Skip to main content

கனவு நனவாகிறது

 

Untitled

 

விக்கி மாமா

விக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய  பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி.  அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,. அவர்களுக்கும் தெரியாது. எண்ணினால் தரித்திரம் என்று எம்மையும் எண்ண விடமாட்டார்கள். நான்கரை மணிக்கே எழுந்து, பத்திருபதுபேர் சேர்ந்து பால் கறப்பார்கள். வெவ்வேறு சைஸ் பானைகளில் கறவை நடக்கும். ஆறரை, ஏழு மணி வரைக்கும் நீடிக்கும். கறந்த பாலில் தேத்தண்ணி ஊற்றி பட்டிக்கே கொண்டுவருவார்கள். தம்பிராசா அண்ணை பட்டியை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குப் போகும்வரைக்கும் பால் கறக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நாளுக்கு இருநூறு, முன்னூறு லீட்டர் வரைக்கும் சமயத்தில் பால் கிடைப்பதுண்டு.

அந்தந்த நாள் விற்றதுபோக மிச்சமே ஒரு ஐம்பது, நூறு லீட்டர் தினமும் தேறும். அதைச் சேமித்து வைத்து, தயிராக்கிப் பின்னர் கடைந்து நெய் எடுக்கவேண்டும். தயிர் சேர்ந்துவிட்டால் கடைவது சிக்கலாகிவிடும். எவ்வளவென்று கடைவது? சின்ன பாத்திரத்துக்குள் ஒரு மத்தை வைத்து கடைய வெளிக்கிட்டால் ஆயுசு முடிந்தாலும் கடைந்துகொண்டிருப்பீர்கள்.

விக்கி மாமா வெறும் பண்ணையார் மாத்திரமல்ல. கடும் மண்டைக்காயும் கூட. அவர் உருவாக்கிய சூடு மிதிக்கும் கருவி வன்னிப்பகுதியிலே அப்போது மிகப்பிரபலமானதாக இருந்தது. அந்தச்சமயத்தில் வன்னியில் டீசல் மண்ணெண்ணெய் வரத்து மிக அரிது. நெல் அறுப்புக் காலங்களில் சூடு மிதிப்பது பெரும் பாடாகிவிடும். டிராக்டரில் மிதிப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கட்டுப்படியாகாது. மாமா இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார். மாடுகள் இழுப்பதற்கு ஏதுவாக ஒரு சூடு மிதிக்கும் கருவியைக் உருவாக்கினார். விஷயம் மிகவும் சிம்பிளானது. பெரிய மர உருளைகளை மாடுகளைக்கொண்டு இழுக்கச்செய்யும் புராதன டெக்னிக். உருளை எவ்வளவுக்கு எவ்வளவு பாரமோ அந்தளவுக்கு சூடு மிதிப்பது எளிதாகும். ஆனால் பாரம் கூடினால் மாடுகளால் உருளையை இலகுவாக இழுக்கமுடியாது. பின்னர் சூடு மிதிப்பு மிக மெதுவாகவே நடக்கும்.  அது ரிஸ்க். இடையில் மழை வந்துவிட்டால் அறுத்த நெல்கதிர்கள் எல்லாம் பாழாகிவிடும்.

மாமா ஒரு பிளான் பண்ணினார்.

அந்த உருளையின் நடு அச்சை உராய்வு நீக்கிகளைக் கொண்டு உருவாக்கினார். வினைத்திறன் அதிகரித்தது. மர உருளையின் இடையிடையே டிராக்டர் சில்லுப் போல பல்லு பல்லாக வெட்டினார். அதனால் குறைந்த பாரத்தில் அதிக வலுவில் அழுத்தம் பிரயோகிப்பட்டது. விளைவு எதிர்பார்த்ததைவிட பலமடங்கு பயனைத் தந்தது. மாடுகளும் களைப்பில்லாமல் இரவு பகலாக சூடு மிதித்தன. அது பெரும்போக விளைச்சல். அக்கம் பக்கத்து விவசாயிகள் எல்லாம் சூடு மிதிக்க வழியில்லாமல் திணறிக்கொண்டிருந்தவர்கள், மாமா இந்தக் கருவியை உருவாக்கியதும், தமக்கும் வேண்டும் என்று ஓர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். பத்திருபது கருவிகள் இப்படி “மார்க்கட்டுக்கு” போயின. இவ்வளவு பேமஸ் ஆனாலும் மாமா எந்த விவசாயிகளிடமும் பணம் வாங்கவில்லை. சில நாட்களில் விவசாயிகளே தம் பாட்டுக்கு அந்த கருவியை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள். மாமா அலட்டிக்கொள்ளவேயில்லை. பொருண்மியக்காரர் விசயம் கேள்விப்பட்டு வந்து கருவியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். “வெளிச்சம்” பத்திரிகையில் “வட்டக்கச்சியில் ஒரு குட்டி விஞ்ஞானி” என்று மாமாவின் படம்போட்டு கட்டுரை ரிலீஸ் ஆனது. மாமா படித்தது பத்தாம் வகுப்பு வரைக்குமே.

அடுத்ததாக இந்த தயிர்ப்பிரச்சனைக்கு தீர்வு காண  மாமா ஒரு புரொஜெக்டைத் தொடங்கினார். நான்தான் ரிசெர்ச் அசிஸ்டன்ட். பேசிக்கலி எடுபிடி.

ஐடியா இதுதான். கலன் கலனாகத் தேங்கிக்கிடக்கும் தயிரை ஒரு வழிப்பண்ணுவது. அதைக் கடைவதற்கு ஒரு தானியங்கி இயந்திரத்தைச் சரிக்கட்டுவது. அதற்கு இயந்திரமாகத் தண்ணி இறைக்கும் பம்பைப் பாவிப்பது என்று முடிவானது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். மோட்டர் பம்பின் ஒருபக்கம் ஒரு விசிறிச்சில்லு இருக்கும். அதில் கயிற்றைச் சுற்றி ஒரு இழு இழுத்தால், மற்றப் பக்கத்தாலே இருக்கும் பைப்பில் தண்ணீர் கிணற்றிலிருந்து இறைக்கப்பட்டு தோட்டத்துக்குள் பாயும். இழுப்பது எல்லோருக்கும் தெரியும். மற்றப்பக்கம் எப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது? அதற்குக் காரணம் அமுக்க வித்தியாசம். அதை ஏற்படுத்துவது உள்ளே இருக்கும் இன்னொரு விசிறிச்சில்லு. அது சுற்றும் சுற்றிலே வேகமாக கீழிருந்து இழுபடும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேலே பாயும்.

மாமா அந்த பைப்பைக் கழற்றி அகற்றிவிட்டு, அந்த விசிறிச்சில்லு உள்ளே நுழையக் கூடியவாறு ஒரு மண்ணெண்ணெய் பரலை எடுத்து ஓட்டை போட்டார். செருகியபின்னர் ஓட்டையை லீக் ஆகாமல் அடைத்தார். இப்போது சில்லு மட்டும் பரலுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டு நிற்கிறது. மீதி மோட்டர் பம்ப் வெளியே இருக்கிறது. பரலுக்குள் தண்ணீர் நிரப்பிவிட்டு மோட்டரை ஸ்டார்ட் பண்ண, சில்லு மிகவேகமாகச் சுற்ற, தண்ணீர் சலசலத்தது. எலிக்கு பரிசோதித்ததில் வெற்றி.

அடுத்ததாகத் தயிரைக் கொண்டு டெஸ்ட் பண்ணவேண்டும்.

“களவாப்போய் தயிர் பாத்திரங்களை எடுத்துவா” என்று மாமா சொன்னார். யாரும் பார்க்காத சமயம் ஐந்தாறு தயிர்ச்சட்டிகளை எங்கள் மெக்கானிக் கொட்டிலுக்குள் லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன். தயிரை பரலுக்குள் ஊற்றிவிட்டு மோட்டரை ஸ்டார்ட் பண்ணினோம். தயிரின் கனம் தாங்காமல் மோட்டர் திணறியது. தயிரைக் குறைத்துவிட்டு ஸ்டார்ட் பண்ணினால், மூஞ்சி முழுக்க தயிர். சுத்தின வேகத்தில் தெறித்தது.

நெய்யுக்குரிய எந்தச் சிலமனும் இல்லை.

அடுத்த ஐடியா. சில்லைக் கழட்டி, சில்லு இருந்த இடத்தில் கனம் குறைந்த ஷெல் குண்டின் பின் செட்டையை, அதன் நாக்கை ஒருவிதமாக வளைத்துவிட்டுக் கொழுவினோம். இப்போது மோட்டரை ஸ்டார்ட் பண்ணினால் தயிர் பறக்கவில்லை. கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பத்து செக்கனில் ஏதோ நுரைக்குமாப்போல. “தொட்டுப்பார்” என்றார் மாமா. கை வைத்தேன். கசகசத்தது. வாயில் வைத்தேன்.

சுத்தமான பசும்பால் நெய்.

இதெல்லாம் நடக்கும்போதே, ஊரெல்லாம் விஷயம் பரவி, ஆட்கள் டெமோ பார்க்கக் கூடிவிட்டார்கள். ஆனால் மாமி மட்டும் மாமாவைப் பற்றித் தெரிந்தோ என்னவோ குசினிக்குள் இருந்தபடி கூப்பாடு வைத்துக்கொண்டிருந்தார்.

“இது தயிருக்குப் பிடிச்ச சனியன்”

மாமாவுக்கு பெருமை பிடிபடவில்லை. உற்சாகத்தில் “மிச்சமிருக்கிற எல்லாத் தயிரையும் எடுத்தொண்டு வா” என்று சொன்னார். குசுனிக்குள் நுழைந்தேன். மாமி செமையாத் திட்டித்தீர்த்தார்.

“அந்த மனுஷனுக்குத்தான் வேலையில்லை எண்டா உனக்கென்ன மதி? போய் புத்தகத்தை எடுத்துப் படியன்”

ஒவ்வொரு விஞ்ஞானியின் மனைவியும் இப்படித்தான் இருப்பார்கள் என்று மனதுக்குள் நினைத்தபடி, சத்தம் போடாமல் தயிர் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தேன். பரல் முழுக்க தயிரை விட்டு நிரப்பி, வேகத்தைச் செட் பண்ணி, மோட்டரை ஸ்டார்ட் பண்ண, விசிறி சுற்றத்தொடங்கியது. வேகத்தைக் சடுதியாகக் கூட்டிக்குறைத்தோம். கொஞ்சநேரத்தின் நெய் திரண்டுவரத்தொடங்கியது. ஊரே ஆவேன்று பார்த்தது. மாமிகூட வந்து எட்டிப்பார்த்தார். “பொருண்மியத்துக்கு சொல்லி அனுப்பி வெளிச்சத்தில வரவைக்கோணும்” என்று யாரோ முணுமுணுத்தார்கள். என் பெயரையும் “உதவியாளர்” என்று போடச்சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

கொஞ்ச நேரத்திலேயே திரண்ட வெண்ணெய் உருகத்தொடங்கியது.

மோட்டரின் ஹீட் மண்ணெண்ணெய் பரலில் ஏறி வெண்ணையைப் பதம் பார்க்கத் தொடங்கியதுதான் வெண்ணெய் உருகக் காரணம். என்ன செய்யலாம் என்று மாமா கேட்க, என் பத்தாம் வகுப்பு விஞ்ஞானம் ஞாபகத்துக்கு வந்தது. மொட்டருக்கும் டின்னுக்குமிடையில் ஒரு பலகையை வைப்போம். பலகை வெப்பத்தைக் கடத்தாது என்றேன். மாமா நம்பிக்கையில்லாமலேயே பலகையை வைத்தார். ம்ஹூம். பலனில்லை. விசிறியில் லிவரைப் நீளமாக்கி பரலை மோட்டரிலிருந்து தள்ளி வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.

Ghee_Clarifier

பரலை தள்ளி வைப்பதற்குள் நாங்கள் மீண்டும் இடம்பெயர்ந்துவிட்டோம். மாமா பின்னர் இறுதிப்போரின்போது காயப்பட்டு வவுனியா ஆஸ்பத்தியில் கிடந்து கஷ்டப்பட்டு, இப்போதுதான் மீண்டும் குடும்பம் வட்டக்கச்சியில் மெதுவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. சென்ற வருடம் அவர்கள் வீட்டுக்குப் போனபோது அந்தத் தயிர் கடையும் மெஷின் என்னானது? என்று கேட்டேன். சிரித்தார். சிதிலமாகிக் கிடந்த மெக்கானிக் கொட்டிலுக்குள் கூட்டிப்போனார். புதுபுது ஐடியாக்கள். மெஷின்கள். மாட்டுவண்டிலில் ட்ராக்டர் சில்லுப் பூட்டப்பட்டிருந்தது. நாற்று நடும் இயந்திரம் கூட முயன்றிருக்கிறார். எல்லாம் முயற்சி செய்யப்பட்டு வேலை செய்கிறது என்றவுடன், அதை அப்படியே போட்டுவிட்டு அடுத்த ஐடியாவுக்குத் தாவியிருக்கிறார்.

விக்கி மாமா ஒரு விஞ்ஞானி.



அருணாசலம் முருகானந்தன்

முருகானந்தனின் குடும்பம் மிகவும் ஏழைக்குடும்பம். ஊர் கோயம்புத்தூர். தகப்பன் சாதாரண நெசவுத்தொழிலாளி. சின்ன வயதிலேயே அவர் இறந்துபோய்விட, தாய்தான் பண்ணையில் தோட்டாட்டு வேலை செய்து பிள்ளைகளை வளர்த்தார். சிறுவயது முதலேயே முருகானந்தன் படிப்பில் சுட்டி. அதுவும் விஞ்ஞான பாடம் என்றால் கேட்கவே வேண்டாம். பள்ளிக்கூடத்தில் ஒரு விஞ்ஞானக் கண்காட்சி நடைபெறுகிறது. இவர் கோழிக்குஞ்சுகளைப் பொரிக்கவைப்பது சம்பந்தமான ஒரு கருவியை டிசைன் பண்ணுகிறார். விருது கிடைக்கிறது. ஆனால் வீட்டின் வறுமை காரணமாக முருகானந்தன் பதினான்கு வயதிலேயே பாடசாலையை இடை நிறுத்திவிடவேண்டிய நிலைமை. வேலைக்குப் போகத்தொடங்குகிறார். சாப்பாடு விநியோகம், மெக்கானிக் நிலையத்தில் எடுபிடி, மரக்கறி விற்பனை, வெல்டிங் என்று ஒன்றிலும் நிரந்தரமாகத் தாங்காமல் மாறி மாறி வேலை செய்கிறார்.

திருமணம் நடக்கிறது.

சில நாட்களில், மனைவி சாந்தி மாதவிடாய்க்காலத்தில் சனிட்டரி நப்கினாக அழுக்குத் துணிகளைப் பயன்படுத்துவது இவருக்குத் தெரியவருகிறது.  அதுவும் ஒன்றிரண்டு துணிகளைக் கழுவிக் கழுவி மீண்டும் பயன்படுத்துகிறார். ஏன் என்று விசாரிக்கையில், சந்தையில் கிடைக்கும் சனிட்டரி நப்கின்களின் விலை இரண்டு பிள்ளை சீதனம் என்பது அவருக்குத் தெரியவருகிறது. இப்படியே அழுக்குத் துணிகளைப் பாவித்தால் மனைவிக்கு தொற்றுநோய் வரும் என்று பயந்து, பருத்தித் துணியில் நப்கின் சரிக்கட்டி மனைவிக்கும், சகோதரிகளுக்கும் முருகானந்தன் கொடுக்கிறார். பருத்தித்துணி நின்று பிடிக்குமா என்ன? வீட்டில் ஏச்சு விழுகிறது. பின்னர் கடையில் போய் ஒரு நப்கினை வாங்கிக் கிழித்துப்பார்த்தால், உள்ளே இருக்கும் மூலப்பொருட்கள் கொஞ்சம் சிக்கலானவை என்று தெரியவருகிறது. ஆனாலும் முருகானந்தன் விடவில்லை. விதம் விதமாக சனிட்டரி நப்கின்களைத் தயாரித்து பரிசோதனை செய்கிறார். நெசவு அனுபவமும் மெக்கானிக், வெல்டிங் என்று அவ்வப்போது வேலை செய்ததில் கிடைத்த திறமையும் முருகானந்ததுக்குக் கை கொடுக்கிறது.

ஆனால் நப்கினை பரிசோதிப்பது எளிதான வேலையாக இருக்கவில்லை.

ஒவ்வொருமுறையும் ஒரு நப்கினைத் தயாரித்துவிட்டு மனைவி, சகோதரிகள் என்று எல்லோரிடமும் கொடுத்து டெஸ்ட் பண்ணிப்பார்ப்பார். ஒரு கட்டத்தில் குடும்பம் வெறுத்துப்போய் இவரைக் காறித்துப்பியது. மருத்துவ கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து டெஸ்ட் பண்ணிப்பார்த்தார். பாவித்தபின் நப்கின்களைத் தன்னிடம் தருமாறு இவர் கேட்க அவர்கள் அடித்துத் துரத்தினார்கள். ஒரு கட்டத்தில் தானே கசாப்புக் கடையிலிருந்து இரத்தம் வாங்கிவந்து, தான் தயாரித்த நப்கினை அரையில் அணிந்துகொண்டு, அடிக்கடி இரத்தத்தை ஒரு வால்வினால் பீய்ச்சியபடி நடந்து திரிந்திருக்கிறார். இவர் அறைக்குள் போனால் பாவித்த சனிட்டரி நாப்கின்கள் இறைந்து கிடக்கும். இந்த முயற்சி வருடக் கணக்கில் நீடிக்கவே, லூசு மனுஷன் என்று சொல்லி மனைவி  குழந்தையும் கூட்டிக்கொண்டு பிரிந்து போய்விட்டார். தாய்க்காரி வீட்டுப்பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. சகோதரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

முருகானந்தன் அசரவில்லை.

இறுதியில் சனிட்டரி நப்கின்கள் தயாரிக்கத் தேவையான முக்கிய செலிலோஸ் பைபரை எப்படிச் செய்வது என்று கண்டுபிடித்து, தானே இயந்திரம் டிசைன் பண்ணி, எப்படியோ அதை உருவாக்கியும் விட்டார். சந்தையில் கிடைக்கும் நப்கினைவிட நாற்பது மடங்கு மலிவு விலையில் விற்கலாம் என்பதையும் நிரூபித்தார். டிசைனை ஒருவாறு மெட்ராஸ் ஐஐடிக்கு கொண்டுபோனார். அவர்கள் அந்த இயந்திரத்தைப் பார்த்ததுமே ஆடிப்போய்விட்டார்கள். முதல்வேலையாக இந்தக் கண்டுபிடிப்பை விருதுக்கு பரிந்துரை செய்ய, அந்த வருடமே முருகானந்தனுக்கு ஜனாதிபதி விருது கிடைக்கிறது. இந்த விஷயம் அறிந்து பல முன்னணி நிறுவனங்கள் இவருடைய தொழில்நுட்பத்தைப் போட்டி போட்டு வாங்க முயற்சி செய்தன. முருகானந்தன் யாருக்கும் விற்காமல், தெரிந்தவர் பண உதவிமூலம் “ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்” என்ற நிறுவனத்தை அமைத்து, இன்றைக்கு இந்தியா பூராகவும் கிராமப்புறங்களில் இந்தக் கருவியை விற்பனை செய்துவருகிறார். டைம்ஸ் மகசீன் இவரை உலகின் நூறு முக்கிய நபர்களில் ஒருவராகத் தெரிவு செய்திருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராக முருகானந்தன் தனக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் விரிவுரைகள் ஆற்றி வருகிறார்.

ஒரு நாள் இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்புவருகிறது. எடுத்துக் கதைத்தால் மறுமுனையில் கூச்சத்தோடு மனைவி சாந்தி கதைக்கிறார்.  ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விஷயம் அவர்களைப் பிரித்ததோ அதே விஷயம் அவர்களை சேர்த்தும் வைத்தது. மனைவி, குழந்தையைத் தொடர்ந்து தாய், சகோதரிகள் என எல்லோரும் குடும்பத்தில் ஐக்கியமாகிறார்கள். இன்றைக்கு அந்த ஏழைக்குடும்பமே நிமிர்ந்து நிற்கிறது.

முருகானந்தனும் ஒரு விஞ்ஞானி.


ஸ்டீவ் வோஸ்நியாக்

இவரைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பயங்கர மண்டைக்காய். அப்பிளின் ஆரம்ப இரு கணணிகளையும் தன்னந்தனியனாக வடிவமைத்த மேதை. ஆனால் “உலகம்” தெரியாதவர். மிக நேர்மையான, எளிமையான மனிதன். தான் கண்டுபிடிக்கும் விஷயங்களை விற்று எப்படிக் காசாக்கலாம் என்ற வித்தை இவருக்குத் தெரியாது. ஆனால் ஒரு சேர்க்கிட் போர்டை வடிவமைக்கச் சொன்னால் இரவு பகல் பார்க்காமல் இருந்து வேலையை முடித்துத் தருவார். இவருக்கு நண்பராக வந்தமைந்தவர் ஸ்டீவ் ஜொப்ஸ். விசனரி, எதை எப்படிச் செய்தால் அது வெற்றிபெறும் என்கின்ற இரகசியத்தை அறிந்தவர். ஸ்டீவ், வோஸ்னியாக் வடிவமைத்து வைத்திருந்த அப்பிள் கணணியைக் கண்டவுடன், அதை எப்படியாவது சந்தையில் விற்கவேண்டும் என்று முதலீட்டாளர்களைத் தேடுகிறார். ஒரு கொம்பியூட்டர் கடை வைத்திருப்பவர் முப்பது கணணிகளை வடிவமைக்க ஓர்டர் கொடுக்கிறார். பின்னர் அப்பிள்2 கணணியை வடிவமைக்கிறார்கள். இதனை விற்பனை செய்ய மேலும் மேலும் முதலீட்டாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்பிள் நிறுவனம் பங்குச்சந்தையில் திறந்துவிடப்பட்டு, அசுர வேகத்தில் வளர்ந்து இன்றைக்கு மணிக்கூடு கட்டிக்கொண்டு நிற்கிறது.

வொஸ்னியாக்கும் ஒரு விஞ்ஞானி.


புள்ளிகளை இணைப்போம்

விக்கி மாமா, முருகானந்தன், வோஸ்னியாக் இந்த மூவருமே அற்புதமாக விஞ்ஞானிகள். வோஸ்நியாக் படித்தவர். முதலிருவரும் படிக்காத மேதைகள். அவ்வளவே வித்தியாசம். இதிலே மாமாவுக்கு அவருடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த முடியவில்லை. முருகானந்தனோ மாமாவை விட ஓர்மம் கூடிய ஆள். குடும்பமே துலைஞ்சாலும் தன் கண்டுபிடிப்பு மேலுள்ள ஆரவத்தினால் இறுதிவரை போராடி கரை கண்டவர். மாமாவை நான் சொல்வதாலேயே உங்களுக்குத் தெரிகிறது. முருகானந்தன் வெற்றிபெற்றதால் தெரியவந்தது. மாமா கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்க யோசிக்கவில்லை. முருகானந்தன் வாழ்க்கையையே ரிஸ்க் எடுத்தார்.

இரண்டுமே எங்கள் அமைப்புகளில் இருக்கும் கோளாறுகளால் ஏற்பட்ட நிலை. நம் ஊர்களில் விக்கி மாமா போன்று ஆயிரக்கணக்கில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை இனம்காண வேண்டும். அவர்களாக வந்து நான் இதைப் பண்ணினேன், அதைப் பண்ணினேன் என்று சொல்ல மாட்டார்கள். கூச்சப் படுவார்கள். முருகானந்தன் போன்று விறைச்ச மண்டைக்காரரும் நிறைய இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள், இதே முருகானந்தனின் முயற்சி தோல்வியடைந்திருந்தால், ஊரே கூடி அவரைக் காறித்துப்பியிருக்கும். பைத்தியக்காரன் என்று சொல்லியிருக்கும். வெற்றிபெற்றதால் உலகமே பாராட்டுகிறது. ஆக இரண்டு திறமையான விஞ்ஞானிகள். ஒருவரைப் பற்றி வெளியிலேயே தெரியவரவில்லை. மற்றவர் குடும்பத்தை அடமானம் வைத்து வாழ்க்கையில் முன்னேறவேண்டியிருக்கிறது.

அதே சமயம் ஸ்டீவ் வொஸ்னியாக்கைத் தேடி அவருடைய பள்ளிப் பருவத்திலேயே ஸ்டீவ் வருகிறார். மார்குல்லா வருகிறார். நிறுவனங்கள் அவர்களுடைய அப்பிள் கணணியை காசு கொடுத்து வாங்குகின்றன. இரண்டு மூன்று வருடங்களிலேயே அவர்கள் அந்தத் துறையை மாற்றியமைக்கிறார்கள். அப்பிள் என்றில்லை. பேஸ்புக், டுவிட்டர், ஈபே, அமேசன் தொடக்கம் லம்போர்கினி வரை கதை இப்படித்தான் போகிறது. அமெரிக்காவில் ஒரு ஐடியா ஒருவனிடம் இருக்கிறது என்றால், அவனைத் தேடி எல்லாமே வருகிறது. ஆனால் விக்கி மாமாக்களும், முருகானந்தன்களும் முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல. கணக்கே எடுக்கமாட்டார்கள். ஏறுபவனை இழுத்து விழுத்தும் நண்டுகள்தான் இங்கே அதிகம்.

இந்தப் பிரச்சனையில் ஒரு சின்னக் கல்லை நகர்த்த முயற்சி செய்கிறோம்.

யோசித்துப்பாருங்கள். எங்கே இடைவெளி இருக்கிறது? விக்கி மாமாவுக்கு அவருடைய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் அமைந்து, அவருடைய கருவிகளின் மேல் நம்பிக்கை கொண்டு பணம் போட முதலீட்டாளர்கள் வந்திருந்தால் அவர் இன்றைக்கு எங்கேயோ இருந்திருப்பார். முருகானந்தனுக்கும் அதே நிலைமைதான். அவர் அருகிலே ஸ்டீவ் ஜொப்ஸ் போன்ற ஒருவர் இருந்து ஊக்குவித்து, அவருக்குத் தேவையான ஐடியாக்களைக் கொடுத்து சந்தைப்படுத்தும் வேலைகளைச் செய்திருந்தால், முருகானந்தன் இந்த நிலையை அடைவதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கவேண்டியதில்லை.  ஆட்கள் இருக்கிறார்கள். ஐடியாக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த ஐடியாக்களைக் காட்சிப்படுத்தி, நிறுவனப்படுத்தும் வசதி நம் மத்தியில் இல்லை. அதுதான் இடைவெளி. பெரிய வெளி. அதனால்தான் எதற்கு ரிஸ்க் என்று அத்தனை விஞ்ஞானிகளும் எவனோ ஒருவனுக்குக் கீழே மண்டை காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“Yarl IT Hub” இதனை மாற்ற ஒரு முயற்சி எடுக்கிறது.


தேவதைகளின் வருகை

“Yarl IT Hub” நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக Yarl Geek Challenge என்று ஒரு போட்டி நடத்தி வருகிறது. கணணி/இலத்திரனியல் துறைகளில் புதுப்புது ஐடியாக்களை சுப்பர் சிங்கர், ஜோடி நம்பர் வன் பாணியில் சுற்றுப்போட்டியாக நடத்தி, பரீட்சித்து, எலிமினேஷன் வைத்து, அழுது, இறுதியில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் சுவாரசியமான போட்டி. சீனியர், ஜூனியர் என்று இரண்டு பிரிவுகளிலும் இது நடைபெறும். போட்டிக்கு முன்னர் இரண்டு, மூன்று ஆனந்த் வைத்தியநாதன்கள் போட்டியாளர்களைச் செம்மைப்படுத்துவார்கள். பயிற்சிப் பட்டறை அது இது என்று பல தயார் படுத்தல்கள் நடக்கும்.

போட்டிக்கு கொழும்பில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் ஸ்பொன்சர் பண்ணும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கணணி நிறுவனங்களில் இருந்து  பத்துப் பதினைந்து அணிகள் வருவார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஐடி நிபுணர் ஒருவரை உதவிக்குக் கொடுப்போம். நடுவர்களாக ஐடி நிபுணர்கள், விரிவுரையாளர்கள் வருவார்கள். ஒரு திருவிழாப் போன்று இந்தப் போட்டி மூன்று நாட்களுக்கு கலாதியாக இடம்பெற்று நான்காம் நாள் ஆளாளுக்கு றியோவில் ஐஸ் கிரீம் குடித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.  அடுத்தநாள் வெறும் கச்சான் பக்கட்டுகளும் டிஷூ பாக்குகளுமே கோயிலடியில் கிடக்கும். நிகழ்வு என்னதான் வெற்றியாக முடிந்தாலும், ஒவ்வொரு வருட போஸ்ட் மோர்ட்டத்தின்போதும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

“Something was going wrong somewhere."

யோசித்துப்பார்த்தோம். போட்டிக்கு வரும் அணிகள் தம்முடைய ஐடியாக்களைக் காட்டி பரிசுகளை வென்றுவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள். அந்த ஐடியாவை வைத்து, அதனை சந்தைப்படுத்தி, ஒரு நிறுவனத்தை உருவாக்கி, மேலே கொண்டுபோகும் எண்ணமோ, அதற்கான வசதியோ அல்லது பணமோ அவர்களிடம் இருப்பதில்லை. அப்படியே உருவாக்கினாலும் எவனுக்கு விற்பது? என்ற இன்னொரு பிரச்சனை. நெட்வொர்க் இல்லை. எதற்கு சிக்கல் என்று கிடைத்ததை சுருட்டிக்கொண்டு பறந்திடுவார்கள். இவர்களுக்கு முதலீடும் செய்து, ஒரு நிறுவனத்தையும் அமைத்துக்கொடுத்து, வாடிக்கையாளர்களையும் உருவாக்கிக்கொடுத்தால் எதற்கு வேறு வேலைக்குப் போகப்போகிறார்கள்?

இந்த வருடப் போட்டியில் அதையும் செய்யப்போகிறோம்.

இம்முறை போட்டிக்கு சிறு முதலீட்டுக் குழுமமான “Lankan Angel Network” அமைப்போடு ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. போட்டியில் பங்குபற்றும் அணிகளின் சிறந்த ஐடியாக்களை அவர்கள் பரிசீலனை செய்து முதலிடுவதற்கு முன் வருவார்கள். சிறு முதலீட்டாளர்கள். சின்னச் சின்ன தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் அமைப்புகள். ஆண்டில் இருபது முப்பது ஐடியாக்களில் காசைக் கொட்டுவார்கள். இருபதில் இரண்டு கிளிக் ஆனாலும் இவர்களுக்கு வெற்றியே. அதே சமயம் இருபது குட்டி நிறுவனங்களும் எப்படியும் தட்டுத்தடுமாறி தேறிவிடும்.  இரண்டு பக்கமும் ஆதாயம் உள்ள முதலீட்டு முறை இது. ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருப்பவருக்கு இது ஒரு ஐடியல் சந்தர்ப்பம்.

இந்தவகை முதலீட்டு வேலைகளை வெர்ஜின் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களும் செய்யும். அவர்களை Venture Capitalists என்போம். தனி நபர்களும் செய்வார்கள். Angel Investors என்போம். அப்படி ஒரு தனி நபரும் இம்முறை போட்டியைப் பார்வையிட வருவதாக சொல்லியிருக்கிறார். ஆகக் குறைந்தது ஒரு முதலீடாவது செய்வதாக உறுதியளித்திருக்கிறார். ஆள் வெறும் குப்பனோ சுப்பனோ கிடையாது. அவர்தான்

இந்தியாவின் கூகிள் நிறுவனத் தலைவர் “ராஜன் ஆனந்தன்”

rajan-anandan-505_121812043710

ராஜன் ஸ்டான்போர்ட் மற்றும் எம்ஐடியில் படித்தவர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் பணிபுரிந்து இப்போது கூகிளின் இந்தியப்பிரிவுத் தலைவராக இருக்கிறார். ராஜன் “எங்கட” ஆள்.  கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனின் மகன். கூகிள் தவிர்த்து ஆண்டுக்கு இருபது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ராஜன் முதலீடு செய்கிறார்.  Angel investor. இலங்கையிலும் செய்கிறார். அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் Yarl IT Hub நடத்தும் போட்டி பற்றிக் கேள்விப்பட்டு,  வெற்றியாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

“ஆளை அமுக்கவேண்டாமா மக்களே?”

இளைஞர்களாக இருக்கும் விக்கி மாமாக்களும், முருகானந்தன்களும், வோஸ்னியாக்குகளும் எதைப்பற்றியும் யோசிக்காமல் போட்டி அமைப்பாளரை அணுகுங்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இரண்டு மூன்று வாரங்களுக்கு உங்கள் ஐடியாவை உயிரைக் கொடுத்து மெருகேற்றுவது. அதை எப்படி மெருகேற்றுவது, என்ன செய்தால் பிஸினஸ் பண்ணலாம், எப்படி மக்களிடம் கொண்டுபோகலாம் என்கின்ற துறைசார் நிபுணத்துவத்தை கொடுப்பதற்கு யாழ்ப்பாணத்திலேயே பலர் தயாராக இருக்கிறார்கள். பஸ்சுக்கு டிக்கட் போட்டிட்டு கொழும்பில் காத்திருக்கிறார்கள். ஸ்கைப்பை ஒன் பண்ணியபடி சிலிக்கன் வாலியில் ஆட்கள் வெயிட் பண்ணுகிறார்கள். ஆனால் பொண்ணு இருந்தாத்தான் கலியாணம் பண்ணலாம். நீங்கள் முன்வரவேண்டும். போட்டி இறுதிநாள் அன்று உங்கள் ஐடியாக்களில் பணம் முதலிட்டு, விசயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் ஆட்கள் இருக்கிறார்கள்.  ஐடியா சரியில்லை, ஆனால் ஆள் கெட்டிக்காரன் என்றாலும் கூட, சிலவேளைகளில் DIalog, WSO2, hSenid போன்ற பிரபல மென்பொருள் நிறுவனங்களின் கண்களில் நீங்கள் படக்கூடும். யார் கண்டது? ராஜனே உங்களை அமுக்கக்கூடும்.

வேர்ஜின் நிறுவன ஸ்தாபகர் ரிச்சார்ட் பிரான்சன் அடிக்கடி சொல்லுவார்.

“There is no point in starting your own business unless you do it out of a sense of frustration."

அப்படி எந்த விஷயம் எங்களுக்கு தேவை என்று யோசியுங்கள். ஐடியாக்கள் நிறைய வரும்.  சின்ன உதாரணம். இம்முறை நல்லூர்த் திருவிழா. வெளிநாட்டில் இருந்துகொண்டு அட நல்லூரானை தரிசிக்க முடியவில்லையே, அர்ச்சனை செய்யமுடியவில்லையே என்று பலர் புலம்பினார்கள். அவர்களுக்கு மொபைல் போனிலேயே அர்ச்சனை செய்யும் அப்ளிகேஷனை டெவலப் பண்ணலாம்.  முன்னுக்கு கமராவை அசிஸ்டன்ட் ஐயர் பிடித்துக்கொண்டிருக்க, மெயின் ஐயர் அவர்கள் பெயரிலே அர்ச்சனை செய்து வீடியோ எடுக்கலாம். வீபூதியை கணணி மயப்படுத்தலாம். பக்தி என்ற விஷயம் மனம் சார்ந்தது அல்லவா? அதை அதன் ஆதாரங்கள் குலையாமல் மிக இலகுவாக கணணி யப்படுத்தலாம். அப்ளிகேஷனைத் திறந்தாலே அரோகரா சத்தம் கேட்கவேண்டும். இதற்கு ராஜன் இருபது லட்சம் தந்தால், அடுத்ததாக பூசையை கிறிஸ்தவ, பௌத்த கோயில்களுக்கும் கொண்டுபோகலாம். மதுரை மீனாட்சியைக்கூட தரிசிக்கலாம்.

ஒரு ஐடியாதான்.

இப்படி எவ்வளவோ ஐடியாக்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அண்மையில் இரண்டு உயர்தர மாணவர்களைக் கொண்டு Yarl IT Hub நிறுவனம் ஒரு ப்ரொஜெக்ட் செய்தது. Drip Irrigation Automation என்கின்ற, தோட்டம், வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதை தானியக்கமாக செயற்பட வைக்கும் ஒரு இலத்திரனியல் உபகரணம். நீங்கள் கொழும்பில் இருந்தவாறே உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கோ, அல்லது நெல் வயலுக்கோ தண்ணீர் பாய்ச்சலாம். தண்ணீர் நிரம்பினால் நிறுத்தலாம். நிலத்தில் ஈரப்பதன், காற்றின் ஈரப்பதன், காலநிலை எதிர்வுகூறல் எல்லாவற்றையும் அனலைஸ் பண்ணி தண்ணீரைச் சிக்கனமாக, வீணாக்காமல் இருந்த இடத்திலிருந்து தோட்டத்துக்கு மொபைல் போன் மூலமே பாய்ச்சலாம். செய்திருக்கிறார்கள். வெறும் உயர்தர இலத்திரனியல் அறிவோடு இரண்டு பெடியள். துணிந்து முன்வர, மிகுதி உதவிகளை Yarl IT Hub நிறுவனம் செய்துகொடுக்க, போனை அமத்தும்போது தண்ணீர் பாய்ந்தது. இந்த இளைஞர்கள் ஒரு நிறுவனம் தொடங்கி இதனை மேலும் எடுத்துச்செல்லவும் ஆயத்தங்கள் நடை பெறுகின்றன.

இதெல்லாம் எதற்காக Yarl IT Hub நிறுவனம் செய்கிறது? அதனால் உங்களுக்கு என்ன இலாபம்? பாம்பேயில நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க? சொல்லுங்க என்று பாஷாவின் தம்பிபோல கேள்வி கேட்பவர்களுக்கு பதில் இங்கே இருக்கிறது.

Yarl IT Hub - யாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வாலி

உங்களிடம் ஒரு ஐடியா இருக்கிறது. அதை டெவலப் பண்ணும் திறமை இருக்கிறது. நான்கைந்து பேர்கள் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றால் உடனடியாகவே போட்டிக்கு உங்களைப் பதிவு செய்யுங்கள்.  மாணவர்கள், இளைஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆணி புடுங்குபவர்கள் என்று எவராக இருந்தாலும் பங்கெடுக்கலாம். வயதெல்லை கிடையாது. தெரிந்த நண்பர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசயத்தைக் கொண்டு செல்லுங்கள். செப்டெம்பர் இருபதாம் திகதி இந்தப்போட்டியின் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.

வெளிக்கிடுங்கள்.


http://yarlithub.org/ygc/
http://www.yarlithub.org/yarl/community-meet-up/ 
https://www.facebook.com/groups/264218806991707/

Comments

  1. நல்ல பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

    விக்கி மாமா பற்றி முதலே உங்கள் பதிவில் வாசித்த ஞாபகம் (வியாழ மாற்றம் என நினைக்கிறன்), இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லோரையும் கண்டிபிடிப்பது கடினம் எனினும், கண்டவர்களை உலகுக்கு காட்ட, எமக்கு இன்னொரு மனம் வேண்டும். நம்ம ஊரிலும், சிலபேரையாவது பங்கேற்க வைக்க முயற்சிக்கிறேன்...........



    அஜந்தன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே ... அவரைப்பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆனா இந்த தயிர் மாட்டர் எழுதவேயில்லை. முன்னர் இங்கே எழுதியிருக்கிறேன்
      http://www.padalay.com/2013/01/24-01-2013.html

      Delete
  2. கனநாளாய் காணவில்லை என்றுநினைத்தேன் - கனவு நனவாக உழைக்கின்றீர்கள் எனநினைத்து பெருமை. கனவுமெய்ப்பட வாழ்த்துக்கள்.
    முருகானந்தன் காணொளி கண்ணீரை வரவைத்துவிட்டது.
    Uthayan

    ReplyDelete
    Replies
    1. நன்றி உதயன். நான் பெரிசாக குத்தி முறிவதில்லை. ஊரில் உள்ளவர்கள்தான் இதில் பயங்கரமாக உழைப்பவர்கள். வாழ்த்துக்கள் அத்தனையும் அவர்களுக்கே அனுப்புகிறேன்.

      Delete
  3. நல்ல முயற்சி, இதனால் பலரும் பயன் பெறவேண்டுமென வேண்டி, வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. விக்கி மாமா என்பவர் விபிதனின் தகப்பனார் என நினைக்கிறேன். நான் அவரை முறை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவர் ஒரு மண்டைக்காய் என்று தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. அவர் விபிதனின் தகப்பனார்தான். அவர் புது ஆட்களோடு அதிகம் பேசமாட்டார். பழகிப்பார்த்தால்தான் தெரியும் அவரின் அற்புத திறமைகள்.

      Delete
  5. “Ideas are easy. Implementation is hard.” –Guy Kawasaki, Alltop Co-Founder and Entrepreneur- Thanks for helping our people to implement their ideas. It-Hub should be extended to other areas so that Viki maama's can participate.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...