏதாவது உணர்வு இருந்தால் சொல்லுங்கள்... மன்னிப்பு தாண்டி ஏதாவது உணர்வு இருந்தால் அதன் பௌர் சொல்லுங்கள்... அவை தான் மாவீரர்களுக்கு பொருந்தும்....

    ReplyDelete
  2. ஊரில் இருந்த நாட்களில் ஒரு நாள் கூட மாவீரர் தினத்துக்கு போனதில்லை (அப்பா அம்மாவின் பயம்) ஆனால் இங்கு வந்த பின் போகின்றோம் .சில வேளை நினைத்தால் வெட்கமாக இருக்கும் . அங்கு இருந்த போது இல்லாத நாட்டுப் பற்று இப்ப எப்படி வந்தது என்று கேட்டால் .....தலை குனிகின்றேன் ஆனால் ஏதோ ஒரு நன்றிக்கடன் . இதையாவது செய்கிறோம் என்று திருப்தி.இதையும் செய்யாவிடில் காலப்போக்கில் இதுவும் அழிந்து விடுமோ என்ற பயம்.

    ReplyDelete
    Replies
    1. அதைக்கூட நான் சிலதடைவகள் மிஸ் பண்ணியிருக்கிறேன் :(

      Delete
  3. நீங்கள் எப்போதும்போல அருமையாக எழுதிவிட்டீர்கள்.
    நான் எப்போதும்போல தனிமையில் வாசிக்கின்றேன் - என்னை
    Uthayan

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்லுறதெண்டு தெரியேல்ல அண்ணே :(

      Delete
  4. ஒரு வாசகருடைய கருத்தை பதிவிடாமல் தவிர்த்திருக்கிறேன். அவர் பெயரைக்குறிப்பிட மறந்துவிட்டார். அவருடைய பார்வையை மறுக்கவில்லை. அந்த விமர்சனங்கள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் இந்தப்பதிவில் அந்தவகை அரசியல் விமர்சனங்கள் வேண்டாம் என்று தோன்றுகிறது. கருத்துரையை பதிவிடாமைக்கு அந்த வாசகரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

    ஜேகே
    jkpadalai@gmail.com

    ReplyDelete
  5. ❤♥️🧡💙💜💛💚

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”