பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள். ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான். இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல தோழர்கள் "இருவர்". அகிலன், கஜன். அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும்.
புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வேண்டுமே. ஜெய் ஸ்ரீகாந்தா அண்ணாவிடம் தயங்கி தயங்கிக் கேட்டேன். தோளே கொடுத்தார். அப்புறம் நண்பர்கள் ஒவ்வொருவராக "என்ன செய்யோணும் ஜேகே" என்று கேட்க ஆரம்பித்து, கேட்டதுக்கு மேலாகவே உதவி செய்ய ஆரம்பிக்க,
கிள்ளிப்பார்க்கிறேன். இந்த ஞாயிறு நிகழ்ச்சி நடக்கப்போகுது.
அகிலனையும் கஜனையும் மேடை ஏத்திட்டு, ஏதாவது புதுசா செய்ய வேண்டாமா? இசை என்பதே சப்தஸ்வரங்களை வைத்துச் செய்யும் ஒரு மஜிக் என்பார் இளையராஜா. எனக்கு புரியாது. அது கடவுள் போல. உள்ளே எங்கேயோதான் தலைவர் இருக்கிறார் என்று பட்சி சொல்லும். ஆனா எங்கே, எது, எப்படி என்று புரிவதில்லை. தேவையுமில்லை. எப்போதாவது ஒரு கர்நாடக சங்கீத பாடலை கேட்கும்போது அடடா இதை இளையராஜா இப்படி மாற்றியிருக்கிறாரே. ரகுமான் இங்கே பாவித்திருக்கிறாரே என்று நினைப்பதுண்டு.அந்த உணர்வையே மேடையில் கொடுக்கமுடியுமா என்று இருவரிடமும் கேட்டேன். முயற்சிக்கலாம் என்று சொல்லிவிட்டு ஆளாளுக்கு தங்கள் கச்சேரிகளை கவனிக்க கிளம்பிவிட்டார்கள்.
ஆனால் என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லவேயில்லை. மூச்.
சென்றவாரம்தான் ஐடியா இது என்று கஜன் சொன்னான். ஒரு ராகத்தை எடுப்பது. அதில் ஒரு கீர்த்தனையையோ, பாடலையோ பாடுவது. அகிலன் பாடும்போது, இது .. எங்கேயோ கேட்டமாதிரி இருக்குதே, "கண்கள் இரண்டால்" பாட்டா? "அழகான ராட்சசியேயா?", "சுடும் நிலவா?" என்று நாங்கள் குழம்பிக்கொண்டிருக்கையில், திடீரென்று "சின்னக்கண்ணன் அழைக்கிறான்" என்று அகிலனின் குரல் கணீரென்று ஒலிக்கும். எல்லாமே ரீதி கௌளை எண்டது தெரியாட்டியும் அந்த மஜிக் நடக்கும் என்று கஜன் சொன்னான். இப்படி ஒரு முக்கால் மணிநேரம் இடம் பொருள் ஏவல் மறந்து எங்களை மயக்க தயாராகிறார்கள் இவர்கள்.
பாட்டு - அகிலன்
மிருதங்கம் - கஜன்
வயலின் - பைரவி
மோர்சிங் - நந்தீஸ்
கடம் - சதீபன்
எல்லாம் ஒகே. ஒரு டீசர் வேண்டும் என்று கேட்க, பிளைட்டுக்கு அவசரமாக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கையில் கடகடவென பாடித்தந்த ஒலிப்பதிவு இது. கானடா!
November 2nd, 4.00 PM
Carwatha College P-12
43-81 Browns Road
Noble Park North VIC 3174
ஞாயிறன்று உங்கள் எல்லோரையும் எதிர்பார்க்கிறோம்.
என் கொல்லைப்புறத்துக் காதலிகளை இணையத்தில் வாங்க இங்கே அழுத்துங்கள்.
Good luck JK. Sad that I am missing this amazing book release and the music .
ReplyDeleteVani