விக்கி மாமா விக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி. அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,. அவர்களுக்கும் தெரியாது. எண்ணினால் தரித்திரம் என்று எம்மையும் எண்ண விடமாட்டார்கள். நான்கரை மணிக்கே எழுந்து, பத்திருபதுபேர் சேர்ந்து பால் கறப்பார்கள். வெவ்வேறு சைஸ் பானைகளில் கறவை நடக்கும். ஆறரை, ஏழு மணி வரைக்கும் நீடிக்கும். கறந்த பாலில் தேத்தண்ணி ஊற்றி பட்டிக்கே கொண்டுவருவார்கள். தம்பிராசா அண்ணை பட்டியை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குப் போகும்வரைக்கும் பால் கறக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நாளுக்கு இருநூறு, முன்னூறு லீட்டர் வரைக்கும் சமயத்தில் பால் கிடைப்பதுண்டு.